Loading

அத்தியாயம் 36

 

மணப்பெண்ணின் ஒப்பனையில் மௌனி அறையில் இருந்து வெளியே வந்த நொடியை, அப்படியே தனது புகைப்படக் கருவியில் நினைவாய் பதிவு செய்தான் கணியன்.

அதில் புன்னகைத்த பாவை, “என்னடா இப்பவே ஆரம்பிச்சிட்டியா?”

“நீங்க வேற அக்கா, நானே நேத்து மெமரீஸ் எல்லாம் மிஸ் ஆகிடுச்சேனு வருத்தத்துல இருக்கேன்?”

“அதான் சரண் ஃபோட்டோ கிராஃபருக்கு ஏற்பாடு செஞ்சு இருந்தாரே?”

“இருந்தாலும்.? ஒரு தம்பியா, உங்க மேரேஜ்க்கு இதைத் தவிர என்னால வேற எதுவும் செய்ய முடியாதே? ப்ரசண்ட் வாங்கிக் கொடுக்குற அளவுக்கு பட்ஜெட்டும் இல்ல.”

“நான் உன்கிட்ட கேட்டேனா? நீ வந்ததே போதும் எனக்கு!” என அவள் சிரித்திட, ரோகிணியைத் தவிர்த்து குடும்பத்தார் அனைவரும் புன்னகை முகமாய் பார்த்து இருந்தனர்.

“சரி, கிளம்புவோமா அக்கா? அருண் அண்ணா காரோட வெயிட்டிங் வெளியில.”

அவள் தலை அசைக்க அரங்கில் இருந்து வெளியேறினர்.

ஒன்பது பேர் வரை அமரக்கூடிய அந்த வாகனத்தில்.. பின்புறம் ராணி, யாமினி ரெங்கநாயகி, நடுவினில் மௌனியுடன் ரோகிணி மற்றும் வசந்தி, முன்புறம் ஓட்டுனரின் இடத்தில் அருண் அவனின் அருகே கணியன், ரஞ்சனி.. என இருக்கையைப் பகிர்ந்து இருந்தனர்.

மாப்பிள்ளையின் வண்டியில் சரணுடன், அவனது குடும்பத்தார் இருக்க, இருபது நிமிட பயணத்தில் கோவிலை அடைந்தனர்.

முன்னரே திவாகர் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தான். கோவிலின் அலுவலக அறையில் மணமக்கள் கையெழுத்து விட்டு வர, சேகரன் குடும்பத்தாருடன் வந்து சேர்ந்தார்.

மணப்பெண்ணிற்கு நாத்தனார் முறையில் திருமணம் ஆனவரும், மாப்பிள்ளைக்கு மச்சினரும் மெட்டி அணிவிப்பது அவர்களின் வழக்கம்.

ரோகிணிக்குத் திருமணம் ஆகாததால், மௌனிக்கு வசந்தி மெட்டி அணிவித்தார். கணியன், பழக்கத்தால் தமக்கை உறவாகி போனவளின் வருங்கால துணைவனது கால்விரல் பற்றி போட்டு விட, அங்கேயே பெண்ணிற்குத் தம்பி என்ற முறையில் மோதிரம் அணிவித்து விட்டான் சரண்.

“எதுக்கு மாம்ஸ் இது?”

“மச்சினனுக்குப் போடணும்டா!”

“ஆனா இது கொஞ்சம் ஓவர். நான், கூடப் பிறந்தவன் கூட கிடையாது!”

“இந்த மோதிரம் அதுக்காக இல்ல. மௌனிக்குத் தேவையான நேரத்துல, உன்னோட ஃப்யூச்சரைப் பத்திக்கூட யோசிக்காம அவளுக்காக நீ நின்னு இருக்க. அதுக்காகத்தான் இது! மோதிரம் மோனியோட தம்பிக்கானது இல்ல. கணியன்ற நல்ல மனசு உள்ளவனுக்கு!”

