
அத்தியாயம் 32
அடுத்தடுத்து நாட்கள் வேகமாக நகர, திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தது.
மணப்பெண்கள் இருவரும், இயற்கைலேயே அழகாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் அழகு நிலையம் சென்று தங்களின் முகத்திற்கு மேலும் மெருகூட்டுவது இயல்பு தானே..
அப்படித்தான் வைஷுவிற்கும் அந்த எண்ணம் தோன்றிட, நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு இருந்தாள்.
நிரஞ்சனா, “எனக்கு வேண்டாம் வைஷு.. அதுல எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை.” என்றாள்.
“என்ன தான் அழகா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரும் பண்ணிக்கிறது நார்மல் தானே.. ரொம்ப எல்லாம் பண்ண வேண்டாம். லைட்டா பண்ணிட்டி வரலாம்.” என்று திரும்பத் திரும்ப அழைத்திட, அவளும் சரி என்றாள்.
இருவரும் கிளம்பி வந்திட, மங்களம், “எங்கம்மா கிளம்பிடீங்க ரெண்டு பேரும்.. இன்னும் மூணு நாள்ல கல்யாணம் இருக்கு. வெளிய எல்லாம் அலைய வேண்டாம் பொண்ணுங்களா..” என்றிட,
“அத்தை.. நாங்க பியூட்டி பார்லர் கிளம்பிட்டோம்.. ஜஸ்ட் கொஞ்சம் ஃபேசியல் பண்ணிட்டு வரலாம்னு தான்.” என்றாள்.
“மூகூர்த்த கால் ஊண்டுன பிறகு வெளிய எங்கயும் போகக்கூடாது பொண்ணுங்களா..” என்று அவர் சொல்ல,
“அத்தை.. ப்ளீஸ் அத்தை.. ப்ளீஸ்..” என்று வைஷு கெஞ்ச, அந்த கெஞ்சலில் சரி என்றார்.
“தனியா எல்லாம் நீங்க போக வேண்டாம் நீங்க..” என்று மங்களம் கூற,
“அப்போ நீங்க வாங்க கூட..” என்று வைஷு அழைக்க, மங்களம் “அடப்போம்மா.. நீ வேற..” என்று சொன்னவர், “இரு.. உங்க அம்மாவை கூப்பிடுறேன்..” என்று மல்லிகாவை அழைத்து அவரிடம் சொல்ல, “சரி அண்ணி கூடப் போய்ட்டு வரேன்..”என்றார்.
“பார்த்து பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வாம்மா.. மூகூர்த்த கால் ஊண்டுன பிறகு வெளிய அவ்ளோவா போகக்கூடாது. இந்த பிள்ளைங்க பேச்சைக் கேக்காம கிளம்புதுங்க. நீ பார்த்துக்கோ..” என்று அவரிடம் கூறிய மங்களம், அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு உள்ளேச் சென்றார்.
அப்போது, அவரது வீட்டில் வேலை செய்யும் கார் ஓட்டுநர், ராமலிங்கம் மங்களத்திடம் வந்து,”ம்மா.. எனக்கு ஒரு மூணு நாள் லீவ் வேணும்.” என்று கேட்டார்.
“என்ன ராமலிங்கம் இப்படி சொல்றீங்க. இன்னும் மூணு நாள்ல கல்யாணம் இருக்கு. வெளியப் போக வர நிறைய வேலை இருக்கும். நீங்க என்னடானா இப்படிச் சொல்லறீங்களே..”என்று மங்களம் சற்று கடிந்து கொண்டார்.
“அது இல்லம்மா.. மனைவிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல. அதான் கூட இருந்து பார்த்துக்கணும். அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்லை. நானும் இங்க வேலைனு வந்துட்டா, வயசான காலத்துல அவ மட்டும் தனியா என்ன பண்ணுவா.. அதான் லீவ் போட்டு உடம்பை தேத்தி விட்டுட்டு அதுக்கு அப்புறம் வரேன் மா.” என்றார் ராமலிங்கம்.
“ஓ.. அப்டிங்களா. அது தெரியாம நான் பேசிட்டேன். நீங்க அவங்கள பார்த்துக்கோங்க. முடிஞ்சா பசங்க கல்யாணம் அன்னைக்கு வரப் பாருங்க..” என்றார் மங்களம்.
