Loading

அகம்-4

நான்காம் முறையாய் ஒலித்த அலைபேசியை தன் சட்டைப்பையிலிருந்து எடுத்து அழைப்பை ஏற்று சலிப்புடனே காதில் வைத்தான் துடிவேல் அழகர்.

“அழகு.. நீ சொன்னபடியே எல்லாம் விசாரிச்சுப் பார்த்துட்டேன். அந்த ரோஹன் ஒண்ணத்துக்கும் உதவாத தறுதலை. நல்ல வேளை நம்ம விழி தப்பிச்சுச்சு!” பெருமூச்சு விட்டவனாய் பேசினான் காத்தவராயன்.

“ஓஹோ! அப்படியா.?”

“என்ன அப்படியாங்கிறே? நான் விசாரிச்ச வரைக்கும் அந்த காலேஜோட ப்ளே பாய் அவன். தங்கச்சி ஏதோ சின்னப்புள்ளைத்தனமா விளையாட்டா பேசியிருக்கும். நீ விழி கிட்டே பேசு கண்டிப்பா புரிஞ்சுக்கும்..!”

“உன் தங்கச்சி தானே? நல்லா புரிஞ்சுப்பா! உன் தங்கச்சி அந்த வீணாப் போனவன் கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னு தான், பாண்டிச்சேரி வரை போய் ஆடிட்டு வந்துருக்கா! நீ என்னடான்னா அவ சின்னப்பிள்ளைன்னு சொல்றே! அவ ஒண்ணும் தவழுற குழந்தை இல்லை.!” கொஞ்சம் கடினக் குரலில் பேசினான் துடிவேல் அழகர்.

“என்ன அழகு இப்படி பேசுறே? அதெல்லாம் என் தங்கச்சி கேட்பா!

உனக்குப் பேசத் தெரியலை.!”

“இந்தாரு காக்கா விரட்டி, காலையிலேயே கடுப்பேத்தாதே..! இப்போ நான் சொல்றதைக் கேளு, ரெண்டு மாலையும் தாலியும் வாங்கிட்டு கோயிலுக்கு வந்து சேரு!”

“தாலியா? என்னத்துக்கு தாலி? யாருக்கு கல்யாணம்? என்ன அழகு சொல்றே? எந்தக் கோயிலுக்கு வரணும்?” கேள்விக் கணைகளைத் தொடுத்தான் காத்தவராயன்.

“இந்தாரு ஒரு வேலையைச் சொன்னால், முதலில் அதை செய்! எழுவது கேள்வி கேட்டு மனுஷனைச் சோதிக்காதே..! நேரில் மட்டும் இருந்தே உன்னை சாவடிச்சுடுவேன்.” கோபத்தில் உறுமினான் அழகர்.

“அடேய்.. கூறுகெட்ட குக்கருங்களா! என்ன கோயிலுன்னு தெரியாமல் எங்கிட்டு வாரது? முட்டுச் சுவத்தில் போய் முட்டிக்கத்தான் செய்யணும்! கோயிலுக்கு வா, கோயிலுக்கு வான்னு சொன்னால், எந்தக் கோயிலுக்கு டா? பார்ட் டைம் பைத்தியக்காரனுங்களா! எந்தக் கோயிலுன்னு சொல்லித் தொலைங்கடா!” அழகருக்கு மேல் குரல் உயர்த்தினான் காத்தவராயன்.

“நம்ம அழகரு கோயிலுக்குத்தான். வெரசா வந்து சேரு! உன் தொங்கச்சியை வச்சிக்கிட்டு சமாளிக்க முடியலை.!”

“என்னடா தங்கச்சியும் அங்கண தான் இருக்கா? தங்கச்சிக்கா கல்யாணம்? அழகு என்ன செய்யப் போறே? யாருக்கும் யாருக்கும் கல்யாணம்? எதுவா இருந்தாலும் நிதானமா முடிவு பண்ணலாம் அழகு! பொறுமையா இரு!”

