Loading

அத்தியாயம் 40

 

“அஅஅஆஆஆஆஆ…. அறிவழகி தான் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தாள்.

 

“எதுக்கு இப்போ ஊர கூட்ற…”

 

“அஅஅஆஆஆஆஆ….”

 

“ஏய்! சுப், வாய மூடு.. என்னாச்சு இப்போ…”

 

“என்ன ஆச்சா.. திடீர்னு வந்து உனக்கும் எனக்கும் கல்யாணம்னா எப்படி…”

 

“நாசமா போச்சு.. விஷயத்த முழுசா கேளு…”

 

“என்னத்த முழுசா கேட்க.. ஊருக்கு பேரு பொய் கல்யாணம்னு சொல்ல போறீங்களா?.. அதெல்லாம் முடியாது.. எத்தன நாவல் படிச்சி இருப்பேன்.. அதுக்கு பிறகு என்ன நடக்கும்னு நல்லா தெரியும்…”

 

“அடிங்க! வாய மூடு.. எதுக்கு இப்போ ஓவர் ஆக்டிங் பண்ற…” என்று அவன் திட்ட, வாயை மூடிக்கொண்டாள்.

 

“இங்க பாரு.. என் வீட்ல எல்லாருமே நீதான் நான் லவ் பண்ற பொண்ணுனு நினைச்சுட்டு தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்றாங்க…”

 

“அவ்ளோதானே, வாங்க இப்பவே உங்க வீட்டுக்கு போய்.. உங்க தலையில அடிச்சு சத்தியம் பண்ணி.. நான் அவள் இல்லைன்னு சொல்லிட்டு வருவோம்…” என்று சொல்ல

 

“அவசர குடுக்கை, கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு…” என்று திட்டியவன்

 

“அவங்க அப்படியே நினைச்சுட்டு இருக்கட்டும், கல்யாண நாளும் வரட்டும்…”

 

“ஹா, நான் ஊர விட்டு ஓடிடுறேன்…”

 

“ஊர விட்டு ஓடுறதுக்கு பதிலா ஒட்டுமொத்தமா போய் சேந்துரு…”

 

“வை.. வை.. உங்க காதல், உங்க கல்யாணம்,.. நான் ஏன் சாகணும்…”

 

“ஃபர்ஸ்ட் டைம் உன்கிட்ட கேட்காம ஒரு பிளான் போட்டேன்.. அத முழுசா சொல்லவிடுறியா…”

 

“சரி, சரி சொல்லுங்க…”

 

“இப்போ நான் எல்லாருக்கும் கெட்டவனா தெரிறதுக்கு ரீசன் என்ன?…”

 

“அது நிறைய இருக்கே எதுன்னு சொல்லுவேன்…”

 

“நான் உன்ன கேட்கல…”

 

“மத்தவங்களுக்கும் அதே தான்…”

 

“அறிவுவு…” அவன் பல்லை கடிக்க

 

“சரி, சரி பார்கவி மேடம நம்ப வச்சு கழுத்த அறுத்தது…”

 

“சத்தியமா முடியல அறிவு…” என்றவன் சோஃபாவில் அமர்ந்து கொள்ள

 

“சரி, சரி பார்கவி மேடம கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு நீங்க சொன்னீங்க.. அதனால உங்க மேல கோபம்…”

 

“அதேதான்.. நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னதும் பார்கவி மேல சிம்பதி கிரியேட் ஆச்சு.. என் மேல வெறுப்பு வந்துச்சு.. இப்போ அதே ட்ரிக்ஸ தான் நான் ஃபாலோ பண்ண போறேன்..

 

…கல்யாணம் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் வெச்சே நீ என்ன புடிக்கலைன்னு சொல்லணும்.. லவ் பண்ண பொண்ணு புடிக்கலைன்னு போய்ட்டானு நான் இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கணும்.. என் மேல எல்லாருக்கும் பரிதாபம் வரணும்.. அந்த டைம் பார்த்து பர்விதாவ கல்யாணம் பண்ணிக்கலாமேனு மத்தவங்களுக்கு எல்லாம் தோணும்.. பர்விதா மேல எந்த கெட்ட பேரும் வராம, எங்க காதல் மேல எந்த கலங்கமும் வராம இந்த கல்யாணம் நடந்திடும்…” என்று அவன் சொல்ல

 

“பக்கா கிரிமினல் பிளான் சீனியர்…”

 

“இப்ப போயிட்டு பர்விதா தான் நான் லவ் பண்ண பொண்ணுன்னு சொல்ல முடியாது.. அத மத்தவங்க எப்படி எடுத்துப்பாங்களோ.. கண்டிப்பா பெரியவங்க யாராலயும் சாதாரணமா எடுத்துக்க முடியாது.. அதுலயும் ஊருக்கு தெரிஞ்சுருச்சுன்னா பார்கவியோட வாழ்க்கையவே கெடுத்துட்டா அப்படி என்ற மாதிரி தான் சொல்லுவாங்க..

