
பிறை -38
மஞ்சள் வயலில் உள்ள மொத்த மக்களும் பிறையை பற்றிய பேச்சில் தான் இறங்கி இருந்தார்கள்.
அன்று அதிகாலை நான்கு மணியை போல தான் பிறைநிலா, தாய் தந்தையோடு பிறந்த இடம் வந்திருந்தாள். கூடவே அவளது மாமனார், மாமியாரும் வந்திருந்தனர்.
ஆனால் கணவன் வரவில்லையே. வாயில் அவல் கிடைத்ததை போல அனைவரும் ஒரே செய்தியை தான் பேசிக் கொண்டிருந்தனர்.
” கல்யாணம் ஆகி கழுத்துல தாலி கிடக்கு.. புருஷனை காணோம்..”
” போன இடத்தில எதுவும் பிரச்னை ஆயிடுச்சோ என்னவோ ”
” இந்த அகிலாண்டேஸ்வரி பேத்திக்கு நல்லா வேணும்.. அவ அப்பத்தாகாரி என்ன ஆட்டம் ஆடினா.. அதான் பேத்திக்கு இந்த நிலைமை..”
” அதுவும் சரிதான்.. கொஞ்சப் பேச்சா பேசுனா.. எல்லாம் அவளோட வாரிசை தாக்கிருச்சு போல.. ”
” கல்யாணம் பண்ண அன்னைக்கே விட்டுட்டு போயிட்டானா.. கூட வந்த ரெண்டு பேரு யாரு ”
” இன்னொரு விஷயம் தெரியுமா.. இந்த பிறை படிக்க போறேன்னு எவனையோ கட்டி ஏமாந்துட்டு வந்துட்டா.. இது தெரியாம இவ அத்தைக்காரி மயிலு, அவ மகனுக்கு கட்டி வைக்கிறதா ஊருக்குள்ள பேசிட்டு இருந்தா.. ” என ஒருவள் உரக்க சிரிக்க.. இப்படியே ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமாய் பேசத் தொடங்கினார்கள்.
விடியலில் வந்தாலும், கிராமம் அல்லவா .. காலை நான்கு மணிக்கெல்லாம் அனைவரும் எழுந்து நடமாட தொடங்கி இருந்ததால், பிறை வந்த செய்தி பாதிக்கும் மேற்பட்டோருக்கு தெரிந்து விட்டது. மீதம் இருந்தவர்களுக்கும் காத்து வாக்கில் செய்தியை அனுப்பி வைத்தனர்.
இன்று மஞ்சள்வயலின் ஹாட் டாபிக் பிறை தான் என்றானது. இப்படி ஏதேனும் விஷயங்கள் பெரிய நகரங்களிலும் நடக்கும் தான். ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் வந்து விட்டால் பழையவை எல்லாம் பறந்து விடும்.
ஆனால் கிராமத்தில் அப்படி இல்லையே. இனிமேல் பிறை எப்படி இந்த ஊரில் நடமாடப் போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
காலை வீட்டிற்குள் வந்ததில் இருந்து சோகத்தில் இருந்தாள் பிறை. சிவகாமி பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.. மீனாட்சி அவரது வீட்டில் கவனித்ததை விட.. இரண்டு மடங்கு மேலாக கவனித்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.
” ஏங்க நல்லா நாட்டு கோழி ஒன்னு அடிங்க.. ” சிவகாமியின் குரலில் , வேலையை கவனிக்க சென்றார் சிவானந்தம்.
” நீங்க ரெண்டு பேரும் போய் மாடில இருக்கிற ரூம்ல ஓய்வு எடுங்க அண்ணி.. நான் எல்லாம் சமைச்சு ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்.. இங்க தண்ணி எல்லாம் கொஞ்சம் ஐஸா இருக்கும்.. பின்னாடி கொள்ளை பக்கம் வெந்நீர் வைக்கிறேன்.. வந்து குளிங்க.. அப்பறம்.. அங்க சென்னை வீடு அளவுக்கு எல்லாம் இங்க வசதி இருக்காது.. கொஞ்சம் சங்கடப் படாம இருங்க.. நீங்க அடுத்த முறை வரதுக்குள்ள எல்லாமே பண்ண சொல்லுறேன்” சிவகாமி படபடவென பேசினார்.
