Loading

காலம் தாண்டிய பயணம் 02

 

 

நள்ளிரவில் அலைபேசி ஒலிக்கும் சத்தம் அந்த அறையில் நிறைந்திருக்க, தூக்கத்தில் இருந்தான் ஒருவன்.

 

மீண்டும் மீண்டும் அடித்த தொலைபேசி சத்தத்தில் விழித்தவன், உயிர்ப்பித்து காதில் வைக்க, அந்தப் பக்கம்,

 

“மகி அத்தான், ஹாப்பி பர்த்டே” என்ற ஆர்ப்பாட்டமான குரல் வரவேற்றது.

 

யாரென்று புரிந்ததில் இதழில் புன்னகையை தவழ விட்டவன், “தேங்க்ஸ்டா கவிக்குட்டி” என்று எழுந்து அமர்ந்தான்.

 

“இன்னைக்கு நான் தான் ஃபர்ஸ்ட் விஷ்ல?” என்று அந்தப் பக்கமிருந்தவள் ஆர்ப்பரிக்க, 

 

மகியோ “இல்லையே இந்த வாட்டியும் என் மித்து தான் ஃபர்ஸ்ட்” என்றிருந்தான்.

 

“இல்லையே வாய்ப்பில்லையே! உன் மித்து வெளியூருக்கு வேலை விஷயமா போனதா மம்மி சொன்னாங்களே! வேலைக்குப் போனா போன் கூட எடுக்கமாட்டாங்களே அப்பறம் எப்படி?” என்று சந்தேகமாக வினவினாள்.

 

“அங்க தான் நீ தப்பு பண்ணிட்ட, மித்து பத்தி தெரிஞ்சும் எந்தத் தைரியத்துல டூ அவரஸ் லேட்டா கால் பண்ண கவிக்குட்டி, இங்க கிஃப்டும் விஷ் பண்ண ஆடியோவும் சரியா டைமுக்கு செட் பண்ணி வெச்சிட்டுத்தான் சிங்கம் போயிருக்கு” என்று புன்னகையுடன் அவளுக்கு விளக்க, ஐயோ என்றானது அவளுக்கு…

 

“அச்சோ, இந்த வாட்டியும் நான் தான் அவுட்டா? உன் மித்து ஊர்ல இல்லைங்கிற தைரியத்துல தூங்கி எழுந்து விஷ் பண்ணேன் மகித்தான். அதான் சொதப்பிடிச்சு”

 

“இட்ஸ் ஓகேடா கவிக்குட்டி பீல் பண்ணாத நீதான் எப்போவும் போல செகண்ட்” என்று அவளைச் சமாதானப்படுத்தியவன் “அப்பறம் எப்போ இந்தியா வரீங்க மேடம்” என்று அவள் கவனத்தை திசை மாற்றினான்.

 

“நெக்ஸ்ட் மந்த் ஸ்டடீஸ் கம்ப்ளீட் ஆகுது. அடுத்து டூ மந்த்ஸ் மொத்தமும் உங்கூட தான் அத்தான்” என்றவள் பேசிக்கொண்டிருக்கையில், அவளது தாயும் மகியின் அத்தையுமான மாலதி தொலைபேசியைக் கையில் வாங்கி இருந்தார்.

 

இந்தப் பக்கம் இருந்தவனுக்கு அங்கே தாய்க்கும் மகளுக்குமான சண்டை காதில் தெளிவாக விழுந்ததில் முகமெல்லாம் புன்னகை.

 

அதன் பின் அவர்கள் இருவரிடமும் பேசி வைத்தவன், நேரத்தைப்பார்க்க மணி அதிகாலை மூன்றை காட்டியது. அதற்கு மேல் தூங்க விருப்பம் இல்லாதவன் அடுத்தநாள் பார்க்க வேண்டிய கேஸ் கோப்பு ஒன்றை எடுத்துக்கொண்ட மேசையில் அமர்ந்து கொண்டான்.

 

_________________________

 

அங்கே கிராமத்தில் யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாளும் விடிந்திருந்தது. 

 

இன்று ஒருநாள் தான் அவள் இந்த நரகத்தை விட்டுத் தப்ப வாய்ப்பிருக்கின்றது.

 

ஆனால் அதற்கு முயற்சி எடுக்கக் கூட அவள் யோசிக்கவில்லையே…

 

விஜயாவும் சொல்லிக் களைத்துப் போய் விட்டாள், அடக்கு முறையிலேயே வளர்க்கப்பட்டவள் அவள். அப்படி இருக்கையில் எப்படி படி தாண்ட எண்ணம் வரும்.