 

…அதனால எங்க காதல் விஷயம் தெரியாம எங்க கல்யாணம் நடக்கணும்னா இதுதான் பிளான்.. இந்த விஷயம் கல்யாணத்து வரைக்கும் உனக்கு தெரியாது.. உனக்கு சப்ரைஸ் பண்றதுக்காக மறைச்சு செய்யணும்னு வீட்ல சொல்லி இருக்கேன்.. அதனால இன்விடேஷன் கார்ட்ல உனக்கும் எனக்கும் கல்யாணம்னு பேர் வராது..

 

…அதே நேரம் ரிசெப்ஷனுக்கு

மூணு மணி நேரம் முன்னாடி தான் கல்யாணம்.. அப்படி பார்த்தா நெருங்கின உறவுக்காரர்கள தவிர்த்து பெரியதாக யாரும் இருக்க மாட்டாங்க.. இதனால உன்னோட கல்யாணத்துக்கு எந்த தடங்கலும் வராது.. என்ன நம்பு…” என்று அவளிடம் சொல்ல

 

“அட சீனியர் நீங்க இந்த அளவுக்கு ஏன் யோசிக்கிறீங்க.. முதலாவது நான் யார கல்யாணம் பண்ணிக்க போறேன்.. உங்களுக்காக இது கூட பண்ண மாட்டேனா.. நீங்க எதுக்கு எனக்கு வெள்ளாவில போட்டு எப்படி வெளுக்க போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க…”

 

“முன்னாடினா நான் யோசிச்சு இருக்க மாட்டேன் அறிவு.. இப்போ ஒரு பொண்ணு வாழ்க்கைன்னா ரொம்ப பயமா இருக்கு.. இப்ப வரைக்கும் பார்கவி உடைஞ்சு கதறுனது கண்ணுக்குள் இருக்கு.. ஆனா இன்னைக்கு அவ சிரிச்ச முகமா, சந்தோஷமா இருக்கும்போது மனசுல அவ்ளோ நிம்மதியா இருந்துச்சு…”

 

“எல்லாம் சரி சீனியர்.. அந்த டைம்ல எப்படி உங்களுக்கு பர்விதா மேடம கல்யாணம் பண்ணி வைப்பாங்க…”

 

“கண்டிப்பா மூணாவது தடவையா என் கல்யாணம் நின்னு போனா.. எல்லாரும் கஷ்டப்படுவாங்க.. அந்த இடத்திலேயே யாராச்சும் ஒரு பொண்ண பேசி முடிக்கலாம்னு தான் யோசிப்பாங்க..

 

…சோ எங்களுக்கு ரொம்ப நெருங்குன சொந்தம்னா அது பர்விதா தான்.. கண்டிப்பா அங்க இருக்குற யாராவது சொல்லுவாங்க.. சொல்லலனா சொல்ல வைக்கிறதுக்கு ஆள் கூட ரெடி பண்ணுவோம்…”

 

“ஆள் ரெடி பண்றது இருக்கட்டும்.. உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பண்றத கேள்விப்பட்டா உங்க ஆள் நிலைமை என்ன…”

 

“அதுக்கு தான் அவள வறச் சொல்லி இருக்கேன்.. முன்கூட்டியே விஷயத்த சொல்லிடனும்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பீச் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்திருந்தாள் பர்விதா.

 

“வா பர்வி…” என்று அவளை உள்ளே அழைக்க, அறிவழகியை யோசனையாக பார்த்தபடி அபர்ஜித் அருகில் வந்து அமர்ந்தாள்.

