Loading

காதலொன்று கண்டேன்!

 

 

 

தேடல் 36

 

 

 

மறுநாள்,பொழுது விடிந்தும் எழுந்து பையன் வேலைகளை செய்திட,வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

 

 

 

கேட்ட வண்டி சத்தமே வந்திருப்பது யார் என்பதை புரிய வைத்திருக்க,அவனிதழ்களில் மென் சிரிப்பு.

 

 

 

சமயலறையில் இருந்தவனோ,தன்பாட்டில் வேலைகளை செய்திட,வாசற்கதவை திறந்தது என்னவோ,வேல்முருகன் தான்.

 

 

 

“என்னடா விடிஞ்சதுமே விடியாத மொகத்தோட இருக்க..?”அவரின் நக்கல் எல்லாம் அவனின் கருத்தில் பதியவே இல்லை.

 

 

 

முகமோ கோபத்தில் சிவந்திருக்க,விழிகளிலும் அதன் வெளிப்பாடு.

 

 

 

“அவன் எங்க..?” கேட்டுக் கொண்டே உள் நுழைந்தவனின் விழிகளில் அவள் அகப்பட,அவள் மீதும் தீ வீசியது அவன் பார்வை.

 

 

 

அவன் பார்வையில் நடுக்கமெடுக்கு குழந்தையை தன்னுடன் அணைத்துக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்திருந்தாள்,ருக்மணி.

 

 

 

அவளின் காலைக் கட்டியவாறு அவனை ஏறிட்டுப் பார்த்த குழந்தையைக் கண்டும் மனம் இறங்கவில்லை,தோழனுக்கு.அவ்வளவு எரிச்சலும் கோபமும்.

 

 

 

சமயலறைக்குள் நுழைந்தவனோ,முகத்தில் எந்த உணர்வையும் காட்டாதிருந்த பையனின் முன் வந்து நின்று கன்னத்தில் விட்டான்,ஒரு அறை.

 

 

 

அவனின் அறையில் அதிர்ந்தாலும் பின்னர் மென் புன்னகையொன்றை பையனின் இதழ்கள் சிதற விட,அவனின் நிதானத்தில் ஆத்திரம் எல்லை கடந்தது தோழனுக்கு.

 

 

 

இயல்பான அவனின் நிதானம்,தோழனை வெகுவாய் சோதித்தாலும்,ஈற்றில் ஆற்றாமையில் அவனே தனது பிடியை உதறித் தள்ள வேண்டியிருந்தது.

 

 

 

“அப்பா இல்ல..அந்தாளு உன் அப்பா இல்லன்னு சொல்லிட்டு..அந்தாளோட அண்ணன் பையன் பெத்த புள்ளய உன்னோட புள்ளன்னு அவங்க கிட்ட சொல்லி இருக்க..இப்போ எங்கடா போச்சு உன்னோட ஈகோ கோவம் எல்லாம்..?”

 

 

 

“எதுக்குடா இப்டி பண்ற..?நீ வருவன்னு யாழ் எத்தன வருஷம் உனக்காக காத்துகிட்டு இருந்துருக்கும்..இப்போ போய் அந்த பொண்ண மொத்தமா ஒடச்சிட்டியே..”

 

 

 

“உன் பெரிப்பா பையன் அந்த பொறுக்கி இந்த பொண்ண ஏமாத்தினதுக்கு நீ அந்தப் பொண்ணுக்கு தங்க எடம் கொடுத்தது தப்பு இல்ல..ஆனா இப்போ..? எதுக்குடா அந்த பொண்ண உன் பொண்டாட்டியா நடிக்க சொல்லியிருக்க..? தங்கச்சின்னு தான பேசுவ..? எங்கடா போச்சு அது அவங்க வந்தப்போ..?”

 

 

 

“ஏன்டா இப்டி பண்ற..?அந்தப் பொண்ணோட நெலமைல இருந்து யோசிச்சு பாத்தியாடா..? மனசால எவ்ளோ துடிச்சி போய்ருக்கும்னு உனக்கு புரியலயா ஆரி..?” என்க,பையனுக்கும் புரியாமல் இல்லை,அவள் நிலமை.

 

 

 

அவளுக்கு காயத்தை கொடுத்தாலும்,அவளுக்கு வலிப்பதை விட அது வலிப்பது என்னவோ,அவனுக்குத் தான்.அத்தனை காதல் அவள் மீது;சொல்லிலடங்கா ப்ரியம் யாழவள் மீது.

