
அத்தியாயம் 40
அன்று ப்ரகலத்தனுக்கு லீவு நாள், தன்னறையின் படுக்கையில் குப்புறப் படுத்திருந்தவன் அப்போதுதான் தூக்கம் தெளிந்திருந்தான்.
பக்கத்தில் துழாவி விட்டு, “ம்ச், அந்த ரூம்ல இருந்தா என்ன, காலையில எழுப்பனாலும் எங்கிட்ட இருக்கலாம்ல, சோம்பேறி இன்னும் தூங்குறாளோ என்னவோ?” என கண்ணை மூடியவாறே மனதிற்குள் வசைபாடி விட்டு, “எழில்” என சத்தமாக அழைத்தான்.
பக்கத்து அறையில் துவைத்த துணிகளை மடித்து கொண்டிருந்தவள் திரும்பி மாமியாரை பார்க்க, குழந்தையைத் தொட்டிலில் ஆட்டிக்கொண்டிருந்தவரும் அவளைத் திரும்பிப் பார்த்தார், “எழில்” மறுபடியும் கத்தினான்.
“என்னைய ஏன் பாக்குற, போ உன் புருஷன் கூப்புடுறான்ல…., போ. ஆனா பிள்ளைக்கு நாலு மாசம் தான் ஆகுதுன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு போ” என்கவும், புசுபுசுவென கோவம் வந்தாலும், வெளிக்காட்டாதவாறே வெளியேறிச் சென்று தலையிலடித்துக் கொண்டாள்.
அவள் அம்மா கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்து, “மாப்பிள எத்தன டைம் கூப்பிடுறாரு, என்னன்னு கேட்டுட்டு வந்தா என்னடி?” என்க.
“பேசாம போமா, நானே செம காண்டுல இருக்கேன்” என்று விட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.
ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வெற்று முதுகை காட்டிக்கொண்டு படுத்திருந்தவனின் முதுகில், பக்கத்தில் கிடந்த தலையணையை எடுத்து சொத்தென்று அடித்தாள். ஒரு கண்ணை மட்டும் திறந்து அவளைப் பார்த்தான், காலையிலேயே குளித்து காட்டன் புடவையில் இரண்டு பிள்ளையின் காரணமாய் சற்று புசுபுசுவென இருந்தாள்.
அவள் அடித்த தலையணையை பிடித்து கொண்டு, ஒரு பக்கமாக திரும்பி படுத்து ரசனையாக அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், மறுபடியும் அவள் முகத்திற்கு தன் பார்வையை கொண்டு வர,,முறைத்துக் கொண்டிருந்தவளை கண்டு, “ஏன்டி?” என்றான் எட்டி அவள் கையைப் பிடித்து இழுத்து, அதில் தடுமாறி அவன் மேலேயே வந்து விழுந்தவளை கை வளைவில் வைத்துக்கொண்டு “காலையிலேயே ஏன் மூஞ்சிய வெறப்பா வச்சிருக்க, சிரிச்சிட்டே எழுப்புனா என்ன?” என அவள் கழுத்தில் முகம் புதைக்க, நறுக்கென்று அவன் மண்டையில் கொட்டினாள்.
அவன், அவள் கைக்கு வாகாக இருந்த இடுப்பில் கிள்ளிவிட, “அம்மா” என்றாள் அவன் கையை தட்டி விட்டு தேய்த்துக்கொண்டு, “வலிக்குதா? அப்படித்தான எனக்கும் வலிக்கும்”.
“ம் இதுல மட்டும் ஷேரிங் கரெக்டா கொடுக்க தெரியுதுல்ல, உங்க அம்மா கொடுக்கிறதுலயும் கொஞ்சத்த உங்க பங்கா வாங்கிக்க வேண்டியதுதான”.
“அம்மாடியோ காலையிலேயே பஞ்சாயத்தா? இந்த ஜெயந்தி ஆண்ட்டி எப்படி உங்கள நாள் முழுக்க சமாளிக்கிறாங்க?” ௭ன யோசிக்க.
