32 – காற்றிலாடும் காதல்கள்
மாறுவேடத்தில் பதுங்கிப் பதுங்கி ஊருக்குள் வந்து மலைக்கோவிலின் படியேறும் மண்டபத்தில் படுத்துக் கிடந்த விஜயராகவன் வேகமாகக் குகைவாயில் நோக்கி ஓடிச் சென்றான்.
அந்த நேரம் தான் மின்னல் வெட்டியதும், அவனது காயம் பாதி மாயமாகியதும். அதில் அவனது உடல் நடுங்க கீழே விழுந்து மீண்டும் எழுந்து மிருணாளினி அருகே ஓடினான்.
அப்போது கிருபாலினி அவனது உடலைக் கூறாக வெட்டும் பார்வைப் பார்க்கவும், இந்திரன் அவனது தலையைச் சட்டென கையில் முளைத்த அருவாளினால் சீவினான். நொடி நேரத்தில் நடந்து முடிந்த இந்தச் சம்பவத்தில், அங்கிருந்தவர்கள் ஸ்தம்பித்து நின்றனர். அவன் தலை வேறாக முண்டம் வேறாகக் கிடப்பதை மிருணாளினி பார்த்து மென்னகைக் கொண்டாள்.
“டேய் இந்து.. என்னடா இப்படி பண்ணிட்ட?” யுகேந்தர் தான் முதலில் சுயநினைவு வந்துக் கேட்டான்.
இந்திரனும் அப்போது தான் சுயநினைவுக்கு வந்திருந்தான். எதிரே கிடந்த முண்டத்தைக் கண்டு விழிப்பிதுங்கி மயங்கிச் சரிந்தான்.
“இது முனியப்பன் செயல் யுகேந்தரா. இவ்வுடல் தானாக மறைந்துவிடும்.” என மிருணாளினி கூறும்போதே, அவ்வுடல் பாறை இடுக்குகளில் சென்று தீப்பற்றி எரிந்து, சாம்பலும் மழையில் கரைந்தது. விஜயராகவன் தலையும் அவ்வாறே மறைந்துவிட, மற்றவர்கள் அதிர்ச்சியில் மூச்சை விடவும் பயந்து அப்படியே நின்றனர்.
“அனைவரும் பௌர்ணமியில் மீண்டும் இங்கே கூடுங்கள். உங்கள் அனைவரின் பிறப்பானது இந்த குகையின் திறப்பை மையப்படுத்தி நிகழ்ந்தது. அவனது இறப்பும் குகையை மையப்படுத்தியது தான். அனைவரும் புதுச்சுனையில் நீராடி எல்லைக்கோவில் சென்று ஏகாம்பரநாதரை தரிசித்து இல்லம் செல்லுங்கள். இனி இந்த எல்லை எங்கள் கட்டுக்குள் இருக்கும். பௌர்ணமி வரையிலும் உங்களைத் தவிர யாருக்கும் இப்பாதை திறக்கப்படாது.” எனக் கூறியதும் மிருணாளினி மயங்கிச் சரிந்தாள்.
கயல்விழி அவளை ஓடிவந்துத் தாங்கிக்கொண்டாள். குகையின் மேலே இரண்டு உருவங்கள் சிரிப்புடன் அவர்களைப் பார்த்துவிட்டு மறைந்தன.
மிருணாளினி கூறியதைப் போல குகை வாயிலின் பக்கவாட்டில் புதிதாக ஒரு சுனைப் பள்ளம் உருவாகி நீர் ஊறத்தொடங்கியது. அதைக் கண்டவர்கள் ஆச்சரியம் கொண்டு அதிலிருந்த நீரைத் தெளித்து இந்திரனுக்கும், மிருணாளினிக்கும் தெளித்து மயக்கம் தெளிவித்தனர்.
“என்னடா நான் கொல பண்ணிட்டேனா? ஜெயிலுக்கு போயிடுவேணா?” என இந்திரன் பயத்தில் பிதற்றத் தொடங்கினான். ஆனால் மிருணாளினி கண்விழித்து எழுந்ததில் இருந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. அமைதியாக அந்த நீரில் இறங்கி மூழ்கி எழுந்தாள். அனைவரையும் அப்படியே செய்யும்படி செய்கையில் கூறிவிட்டு படியிறங்கி எல்லைக்கோவில் நோக்கி நடக்கத்தொடங்கினாள்.
