Loading

அத்தியாயம் 4

 

குருதி பெருகி வழிந்து ஓடிய காயங்கள் இருந்த சுவடின்றி, சொல்லப் போனால் என்றும் இல்லாத புது பொலிவுடன் நிச்சலனமாக உறங்கும் இன்பசேகரனைப் பார்த்த மென்மொழிக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை.

 

வியப்பும் குழப்பமும் கலந்த கலவையாக அந்த அறையின் வாசலில் நின்றவளை நகர்த்தி இருந்தது, ‘யாழ்மொழி விழித்து விட்டாள்’ என்ற செய்தி!

 

முகம் அறியாத ஒருத்தி, தன் உடன்பிறந்தவள் என அடிபட்டு விழித்திருக்க, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாற்ற நிலையில்தான் இருந்தாள் மென்மொழி.

 

தோழியின் நிலை புரிந்தவளாக, “மொழி, முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுப்போம்.” என்று ஆறுதலாகப் பேசியவாறு அவளை அழைத்துக் கொண்டு யாழ்மொழி இருந்த அறையை நோக்கிச் சென்றாள் சுடரொளி.

 

இருவரின் பேச்சையும் கேட்டவாறே யோசனையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான் யுகேந்திரன்.

 

அறைக்கதவின் கைப்பிடியை பிடித்தவாறு தயக்கத்துடன் மென்மொழி நிற்க, எத்தனை நேரம் அப்படியே நின்றாளோ, பின்னிலிருந்து செருமல் சத்தம் கேட்டதும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு அவளையே துளைக்கும் பார்வை பார்த்திருந்தான் யுகேந்திரன்.

 

இதயத்தைத் துளைக்கும் அந்தக் கூர்ப்பார்வை அவளைப் பாதிக்க, ‘ச்சு, என்ன இது, ஏன் இப்படி பார்க்குறான்? ப்ச், இந்த சுடரை வேற காணோம்!’ என்று  மென்மொழி நினைக்க, அதற்கு மறுமொழி கூறுவது போல, “என் பார்வையே அப்படித்தான்.” என்று அவனும் கூற, ‘இப்பவும் சத்தமா பேசிட்டோமா?’ என்று அவள் பதறினாள்.

 

அதையும் கேட்டது போல, இதழோரம் சிறு புன்னகை அவனிடம்!

 

அதை அவளிடம் கச்சிதமாக மறைத்தபடி, “உள்ள போற எண்ணம் இருக்கா இல்லையா?” என்று வினவ, அவளும் அவன் சொல்லிற்கேற்ப உள்ளே செல்ல கதவைத் திறந்து, பின் மீண்டும் மூடி பின்னடைந்தாள்.

 

அதில், அவன் மீது மோதியும் கொண்டாள்.

 

நிகழ்ந்த நொடி நேர தாக்குதலில், இருவருக்குமே புதுவித உணர்வு மனதிற்குள் தோன்றினாலும், இருக்கும் சூழல் உணர்ந்து அதை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி விட்டனர்.

 

சில நொடிகளில் சுயமடைந்த மென்மொழியோ, யுகேந்திரன் பக்கம் திரும்பி, “நீங்க ஏன் உள்ள வரீங்க?” என்று சந்தேகத்துடன் வினவினாள்.

 

அவளின் கேள்வியில் ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “ஏன்னா, இது ஆக்சிடெண்ட் கேஸ். அதை விசாரிக்க வரேன்.” என்றவாறே, கதவின் கைப்பிடியைப் பிடித்திருந்த அவளது கரத்தின் மீது கைவைத்து கதவைத் திறந்தான் யுகேந்திரன்.

 

விளைவு, இருவரும் ஜோடியாக அந்த அறைக்குள் நுழைந்தனர்!

 

அவர்கள் பின்னே உள்ளே நுழைந்த சுடரொளியோ மென்மொழி அருகே வந்து, “அடியேய் மொழி, என்னடி நடக்குது இங்க? நம்மளை சுத்தி என்னென்னமோ நடந்துட்டு இருக்கு. நீ என்னன்னா, அந்த போலீஸ்கார் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க!” என்று கிசுகிசுப்பாகக் கூறினாள்.

