Loading

அத்தியாயம் 38

 

தன்னிடம் நீட்டப்பட்ட நெகிழிப் பையைக் கேள்வியாய் நோக்கினாள் ரஞ்சனி. எதிரே நின்று இருந்தான் அருண்.

 

“என்ன இது?”

 

“கர்ச்சீப். உங்களோடதை நான் யூஸ் பண்ணிட்டேனே?”

 

மெலிதாய் சிரித்தவள், “இதுல என்ன இருக்கு? ஒரு கர்ச்சீப் தான?”

 

“இது தப்பு! நான் யூஸ் பண்ணதை திரும்ப உங்களால யூஸ் பண்ண முடியாதுல? அதான் புதுசு வாங்கிட்டேன்!”

 

‘நீங்க, நான் யூஸ் பண்ணதைத் தான யூஸ் பண்ணீங்க?’ என நாவின் நுனிவரை வந்த வினாவை, ஏனோ கேட்காமலேயே இருந்து கொண்டாள். மனமோ மூளையோ எதுவோ ஒன்று, பாவையை அந்நொடியில் தடுத்துவிட்டது.

 

விருந்தினர்களை வரவேற்பதற்காக சந்தனம், குங்குமம், கல்கண்டு தட்டை வைத்திருந்த மேஜையில் இருவரும் சாய்ந்தபடி அருகருகே நின்று இருந்தனர். ஒன்றுபோல் அவர்களின் பார்வையும் மணமக்களின் மீதுதான் இருந்தது.

 

மௌனி தந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி இரண்டு மிடறு அருந்திவிட்டு, மீண்டும் அவளிடமே தந்தான் ஆடவன். ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டனர். இதற்கு இடையில், அவன் பணியிலும் கவனமாய் இருந்தான்.

 

“இப்படி மொத்த பொறுப்பையும் சரண் அண்ணாவே பார்த்தா, அவரால எப்படி இந்த மேரேஜ் ஃபங்ஷனை என்ஜாய் பண்ணி இருக்க முடியும்? ‘அது கரெக்டா இருக்குமா? இந்த வேலை சரியா நடந்துச்சா’னு அவரோட யோசனை முழுக்க கொஸ்டீன் தான ஓடிக்கிட்டு இருந்திருக்கும்.?” என அவள் மனதில் தோன்றியதை வெளியிலும் உரைக்க, “அவன் அப்படியே பழகிட்டான். சோ, இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல!” என்று பதில் தந்தான் அருண்.

 

அவன்பக்கம் திரும்பியவள், “என்ன சொல்லுறீங்க?”

 

“சரணோட அப்பா இறந்ததுல இருந்தே, அவன் அப்படித்தான். தம்பி தங்கச்சிக்குப் பசிக்குமேனு முதல்ல அவங்களை சாப்பிட வச்சிட்டு, அப்புறம் தான் இவன் சாப்பிடுவான். பாதிநாள் சாப்பிடாமலேயே காலேஜுக்கு ஓடி வந்துடுவான். தீபாவளி பொங்கலுக்குப் போடுற டிரஸ், எக்ஸாம் பிரிபரேஷன்னு எல்லா விஷயத்துலயுமே அப்படித்தான். உண்மையைச் சொல்லணும்னா, இப்படி ரெஸ்ட் எடுக்காம வேலை பார்க்கிறது தான் அவனோட என்ஜாய்மெண்ட்.

 

நாம நினைக்கிறது நடக்கலேனா, நடக்கிறதை அக்செப்ட் பண்ணிக்க வேண்டியது தான்னு சொல்லுவாங்க இல்ல? அதுமாதிரி தான் இவனும். ஸ்ட்ரகில்ஸை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிட்டான். சும்மா இருக்கச் சொன்னா தான், அவனால முடியாது!”

 

“ம்ம்.. வாழ்க்கையில நடக்கிற ஒரு எதிர்பாராத மாற்றம், நம்மளை எப்படி எல்லாம் திருப்பிப் போட்டுடுது? மௌனியுமே கொஞ்சம் அப்படித்தான்!”

 

“நல்லாதான் ஜோடி சேர்ந்திருக்காங்க!” என அவன் சிரிக்க, ரஞ்சனியும் புன்னகை சிந்தினாள்.

 

“அப்புறம் மிஸ்டர் அருண், ஃப்ரண்டை இப்படி தனியா கஷ்டப்பட விட்டுட்டு வேடிக்கை பார்க்குறீங்களே? நல்லாவா இருக்கு இது? தோள் கொடுப்பான் தோழன்னு கேள்விப்பட்டது இல்லையா?”