 

இத்தனை வருடம் சகித்துக்கொண்டு வாழ்ந்தது போல், மீதி வாழ்க்கையையும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் தான் அவளுக்கு.

 

ஆனால் அந்த எண்ணம் உடையும் சம்பவம் நடக்கக் காத்திருந்தது.

 

“என்னங்க காளை இன்னைக்கு வர்றேன்னு சொன்னான். இன்னும் ஆளக் காணோம் ஒரு ஃபோனப் போட்டுத் தாங்க என்னனு கேட்டுடுறேன்” என்றபடி கணவன் காசிநாதனின் அருகில் வந்தார் அவரது மனைவி வள்ளியம்மை.

 

“வள்ளி, நாளைக்கி கல்யாணத்தை வெச்சிட்டு இன்னைக்கு வீட்டுக்கு வர்றது என்ன பழக்கம்?  ஊர்ல தெரிஞ்சா என் மரியாதை என்னாவுறது?” என்று கோபமாய் கேட்டார் காசிநாதன்.

 

அவருக்கு எப்போது மரியாதை தான் முக்கியம். யாரும் எதிர்த்துத் தன்னை ஒரு கேள்வி கேட்டுவிடக் கூடாது என்று அத்தனை கங்கணம் கட்டிக் கொண்டு தான் திரிவார். 

 

அதிலும் சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அவரை இன்னும் மூர்க்கனாக்கி இருந்தது. 

 

“இப்படி சொல்லிச் சொல்லியே இத்தனை நாள் கட்டிக்கிற பொண்ணுகிட்டக் கூட  அன்னியோன்யமா அவன பேச விடல, நாளைக்கு கல்யாணத்தை வெச்சிட்டு இன்னைக்கும் அப்படியே சொன்னா எப்படிங்க? அவனுக்கும் ஆசை இருக்கும்ல, நம்ம மரியாதைய காப்பாத்த, அன்னைக்கு நீங்க சொன்ன ஒத்த வார்த்தைக்காக இத்தனை வருஷம் கல்யாணமே பண்ணிக்காம காத்திருந்தான்ல என் தம்பி, இன்னைக்கு ஏதோ அவன் பொஞ்சாதிய பாக்கணும், ஆசையா பேசணும்னு தோணிருக்கு” என்று முந்தானையால் வராத கண்ணீரைத் துடைத்தவருக்கு கணவன் எதைச் சொன்னால் மடங்குவார் என்று தெரியாதா என்ன?

 

அதன் பின் காசிநாதனால் மறுக்க முடியவில்லை, “என்னவோ பண்ணுங்க” என்றவர் மனைவி சொன்னது போல், வருங்கால மாப்பிளைக்கு அழைப்பெடுத்து மனைவியிடம் கொடுத்தவர் அங்கிருந்து சென்றிருந்தார். 

 

காசிநாதனால் மனைவி குறிப்பிட்ட அந்த நாளை மறந்து விட முடியுமா என்ன?

 

அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத அவமானத்தைக் கொடுத்த நாள் அல்லவா அது?

 

இன்றும் அதை நினைக்கையில் நரம்பு புடைக்கத்தான்  செய்கிறது.

 

காலபைரவனை குலதெய்வமாக வழிபடும் ஊரான காலபைரவன் கோட்டையில் ஊர்தலைவராக, காலம்தொட்டு அவர்களது பரம்பரை தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மூத்த ஆண் வாரிசுக்குத் தான் அந்தப் பதவி கொடுக்கப்படும்.

 

காசிநாதனுக்கு உடன்பிறப்பு என்று யாரும் கிடையாது. அவர் மட்டும்தான் தனிப்பிள்ளை என்பதால் மொத்த மரியாதையும் அவருக்கே கிடைத்திருக்கையில், அந்தப் போதை தலைக்கேறியிருந்தது.

 

அந்த மரியாதைக்கு ஒரு சறுக்கல் என்னும்போது அவர் கொதித்து விடுவார். அப்படியொரு சந்தர்ப்பத்தில்  சம்மந்தம் இல்லாமல் பலியாய் மாட்டியவள் தான் இனியாள் காசிநாதன்.

 

அவள் தலையெழுத்தை மாற்றி எழுதியது அவளது பெயரின் பின்னால் இணைந்திருக்கும் அவளது தந்தையின் நாமம் தான். 

