
பிறை -39
நீண்ட நேரமாக யோசனையில் இருந்தாலும்.. அர்ஜுன் எடுத்த முடிவை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, அவனை மறுக்கவும் முடியவில்லை. காதல் கொண்ட மனம் அல்லவா.
மீனாட்சியும் திவாகரும் அவர்களது பிள்ளைகள் காதலித்து அழைத்து வந்தால் திருமணம் செய்து வைப்பதற்கு தயாராக தான் இருக்கிறார்கள். ஆனால் இருவருமே காதல் செய்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்களாக பார்த்து வைக்கும் துணையை தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்கள்.
அதே போல தான் ஆதிதேவ் அவர்கள் கூறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அப்படி தான் நாம் நினைக்க வேண்டும்.
ஆனால் பார்கவி?
அலைபேசி ஒலி எழுப்பியது. திரையில் வந்த பெயரை பார்த்ததும்.. என்ன பதில் கூறுவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
எதுவாக இருந்தாலும் பதில் கூறி தானே ஆக வேண்டும்.. ” ஹலோ..”
” கவி.. என்ன பண்ணுற ”
” நீங்க சொன்ன விஷயத்தை தான் யோசிச்சிட்டு இருக்கேன் அஜூ”
” என்ன முடிவு பண்ணிருக்க ”
” நான் இன்னும் வீட்ல பேசவே இல்லையே ”
” வீட்ல சொல்லிட்டு கிளம்புறதுக்கு ஏன் இவ்வளவு பயப்பிடுற”
” அது இல்ல அஜூ.. எனக்கு எல்லாமே வீட்ல சொல்லி தான் பழக்கம். இந்த விஷயத்தை எப்படி அவங்க கிட்ட கேட்காம வருவேன்..” பார்கவிக்கு சற்றே கோவம் எட்டி பார்த்தது.
” சரி முடிவு பண்ணிட்டு கால் பண்ணு ” என அர்ஜுன் போனை வைத்த விட.. பல வித யோசனையில் இருந்தாள் பார்கவி. இரண்டு நாட்களாக அப்படிதான் இருக்கிறாள்.
இதில் தாய் தந்தை வேறு, பிறையுடன் ஊருக்கு சென்றிருப்பதால்.. இந்த விஷயத்தை கலந்தாலோசிக்க முடியவில்லை. அதற்காக அண்ணனிடமும் இந்த விஷயத்தை கேட்க தைரியம் இல்லை. ஆனால் இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் எப்படி அவள் இந்த விஷயத்தை பேசுவாள்.
மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் அவள் தலையை அழுத்த.. அமைதியாக கண் மூடி மெத்தையில் சாய்ந்து விட்டாள்.
படுத்தவளுக்கு அர்ஜுன் மீது உண்டான காதல் தான் நினைவிற்கு வந்தது.
கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அர்ஜுன் அவளுக்கு பழக்கமானான்.
முதல் முறையாக கல்லூரி செல்வதால் , திவாகர் தான் அவளை அழைத்து கொண்டு சென்றார்.. பின் மாலையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார். ஒரு வாரத்தில் அங்கிருக்கும் நண்பர்களிடம் பேசி, அவள் தெருவில் இருக்கும் தோழியுடன் பைக்கில் போவதும் வருவதுமாக பழக்கமாகி இருந்தது.
வழக்கம் போல கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது , நடு வழியில் பைக் பஞ்சர் ஆகி விட.. அதன் பக்கமே ஒரு கடை இருந்ததால் அவசரமாக அந்த கடைக்கு தள்ளிக் கொண்டு சென்று பைக்கை நிறுத்தினாள் அவளது தோழி.
” ஹே பாரு ஆளை கூப்பிடு டி.. சீக்கிரம்.. பரீட்சைக்கு நேரம் ஆச்சு ” என அவளது தோழி வண்டியை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்த.. கடைக்குள் சென்றாள் பார்கவி.
