
இன்று
பீச் பங்களாவின் வாயிலுக்கு வந்து சேர்ந்திருந்தான் தீரேந்திரன்.
“தீரா சார் ஓவர், தீரா சார் ஓவர்” எனப் புலம்பிக்கொண்டிருந்தான் சமர்.
“யோவ் சமர் நேர்ல வந்தததுக்கு அப்பறமும் வாக்கி டாக்கிலப் பேசுற மாதிரி பேசிட்டு இருக்க,எங்கயா மோகினி பிசாசு.?” பங்களாவின் மீது பார்வையைச் சுழல விட்ட படி விசாரித்தான் தீரேந்திரன்.
“சார் பங்களாகுள்ள பாருங்க பாட்டுச் சத்தம்லாம் கேக்குது” திகில் உணர்வுடன் சொல்ல தீரேந்திரன் ஏறிட்டுப் பார்த்தான்.
“யோவ் நீ இங்கேயே இரு நான் உள்ள போய்ப் பார்த்திட்டு வர்றேன்” எனச் சொல்லி தீரா முன்னே நகர.
“சார் நீங்க என்ன திட்டினாலும் பரவாயில்லை, என்னையும் உங்க கூடக் கூட்டிட்டு போங்க சார்”
“யோவ் சமர் நான் மோகினியை பார்க்க போறேன் யா”
“தீரா சார் உங்களை அண்ணனா நினைச்சு கேட்கிறேன், தனியா விட்டுட்டு போயிராதீங்க சார்” விழியில் பயம் தெரிய அவன் சொல்ல,
“பயந்தே செத்துறாத வந்து தொலை, நல்ல வருவீங்கய்யா, உங்களுக்குக் கொடுத்த வேலையை என்னைப் பார்க்க வைக்குறீங்களே, உள்ள போய் ஒன்னும் இல்லைன்னு வையி, நானே உன்னைக் கொண்ணுருவேன்” என அந்தக் கடற்கரையை ஒட்டியிருந்த பங்களாவின் இரும்பு கேட்டை தாண்டி உள்ள சென்றனர் இருவரும்.மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.
வரிசைக் கட்டி நின்ற அசோக மரங்கள் திகலுட்டியது.பங்களாவின் வாசலில் இருவரும் வந்து சேர, அங்கே கூண்டில் அடைபட்டிருந்த நாய் ஊளையிட்டது.
“தீரா சார் பார்த்திங்களா.? நாய் ஊளையிடுது கன்ஃபார்ம் பேய் தான் சார்” தீரேந்திரனின் காதுகளில் கிசுகிசுத்தான் சமர்.
“ஏன் நீயும் சேர்ந்து ஊளையிடேன், என்னத்த ட்ரெயினிங் முடிச்சு வேலைக்குச் சேர்ந்தீங்களோ, மினிஸ்டரு இந்த வீட்டுக்குப் பாதுகாப்புக் கொடுக்கச் சொல்லிருந்தாரு, ஆனா இங்கே என்ன நடக்குது பாரு, பாதுகாப்பு கொடுக்க வந்த உனக்குப் பாதுகாப்பு கொடுக்க நான் வந்திருக்கேன், தொடை நடுங்காம வாயா, பேய், பிசாசுன்னு உளறிகிட்டு அடுத்தவனை ட்யூட்டி பார்க்க விடாதீங்க” எனத் திட்டியபடி சமரிடம் சாவியை வாங்கிக் கதவை திறந்திருந்தான் தீரேந்திரன்.
பங்களாவின் வரவேற்பரை புகை மூட்டமாய்க் காட்சி தந்தது, அலங்கார விளக்குகள் மின்னி மின்னி எரிந்தது, வரவேற்பரையின் நடு உத்திரத்தில் தலை கீழாய் தொங்கிக் கொண்டிருந்த சரவிளக்கு எரிந்து இருளை நீக்கியிருந்தது.
“சார் நான் சொன்னப்ப நம்பலைல, இப்ப பாருங்க கண்டிப்பா பேயையோட வேலை தான்”
“என்னயா இது, விளக்கெல்லாம் அணைக்காம போட்டு போயிருக்காங்க”
“சார் நான் ட்யூட்டிக்கு வரும் போது, ஆஃப்ல தான் இருந்திச்சுக் கரெக்ட்டா பனிரெண்டு மணிக்கு, விளக்கு மின்னி மின்னி எரிஞ்சுது, அப்போ தான் அந்த உருவத்தைப் பார்த்தேன்” மிரண்டபடி சொன்னான் சமர்.