 

ஆனால் காசிநாதனுக்கு ஒன்று புரியவில்லை, கடவுள் எழுதிய தலையெழுத்தை மாற்ற அவரால் முடியாதென்பது.

 

___________

 

வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்து முடித்த இனியாவிற்கோ பசி வயிற்றை கிள்ளியது. ஆனால் அப்படியெல்லாம் நினைத்ததும் அங்கே போய் அவளால் சாப்பிட்ட விட முடியாது.

 

அங்கே அனைவரும் உண்ணும் வரை அவளுக்கு உண்ண அனுமதி இல்லை.

 

இது தன் வீடுதானா என அவள் எண்ணாத நாளே இல்லை. பெண்ணாய் பிறந்ததால் ஒதுக்கப்படுகிறாள்.

 

வள்ளியம்மைக்கு, தான் ஒரு பெண் என்பதே மறந்திருந்தது போலும். அந்த வீட்டில் பெண்கள் அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று ஆயிரம் விதிமுறை போடுவார்.

 

தன் வயிற்றில் பிறந்திருந்த பெண் விடயத்திலும் அவரது  தேவையேயில்லாத இந்தக் கொள்கையைத் தூக்கிச் சுமப்பது தான் விந்தை. 

 

‘பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதற்கு சிறந்த உதாரணமாக இருப்பார்’ என்று விஜயா அடிக்கடி இனியாவிடம் பேசிக்கொள்வதுண்டு.

 

இதோ நேரம் பதினொன்றைக் கடந்தும் சாப்பிடச் செல்ல முடியாமல், பயத்துடன் சமையலறையிலேயே தண்ணீரை குடித்துக்கொண்டு, மதிய உணவைச் சமைத்துக் கொண்டிருக்கிறாள் அந்த வீட்டின் பெண் வாரிசு.

 

அந்த நேரம் உள்ளே வந்த விஜயாவோ “இனிக்குட்டி இன்னுமா நீ சாப்பிட போகல, சாப்பிடுன்னு சொல்லிட்டு தான போனேன்” என்றாள்.

 

“இல்லண்ணி பசிக்கல, இதோ மதிய சமையல் முடிஞ்சதும் சேர்த்து சாப்பிட்டுகிறேன்” என்றவளிடமிருந்து கரண்டியை வாங்கிய விஜயாவோ, 

 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், ரெண்டையும் சேர்த்து ஒன்னா சாப்பிட விட்டுடுவாங்களாக்கும், இப்பயே போய்ச் சாப்பிட்டுடு இல்லை இன்னைக்கு பூரா பட்டினி தான்” என்றவளின் பேச்சை மறுக்க முடியாமலும் பசியை பொறுக்க முடியமாலும் உணவு மேசையை நோக்கி அவளது கால்கள் தன்னால் நடை போட்டது.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டுக் கைகழுவப் போனவளை நிறுத்திய விஜயாவோ, “நினச்சேன் இப்படித்தான் அணில் மாதிரி கொரிச்சிருப்பன்னு எவ்வளவு வேலை செய்ற அதுக்கேத்த போல சாப்பிட வேண்டாமா?” என்க, விரக்தி புன்னகை இனியாவின் உதட்டில்.

 

அவள் கூடவே இருக்கும் விஜயாவிற்கு அது தெரியாமல் போகுமா? உள்ளே வலிக்கவே செய்தது.

 

“அத்த அவங்க தம்பி கூட ஃபோன்ல பேசிட்டு இருக்காங்க இனியா, இப்போதைக்கு வரமாட்டாங்க. இன்னும் ரெண்டு இட்லி வெச்சிக்கடா?” என்றவள் இன்னும் இரண்டு இட்லியை வைக்கப் போக, சரியாக அந்த நேரம், தம்பியுடன் ஆசையாய் பேசிமுடித்த வள்ளியம்மை வீட்டினுள் நுழைந்திருந்தார்.

 

“என்ன இது பொட்ட புள்ள இப்படி அள்ளிச் சாப்பிடுறது, அளவா சாப்பிடணும். சாப்பிட்டது போதும் எந்திரி” என்றவர், இட்லியை வைக்கப்போன விஜயாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டார்.

 

“என் தம்பிக்கு அளவான உடம்பா இருந்தா தான் பிடிக்கும், நீ இப்படி சாப்பிட்டு குண்டாகிட்டா அவன் என்ன பண்ணுவான்” என்றவரை விஜயாவோ வெட்டவா குத்தவா என்று தான் பார்த்து வைத்தாள்.

