
போக்குவரத்து சற்று நேரிசலாகக் காணப்பட்டது அன்று. மலை இறங்குவது தாமதம் ஆக மெல்லமாய் சென்றது இருவரையும் சுமர்ந்த தார்.
லாவெண்டர் நிற சந்தேரி காட்டன் புடவை அணிந்திருந்தவள், சிவாவின் பார்வையைப் பொருட்படுத்தாது திருமாங்கல்யத்தை அணிந்து கொண்டாள்.
அத்தனை அழுத்தமானப் பார்வை அவனிடம். உள் கன்னத்து சதையைக் கடித்தபடி அவனின் உணர்வுகளை அவன் அடக்க போராட, “எத்தன மணிக்கு காந்திபுரம் போகனுங்க” என்றவள் பேச்சு அவனின் பொறுமை தகர்த்தது.
“என்னடி பிரச்சினை உனக்கு? அதான் நான் கட்டினத போட மாட்டேன்னு இத்தன நாள் இருந்தையே, அப்புறம் எதுக்கு இப்போ போடுற? கழட்ட வீசித் தொலயேன்” என்றான் அதீத கோபத்துடன்.
நெஞ்சம் படபடத்தது அவனுக்கு. எத்தனை எளிதாய் எடுத்து தன்முன்பே கழுத்தில் அணிகிறாள் என்ற ஆத்திரம். பல்லைக் கடித்து அவன் கோபத்தைக் குறைக்கப் பார்க்க, எங்கு முடிந்தது?
ஒரு கட்டத்தில் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டான். அவனால் சுத்தமாய் முடியவில்லை கோபத்தைக் கட்டுப்படுத்த. எத்தனை தான் அவனும் தாங்குவான் என்று வேண்டாம்.
ஆசையாய் என்று எல்லாம் இல்ல, மனதில் ஏதோ ஒருவித உணர்வுடன் தான் அன்று அவளுக்கு அந்த மாங்கல்யத்தை அணிவித்தான். அது அவள் கழுத்தை அலங்கரித்தது என்னவோ வெறும் நான்கு நாட்கள் மட்டும். அதன் பின், இதோ இப்போது தான் அதை அவள் கழுத்தில் பார்க்கிறான்!
அவளுக்கு அவன் அணிவித்ததுப் பிடிக்கவில்லை என்று அவனே யூகம் செய்த நொடி, ஆணாய் மனதளவில் அவன் செருப்படி வாங்கியது போல் இருந்தது.
இருந்தும் அவளின் நிலையுணர்ந்த பின் அதை மறந்திருந்தான் தான். இருந்தாலும், கணவனாய் அவன் அணிவித்ததை அவள் ஏற்கவில்லை என்பது எத்தனை பெரிய அசிங்கம்.
பொறுத்தான், எல்லாம் பொறுத்தான். ஷக்தியின் காதலுக்காக, அவன் மனைவிக்காக எல்லாம் பொறுத்தான். அதைவிட அது கொடுத்த வலிகளைத் தாங்கினான்.
ஆனால் அவன் எதிரே அதை அவள் ஏதோ ஒரு பொருளைப்போல் அணிந்தது அவனால் ஏற்க முடியவில்லை.
‘என்னடா வாழ்க்கை இது’ என்ற வெறுப்பு தான் மண்டியது.
இடையில் கைக்குற்றியபடி நின்றிருந்தவன் அணிந்திருந்த இளம் பச்சை நிற சட்டை முழுவதும் அவனின் வியர்வை படிந்திருந்தது. அத்தனை அழுத்தம் அவனைத் தாக்கிக் கொண்டிருக்க, இங்கு ஷக்திக்கோ அவளின் செயல்கள் அனைத்தும் தவறானது போல் ஒரு தோற்றம்.
போதும் இனி எல்லாம் தான் மாற்றினால் அன்றி மாறாது என்று தோன்றிவிட, வண்டியில் இருந்து இறங்கினாள்.
உள்ளுக்குள் அவளுள்ளும் கனன்றது ஒரு தீ!
அதை அவனின்றி வேறார் புரிந்து கொள்வர் என்று இவள் எண்ணியிருக்க, அவள் அறிந்த அவனோ அதை ஒரு துகளளவு கூட எண்ணி இருக்கவில்லை.
மூச்சு வேக வேகமாய் எடுத்துவிட்டவள் தன் உள்ளக்கொதிப்பை அடக்கப் பார்க்க, வழிதான் கிடைக்கவில்லை.
சமநிலை அடையாது கண்களை மூடி ரோட்டில் நின்றிருந்தாள் குறையாத கோபத்துடன் பெண்ணவள்.