“சரிங்க மா..” என்றவர் கிளம்ப போக,
“ஒரு நிமிஷம்..” என்று நிறுத்திய மங்களம்,
“செலவுக்கு பணம் எதுவும் வேணும்னா தயங்காமல் கேளுங்க.. ” என்று சொல்லிட,
அவரும் சரி என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
இங்கு மூவரும் பார்லர் வந்து சேர்ந்து இருக்க, முதலில் நிரஞ்சனாவுக்கு முடித்து விட்டு, இரண்டாவது வைஷுக்கு செய்து கொண்டிருந்தனர்..
மல்லிகாவோ, “எனக்கும் கொஞ்சம் லைட்டா பண்ணி விடு மா..” என்று கேட்டு இருந்ததால், அவருக்கும் அழகு சாதன பெண்கள் முகத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தனர்.
நிரஞ்சனா ஷோபாவில் அமர்ந்து வேளியே வெடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளது அலைபேசி ஒலித்தது.
யார் என்றுப் பார்க்க, தெரியாத ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வந்து இருந்து.
“யாரு அது.. புதுசா இருக்கே..” என்று நினைத்தவள், வருகின்ற அழைப்பை ஏற்று காதில் வைத்து,”ஹலோ.. ” என்று ஆரம்பிக்க,
“ஹலோ.. நிரு.. நான் காயத்ரி பேசுறேன்.. அப்பாக்கு ஆக்சிடண்ட் ஆகிருச்சு. நான் இப்போ ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். இனியனுக்கு கால் பண்ணேன். அவன் நம்பர் போகல. சரி உனக்கு கால் பண்ணிச் சொல்லிரலாம்னு தான் பண்ணேன் டி..”என்றாள் அழுகையுடன்.
“ஹே ஹே.. அழாதடி. எந்த ஹாஸ்பிடல்டி?? நான் வரேன்.” என்று கேட்டிட, அவளும் மருத்துவமனையின் பெயரைக் கூறினாள்.
“சரி டி .. நீ இரு. நான் கிளம்பி வரேன் கொஞ்ச நேரத்துல.” என்று அழைப்பை அணைத்து விட்டு, அங்கிருந்த வைஷுவிடம் கூற,
அவளோ, “அச்சோ.. இப்போ எப்படி இருக்காங்க??” என்று கேட்டாள்.
“தெரியல. அதான் நான் போய் பார்த்துட்டு வரேன்..”என்று சொல்லி விட்டு கிளம்பப் போக, “ஹே.. இரு.. எங்க போற. அது எல்லாம் நீ போக வேண்டாம். அத்தைக்கு தெரிஞ்சா திட்டுவாங்க..” என்றாள் அவள்.
“இல்லை வைஷு.. அவளுக்குக் கூட ஆறுதலுக்கு அங்க பக்கத்துல யாராச்சும் இருந்தா அவ பெட்டெரா பீல் பண்ணுவா. சரி நான் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துருவேன்.. நீங்க முடிச்சிட்டு அங்க வாங்க. இல்லனா நான் இங்க வரேன். ஹாஸ்பிடல் பக்கத்துல தான் இருக்கு.
நான் போய்ட்டு ஒன் ஹௌர்ல நான் வந்துருறேன்.” என்று கெஞ்சாத குறையாக நிரஞ்சனா கூறிக்கொண்டு இருந்தாள்.
“சரி.. பத்திரமா போய்ட்டி சீக்கிரம் வா.. அம்மாகிட்ட நான் சொல்லுறேன்.” என்று தங்கை அக்காளை அனுப்பி வைத்தாள்.
நிரஞ்சனாவும் வெளியே வந்து அவசரத்தில் ஆட்டோவைத் தேட, சரியாக ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
“மேடம் ஆட்டோ. ” என்று ஓட்டுநர் கேட்க,
“ஹான்.. ஆமா.. ஹாஸ்பிட்டல் போகணும்..” என்று மருத்துவமனையின் பெயரைக் கூற ஆட்டோவும் அந்த இடத்தை நோக்கி விரைந்தது.
செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் வந்ததும் அந்த இடத்தில் நிறுத்தி, “மேடம் ஒரு நிமிஷம் பெட்ரோல் போட்டுகிறேன். ” என்று அவளிடம் சொல்லி விட்டு, இறங்கி வெளியே நின்று இருக்க,
பின்னால் சீட்டில் நிரஞ்சனா பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள்.