“ஏய்.. காக்கா விரட்டி! உங்கிட்ட எவனும் ரோசணை கேட்கல, வெளங்குதா? தாலியையும் மாலையையும் வாங்கிட்டு வர முடியுமா? முடியாதா? முடியாதுன்னா சொல்லு நான் வேற யாரையாவது வச்சு பார்த்துப்பேன்..!” நண்பனின் கேள்விக் கணைகளில் கோபம் முகிழ்த்தது அழகருக்கு.

“இந்தா வாரேன் டா! அவசரத்துக்குப் பொறந்த ஆந்தையாய் இருப்பான் போல, எங்கேயோ உள்ள கோபத்தை எம் மேல காட்டுறான்..!” என காத்தவராயன் அலைபேசியை அணைத்துவிட, அதே நேரம், இங்கே கருவிழியிடம் காய்ந்துக் கொண்டிருந்தான் துடிவேல் அழகர்.

“என்னத்துக்கு டி மூக்கை உறிஞ்சிட்டே நிக்கிறே? அந்தப் பக்கம் தள்ளி நில்லு டி!”

“மாமா! என்னை ஏன் திட்டறே? நான் பாவம் தானே?”

“உனக்கு மாமன் மவனா வந்து வாய்ச்சேனே நான் தான்டி பாவம்! உனக்கு பாவம் பார்த்த கொடுமைக்கு என்னை வச்சு செய்யற டி!”

“அழகரு..!” கருவிழியின் குரல் மென்மையானது.

“இந்தாரு! இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் நம்ம கிட்டே வேணாம். எங்கேடி அந்த ரோஷம் கெட்ட ரோஹன்? வருவான் வருவான்னு சொல்றே எங்கே போய்த் தொலைஞ்சான்?” எரிச்சலும் கோபமும் ஒருசேர கலந்திருந்தது அவன் குரலில்.

“வந்துருவேன்னு சொல்லியிருக்கான்! ஏன் அழகரு என்னைத் திட்டிக்கிட்டே இருக்கே?”

“பின்னே என்னடி, உசிரு உனக்கு அம்புட்டு லேசா போச்சாக்கும்? அந்த வெளங்காத பயலுக்காக கையைக் கிழிச்சுக்கிட்டு.. இதெல்லாம் தேவையா டி? படிக்கிறதுக்கு தானே காலேஜூக்கு போற? காதல் கத்திரிக்காய்ன்னு.. ஏன்டி உசிரை வாங்கிறே?” நிஜமாகவே ஆற்றாமை தெரிந்தது அழகரின் குரலில்.

“மாமா!” கண்ணீர் ததும்ப எதிரில் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் கருவிழி.

“ஏய்! கரு கரு! இப்போவும் சொல்றேன், நீ கையை வெட்டிக்கிட்டு உசுரை விடத் துணிஞ்சுட்டியேன்னு தான், என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு கூட்டிட்டு வந்துட்டேன். ஆனால், தாத்தாவை மீறி இப்படி ஒரு விஷயம் பண்ணுறோமேன்னு ரொம்ப உறுத்தலா இருக்கு. பேசாமல் வீட்டுக்கு போயிருவோமா டி! பொறுமையாய் தாத்தா கிட்டே பேசி முடிவு பண்ணுவோம்.!” அவள் முடிவை மாற்ற முயற்சி செய்தான் துடிவேல் அழகர்.

“மாமா! ஹிட்லர் கண்டிப்பா ஒத்துக்க மாட்டார். நான் ரோஹனைத் தான் லவ் பண்ணுறேன். மனசில் ஒருத்தனை வச்சுக்கிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொல்றியா? காதல் ஒண்ணும் இரவோ பகலோ இல்லை வந்துட்டு வந்துட்டு போறதுக்கு.. அது ஒரு முறை தான் வரும்..!” அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள் கருவிழி.