 

“எதுக்கு அவசரமா வர சொன்னீங்க..? இவங்க யாரு?…” என்று அறிவழகியை கேட்க

 

“ஹா, நான்தான் உங்க சக்காளத்தி…” என்று அறிவு சொல்ல

 

பர்விதா திதைத்த விழிகளுடன் அவளை பார்த்துவிட்டு அபர்ஜித்தை திரும்பி பார்க்க,

 

“கல்யாணத்துக்கு முன்னாடியே டிவோர்ஸ் வாங்க வச்சிருவா போலயே…” என்று முனகியவன்

 

“தெளிவா சொல்லு பக்கி…” என்க

 

“என்ன சொல்றாங்க இவங்க…” என்று பர்விதா பதறி கொண்டு கேட்க

 

“அப்படித்தான் உங்க மாமியார் சொல்றாங்க..அவங்க சீனியர் லவ் பண்ற பொண்ணு நான்னு நினைச்சுட்டு இருக்காங்க…” என்று அறிவு சொல்ல

 

“பர்வி, இவ என்னோட ஜூனியர்.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொல்லி கல்யாணத்த நிப்பாட்டினேன் இல்ல.. அப்போல இருந்து எங்க வீட்ல நான் லவ் பண்ற பொண்ணு இவளா இருக்குமோன்னு சந்தேகம்.. இப்போ எனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க.. அதுவும் இவளோட…” என்று அபர்ஜித் சொல்ல

 

“என்ன அவ்ளவு சலிச்சிட்டு சொல்றீங்க.. என் அழகுக்கும் திறமைக்கும் எனக்கெல்லாம் எப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்கும் தெரியுமா சீனியர்.. உங்க கூட போய் என்ன சேர்த்து வச்சு யோசிச்சு இருக்காங்க பாருங்க, அதுதான் கொடுமை …”என்று அறிவு சொல்ல

 

“ஆமா, ஆமா.. உனக்கு நான் குறைச்சல் தான்…” அபர்ஜித் அறிவழகியை நக்கல் செய்ய

 

“என்ன சொல்றீங்க உங்களுக்கு கல்யாணமா?…” என்று கலக்கமாக பர்விதா கேட்க

 

“ஹேய் அம்லு…” என்று அவளை அவன் தோளோடு அணைக்க, “ம்க்கும்..” தொண்டையை கணைத்தாள் அறிவழகி.

 

“தப்புதான் தாயே…” என்றவன் தள்ளி அமர்ந்து, பர்விதாவின் கையைப் பிடித்து “நீ ஆசைப்பட்டல்ல.. எல்லோரோட சம்மதத்தோடயும் விருப்பத்தோடயும் நம்ம கல்யாணம் நடக்கணும்னு.. அதுக்கு ஒரு பிளான் வச்சிருக்கேன்..

 

…இப்போ நீ தான் நான் லவ் பண்ற பொண்ணுனு உண்மைய சொல்லி.. நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேட்டா, கண்டிப்பா உடனே சம்மதிக்க மாட்டாங்க.. அவங்க மனச மாத்த நம்ம ரொம்ப போராட வேண்டி இருக்கும்..

 

…ஆனா என்னோட பிளான் படி கல்யாணம் அன்னைக்கு அறிவு என்ன புடிக்கலைன்னு சொல்லிட்டானு வை.. கண்டிப்பா உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு யோசிப்பாங்க.. நம்ம கல்யாணம் அரேஞ்ச் மேரேஜ் மாதிரியே நடக்கும்.. இதுதான் என்னோட பிளான்…” என்று அபர்ஜித் சொல்ல

 

“நீங்க சொல்றது சரிதான்.. ஆனா எல்லாரோட விருப்பம்னு சொன்னது மத்தவங்கள விட அக்காவோட சம்மதம் வேணும்.. அவள் கிட்ட உண்மைய மறைச்சு என்னால கண்டிப்பா சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கைய வாழ முடியாது.. நான் சாகுற வரைக்கும் நெஞ்சுல ஒரு நெருடல் இருந்துட்டே இருக்கும்..

 

…அவள் விட்ட கண்ணீருக்கும்.. அவள் பட்ட மன கஷ்டத்துக்கும் நானும் ஒரு காரணம்.. கல்யாணத்துக்கு பிறகு அவ கண்ணு முன்னாடி எல்லாத்தையும் மறைச்சிட்டு சத்தியமா என்னால வாழ முடியாது…”

 

“ஹேய் பர்வி.. எனக்கு தெரியும்.. ஆனா கல்யாணம் மட்டும் நடக்கட்டும்.. கல்யாணத்துக்கு பிறகு உண்மைய சொல்லிக்கலாம்.. அப்ப கூட பார்கவி கிட்ட மட்டும் சொல்லுவோம்.. உன்னோட அப்பா அம்மாக்கு இல்ல என்னோட அம்மாவுக்கோ தெரிய வேணாம்…” என்று சொல்லி,

 

ஏதேதோ பேசி பர்விதாவையும் அவர்கள் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தான்.