மற்றவர்களும் அவளின் கட்டளையை மீறமுடியாமல் தவிப்போடு, அவளைப் பார்த்தபடி மூழ்கி எழுந்து அவளின் பின்னே ஓடினர். அவர்கள் உடல் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி அவளின் பின்னே செல்வதை அனைவரும் உணர்ந்தனர்.
எல்லைக்கோவில் சென்று எழுவரும் இறைவனை வழிபட்டு இல்லம் திரும்பினர். யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக அடுத்து வந்த இரண்டு நாட்களும் கடந்தது. ஆதர்ஷ் அடுத்தநாள் விஜயராகவனைத் தேடி ஊருக்குள் வந்தும் எங்கும் அவனைக் காணமுடியாமல், அவன் வந்துச் சென்ற சுவடுகள் கூடக் கிடைக்காமல் தோற்றுச் சென்றான்.
உமேஷுக்கு தோப்பு குடோனில் மயக்கம் தெளியத் தெளிய கள்ளை ஊற்றிக் கொண்டே இருந்தனர்.
கயல்விழி-யுகேந்தர் திருமண நாள் விடிந்தது. ஊரே அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தது.
“அம்மாடி கயலு. உன் கல்யாண நேரம் எல்லாம் நல்லாதாவே நடக்குது. நீ நம்ம வீட்டுக்கு வந்தா எங்க வம்சம் பல தலைமுறைக்கும் தழைச்சி வளரும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. என் பையன செல்லமா வளத்திட்டேன். இப்ப அவன் என் சொல்பேச்சு கேக்கறதே இல்ல. உனக்கு கொஞ்சம் சிரமம் தான் ஆனாலும் அவன அடிச்சி திருத்திடு. ஏன் எம்மகன அடிக்கறன்னு ஒரு வார்த்த உன்னைய நான் கேக்கமாட்டேன். சரியா.. அப்புடியே ஏலவார்குழலி நாச்சியார் கணக்கா அம்சமா இருக்க கண்ணு. ஐயர் கூப்பிட்டதும் வா கண்ணு.” என யுகேந்தரின் தாய் கயல்விழியிடம் பேசிவிட்டுச் சென்றார்.
அப்போது கீதன், இந்திரன், மிருணாளினி, அவினாஷ், அன்வர் ஐவரும் உள்ளே வந்தனர். அவர்களின் மனதிற்கினியவள் மணப்பெண்ணாக அமர்ந்திருக்கும் கோலம் கண்டுக் கண்களில் மகிழ்ச்சி நீர் பெருகியது.
“கயல்.. செம்ம அழகா இருக்க.. யுகேந்தர் பாத்தா அவ்ளோ தான். உனக்கு சந்தோஷம் தானே?” என மிருணாளினி அவளைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.
“இதே போல நீங்க எப்ப எனக்கு காட்சி தருவீங்க அண்ணியாரே? எங்கண்ணன் அவன் மனச சொல்லிட்டான். நீங்க தான் பதில் சொல்லாம இருக்கீங்க?” என கயல் கண்களில் ஏக்கத்தோடுக் கேட்டாள்.
“இன்னிக்கி உனக்கு தான் கல்யாணம் சோ உன்னப்பத்தி தான் பேசணும். இன்னும் ஒரு வாரத்துல பௌர்ணமி வருது. அதுக்குள்ள உன் கல்யாண சடங்கு எல்லாம் முடிஞ்சி கோவில திறக்க வந்துடுங்க ரெண்டு பேரும். புரியுதா?”
“மலை பாதை தான் மறைஞ்சி போச்சின்னு சொல்றாங்களே அண்ணி. எப்டி ஏறுவோம்?”
“அது நம்ம போனா தானா வழிவிடும். இப்ப எதப்பத்தியும் யோசிக்காம கல்யாணம் பண்ணிக்க. கிருபா உனக்கு வாழ்த்து சொல்றா. அங்க பாரு.” எனக் கூறவும் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே பார்க்க, கிருபாலினி சிரித்தமுகமாக வாழ்த்துக் கூறினாள். அங்கிருந்து பறந்துச் சென்று மலைகுகை வாசலில் அமர்ந்துக் கொண்டாள். நம்மவர்களும் சிரிப்புடன் கிருபாவைப் பார்த்தனர்.