“போடி பைத்தியக்காரி! உனக்கு இருபத்தியோரு வயசு தான் ஆகுது. அதுக்குள்ளே காதல் பத்தி வாழ்க்கை பத்தி எல்லாமே புரிஞ்சுடுச்சா? காதல் காய்ச்சல் மாதிரி கனவு மாதிரின்னு பேசிக்கிட்டு திரியறே? இந்தக் கல்யாணம் பண்ணிட்டு அடுத்து என்ன பண்ண போறே? நீயும் சரி, அவனும் சரி, இன்னும் படிப்பை முடிக்கலை! நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன? எதையாவது யோசிக்கவாவது செஞ்சியா?” அவள் வாழ்க்கை பற்றிய கவலை அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

தன் அத்தை பெத்த முத்து மகள். அவர்கள் குடும்பத்தின் ஒற்றை பெண்ணரசி எந்த விஷயத்திலும் துன்பப்பட்டு விடக் கூடாதென்பதில் கொஞ்சம் அதீத கவனம் அவனுக்கு.

“நான் ஏன் அழகரு கவலைப் படப் போறேன்? எனக்குத்தான் நீ இருக்கியே! எதுவா இருந்தாலும் நான் உன் கிட்டே கேட்கப் போறேன். நீ செய்யப் போறே அவ்வளவு தான்.!” இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் பதில் சொன்னாள் அவள்.

“அப்போ நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியே, அவன் என்ன ஆணி புடுங்குவானா? உன் கல்யாணத்திற்கு பிறகு உனக்கு புருஷன்னு ஒருத்தன் வருவான் தானே, அவன்கிட்டே தான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கணும். அதுக்காக அவனையே நம்பி இருக்கணும்ன்னு நான் சொல்ல மாட்டேன். நீ உன் சொந்தக் காலில் சொந்த முயற்சியில் நிற்கணும்.!”

“ஹான்.. அப்படின்னா? இப்போ மட்டும் நான் என்ன வாடகைக் காலில் நிற்கிறேனா? என்ன அழகரு சொல்றே? ஒண்ணுமே புரியலை. கல்யாணம் ஆனாலும் ஆகாட்டியும் நான் உன்னையத்தான் கேட்பேன். நான் கேட்கிறது என்னோட உரிமை. எனக்கு செய்றது உன்னோட கடமை.!” என அவள் சொல்ல,

“போடி லூசு!” தன் நெற்றியில் தானே அறைந்துக் கொண்டான் அழகர்.

“அழகு..! இந்தா வந்துட்டேன் டா! ஏன்டா நாமெல்லாம் சித்திரை திருவிழாவுக்குத்தானே அழகர் கோயிலுக்கு வருவோம். நீ என்ன மாலையையும் தாலியையும் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கிறே?” மூச்சு வாங்கியபடி வந்து நின்றான் காத்தவராயன்.

ஆங்காங்கே குரங்கு கூட்டங்கள் தங்கள் அணிவகுப்பை நடத்திக் கொண்டிருக்க, நண்பனின் பார்வையைத் தவிர்த்தபடியே,

“இந்தக் குரங்குக் கூட்டத்தைக் கணக்கெடுக்கதேன் வரச் சொன்னேன்..  இப்படியே ஓரமாய் உட்கார்ந்து எண்ணிட்டு வர்ரியா? என்கிட்டே எதையும் கேட்டு கடுப்படிக்காதே..! எதுவா இருந்தாலும் உன் தொங்கச்சியைக் கேட்டுக்கோ!” என பதில் சொன்னான் அவன்.
தன் நண்பன் பதில் சொன்ன விதத்திலேயே இங்கே நடப்பவற்றில் அவனுக்கு விருப்பமில்லை என்பதைப் புரிந்துக் கொண்டான் காத்தவராயன்.

“என்னாச்சு அழகு? ஏன் இந்த முடிவு?”