அப்பொழுதி “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்..” என்று யாரோ அழைக்க, அழைப்பு சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்து என்னவென்று உணரும் முன்பே,
அவளது மூக்கில் கைக்குட்டையை வைத்து அழுத்த, அவளோ அப்படியே மயங்கி சரிந்தாள்.
வந்த வேளை முடிந்ததென்று அந்த நபர் கிளம்பி விட, ஆட்டோ ஓட்டுநரும் இவள் மயங்கி இருந்ததைப் பார்த்து, மீண்டும் ஆட்டோவில் ஏறி ஓட்டிச் சென்றான்.
யாரிடமோ அவன், அழைப்பேசியில் பேசிய பிறகு, அவர் கூறிய இடத்திற்கு கொண்டு வந்து அவளை ஒரு சேரில் கட்டிப் போட்டு வைக்க,
“சபாஷ்.. சொன்ன மாதிரி கரெக்ட்டா கொண்டு வந்துட்ட.. இந்தா உனக்கு பேசுன அமௌன்ட்..” என்று ஆட்டோக்காரனுக்கு பேசிய தொகையைக் கொடுத்தான் சஞ்சய்.
“தேங்க் யூ சார். ” என்று அவன் விடை பெற்றுக் கொண்டான்.
நிரஞ்சனாவைப் பார்த்த சஞ்சய், “ஒரு ராஜாவோட உயிர், ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி எங்கேயோ இருக்கிற ஒரு கிளி உடம்புக்குள்ள இருக்குமாம். அதே மாதிரி, பரிதியோட உயிர் இந்த கிளிக்கிட்ட தான் இருக்கு..”என்று சொல்லிய படி சத்தம் போட்டுச் சிரித்தான்.
நேரம் ஆக ஆக, நிரஞ்சனாவைக் காணாமல் வைஷுவும் மல்லிகாவுக்கும் கிழிப் பிடித்தது.
“என்ன ஆச்சு. இன்னும் காணோம். போன் பண்ணு பாரு டி ..” என்று மல்லிகா வைஷுவிடம் கூறினார்.
“அம்மா.. நான் போன் பண்ணிட்டேன் ம்மா. அவுட் ஆப் நெட்ஒர்க் கவெரேஜ்னு வருது..” என்றாள்.
“அச்சோ.. இப்போ என்னடி பண்றது. நீ காயத்ரிக்கு போன் பண்ணு.. அவகிட்ட கேப்போம்..” என்று அவளை துரிதப்படுத்த,
அவளும் காயத்ரிக்கு அழைப்பு விடுவிக்க, அந்த பக்கம் அழைப்பு சென்று கொண்டதே தவிர அவள் ஏற்கவில்லை.
மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள, ஒரு கட்டத்தில் காயத்ரி அழைப்பை ஏற்று, “ஹலோ..” என்று தூக்க கலக்கத்தில் கூறினாள்.
“ஹே என்னடி காயத்ரி.. எவ்ளோ நேரமா அடிக்கிறேன். போன் எடுக்காம இருக்க.. என்னடி பண்ணிட்டு இருந்த..” என்று கேட்டதற்கு,
“ஓ.. அப்படியா.. எனக்கு உடம்பு சரி இல்லைடி .. படுத்துட்டு இருந்தேன். அப்பா வந்து போன் ரொம்ப நேரமா அடிக்குதுனு எடுத்துக் கொடுத்துட்டு போனாரு. சொல்லுடி. என்ன விஷயம்..” என்று காயத்ரி உடல் நிலை முடியாமல் கேட்க,
“என்ன.. உங்க அப்பாவா?? உங்க அப்பாக்கு ஆக்சிடண்ட் ஆச்சுனு நீ போன் பண்ணனு நிரஞ்சனா கிளம்பிப் போயிருக்கா..” என்று அவள் பதட்டத்துடன் கூற,
உடல் நிலை முடியாமல் இருந்த காயத்ரிக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
நன்றாக எழுந்து அமர்ந்தவள், “என்னடி சொல்ற. நான் அவளுக்கு கால் பண்ணவே இல்லை. நான் எங்க வீட்டுல இருக்கேன்டி .. அப்பாவும் கூட தான் இருக்காரு.. நீ முதல்ல அவ எங்க இருக்கானு கால் பண்ணி கேளு. இல்லையா விஷயத்தை இனியன் இல்லனா பரிதி அண்ணாகிட்ட சொல்லு..” என்றதும்,
“நான் அக்காக்கு கால் பண்ணிட்டேன். கால் போகவே இல்லை. சரி நான் பரிதி மாமாக்கு கூப்பிட்டு விஷயத்தை சொல்றேன். நீ வை. ” என்று போனை வைத்து விட,
உடனே, பரிதி க்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூற, அவனோ “எதுக்கு அவளை தனியா அனுப்பிச்சீங்க.?? என்று அங்கிருந்து கத்தினான்.