“பொறுப்பா இரு புள்ள.. உன் புருஷனுக்கு கூறுவாரே கெடையாது நீ தான் சூதானமா இருந்து பாத்துக்கணும் சரியா. எதுவா இருந்தாலும் ஒரு குரல் குடு ஓடி வந்துருவேன்.” என இந்திரன் கூறிக் கண்கலங்கினான். தங்கையாக இருந்து அவனின் மனக்காயங்களை ஆற்றியவள் ஆயிற்றே. அவள் வாழ்வின் முக்கியமான நாளில் நிற்பதுக் கண்டு பேரானந்தம் கொண்டான்.
அவினாஷும், அன்வரும் அவளுக்கு வாழ்த்துக் கூறி வெளியே செல்ல, கீதன் அவள் அருகே சென்று அமைதியாக முகம் பார்த்தான். அவளை நாற்காலியில் அமரவைத்து கீழே அமர்ந்து அவளது மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான். மணப்பெண்ணை அழைக்கும் வரையிலும் இருவரும் ஒரு வார்த்தைப் பேசவில்லை. கயல் அவனது தலையை வருடியபடியே இருந்தாள். இந்திரன் அவர்களை அப்படிப் பார்த்துக் கண்கலங்கி வெளியே சென்றான். மிருணாவும் சிரித்தபடி வெளியே வந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஐயர் அழைப்பதாக ஒருவர் வந்து கூறவும்,“நான் இருக்கேன் கயல். அத மட்டும் மனசுல வச்சிக்க.” எனக்கூறி அவளை மணமேடை அழைத்துச் சென்றான்.
பெற்றோரும், உற்றோரும், ஆன்றோர் சான்றோர் மற்றும் தேவர்களின் ஆசியோடு யுகேந்தர் கயல்விழியின் கழுத்தில் மங்களநாண் பூட்ட, பூமாறியாக ஆசீர்வாதங்கள் அவர்களை வந்துச் சேர்ந்தது. அந்நேரம் வெளியே சடசடவென சிறு மழையும் பெய்து தங்களது வாழ்த்தைத் தெரிவித்தன.
அனைவரின் மனமும் நிறைந்து மணமண்டபம் மகிழ்ச்சியில் நிறைந்தது. கனகவேலுவும், ஜெயந்தியும் மிருணாளினி புடவைக் கட்டி நிற்பதைப் பார்த்துக் கிருபாலினியை நினைத்து ஏங்கினர். மிருணாளினி உருவில் கிருபாலினியைக் கண்டது போல ஒரு நொடி அவர்களுக்குத் தோன்றியது. மிருணாளினிக்கு திருமணம் செய்துப் பார்க்கும் ஆசையும் மனதில் தோன்றியது.
“என்னங்க.. மிருவுக்கு கல்யாணம் செய்யணும்ங்க.”
“நானும் இப்ப அதான் நெனைச்சேன் ஜெயந்தி. ஆனா மிரு என்ன சொல்வாளோ தெர்லயே. மொதல் இந்த குகைய அவ தொறக்கட்டும்.” எனக் கனகவேலு கூறவும் ஜெயந்தியும் அமைதியானார்.
அவர்கள் எதிர்பார்த்திருந்த பௌர்ணமியும் வந்தது. முதலில் அனைவரும் கோவில் சென்று இறைவனை வணங்கி, செந்தூர கணபதி முன்னே வந்து நின்றனர்.
மிருணாளினிக்கு மூடியிருந்த விழிகளுக்குள் காட்சிகள் ஓடியது. கண்திறந்ததும் வேகமாக இந்திரனை அழைத்துக் கொண்டு, தெற்கு பக்கமிருக்கும் முனியப்பன் கோவிலுக்குச் சென்றாள்.
செல்லும் முன் கீதனைக் குகை அடிவாரத்தில் காத்திருக்கும்படிக் கூறிவிட்டு சென்றாள். கீதனும் மற்றவர்களும் மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, மலைச்சாமியை அழைத்து தூணை இசைக்கத் தயாராக இருக்கும்படி கூறி,“சங்கு சத்தம் கேட்டதும் நீங்க தூண மீட்டணும். என்ன என்ன வகை சத்தம் எழுப்ப முடியுமோ அத்தனையும் வாசிங்க. உங்களால முடியவரைக்கும் செஞ்சிட்டே இருங்க.“ எனக் கூறி அனைவரும் மலைக்கோவில் நோக்கிப் புறப்பட்டனர்.