 

‘அந்தக் கிழட்டு கபோதிக்கு பொண்ணு கிடைக்கிறதே பெரிசு இதுல பொண்ணு ஒல்லியா வேற வேணுமாமா? விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குது. எனக்கு வர்ற கோபத்துக்கு இந்தக் குடும்பத்துக்கு சூனியம் வைக்கப் போறேன் பாரேன்’ என்பதே விஜயாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. 

 

“போ போய் கை கழுவிட்டு வா” என்றபடி அங்கே இருந்த இருக்கையில் அமர, இனியாவோ சமையறைக்குள் விரைந்தவள், அடுத்த இரண்டு நிமிடத்தில் தாயின் முன்னே நின்றிருந்தாள்.

 

“இதோ பாரு, இப்போ என் தம்பி உன்கூட பேச வருவான். நல்ல அழகான புடவை ஒன்ன எடுத்துக் கட்டிட்டு தலைல பூ எல்லாம் வெச்சிக்கோ, காளைக்கு மல்லி பூனா ரொம்ப பிடிக்கும். அப்பறம் நாளைல இருந்து அவன் உன் பொறுப்பு, இத்தனை நாளா நமக்கான நம்ம மரியாதைக்காகக் கல்யாணம் பண்ணாம இருந்தவன், கண்ட கழிசடை கூடக் கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் ஆகிடிச்சு. இனிமேல் அங்க எல்லாம் போகாம நீ தான் பார்த்துக்கணும்” என்றவர் எழுந்து சென்றுவிட, அப்படியே நின்றிருந்த இனியாவின் மேல் கை வைத்திருந்தாள் விஜயா.

 

“இவங்க நிஜமாவே உன்ன பெத்தவங்க தானா இனியா?” என்று எப்போதும் கேட்கும் அதே கேள்வியை இன்றும் கேட்க, 

 

“எனக்கும் அதே டவுட் இருக்கத்தான் செய்து அண்ணி, ஆனா உண்மைய யாரால மாத்த முடியும். விடுங்க இந்த ஜென்மத்துல எனக்கு இதான் விதிச்சிருக்கு போல” என்றவள் பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

 

போகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த விஜயாவின் மனதிலோ ‘பைரவா, அவ வாழ்க்கை சரியாக்கிடுப்பா’ என்ற வேண்டுதலே இருந்தது.

 

_____________ 

 

அன்று மாலை, தாய் மாமன் முரட்டுக்காளையின் முன்னே பயத்துடன் நின்றிருந்தாள் இனியாள்.

 

“என்ன செல்லம் நீ, உனக்காக மாமா பாரு முடிக்குச் சாயம் எல்லாம் பூசி எப்படி இளமையா வந்திருக்கேன்… நீ என்னனா அந்தப் பக்கம் திரும்பி நிக்கிற, மாமாவ பாருடா” என்றவர்  திரும்பி நின்றிருந்தவளருகே குனிய, 

 

அவளோ கழுத்தில் அவரது மூச்சுக்காத்துப் பட்டதில் அருவெறுத்து இரண்டெட்டு பின்ன நகர்ந்து அவரைப் பார்க்க, கோணல் சிரிப்புடன் அவள் முன்னே நின்றிருந்தார் அவர்.

 

“அட இதுக்கே பயப்பட்டா எப்படி? நாளைக்கு நமக்கு முதராத்திரி செல்லம். ஒன்னும் கவலை படாத மாமா உனக்கு எல்லாம் சொல்லித்தறேன்” என்று அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்ததில், என்றும் இல்லாத எண்ணமாய் இப்போதே செத்துவிடலாமா என்று கூட அவளுக்குத் தோன்றியது.

 

“அட என்ன இனியா செல்லம் சந்தேகமா பாக்குற, உன் மாமா அதுல எல்லாம் படு கெட்டிக்காரன். நம்ம ரக்காயி, மங்கம்மா, வடிவு கிட்ட எல்லாம் கேட்டுப் பாரு, உன் மாமனோட ஆட்டம் என்னனு தெரியும்… ஊர்ல சமஞ்ச முக்கவாசி பொண்ணுங்க உன் மாமனுக்கு முந்தி விரிச்சவளுங்க தான். ஆனா பாரு கட்டிக்கிட்டு தொடப் போறது உன்ன மட்டும் தான்” என்றவரை புழுவைவிடக் கேவலமாகத்தான் பார்த்து வைத்தாள். 

 

மகளாய் பார்க்க வேண்டியவளை மஞ்சத்தில் பார்க்க நினைப்பவரை என்ன சொல்வது.