“அதுசரி! இப்படி எல்லாம் சொல்லாதீங்க மாம்ஸ். ஒருபக்கம் கூச்சமா இருக்கு. இன்னொரு பக்கம் தலையில ரெண்டு கொம்பு முளைச்ச மாதிரி வேற ஃபீல் ஆகுது.”

அருகே இருந்த அனைவரும் அதைக் கேட்டுச் சிரிக்க, “பார்த்து ஜாக்கிரதையா இருங்க! கற்பனை நிஜமாகி கொம்பு முளைச்சிட போகுது. அப்புறம் உங்களை மனுசங்க இனம், மிருக வகை ரெண்டு கூடவுமே சேர்க்க முடியாம போயிடும்!” என ரோகிணி தீவிரமாய் உரைத்துவிட்டு நகர்ந்தாள்.

“அவ சொன்னதைப் பெருசா எடுத்துக்காத!” என்று சரண் சமாதானம் உரைக்க, “அட! இதெல்லாம் ஒன்னும் இல்ல மாம்ஸ். அவங்க சாதாரணமா  சொல்லிட்டுப் போன மாதிரி தோணுச்சு எனக்கு. ஃப்ரெண்ட்ஸ் நடுவுல கலாய்ச்சுக்கிறது இல்லையா?”

“அப்ப ரோகிக்கூட ஃப்ரெண்டாக டிரை பண்ணு. இந்த மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் சரியாகிடும். நான் உனக்காக ஏதாவது பேசுனா, மௌனிக்காக செய்யிறதா நினைக்க வாய்ப்பு இருக்கு. அப்புறம் சென்னையில நடந்தது, இங்க இருக்க யாருக்கும் தெரியாது. பார்த்துக் கவனம்!” என அவன் நடந்தபடி மெல்லிய குரலில் மொழிய, தலை அசைத்துப் புன்னகைத்தான் கணியன்.

‘எதிரெதிர் துருவங்களாய் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்போடு பழக தொடங்கி விட்டால், உருவாகப் போகும் புதிய உறவிற்கும், மௌனியிடம் உண்மையை முழுதாய் உரைத்து அவளைச் சமாதானம் செய்வதற்கும் உபயோகமாய் இருக்குமே?’ என எண்ணினான் மாப்பிள்ளையானவன்.

எண்ணிய யாவும் நிகழ்ந்து விட்டால் விதி என்ற ஒன்று எதற்கு உள்ளது?

அவன் ஒன்றை நினைக்க, காலம் வேறு ஒன்றை கணக்கிட்டு தன்வசம் வைத்திருந்தது.

கோவிலின் சுற்றுப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றனர் அனைவரும்.

பத்து நிமிட வைபவம்.

மணமக்களின் குடும்பத்தார் சார்பில் கொண்டு வரப்பட்ட ஆளுயர மாலையை தெய்வத்திற்கு அணிவித்து.. அரங்கநாதன், மௌனிகா மற்றும் இறைவனின் பெயரிலும் அர்ச்சனை செய்து, திருவடிகளில் வைத்து வணங்கிய மஞ்சள் கயிறை எடுத்துக் கொடுக்க, அதனை வாங்கிப் பாவையின் கழுத்தில் மூன்று முடியிட்டான் ஆடவன்.

கோவிலில் சிறப்பு அனுமதி பெற்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படமாய் எடுத்தான் கணியன். அடுத்ததாய் குங்குமம் வைக்கும் நிகழ்வு. மல்லிகை பூ முடிச்சிட்ட பொற்தாலியின் மேற் பக்கத்திலும், மனைவியின் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் வைத்தான் சரண். அதேபோல் அவளும் மூத்தவர்களின் சொல்படி, கணவனிற்கு சந்தனமும் குங்குமமும் இட்டாள்.