 

“என்னோட ஜுவல்லரில ரினோவேஷன் ஒர்க் போகுது. இவன் இப்படித் திடீர்னு ஃபார்ட்டி டேஸ்லயே, மேரேஜ் பிக்ஸ் பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல. அங்க வேலையை நிப்பாட்டினா, என்னோட ஃபேமிலிக்கு பதில் சொல்லணுமே? கடை என் ஒருத்தனோடது மட்டும் இல்ல. கொள்ளு தாத்தால இருந்து, நூறு வருஷமா கை மாறி வந்தது. அதுக்கான மரியாதையைக் கொடுக்கணும்ல.?

 

பட், முடிஞ்ச அளவுக்கு நானும் ஹெல்ப் பண்ணேன். இன்னைக்குக் காலையில நாலு மணிக்கு எல்லாம் ஓடி வந்துட்டேன். நைட் கிளம்பும் போதும் ஒரு மணி! அவனால வெளிய எங்கேயும் அதிகம் போக முடியாது இல்ல? அதுனால, நானும் திவாவும் தான் அதை பார்த்தோம்.”

 

“ஓ.. ஸாரி.. நான் உங்களை மண்டபத்துல பார்க்காததால தப்பா நினைச்சிட்டேன்.”

 

“இதுல என்ன இருக்கு? உங்களுக்கும் எனக்கும் இதுக்கு முன்னாடி அறிமுகம் இல்லைல. அப்படி நினைச்சதுல தப்பு எதுவும் இல்ல, விடுங்க!”

 

“இவ்வளவு பொறுப்பா இருக்கிற உங்க ஃப்ரெண்ட் என்னோட ஃப்ரெண்டை நல்லாதான் பார்த்துப்பாருனு தோணுது. பட், மேரேஜ் லைஃபை லீட் பண்ணுறதுக்கு இந்த கன்சர்ன் மட்டும் போதுமா?”

 

“யார் சொன்னா, அவனுக்கு மௌனி சிஸ்டர் மேல கன்சர்ன் மட்டும்தான் இருக்குனு.”

 

ரஞ்சனி அவன் புறம் திரும்பி கேள்வியாய்ப் பார்த்திட, “ஹீ லைக்ஸ் ஹெர், ஸ்ட்டார்டிங்ல இருந்தே!”

 

சென்னைப் பயணத்தின் பொழுது அவளுமே அதை உணர்ந்தால் தான். எனினும் தோழியின் எதிர்கால வாழ்விற்காக, அதைக் கேட்டு உறுதி செய்து கொள்வது அவசியமாய் தோன்றியது.

 

“எப்படிச் சொல்லுறீங்க?”

 

சற்று தள்ளி அமர்ந்திருந்த லாவண்யாவை கண்களால் காட்டியவன், “அந்தப் பொண்ணுக்கூட எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் ஆகி இருந்தப்ப, பொறுப்பு மொத்தத்தையும் அம்மாக்கிட்ட தான் கொடுத்திருந்தான். விமலை ஹெல்ப் பண்ண சொல்லிட்டான். ஃபங்க்ஷன் ஏற்பாடு மட்டும்தான் அவன் பார்த்தான். டிரஸ், ஜுவல்ஸ் பர்சஸ்னு எதுக்குமே கூட போகல. 

 

ஆனா, பொண்ணு மாறினதுக்கு அப்புறம் இவனும் அப்படியே தலைகீழா மாறிட்டான். மௌனி சிஸ்டரோட எங்கேஜ்மெண்ட் ரிங்க்ல இருந்து, மணமேடை அலங்காரம் வரைக்கும் எல்லாமே அவனோட செலக்ஷன் தான்.!” என்றவன் தங்கள் இருவரது உடையையும் காட்டினான்.

 

அவள் புரியாமல் பார்க்க, “ஃபியூச்சர் வொய்ஃபுக்கு மட்டும் இல்ல, நம்மளோட டிரஸ் செலக்ஷனும் அவன்தான்!”

 

முதல்நாளின் இரவில் தான், ரோகிணி.. ரஞ்சனி மற்றும் கணியனது குடும்பத்தாருக்கான உடையைக் கொண்டு வந்து தந்தாள்.

 

“அண்ணி பக்கம், அவங்களுக்கு ரொம்ப கிளோஸா இருக்கிறது நீங்க மட்டும் தான? அதுனால உங்க எல்லாருக்கும் கட்டாயம் டிரஸ் எடுக்கணும்னு அண்ணா சொல்லிட்டாரு!” எனச் சொல்லிச் சென்றாள்.