“உங்களுக்கு நக்கலா தெரியுதோ, வெளிக்காட்டிக்கலனாலும் உங்க அம்மா என்ன ஏதாவது சொல்லிட்டே இருக்கதுக்கு மனசுக்குள்ள எங்க அம்மா வருத்தப்படத் தான் செய்வாங்க. ஆனா கூட எனக்கு சப்போர்ட் பண்ணாம இது நீயே தேடிகிட்டது தான, அட்ஜஸ்ட் பண்ணி போ தப்பில்லன்னு சொல்லிடுறாங்க”.
“௭ன் செல்லத்த வருத்த பட விடுவேனா?? நீ சொல்லு நா உனக்கு சப்போர்ட் பண்றேன்” மறுபடியும் அவளை வாசம் பிடிக்க குனிய.
“அத தள்ளி இருந்தும் கேக்கலாம்” ௭ன அவன் முகத்தை பிடித்து நிமிர்த்தியவள், “புள்ள புறந்து மூணு மாசம் தான் ஆகுது, மூன்றை மாசம்தான் ஆகுது, இப்ப…..,நாலு மாசம் ஆகுது, இத டெய்லி ஞாபகப்படுத்தலனா என்ன?. ௭னக்கு பிள்ள பிறந்து ௭த்தன மாசம் ஆகுதுன்னு ௭ன்ன விட அவங்களுக்கு நல்லா தெரியுமோ??? பாப்பா சீக்கிரம் பிறந்ததுக்கு என்னவோ நான் மட்டுமே காரணமாறி, அவங்க புள்ள நீங்க தான இதுல மெயின் கல்பிரிட்ன்னு தெரிஞ்சும் என்னயவே சொன்னா எப்படி?”.
“அது உன்மேல ஒரு அக்கறையில சொல்றாங்கடி, என்டயும் சான்ஸ் கிடச்ச நேரம் எகுற தான் செய்றாங்க, ப்ரீயா விடு கண்டுக்காத. வேறு எதுவும் பிரச்சன இல்ல தான?”.
“சில நேரம் ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாம திணறுவேனா, அப்ப சொல்லி காட்டு வாங்க”.
“உன் ஹெல்த்துக்காகத்தான் சொல்றாங்கன்னு நினைச்சுக்கோ, எப்படியும் ஒரு பத்து நாள் இருந்துட்டு கிளம்பிடுவாங்க, நாம வேலைக்கு ஆள் போட்டுக்குவோம், சரியா”.
“ம்ம்..”.
“காலைல எந்திக்கும் போது இங்க இருன்னு சொல்லிருக்கேன்ல, கூப்டா தான் வருவியோ?” என கிச்சுகிச்சு மூட்ட, நெளிந்து சிரித்தவள், “எழுப வந்தேங்க, வைரம் வந்தான், இப்பதான் அவனை பேசி அனுப்பிட்டு வந்து பாத்தேன்,, நல்லா தூங்கிட்ருந்தீங்க, துணிய மடிச்சு வச்சுட்டு வந்து உங்கள எழுப்பலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ள கூப்பிடிங்க”.
“பிரகி அவன் கூட போயிட்டானா? என் சத்தம் கேட்டும் இன்னும் ஓடி வரலயேன்னு யோசிச்சுட்டுருந்தேன். வைரம் எதுக்கு வந்தான்?”.
“ஹா ஹா ஹா, லட்சு அல்வா கிண்டுனாளாம், அது களி மாறி வந்துட்டாம் எங்க அவனயே சாப்ட வச்சுடுவாளோன்னு பயந்து, பாக்ஸ்ல போட்டு இங்க கொண்டாந்துட்டான். ரெஸிபி சொன்னவ நீ தான, நீயே திண்ணுன்னு குடுத்துட்டான் எரும. பிரகிய அப்புறமா கொண்டாந்து விடுறேன்னு தூக்கிட்டு போயிருக்கான்”.
“சரி அப்ப கொஞ்ச நேரத்துக்கு யாரும் நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க?” என அவளை முத்தமிட முயல….
“ஆச தான், இப்ப கூப்பிடுவாங்க பாருங்க உங்கம்மா…” என அவள் முடிக்குமுன், “ஆறெழில்” என அழைத்திருந்தார்.
“ஆயுசு நூறு. தள்ளுங்க. ஃப்ரெஷ் ஆகிட்டுவாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” ௭ன அவள் ௭ழ முயல.
