Loading

அன்று சம்பள நாள். எல்லோரின் கணக்கிலும் பணம் வர, பிரியாவின் கணக்கிலும் பணம் வந்தது. அவளுக்கும் தனியாக சம்பளம் உண்டு என்று புஷ்பா சொல்லியிருந்தார்.

பணத்தை பார்த்ததும் துள்ளி குதித்தாள். இது வரை அவளாக எதுவும் சம்பாதித்தது இல்லை. இது தான் முதல் முறை.

‘இதுல அப்பா அம்மா சிவாக்கு எதாவது வாங்கிக் கொடுக்கனும்’ என்று நினைத்தவள், அப்போதே என்ன வாங்குவது? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரம் ஒருத்தி வந்து அமர் அழைப்பதாக சொல்ல, புஷ்பாவிடம் சொல்லி விட்டு எழுந்து சென்றாள்.

“கூப்பிட்டிருந்தீங்களாமே..” என்று அவள் கதவை தட்டி உள்ளே வர, “ஆமா பிரியா நாம இன்னைக்கு குவாரி போறோம்” என்றான்.

“குவாரியா?”

“எஸ்.. இது வரை கல் உடைக்கிறத நீ பார்த்தது இல்லல? இன்னைக்கு பார்க்கலாம்”

இதைக்கேட்டதும் பிரியா ஆச்சரியப்பட்டாள். அவளுக்கு அந்த இடத்தை பார்க்க ஆசை தான். கிராணைட் கற்களை உடைக்கும் இடங்களை பார்க்க வேண்டும் என்று கேட்டால் வளவன் ஒப்புக் கொள்ள மாட்டார்.

அவரே எப்போதாவது தான் அங்கு செல்வது. மற்ற நேரங்களில் டீலர் மூலம் தான் கற்கள் வந்து சேரும்.

ஆனால் அமர் செல்ல முடியும். அவனது தொழில் மிகவும் பெரிது. அவனது நிறுவனம் டைல்ஸ், கிராணைட் கற்கள் என்று பல விதங்களில் விரிந்திருந்தது.

“எப்ப போறோம்?” என்று அவள் ஆர்வமாக கேட்க, “இப்பவே.. நைட் திரும்ப லேட் ஆகிடும்.. அதுனால உன் கார வீட்டுக்கு கொண்டு போக சொல்லி மேனேஜர் கிட்ட சாவிய கொடுத்துடு.. நான் உன்னை வீட்டுல டிராப் பண்ணிடுறேன்” என்றான்.

அவள் வேறு எதுவும் யோசிக்காமல் உடனே சம்மதித்து விட்டு ஓடினாள். புஷ்பாவிடம் விசயத்தை சொன்ன போது, “அமர் சார் கிட்ட நிறைய கத்துக்கோ” என்று மட்டும் சொல்லி வைத்தார்.

சாவியை கொடுத்து விட்டு அமரோடு உடனே கிளம்பியவள், இந்த முறையும் சிவாவிடம் சொல்ல மறந்து விட்டாள். சிவா அவர்களை கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை.

எப்படியும் வேலையாகத்தான் போகிறார்கள். ஆனால் அவனது மனதுக்கு அது பிடிக்கவே இல்லை. அமர் நல்லவன் தான். இது வரை அவனிடம் குறை எதையும் கண்டு பிடிக்கவில்லை. வேலை மட்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

சில சோம்பேறிகளை வேலையை விட்டு தூக்கி விட்டான். முக்கியமாக வேலை செய்வது போல் நடிப்பவர்களை முதலில் தூக்கினான். அந்த அளவு அவனது சாமர்த்தியத்தை பாராட்டலாம்.

புதிதாக தொழிலை வாங்கியவன் அதிலிருக்கும் குறைகளை கலைவது இயற்கை. ஆனால் அவனது நெருக்கம் பிரியாவோடு நாளுக்கு நாள் அதிகரிப்பது தான் பிடிக்கவே இல்லை.

மணிக்கணக்காக இருவரும் பேசிக் கொண்டிருப்பதும் ஒன்றாக வேலை பார்ப்பதும் அவனை எரிச்சல் படுத்தியது.

இது வரை யாருக்கும் தங்களது காதலை சொல்ல வேண்டும் என்று சிவா நினைத்தது இல்லை. ஆனால் அமரிடம் சொல்லி விட வேண்டும். சொல்லி அவனை பிரியாவிடமிருந்து தள்ளி வைக்க வேண்டும்.