 

******

நாட்கள் கடந்து ரிசெப்ஷன் நாளும் வந்தது.

 

பார்கவியின் குடும்பம், செவ்வந்தியின் நெருங்கிய சொந்தங்கள் என்று முக்கிய உறவினர்கள் முன்கூட்டியே வருகை தந்திருக்க,

 

அறிவழகி மண்டபத்திற்கு வந்ததும் அவளை தனியாக வெளியே அழைத்துக் கொண்டு சென்ற அபர்ஜித்

 

“இந்தா அறிவு.. இந்த இயர்பட்ஸ்ஸ காதுல மாட்டிக்க.. நீ என்ன பண்ணனும்னு நான் சொல்லுவேன்.. அதே மாதிரி பண்ணிடு.. ஏதாவது சொதப்பி வச்ச.. உன் கையிலதான்ம்மா என் வாழ்க்கையே இருக்கு…” என்று அவள் கையையே பிடித்து விட்டான்.

 

“நான் எதுவும் சொத்தப்ப மாட்டேன்.. உங்களுக்கு தான் என்னோட ஹெல்ப் தேவைப்படும்னு நினைக்கிறேன்.. நானும் நீங்க என்ன பண்ணனும்னு சொல்றேன்.. சேர்ந்து நடிக்கிறோம் அவார்டு வாங்குறோம்…”

 

“அவார்டா?..”

 

“ஓ.. இதுக்கெல்லாம் அவார்ட் தர மாட்டாங்களா.. சரி விடுங்க.. வாங்க…” என்றவள் அப்போதே காதில் அதை மாட்டிக் கொண்டாள்.

 

மண்டபத்தினுள் அபர்ஜித் வர “என்ன மாமா.. உங்க லவ்வர் வந்துட்டாங்க போல…” என்று கூட்டத்தைப் பார்த்து பார்கவி கேட்க

 

“ஆமா வந்துட்டா…” என்றவன் மெதுவாக நழுவிக்கொண்டான். அப்படியே வந்து பர்விதாவின் அருகில் நின்றவன்

 

“ஓய் பொண்டாட்டி.. இன்னைக்கு நமக்கு கல்யாணம்.. நான் எடுத்துக் கொடுத்த புடவை எங்க…” என்று கேட்க

 

“நீங்க பாட்டுக்கு இந்த புடவை தான் கட்டணும்னு எடுத்து கொடுத்துட்டீங்க.. நான் என்ன சொல்லி காட்டுறது…”

 

“சரி வேற ஏதாவது புடவை கட்டி வந்திருக்கலாமே…”

 

“அது முடியாது.. இது அக்கா எடுத்து கொடுத்த லெஹங்கா…”

 

“சரி விடு..இதுலயே அழகா தான் இருக்க…” என்றவன் மணமகன் அறைக்கு சென்று விட்டான் தயாராக .

 

பார்கவியோ அறிவழகியை அழைத்துக் கொண்டு, மணமகள் அறைக்கு வந்தவள், ஊதா கலரில் வெள்ளை கரை வைத்த பட்டுப்புடவை அவளுக்கு கட்டிவிட்டு, அலங்காரம் செய்ய

 

: “என் அறிவுக்கொழுந்தே! இதுவரைக்கும் ஏன் உன்ன அலங்காரம் பண்றாங்கன்னு நீ கேட்கல…” என்று காதில் உள்ள இயர்பட்ஸ் மூலம் அபர்ஜித் பேச

 

சுற்றி இருப்பவர்களுக்கு கேட்காதபடி : “அதுதான் தெரியுமே சீனியர்.. கல்யாண பொண்ண ரெடி பண்றாங்க…” 

 

: “உன் தலையில கல்லை தூக்கி போட்டுட்டு கல்யாணம் பொண்ணு செத்துருச்சுன்னு சொல்லிடுவேன்…” 

 

: “ஏன் சீனியர்..ஏன் இந்த கொலவெறி…” 

 

: “உனக்கு கல்யாணம் பண்றது தெரியாது.. சர்ப்ரைஸா நீ மேடைக்கு வந்ததும் தான் சொல்லுவாங்க…” 

 

: “ஓஹோ, அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல…” என்றவள் பார்கவியிடம்

 

“பார்கவி எதுக்கு என்ன பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிட்டு இருக்கீங்க?…” என்று கேட்க

 

“உனக்கே கொஞ்ச நேரத்துல தெரியும்…” என்ற பார்கவி அவளை ஆழ்ந்து பார்க்க

 

ப்ளூடூத் கால்: “அய்யய்யோ சீனியர்..மாட்டிவோம் போலயே…” என்று அவள் மெதுவாக பேச

 

: “நீயே பதறி காட்டிக் கொடுக்காத பக்கி.. வாய மூடிட்டு மேடைக்கு வந்து சேரு…” என்று சொன்னவன் தயாரானான்.