ஆனால் தீரேந்திரனுக்கோ துளி அளவும் பயமில்லை, பேய், பிசாசுகளின் மீது சுத்தமாய் நம்பிக்கை இல்லாதவன், அவனுடன் நடுங்கிய படி நடந்து வந்தான் சமர்.
“யோவ் சமர் நீ மாடியில போய்ப் பாருயா, நான் கீழ செக் பண்ணுறேன்” என அதிகாரியாய் மாறி கட்டளையிட்டான் தீரேந்திரன். அவன் இட்ட கட்டளையும், அவனின் தோரணையும் பார்த்து, பயத்தை உள்ளே அடக்கிக் கொண்ட சமர், அதிகாரியின் கட்டளையை ஏற்கும் விதமாய் மாடி பாடிகளில் ஏற ஆரம்பித்தவன், மின் விளக்குகளுக்கு உயிர் கொடுத்தபடி சென்றான்.
தீரேந்திரனோ தரைதளத்திலிருந்த, ஒவ்வொரு அறையாய் சென்று பார்த்தான். அப்போது அவன் செவிகளை மெல்ல தீண்டியது மெல்லிய கொலுசொலி, அதோடு சேர்ந்து அவன் செவிகளை எட்டியது முணுமுணுப்பாய், யாரோ பாடிக்கொண்டிருப்பது போல் துல்லியமாக கேட்ட திசை நோக்கி திரும்பிவனின்., செவிகள் கூர்மையாகியது, பாடல் கேட்ட திசை நோக்கி அவன் கால்கள் தானாய் நடக்க ஆரம்பித்தது.
அவன் நெருங்க, நெருங்க பாடலின் சப்தம் அவன் காதருகில் கேட்பதை போல் உணர்ந்தான். அவனின் கால்கள் இடைவிடாமல் விரைந்து நடக்க,
அது எதோ ஆங்கிலப் பாடல் என உணர்ந்த நொடியில். அவன் கால்கள் ஸ்தம்பித்து நின்றது அந்தக் காட்சியைக் கண்டு அவன் விழி அகல பார்த்தான்.
சமர் சொன்னதைப் போல் தலைவிரிக் கோலமாய்ப் புறமுதுகு காட்டி அமர்ந்திருந்த அந்த உருவத்தின் குரல் மெல்ல அவன் இதயத்தைச் சீண்டியது.
“ஒருவேளை இது மோகினி தானோ” என அவன் எண்ணினாலும் உறுதி செய்துக்கொள்ள அந்தப் பெண் உருவத்திடம் நெருங்கினான் தீரேந்திரன்.
“ஏய் யார் நீ..?” என்ற தீரேந்திரனின் குரலில் மிரண்டு போன அந்தப் பெண் உருவம்,
“ஆ….!” எனக் கத்த தீரேந்திரனும் அதன் முகத்தைப் பார்த்துக் கத்தினான்.
முகம் முழுக்க வெள்ளை மாவு, விழிகளில் அப்பியிருந்த மை, அதோடு புருவத்திற்குப் பட்டை தீட்டியிருந்தவளின் கைகளில் ப்ரெட்டுடன் சேர்நத சிவப்பு நிற சாஸூம் இருக்க, அதை உண்டு அவளின் பற்கள் ரத்தக் காட்டேரி போல் காட்சியளித்தது.
“என்னது பேய்க்கு பசிக்குமா..?” அவன் போலீஸ் மூளை வேலை செய்த சமயம் அவன் தோள்பட்டையைக் கைப்பற்றியது அந்த முரடான கைகள். சிறு திடுக்கிடலுடன் திரும்பிய தீரேந்திரனுக்கு,திகிலூட்டும் பார்வையுடன் தரிசனம் கொடுத்தான் சமர்.
“தீரா சார், உங்க கண்ணுக்கு அந்த மோகினி தெரியுதா..?”
“இல்லையே சமர், உனக்குத் தெரியுதா என்ன.?” மர்மான பெண் உருவத்தைப் பார்த்தபடி பேசினான் தீரேந்திரன்.