 

“எருமை மாடே! எல்லாம் உன்னாலதான். அந்த போலீஸ் கூட என்னை தனியா கோர்த்து விட்டு எங்கடி போன நீ? இதுல ரொமான்ஸ்னு கம்ப்லைன்ட் வேற!” என்று மென்மொழி மெல்லிய குரலில் கூறி பல்லைக் கடிக்க, “நான் எங்க போனேன். குத்துக்கல்லு மாதிரி அங்கயேதான் நின்னேன். ஆனா, நீங்கதான் என்னை ஒரு மனுஷியாவே மதிக்காம, கதவை இழு – தள்ளுன்னு ரொமான்ஸ் பண்ணீங்க.” என்றாள் சுடரொளி.

 

அதற்கு மறுமொழி கூற வந்த மென்மொழியை தடுத்த யுகேந்திரனோ, “உங்க சண்டையை அப்புறமா வச்சுக்கோங்க.” என்று கூறிவிட்டு, படுக்கையில் கண்மூடி படுத்திருந்தவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவனை முந்திக் கொண்டு சென்றாள் மென்மொழி.

 

இவர்களின் சத்தத்தில் கண்விழித்தவளோ, வறண்டு கிடந்த உதடுகளை சிரமப்பட்டு பிரித்து, “மொழி…” என்று அழைக்க, அத்தனை நேரமிருந்த குழப்பம் மறைந்து, “யாழ்…” என்று அவளின் அடிபட்ட கரத்தை பற்றிக் கொண்டாள் மென்மொழி.

 

ஆனால், மென்மொழியின் நொடிநேர தயக்கத்தைக் கண்டு கொண்ட யாழ்மொழியோ, அதைத் தவறாகப் புரிந்து கொண்டு, “என்னைப் பார்க்க கூட பிடிக்கலையா மொழி? அது சரி, எப்போ பார்த்தாலும் உன்கூட சண்டை போட்டுட்டே இருந்த என்னை எப்படி பிடிக்கும்? எல்லாம் என் நேரம், நீ சொன்னதெல்லாம் நம்பாம, அவனைப் போய் நல்லவன்னு நம்பி… ப்ச், சொல்லவே அசிங்கமா இருக்கு மொழி.” என்று கண்கலங்கினாள் யாழ்மொழி.

 

அவள் தவறாகப் புரிந்து கொண்டு பேசுவதைத் தடுக்க எண்ணிய மொழி, அடுத்து அவள் கூறியவற்றை கிரகித்து, “என்னாச்சு யாழ்? அந்த ராஸ்கல் என்ன பண்ணான்? எப்படி இந்த ஆக்சிடெண்ட் நடந்துச்சு? அவன்தான் காரணமா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

 

முதலில் பதில் சொல்லத் தயங்கிய யாழ்மொழி, பின்னர் வெளியே கூறினாலாவது மனதில் ஏறிய பாரம் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ, நடந்தவற்றைச் சுருக்கமாக கூறினாள்.

 

“இடியட், உன்கிட்ட வாலாட்டுனப்போவே அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருக்கணும் மொழி. பா***ட், இப்படி எல்லாம் சர்வசாதாரணமா கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க.” என்று கோபத்தில் கத்தினாள் சுடரொளி.

 

அதைக் கேட்ட யாழ்மொழியோ அதிர்ச்சியுடன் மென்மொழியை பார்த்து, “உன்கிட்டயா..? என்ன பண்ணான் அவன்?” என்று கேட்டவள், பதிலை எதிர்பார்க்காமல், “ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்க, “சொன்னா மட்டும் நம்பியிருப்பியா?” என்று கோபம் குறையாமல் பதில் கேள்வி கேட்டாள் சுடரொளி.

 

“சுடர், இப்போ எதுக்கு இந்தப் பேச்சு?” என்று மென்மொழி தடுக்க, யாழ்மொழியோ குற்றவுணர்வுடன், “இதுவும் என்னாலதான். இப்போ புரியுது மொழி, உனக்கு ஏன் என்னை பார்க்கக் கூட பிடிக்கலன்னு.” என்றாள்.

 

‘அட லூஸே’ என்பது போல யாழ்மொழியை பார்த்து வைத்த சுடரொளி, தன் கைப்பையிலிருந்த சிறிய கண்ணாடியை எடுத்து யாழ்மொழியின் கையில் திணித்தபடி, “இதுக்குதான் அவ தயங்குனா. எக்குத்தப்பா யோசிக்கிற உன் மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடு.” என்றாள்.