அவனும் அவளுக்கு நிகர் கோபமும் ஆதங்கமும் ஏன் அவமானமும் சூழ நின்றிருந்தான் அவளைப் பார்க்க எண்ணாது.
“ஷிவா” என்றாள் அவனை நோக்கி.
எந்தவித மாற்றமும் இல்லை அவனிடம்.
‘ராட்சசி’ என்றொரு முணுமுணுப்பு அவனிடம்.
“பிளடி ஹெல் (Bloody Hell)” அவள் கத்தியது காதில் கேட்டது.
முந்தானையை இடுப்பில் சொருகியவள் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து ஜீப்பை ஆன் செய்தால். அந்த சப்தமும் அவன் காதை அடைந்தது.
“இப்போ நீ வந்து வண்டில ஏறல, வண்டி நேர டீலாவில தான் போய் விழும்” என்றவளின் குரலால் தூக்கி வாரி போட்டது அவனிற்கு.
அதில் மீண்டும் ஆத்திரம் மீதுற, “ஹேய் பைத்தியக்காரி, என்ன சாவடிக்கனே வந்திருக்கியா” என்று கேட்டபடி முன்னேறியவன் அவள் இருந்த கதவைத் திறக்க முற்பட,
“அந்த பக்கம் வந்து ஏறுடா” என்றாள் கடுப்புடன்.
அவள் முகத்தில் இருந்த ஆத்திரமும் கோபமும் சிவாவை அசைத்துப்பார்த்தது.
அவள் புடவை முன்புறம் முழுவதும் வியர்வையால் நனைந்திருக்க, மார்பில் மின்னியது பொன் தாலி!
கண்கள் இடுங்க அவளை பார்த்தபடியே வண்டியில் ஏறினான். அடுத்த நொடி ஒரு சிறு குலுக்கலுடன் தாரை அவள் இயக்கிய வேகம், அப்பா அலறிவிட்டான் சிவனேஷ்.
அவள் அந்த கொண்டை ஊசி வளைவில் ஒற்றைக் கையில் ஸ்டேரிங்கை திருப்பி, கீர் மாற்றி அத்தனை வேகத்தில் வண்டியை ரிவஸ் எடுத்த விதம், அங்கு சாலையில் சென்ற இளைஞர்கள் விசில் அடித்தனர்.
“ஷக்தி, என்ன பண்ணுற நீ? மூள மழுங்கிடுச்சா” என்றவன் பேச்செல்லாம் அவள் காதில் வாங்கவில்லை.
போக்குவரத்து சீராகியிருக்க, மலையில் சீரியது ஷக்தியின் கையில் தார்.
அவளின் வேகத்தைப் பார்த்தே தன்னால் சீட் பெல்ட் போட்டுக்கொண்டான் சிவா.
அவள் திரும்பவும் குன்னூர் நோக்கி செல்வதை புரிந்தவன் கோபத்துடனே, “ஊருக்கு போக டைம் ஆகிடும் ஷக்தி. புரியுதா உனக்கு” என்று பல்லைக் கடிக்க,
“மூடுடா வாய” என்று ஆங்காரமாய் கத்தியிருந்தாள் பெண்ணவள்.
மேலும் மேலும் அவனின் கோபத்தைத் தூண்டிக்கொண்டிருந்தாள் அவளின் செயலால்.
இடையில், “ஈசா, அம்மாவ கூட்டிட்டு வெலிங்டன் முருகர் கோவிலுக்கு வா. வரும்போது..” என்றவள் நிறுத்தி சிவாவை ஆழ்ந்து ஒரு பார்வைப் பார்த்தவள்,
“எனக்கு ஒரு தாலி வாங்கிட்டு வாங்க” என்றுவிட்டு பட்டென்று வைத்துவிட்டால்.
“ஏய்” என்று கிட்டத்தட்ட ஆத்திரம் அதீதமாய் உருமாறக் கத்தியவன், “நிறுத்துடி வண்டிய” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“வண்டி வர இடத்துல என்ன பண்ணுற நீ? விடு ஷிவ்” என்றவள் அவனைத் தள்ள, “உன்ன வண்டிய நிறுத்த சொன்னேன்டி. வர கோபத்துக்கு அரஞ்சிடப் போறேன்” என்றவன் பேச்சும் உடல் மொழியும் நிமிடங்கள் கடக்க மாறிக்கொண்டிருந்தது.
‘தாலி வாங்கிட்டு வாங்க’ என்ற சொற்கள் சிவாவைக் குற்றிக் கிழிக்க, அவ்வளவு தான் இனி தாங்காது என்று நினைத்தவன் கோபம் ஒரு கட்டத்தில் வெடித்திருந்தது.