” அட ஏன் இப்படி அவசரமா பேசுறீங்க.. எங்களுக்கு இந்த வீடு இந்த சூழல் எல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு.. கிராமத்து வாழ்க்கையை இங்கயாவது வந்து வாழ்ந்துட்டு போறோம்.. நீங்க எதையும் மாத்த வேண்டாம் அண்ணி.. எனக்கும் உங்க அண்ணனுக்கும் இந்த வீடு ரொம்ப பிடிச்சிருக்கு.. நாங்க குளிச்சிட்டு வரோம்.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே சமைக்கலாம் ” என மீனாட்சி கணவனை அழைத்து கொண்டு சென்று விட்டார்.
காலை உணவுக்கு சுட சுட இட்லி அவித்து, நாட்டுக் கோழி சூப்பும், இரண்டு வகை சட்னி, வடை, பொங்கல், சாம்பார் என அனைத்தையும் தயார் செய்திருந்தார் சிவகாமி.. அவர்கள் இருவரும் குளித்து முடித்து வருவதற்குள் வீடே நாட்டுக் கோழியின் மணம் வீச.. இருவரும் முகர்ந்து கொண்டே வந்து விட்டனர்.
” அதுக்குள்ள எல்லாம் செஞ்சாச்சா அண்ணி..”
” அட இது செய்ய எவ்வளவு நேரம் ஆகப் போகுது.. வாங்க வந்து சாப்பிடுங்க ” என இருவருக்கும் டேபிளில் அடுக்கி வைக்க..
” என் மருமகள் எங்க ” மீனாட்சி கேட்கவும்.. குளித்து முடித்து தாவணியை கட்டிக் கொண்டு பிறை வருவதற்கும் சரியாக இருந்தது.
” இந்தா வந்துட்டா ஊருல இல்லாத உங்க மருமகள் ” என சிவகாமி நொடித்து கொண்டாலும்.. உள்ளுக்குள் அவருக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. தனக்கு தான் மாமியார் சரியில்லை.. மகளுக்கு நல்ல குடும்பம் கிடைத்ததில் அவருக்கு அத்தனை பெரிய மகிழ்ச்சி.
குடும்பமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தொடங்கினர். அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சிவகாமியை அழைத்து அவர்களோடு உணவருந்த அழைத்தார் மீனாட்சி.
ஒன்றாக பல கதைகளை பேசிக் கொண்டு திருப்தியாக அனைவரும் உண்டு முடிக்க.. பிறையின் முகம் மட்டும் இன்னும் தெளிவில்லாமல் இருக்க.. ” நீ கவலையே படாத பிறை மா.. போனதுமே.. நாங்க அவனை இங்க அனுப்பி வைக்கிறோம். அதை விட அவனுக்கு என்ன வேலை.. முகமே வாட்டமா இருக்கு பாரு ” என மீனாட்சி மருமகளின் முகத்தை துடைத்து விட.. வாசலில் கேட்ட சலசலப்பில் சிவகாமி பதறிக் கொண்டு வெளியே ஓடினார்.
அங்கே அகிலாண்டேஸ்வரி, மயிலை அழைத்து கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து விட.. சிவானந்தம் அமைதியாக வெளியே சென்று தாயிடம் பேசினார்.
” எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வாங்க மா.. பேசிக்கலாம்.. ” என மெதுவாக அழைத்து பார்க்க.. அவரது பார்வையோ, பிறையின் கழுத்தில் கிடந்த தாலியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
” என் பேத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சா ” நிலை குத்திய பார்வையோடு அவர் கேட்க..
” உங்களுக்கு எல்லாம் சொல்லுறேன் மா.. உள்ள வாங்க ” என அழைக்க..
” என்னத்த டா உள்ள வச்சு சொல்ல போற.. அதான் அவ கழுத்துல மஞ்சள் கயிறு இருக்கே.. அப்போ கல்யாணம் ஆகிடுச்சுன்னு தானே அர்த்தம்.. யாரை கேட்டு அவளுக்கு கல்யாணம் பண்ண ” என அவர் கத்திய கத்தில் அக்கம் பக்கம் இருக்கும் அனைவரும் கூடி விட்டனர்.