 

“ப்ச், சுடர்.” என்று மென்மொழி சலித்துக் கொள்ள, யாழ்மொழியோ குழப்பத்துடன் அந்தக் கண்ணாடியைப் பார்த்த அடுத்த நொடி கத்த ஆரம்பித்து விட்டாள்.

 

அந்த கண்ணாடியை கீழே தூக்கி போட்டு, கீழே விழுந்து நொறுங்கியதை, ஏதோ தீண்டத்தகாததை போல பார்த்தபடி, “நோ நோ, இது நான் இல்ல. இது என் முகம் இல்ல. என் முகம்… அழகு… இல்ல இல்ல…” என்று அவளின் முகத்தை தொட்டு தடவியபிடி கத்தினாள்.

 

“ரிலாக்ஸ் யாழ்.” என்று எத்தனை சொல்லியும் யாழ்மொழியின் புலம்பல் நின்ற பாடில்லை.

 

அதில் எரிச்சலான மென்மொழி சுடரொளியை நோக்கி, “இப்போ இது அவசியமா?” என்று வினவ, “மறைச்சா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?” என்று மல்லுக்கு நின்றாள் சுடரொளி.

 

ஒரு பெருமூச்சுடன் யாழ்மொழி அருகே சென்ற மென்மொழி, தன்னிலை மறந்து புலம்பிக் கொண்டிருந்தவளை உலுக்கி, “இது நீ இல்லதான். அதுக்காக இப்படி புலம்பிட்டு இருந்தா சரியாகிடுமா? நம்மளை சுத்தி என்னென்னமோ நடக்குது யாழ். அது என்னன்னு நம்ம தெரிஞ்சுக்கணும். அது தெரிஞ்சா, நீ ஏன் இப்படி மாறியிருக்கன்னும் தெரியும். டிரஸ்ட் மீ, திரும்ப நீ பழையபடி மாறிடுவ.” என்று நம்பிக்கை கொடுக்க, அவளது கரத்தை பிடித்துக் கொண்ட யாழ்மொழியோ, “நான் மாறிடுவேன்தான?” என்று பரிதாபமாக கேட்டாள்.

 

“உஃப், இப்ப கூட அழகா இல்லங்கிறதுதான் அவ கவலை!” என்று சுடரொளி முணுமுணுக்க, அவளைத் திரும்பி முறைத்த மென்மொழி, மீண்டும் யாழ்மொழியிடம் திரும்பி, “கண்டிப்பா யாழ். இப்போ அந்த ஆக்சிடெண்ட் எப்படி நடந்துச்சுன்னு யோசிச்சு சொல்றியா?” என்று வினவினாள்.

 

அதில் நிதானத்திற்கு வந்த யாழ்மொழியும் கண்களை மூடி சிந்தித்து, “அந்த ஆக்சிடெண்ட்டே என்னாலதான் மொழி. நடந்ததை யோசிச்சுட்டே, ரோட்டைப் பார்க்காம கிராஸ் பண்ண போய், எதிர்ல வந்த கார் கண்ட்ரோல் இல்லாம என்மேல மோதிடுச்சு.” என்றாள்.

 

“அப்போ இன்பாக்கு எப்படி அடிபட்டுருக்கும்?” என்று சுடரொளி மென்மொழியிடம் கேட்க, “இன்பாவா?” என்று அதிர்ந்த யாழ்மொழி, “அவனுக்கு அடிபட்டிருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

 

“உனக்கு அவனை, அந்த ஆக்சிடெண்ட் நடந்த இடத்துல பார்த்த ஞாபகம் இல்லையா?” என்று மென்மொழி வினவ, மீண்டும் யோசித்த யாழ்மொழி, “அந்த கார் என் மேல முழுசா மோதல மொழி. யாரோ எனக்கு முன்னாடி வந்து நின்ன மாதிரி இருந்துச்சு. அது, இன்பாவான்னு எனக்கு சரியா தெரியல.” என்றவள், சட்டென்று கண்களை திறந்து, “இன்பா… அவனுக்குத்தான் நிறைய அடிபட்டுருக்கும். இப்போ எப்படி இருக்கான்?” என்று பதறினாள்.