“*** நிறுத்துடீ” என்ற உறுமியபடி ஆள் இல்லாத ஒரு இடத்தில் அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் ஸ்டியரிங்கை ஒடித்து, ஹேன்ட் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியிருந்தான்.
“ஷிவா” என்றவள் கத்த, அடுத்த நொடி இடியாய் இறங்கியது அவனின் கரம் அவளின் கன்னத்தில்.
“கொன்னு போட்டுடுவேன்.. தாலி வாங்க சொல்லுற அளவுக்கு போயிட்டியா, ஹான். என்னடி, இதுக்கு பேரு? என்னடி?” என்றவன் அவள் கழுத்தில் கட்டியிருந்ததைக் காட்டிக் கேட்க, அதிர்வு மாறாது அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.
“என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நீ ஆடுறதுக்கெல்லாம் நானும் கூட சேர்ந்து ஆடுவேன்னு நினைக்கிறயா..” என்று திரும்பவும் அவன் கையோங்க, அவன் கையைப் பற்றினால் ஆணங்கு.
அதில் தெரிந்த உறுதியில் அவன் அவளை முறைக்க, “இந்த ஒரு தடவ மட்டும் என் ஆட்டத்துக்கு ஆடுங்க” என்றாள் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு.
என்ன உணர்வை வெளிப்படுத்தி என்ன நடக்க? அவன் தான் அவளை புரிந்துகொள்ளவே இல்லையே என்ற ஆதங்கம் அவளிடம்.
தன் மனநிலையும் நுண்ணுணர்வும் ஏன் இவளுக்கு விளங்கவில்லை என்ற கோபம் அவனிடம்.
ஆக இருவரின் புரிந்துணர்வு அங்கு வேலையில்லாது வெட்டியாய் போயிருந்த தருணம்.
முருகன் சந்நிதியில் நின்றிருந்தனர் லாவண்யாவும் ஆராவமுதனும். மனது கிடந்து அடித்துக்கொண்டது இருவருக்கும்.
ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் அவர்களை சூழ்ந்தாலும் ஷக்தியின் பேச்சைக் கேட்டு வந்திருந்தனர் தாலியுடன்!
இடையில் சிவா வேறு அழைத்து தாலிக்கானப் பணத்தை கொடுத்தபோது ஏதோ ஆராவமுதனுக்கு புரிவது போன்று இருந்தது.
அதையெல்லாம் புறம் தள்ளி இதோ இருவரும் தவிப்புடன் நிற்கின்றனர் கோவிலில்.
தார் வந்து கோவிலின் பக்கவாட்டில் நின்றது. இறுகிய முகத்துடன் சிவா இறக்க, அவன் அடித்தக் கைத்தடம் முகத்தை அலங்காரம் செய்த படி இறங்கினாள், ஷக்தி ஆராதனா.
அவளிடம் எப்போதும் இருக்கும் கம்பீரம் இன்று முற்றும் குழைந்திருந்தது. அந்த கம்பீரம் அவளுக்கும் அவளின் வேலைக்கும் அத்தனை அழகைத் தரும்.
“ஆரா” என்று லாவண்யா அவள் முகத்தைப் பார்த்து அதிர, நடை தளர்ந்து நடந்து வரும் தங்கையை பார்த்தவன், “சிவா” என்று கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
“என்னடா பண்ண” என்று கிட்டத்தட்ட சிவாவின் காலரை பற்றிக் கொண்டு சண்டையில் இறங்கிவிட்டான் ஆராவமுதன்.
“ஈசா, ஃப்ளீஸ் அப்புறம் பேசிக்கலாம்” என்றவள் லாவண்யாவைப் பார்க்க, அவரோ, “என்னத்தடி அப்புறம் பார்க்க? கன்னம் எப்படி செவந்து போய் இருக்கு? என்ன சிவா இது?” என்று லாவண்யா கேட்க, பதிலில்லை அவ்விடம்.
“ம்ம்ப்ச், அம்மா நீ வா, நான் சொல்லுறேன்” என்றவள் ஆராவமுதனையும் அழைத்துக்கொண்டு கோவிலின் உள் சென்றால்.
“ஏய் என்னாச்சுன்னு சொல்லேன்டீ ஆரா”
“வாய்ய மூடிட்டு கொஞ்சம் வரியா நீ. இருக்கற எரிச்சல்ல உன்ன என்னாவது சொல்லிடப் போறேன்” என்றவள்,
“எனக்கு இந்த தாலி வேண்டாம் ம்மா” என்றவள் சொல்லச் சொல்ல நெஞ்சில் நீர் வற்றிப் போனது லாவண்யாவிற்கு.