“அவங்க கூப்பிடட்டும், நீ வா” என இவன் இழுக்க, “வேற வினையே வேணாம் ஆள விடுங்க” என விலகி எழுந்து நின்றாள்.
கசங்கி இருந்த காட்டன் புடவையை சரி செய்துகொண்டு, “பிரஸ் பண்ணிட்டு வாங்க, எழும்புங்க” என அவனையும் ௭ழுப்பி, வெளியேற திரும்ப, அவள் கை பிடித்து, “ப்ளீஸ்டி” என்றான்.
“அடி வாங்காதீங்க ப்ரெசிடெண்ட், அடம்பிடிக்காம எழுந்து போங்க” ௭ன மிரட்ட.
“ஆறெழில்..” ராஜம்,
“வரேன்த்த. ப்ளீஸ் ப்ரெசிடெண்ட் எழுந்து வாங்க, நா வெளில போறேன்” என வெளியேறிவிட்டாள்.
“போடி” என எழுந்தவனும் பாத்ரூம் சென்று குளித்து பிரஷ் ஆகி அடுத்த அரை மணி நேரத்தில் வெளி வந்தான்.
பின் ஜெயந்தி சப்பாத்தி போட்டெடுக்க, எழில் பரிமாற சாப்பிட்டவன், “பாப்பா என்ன செய்றா?” என கேட்க.
“தூங்குறாங்க. எழும்பவும் தூக்கிட்டு வர்றேன்”.
சாப்பிட்டு ௭ழுந்தவன், “சரிமா, ஒருமாறி டயர்டா இருக்கு, நா படுக்குறேன்” என்கவும், “சரிங்க” என்று விட்டாள்.
௭ப்போதும் ஆசைக்காக குழந்தைகளை 10 நிமிடம் வைத்திருந்து அனுப்பிவிடுவான். கஷ்டமாக இருந்தாலும் வெளி சென்று வருவதால் அதிகம் டச் இல்லாமல் இருந்து கொள்வான். மனைவியிடமும் கிடைக்கும் இந்த பத்து, பதினைந்து நிமிடங்களே, அதை அவளுமே எதிர்பார்ப்பாள் தான், மாமியாருக்காக அடக்கி வாசிப்பாள் அவ்வளவே.
மதியம் அவள் வந்து எழுப்பும் போது, “கண்ணெல்லாம் காந்துது எழில், பிவர் மாதிரி இருக்கு லைட் ஃபுட் இருந்தா எடுத்துட்டு வா, அப்படியே டேப்லட்டும் எடுத்துட்டு வா இங்கயே சாப்பிட்டுக்குறேன்” என்கவும், அவள் அப்போதும் பெரிதாக பயம் கொள்ள வில்லை.
“சரி” என்று சென்று கஞ்சியும், துவையலும் எடுத்து வந்து கொடுத்தாள். மறுபடியும் சாப்பிட்டு படுத்து விட்டான். மறுபடியும் உறக்கம், ஈவினிங் ஏழு மணி போல் வைரம் பிரகியுடன் வந்தான்.
“வாடா,, லட்சு வரலயா?? சாப்பிட்டானா? இல்ல அடம் பிடிச்சானா?” என்ற எழிலுக்கு.
“சமத்தா சாப்பிட்டான், இப்பயும் பால் குடிச்சுட்டான். அப்புறமா வேணா எதாவது கொடு. ஆமா சீனியர் எங்க ரூம் விட்டு வெளியவே வர மாட்றாரு. கோரன்டைன பெர்பெக்ட்டா ஃபாலோவ் பண்றாரு”.
“பின்ன உன்ன மாதிரியா? மாஸ்க் கூட போடாம சுத்தி வாரதுக்கு”.
“அடுத்த தெருவுல இருந்து வாரதுக்கு எதுக்கு மாஸ்க், நா சீனியர உள்ள போய்ப் பாத்துக்கறேன்” என்று விட்டு உள்ளே போனவன், “ஆறு” என அழைத்தான்.
“என்ன?” என வந்தவளிடம், “சீனியருக்கு ஃபிவரா இருக்கு. சூடு நல்லா தெரியுது”.
“இன்னும் குறையலையா?” ௭ன தானும் தொட்டு பார்த்தவள், “டேப்லட் போட்டாங்களே” ௭ன்க.