 

 

 

“இதுலயும் ஏன்டா மதிய வச்சு அவளோட அத்த பையனையும் ஏமாத்தி இருக்க..? அவன் வேற அன்னிக்கி பேசப் போனப்போ காது கொடுத்து கேக்காம பொய்ட்டான்..மதி எனக்கு தெரிஞ்ச டாக்டர்னு உனக்கு இன்டர்ட்யூஸ் பண்ணி வச்சது தப்பா போச்சுல..அவன உன்னோட தேவக்காக ரொம்ப நல்லா யூஸ் பண்ணி இருக்கடா..அவனும் உன்ன நம்பி பொய்யெல்லாம் சொல்லி..முடில ஆரி..”

 

 

 

“அதுவும் அந்த பொண்ண மறந்துட்டியாம்..மறக்க முடியுமாடா உன்னால..? மறக்குறத விடு நெனக்காம இருக்க முடியுமாடா உன்னால..?” தோழனின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியா மௌனியானான்,பையன்.

 

 

 

அவளை மறப்பதைப் பற்றி சிந்திக்க,அவளை நினையாது இருக்க பிரயத்தனப்பட வேண்டுமே.அதுவே அவனால் இயலாத காரியம்.சுழலும் நொடிகளில்,அவள் நினைவு அவனை சிதறடிக்கிறதே.அதை எங்கனம் மறுக்க அவனும்..?

 

 

 

“அப்டியே மொத்தமா பழசு எல்லாத்தயும் மறந்துட்டாலும் திரும்ப நீ யாழ தான்டா லவ் பண்ணுவ..அவ்ளோ லவ் பண்ற அந்த பொண்ண..பாக்கற எனக்கே புரிது..” கத்தினான்,தோழன்.

 

 

 

அது உண்மை தான்.அவன் நினைவுகளை மறந்தாலும்,அவள் மீதிருக்கும் உணர்வுகளை தொலைத்திட முடியாது.அவன் தொலைந்திருக்கும்,அவ்வுணர்வலைகள் நிச்சயம் மறுமுறை அவனை அவளிடம் மட்டுமே,தொலைய வைத்திடும்,காலங்கள் கடந்தோடினாலும்.

 

 

 

“நீ பண்றது தப்பு ஆரி..ரொம்பத் தப்பு..உன் பக்கம் மட்டும் இருந்து யோசிச்சிச்சிட்டு அந்த பொண்ணோட மனச பத்தி யோசிக்க மாட்டேங்குற..காலம் பூரா அந்த பொண்ண ஹர்ட் பண்ணப் போற நீ இப்போ பண்ற பைத்தியக்காரத்தனமான வேலயால..”

 

 

 

“எதுக்குடா இப்டி பண்ற..? யாழோட அத்த பையன மீட் பண்ணி எல்லா உண்மயயும் சொல்லப் போனா அவன் காது கொடுத்து கேக்கவே மாட்டேங்குறான்..அந்த அளவுக்கு அவனுக்கு உன் மேல கோவத்த உருவாக்கி வச்சிருக்க நீ..”

 

 

 

“சரின்னு அத விட்டுட்டு யாழ மீட் பண்ணப் போலாம்னு பாத்தா உன் மேல சத்தியம் வாங்கி என் வாய அடச்சிட்ட..அப்றம் எப்டி தான் டா அந்த பொண்ணுக்கு உண்ம தெரிய வரும்..?”

 

 

 

“உண்ம தெரிய வர வேணாம்..” இவ்வளவு நேரம்,பொறுமையாய் இருந்தவன் அழுத்தம் திருத்தமாய் பதில் சொல்ல,அந்த வார்த்தைகளில் அத்தனை உறுதியும் கூட.

 

 

 

“என்ன பத்தின எந்த உண்மயும் நம்மள தவிர வேற யாருக்கும் தெரிய வர வேணாம்..”தெளிவாய்த் தான் இருந்தான்,பையன்.

 

 

 

அவனுக்கு அவள் வாழ்க்கை முக்கியம்.அவன் வாழ்வை விட,அவனுக்கும அவன் காதலுக்கும் அவள் வாழ்க்கை முக்கியம்;அவள் முக்கியம்.

 

 

 

அது தான் இப்படி நடந்து கொள்கிறான்,அவனும்.