” ஏங்க.. வண்டி பஞ்சர்.. கொஞ்சம் சீக்கிரம் பார்த்து கொடுக்க முடியுமா.. எக்ஸாம்க்கு நேரம் ஆச்சு ” பதட்டத்தோடு அங்கு அமர்ந்திருந்தவனை அழைத்தாள் பார்கவி.
அவர் ஏதோ கூற வருவதற்குள்.. ” காசு கூட கொடுக்கிறேன் .. கொஞ்சம் பிளீஸ் பாருங்களேன்.. எக்சாம் இருக்கு” என அவசரப் படுத்தியவளை ஒரு பார்வை பார்த்தவன்.. பெரும் மூச்சுடன் எழுந்து வந்து.. அவளது வண்டியை ஆராய்ச்சி செய்ய.. சின்ன வேலை தான் என்பதால்.. எதையோ சட்டென மாற்றி வண்டியை உயிர்ப்பிக்க.. உடனே ஓடிய வண்டியை பார்த்த தோழிகள் இருவரும் மகிழ்ந்து போனார்கள்.
பார்கவி பேசிய படியே கொஞ்சம் கூடுதலாகவே பணம் கொடுக்க.. அதை வாங்க மறுத்தவன்.. ” காசு அதிகமா இருந்தா இல்லாதவர்களுக்கு கொடுங்க.. ” என மீண்டும் கடைக்குள் சென்று அதே இடத்தில் அமர்ந்து விட..
அப்போது அங்கிருந்த ஒருவன் கடைக்குள் வந்து.. ” என்ன மா என்ன பிரச்சனை ” என கேட்டார்.
” அது வண்டி பஞ்சர்.. அதான் இந்த கடையில வேலை பார்க்குறவரு பார்த்துட்டாரு.. ஆனால் காசு வாங்கல ” என பார்கவி கூறவும்.. குழப்பமாக அவளை பார்த்து.. ” நான் தான் மா இந்த கடையில வேலை பார்க்கிறேன்.. நீங்க யாரை சொல்லுறீங்க ” என கேட்கவும்..
அங்கே அமர்ந்திருக்கும் அவனை கை காட்டினாள் பார்கவி.
” என்ன மா சொல்லுற.. இவங்க என் கடைக்கு வந்த கஸ்டமர் மா..அவருக்கு வண்டிக்கு தான் வேலை பார்க்க ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க போயிருந்தேன்.. நீங்க அவரை வேலை வாங்கி வச்சிருக்கீங்க ” என்றதும் இருவரும் திரு திருவென முழிக்க ஆரம்பித்தனர்.
வேகமாக அவரை நெருங்கிய பார்கவி.. ” ரொம்ப சாரி சார்.. நீங்க யாருன்னு நான் கேட்டிருக்கனும்.. ” தயங்கிய பார்கவியை பார்த்தவன்..
” பரவாயில்ல.. உங்களுக்கு எக்ஸாம்க்கு நேரம் ஆகுது இல்லையா.. கிளம்புங்க ” என்றதும் அவனை வியப்பாக பார்த்துக் கொண்டே கிளம்பி இருந்தார்கள் இருவரும்.
அதன் பின் எப்போது அப்பக்கம் வந்தாலும் அவளது விழிகள் அந்த கடையை நோட்டம் விடாமல் ஒரு நாளும் போனதில்லை.
எதற்காக பார்க்கிறாள் என்றெல்லாம் தெரியாது.. ஆனால் பார்த்து விடுவாள். அவளது விழிகளின் தேடலை அறிந்தானோ இல்லையோ.. அதற்கு அடுத்த வாரமே அந்த கடையில் அமர்ந்திருக்க.. வழக்கமாக பார்த்து திரும்புவதை போல.. அன்று பார்த்தவளுக்கு.. அவனது தரிசனம் ஒரு வித அதிர்வை கொடுத்தது.
அந்த கடையை கடக்கும் வரையிலும் அவனை பார்த்துக் கொண்டு சென்றாள் பார்கவி. அன்று முழுவதுமே அவனது நினைப்பில் வகுப்பை கூட சரியாக கவனிக்கவில்லை.