 

மௌனியிடம் இதைப் பற்றி விசாரித்ததற்கு, “அவரு என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தாரு படி. நான் தான், உங்க அளவை எல்லாம் கொடுத்தேன்!” என்றாள் அவள்.

 

‘சரணின் சொல்லில் வேறு எவரேனும் உடையை வாங்கி இருப்பர்!’ என அவள் நினைத்திருக்க, ‘அவனே அனைத்தையும் செய்து இருக்கிறான்!’ என்பது வியப்பைத் தந்தது.

 

“தன்னோட கல்யாணத்துல தானே எல்லாத்தையும் செய்யிறதுல அவனுக்கு ஒரு சந்தோஷம்!” என்று அருண் நண்பனின் மன எண்ணத்தைப் பகிர்ந்திட, ” உங்க ஃப்ரெண்டுக்கு ரெஸ்ட் எடுக்காம கஷ்டப்படுறதுனா ரொம்ப பிடிக்கும் போல?” எனக் கேலியாய் மொழிந்தாள் ரஞ்சனி.

 

இருவரும் சிரித்துக் கொண்டனர்.

 

கைப்பேசியில் கண்களைப் பதித்தபடி அமர்ந்திருந்த லாவண்யாவைக் கடந்து சென்றவனின் குரல், அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

 

காலையில் இருந்து நடந்த வரிசையான திருமண நிகழ்வுகளால், திவாகரைப் பார்த்துப் பேச முடியவில்லை. அத்தோடு அவன் அதிகம் பார்வையிலும் படவில்லை. எனினும் முதல்நாளின் நிகழ்வை, ‘சரி போனால் போகிறது!’ என்று அப்படியே விட மறுத்தது, அவளின் குணம்.

 

“அந்த ஸ்கீரினை எல்லாம் ரிமூவ் பண்ணி அப்படியே மடிச்சு வைங்க.” எனப் பணி செய்பவரிற்குக் கட்டளை இட்டவன், “இந்த பலூன், பூ அலங்காரம் எல்லாம் இருக்கட்டுமா? இல்ல, அதையும் ரிமூவ் பண்ணீடவா?” என்று கைப்பேசியின் வழியாய் மண்டபத்தின் பொறுப்பாளரிடம் வினவினான்.

 

ஆடவனது குரல் அழுத்தமும் பயிற்சியின் காரணமாக வலுவேறிய உடல் தோற்றமும், எவரையும் அவனது சொல்லுக்கு உடனடியாக பதில் சொல்ல வைத்தது.

 

“இல்ல தம்பி, எல்லாத்தையும் எடுத்திடுங்க. அடுத்து விசேஷம் வைக்கிறவங்க, அவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி செஞ்சுக்குவாங்க!” என மறுபுறம் இருந்தவர் உரைக்க, அப்பணியையும் செய்யும் படி கையசைத்துக் கண்களால் கட்டளையிட்டு விட்டு நகர்ந்தான்.

 

சரியாய் அவனின் எதிரே சென்று வழியை மறித்து நின்றாள் லாவண்யா.

 

முதலில் கேள்வியாய் நோக்கியவன் பின்னர், “ஹேய்.. நேத்து மாடியில இருந்து விழ டிரை பண்ண பொண்ணு தான நீ?”

 

அவனைப் பார்வையால் எரித்தவள், “நான் விழ டிரை பண்ணேனு உனக்குத் தெரியுமாயா?”

 

“என்ன? இப்ப எதுக்கு, சம்பந்தமே இல்லாம என்கிட்ட வந்து கத்திக்கிட்டு இருக்க? உன்னை காப்பாத்தினது தப்பா போச்சு. அப்படியே விழட்டும்னு விட்டு இருக்கணும்.”

 

“என்னமோ ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற? அதுக்கு காரணமே நீதான்!”

 

குழப்பத்துடன் நோக்கியவன், “நானா?”

 

“பின்ன ஒரு இடத்துக்குப் போனா, அங்க யாராவது இருக்காங்களா? எதுவும் செய்றங்களானு முன்னாடியே செக் பண்ண மாட்டியா?”

 

“ஏன்?”

 

“ஏன்னா? நேத்து பால்கனியில நான் நின்னிட்டு இருந்தேன். திடீர்னு, நீ அங்க வந்து சத்தமா வேற பேசவும்..”

 

“பயந்துட்டியா.?” எனக் கேட்டுச் சிரித்தவனின் கண்களில் வியப்பு மேலிட்டது.

 

அதில் பாவைக்குச் சினம் துளிர்த்திட, “ஏய்.. என்ன நக்கலா.?”

 

“சிச்சீ.. நான் கிண்டல் எல்லாம் பண்ணல. நீ சொன்ன விதத்துலயும் உன்னோட முகத்தை பார்த்தும் சிரிப்பு வந்திடுச்சு!”

 

“வரும் வரும்! ஆளைப் பாரு!”

 

“ஓ.. அதுக்காக சண்டை போட வந்தியாக்கும்?”

 

“பின்ன, உன்னை அப்படியே சும்மா விடுவாங்களா?”

 

“சரி, என்ன செய்யலாம்னு இருக்க?”

 

அவன் சட்டென்று அப்படி வினவியதும் ‘என்ன மறுமொழி உரைப்பது?’ என்று புரியாமல், திணறலுடன் பார்த்தாள் லாவண்யா.

 

பாவையின் முகத்தையே பார்த்து இருந்தவன், “என்ன தெரியலயா?”

 

“சரி, என்ன செய்யலாம்னு யோசிச்சு வை! அப்புறமா, அதைப்பத்தி பேசுவோம். இப்ப, நான் போயி வேலையைப் பார்க்கிறேன். ஓகேவா.?” என்று அவளின் நடவடிக்கையை கருத்தில் கொள்ளாதது போல், கடந்து சென்றான் திவாகர்.

 

மக்களுடன் குடும்பத்தார் இல்லம் வந்து சேர்ந்தனர். ரஞ்சனி மற்றும் அவளின் உறவுகளும் உடன் வந்தனர்.

 

சரண்தான், “இனி, இங்க ஊருக்கு வர்றதுக்கான வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ? எப்படியும் கல்யாணத்துக்காக இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. அப்படியே ஒரு தடவை வீட்டுக்கும் வாங்க!” என அழைப்பு விடுத்திருந்தான்.

 

உடன்பிறவா தமக்கையின் கணவன் கோவிலில் உரைத்ததைப் போல், ரோகிணியிடம் பேச முயன்றான் கணியன். ஆனால் இந்நொடி வரை அதற்கு சாதகமான சூழல்தான் கிட்டுவதாய் இல்லை. அத்தோடு, அவளிடம் தனது செயலிற்கான காரணத்தைச் சொல்லி மன்னிப்பு கேட்கவும் நினைத்து இருந்தான்.

 

‘பிற்காலத்தில் எதார்த்தமாய் அதனைப் பற்றிய பேச்சு வந்து, அது மௌனியின் செவியை அடைந்தால், வீணான மன வருத்தம் தானே? அதனால் இப்பொழுதே அப்புரிதல் இன்மையைப் பேசி சரி செய்து விட வேண்டும்!’ என்று நினைத்தான்.

 

அதனால், சரண் உரைத்ததற்கு உடனே ஒப்புக்கொண்டு குடும்பத்தாரையும் இல்லத்திற்கு அழைத்து வந்து விட்டான் கணியன்.

 

வசந்தி ஆரத்தி எடுக்க, மணமக்களைத் தொடர்ந்து அனைவரும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.

 

விளக்கு ஏற்றுதல், பால் பழம் உண்ணும் வைபவம், வந்திருந்தவர்களுக்கு உபசரிப்பு என ஒவ்வொன்றாய் நடந்து கொண்டிருக்க, ரோகிணியையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது கணியனின் கண்கள்.

 

எதிலும் கலந்து கொள்ளாமல், தனித்தே இருந்தாள் அவள். பெரிதாய் எப்பணியையும் செய்யவில்லை. குடும்பத்தினரும் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. 

 

எவரேனும் அருகே சென்று பேசினால் மட்டுமே பதில் உரைத்தாள். அதேபோல் தனிப்படையாய் அவளிடம் செய்யச் சொல்லும் வேலையை மட்டுமே செய்தாள்.

 

பாவையின் நடவடிக்கை வேறுபாடாய் தோன்றிட,  ‘நேற்றைய நிகழ்வின் பிரதிபலிப்போ இது?’ என்ற  எண்ணம் வேறு அவனின் மனதை அரித்தது.

 

‘அவளிடம் பேசிப் பார்க்கலாம்!’ என ஒரு அடி எடுத்து வைக்க, அத்தை மகனை அழைத்து அதற்கு தடை விதித்தாள் ரஞ்சனி.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்