‘இல்லை மாமா.. அது வந்து அக்கா சீக்கிரம் வந்துறேன்னு சொல்லிட்டு கிளம்புனா. அதான்..” என்றாள் பயந்தபடி.
“ச்ச.. நான் அங்க வரேன். எங்க இருக்கீங்க..” என்று அவளிடம் அவள் இருக்கும் விலாசத்தை கேட்டு, அங்கு விரைந்தான்.
செல்லும் வழியில் இனியனுக்கு அழைத்து விஷயத்தைக் கூற, அவன் தொழிற்ச்சாலையில் இருந்து விரைந்து வந்து கொண்டிருந்தான்.
அத்துடன், நிரஞ்சனாவுக்கும் அழைத்துப் பார்க்க, அவளுக்கு அழைப்பு செல்லவே இல்லை.
இருவரும் வந்து சேர, அங்கு வைஷுவும் மல்லிகாவும் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
“என்ன ஆச்சு வைஷு..” என்றபடி காரில் இருந்து இறங்கி அவர்கள் அருகினில் வர,
நடந்த அனைத்தையும் அவள் ஒன்று விடாமல் கூற, “அப்போ காயத்ரி பேருல அவளுக்கு கால் பண்ணா அவ வெளிய வருவான்னு தெரிஞ்சி தான் இதை பண்ணி இருக்காங்க. காயத்ரியும் அவளும் ஃப்ரண்ட்னு யாருக்குத் தெரியும்..” என்ற குழப்பத்தில் இருக்கும் போது,
இனியன், “வேற யாரு.. அந்த சஞ்சய்க்கு தான் தெரியும்..” என்று அவன் கூறினான்.
“என் மேல கைய வச்சான். இப்போ அவ மேல.. எங்க அடிச்சா எனக்கு வலிக்கும்னு தெரிஞ்சே பண்றான். இத்தனை நாள் அவனை விட்டு வச்சி இருந்தேன். இனி அவனை விட்டு வச்சா என்னனாலும் பண்ணுவான்..” என்று பேசியவனுக்கு, அந்த கடையின் வாசலில் இருந்த CCTV கேமரா தென்பட்டது.
இனியா, “நீ காயத்ரிக்கு கால் பண்ணி சஞ்சய் ஆபீஸ்ல இருக்கானா இல்லையானு கேட்கச் சொல்லு. அது போக அவன் நம்பரை உன் போலீஸ் ஃப்ரண்ட் கிட்ட சொல்லி அவன் நம்பரை டிரேஸ் பண்ணச் சொல்லு..”என்றான்.
இனியனும் அண்ணன் கூறியது போலவே காயத்ரியிடம் சொல்ல, அவளோ வீட்டில் இருந்தே அலுவலகத்தில் இருக்கும் தனது தோழிக்கு அழைத்து விவரம் கேட்க, அங்கு அவன் இல்லை என்று தான் கூறி இருந்தார்கள்.
அதை அப்படியே இனியனிடம் சொல்ல, அவனும்,”சரி ஓகே. நான் பார்த்துகிறேன்..” என்று கூறி விட்டு, அடுத்து தனது காவல்துறை நண்பனுக்கு அழைத்து அவனிடம் விவரத்தைக் கூற, அவனும் “ஓகே.. இனியா.. நீ நம்பர் அனுப்பு. நான் செக் பண்ணச் சொல்றேன்..” என்று அவன் கூற, இவனும் நம்பரை அனுப்பி வைத்தான்.
“இனியா.. நான் வரட்டுமா எங்க டீம் ஓட..” காவல் துறை நண்பன் கேட்க, “எதுவும் எமெர்கெனசினா கால் பண்றேன்டா..” என்று கூறினான் இனியன்.
பரிதி CCTV காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
நிரஞ்சனா ஆட்டோவில் ஏறிச் செல்வது சரியாக தெரிந்தது.