 

 

 

தோழனுக்கு கோபமாய் வந்தது பையன் மீது.அவனின் செயலை நினைக்கையில் உச்சகட்ட ஆத்திரம்.

 

 

 

அவளின்றி அவனில்லை என்கின்ற பட்சத்தில்,அவள் வாழ்வுக்காக அவன் உயிர்ப்பை விட்டுக் கொடுக்க முயல்பவனை எங்கனம் சரியென்பான் தோழனும்..?

 

 

 

அவன் தோழமைக்கு அது பிழை.ஆனால்,பையனின் காதலைப் பொறுத்த வரையில் அது சரி;மிகச்சரி.

 

 

 

தோழனும் அதன் பின்னர் எதுவும் பேசிடவில்லை.எப்படியும் அவன் தன் பேச்சைக் கேட்கப் போவதில்லை என நொந்தவனோ எரிச்சலுடன் கிளம்பிட,எதிர்ப்பட்ட ருக்மணியை சுட்டெரித்தது,அவன் பார்வை.

 

 

 

வேல்முருகனோ சோபாவில் சாய்ந்தவாறே உறங்கி இருக்க,அதில் அவன் இதழ்களில் புன்னகை.

 

 

 

சத்யா வண்டியைக் கிளப்பும் சத்தம் கேட்க,பையன் வாசலுக்கு விரையும் முன்னமே வண்டியை விரட்டி இருந்தான்,அவன் உச்ச வேகத்துடன்.

 

 

 

“இவன் ஒருத்தன்” மெல்லிய புன்னகையுடன் நினைத்தவனோ,அறைக்குள் நுழைய,”டேடி” என்று அவனின் காலைக் கட்டிக் கொண்டது,அந்த சிறு வாண்டு.

 

 

 

“இவன் உங்கள டேடின்னு கூப்டு பழக இல்லன்னா அவங்க இவ்ளோ தூரம் உங்கள நம்பி இருக்க மாட்டாங்கலண்ணா..? கண்டிப்பா திரும்ப தேடி வந்து இருப்பாங்கல..” கலங்கிய விழிகளுடன் ருக்மணி வினவ,அவனோ பதில் சொல்லாது அமைதி காத்தான்.

 

 

 

“டேடி இவன் கூப்டத கேட்டும் இன்னும் நம்பாம இருக்கா..இவன் மட்டும் அப்டி கூப்டலனா சத்தியமா உண்ம எல்லாத்தயும் கண்டு புடிச்சி இருப்பா..” கூற வந்த வார்த்தைகள் அவன் தொண்டைக்குழியில் நின்றன.

 

 

 

“டேடி நா தான் வெளயாட்டுக்கு சொல்ல சொன்னேன்..என்ன பொறுத்த வர அப்பா தான் எமோஷன்..அதான் சும்மா சொன்னேன்..அதுவே எனக்கு வசதியாப் போச்சு..” என்றவனோ குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கி விட,அதுவோ அவளின் காலைக் கட்டிக் கொண்டு “ம்ம்மா ப்பா” என்க,மெதுவாய் சிரித்தவனோ தன்னறைக்குள் கதவடைத்துக் கொண்டான்.

 

 

 

நினைவுகள் பின்னோக்கி சுழன்றன.

 

 

 

அன்று அந்த மழை நாளின் பின்னர்;அவளின் சம்மதம் கிடைத்த பின்னர்,அவன் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை.

 

 

 

இதுவரை இப்படி ஒரு மகிழ்ச்சியை அவன் வாழ்வில் கண்டதே இல்லை.நிறைவுமாய் பூரிப்புமாய் சுற்றித் திரிபவனைக் கண்டு வேல்முருகனே வியந்து போவதுண்டு.சத்யா கலாய்த்தே ஒரு வழி செய்து விடுவான்.

 

 

 

அடுத்த மாதம் அவள் வீட்டில் திருமணத்தை பற்றி மேற் கொண்டு பேசலாம் என்றிருக்க,அதற்குள் வேல்முருகனின் தேகசுகம் சீரின்றிப் போக,அதற்கு சிகிச்சையளித்திட வெளியிடம் செல்ல வேண்டிய கட்டாயம்.

 

 

 

முதலில் உள்நாட்டில் சிகிச்சைக்கு முயன்றாலும்,அது பையனுக்கு திருப்தியைத் தர மறுத்திடவே,அவரை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றது.