“என்ன புள்ள இப்படி இழுத்துட்டு ஓடற? என்னன்னு சொல்லு.” இந்திரன் உடன் ஓடிவந்தபடிக் கேட்டான்.
“தெக்கு முனியப்பன் பின்னாடி ஒரு சின்ன வளையம் இருக்கு. அத எடுக்கணும். அது தான் இன்னொரு சாவி.” எனக் கூறியபடி வேகமாக இருவரும் அங்கே சென்று முனியப்பனை வணங்கிவிட்டு, முதுகில் இருந்த வளையத்தை சுவரில் ஏறி எடுக்க முனையும்போது, “இந்த பக்கமா வாடா.. நானே எடுத்து தரேன்..“ என அமர்ந்திருந்த முனியப்பன் சிலைத் திரும்பிக்கூறவும், இந்திரன் பயந்து கீழே விழும்போது முனியப்பன் கைகள் அவனைத் தாங்கித் தரையிறக்கிவிட்டு, முதுகில் ஒட்டிக் கொண்டிருந்த வளையத்தை எடுத்துக்கொண்டு கிருபாலினியைப் பார்த்துவிட்டு, மிருணாவிடம் பார்வைத் திருப்பி, “நீர் வளையத்த சுனைல சேத்திடு. வளையத்த உருவாக்க ஊதுகுழல் சுனை மேல வரும். 2 நிமிஷம் தான். அதுக்குள்ள நீ ரெண்டு வளைத்த ஒண்ணா சேத்திடணும். மிச்சம் உன்கூட பொறந்தவ பாத்துப்பா.” எனக் கூறி வளையத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் சிலையானார்.
இருவரும் அதிர்வில் இருந்து வெளிவர முடியாமல் திணறி நிற்க, கிருபாலினி மிருணா உடலில் புகுந்து இந்திரனை இழுத்துக் கொண்டு மலைக்குகை நோக்கி ஓடினாள்.
அவள் வந்து நின்றதும் கீதன் மற்றொரு வளையத்தைப் பார்த்து வாய் திறக்கும்போது, படிகள் கண்களுக்குத் தெரிந்தது. வேகமாக அனைவரும் ஒருவார்த்தையும் பேசாமல் படிகளில் ஏறினர்.
அவர்கள் சென்று நிற்கவும் சந்திரன் உச்சியை அடையவும் சரியாக இருக்க, அன்வர் சங்கை ஊதினான். மலைச்சாமி விரல்களால் எட்டாவதுத் தூணை மீட்டவும், குகை மூடியிருந்தப் பெரும்பாறையில் சிலை வடிவங்கள் தோன்ற ஆரம்பித்தன.
அனைவரும் விழிவிரித்து ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பாறைக்கு ஓரடி முன்னே ஒரு சிறிய கரிய கல் அந்தரத்தில் மிதந்துக் கொண்டிருந்தது.
மிருணாளினி அதை எடுத்து மூன்று வளையங்களையும் பொருத்தி அந்த தாழ் பொருந்தும் அச்சு உருவாகக் காத்திருந்தாள்.
அன்வர், அவினாஷ் இருவரும் கையில் இருந்தக் குறிப்புகளைக் கூறியபடித் தயாராக இருக்கும்படி சொல்லிக்கொண்டிருந்தனர். யுகேந்தர் தன் காதல் மனைவியுடன் அவளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான்.
அந்தப் பாறையில் உருவங்கள் உருவாக உருவாக இவர்களின் உடல்கள் மெல்ல எடை இழக்க ஆரம்பித்து அனைவரும் காற்றில் மிதந்தபடி நின்றனர்.
“டேய் மறுபடியுமா?” என இந்திரன் கத்தவும் அனைவரும் அவனை அமைதியாக இருக்கும்படி கூறி, மெல்லக் குகையை நெருங்கினர்.
மிருணாளினி மட்டும் தரையில் கால் பதிய நின்றிருப்பதுக் கண்ட கீதன், “மிரு.. நாங்க மட்டும் மிதக்கறோம்.”எனக் கூறும்போது வானில் இருந்து 27 தேவதைகள் இறங்கி வந்தனர்.