அந்த ஆட்டோ நம்பரை குறித்துக் கொண்டு, “இந்த நம்பர்.. யாரோடது. அவங்க அட்ரஸ் எங்க னு, RTO ஆபீஸ்ல விசாரிக்கணும்..” என்றவன்,
உடனே, தன் அதிகாரப் பலத்தை பயன்படுத்தி, அங்கு விசாரிக்க, அவன் பெயர் மற்றும் முகவரி உடனே கொடுத்து விட்டனர்.
அந்த ஆட்டோக்காரன் முகவரி அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சில நிமிடங்கள் தான் ஆகும் என்பதால், ஆண்கள் இருவரும் அங்குச் செல்ல, பெண்கள் இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த ஆட்டோக்காரனின் வீட்டிற்குச் சென்றதும், இனியனின் காவல்துறை நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“இனியா.. அவனோட நம்பர் அவுட்டர் ஏரியால ஒரு பேக்டரி கிட்ட காட்டுது..” என்று அவன் சொல்ல,
“ம்ம்ம் சரி டா.” என்று இனியன் அழைப்பைத் துண்டிக்க, இங்கு ஆட்டோக்காரனின் வீட்டில் இருந்து அவனது அம்மா வெளியில் வந்து, “யாருங்க வேணும்…” என்றார் பயந்தபடி.
“இங்க முத்து இருக்காரா..” என்று கேட்டான் பரிதி.
“அவன் சவாரி போய் இருக்கான் ஐயா. எதுவும் பிரச்சனையா..”என்று அவனின் அம்மா கேட்க,
“அவன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். அவன் நம்பர் இருந்தா கொடுங்க..” என்று அவரிடம் அவனது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சற்று தூரம் தள்ளி வந்து அவனுக்கு அழைத்தனர்.
அழைப்பு உடனே ஏற்கப்பட, “ஹலோ.. சொல்லுங்க..” என்றான்.
“சவாரி வேணும்.. வாரீங்களா..” என்று பரிதி கேட்டான்.
“எங்கப் போகணும்.. எங்க இருக்கீங்க இப்போ..” என்று கேட்டவனுக்கு தாங்கள் இருக்கும் இடத்தைக் கூற, “இதோ பக்கத்தில தானே இருக்கேன். 5 நிமிஷத்தில் வரேன்.” என்று அழைப்பை துண்டித்து பரிதி கூறிய இடத்திற்கு விரைந்தான்.
சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வந்து சேர, தனக்கு வந்த அலைபேசி எண்ணுக்கு மீண்டும் அழைப்பை விடுவித்து, “எங்க இருக்கீங்க. நான் வந்துட்டேன்..” என்று முத்து பேசினான்.
அதை பார்த்துக் கொண்டிருந்த பரிதி அவன் தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, அவன் அருகில் சென்று, அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து.
அதிலே அவன் நிலை குழைந்து போனான்.
“சார்.. எதுக்கு அடிக்கிறீங்க.. சொல்லிட்டு அடிங்க..” என்று அவன் திமிராகப் பேச,
மேலும் அந்த வாயிலே வாங்கிக் கொண்டான்.
“சார்.. சார்.. எதுக்கு சார் அடிக்கிறீங்க.” என்று இப்பொழுது கெஞ்சுவது போலக் கேட்க,
பரிதி அவனது அலைபேசியில் இருந்து நிரஞ்சனாவின் புகைப்படத்தை காண்பித்து, “இவளை உன் ஆட்டோவில் தான் ஏத்திட்டு போன. எங்க இறக்கி விட்ட..” என்று கூற, அவனோ மாட்டிக் கொண்டதில் முழித்து கொண்டிருந்தான்.
“நான் இவங்கள என் ஆட்டோவில் ஏத்தல சார்..” என்று திக்கி திணரிக் கூற,
“என்ன பயத்துல வார்த்தை எல்லாம் தடுமாறுது. இங்க பாரு நீதான்னு எங்களுக்கு கன்ஃபார்மா தெரிஞ்சு தான் வந்து இருக்கோம். ஒழுங்கா உண்மையைச் சொல்றியா.. இல்லை இன்னும் வாங்குறியா..” என்று இனியன் அவனை அடிக்கக் கை ஓங்க,
“சார் சொல்லிருறேன். ஒருத்தர் எனக்கு இந்தப் பொண்ணை ஆட்டோவில் அவரோட இடத்துக்கு கூட்டிட்டு வரச் சொன்னாரு..” என்று அவன் செய்யச் சொன்னதைக் கூறினான்.
“யாருனு தெரியுமா..” என்று கேட்டான் பரிதி.