 

“ஹ்ம்ம், உனக்கு முகம் மாறின மாதிரி, அவனுக்கு ஏற்பட்ட காயம் எல்லாம் மறைஞ்சு போச்சு.” என்று சுடரொளி கூற, குழப்பத்துடன் அவளை ஏறிட்டாள் யாழ்மொழி.

 

அதே சமயம், உள்ளே நுழைந்த செவிலி, “பேஷண்ட்டோட திங்ஸ்.” என்று மென்மொழியிடம் கொடுத்து விட்டு செல்ல, அதில் மற்றவைகளை மங்கச் செய்து ஒளிர்ந்தது செம்மஞ்சள் நிறக்கல்.

 

அதைப் பார்த்து விழி விரித்த மென்மொழி, “இது எப்படி உன்கிட்ட யாழ்?” என்று அதிர்ச்சி விலகாமல் வினவ, தலை குனிந்த யாழ்மொழியோ, “அது… தாத்தா வீட்டுல இருந்து எடுத்தேன்.” என்றாள்.

 

மென்மொழி கையில் வைத்திருந்த கல்லை பார்த்த சுடரொளியோ, “இது அதுல?” என்று அதைத் தொடக் கூட முயற்சிக்காமல் தள்ளி நின்று கொள்ள, அத்தனை நேரம் சற்று தள்ளி நின்று மூவரின் சம்பாஷணைகளை கவனித்துக் கொண்டிருந்த யுகேந்திரன், மென்மொழி அருகே வந்து அந்தக் கல்லை உற்று நோக்கினான்.

 

பின் என்ன நினைத்தானோ, “உன்கிட்ட இருக்க கல்லையும் எடு.” என்று மென்மொழியைப் பார்த்து கூற, அவளோ திகைப்புடன் அவனை பார்த்து, “என்கிட்ட கல் இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வினவினாள்.

 

அவனோ அதற்குப் பதில் சொல்லாமல், கால்சராய் பைக்குள் கைவிட்டு எதையோ தேடி எடுத்து, கரத்தை விரித்து எடுத்த பொருளை மென்மொழிக்கு காட்டினான்.

 

அவன் கரத்தில் நீல நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது அந்தக் கல்!

 

அப்போது ஏதோ உந்துதலில் அவளின் கைப்பைக்குள் கைவிட்டு துழாவி கருநீல நிறக்கல்லை எடுத்த சுடரொளி, “அடக்கடவுளே, இதென்ன எல்லாரு கிட்டயும் கல் இருக்கு? ஆமா, இது எப்படி என் பேக்ல வந்துச்சு?” என்று ஒருபக்கம் குழம்ப, யுகேந்திரன் கையிலிருந்த கல்லைப் பார்த்த மென்மொழியோ, “இது தாத்தா வீட்டுலதான இருந்துச்சு?” என்று குழம்பினாள்.

 

“ஹையோ, இங்க என்னதான் நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன்.” என்று யாழ்மொழி கூற, “அட இரும்மா, ஃபுல் கான்ஷியஸ்ல இருந்த எங்களுக்கே என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல. மயங்கி எந்திரிச்சதும் உனக்குப் புரிஞ்சுடனுமா?” என்றாள் சுடரொளி.

 

குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மென்மொழியைச் சொடக்கிட்டு நிகழ்விற்கு அழைத்து வந்த யுகேந்திரன், “சிலை திருட்டு கேஸ் விசாரிக்கப் போன இடத்துல, சிலைகளோட இதுவும் கிடைச்சது.” என்றான் அவள் மனதில் நினைத்த கேள்விக்குப் பதிலாக.

 

பின், “இந்த கல்லால யாழ்மொழிக்கு பவர் கிடைச்சுருக்குன்னு நினைக்குறேன்.” என்று யோசனையுடன் யுகேந்திரன் கூற, “எது பவரா? இப்படி முகம் மாறி இருக்குறது பவரா?” என்று பரிதாபமாக வினவினாள் யாழ்மொழி.

 

“ஆமா, உருவத்தை மாத்துற சக்தி.” என்ற யுகேந்திரன், “இஃப் ஐ’ம் நாட் ராங், இந்த கல்லை வச்சுருக்க நமக்கும் பவர்ஸ் கிடைச்சுருக்கும்.” என்று அவன் கையிலிருந்த நீல நிறக்கல்லை பார்த்துக் கொண்டே கூறினான்.