“ஏழிசை.. நேரம் நெருங்கியது.. வேகமாக நீர் வளையங்களைக் கோர்த்து ஒன்றாக்கு..” என ஒரு தேவதை கூறியதும் சுனையருகே ஓடினாள்.
சுனையின் மேலே ஒரு கல் ஊதுகுழல் மிதந்துக் கொண்டிருந்தது. மிருணாளினி சட்டென நீரில் குதித்து, மூச்சைப் பிடித்து அந்த குழல் மூலமாக வளையங்களை உருவாக்கினாள். 75 நொடிகள் பல முறை முயன்றும் வளையங்கள் ஒன்றாக இணையவில்லை.
“ஏழிசை.. இன்று விட்டால் மீண்டும் நீ மீண்டும் 48 ஆண்டுகள் கழித்து தான் இந்த குகையை திறக்க முடியும். விரைவாக வளையங்களை ஒன்றாக்கு.”
“இதற்குமேல் என்னால் இந்த பூமியில் தங்க இயலாது.” எனக் கூறிவிட்டு குகையின் உள்ளே வீற்றிருக்கும் கற்பக நாச்சியாரை மனதார வணங்கி முயற்சிக்க அடுத்தடுத்து வந்த இரண்டு வளையங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே வளையமாக காற்றினில் மிதந்து குகையின் வாயில் உச்சியை அடைந்தது.
நீர்ப்பட்ட இடத்தில் சிம்மமுகம் தெரிந்தது. அதன் கீழே வளையத் திறப்பை பொறுத்தும் அச்சு கண்ணில் பட்டதும், அனைவரும் மிருணாளினியை மேலே தூக்கிக் கொண்டு மிதந்தனர்.
கீதன் அந்தத் திறப்பை மிருணாளினியிடம் கொடுக்கும்போதே அந்தத் திறப்பு ஈர்ப்பு விசையில் அந்த அச்சில் சென்றமர்ந்தது.
இப்போது மிருணாளினி மிதக்க மற்றவர்கள் தரையில் நின்றனர். அவர்கள் கீழே நின்றதும் அடைத்திருந்தப் பாறைக் கதவாக மாறித் திறந்தது.
உள்ளே உலகையாளும் அம்பாள் கற்பக நாச்சியாராக 8 அடி சிலையாக வீற்றிருந்தாள். ஒரு நொடி நம்மவர்கள் கண்களுக்கு அம்பாள் நிஜமாகவே அங்கு அமர்ந்திருப்பது போன்ற பிரம்மையைத் தான் தோற்றுவித்தது. அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா?
மினுமினுக்கின்ற சிலை மெல்ல மெல்ல கருநிறம் கொண்டது. அவள் மேனி தாங்கிருந்த நகைகளும் மெல்ல சிற்பங்களாக அவளது மேனியில் படியத் தொடங்கியது. மிருணாளினி முழுதாக ஏந்திழையாக உருவம் பெற்று சிறுபெண்ணாக நின்றாள். அவள் கண்மூடிப் பிரார்த்தித்துக் கைகளை அம்மனின் தலைமேல் கீழ்பக்கமாகக் கூப்பி வைக்க, அவளது கைகளில் இருந்து நீரும், பன்னீரும், சந்தனமும், குங்குமமும் என 108 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. நம்மவர்கள் தன்னை மறந்து, உலகை மறந்து அம்பிகையின் கண்களில் நிறைந்திருக்கும் ஜீவனில் லயித்திருந்தனர்.
அபிஷேகத்தின் போது அம்மனின் உடலில் இருந்து நவரத்ன கற்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் வந்து விழுந்தது. அதை அவர்கள் பயபக்தியோடு கண்களில் ஒற்றிக்கொண்டு மீண்டும் அன்னையின் முகம் கண்டு அமர்ந்துவிட்டனர்.
சுமார் இரண்டு நாழிகை அங்கே அம்மனுக்குக் காற்றினில் மிதந்தபடியே ஏழிசை அபிஷேகத்தைச் செய்துக்கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு வஸ்துவாக அபிஷேகங்கள் செய்யச் செய்ய, அந்த வாசனை மெல்ல மெல்ல மலை முழுதும் வியாபித்து அந்த ஊரினையும் வியாபித்தது.