“பேரு தெரியாது…” என்றான் முத்து.
“சரி.. எங்க இறக்கி விட்ட..” என்று இனியன் கேட்க,
அவன் இறக்கி விட்ட இடத்தைக் கூறினான்.
“சரி.. போ. இனிமே இந்த மாதிரி வேலையில ஈடுபட்ட மவனே சாவடிச்சிருவேன்..” என்று அவனை மிரட்டி விட்டு அனுப்பி வைக்க, அவனோ வாங்கிய அடியில் “சரி சார்..” என்று வாய் குழறக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“அண்ணா.. அவன் சொன்ன இடமும் அந்த சஞ்சய் இருக்குற இடமும் சேம் தான். அவன் நிரஞ்சனவை ஏதாவது பண்றதுக்குள்ள நம்ம உடனே போய் ஆகணும்..” என்று இனியன் அவசரப் படுத்த,
இருவரும் அங்கிருந்து புயல் வேகத்தில் வேகமாய் காரை கிளப்பிக் கொண்டு சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் இடத்தை குறுக்கு வழியில் சென்று அறை மணி நேரத்தில் அடைந்தனர்.
காரை நிறுத்தி விட்டு, உள்ளே வேகமாக ஓட, அங்கு நிரஞ்சனா மயக்கம் தெளிந்து சஞ்சயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“சார்.. ப்ளீஸ் சார். என்னை விட்டுருங்க.. நான் என்ன சார் பண்ணேன். எதுக்காக நீங்க என்னை கடத்தி கொல்லப் பாக்குறீங்க. என்னை விட்டுருங்க சார்..” என்று கதறிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப் பட்டு இருந்தது.
அதனால் தான் பெண்ணவள் பாவம் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
இதனைக் கண்ட பரிதி நிலை குழைந்து போனான்.
தீப்பெட்டியை பற்ற வைத்து அவளின் மேல் தூக்கி போடும் போது, “சஞ்சய்..” என்று கத்தினான்.
அவனின் சத்தம் கேட்டு அந்த இடமே அதிர்ந்து விட்டது.
ஒரு நிமிடம் சஞ்சயே ஆடிப் போய் விட்டான்.
அவன் கையில் இருந்த தீக் குச்சி கீழே விழுந்து அணைந்து விட்டது.
அவனின் அருகில் சென்ற பரிதி, அவனின் சட்டையைப் பிடித்து, “என்னடா உன் பிரச்சனை. எதுக்கு டா உனக்கு இந்த வெறி.. முதல்ல என்னை கொல்லப் பார்த்த.. அப்புறம் இவளா.. உனக்கு என்ன தான்டா வேணும். என் தொழிலை முடக்கப் பார்த்த.. நான் நல்லா இருக்க கூடாதுனு நினைக்கிற. அப்படி என்ன உனக்கு என் மேல வஞ்சம்.. வெறுப்பு..” என்று கோவத்தில் கத்தியப்படி கேட்க,
அங்கு நிரஞ்சனா இதனை பார்த்தப்படி அழுது கொண்டிருந்தாள்.
இனியனோ, நிரஞ்சனாவின் அருகில் சென்று அவளது கட்டை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தான்.
சஞ்சய் பரிதியின் கையைத் தட்டி விட்டு, “அப்படித்தான் டா பண்ணுவேன். இதுக்கும் மேலயும் பண்ணுவேன்..” என்றான் ஆங்காரமாக.
“அப்படி என்னடா வெறி உனக்கு.. நம்ம எல்லாரும் ஒரே ரத்தம் தான.. உனக்கு மட்டும் ஏன்டா எங்கள அழிக்கிறதுல கங்கணம் கட்டிட்டுத் திரியிற..” என்றான் அவனும் கத்தியவாரு..
“ஏன் னா.. என் பவி.. என் பவித்ரா.. அவளை நீதானடா கொன்ன. என் வாழ்க்கையயை நீ அழிச்சிட்டு, நீ சந்தோசமா இருக்கிறதைப் பார்த்துட்டு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்.. நீ சிரிக்கும் போது எல்லாம் அவ சாவு தான்டா என் கண்ணு முன்னால வருது… உன்னை நிம்மதியா வாழ விட மாட்டேன்..” என்று பதிலுக்கு கத்தினான் சஞ்சய்.
அவன் கூறியதில் பரிதியோ சிலையாக நின்றான்.
நித்தமும் வருவாள்.