‘ அந்த கடையில வேலை செய்யாதவர்.. நான் கூப்பிட்ட உடனே வந்து ஹெல்ப் பண்ணதும் இல்லாம.. கடைசி வரைக்கும் உண்மையை சொல்லாம காசும் வாங்காம இருந்திருக்காரு.. ரொம்ப நல்ல மனுஷன் தான்.. அந்த கடைக்காரர் வந்து சொல்லலைனா எனக்கு தெரிஞ்சு இருக்காது.. எவ்வளவு நாளைக்கு அப்பறம் பார்க்கிறேன்.. என்னைய நியாபகம் இருக்குமா.. ‘ இப்படியான கற்பனையில் உழன்று கொண்டிருந்தவள்.. மாலை வீடு திரும்பும் பொழுதும்.. அந்த கடையை பார்க்க.. அப்போதும் அவன் அங்கே இருந்தான்.
” ஹே ஒரு நிமிஷம் பைக்கை நிறுத்து டி.. ”
” என்னாச்சு டி ”
” அது அன்னைக்கு நமக்கு பைக்கை ரிப்பெயர் பண்ணி கொடுத்தாரு பாரு.. அவரு அந்த கடையில இருக்காரு.. அன்னைக்கு இருந்த அவசரத்துல ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல..”
” அதுக்கு ”
” நான் போய் சொல்லிட்டு வரேன்.. நீ வெயிட் பண்ணு” என தோழியின் பதிலை எதிர்பார்க்காமல் இறங்கி ஓடி இருந்தாள் பார்கவி.
ஒருவேகத்தில் இறங்கி வந்து விட்டாள் தான்.. ஆனால் அவனிடம் எப்படி பேசுவது என மனம் திணறியது.
கடையில் நடமாட்டம் தெரிய.. நிமிர்ந்து பார்த்தவன்.. பார்கவியை பார்த்து விட்டு, மீண்டும் குனிந்து போனை நோண்டிக் கொண்டிருக்க.. கடைக்காரர் வந்து அவளிடம் விசாரிதத்தும்..
” இல்ல இவங்களை பார்க்க தான் வந்தேன் ” என அவன் பக்கம் கையை காட்டினாள். ஆதியின் தங்கை அல்லவா.. அவனுக்கு நிகர் இல்லையென்றாலும் அவளுக்கும் கொஞ்சம் தைரியம் இருக்கத்தான் செய்கிறது.
” தம்பி உங்களைத்தான் ” என கடைக்காரர் அழைத்து விட்டு செல்ல.. அவளை கேள்வியாக பார்த்தான் அர்ஜுன்.
” அது.. அன்னைக்கு உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல.. அதான் சொல்லிட்டு போகலாமேன்னு வந்தேன் .. ”
புருவத்தை சுருக்கி பார்த்தவன் ” சொல்லு ” என்றதும்..
திரு திருவென முழித்தாள்.
” என்ன சொல்லனும் ” அவன் கேட்டதும் எதற்கு வந்தோம் என்பதே மறந்து போனது.
” தேங்க்ஸ் தான் ”
” ஹான் ஆமா.. ரொம்ப தேங்க்ஸ் சார் ” என பார்கவி கூறியதும்.. தலையை ஆட்டி விட்டு மீண்டும் போனை பார்க்க தொடங்கினான் அர்ஜுன். இவனெல்லாம் என்ன ரகம் என்று தான் தோன்றியது.
அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் கடையில் இருந்து வெளியேறியவள்.. தோழியோடு வீட்டிற்கு சென்று விட்டாள். நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவள் தோழிக்கும் ஏதோ புரிய.. அவளாகவே கூறட்டும் என அமைதியாகிப் போனாள்.
” பாரு.. ” என கதவு தட்டும் சத்தத்தில், கடந்த காலத்தில் இருந்து வெளியே வந்தவள்.. அடித்து பிடித்து கதவை திறந்தாள்.
” போகும் போது பிறை எதுவும் சொல்லிட்டு போனாளா ” ஆதிதேவ் கேட்டதும்.. அண்ணனை எதிர்பாராத பார்கவியோ.. ஒன்றும் புரியாமல் முழித்தாள்.