“சார் நம்ம கண்ணு முன்னாடி நின்னு ப்ரெட்டு திண்ணுது பாருங்க” எனச் சமர் சொல்லிக்கொண்டிருந்த போதே தீரேந்திரன் அந்தப் பெண் உருவத்தை நெருங்க தொடங்கினான். அவனைக் கண்டு அசையாமல் நின்றிருந்த பெண் உருவமோ, ப்ரெட் துண்டை கவ்வவா.? கீழே போடவா.? என விழிகளை உருட்டியபடி அசையாமல் நின்றிருந்தது.
அவனெதிரே நின்றிருந்த பெண் உருவத்தை உறுத்து விழித்தான் தீரேந்திரன்.
“ஏய் பொண்ணு யார் நீ.?” எனக் கேட்டபடி தீரேந்திரன் நெருங்கிய சமயம், அந்தப் பேய் பொண்ணோ தறிகெட்டு ஓட ஆரம்பித்தாள்.
“சார் அது பொண்ணு இல்லை சார் பேயி..” விழிபிதுங்க சொன்னான் சமர்.
“அவ பொண்ணு தான்டா கால் இருந்துச்சே” என அவனுக்குப் பதிலுறைத்தபடி விழியால் நோட்டமிட்டுக் கொண்டிருந்த போதே மின் இணைப்புத் துண்டிக்கப் பட்டது.
“சார் கால் இருந்துச்சா கன்ஃபார்மா பொண்ணு தானா.?”
“பொண்ணு தான் டார்ச் இருக்கா.?” எனக் கேட்டவன் அதை வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணைத் தேடி அலைய ஆரம்பித்தான், சமரோ பயந்தபடி நின்ற இடத்திலே விரைத்து நின்றான்.
தீரேந்திரன் மாடிபடி நோக்கி ஏறிச் செல்ல, அங்கிருந்த அறையில் எதோ உருட்டும் சப்தம் கேட்க, எட்டுகளை வேகமாய் வைத்து விரைந்தவன் முன் பொத்தெனக் குதித்தாள் அந்தப் பெண். அதைக் கண்டு கணப்பொழுதில் பயந்தவன், ஆவெனக் கத்தியிருந்தான்.
“என்ன தான் போலீஸோ இதுக்கே பயந்து போய்ட்டீங்க.? வெளிய சொல்லிக்காதீங்க போலீஸ்ன்னு” அந்தப் பெண்ணின் குரல்.
“ஏய் யார் நீ.?” அவளைத் தன் கைவைளைவில் கொண்டு வந்து கேட்டான்.
“எதோ நீங்களே என்னைத் தேடி பிடிச்சமாதிரி சீன் போடுறீங்க, நான் நினைச்சதால தான் உங்க கையில தானா வந்து மாட்டிக்கிட்டேன்” என அவள் பேசிய போதே அவன் உணர்ந்து கொண்டான், இவள் அவனுடைய நதி தான் என்று.
“ஏய் நதி நீதானா.? எதுக்கு இந்தத் திருட்டு தனம்.?” அவளை மேலும் அணைத்தபடி கேட்டான்.
“நீங்க போலீஸா இருக்கும் போது, நான் திருடியா இருக்கக் கூடாதா.?” அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்து பெண்ணவள் கேட்க,
“திருடி தான் திருடி தான்” என அவன் சிரித்தான்.
“ஏய் தீரா இப்போ எதுக்குச் சிரிக்குறீங்க..? “
“இல்லை எதுக்கு இந்த மைதா மாவெல்லாம் அப்பிகிட்டு இப்படி ஒரு ட்ராமா, உன்னால ஒருத்தன் கோமாக்கே போயிருப்பான் போல, உன்னையும் பேய்ன்னு நம்பி” என அவன் சிரிப்பை அடக்க முடியாமல் அதிர்ந்து சிரிக்க,
“அய்யோ தீரா சார் காப்பாத்துங்க ஆம்பளை பேயும் சேர்ந்து சிரிக்குது” எனத் தரைதளத்தில் நின்றபடி அலறிய சமரை பார்த்து இருவரும் “ஹா ஹா” எனச் சிரிக்க,
“அய்யோ சார் ரெண்டு பேயும் சேர்ந்து சிரிக்குது, இந்த அப்பாவியைக் காப்பாத்துங்க” என அலறிய சமரை பார்த்து பரிதாப பட்டாள் நதி.