 

அறிவழகியை அலங்காரம் செய்து, மேடைக்கு அழைத்து வர, அப்போதே அவள் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

 

“சீனியர் என்ன நடக்குது இங்க.. நீங்க மாப்ள கோலத்துல இருக்கீங்க.. என்ன பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணி மேடைக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க…”

 

“எதுக்குன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவ அறிவு.. நமக்கு இன்னைக்கு கல்யாணம்…” என்று சொல்ல

 

அதிர்ந்து, விழிகளை விரித்து, நெஞ்சில் கையை வைத்தவள் “என்ன சொல்றீங்க சீனியர்.. உங்களுக்கும் எனக்கும் கல்யாணமா?. யார கேட்டு முடிவு பண்ணுனீங்க…?” என்று அதிர்ச்சியும் கோபமும் கலந்து கேட்பது போல் கேட்க

 

“யாரை கேட்கணும் அறிவு.. எனக்கு உன் மேலயும், உனக்கு என் மேலயும் காதல் இருக்கு இல்ல.. அப்புறம் கல்யாணம் பண்ணிக்க யாரை கேட்கணும்…”

 

“எது, காதலா!.. என்னாச்சு சீனியர் உங்களுக்கு.. நான் எப்ப சொன்னேன் உங்கள காதலிக்கிறதா…”

 

“அறிவு விளையாடாத…”

 

“யார் விளையாடுற? நீங்கதான் ரிசெப்ஷனுக்கு வந்தவள அலங்காரம் பண்ணி, மேடையில கொண்டு வந்து நிறுத்தி.. கல்யாணம்னு சொல்லி விளையாடிட்டு இருக்கீங்க.. என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்று அறிவு சொல்ல

 

அபர்ஜித் அடுத்து என்ன என்று யோசிக்க

 

ப்ளூடூத் கால்:”சீனியர் நீங்கதான் கெஞ்சனும்.. இதுக்கு மேல என்னால டயலோக் பேச முடியாது.. ஏதாவது பண்ணி சமாளிங்க…” என்று முகத்தை கோபமாக திருப்புவது போல் மற்றவர்கள் பார்வைக்கு படாமல் அறிவு பேசிக் கொள்ள

 

“அடியே, கூறு கெட்டவளே.. எது எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்ல.. போய் மணையில உட்காரு…” என்று செவ்வந்தி சொல்ல

 

“மம்மி உண்மையா தான் சொல்றேன்.. நான் சீனியர லவ் பண்ணவே இல்ல…” என்று அறிவழகி சொல்ல

 

“என்னடா இது…” என்று அபர்ஜித்தை செவ்வந்தி கலக்கமாக கேட்க

 

“அறிவு நான் உன்ன லவ் பண்றேன்.. நீ எப்பவுமே என் கூடவே இருப்ப.. சீனியர் சீனியர்னு என்ன விட்டு விலகினதே இல்ல.. என்கிட்ட சாக்லேட், சினேக்ஸ் எல்லாம் வாங்கி தர சொல்லி சண்டை பிடிப்பியே.. எனக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்க.. நீயும் நானும் பத்து மணிக்கு மேல கடற்கரையில ஒண்ணா இருந்து பேசி இருக்கோம் சிரிச்சிருக்கோம்.. இதெல்லாம் காதல் இல்லையா…” என்று அவன் கேட்க

 

ப்ளூடூத் கால் : “அடப்பாவி சீனியரே.. யாரும் தெரியாதவங்க கேட்டாங்கன்னா உண்மையாவே நான் உங்கள லவ் பண்ணி கழட்டிவிட்டேனு சொல்ல போறாங்க.. என்ன கட்டிக்க போறவன் இந்த கூட்டத்துல மட்டும் இருந்திட கூடாது…” என்று அவள் சொல்ல

 

: “அவன் இங்கதான் இருக்கான்.. ஆனா நம்ப மாட்டான்…” என்று அபர்ஜித் சொல்ல

 

: “என்னது..?” 