“நரம்பை வெட்டிக்கிட்டு சாகுறதுக்கு முடிவு பண்ணிட்டா உன் தங்கச்சி. உசிரு என்ன இவளுக்கு கஞ்சிக்கு தொட்டுக்கிற ஊறுகாயா? நான் மட்டும் கதவை உடைச்சு நேத்து ராத்திரி போகலைன்னா இந்நேரம் உன் தங்கச்சி இங்கே இருந்திருக்க மாட்டா.! அதனால் தான், அவ இஷ்டப்படியே அவளுக்குப் பிடிச்சவனோட வாழ்ந்துட்டு போகட்டும்!” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்பது காத்தவராயனுக்குப் பிடிபடவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. கருவிழியின் பிடிவாதம் தான், இத்தனைக்கும் காரணம் என அழகர் சொல்லாமலே அவனால் உணர முடிந்தது.

“விழி! என்னம்மா இது? யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேணாம்மா! உங்க தாத்தாவுக்கு தெரிஞ்சுச்சு அம்புட்டுதேன். இப்போ வீட்டுக்குப் போய்ட்டு பேசி முடிவு பண்ணிட்டு பிறகு வரலாமா?!” தற்காலிகமாக அங்கே நடப்பதை தடுக்க முயன்றான் காத்தவராயன்.

“அண்ணே! இது என் வாழ்க்கை! இதில் முடிவெடுக்கிற உரிமை அழகருக்கே இல்லை! நீங்க எதாச்சும் பேசி என் மனசை மாத்த முயற்சிக்காதீங்க! நான் எதாவது பேசிப்புட்டா சங்கடமா போவும்..! நான் ரோஹனைத்தான் கட்டுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.!” உறுதியாய்ச் சொன்னாள் அவள்.

“ஏய் காக்கா விரட்டி! இந்த கிறுக்கச்சி கிட்டே நீ பேசாதே..! அவளுக்கு புத்தி பிசகி போச்சு.!” எரிச்சலும் கோபமும் அதீதமாய் வழிந்தது அவன் குரலில்.

“இங்கே பாருங்கண்ணே! அழகரு என்னை திட்டுது! நீங்களே சொல்லுங்க, அந்த நெட்டை நெடுமானஞ்சி நெடு மாமாவுக்கு கட்டி வைக்கணும்ன்னு ஹிட்லர் முடிவு பண்ணியிருக்கார். நான் எப்படி அவரைக் கட்டிக்கிட்டு வாழ முடியும்? நீங்களே யோசிச்சு சொல்லுங்க?”பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள் கருவிழி.

“நெசந்தேன்.. நீ ஊரு வாய் பேசுவே! நெடுமாறன் ஒத்தை வார்த்தை பேசவே கூலி கேட்பான். ஒத்து வராது தான். தங்கச்சி சொல்றது சரிதான் அழகு.” என்றவன், அழகர் முறைப்பதையும் பொருட்படுத்தாமல்,

“அதே மாதிரி தங்கச்சி! கொஞ்ச நாள் பழக்கத்தில் தெரிஞ்ச அந்த ரோஹனா பாகனா அவன் எப்படி உனக்கு சரியா வருவான்னு நீ நினைக்கிறே? இத்தனை வருஷம் பழகின மாமன் மகன் நெடுமாறனையே உனக்கு பிடிக்கலை. கொஞ்ச நாளைக்கு அப்பறம் ரோஹனையும் பிடிக்கலைன்னா என்ன செய்வே?” அர்த்தமாய் அழகரைப் பார்த்து புன்னகைத்தபடியே கேட்டான் காத்தவராயன்.

‘இவளுக்கு புரிஞ்சு எம்புட்டு தெளிவா பதில் சொல்றான்னு மட்டும் பாரு!’ என மனதில் நினைத்தவனாய் மார்பின் குறுக்கே கை கட்டியபடி வேடிக்கைப் பார்த்தான் துடிவேல் அழகர்.

“அது எப்படி ரோஹனை பிடிக்காமல் போகும்? அவன் தான் அழகா ஸ்டைலிஷா, ஹேண்ட்ஸம்மா இருப்பானே.. அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” என அவள் சொல்ல,

“சுத்தம்! இது தேறாது..!” என முணுமுணுத்தவன்,

“அழகு உன் பாடு ரொம்பக் கஷ்டம் டா!” என்றவனின் குரல் அவளுக்குப் புரிய வைக்க முயன்றதிலேயே களைத்துப் போயிருந்தது.