“அய்யோ பாவம், சமரை ரொம்பப் பயமுறுத்திட்டேன், நான் போய்ச் சாரி கேட்கவா தீரா.?” மனம் வருந்திக் கேட்டாள் அகரநதி.
“ஏய் நதி, உன்னை யாரு இங்கே வர சொன்னது.? எதுக்காக இந்த வேஷத்துல வந்திருக்க.? என்கிட்ட ஏன் எதுவும் சொல்லலை.?” அவனோ கேள்விகளை அடுக்கினான்.
“நான் தான் உங்க கிட்ட சொன்னேனே ஒரு ஆதாரத்தைத் தேடி போறேன்னு, நீங்க கூட மாறுவேஷத்துல போகச் சொன்னீங்களே, எனக்கு இந்தப் பேய் வேஷம் தான் சேஃபா பட்டச்சு” அவளின் பூதகாரமான விழியை உருட்டி பேசினாள்.
“உன்கிட்ட என்ன சொன்னேன் போகும் போது என்னையும் கூட்டிட்டு போன்னு சொன்னேன்ல இங்க எனக்குப் பதில் வேற ஆபிசர் வந்து இருந்தா மாட்டியிருப்பல்ல நதி” கண்டிப்புடன் வெளிவந்தது அவனின் வார்த்தைகள், நதிக்குப் புரிந்தது அவனின் கண்டிப்பில் ஒளிந்திருந்த அக்கறை.
“சாரி தீரா நான் இப்படித் தான், பூட்டி வச்ச சிறைக்குள்ள இருக்குற மாதிரி என்னால இருக்க முடியாது, அன்னைக்கும் இது தான் நடந்துச்சு, கார்த்திக் எவ்வளவோ சொன்னான் நான் தான் கேக்கல, அவனை மீறி நான் வெளிய வந்ததோட விளைவு தான், என் நண்பனை நானே சிறைக்குள்ள அடைச்சிட்டேன் ” என வருந்தியவளின் விழிநீர், தீராவின் இதயத்தை நனைத்தது. அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டவனின் விழிகளுக்கு அவள் பேயாகத் தெரியவில்லை, சிறுபிள்ளை தவறு இழைத்துவிட்டு அழுவதைப் போல் தோன்றியது.
“நதிமா.! நீ எந்தத் தப்பும் பண்ணலை கில்ட் ஆகாதே, எல்லாத்தையும் சரி பண்ணலாம்” என அவள் தலைக் கோதிவிட சற்று இதமாய் உணர்ந்தாள் கோதை பெண்ணவள்.
“முதல்ல இங்க இருந்து போகணும் தீரா” அவள் அவனிடம் சொன்னாள்.
“சரி நான் சமரை வெளிய கூட்டிட்டு போறேன், நீ வந்த வழியிலையே வெளிய வந்திரு, வெளிய என்னோட ஜீப் இருக்கும் அதுக்குள்ள போய் வெயிட் பண்ணு, இந்தா கீயை வச்சுக்கோ, இதை வச்சு ஓபன் பண்ணிக்கோ” எனச் சொல்லி அவன் சமரை நோக்கி நகர்ந்தான். நதியும் பாய்ந்து ஓடியிருந்தாள்.
பங்களா மீண்டும் ஒளி பெற்றது, மாடி படிகளில் இருந்து மெல்ல இறங்கினான் தீரேந்திரன்.
“சார் அதைப் பார்த்திங்களா.? கிடுகிடுவென நடுங்கிய படி கேட்டான் சமர்.
“யோவ் சமரு பயப்படாதயா, அதெல்லாம் ஒன்னுமில்லை நீ ட்யூட்டிய பாரு” என அவன் தோளில் கைப்போட்டு வெளியே அழைத்து வந்தான் தீரா.
“சார் அப்போ அந்தப் பேய்..?” கேள்வியாய் முகம் பார்த்தான் சமர்.
“நான் துரத்தி விட்டுட்டேன்யா அது பக்கத்து பங்களாக்கு எகிறி குதிச்சு ஓடிருச்சு” எனச் சொன்னவன் அங்கிருந்து நகர முற்பட்ட போது,
“சார் நிஜமாவே பேய் போயிருச்சா.?”
“மறுபடியும் வந்துச்சுன்னா என்னைக் கான்டெக்ட் பண்ணு” எனத் தீரா சொல்லி அகன்றான்
“என்னது மறுபடியுமா..?” அதிர்ந்தான் சமர்.