 

 

 

அதற்கு முன்னர்,அவளின் தந்தையின் அனுமதியுடன் அவளை ஒரே ஒரு தடவை சந்தித்துப் பேசினான்.அகம் நிரம்பிய காதலில் கொஞ்சத்தை விழிகளில் வழிய விட்டு,தனக்காக காத்திருக்கச் சொன்னான்.

 

 

 

என்றும் மறக்காது,சிறு தவிப்பும் ஏக்கமும் போட்டிட் போட,விலகலை ஏற்கவும் முடியாமல் அதற்கென்று தன்னைத் தடுக்கவும் முடியாமல்,நேசப் பூக்களின் மிச்சங்களை விழிகளில் கோர்த்து,”போய் சீக்கிரம் வந்து விடு” என்பதைப் போல் அவள் பார்த்த பார்வை.

 

 

 

ஆயுள் ரேகை தீர்ந்தாலும் சத்தியமாய் அவளின் பார்வை அவன் நினைவில் இருந்து அழியாது;அழிக்கவும் முடியாது.

 

 

 

அவனுக்குமே வலி தான்.தவிப்பு தான்.பிடித்தமில்லை தான்.ஆனாலும்,எதையும் வெளிப்படுத்தி நிற்கவில்லை,அவன்.

 

 

 

அதன் பின்னர் அவன் வெளிநாடு செல்ல,வேல் முருகனுக்கான சிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டது.

 

 

 

அவரின் தேகசுகம் முன்பை விட சீரில்லாது போக,பையனுக்கு அவருடன் இருக்க வேண்டிய கட்டாயம்.ஒற்றை ஆளாய் அனைத்தையும் சமாளிக்க வேண்டியிருக்க,எங்கு அவளுடன் பேசினால் தான் பலவீனம் அடைந்து விடுவோமோ எனப் பயந்தான்.

 

 

 

அவளைக் காண மனம் தவியாய்த் தவிக்க,அதை தடுக்க முடியாமல் திணறப் போவது தான் என்பது புரிந்து அவளுடன் பேசவில்லை,அந்த ஒரு மாத காலம்.

 

 

 

அவன் நினைத்தே இராத அளவு அவனை பலவீனமாக்கி வைத்திருந்தாள்,பாவிமகள்.

 

 

 

அதன் பின்னர், ஒரு மாதத்துக்கு பின்னர் அவர்கள் ஊருக்கு வர முதல் வேலையாக பையன் நினைத்திருந்தது அவள் வீட்டுக்குச் சென்று பேசிடத் தான்.

 

 

 

அதற்குள் இடியாய வந்து இறங்கியது,அவனுக்கு புற்று நோய் இருக்கும் செய்தி.

 

 

 

சத்தியமாய் அவன் இப்படியொன்றை எதிர்ப்பார்த்தே இருக்கவில்லை.அவளைப் பார்த்திட வெகுநாட்களுக்கு பின்னர்,ஆவலாய் அவன் கிளம்பிக் கொண்டிருக்க,அந்த சமயத்தில் எதற்குமென அவன் எடுத்த பரிசோதனையின் அறிக்கையைக் கொண்டு மருத்துவர் அவனை அழைத்துக் கூறியது,பையனின் வாழ்க்கைய மொத்தமாய் புரட்டியே போட்டு விட்டது.

 

 

 

விழிகளில் நீர் கட்ட இடிந்தே போய் விட்டான்,அவன்.அவன் வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருந்து இருந்தால்,அவன் இத்தனை தூரம் உடைந்திருக்க மாட்டான்.அவனுள் இருந்தது,அவன் வாழ வேண்டும் என்கின்ற ஆசை அல்லவே,அவளுடன் வாழ வேண்டும் என்கின்ற ஏக்கம் ஆயிற்றே.

 

 

 

அன்று அவளை சந்திக்கத் தவித்த மனதை அடக்கினாலும்,தூரத்தில் இருந்து அவளைப் பார்த்து விட்டே இல்லம் திரும்பியிருந்தான்.

 

 

 

முடிவு எடுக்க முடியாமல் அவன் திண்டாட,இடைப்பட்ட நாளில் ஒருமுறை ஊரில் அவன் கட்டி முடித்திருந்த இல்லத்துக்கு தற்செயலாய் அவளை அழைத்துச் சென்றிருந்தார்,அவளின் தந்தை.