மௌனி உடுத்தியிருந்த சிவப்பு மற்றும் வெள்ளையில் கட்டமிட்ட கூரைப் புடவையின் முந்தானையையும், சரணின் தோளில் இருந்த சந்தன நிற பட்டுத் துண்டின் முனையையும் சேர்த்து முடிச்சிட்டார் வசந்தி.

அப்படியே வெளியில் வர, பிரகாரத்தில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. குடும்ப வழக்கப்படி திருமணத்திற்கு என்று கட்டி வாங்கிய ரோஜா மாலை கழுத்தோடு இருக்க, மல்லிகை மற்றும் தாமரை இதழ்கள் கலந்திருந்த துணை மாலையை, மூன்று முறை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர்.

ரெங்கநாயகி, “இனி ரெண்டு பேரும் கையைப் பிடிச்சுக்கோங்க பிள்ளைகளா!” என்றிட, சரணும் மௌனியும் ஒருவரை ஒருவரைப் பார்த்துப் புன்னகைத்து கரம் பற்றிக் கொண்டனர்.

திருமண நிகழ்வில் மணமக்கள் மட்டுமல்ல யாரிற்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். லாவண்யாவும் கூட, மன மகிழ்வுடனே பங்கேற்றுக் கொண்டாள்.

அது மங்கல நாணின் மந்திரம் போலும்.

கோவிலில் இருந்த மற்ற தெய்வங்களை உறவுகளுடன் இணைந்து புதுமணத் தம்பதியர் வரிசையாய் வணங்குவதற்காக செல்ல, அருணை அழைத்தார் பாகீரதி.

“என்னம்மா?”

“ஐயர்கிட்ட, நான் முன்னாடியே பேசிட்டேன். இந்நேரம் மண்டபத்துக்கு வந்திருப்பாரு. நீ போயி அவரு கேட்கிற உதவியைச் செஞ்ச, அக்னி மட்டும் வளர்த்து வைக்கச் சொல்லு. பிள்ளைக, எல்லார் முன்னாடியும் வலம் வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கட்டும்!” என்றிட, தலை அசைத்துவிட்டுக் கிளம்பினான்.

வெளியே வந்தவனிற்கு சில வினாக்கள் எழ, சரணின் அன்னைக்கு அழைப்பு விடுத்தான்.

“என்ன அருண்.?”

“அம்மா, பொருள் எதுவும் வாங்கணுமா? இல்ல அவரு கொண்டு வந்திடுவாரா?”

“நான் முன்னாடியே எல்லாம் வாங்கி வச்சிட்டேன். சரணோட ரூம்ல இருக்கு. எடுத்துக் கொடு.”

“சாவிம்மா.?”

“நல்லவேளை கேட்ட. அது வசந்திக்கிட்ட இருந்துச்சு, நான் வாங்கிக் கொடுத்து விடுறேன்!” என இணைப்பைத் துண்டித்தவர் முதலில் மகளை அழைக்க நினைத்து, அவளால் எவரும் எதுவும் கேட்டால் உடனடியாய் எதிர்வினை செய்ய இயலாது என்பதால், ரஞ்சனியிடம் மேலும் சில பணிகளைச் சொல்லி அனுப்பினார்.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடைந்தவள், தாங்கள் மண்டபத்தில் இருந்து பயணம் செய்து வந்த வண்டியை நோக்கி வேக எட்டுகளில் செல்ல, பாவையின் இடப்பக்கம் இருந்து குரல் கொடுத்தான் ஆடவன்.

இருசக்கர வாகனங்களிற்கு என்று ஒதுக்கிய இடத்தில் நின்று இருந்தான் அவன்.

அத்திசையில் திரும்பி நடந்தவள், “என்ன இங்க நிக்கிறீங்க?” என வினவிட, “கார்ல நான் போயிட்டா, நீங்க எல்லாம் எதுல வருவீங்க?” என்று மறுகேள்வி கேட்டுச் சிரித்தான்.