நல்லுறக்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் அந்த வாசனையை உணர்ந்துத் தூக்கத்திலேயே சந்தோஷித்தனர்.
அபிஷேகங்கள் முடிந்ததும் வானிலிருந்து வந்திருந்த 27 தேவதைகளும் ஏழிசையை (எ) மிருணாளினி குகையின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். அவளின் காதில் சில விஷயங்களைக் கூறிவிட்டு மீண்டும் அவளை மற்றவர்களிடம் இறக்கிவிட்டனர்.
“கீதன்.. சுனை தண்ணிய உள்ள கொண்டு போகணும்.” எனக் கூறினாள்.
“கைல ஒண்ணுமே இல்ல புள்ள எப்படி கொண்டு போறது?” இந்திரன் கேட்டான்.
“இது கைல கொண்டு போறது இல்ல. வேற ஏதோ சூட்சமம் இருக்கு. மிரு தெளிவா சொல்லு.”கீதன் கேட்டான்.
“நாலு நாழிகைல அம்மன குளிர்விக்கணும்.”
“டேய் நம்ம கைல தான் இந்த கல்லு இருக்கே இத வச்சி பாதை உண்டாக்கலாம்ல?” என அன்வரும், அவினாஷும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
“இது பிரசாதம் டா.” இந்திரன் கூறினான்.
“இருக்கட்டும்… அம்பாளுக்கு இதவச்சி நம்மலாள வேலை செய்யமுடியும்ன்னா தாராளமா செய்யலாம்ல. இது எல்லாமே ரொம்ப உறுதியா இருக்கு. கண்டிப்பா உடையாது.” அன்வர் அக்கற்களின் திடத்தன்மை உணர்ந்துக் கூறினான்.
“சரி முயற்சி செஞ்சி பாத்துடலாம். அம்மன பாத்ததும் புதுசா பொறந்தமாதிரி இருக்கு. இதவச்சி செய்யலாம்னு தான் தோணுது.” யுகேந்தர் முற்றிலும் ஆளே மாறியது போல பேசினான்.
“சரி. சுனை உயரத்துல தான் இருக்கு. அங்கயிருந்து தண்ணிய நம்ம உள்ள கொண்டு வர தோது இருக்கா பாக்கலாம்.”எனக் கயல் கூற அனைவரும் வெளியே வந்துச் சுனையின் உயரத்தையும், குகையின் உச்சியையும் பாறையின் மேலேறிப் பார்த்தனர்.
“டேய் கீதா. இங்க பாரு இங்க இன்னொரு ஊத்து ஊறுது. இத நம்ம குகை உச்சிக்கு கொண்டு போய் அந்த பாறைய கொடஞ்சி எடுத்தா போதும். அம்பாள் பாதத்துல தண்ணி பட்டு கீழே நிக்கும்.” என இந்திரன் கூறியதும் மிருணாளினி அவனைக் கட்டிக்கொண்டாள்.
அம்பாள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேர் மேலே இருக்கும் பாறைப் பிளவில் அவர்களுக்குக் கிடைத்தப் பாதிக்கையளவு நவரத்னக் கற்களைக் கொண்டு மிருணாளினி தவிர அனைவரும் பாறையில் கொத்தி இழுக்க, பாளம் பாளமாக பாறை மேற்பரப்பு உடைந்தது. அதைக் கண்டவர்கள் வேகமாகக் கற்களைக் கொண்டு நீருக்குப் பாதை அமைக்க, அம்பிகையின் காலடியில் நீர்பட்டுப் பீடத்தின் வழி கீழிறங்கி தேங்கி நின்றது. தேங்கிய நீர் முழுதாக நிறைந்து வழிந்து வெளியேறாமல் தழும்பியே நின்றது.
நீர் தழும்பி நிற்கவும் நான்கு நாழிகைகள் முடியவும் சரியாக இருக்க, திறந்த பாறைக் கதவுகள் நிரந்தரமாக திறந்தே நின்றது. கற்பக நாச்சியம்மனும் காருண்யம் ததும்பும் கண்களோடு தன் மக்களைக் காண, விரிந்த புன்னகையோடு நிமிர்ந்தமர்ந்து அபயகரம் கொண்டு, மறுகையில் சூலம் தாங்கிக் கம்பீரமாக சிம்மாவாகனத்தோடு நல்ஆத்மாக்களின் கரு காக்க வந்தமர்ந்தாள்.