“ஏய் ஆரா” என்றவர் வாயில் கை வைக்க,
“ம்ம்ப்ச் அம்மா, இது தான் வேண்டாம்னு சொன்னேன். என்னமோ ஷிவாவையே வேண்டாம்ன்னு சொன்ன மாதிரி பார்க்கற?” என்றவள் சொல்லக் கேட்டபடி தான் நின்றிருந்தான் சிவனேஷ்.
‘அத வேற சொல்லுவையா நீ’ என்று அதற்கும் மனதில் அவளைத் தாளித்தான் அவள் கணவன்.
“நல்ல நேரம் எப்போன்னு போய் குருக்கள் கிட்ட கேளு. அப்படியே இப்போ இத கழட்டலாமான்னு கேளு” என்றவள்,
“ஈசா, அம்மா கூட போ” என்றுவிட்டு கையைக் கட்டி ஒரு மூலையில் நின்றுக்கொண்டாள்.
குருக்களோ ஆராவமுதனிடம் மாலையும் இன்ன பிற பூஜை சாமான்களும் வாங்கிவர பணித்தவர், லாவண்யாவிடம் பேசலானார்.
கண்கள் மூடி நின்றிருந்தவள் மூளைக்குள் பல்வேறு கேள்விகள், முகங்கள், பரிகாசங்கள் அதனால் வந்த அழுத்தங்கள் என்று ஒன்று ஒன்றாய் அவளை மெல்ல திங்க ஆரம்பிக்க, கண்ணீர் துளிகள் மெல்ல வெளியேறியது அவள் கண்ணில் இருந்து.
அவள் நம்பிய வரை ஏமாந்த வரை போதும் என்று வெளியே வர முயற்சிக்கும் ஒரு விஷயத்தில் இருந்து எத்தனை பேர் அவளை இப்போது வரை விடாது பிடித்து வைத்திருக்கின்றனர்.
அதை விட்டொழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு படியாக அவள் பார்த்து, நிதானித்து, பத்திரமாய் வைக்க நினைக்க அவளுடன் இருப்போர் அவளையே நிந்திக்கிறது தான் பாவையின் உயிரை அறுக்கிறது.
“சாமி, அப்பா எப்பவும் உங்கூடவே தான் இருக்கேன்டா” என்றவள் தகப்பன் குரல் காதோடு கேட்க, “ப்பாஹ்” என்றவள் உடைந்துவிட்டாள்.
சட்டென்று கண்விழித்தவளுக்கு ஒன்றும் புரியாது அலங்க மலங்க விழித்தாள். கண்ணீர் மட்டும் குறைவில்லாது வெளியேறியது.
எங்கோ பெயர் தெரியாத, மொழி தெரியாத இடத்தில் தொலைந்த உணர்வின் பிடியில் இருந்தாள் நங்கை.
நெஞ்சில் ஏதோ சொல்லத் தெரியாத ஒரு வலி, பாரம் ஏறிய உணர்வு. “ப்பாஹ், வா ப்பா” என்றவள் நெஞ்சைப் பிடித்துத் திரும்பவும் அழைக்க, அங்கு யாரும் இல்லை.
உண்மைக்கும் அவளிடம் இப்போது யாரும் இல்லை. அவளை புரிந்தவர்களும் இல்லை, கொண்டவனும் இல்லை, நம்பியவனும் இல்லை, அவள் தோள் சாய்ந்து அழ யாருமே இல்லை.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன சிவா சக்தி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அடிச்சுட்டீங்களே …
அது அப்படிதான். பின்னாடி அவனே வாங்குவான் நல்லா 😁
உணர்வுகளின் கலவையாய் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலாமல் தங்களது நிலையிலேயே நிற்கின்றனர்.
அதனை அவள் உணர்வுபூர்வமாக பாவிக்கவில்லை. எனவே தேவை எழும் சமயம் எடுத்து அணிந்து கொள்கிறாள்.
அவனுக்கோ அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில் அணிவித்ததை அவள் பொருட்டாக மதிக்கவில்லை என்ற ஆதங்கம்.
அது அணிவிக்கப்பட்ட சூழ்நிலையும், அந்த நேரத்தினுடைய உணர்வுகளும் அவளை உறுத்தியதால் கூட அதனை கழட்டி வைத்திருக்கலாம்.
அழகு 😍
கவிதை போல் சொல்லிட்டீங்க