மெல்லிய புன்னகையை பதிலாய் தந்தவள், “இது.?” என அவனின் அருகே இருந்த இரு சக்கர வாகனத்தை கேள்வியாய் பார்த்தாள்.

“என்னோடது தான். காலையில திவாகர் எடுத்துட்டு வந்திருந்தான்.”

“ஓ.. ஓகே.. நானும் மண்டபத்துக்குப் போகணும். கூட வரலாமா.?,

“ஸுயர்!” எனப் புன்னகைத்தவன், “தங்கச்சியை விட்டுட்டு நீங்க பாட்டுக்கு முன்னாடி கிளம்புறீங்க.?”

“பாகீரதி ஆன்ட்டி கொஞ்சம் வேலை சொன்னாங்க. செய்யிறதுக்கு வேற யாரும் இல்லேல? நான், படிக்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்!” என்றிட, இருவருமாய் கிளம்பினர்.

அருண் அவனிற்கு சொல்லப்பட்ட பணியைக் கவனிக்க, ரஞ்சனி மணப்பெண் அறைக்குள் சென்றாள்.

உறவுகளில் பெரும்பாலானோர் வருகை தந்திருந்தனர். முன்னரே மணமேடையில் சில தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு தட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. அறைக்குள் இருந்து பட்டுப்புடவை மற்றும் சீர் வரிசைத் தட்டுகளை ஒவ்வொன்றாய் கொண்டு வந்து அடுக்கத் தொடங்கினாள் அவள்.

சடங்கிற்காக மேடையின் ஒருபுறம் இருந்த அம்மியைத் தூக்கி வந்து அக்னி வளர்க்கும் இடத்திற்கு வலது பக்கத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தான் அருண்.

கரத்தில் அதனில் இருந்த தூசி முழுவதும் ஒட்டிக் கொள்ள சுத்தம் செய்வதற்காக சென்றவன் நீரில் கழுவிவிட்டு, அங்கு துடைப்பதற்குக் காகிதத்தைக் காணாது, நண்பன் வாங்கித் தந்த புத்தாடையை ஈரமாக்கவும் விரும்பாது எதில் துடைப்பது என ஒருநொடி திணறி நின்றான்.

மணமகள் அறையில் இருந்து வெளியேறிய பாவையைக் கண்டவன், “ரஞ்சனி!” என உரத்துக் குரல் கொடுக்க, கேள்வியாய் நோக்கினாள்.

“ஒன் செகண்ட்.”

அவனை நோக்கி வந்தவள், “என்ன அருண்?”

“இங்க டிஸ்யூவைக் காணோம். கர்ச்சீப் வச்சு இருக்கீங்களா.?”

நீர் சொட்டும் கரத்தைக் கண்டவள் தன்னுடையதைத் தர, “தேங்க்ஸ்!” என்று வாங்கித் துடைத்துக் கொண்டவன், இதைக் கூட கவனிக்காம என்ன செய்யிறாங்கனு தெரியல. நான் போயி பார்க்கிறேன்!” என அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அவள் முன்னரே கரைத்து வைத்த ஆரத்தித் தட்டை எடுத்துச் சென்று வெளியில் வைக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தனர் புதுமணத் தம்பதியர்.

ரோகிணி, ரஞ்சனி, யாமினி மூவரும் இணைந்து ஆலம் சுற்றிட, சரணும் மௌனியும் வலது காலை ஒன்றாய் எடுத்து வைத்து, அரங்கிற்குள் நுழைந்தனர்.

ரெங்கநாயகி அட்சதை தட்டை ரஞ்சனியிடம் எடுத்துத் தர, விருந்தினர்களிடம் தந்துவிட்டு வந்தாள்.

இதற்கிடையில் மணமக்களை மேடையில் அக்னியின் முன்பு அமர வைத்து இருந்தனர். அக்னி தேவனிற்காக பூஜை நிகழ்ந்து முடிய, வணங்கிக் கொண்டனர்.