 

இத்தனை நாளில் அவர் பார்வை மட்டுமே அருவெறுப்பை தரும். ஆனால் இன்றோ பேச்சும் அருவெறுக்க வைத்திருந்தது.

 

அவளுக்கோ அழ வேண்டும் போலிருந்தது. அதன் பின் அவர் பேசிய வார்த்தைகள் எல்லாம் ஒரு பதினெட்டு வயது வளர்ந்த குழந்தை கேட்கக் கூடாத வார்த்தைகள் தான்.

 

எப்போதடா விடுவார் என்றே அவள் வேண்டுதல் இருக்க, கடவுளும் துணைக்கு அவளுடைய அண்ணனை அனுப்பியிருந்தார்.

 

இளையவன் கிரிதரன் வந்து, தந்தை அழைத்ததாகச் சொல்லியதில், முரட்டுக்காளையோ இனியாவுக்கு பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்து அங்கிருந்து சென்றிருந்தார்.

 

அவர் சென்றதும் தான் தாமதம், அங்கேயே மடங்கி அமர்ந்தவள் அழுது கரைந்தாள் மௌனமாக…

 

அழுகையை கூட மௌனமாக வெளியிட வேண்டிய கட்டாயத்தில் அவள்.

 

தன்னைத் தொட்ட கரத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள், எழுந்து விஜயாவை அணைத்துக்கொண்டாள்.

 

அழுகை விம்மி வெடிக்க, “நான் செத்துடட்டுமா அண்ணி? அருவெறுப்பா இருக்கு, எனக்கு இந்த வாழ்க்கை வேணாண்ணி” என்று அழ,

 

அவள் முகத்தை நிமிர்த்திய விஜயாவோ “எந்தத் தப்பும் பண்ணாம நீ ஏன்டா சாகனும், நீ இன்னும் நூறு வருசத்துக்கு நல்லா வாழவ. எதப் பத்தியும் யோசிக்காம இங்க இருந்து போயிடுடா? சென்னைல என் தோழி ஒருத்தி இருக்கா அவ விலாசம் எங்கிட்ட இருக்கு தறேன், எப்படியாச்சும் அவகிட்ட போயிடுடா. இந்த நரகம் உனக்கு வேணாம், சாகுறதா இருந்தாலும் போராடி சாகனும். இனி வாழ்வோ சாவோ இந்த நரகத்துல மட்டும் வேணா, போ இந்த உலகம் உனக்கு இனிமேல் சந்தோசத்தை தான் தரும்” என்றவள் அழுகையுடன் முடிக்க, 

 

இனியாவும் மௌனம் என்னும் சம்மதத்துடன் அண்ணியை அணைத்துக்கொண்டாள்.

 

________________

 

அங்கே அந்தக் காட்டில் அமர்ந்து தன் முன்னே குமிலிடும் ஏதோ ஒரு திரவத்தில், எங்கோ ஓரிடத்தில் நடக்கும் விடயம் காணொளியாய் காட்சியளிக்க, அதில் பார்வையை செலுத்தியிருந்த மார்த்தாண்ட வளவனின் இதழ்கள் புன்னகைக்க, மகிழ்ச்சியில் அந்தக் காடே அதிரும் வண்ணம் சத்தமாய் சிரித்தான்.

 

“நினைத்தது கைக்கூடும் நாள் வந்துவிட்டது. காலபைரவா உன் கோட்டைக்குள் இருப்பவளை கவர்ந்து செல்ல முடியாதென்று இறுமாப்புடன் இருந்தாயே! எங்கே அவையெல்லாம். உன் முன்னே நின்று எள்ளி நகையாடுகிறதோ? என் பொக்கிஷம் உன்னைத் தாண்டி என்னிடம் வருகிறாள். இனிமேல் என்னுயிருக்கு உடல் கொடுப்பதில், இந்த உலகை ஆள்வதில் எந்தத் தடையுமில்லை. கை கட்டி நடப்பதை வேடிக்கை பார்” என்று உறக்கச் சொன்னவன், 

 

கையில் இருக்கும் அந்த மண்டையோட்டு மாலையை அழுத்திப் பிடித்தபடி ஏதேதோ மந்திரங்களை உச்சரிக்க, தன்னால் தோன்றிய மின்னல் ஒன்று அந்த இடத்திலிருந்து அவனை மறைத்திருந்தது.

 

காதலைத் தேடும்..

 

ஆஷா சாரா… 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment