Loading

அத்தியாயம் 2

“வயசு இருபத்திமூணாகுது. ஆனா, இன்னமும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.” என்று யாழ்மொழியை திட்டியபடியே கலைந்து கிடந்த பொருட்களை அடுக்கி வைக்கத் துவங்கினாள் மென்மொழி.

“ஹ்ம்ம், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மொழி. இதுல, உங்க அப்பா அம்மா மேலதான் நிறைய தப்பு இருக்க மாதிரி எனக்குத் தோணுது. பையன் மேல பாசம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக பொண்ணுங்களை தனியா விட்டுட்டு எப்படி இருக்காங்க? மேபி, அவங்க கூடயிருந்து எடுத்து சொல்லியிருந்தா, யாழ் வயசுக்கேத்த மாதிரி யோசிச்சு நடந்துருப்பாளோ என்னவோ!” என்று சுடரொளி கூற, அதை மறுக்க முடியாததால் அமைதி காத்தாள் மென்மொழி.

சூழலை மாற்ற எண்ணிய சுடரொளியோ, அந்த அறையைச் சுற்றி பார்க்க, வெளியில் இருந்ததைப் போலவே பல செய்திக் குறிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ஒன்றையே மையப்படுத்தி இருந்தன.

குமரிக்கண்டம்!

“குமரிக்கண்டமா? குமரிக்கண்டம்னா அழிஞ்சு போன நாடுதான? இதைப் பத்தி சில யூ-ட்யூப் வீடியோஸ் பார்த்துருக்கேன். இதையா உன் தாத்தா ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாரு? அப்போ இது கான்ஸ்பிரசி தியரி இல்லையா?” என்று சுடரொளி ஆச்சரியமாக வினவ, மென்மொழியோ சிரிப்புடன், “உண்மைன்னு நம்புறவங்களுக்கு உண்மை. கற்பனைன்னு நினைக்குறவங்களுக்கு கற்பனை!” என்று தத்துவம் பேசினாள்.

உடனே, மென்மொழியின் தலையை ஆட்டிப் பார்த்து விட்டு, “நல்லாதான இருக்க? இந்த வீட்டுக்குள்ள வந்தாலே நீ, நீயா இருக்க மாட்டிங்குற. ஒருவேளை, உங்க தாத்தா ஆவி எதுவும் உள்ள புகுந்துடுச்சோ?” என்று தீவிர பாவனையுடன் சுடரொளி வினவ, அவளின் முகபாவனையில் ஏதோ முக்கிய விஷயத்தை பகிரப் போவதாக எண்ணிக் கூர்ந்து கவனித்த மென்மொழியோ, அவளின் இறுதி வரியில் வெறியாகி, “என்னை கேலி பண்றது இல்லாம, எங்க தாத்தாவை வேற இழுக்குறியா?” என்று தோழியின் தலையில் கொட்டினாள்.

“பின்ன என்னடி, வயசான காலத்துல பேரன் பேத்தியை பார்த்துட்டு நிம்மதியா இருக்குறதை விட்டுட்டு, இப்படி ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்துருக்காரு.” என்று சுடரொளி கூற, “அவரோட பேஷன் இது சுடர். நானும் கூட இதே கேள்வியை அவருக்கிட்ட கேட்டுருக்கேன்.” என்று மென்மொழியோ தாத்தாவுடன் நடந்த உரையாடல் நிகழ்விற்குச் சென்று விட்டாள்.

“தாத்தா, நீங்க ஏன் எப்போ பார்த்தாலும் இந்த நியூஸ் பேப்பரையும், பழைய ஓலைச்சுவடியையுமே பார்த்துட்டு இருக்கீங்க? எங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்ல!” என்று சிறுவயது மென்மொழி கேட்க, அத்தனை நேரம் தன் மூக்கு கண்ணாடி வழியே பழைய செய்தித்தாள்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆராவமுதனோ, “மொழிம்மா, இதெல்லாம் தாத்தாவோட பல வருஷ உழைப்புடா. நம்ம மறந்த, மறைஞ்சு போன விஷயங்களை திரும்ப நம்ம மக்களுக்கு எடுத்துச் சொல்லணும்டா.” என்று கண்களில் கனவு மின்ன பேசினார்.

இதோ இப்போது கூட அந்த கனவு மின்னும் கண்கள் நினைவில் வந்து போயின மென்மொழிக்கு.

மென்மொழி தன் நினைவுகளில் மூழ்கிப் போயிருக்க, சுடரொளி மீண்டும் சுற்றிப் பார்க்கத் துவங்கினாள்.

அங்கு சரிந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைக்கும் போதுதான் அதைக் கவனித்தாள்.

குமரிக்கண்டத்தை பற்றிய தமிழ் புத்தகங்களுக்கு இடையே ‘லெமூரியா’ பற்றிய ஆங்கில புத்தகங்களும், சஞ்சிகைகளும் இருந்ததைப் பார்த்த சுடரொளியோ, “உன் தாத்தா உண்மையிலேயே நிறைய ஆராய்ச்சி பண்ணியிருக்காரு மொழி.” என்று ஆச்சரியமாகக் கூறிவிட்டு, அவர் விட்டுச்சென்ற குறிப்பேட்டை படிக்க முயன்றாள்.

ஆனால், அவரின் கையெழுத்து புரியாமல் திக்கித் திணறி வாசிக்க, நிகழ்விற்கு வந்த மென்மொழியோ சிரித்தபடி, “தமிழை குதறி வைக்காத. அதுல என்ன இருக்குன்னு நானே சொல்றேன்.” என்றவள் குமரிக்கண்டத்தைப் பற்றி அவளின் தாத்தா எழுதி வைத்ததைக் கூற ஆரம்பித்தாள்.

“இப்போ இருக்க நம்ம இந்திய பெருங்கடல்ல முற்காலத்துல ஒரு பெரிய கண்டம் இருந்ததா நம்ம இலக்கியங்களான தொல்காப்பியம், பரிபாடல், அகநானூறு, புறநானூறு சொல்லுது. அந்த கண்டம் கடல்கோளால கடலுக்கு அடியில் புதைஞ்சதா சிலப்பதிகாரத்துல கூட குறிப்பு இருக்கு. இந்த நிலப்பரப்புல 49 நாடுகளும், பஃறுளி ஆறு, குமரி ஆறுன்னு ரெண்டு ஆறுகளும் இருந்ததாவும் கூறப்படுது. மேரு மலைன்னு ஒரு மலை இருந்ததா சீன வரலாற்று குறிப்புல கூட குறிப்பிடப்பட்டிருக்கு. பாண்டிய மன்னர்கள் இந்த நிலப்பரப்பை ஆண்டதாகவும், இங்கதான் மூன்று தமிழ்ச்சங்கங்கள் நிகழ்ந்ததாவும் குறிப்புகள் இருக்கு. இவ்ளோ ஏன், பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கூட இங்கதான் தோன்றுனதா வரலாறு சொல்லுது.” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மென்மொழியை இடைவெட்டிய சுடரொளியோ, “வெயிட் வெயிட், அப்போ இந்த குமரிக்கண்டம்தான் லெமூரியாவா?” என்று வினவினாள்.

“இல்ல சுடர், ரெண்டும் வெவ்வேற தியரி. இப்போ இந்த ‘லெமூரியா’ தியரி உண்மை இல்லன்னு நிரூபிச்சுட்டாங்க. ஆனாலும், குமரிக்கண்டத்தை பத்தி நம்ம இலக்கியங்கள்ல குறிப்பிட்டிருக்குறதால, குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகளை நம்ம தமிழ் ஆய்வாளர்கள் தேடிட்டு இருக்காங்க.” என்றாள் மென்மொழி.

“ஆனா, ரெண்டு பெயர்களும் ஒரே நிலப்பகுதியை குறிக்கிறது தான?” என்று சுடரொளி குழப்பத்துடன் வினவ, “லெமூரியான்னு ஏன் பெயர் வந்துச்சு தெரியுமா? ஜெர்மன் ஆராய்ச்சியாளரான எர்னஸ்ட் ஹெக்கேல், மடகாஸ்கர், தென்னிந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக்கிடையே ஒரு வியர்ட்டான ஒற்றுமையை கண்டுபிடிச்சாரு. அதாவது மடகாஸ்கர்ல இருந்த ஒருவகை லெமூர் இனம், தென்னிந்தியாலயும், ஆஸ்திரேலியாலயும் காணப்பட்டுச்சு. வேற எங்கேயும் இந்த வகை லெமூர்கள் இல்லையாம். அப்போ தான் இந்த மூன்று இடங்களையும் இணைக்கிற மாதிரியான ஒரு நிலப்பரப்பு இருந்துருக்கணும்னும், அது காலப்போக்குல கடலுக்கடியில போயிருக்கணும்னும் ஒரு தியரியை சொல்ல ஆரம்பிச்சாங்க. ஆனா, பல பில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி, அதாவது ஒரே பெரிய கண்டமா இருந்து பல கண்டங்களா பிரிஞ்ச போதே, இந்த லெமூர் வகை இனம் பரவி இருக்கும்னு பிற்காலத்துல, இந்த தியரிக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாங்க.” என்றாள் மென்மொழி.

மீண்டும் ஏதோ கூற வந்த மென்மொழியை தடுத்த சுடரொளியோ, “எம்மா தாயே போதும். இவ்ளோ தகவல்களை ஒரேதா கேட்டா, என் மூளை தாங்காது.” என்றவள், அங்கிருந்த பொருட்களை அடுக்கி வைக்க உதவினாள்.

மென்மொழியும், “இதுக்கே இப்படின்னா, தாத்தாவோட மொத்த ஆராய்ச்சியையும் கேட்டா, என்ன பண்ணுவ?” என்று கேலியாகக் கேட்டு வைக்க, “ஹான், தூங்கிடுவேன்.” என்றாள் சுடரொளி.

அதற்கும் சிரித்தவாறே கீழே கிடந்த பொருட்களைப் பார்த்தாள் மென்மொழி. அங்கு அழகிய வேலைப்பாடு செய்யப்பட்ட ஒரு பெட்டி திறந்து கவிழ்ந்து கிடந்ததைக் கண்ட மென்மொழியோ, “இந்த பெட்டி…” என்று முணுமுணுத்தவாறே, அதைத் தூக்க அதிலிருந்து கீழே விழுந்தன இரு கற்கள்.

அவற்றை கையில் எடுத்துப் பார்த்த மென்மொழியோ, “இது அதேதான். ஆனா, அப்போ அஞ்சு கல்லு இருந்ததே.” என்று குழப்பத்துடன் தனக்குத்தானே பேச, தோழியிடமிருந்து பதில் இல்லாமல் போனதில் அவளை திரும்பிப் பார்த்தாள் சுடரொளி.

கையில் ஜொலிக்கும் கருநீலம் மற்றும் மஞ்சள் நிறக்கற்களுடன் குழம்பி நின்றவளை சமீபித்த சுடரொளி, “ஹை, கலர் கலர் கல்லு! நான்தான் சொன்னேன்ல, கருப்பை விட கலர் கல்லுதான் நல்லா இருக்கும்னு.” என்று பேசியவாறே மஞ்சள் நிறக்கல்லை கையில் எடுக்க, அடுத்த நொடி “ஆஹ்…” என்று அலறியவாறே அதைக் கீழே போட்டாள்.

தோழியின் அலறலில் நிகழ்விற்கு வந்த மென்மொழியோ, “என்னாச்சு சுடர்?” என்று பதற, “கல்லைத் தொட்டா ஷாக்கடிக்குது மொழி.” என்று கையை ஆட்டியபடி கூற, அவளைக் குழப்பமாக பார்த்த மொழியோ, கீழே கிடந்த மஞ்சள் கல்லை கையில் எடுத்தாள்.

“எங்கடி ஷாக்கடிக்குது?” என்று கையை விரித்துக் காட்ட, “நான் தொட்டப்போ மட்டும் ஷாக்கடிச்சதே.” என்ற சுடரொளியோ மீண்டும் அதை எடுக்க முயன்று, பின், “இல்ல இல்ல நீயே வச்சுக்கோ.” என்று கையை இழுத்துக் கொண்டாள்.

மென்மொழியோ அத்துடன் அதை மறந்தவளாக, மீதி மூன்று கற்களைத் தேட ஆரம்பித்தாள். கீழே மேலே என்று அவள் தேடுவதைப் பார்த்த சுடரொளி, “எதை தேடுறன்னு சொன்னா நானும் தேடுவேன்ல.” என்று கூற, “இதே மாதிரி இன்னும் மூணு கல்லு இருந்துச்சு சுடர். இப்போ ரெண்டுதான் இருக்கு.” என்றாள் மென்மொழி.

‘எது மூணா? ஒன்னு தொட்டதுக்கே ஷாக்கடிக்குது.’ என்று யோசித்த சுடரொளியோ, “நீயே மெதுவா தேடு மொழி.” என்று ஒரு இடத்தில் அமர்ந்து விட்டாள்.

தேடித் தேடிக் களைத்த மென்மொழியோ, உதட்டைப் பிதுக்கி, “எங்க தேடியும் காணோம்.” என்று சோர்வாக அமர, “நீ எப்போ இதை பார்த்த?” என்று கேட்டாள் சுடரொளி.

“அது… நான் சின்ன வயசுல… ஹான், முதல் முறை இங்க வந்தப்போ பார்த்தேன். நல்லா இருக்கேன்னு எடுத்து பார்த்தப்போ, தாத்தா திட்டி வாங்கி ஒளிச்சு வச்சுட்டாரு.” என்றாள் மென்மொழி.

“என்ன ஒளிச்சு வச்சாரா? ஆமா, இது என்ன கல்லு? ராசிக்கல்லா இருக்குமோ? அப்போ எதுக்கு இத்தனை கல்லை வாங்கி வச்சுருக்காரு உங்க தாத்தா?” என்று சுடரொளி கேட்க, “இதுவும் அவரோட ஆராய்ச்சியோட ஒரு பார்ட்டா இருக்கும். இல்லன்னா, எதுக்கு இங்க வச்சுருக்கணும்?” என்று சரியாக யோசித்தாள் மென்மொழி.

“அப்போ இந்த கல்லுக்கும் குமரிக்கண்டத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றியா?” என்று சுடரொளி கேட்க, இருவரின் பார்வையும் அந்த கற்களிடமே நிலைத்தது.

*****

யாழ்மொழியின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு அவள் அணிந்திருந்த செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற ஆடை வெகுவாக பொருந்தியிருந்தது. கையில்லாமல் முட்டி வரை நீண்டிருந்த அந்த ஆடைக்குப் பொருத்தமாக அவள் அணிந்திருந்த செம்மஞ்சள் நிற ஒற்றைக்கல் கழுத்தணி பார்ப்போரைக் கவர்ந்தது.

அந்த ஒற்றைக்கல்லின் ஜொலிப்பிற்கு போட்டி போடும் விதமாக உதடுகளில் தேக்கி வைத்த கவர்ச்சிகரமான சிரிப்புடன் அந்த மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தாள் யாழ்மொழி.

அவள் சிரிப்பிற்கான காரணம், வெகு நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் நெருங்கி விட்டது என்ற செய்தி கிடைத்ததால் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அந்தச் சிரிப்பு சில மணி நேரங்கள் கூட நிலைக்கப் போவதில்லை என்பது அந்த நொடி அவளிற்குத் தெரியவில்லை!

*****

அந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுபெற, பலரின் பாராட்டுகளைப் பெற்றதில் இன்ப வெள்ளத்தில் மூழ்கிய யாழ்மொழி முகம் முழுவதும் புன்னகையுடன் அவளிற்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்.

அங்கு அவளிற்காகவே காத்திருந்த வருண், “யாழ் பேபி…” என்று அழைத்தபடி அவளை அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பின் உள்ளர்த்தம் உணராத யாழ்மொழியோ, “என்னை ரொம்பத்தான் காக்க வைக்கிற வரு. அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் சொல்லேன்.” என்று சிணுங்கினாள்.

“நான் சொல்லலைன்னா யாழ் பேபிக்கு தெரியாதா என்ன?” என்று கண்ணடித்த வருண், அவளை ஒரு சுற்று சுற்றி கண்ணாடி முன் நிற்க வைத்து பின்னிருந்து அணைத்த வண்ணம், “என் அழகு யாழ் பேபிக்கு ஒரு பட ஆஃபர் வந்துருக்கு.” என்று ஆர்ப்பாட்டமாகக் கூறினான்.

இதை ஓரளவு யூகித்திருந்தாலும், அதை கேட்கும்போது உண்டான உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக அவன் பக்கம் திரும்பியவள், “ரியலி வரு? அச்சோ எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா?” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“நான்தான் சொன்னேன்ல, உன்னை உயரத்துக்கு கூட்டிட்டு போவேன்னு.” என்று அவளை இறுக அணைத்தபடி வருண் கூற, அது எந்த உயரம் என்பதை புரிந்து கொள்ளாதவளாக மகிழ்ச்சியில் திளைத்தாள் யாழ்மொழி.

‘எனக்காக இவ்ளோ செஞ்சுருக்க வருணை போய் குத்தம் சொல்றாங்க. இருக்கட்டும், முதல்ல ஜெயிச்சுட்டு அதுக்கு அப்பறம் பார்த்துகிறேன்.’ என்ற எண்ணம் வேறு யாழ்மொழிக்கு!

“யாழ் பேபி, இது கொஞ்சம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனா, இதை மட்டும் பண்ணிட்டா, கண்டிப்பா பெரிய சான்ஸ் கிடைக்கும். அதுக்கப்புறம், இண்டஸ்ட்ரியே உன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும்.” என்றெல்லாம் வருண் கூற, அந்த கனவுகளில் மூழ்கிப் போனாள் காரிகை.

அவளிடமிருந்து பதில் இல்லாமல் போனதில், தன்னிடமிருந்து அவளைப் பிரித்தவன், “என்னம்மா, சின்ன படம்னு அப்செட்டா?” என்று வினவ, “நோ நோ வரு. சின்ன படமா இருந்தா என்ன? இது எனக்கு கிடைச்சுருக்க பெரிய சான்ஸ். அதுக்கே உன்னைத் தேங்க் பண்ணனும்.” என்றாள்.

“குட் கேர்ள். இதான் உன்கிட்ட எனக்குப் பிடிச்சது யாழ். எஸ், நீ சொன்ன மாதிரி இது பெரிய சான்ஸ். சோ, எக்காரணம் கொண்டும் அதை விட்டுடாத.” என்றவன், “அப்புறம் பேபி, இதுல கொஞ்சம் காம்பிளிகேஷன் இருக்கு.” என்றான்.

“என்ன காம்பிளிகேஷன் வரு?” என்று வருவது தெரியாமல் யாழ்மொழி வினவ, “நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும் யாழ்.” என்று சாதாரணமாகக் கூறினான் வருண்.

மனதிற்குள் மணியடித்தாலும், தடதடத்த இதயத்துடன், “அட்ஜஸ்ட்னா?” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி கேட்க, “ப்ச், நீ என்ன சின்ன பிள்ளையா யாழ்? இது எல்லாம் கேள்விப்பட்டிருப்பதான? இந்த சான்ஸுக்கு நிறைய போட்டி இருக்கு. ஆனா, நான் உன்னை ரெக்கமண்ட் பண்ணதால, உனக்கு கிடைக்கத்தான் நிறைய வாய்ப்பு இருக்கு. அதுக்கு காம்பேன்சேட் பண்ற மாதிரி… சில அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் பண்ணனும் யாழ்.” என்று கூறினான் வருண்.

வருண் கூறியதைக் கேட்ட யாழ்மொழிக்கோ தலை சுற்றியது. இதை எல்லாம் கேள்விபடாதவள் அல்ல யாழ்மொழி. ஆயினும், தனக்கு நடக்கும்போது அதிர்ச்சியாகவே இருந்தது. அதுவும், தனக்கு உதவிய நண்பனே அதைச் சொல்லும்போது, இத்தனை நாட்கள் அவனுடன் பழகியது அருவருப்பாக இருந்தது.

இருப்பினும், நூறில் ஒரு வாய்ப்பாக, அவன் தன்னை கேலி செய்யக் கூறியதாக இருந்து விடாதா என்று எண்ணம் எழுவதையும் தடுக்க முடியவில்லை. அத்தனை நம்பிக்கை அவன் மீது!

ஒருவேளை அவன் கூற வந்ததை தான் சரியாக எடுத்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணத்தில், “என்ன அட்ஜஸ்ட்மெண்ட்? யாரை அட்ஜஸ்ட் பண்ணனும் வருண்?” என்று கேட்க, “ப்ச், முதல்ல ரிலாக்ஸா இரு யாழ். உனக்கு இது முதல் முறைல, அதான் இப்படி இருக்கு.” என்றவன், “டைரக்டருக்கும் ப்ரொட்யூசருக்கும் உன்னைப் பிடிச்சு போச்சு. அதான்…” என்று இழுத்தவனை, நொடியும் தாமதிக்காமல் அடித்தவள், “அதனால, என்னை கூ*டிக் கொடுக்கப் பார்க்குற, அப்படித்தான?” என்று கத்தினாள் யாழ்மொழி.

அவள் அடித்ததில் கோபம் கொண்ட வருணோ, “யாழ், என்ன இது? இப்படி லூசு மாதிரி பிஹேவ் பண்ற!” என்று வருண் வினவ, “நான் லூஸா? நீதான்டா சைக்கோ! ஃபிரெண்டு மாதிரி பழகிட்டு, என்ன வேலை பார்க்க சொல்ற?” என்று கோபம் தாளாமல் கத்தினாள் யாழ்மொழி.

“என்னமோ பத்தினி மாதிரி கத்திட்டு இருக்க? கொஞ்ச நேரம் முன்னாடி என்னை கட்டிப்பிடிச்சுட்டு நின்னது மறந்துடுச்சோ?” என்று உதட்டை வளைத்து அவன் வினவ, தன்னை நினைத்தே அருவருத்துப் போனாள் யாழ்மொழி.

“ஓஹ், நீ ஃபிரெண்டுன்னு நினைச்சு கட்டிப்பிடிச்சுருப்ப!” என்று போலியாக வியந்தவன், அவளருகே வந்து, “அதே மாதிரி அவங்களையும் ஃபிரெண்டுன்னு நினைச்சு…” என்று சொல்லி முடிப்பதற்குள், காலிலிருந்த ஹீல்சை கழட்டி அடித்து விட்டாள்.

அதன் கூர்முனை பட்டு கன்னத்தில் கோடாக ரத்தம் வழிய, “சொல்லச் சொல்ல கேட்காம என்னையே அடிக்கிறியா?” என்று அவளின் முடியை பற்றி இழுத்தான் வருண்.

சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் வந்துவிட, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட வருணோ, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டான்.

“அழகான முகமும், எடுப்பான உடம்பும் தவிர என்ன இருக்கு உன்கிட்ட? இத்தனை பெரிய ஆஃபர் அவ்ளோ சீக்கிரம் கிடைச்சுடுமா? அப்படி கிடைக்குதுன்னா, அது உன் அதிர்ஷ்டம். கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்காம, முட்டாள்தனமா பேசிட்டு இருக்க யாழ்.” என்று சற்றுத் தன்மையாக வருண் கூற, அவனைப் போலவே அவனருகே வந்தவளோ, “உன் தங்கச்சி கிட்ட இதையே சொல்லேன்.” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.

அதில் அவன் கோபம் மீண்டும் கிளறப்பட, “யூ பி**, இனி எப்படி இந்த ஃபீல்டுல இருக்கன்னு பார்க்குறேன்.” என்று கூற, அவனைத் திரும்பிப் பார்த்து நடுவிரலை காட்டியவள், வேகமாக வெளியேறி விட்டாள்.

அவளிற்குத் தெரியும், இனி இந்தத் துறையில் அவளால் காலைக் கூட வைக்க முடியாது என்று. அதற்காக, தன்மானத்தை விற்க அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை.

தாமதமாகப் புரிந்து கொண்டாலும், வஞ்சகனை விட்டு விலகி விட்டாள் யாழ்மொழி. ஆனால், அவன் அத்தனை எளிதில் விட்டு விடுவானா என்ன?

*****

“தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் இல்ல சுடர். பல சயின்டிஃபிக் விஷயங்கள் அதுல இருக்கு தெரியுமா? சிலர், தொல்காப்பியமே பேசிக்தான். இதை விட அட்வான்ஸான புக்ஸ் எல்லாம் அழிஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க. அப்போ அந்த காலத்துல வாழ்ந்த மக்கள் எவ்ளோ அட்வான்ஸ்டா இருந்துருப்பாங்க?” என்று மென்மொழி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே கூற, பின்னால் அமர்ந்திருந்த சுடரொளியோ, “யாராவது இவளை நிறுத்தச் சொல்லுங்களேன்! சும்மா பேச்சுக்கு கேட்டா, அதையே பேச்சா வச்சுருக்கா.” என்று புலம்பினாள்.

அப்போது மென்மொழியின் அலைபேசி ஒலியெழுப்ப, அதை எடுக்க வேண்டி அவளின் கைப்பைக்குள் கரத்தை நுழைத்தாள் சுடரொளி. அலைபேசியுடன் கருநீல நிறக்கல்லும் சேர்ந்தே வந்தது.

‘ஹையோ, இது எதுக்கு கையோட வருது!’ என்று பயந்தவள், அதை தன் கைப்பைக்குள் போட்டுவிட்டு, அலைபேசியை ஆராய ஆரம்பித்தாள்.

“அட இங்க பாரேன், உன் வெப்டூனுக்கு கூட யாரோ கமெண்ட் பண்ணியிருக்காங்க.” என்று சுடரொளி கூற, “யாரு சுடர்? என்ன கமெண்ட்?” என்று மென்மொழி வினவினாள்.

“யாரோ ‘ப்ளூ ஏஞ்சல்’டி. இரு என்ன கமெண்ட்னு பார்க்குறேன்.” என்ற சுடரொளி சிரிக்க ஆரம்பித்தாள்.

“எதுக்குடி சிரிக்கிற?” என்று மென்மொழி கேட்க, “நீ வரைஞ்ச அந்த கொலை கதைக்கு யாரோ ஹார்ட் கமெண்ட் பண்ணியிருக்காங்க. அநேகமா, ஏதாவது சீரியல் கில்லராதான் இருப்பான்.” என்று கேலி செய்தாள் சுடரொளி.

“அடிங், என் கதையை கேலி செய்றியா? இரு உன்னைக் கீழ தள்ளி விடுறேன்.” என்று வாகனத்தை அசைக்க, அவர்களின் நேரமோ என்னவோ, சாலையின் நடுவே இருந்த ஒற்றைக் கல், அவர்களின் வாகனத்தைத் தடுமாறச் செய்திருந்தது.

அதில் கீழே விழுந்த சுடரொளியோ, “அடிபாதகத்தி, சும்மா சொல்றன்னு பார்த்தா, உண்மையிலேயே தள்ளி விட்டுட்டாளே.” என்று புலம்ப, “நானும்தான் கீழ விழுந்துருக்கேன். சும்மா புலம்பாம எழுந்து தொலை. நடுரோட்டுல வேற விழுந்துருக்கோம், லாரி, பஸ்னு ஏதாவது வந்துடப் போகுது!” என்றாள் மென்மொழி.

தள்ளாடியபடி எழுந்த சுடரொளி மென்மொழிக்கும் கைகொடுத்து தூக்கி விட, சற்று தள்ளி விழுந்திருந்த வாகனத்தை எடுக்க முயன்றாள் மென்மொழி.

கீழே விழுந்து அடிபட்டதால் சட்டென்று அவளால் அதைத் தூக்க முடியவில்லை. அவள் அதைத் தூக்க முயலும் போதே, ஹாரன் சத்தத்துடன் வெளிச்சமும் புலப்பட, “ஹையோ, எந்த நேரத்துல வாய் வச்சான்னு தெரியல. சீக்கிரம் தள்ளி வாடி.” என்று சுடரொளி கத்தினாள்.

மென்மொழியோ அப்போதும் வாகனத்தை தூக்குவதை கைவிடாமல் இருக்க, சரக்குந்தோ நிறுத்தும் எண்ணம் இல்லாதவாறு வேகமாக வந்து கொண்டிருந்தது.

“மொழி அதை விட்டு தூர வா.” என்று சுடரொளி கத்தினாலும், அதை காதில் வாங்காதவளாக மென்மொழி தன் வேலையில் கவனமாக இருக்க, வேறு வழியில்லாததால், சுடரொளியும் சென்று வாகனத்தைத் தூக்க, இறுதி நொடியில் அதை நகர்த்தியிருந்தனர்.

அந்த சரக்குந்து இருவரையும் உரசிக் கொண்டு சென்றிருந்தது. அதனால் உண்டான காயத்திலிருந்து இரத்தம் கோடாக வழிந்து கொண்டிருந்தது இருவருக்கும்.

*****

அதே சமயம், மற்றொரு சாலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்தனர் இருவர்!

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்