“இதற்கு மேல் பேசிட்டு இருக்கிறது வேலைக்கு ஆகாது. எங்க உன் ரோஹன்? ஃபோன் பண்ணி அவனை வரச் சொல்லு! எனக்கு வேலையெல்லாம் இல்லையா? உன்னை மட்டுமே பார்த்துட்டு இருந்தால், என் சோலியை யார் பார்க்கிறது?”

“கோவிச்சுக்காதே அழகரு! ஃபோன் போட்டு பார்க்கிறேன்.!” மூஞ்சியைத் தூக்கியபடி, அலைபேசியை எடுத்து மீண்டும் மீண்டும் அவள் அழைத்துப் பார்க்க அந்தப் பக்கம் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கணிணி பதிவுக் குரல், தகவல் சொல்லிவிட்டு ஓய்ந்தது.

“அழகரு! ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது!”

“அதுக்கு நான் என்னடி செய்யட்டும்?”

“இப்போ ரோஹனை எப்படி வரச் சொல்றது? ஒருவேளை ஹிட்லருக்கு தெரிஞ்சு ரோஹனை கடத்தி வச்சிட்டாரோ?” பதற்றமாய் சொன்னாள் அவள்.

“உன் மூஞ்சி! தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டார். உன்னைக் கல்யாணம் பண்ண பயந்து அந்த பரதேசி எஸ்கேப் ஆகிட்டான்.!” என துடிவேல் அழகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ம்க்கும்..!” என்ற கரகரப்பான தொண்டைச் செருமல் ஒலி கேட்டதும், ஒருசேர திரும்பிப் பார்த்த மூவரும் விழிகள் வெளியே தெறித்து விழ, அதிர்ந்து நின்றனர்.. அங்கே அழுத்தமான பார்வையுடன் நின்றிருந்தார் சொக்கேசன்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அஹா சொக்கா சொக்கேசன் கிட்ட மாட்டிக்கிட்டாங்க போலயே!

    அழகன் பாடு திண்டாட்டம் தான்.

    அந்த ரோஷம் கெட்ட ரோஹன் கல்யாணம் என்றதும் கழண்டுவிட்டான் இவளோ நிதானம் இல்லாமல் வரட்டு பிடிவாதம் செய்கிறாள்.

    “கேட்கிறது அவள் உரிமை செய்வது அவன் கடமையா?!” நல்ல நியாயம்டா. 😀 அவன கல்யாணம் செய்வாலாம் இவன் அவள பார்த்துக்கணுமாம்.

    கரு கரு தெய்வீக காதல் தோல்வியடைந்த துக்கத்துல பாண்டிச்சேரி வரை பறந்து போய் பிங்க் வோட்கா எல்லாம் கஷ்டப்பட்டு போட்டாலே. கடைசில அந்த காதல் நாயகன் ஒரு ப்ளே பாய்யா? 🤣
    அய்யகோ!! 🤣🤣
    அவன்கிட்ட ஊர சுத்த கூப்பிட்டா வருவான் கல்யாணம் செய்ய கூப்பிட்டா எப்படி வருவான்.

    விறுவிறுப்பாக செல்கின்றது. 😍

    1. Author

      நன்றி நன்றி, நன்றிகள். அழகர் பாடு நிஜமாகவே திண்டாட்டம் தான். அடுத்து தாத்தா என்ன பண்ண போறாறோ? தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டா 💛💜💙

  2. இதென்ன ட்விஸ்ட் டோட முடிச்சுட்டீங்க … வெயிட்டிங் … அம்புட்டு பேசிட்டு கல்யாணம் பண்ணி வைக்க வந்துட்டான் … தாத்தா என்ன பண்ண போறாரோ

    1. Author

      தாத்தா வேற முடிவு பண்ணியிருக்கார் டா. இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கு. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💜