“ஆல்ரெடி இருந்ததா?” ௭ன்றான் வைரம்,
“ஆமா, மார்னிங் இருந்தது, அப்றம் டேப்லட் போட்டு தான் படுத்தாங்க, அதான் தூங்கட்டும்ன்னு விட்டேன்”.
“நாம எந்த மாதிரி சுச்சுவேஷன்ல இருக்கோம் அசால்ட்டா ஃபிவர் இருந்ததுன்னு சொல்லிட்டிருக்க. தள்ளு நா ஆட்டோ கூட்டிட்டு வரேன். ஹாஸ்பிடல் போயிட்டு வந்துரலாம்”.
“ம்ம் சரி” என்று அவளும் வேகமாக ஹாட் வாட்டர் வைத்து பிளாஸ்கில் ஊற்றி கொண்டு உடன் கிளம்ப, வைரம் ஆட்டோ அழைத்து வந்திருந்தான்.
எழில் சென்று ப்ரகலத்தனை எழுப்ப, மெதுவாக எழுந்தவன், “பிவேர் குறையலையே எழில், அந்த மாஸ்க எடு. நீயும் மாஸ்க் போட்டுட்டே இனி வா”.
“ஏன் பயமுறுத்துறீங்க?” என அவள் அழ தயாராக.
“ம்ச், சேஃப்டிக்கு தான் சொல்றேன்” ௭ன சொல்லி கொண்டிருக்க.
“போலாமா?” என வந்தான் வைரம்.
“ம்ம், கிளம்புங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்துரலாம். சும்மா எதையாவது நினைக்காதீங்க”.
ப்ரகலத்தனும் டிரஸ்சை மாற்றிக் கொண்டு கிளம்பினான். உடன் கிளம்பிய எழிலை, “நீ எங்க வர்ற? இப்போ ஹாஸ்பிடல் வாரதெல்லாம் சேஃப்டி இல்ல, நானே போயிட்டு வந்துப்பேன். வைரம் நீயும் வீட்டுக்கு கிளம்பு”.
“நா வரலனா அவனாது வரட்டும், தனியாலா போக வேண்டும்” என்றாள், ராஜம், ஜெயந்தியும் கூட அதையே சொல்ல.
“அடடா, அவங்க வேணான்னா நா விட்டுருவேனா, பயப்படாத ஆறு நா போயிட்டு இன்ஜெக்ஷன் போட்டு பத்திரமாக கூப்பிட்டு வந்து விட்டுட்டு தான் போவேன்” என்றவன் திரும்பி ப்ரகலத்தனிடம், “நீங்க ஆட்டோல போங்க, நா பைக்ல ஃபாலோவ் பண்றேன். இது ஓகே தான உங்களுக்கு” என்ற பின், “சரி” என்று ஒத்துக் கொண்டு வெளியேறினான் ப்ரகலத்தன்.
“மாப்பிளைக்கு சாதா காய்ச்சல் தான் ஆறு பயப்படாத, பிள்ள அழுது போய் என்னனு பாரு” என சென்றவனையே பார்த்து யோசனையில் வாசலிலேயே நின்ற ஆறுவை உள்ளே அழைத்துச் சென்றார் ஜெயந்தி.
௭ழிலுக்கு என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் கவனம் என்னவோ கணவனிடம் தான் இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் உள்ளே வந்தவனை, “சரி ஆயிடுச்சா? என்ன சொன்னாங்க?” என்றாள்.
அவளைப் பார்த்து மெலிதாக சிரித்தவன், “ஒன்னும் இல்லமா, 101 டிகிரி தான் இருந்தது. இன்ஜெக்ஷன் போட்டு, டேப்லெட் கொடுத்திருக்காங்க, குறையலனா காலையில வர சொல்லிருக்காங்க”.
“அவனே முடியாம இருக்கான், இப்டியே நிக்க வச்சுட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டுருக்க, வழிய விடு, அவன் உள்ள போய் படுக்கட்டும்” என்ற ராஜம் தொடர்ந்து மகனிடம், “நீ உள்ள போப்பா, இட்லி கொடுத்துவிடுறேன், சாப்ட்டு படு” என்று விட்டுச் சென்றார்.