” ஆமா மா கல்யாணம் ஆகிடுச்சு தான்.. ஆனால் எந்த சூழ்நிலையில கல்யாணம் ஆச்சுன்னு தெரியுமா ” என சிவானந்தம் பேச வர..
” அப்படி என்ன பெரிய சூழ்நிலை.. ஏன் மகனுக்கு தான் கட்டி கொடுக்கிறேன்னு சொன்ன.. இப்போ திடுதிப்புன்னு இப்படி வந்து நிக்கிற .. இப்போ என் பையனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.. உன் மகளை பத்தி ஊரே தப்பா தான் பேசுச்சு.. செய்தியில போட்டு கிழிச்ச அப்போ, ஊரே உன் மக கதை நாறி போச்சு.. அதையும் மீறி தானே என் மகனுக்கு கட்டிக் கொடுக்க பார்த்தேன்.. அசிங்கம் பண்ணாலும் நம்ம அண்ணன் மக.. நம்மளை விட்டா யாரு இருக்கான்னு நினைச்சு தான் பேசுனேன்.. ஆனால் நீ என்ன பண்ண.. இவ்வளவு பண்ண எங்களுக்கே தெரியாம உன் மகளுக்கு திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்க.. என்ன அண்ணே உன் நியாயம் ” என மயிலு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விட்டார்.
” சூழ்நிலையினு சொன்னியே.. அப்படி என்ன சூழ்நிலை.. கெட்டு போயிட்டாளா ” அகிலாண்டேஸ்வரி நாக்கில் நிரம்பில்லாமல் பேச.. அவரது பேச்சில் குடும்பத்தார்கள் அதிர்ந்து போனார்கள். பிறைக்கு நெஞ்சே வெடித்து விடும் அளவிற்கு வலித்தது. கண்ணீர் கன்னங்களை தாண்டி தரையில் விழுந்தது.
சிவானந்தம் இடிந்து போய் அங்கேயே அமர்ந்து விட.. ” போதும்.. இதுக்குமேல என் மகளை பத்தி யாரும் ஒரு வார்த்தை பேச தேவையில்லை.. உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணது தப்பு தான்.. ஆனால் இங்க இருக்கிறது யாரு.. உங்க அண்ணன் மக.. உங்க பேத்தி. இவளை எப்படி ஊருக்கு முன்னால இப்படி அசிங்கப் படுத்தி பேச முடியுது.
தெரியாம தான் கேட்கிறேன்.. நீங்க நிஜமாவே என் பொண்ணை நல்ல மனசோட தான் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொன்னீங்களா.. உங்க லட்சணம் எல்லாம் தெரிஞ்சதுனால தான் என் பொண்ணுக்கு அங்கேயே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.. சொத்துக்காக அலையிற கூட்டம் நீங்க .. இதுக்குமேல என் பொண்ணை பத்தி ஒரு வார்த்தை பேசக் கூடாது ” என முதல் முறையாக குரலை உயர்த்தி இருந்தார் சிவகாமி.
” ஏய்…. ” என அகிலாண்டேஸ்வரி எகிற..
” போதும் அத்தை.. போதும்.. ரொம்ப பேசிடீங்க.. இத்தனை நாளும் நீங்க என்னைய பேசுனீங்க நான் அமைதியா இருந்தேன். ஆனால் இப்போ என் மகளை பேசிட்டு இருக்கீங்க.. எந்த தப்பும் செய்யாத அவளை இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.. அவ உங்க பேத்தி தானே.. உங்க மேல எவ்வளவு பிரியமா இருந்தா.. அவளை இப்படி பேசுறீங்க அத்தை.. ”
” ஏய் வாயை மூடு டி… இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்.. நல்லா ஊமை மாதிரி இருந்துட்டு.. என் மகனை இழுத்திட்டு போய் உன் மகளுக்கு சொல்லாம கொள்ளாம கல்யாணத்தை முடிச்சுட்டு வந்துட்ட.. நீ எப்பேர்பட்ட கைகாரியா இருப்ப…”
” என் பொண்ணு ஒன்னும் தப்பு பண்ணல.. எங்க ரெண்டு பேரு சம்மத்ததோட தான் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சோம்..”