” அது போகவே இஷ்டம் இல்லைன்னு சொன்னாங்க.. அப்பறம் நீங்க கூட வரலைன்னு ஃபீல் பண்ணாங்க அவ்வளவு தான் அண்ணா ” என பார்கவி கூறவும்.. யோசனையோடு அங்கிருந்து சென்றான் ஆதி.
தலைக்கு மேல் வேலை இருந்தது. ஆனால் அவளவன் செய்த செயலால் எந்த வேலையும் ஓடாமல் பித்து பிடித்ததை போல சுற்றிக் கொண்டிருக்கிறான்.
பல யோசனைகளுக்கு பிறகு தாய்க்கு அழைப்பு விடுத்தான். பல ரிங்குகள் சென்ற பிறகு அலைபேசி எடுக்கப்பட்டது.
” சொல்லு பா ஆதி ”
” அங்க எல்லாம் ஓகே தானே ” எடுத்ததும் மகன் கேட்ட கேள்வியில் மருமகள் ஏதேனும் கூறி இருப்பாளோ என்ற நினைப்பில்..
” அது கொஞ்சம் பிரச்சனை தான் ஆதி.. நம்ம பிறை சொன்ன மாதிரி நீயும் அவ கூட வந்திருக்கனும்.. தப்பு பண்ணிட்டோம்.. இன்னைக்கு ஊர் காரவனுங்க.. அப்பறம் பிறையோட சொந்தம் அப்படி இப்படின்னு எல்லாரும் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. பாவம் பிறை மனசு உடைஞ்சு போயிட்டா.. ” என மேலோட்டமாக சொல்ல..
” எனக்கு எந்த விஷயமும் தெரியாது.. உங்க மருமகள் போனை எடுக்கல ” ஆதி கூறியதும்.. ஆதி முதல் அந்தம் வரை நடந்ததை எல்லாம் கூறி முடித்தார் மீனாட்சி.
விஷயத்தை செவிகளில் வாங்கியவனுக்கு நரம்புகள் புடைத்து நின்றது.
” நான் ஊருக்கு வரேன் ” என அலைபேசியை வைத்திருந்தான் ஆதிதேவ்.
இறுதியாக காரில் ஏறும் பொழுது கூட.. அவனிடம் கேட்டிருந்தாள் பிறை. ஆனால் இவன் தான் மறுத்திருந்தான்.
தற்போது அந்த விஷயம் தான் நினைவிற்கு வந்தது. இரண்டு நாட்களும் சோகமாக சுற்றிக் கொண்டிருந்த பிறையை நெருங்காமல் விலகியே இருந்தான் ஆதி. நெருங்கி விட்டால் விலகுவது கஷ்டமே !
ஊருக்கு செல்லும் பொழுது அவளது முகமே சோர்ந்து போனது.
” என்னாச்சு மூன்.. மனசெல்லாம் கமிஷனர் வேணும்னு சொல்லுதோ ” நக்கல் செய்தவனை மேலும் முறைத்தவள்…
” ஊருக்கு என் கூட வாங்களேன் ” என இறுதியாக அழைத்துப் பார்த்தாள்.
” கேஸ் வேலை தலைக்கு மேல இருக்கு மூன்.. சீக்கிரம் வரேன்.. நான் சொன்ன வேலையை எல்லாம் முடிச்சு வை.. காலேஜ் போ ” என அவளது கன்னத்தை தட்டி வழியனுப்பி வைத்தான் ஆதி.
கண்களில் உயிரே இல்லாமல் கிளம்பிச் சென்றாள் பிறைநிலா. அவனை விட்டு செல்வதில் அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை தான்.. ஆனால் அதை விட.. தனியாக அந்த ஊருக்கு செல்வது தான் அவளது மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
இதோ அவளது எண்ணம் சரி தான் என்பதை போல நடந்து விட்டதே.. மிகுந்த சினத்துடன் மஞ்சள்வயலை நோக்கி கிளம்பி இருந்தான் ஆதி தேவ். அதே நேரம் ஆதியும் அவ்வூருக்கு கிளம்பி இருந்தான்.
சனா💖