 

“அப்போ… அப்போ… இன்பாக்கு காயம் எல்லாம் மறைஞ்சு போனதுதான் அவனோட பவரா?” என்று சுடரொளி ஆர்வமாகக் கேட்க, “இல்ல, அது அவனோட பவர் இல்ல.” என்ற யுகேந்திரனின் பார்வை மென்மொழியை நோக்கியது.

 

“நானா? நான் ஒன்னும் பண்ணல.” என்று மென்மொழி பின்வாங்க, “இன்பாக்கு டிரீட்மெண்ட் நடந்தப்போ, உன்கிட்ட இருந்த கல்லு க்ளோ ஆச்சு.” என்று யுகேந்திரன் கூற, அவள் கையிலிருந்த மஞ்சள் நிறக்கல்லை விழிப் பிதுங்க பார்த்தாள் மென்மொழி.

 

சுடரொளியும் அவளிடமிருந்த கல்லை பார்த்தபடி, “அப்போ எனக்கு என்ன பவர்?” என்று தனக்குத்தானே பேசிக் கொள்ள, எதையோ யோசித்த மென்மொழி சட்டென்று நிமிர்ந்து யுகேந்திரனிடம், “உங்களுக்கு என்ன பவர்?” என்று வினவ, அவனோ இதழோரச் சிரிப்புடன், “மைண்ட் ரீடிங்னு நினைக்குறேன். சிலரோட மைண்ட்வாய்ஸ் சத்தமா கேட்குது.” என்றான்.

 

உடனே, நெஞ்சில் கைவைத்துக் கொண்ட மென்மொழியோ வேகமாக மூச்சை விட்டுக் கொண்டே, ‘அடக்கடவுளே, இதனாலதான் நான் மனசுல நினைச்சதெல்லாம் சரியா சொன்னாரா?’ என்று நினைக்க, அவளின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் விதமாக, “ஆமா.” என்று ஒற்றை சொல்லில் முடித்து விட்டான் யுகேந்திரன்.

 

அப்போது சுடரொளி அவனையே குறுகுறுவென்று பார்க்க, அதற்கான காரணத்தை உணர்ந்தவனாக, “எல்லாரோட மைண்ட்வாய்ஸும் கேட்கல. அந்த அளவுக்கு பவர் இன்னும் வரல போல.” என்று கூற, ‘ஹப்பாடி!’ என்று சுடரொளி பெருமூச்சு விட, மென்மொழியோ, “நான் மட்டும் என்ன பண்ணேன்?” என்று முணுமுணுத்தாள்.

 

இருவரையும் பார்த்த சுடரொளியோ, “க்கும் க்கும், அது சரி, இன்பாக்கு அப்போ என்ன பவர்?” என்று வினவ, “டிரான்ஸ்போர்டேஷன்” என்ற குரல் கதவு இருந்த திசையிலிருந்து வந்தது.

 

உள்ளே நுழைந்த இன்பசேகரனை கண்ட தோழிகள் இருவரும், “இப்போ எப்படி இருக்கு இன்பா?” என்று அவனருகே செல்ல, அத்தனை நேரம் அவனைக் கேட்டுக் கொண்டிருந்த யாழ்மொழியோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

“எனக்கு ஒன்னுமில்ல.” என்று தோழிகளிடம் கூறிய இன்பசேகரனின் பார்வை அவனவளைத்தான் வருடியது.

 

யாழ்மொழி இருந்த கட்டிலருகே சென்ற இன்பசேகரன், “நீ ஓகேவா யாழு?” என்று வினவ, அவளோ நிமிராமல் தலையை அசைக்க மட்டும் செய்தாள்.

 

அவனோ மனதிற்குள், ‘என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டியா?’ என்று நினைக்க, அவளோ, ‘எந்த மூஞ்சியை வச்சுட்டு உன்னை பார்க்க?’ என்று எண்ணினாள்.

 

அந்தக் காட்சியை மற்ற மூவரும் படத்தைப் போல பார்த்துக் கொண்டிருக்க, யுகேந்திரனை நோக்கி திரும்பிய சுடரொளியோ, “இவங்க மைண்ட்வாய்ஸை நீங்க மட்டும் இல்ல, நானும் கூட கேட்ச் பண்ணுவேன்.” என்று கூற, அவனோ பக்கென்று சிரித்து விட்டான்.