” அப்போ எதுக்கு திருட்டு கல்யாணம்.. நல்ல மாதிரியா இருந்தா ஊரை கூட்டி பண்ணியிருக்க வேண்டியது தானே.. ” ஏனோ இந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் சிவகாமி திணறிப் போனார்.
” உங்களுக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க.. ஏன்னா உங்க பேத்தி கல்யாணம் பண்ணிருக்கிறது என் மகனை தான் ” என திவாகர் சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டார்.
” ஓ என் மகன் உங்க கூட தான் சம்மந்தம் பண்ணிருக்கானா.. அதுசரி.. அந்த தரங்கெட்ட குடும்பம் நீங்க தானா.. ” என அகிலாண்டேஸ்வரி பேச.. சிவானந்தம் கொதித்து போனார்.
” அம்மா…. ” என கோபத்தோடு எழ..
” நீங்க இருங்க சம்மந்தி.. நான் பேசிக்கிறேன் ” என திவாகர் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.
” நாங்க எப்படி பட்ட குடும்பம்னு என் மகன்… சென்னை சிட்டியோட கமிஷனர்.. அவன் தான் உங்களுக்கு விளக்கமா சொல்லுவான்.. உங்களுக்கு எப்படி வசதி.. அவனை வந்தே சொல்ல சொல்லவா ” என திவாகர் கேட்டதும்.. இருவரும் ஆடிப் போனார்கள்.
” செய்தியில வந்த போலீஸ்காரரை தான் இவ கல்யாணம் பண்ணிருக்காளா ” என மயிலு கேட்டதும்.. திவாகர் தலை அசைக்க.. அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
” இப்போ ஏன் மகனுக்கு போன் போட்டு வர சொல்லுறேன். கேஸ் விஷயமா அவன் முக்கியமான இடத்துக்கு போயிருக்கான். அதான் இங்க வர முடியல… இல்லைன்னா நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் அவனே பதில் சொல்லிருப்பான். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல.. வர சொல்லுறேன்.. ” என திவாகர் போனை எடுக்கவும்.. சட்டென மயில் தடுத்து விட்டார்.
” இருங்க கொஞ்சம்.. என் மகனை கல்யாணம் பண்ணலைன்னு ஆகிடுச்சு.. இனிமே இவ யாரை காட்டினா எனக்கு என்ன.. இதோட இந்த வீட்டுப் படி வாசல் நான் மிதிக்க மாட்டேன் .. நீயாச்சு உன் மகனாச்சு ” என மயில் நடையை கட்டி விட.. அகிலாண்டேஸ்வரி அதிர்ந்து போனார்.
இதற்கு மேல் இந்த வீட்டிற்குள் எப்படி செல்வது என தெரியாமல் அகிலாண்டேஸ்வரி முழித்து கொண்டிருக்க.. வாசலில் நின்ற குடும்பத்தார்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று விட.. இறுதியான சிவகாமி வந்து அவரை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.
அதேநேரம் பிறையின் அலைபேசி அதிர்ந்தது. கண்ணீரோடு எடுத்து பார்த்தவளுக்கு.. அவளது கணவன் அழைப்பது மங்கலாக தெரிந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்ததால் தானே அவனை அழைத்தாள். ஆனால் இன்று அவன் வராமல், தனியாக இந்த ஊருக்குள் வந்ததால், ஊர் மக்கள் முன்னிலையில் அவளுக்கு எப்படி ஒரு அவமானம். ஒரு பெண்ணாக அவளால் இந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அலைபேசியை துண்டித்து விட்டு அறைக்குள் வந்து முடங்கி விட்டாள்.
கைபேசியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.
அதே நேரம் பார்கவி அவளது அறையில் தீவிர சிந்தனையில் இருந்தாள். அர்ஜுன் கூறிய வார்த்தைகளை தான் அவளது மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.
சனா💖