இவன் இப்படி நினைத்திருக்க, அமர் நாளுக்கு நாள் பிரியாவை நெருங்குவதை நினைத்து சந்தோசமடைந்திருந்தான்.

இப்போது சீக்கிரமே கிளம்பி விட்டதால் நேராக தனது அலுவலகத்திற்கு பிரியாவை அழைத்துச் சென்றான் அமர்.

உள்ளே நுழைந்ததில் இருந்து பெரும் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தாள் பிரியா. அந்த பிரம்மாண்டமான இடம் முழுவதும் இவனுக்கே சொந்தமாம். அவர்களது அலுவலகமும் சிறியது இல்லை தான். ஆனால் இது அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது.

அங்கிருந்தவர்கள் யாரும் யாரையும் கவனிக்கவில்லை. அவளையும் கவனிக்கவில்லை. அவனை பார்த்து சிலர் பேசினர். அதன் பிறகு கடந்து சென்றனர். வேலை தான் முக்கியம் போலும்.

அவளோடு தன் சொந்த அறைக்குச் சென்றான் அமர். அவள் அதை ஆர்வமாக பார்த்த போது உள்ளே பெருமையாக இருந்த போதும் காட்டிக் கொள்ளவில்லை.

“உட்காரு.. பத்து நிமிஷத்துல ஒரு ஃபைல் சைன் பண்ணனும். முடிச்சுட்டு வந்துடுறேன். அப்படியே கிளம்பலாம்.”

அவள் சம்மதமாக தலையசைத்ததும், அவளை தனியாக விட்டுச் சென்றான். பிரியா அந்த அறைக்குள் நடந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தாள்.

பின்னால் தொழிலை நன்றாக வளர்த்ததும் தனக்கும் இப்படி ஒரு அறை கட்டிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கனவு வளர்ந்தது.

அவளுக்காக காபி கொண்டு வந்து கொடுத்தனர். எது வேண்டுமானாலும் அழைக்கச் சொல்லி விட்டுச் சென்றனர். பிரியாவுக்கு எதுவும் தேவைப்படவில்லை. அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதே போதுமானதாக இருந்தது.

கண்ணாடி வழியாக கீழே தெரிந்த சாலைகளை பார்த்தாள். வாகனங்களின் இரைச்சல் எதுவும் கேட்காமல் அதை எல்லாம் பார்ப்பதற்கு ஓவியம் போல் இருந்தது.

மிகவும் உயரத்தில் இருப்பதால் இதுவும் ஒரு நலமே. அவர்கள் இரண்டாவது மாடியில் இருப்பதால், வெளியே இருந்து சில சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும்.

சொன்னது போல் பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தான் அமர்.

“எப்படி இருக்கு ஆஃபிஸ்? பிடிச்சுருக்கா?”

“சூப்பரா இருக்கு..”

“இது மாதிரி ஒன்ன உனக்கும் ரெடி பண்ணிடவா?”

“அங்க இவ்வளவு பெரிய இடம் இல்லையே”

“இங்கயே பண்ணிடலாம்”

“இங்க வேணாம்..” என்று தயக்கத்தோடும் சிரிப்போடும் அவள் மறுக்க, “ஏன்?” என்று கேட்டான்.

“சும்மா.. என் வேலை அங்க தான?” என்று கேட்டதும் அவன் வேறு எதுவும் சொல்லவில்லை.

“கிளம்பலாமா? வேலை முடிஞ்சதா?” என்று அவளே கேட்டதும், “போகலாம்” என்று நடந்தான்.

“சைன் பண்ணியாச்சா?”

“பண்ணிட்டேன்.. அவங்களும் கிளம்பிட்டாங்க” என்றவன் அவளுக்கு கதவை திறந்து விட்டு நின்றான்.

இருவரும் மீண்டும் கீழே வந்து காரில் ஏறி புறப்பட்டனர். நீண்டதொரு பயணம். அமரின் மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது.

“பாட்டு போடவா?” என்று கேட்டதும் பிரியா தலையாட்டினாள்.

எதோ ஒரு பாடலை போட்டவன், “உனக்கு எந்த மாதிரி பாட்டு பிடிக்கும்?” என்று கேட்டான்.

“மெலடி.. உங்களுக்கு?”

“எனக்கு எல்லா வகையும் ஓகே தான். உனக்கு பிடிக்கலனா மாத்திக்கோ”

அவன் சொன்னதும் அவனது காரை புரியாமல் பார்த்தாள். அவளது காரை பற்றி மட்டும் தான் அவளுக்குத் தெரியும். இது வித்தியாசமாக இருக்க, அதை கவனித்து உடனே அவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.