 

: “அட சும்மா சொன்னேன்.. நீ நடிப்ப கண்டினியூ பண்ணு…” 

 

: “சரி, சரி...”

 

“நீங்க எனக்கு சம்பளம் குடுக்குற சீனியர் அதனால ஜஸ்ட் பிரண்ட்லியா பழகினேன்.. நீங்க என்ன லவ் பண்ணதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…”

 

“சரி இப்ப சொல்றேன்.. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்…”

 

“முடியவே முடியாது சீனியர்.. உங்கள நான் அந்த மாதிரி நினைச்சு கூட பாக்கல.. இந்த அறிவழகி ரேஞ்சே வேற.. எனக்கு ஏத்த மாப்பிள்ளை இந்த நாட்டிலேயே இல்ல…” என்று அவள் தனியாக ஸ்கோர் பண்ண

 

“ஏய் அறிவு.. நீ சீரியஸா தான் பேசுறியா…” என்று அஸ்வந் கேட்க

 

ப்ளூடூத் கால்: ” அறிவுக்கொழுந்தே ஓவரா டயலாக் பேசி எல்லாத்தையும் ஊத்தி மூடிராத.. இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க இருந்த.. உன் கால்ல கைல விழுந்துன்னாலும் என் தலையில உன்ன கட்டி வச்சிடுவாங்க.. அதனால கடைசி டயலாக்க அழுத்தமா சொல்லிட்டு.. இடத்தை காலி பண்ணு…” என்று அபர்ஜித் சொல்ல

 

“ஆளாளுக்கு என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. எப்பவுமே விளையாட்டா பேசிக்கிட்டு இருக்கா.. கேக்க பாக்க யாரும் இல்லன்னு உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுப்பீங்களா?.. தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க.. என்னால இவர கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்று கோபமாக செல்வது போன்று சொன்னவள், அந்த இடத்தை விட்டு மாடிக்கு தான் சென்றாள்.

 

மண்டபத்தை விட்டு வெளியே செல்லாமல் மாடிக்கு செல்பவளை புரியாமல் அபர்ஜித் பார்த்து நிற்க,

 

மாடிப்படிகளில் ஏறும்போது அபர்ஜித்தை பார்த்தவள்

 

ப்ளூடூத் கால்: “சீனியர் கல்லு மாதிரி நிக்கிறீங்க.. நீங்க லவ் பண்ண பொண்ணு வேணாம்னு போறேன்.. இடிஞ்சு போய் உட்கார வேண்டாமா?…” என்று அவள் சொன்ன பின்னர் தான்

 

நடக்கும் நாடகத்தை உணர்ந்தவன், முகத்தை முயன்று சோகமாக வைத்துக் கொண்டு, தளர்ந்த நடையுடன் அருகில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தான்.

 

அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். செவ்வந்தி அறிவழகியிடம் பேசிப் பார்க்கும் நோக்கில் அவளை நோக்கி செல்ல போக, அவர் கையை தடுத்து பிடித்திருந்தான் அஸ்வந்.

 

மூன்றாவது தடவையாக அபர்ஜித் திருமணம் நின்றுவிட்டது. சுற்றத்தார் சும்மா இருப்பார்களா என்ன

 

“இவனோட குறை தெரிஞ்சதால தான் யாரும் பொண்ணு குடுக்கல.. அந்த பொண்ணு அப்பா அம்மா இல்லாத அனாதை பொண்ணுனு நினைச்சு.. அந்த பொண்ண கூட ஒரு வார்த்தை கேட்காம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனாங்க.. எந்த பொண்ணாவது இப்படி ஒரு குறை இருக்கிறவன கட்டிப்பாளா?.. கூடவே இருக்கிறவளுக்கு விஷயம் தெரியாமலா இருக்கும் அது தான் வேணான்ட்டு போயிட்டா…” என்று செவ்வந்தியின் நாத்தனாரே வசவு பேச ஆரம்பித்து விட்டார்.

 

செவ்வந்தி “ஐயோ!..” என்று காதுகளை பொத்திக்கொண்டு, அருகில் இருந்த கதிரையில் அமர, அஸ்வந் அவரை தாங்கி கொண்டான்.

 

பார்கவியின் கண்கள் இம்மியும் நகராமல் அபர்ஜித் மீதுதான் இருந்தது .

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்