 

அவன் சிரிப்பை ஓரக்கண்ணில் மென்மொழி பார்க்க, “இங்க எவ்ளோ களேபரம் நடந்தாலும், உன் வேலைல சரியா இருக்கடி.” என்று கேலி செய்தாள் சுடரொளி.

 

சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்ட மென்மொழியோ, “லூசு, சும்மா தான் பார்த்தேன். உடனே, ஓட்ட ஆரம்பிச்சுடுவியா?” என்று சமாளிக்க முயல, அவளை மேலும் கேலி செய்ய ஆரம்பித்தாள் சுடரொளி.

 

அதற்குள் ஆண்கள் இருவரும், தங்களுக்குள் அறிமுகமாகிக் கொண்டனர்.

 

“இன்பா, உனக்கு எப்படி இந்த கல் கிடைச்சது?” என்று மென்மொழி வினவ, அவன் பதில் சொல்வதற்குள், “இதென்ன பெரிய ரகசியமா? உன்கூட பிறந்தவளுக்கு கல் கிடைச்சா, இவனுக்கும் கிடைச்ச மாதிரிதான? இந்த மாதிரி வேலைக்கு எல்லாம், ரெண்டும் ஒண்ணாதான சுத்தும்.” என்றாள் சுடரொளி.

 

அவள் கூறியது சரியாக இருக்க, அதை மறுக்க முடியாமல், “சாரி…” என்று மட்டும் கூறினான் இன்பசேகரன்.

 

“இன்பா, டிரான்ஸ்போர்ட்ஷன்தான் உங்க பவர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று அடுத்து யுகேந்திரன் விசாரிக்க, “யாழை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணதும், என் காயத்தைப் பார்த்து, என்னையும் பெட்ல படுக்க வச்சுட்டு, டாக்டரை கூட்டிட்டு வரதா சொல்லி நர்ஸ் போனாங்க. அந்த செகண்ட்ல, இந்தக் கல்லுல இருந்து பச்சை கலர் லைட் வெளி வந்துச்சு. லேசான மயக்கத்துல இருந்த நான், அந்த வெளிச்சத்துல கண்ணைத் திறந்து பார்த்தப்போ, வேற இடத்துல இருந்தேன். அப்புறம் திரும்ப இங்க வந்துட்டேன்.” என்றான்.

 

“அப்போ ரூம்ல இருந்து ஹாஸ்பிடல் காரிடருக்கு போயிருக்க.” என்று மென்மொழி கூற, “இல்ல மொழி, காரிடருக்கு வரதுக்கு முன்னாடி வேற ஒரு இடத்துக்கு போனேன். அந்த இடத்துல ஒரு உருவம்… சரியா தெரியல. அது என் பக்கத்துல வரதுக்குள்ள திரும்ப ஹாஸ்பிடல் காரிடருக்கு வந்துட்டேன்.” என்றான் இன்பசேகரன்.

 

“யாரு அந்த உருவம்?” என்று அனைவரும் சிந்திக்க, சுடரொளியோ ஒருபடி மேலே சென்று, “எனக்கு புரிஞ்சுடுச்சு. இன்பா அந்த மிஸ்டீரியஸ் இடத்துல பார்த்தது ஒரு ஏலியன். இந்த கல்லு, பவர்ஸ்… எல்லாம் அந்த ஏலியன் நமக்கு குடுத்தது. இதை வச்சு இந்த உலகத்தை நம்ம காப்பாத்தனும்.” என்று கூறியதோடு அல்லாமல், “எத்தனை படத்துல பார்த்துருக்கோம்?” என்றும் கூற, மற்றவர்கள் அவளையே ஏலியன் போல பார்த்தனர்.

 

“லூசு!” என்று தோழியைத் திட்டிய மென்மொழியோ, தன் கையிலிருந்த கல்லின் மீது பார்வையை பதித்தபடி, “இதைப் பத்தின தகவல் தெரியணும்னா தாத்தா வீட்டுக்குத்தான் போகணும்.” என்றாள்.

 

அவள் கூறியதைக் கேட்ட மற்றவர்களும், அவரவர் கரத்திலிருந்த கல்லைப் பார்த்தனர்.

 

அதே சமயம், அந்த கற்களும் கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் ஆகிய வண்ணங்களில் ஒளிர்ந்தன.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்