இருவரும் பாடலை ரசித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தனர். போகும் இடத்தை பற்றியும் அவன் நிறைய விவரங்கள் சொன்னான். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டாள் பிரியா.

இடத்தை அடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.

“திரும்பி வர லேட் ஆகிடும்.. லன்ச் சாப்பிட்டு போகலாம்” என்றதும் உடனே தலையாட்டி விட்டாள் பிரியா.

சிறிது நேரத்திற்கு முன்பிருந்தே பசித்தது. அவனிடம் சொல்ல தயங்கி அமைதியாக இருந்தாள். அவனாக கேட்டது போதுமே.

இருவரும் உள்ளே சென்று அமர்ந்து மெனுவை பார்த்துக் கொண்டிருக்க திடீரென நிமிர்ந்த பிரியா, “நான் பில் பே பண்ணுறேன்” என்றாள்.

இதை கேட்டு ஆச்சரியமாக புருவம் உயர்த்தினான். எதற்கு இப்படி திடீரென சொல்கிறாள் என்று புரியவில்லை.

“இன்னைக்கு ஃபர்ஸ்ட் சேலரி வந்துருக்கு.. சோ என்னோட ட்ரீட்” என்று அவள் சந்தோசமாக சொல்ல, அவனது மனம் இனிமையாய் அதிர்ந்தது.

காலையில் தான் எல்லோருக்கும் பணம் வந்திருக்கும். பிரியா முதன் முதலில் அவனுக்காக அதை செலவழிக்கிறாள். நெஞ்சம் சந்தோசத்தில் விம்மியது. இந்த நொடியே காதலை சொல்லி அவளது கரம் பற்றி வாழ ஆசை வந்தது.

அந்த சந்தோசத்தை எல்லாம் சிறு புன்னகையுனுள் ஒளித்துக் கொண்டு, “அப்போ நிறைய ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்” என்றான்.

“ஹலோ.. இதெல்லாம் தப்புங்க சார்”

“நீ என்னை அமர்னே கூப்பிடலாம் பிரியா”

“வயசுல பெரியவங்களா இருக்கீங்களே…” என்று இழுக்க அவன் நெஞ்சில் கைவைத்து நம்பமுடியாத பார்வை பார்த்தான்.

“எனக்கு பேத்தி பேரன் இருக்க விசயம் உனக்கு எப்படி தெரிஞ்சது? தலைக்கு டை அடிச்சுட்டு வந்துருந்தேனே.. அய்யோ” என்று பதறியவன் கைபேசியில் தன் முகத்தை பார்த்தான்.

ஒரு நொடி அதிர்ந்து போய் அவனை புரியாமல் பார்த்த பிரியா அடுத்த நொடி கலகலவென சிரித்து விட்டாள். அவளது சிரிப்பை ரசித்தவனின் உதடுகளும் சிரிக்க தயாரானது. ஆனால் அதை விட முக்கியமாக கேமராவை அவள் பக்கம் திருப்பி, சத்தமில்லாமல் படம் எடுத்துக் கொண்டான்.

சிரித்து முடித்த பிரியா, “நீங்க வயசானவங்கனு சொல்லல.. என்னை விட வயசுல பெரியவங்கனு சொல்லுறேன்” என்றாள்.

“வாங்க போங்கனு சொல்லுறியே.. அதுல இருக்க மரியாதையே போதும்” என்று கூறி அமர் தலை சாய்க்க, ஒரு நொடிக்கு பிறகு சம்மதமாக தலையசைத்தாள்.

“ஓகே அமர்..”

“ஓகே.. ஆர்டர் பண்ணலாமா?” என்றவன் வந்தவர்களிடம் ஆர்டர் கொடுத்து விட்டு திரும்பினான்.

“நீ பே பண்ணுவனு சொல்லிருக்க மறந்துடாத” என்று போலியாக அவன் மிரட்ட “ஆன்லைன் பேமண்ட் பண்ணுறது ரொம்ப சுலபம்.. கார்ட் கூட இருக்கு. பயப்படாம சாப்பிடுங்க அமர்” என்று சிரித்தாள் பிரியா.

அவளை இப்படியே சிரித்து பார்க்க ஆசை பொங்கியது. இதே ஆசைக்கு மாறாக அவளை அழ வைத்து பார்க்க துடிப்பான் என்றால் நம்பிடுவானா என்ன?

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்