பின்னர் இருவரும் எழுந்து கொள்ள, அம்மி மிதிக்கும் சடங்கு நடந்தது. சரண் மனைவியினது வலது காலின் பெருவிரலைப் பற்றி அம்மியின் மீது வைத்து, நடுவிரலில் முத்துகள் நிறைந்த மற்றொரு மெட்டியை அணிவித்தான்.

அம்மியைப் போன்று உறுதித் தன்மையுடன், உராய்ந்தாலும் விட்டு விலகாமல் கணவன் மனைவியின் உறவு நிலையாய் இருக்க வேண்டும் என்பதற்காக இச்சடங்கு செய்யப்படுகிறது.

பின்னர் வேள்வி சுற்றும் நிகழ்வு.

மச்சினன் முறைக்குக் கணியனை அழைத்து முன்னே நிற்க வைத்து, சரணை அவனின் கரத்தில் பற்றிக் கொடுத்தார் புரோகிதர். அவரின் சொல்லில் புதுமணத் தம்பதியர் வலக்கரத்தின் சிறுவிரல்களைக் கொக்கிப் போல் கோர்த்துக் கொண்டனர்.

மாப்பிள்ளையின் தங்கையான ரோகிணி, தமையன் மனைவியின் முடிச்சிட்ட புடவை முந்தானை நெருப்பை நெருங்கி விடாதபடி ஒரு கரத்தால் பற்றிக் கொண்டு, மறுகையை மணமக்கள் கொக்கியிட்டு இருந்த விரல்களின் மீது வைத்துப் பாதுகாப்பாய் பிடித்துக் கொண்டாள்.

கணியன் வழிகாட்டி முன்னே நடந்து செல்ல, மற்ற மூவரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

நால்வரும் மூன்று முறை அக்னியை வலம் வந்து முடிக்க, கணியனும் ரோகிணியும் சற்றே விலகி நின்று கொண்டனர்.

மூன்றாம் சுற்றின் முடிவில் வடக்கு திசைக்கு வந்து அங்கு வெட்டவெளியாய் தெரிந்த ஆகாயத்தை நோக்கி வணங்கிக் கொண்டனர், சரணும் மௌனியும்.

சப்தரிஷி தம்பதியரில், ஆறு தம்பதிகள் நிலை தடுமாறியவர்கள். ரிஷிகள் வானுலக தேவதைகளிடமும், அவர்தம் மனைவிமார்கள் தேவேந்திரனின் அழகிலும் மயக்கம் கொண்டனராம்.

இதில் வசிஷ்டரும் அவரின் துணைவியான அருந்ததியும் மட்டும் விதி விலக்கு. கற்புநெறி தவறாது வாழ்ந்தவர்களாம். அவர்களைப் போல ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்பதை உணர்ந்தும் விதமாக, இணை நட்சத்திரங்களாய் இருக்கும் அந்த இணையை மனதில் எண்ணி வணங்கிக் கொள்ளுதலே, அருந்ததி பார்க்கும் சடங்காக நடத்தப்படுகிறது.

மேலே சொல்லப்பட்டது புராணக்கதை. இக்கற்பனைக் கதையில் துணையின் ஒழுக்க நெறியால் வசிஷ்டர் பெருமை பெறுகிறார் என்பதே உண்மை. அதனால் தான் கணவனை மட்டுமே தனக்குள் சுமந்த அருந்ததியின் பெயர் இன்றளவும் நிலைத்து நிற்கிறது!

சடங்குகள் யாவும் நடந்து முடிய, மணமக்கள் விருந்தினர்களின் முன்பு கைக்கூப்பி வணங்கி நின்றனர். அனைவரும் எழுந்து அட்சதை தூவி வாழ்த்திட, மங்கலத்தால் நிறைந்து போனது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்