வடக்கு முனியப்பனும், தெற்கு முனியப்பனும் அம்பாளைத் தரிசித்து மனம் பூரிக்க இவர்களையும் வாழ்த்தி, புதுசக்திப் பெற்று காவல் காக்க அமர்ந்தனர்.
ஏழிசை மிருணாளினியாக உருமாறி நிற்க, அவளுடலில் இருந்து கிருபா வெளியே வந்து அவளிடம் விடைப்பெற்று, வான்விட்டு வந்திருந்த 27 தேவதைகளுடன் விண்ணுலகம் நோக்கிப் பயணித்தாள்.
மற்றவர்களும் நவரத்னக் கற்களை கைகளில் பிடித்தபடி நடக்கும் அதிசயங்களைக் பார்த்து மெய்மறந்து நின்றிருக்க, அவர்கள் அணிந்திருந்த நகைகளில் அந்த கற்கள் தானாக இடம் ஏற்படுத்தி அமர்ந்துக் கொண்டன.
சில நொடிகள் அந்த திவ்யதரிசனத்தைக் கண்டதும் அனைவரும் நினைவிழந்து அம்மன் பாதத்தின் முன்னே கிடக்க, மலைச்சாமி அங்கே ஊர் மக்களோடு வந்துச் சேர்ந்தார்.
விஸ்வநாதனும், வெள்ளைச்சாமியும், ராமசாமியும் நெஞ்சம் தடதடக்க குகையின் உள்ளே வந்து பார்க்க, தங்கள் வாரிசுகள் அங்கே மயங்கிக் கிடப்பதுக் கண்டு அவர்களை எழுப்பினர்.
எழுந்தவர்களுக்கு எல்லைக் கோவிலில் இருந்தது மட்டுமே நினைவில் இருக்க, மற்றவைத் தேவரகசியமானதால் மறந்துப் போனது.
நாச்சியம்மனை வணங்கி விட்டு, ஊர்மக்கள் அனைவரும் நம்மவர்களைச் சூழ, பெரியவர்கள் அவர்களை மெல்ல வெளியே அழைத்து வந்து ஓரிடத்தில் அமரவைத்தனர்.
“என்னப்பா நடந்தது?”அப்துல் கேட்டார்.
“எங்கள எதுவும் கேக்காதீங்க தாத்தா. மிரு சொன்ன குறிப்பு வச்சி இங்க வந்தோம். அதுக்கபறம் ஒண்ணுமே ஞாபகம் இல்லை. எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.” என கீதன் கூறவும் மேற்கொண்டு பேசாமல் அவர்களை இல்லம் அனுப்பிவைத்தனர். அனைவரும் தோப்பு வீட்டிற்குள் நுழைய கனகவேலும், ஜெயந்தியும் மிருணாவைக் கட்டிக்கொண்டனர்.
“நான் தூங்க போறேன்.”என அவர்களைத் தள்ளி நிறுத்திவிட்டு கயலுடன் தன்னறைச் சென்றாள்.
ஆண்கள் அனைவரும் தோப்பில் இருந்த ஓலை வேய்ந்த சிறு குடிலில் படுத்துறங்கினர். அன்று அதிகாலை உமேஷ் போதைத் தெளிந்து அங்கிருந்துத் தப்பிச் சென்று ஆதர்ஷிடம் சென்றுச் சேர்ந்திருந்தான்.
அதன்பின் குகைக் கோவிலை செப்பனிடும் பணிக் குறித்தும், கோவில் பூஜைகள் தொடர்வது குறித்தும் ஊர் பெரியவர்கள் ஒருமனதாகப் பேசி முடிவெடுத்தனர்.
நம்மவர்கள் நன்றாக உறங்கி எழுந்துத் தயாராகி குகைக்கோவில் வந்தனர். அங்கே கற்பகநாச்சியார் பரிபூரண அலங்காரத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். இனி அவளது காருண்யத்தில் அனைவரின் வாழ்வும் நிறைவுடன் இருக்கும்…
சுபம்.
அன்புடன்,
ஆலோன் மகரி.