 

 

 

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருக்க,அதில் அவனின் வீட்டையும் காட்டிக் கொடுத்திடவே,அந்த வீட்டைப் பராமறிக்கும் பையனுடன் அவள் பேசியது.அவனுமே,பையனைத் திருமணம் செய்யப் போகிறவள் என்று அவள் மீது பாசம் காட்ட,அவன் வாயிலாகவே அவள் தன் வீட்டைப் பார்க்க வந்த விடயம் பையனின் செவி சேர்ந்தது.

 

 

 

அவன் முடிவெடுக்க யோசிக்கையில் விடயம் பெரிதாகச் செல்லும் என ஊகித்தவனோ,அதன் பின்னர் அவன் எதைப் பற்றியும் யோசித்திடவில்லை.அவள் வாழ்க்கையே அவனுக்கு முக்கியமாகப் பட்டது.

 

 

 

தாயுமானவரிடம் விடயத்தை மறைத்து தனக்கு திருமணத்தில் பிடித்தமில்லை என்று அவரிடமே கூறச் செய்தான்.வாய் வார்த்தைக்காக கூட அவனால் அதைச் சொல்ல முடியாது என்று நினைத்து விட்டான் போலும்.அது தான் உண்மையும் கூட.

 

 

 

வேல்முருகனுக்கு அவன் அவளை நேசிப்பது தெரிந்தாலும்,பையனின் பேச்சுக்கு மறு கேள்வி கேட்கவில்லை,அவர்.ஏதோ ஒரு காரணம் இருப்பதாய் நம்பினார்.அவனாக சொல்லட்டும் என்று விட்டும் விட்டார்.

 

 

 

அதன் பின்னர்,அவனுக்கு மாற்றம் தேவைப்பட அவனோ வேறிடத்துக்கு வேலையையும் தேடிக் கொண்டு வீடு மாறி சென்று விட,அவள் தன்னை மறந்து விடுவாள் என்கின்ற எண்ணமே மனதில் இருந்தது.

 

 

 

எந்த இடத்தில் அவள் தன்னை தேடியும் கண்டு பிடித்து விடக் கூடாது என்று தான்,அவனின் சொந்தப் பெயரை சமூக வலைதளங்களில் கூட பயன்படுத்தாது.

 

 

 

அவனைப் பற்றி அனைத்தையும் அறிந்த சத்யாவையும் மிரட்டி வைத்திருக்க,அவனும் தோழனின் பேச்சை மீறவில்லை.

 

 

 

காலப் போக்கில் அவளுக்கு தன் மீது இருக்கும் பிடித்தம் மரித்துப் போய்,வேறு யார் மீதாவது காதல் பிறக்கும் என்று நம்பியவன் தெரிந்து இருக்கவில்லை,அந்த ஒற்றை நொடியில் அவன் மீதிருந்த எல்லா மதிப்பும் காதலாய் மாறி விட்டிருந்தது.

 

 

 

சத்தியமாய் அவன் நினைத்திருக்கவில்லை,தன்னை நம்பி அவள் காதலையும் சேமித்துக் கொண்டு காத்திருப்பாள் என்று.

 

 

 

அதுவும் முழுதாய் இரண்டு வருடங்கள்..?

 

எந்த நம்பிக்கையில் தன் ஒற்றை வார்த்தையை கையில் பிடித்து காத்திருந்தாள் என்று நினைக்கையில் சத்தியமாய் அவனுக்கு புல்லரித்துப் போகும்.

 

 

 

இடையில் அவனின் தந்தை வழி சொந்தங்கள் வேறு வந்து,அவர்களின் அலுவலகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்த வேல்முருகனின் பேச்சை மீற முடியாமல்,அவன் பெயரில் இருக்கும் கம்பனிகளின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தான்,துளியும் விருப்பமின்றி.

 

 

 

அதன் பின் நாட்கள் அவள் நினைவுகளுடன் வலியோடு கடந்தது.வேல்முருகனுக்கு தெரியாமல் அவன் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும்,பையனுக்கு ஏனோ நம்பிக்கை இருக்கவில்லை.

 

 

 

காதல் தேடும்.

 

 

 

2025.04.30

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இதான்னு கெஸ் பண்ணிட்டேன். ஆனா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. அவனோட காதல் அவ்வளவு உணர்வுப்பூர்வமா இருந்தது. அந்த காதலையே விட்டுத்தர ரெடி ஆகிட்டான். பாவம் யாழ். இதல்லாம் தெரியாம ஃபீல் பண்றா.

    என்ன நடக்கும். கல்யாணமா? யார் கூட?