அத்தியாயம் 4
“விக்ரம்.. ” என்று அவன் பெயர் அழைக்கப் பட்டதும், நிரஞ்சனாவும் விக்ரமும் உள்ளே சென்றனர்.
“வாங்க..” என்று புன்னகையுடன் வரவேற்ற மருத்துவர், நிரஞ்சனாவைப் பார்த்து, “கரெக்ட்டா ஐ ட்ராப்ஸ் எல்லாம் போடுறீங்களா மா” என்று கேட்க,
அவளும் ஆமாம் என்றாள்.
“நீங்க இங்க இருங்க.. ” என்று நிரஞ்சனாவை பார்த்துக் கூறியவர், செவிலியரைப் பார்த்து, “உள்ள ரூம்மூக்கு அழைச்சிட்டு வாங்க..” என்று அந்த அறைக்குள் இருந்த இன்னொரு அறைக்குள் விக்ரமை அழைத்துச் சென்றார்..
அங்கே, கண் மருத்துவர்கள் உபயோகப்படுத்தும் சில கருவிகள் மற்றும் உபகரணங்கள் இருந்தன..
அதில் குறிப்பாக,
1. ஸ்னெல்லன் விளக்கப்படம்- பார்வைக் கூர்மையை (தூர பார்வை) அளவிடப் பயன்படுத்தப் படுகிறது.
2. ஃபோரோப்டர் – ஒளிவிலகல் பிழையை அளவிடுவதற்கும் சரியான லென்ஸ் மருந்துக் குறிப்பைத் தீர்மானிக்கவும் பயன்படும் கருவி.
3. ஆட்டோரேஃப்ராக்டர் – ஒளிவிலகல் பிழையை அளவிடும் இயந்திரம்.
4. ஸ்லிட் லேம்ப் – ஒளி மூலத்துடன் கூடிய நுண்ணோக்கி, கருவிழி மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் முன்புறப் பகுதியைப் பரிசோதிக்க பயன்படும் உபகரணம்.
5. ஆப்தால்மாஸ்கோப் – விழித்திரை மற்றும் கண்ணின் பிற உள் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய பயன்படும் கையடக்கக் கருவி.
6. டோனோமீட்டர் – கிளைக்கோமாவை கண்டறியவும் கண்காணிக்கவும் உள்விழி அழுத்தத்தை (IOP – Intraocular Pressure) அளவிடப் பயன்படுகிறது.
7. விஷுவல் ஃபீல்ட் அனலைசர் – நோயாளியின் புறப் பார்வையை மதிப்பிடவும், ஏதேனும் குறைபாடுகள் அல்லது குருட்டுப் புள்ளிகளைக் கண்டறியவும் பயன்படுகிறது.
8. கெரடோமீட்டர் – விழித்திரையின் வளைவை அளந்து அஸ்டிஜிமாடிசத்தைக் கண்டறிந்து கார்னியல் வடிவத்தை மதிப்பிடுகிறது.
9. ரெட்டினோஸ்கோப்- கண்ணின் ஒளிவிலகல் பிழையை அளவிடவும், சரியான லென்ஸ் மருந்துச்சீட்டைத் தீர்மானிக்கவும் பயன்படுகிறது.
OCT ( Optical coherence Tomography ) என்பது விழித்திரை நோய்களைக் கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த இமேஜிங் முறையாகும்.
இந்தக் கருவிகள் கண் மருத்துவர்களுக்கு பல்வேறு கண் நிலைகளைக் கண்டறிந்து நிர்வகிக்க உதவுகின்றன. சரியான லென்ஸ்களையும் பரிந்துரைக்கின்றன மற்றும் கண் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கின்றன.
இதில் தேவைப்படும் கருவிகளை மட்டும் விக்ரமிற்கு உபயோகப் படுத்தி அவனது கண்ணின் தன்மையை ஆராய்ந்து, அதனை குறித்தும் கொண்டார்…
செவிலியர் அவனை வெளியில் அழைத்து வந்து, நிரஞ்சனா அருகில் அமர வைக்க, மருத்துவரும் வந்து சேர்ந்தார்.
“விக்ரமுக்கு இப்போ ரொம்ப நல்லாவே முன்னேற்றம் வந்து இருக்கு.. இப்போ நம்ம அவனுக்கு ஆபரேஷன் பண்ணா, அவனுக்கு பார்வை கெடச்சிடும் ” என்று சொல்ல,
” ரொம்ப சந்தோசம் டாக்டர் … ஆபரேஷன் எப்போ?” என்று அவள் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னர் கேட்க,
மருத்துவரும் “இப்போ கூட்டிட்டு போங்க மா . அடுத்த வாரம் செக்கப்க்கு வாங்க. அப்போ ஒன்ஸ் செக் பண்ணிட்டு அட்மிஷன் போட்டுரலாம். ” என்று அறுவை சிகிச்சைக்கான நாளையும் எழுதிக் கொடுத்தார்.
மருத்துவருக்கு நன்றியை தெரிவித்து விட்டு, இருவரும் வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தனர்..
“அக்கா.. எனக்கு திரும்பவும் பார்வை வர போகுது க்கா..” என்று விக்ரம் மகிழ்ச்சியில் உரைக்க,
“ஆமா டா.. உனக்கு கண் பார்வை வந்ததும் நீ திரும்பவும் இந்த உலகத்தை பாக்கலாம். திரும்பவும் நீ படிக்க போகலாம்.” என்று அவளும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
“விக்ரம் நம்ம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போய்ட்டு போலாமா..” என்று கேட்க, அவனும் சரி என்றான்.
பின்னர், ஆட்டோக்காரருக்கு அழைத்து வரச் சொல்ல, அவரும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்.
“அண்ணா… போர வழியில பிள்ளையார் கோவில் இருக்குல்ல.. அங்க நிப்பாட்டுங்கண்ணா..” என்றாள்.
அவரும் ” சரிம்மா.. ” என்றவர், சிறிது தூரம் சென்றதும் கோவில் வரவும் அங்கு நிறுத்த, “அண்ணா.. நாங்க சாமி கும்பிட்டு வரோம். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுங்க..” என்றவள், விக்ரமை கைத் தாங்களாக ஆட்டோவில் இருந்து இறக்கி, நடத்தி கூட்டிச் செல்ல,
கோவிலுக்கு முன் இருந்த பூக் கடையில் அருகம்புல் வாங்கிக் கொண்டு இருவரும் உள்ளேச் சென்றனர்.
ஐயரிடம் அருகம்புல்லை கொடுத்து விட்டு, இறைவனிடம் மனமார வேண்டிக் கொண்டு, அவருக்கு நன்றியையும் செலுத்தினர்.
பின், பிரகாரம் சுற்றி வந்த பின்னர், இருவரும் மீண்டும் ஆட்டோவிற்கு சென்று அமர, அவர் நேராக வண்டியை அவரது வீடு இருக்கும் பகுதிக்கு செலுத்தினார்..
***************
வெய்யோன் உச்சிப் பொழுதை தாண்டி வெகு நேரம் ஆகியும், முதல் நாள் இரவு அடித்த போதை இன்னும் தெளியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் சஞ்சய்..
அவர் தந்தை மகாலிங்கம் வந்து எழுப்பி விட்டுப் பார்க்க, அவன் எழுந்து கொள்ளாததால், வீட்டில் வேலை செய்யும் பெண்மணியிடம் சொல்லிவிட்டு, அவர் அலுவலகத்திற்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, லேசாக முனகிக் கொண்டே தலையை பிடித்தவாரு எழுந்து அமர்ந்தான்.
” ச்ச.. ” என்று சொல்லியவன், “கண்ணம்மா..” என்று வீட்டில் வேலை செய்யும் அந்த அம்மாவை சத்தம் போட்டு அழைத்தான்.
அவரோ பதறிக்கொண்டு ஓடி வர, “என்ன தம்பி..” என்று பயத்துடன் கேட்டார்.
“ஒரு லெமன் ஜூஸ் போட்டுக் கொண்டு வாங்க..” என்றான்.
அவரோ சரி என்று, கீழே சென்று அவனுக்கு போட்டுக் கொண்டு வந்தார்.
அதுவரையிலும் அவர் செல்லும் போது எப்படி அமர்ந்து இருந்தானோ, அதே போல தலையை பிடித்தவாரே அமர்ந்து இருந்தான்.
“தம்பி இந்தாங்கப்பா..” என்று அவர் கையில் இருந்த பழச் சாறை நீட்ட, அவனும் வாங்கிக் கொண்டான்.
அவரும் அவனிடம் கொடுத்து விட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.
அதை குடித்த பிறகு தான் அவனுக்கு தலைவலி சிறிது மட்டுப்பட்டது என்று சொல்லலாம்.
கண்ணாடி கிளாசை அங்கு இருந்த டேபிளின் மீது வைத்து விட்டு, முதல் நாள் நடந்த நிகழ்வுகளை மனதில் அசை போட்டவன், தன் தந்தையிடம் பேசியதையும் நினைவு கூர்ந்தான்..
பின் அங்கேயே தான் குடித்து விட்டு விழுந்து கிடந்தவனையும் அவர் தூக்கிக் கொண்டு, அறைக்கு கொண்டு வந்து சேர்த்ததையும் நினைவு படுத்தினான்.
“ப்ச்..” என்று நெற்றியை நீவியவன், அவன் அலை பேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுவித்தான்.
அந்த பக்கம் ஏற்கபட்டதும், “ஹலோ.. சொல்லுங்க சார்..” என்று பவ்வியமாக அழைக்க, “காளி..” ஒரு ஆள போடணும்.. ” என்றான் சஞ்சய்..
“ஓகே.. சார்.. போட்டுரலாம் ஆளு யாருனு சொல்லுங்க..” என்று அந்த காளி என்பவன் கேட்க,
“நான் உனக்கு போட்டோ அனுப்பி வைக்கிறேன். வேலை கட்சிதமா முடியனும். எந்த வித சிக்கலும் வந்துரக் கூடாது.. முக்கியமா துளி அளவு கூட என் மேல சந்தேகம் வந்துரக் கூடாது..” என்று சஞ்சய் கூற,
“சரிங்க சார்.. முடிச்சிரலாம்..” என்றான்.
“ம்ம். இப்போ உன் அக்கௌன்ட் க்கு பாதி பணம் போட்டு விடுறேன். மீதி நீ வேலை முடிச்சதும் வந்து சேரும்..” என்று அவனிடம் கூறிவிட்டு, அவன் அழைப்பை துண்டித்தவன், அவனுக்கு பரிதி பற்றிய விவரங்களை எல்லாம் இவன் அனுப்பினான்.
அவனிடம் சொன்னது போலவே, அவனுக்கு பணத்தையும் அனுப்பி விட்டு, “ரொம்ப வருஷமா எனக்கு கொடைச்சல் கொடுத்துகிட்டே இருந்த. இப்போதான் உன்னை ஒரு வழி பண்ண எனக்கு நேரம் வந்து இருக்கு பரிதி.. உன் சேப்டர் க்ளோஸ் டா..” என்று வன்மமாக புன்னகைத்துக் கொண்டான்.
தன் வேலை முடிந்தது என்று இப்பொழுது உல்லாசமாக துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்..
****************
அன்றைய தின அலுவலகத்தில் காலையில் இருந்தே ஒரே பரபரப்பாகத் தான் இருந்தது.
முதல் தினம் நடந்த மீட்டிங்கில் வெளிநாட்டுவாழ் இந்தியர் முதலீடு செய்ததே இதற்குக் காரணம்.
அனுப்பப்படும் பொருட்களின் தேவை அதிமாகவதால், ஆட்களின் தேவையும் அதிகப்படுகிறது..
அதனால் அவர்களின் கம்பனிக்கு “வேலைக்கு ஆட்கள் தேவை” என்ற விளம்பரத்தை கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
வைஷுவும் பரிதியும் முக்கிய வேலையாக ஃபைல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இனியனோ, அவனது அறைக்கு அருகில் இருக்கும் கேபினில் இருந்த ஷீலாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“என்ன ஷீலா.. நேத்து கால் பண்றேன்னு சொன்ன.. பண்ணவே இல்லை..” என்று அவனது வசீகரப் புன்னகையுடன் கேட்க,
“அட போங்க சார்.. நேத்து என் பாய் ஃப்ரண்ட் ஊருல இருந்து வந்துட்டான் அதான் பண்ண முடியல..” என்றாள்.
“ஓ .. அப்போ இன்னைக்கு நைட் ஃபிரீயா இருந்தா கால் பண்ணு..” என்றவன், அவளுக்கு அருகில் இருந்த, மாலினியிடம் பேசச் சென்று விட்டான்.
“ஹாய்.. மாலு.. என்ன நேத்து உடம்பு சரி இல்லனு லீவ் போட்டியாமே.. இப்போ எப்படி இருக்கு உடம்புக்கு..”என்று அக்கறையுடன் கேட்க,
“ம்ம். இப்போ சரி ஆகிருச்சு சார்.. “என்றாள் மாலினி.
“ஓகே. வேலையை கன்டினியூ பண்ணு. நான் வரேன்..” என்றவன் கிளம்பி வெளியில் அலை பேசியில் யாருடனோ பேசச் சென்று விட்டான்.
பரிதியோ அருகில் இருந்த தனது மேனேஜரிடம், ” இனியனை வரச் சொல்லுங்க.. ” என்று கூறினான். அவரும் சென்று பார்த்துவிட்டு வந்து, ” அவரு அவரோட அறையில இல்லை சார். ” என்றார்.
“இந்த இனியன் எங்க போய்ட்டான். அவகிட்ட ஒரு முக்கியமான வேலை கொடுத்து இருந்தேன்.. இன்னும் முடிக்காம என்ன பண்ணிட்டுருக்கான் ” என்று பற்களை கடித்துக் கொண்டு கேட்க,
“அவன் யாருகூடயாவது கடலை போட்டுட்டு இருப்பான் மாமா.. வெளிய பாக்கச் சொல்லுங்க..” என்று தன் சிறிய மாமனை பற்றி நன்கு அறிந்தவளாய் கூறினாள்..
பரிதி அவனது அறையில் இருந்தவாரே, சிசிடிவி யில் பார்க்க, அவன் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அலை பேசியில் பேசிக் கொண்டிருப்பது தெரிய, உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தான்..
யாரோ காத்திருப்பில் வருகிறார்கள் என்பதை உணர்த்தும் சத்தம் கேட்டதும், தன் தமையன் அழைப்பதை பார்த்து விட்டு, “இதற்கு முன் பேசிய அழைப்பை துண்டித்து விட்டு பரிதியின் அழைப்பை ஏற்றான்.
” சொல்லு ண்ணா.. ” என்று இனியன் கேக்க, ” டேய்.. நான் அன்னைக்கு அந்த டெல்லி பார்ட்டிக்கு ஃபைல் ரெடி பண்ண சொல்லி இருந்தேன்.. நீ பண்ணிட்டியா இல்லையா. இங்க முக்கியமான டிஸ்கஸன் போயிட்டு இருக்கு. நீ அங்க என்ன பண்ற.. ஃபைல் ஓட வா ” என்று அவனுக்கு கட்டளை இட்டு விட்டு அழைப்பை துண்டித்தான்.
நித்தமும் வருவாள்…