Loading

KKEN-3

அவனிடம் அப்படி என்ன இருக்கிறது? இவளுக்குத் தெரியாது. இவள் தான் இன்னும் அவன் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லையே?   தினமும் அவனே ஏன் வர வேண்டும்? கேன்சல் செய்து மீண்டும் புக் செய்த போதும் அதே வண்டி  எண்ணே  வந்தது. மனதில் சிறு பயம் எட்டிப் பார்த்தது. முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அமைதியாக ஏறி  அமர்ந்தாள். முதல் முறையாக போனைப் பாராமல் அவனை பார்த்துக் கொண்டு வந்தாள் . கண்ணாடி பார்த்து தான் ஓட்டினான். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தினமுமே அப்படிதான். இன்றும் அப்படிதான். இறங்கும்போது ஸ்கேனில் பணம் செலுத்திவிட்டு இறங்கி கொண்டாள் .

 அவனோ தயங்கியபடியே அழைத்தான்.

“மேடம்”

“எஸ்!” லேசாக திரும்பி புருவம் சுருக்கினாள் .

“நீங்க தினமும் ஆட்டோவிலேதான் வருவீர்களா?”

“ஏன்?”

“இல்ல மேடம்! உங்க வீட்டு  பக்கத்துலதான் நானும் இருக்கேன். நீங்க எப்ப வரணுன்னு சொல்லறீங்களோ அப்ப நானே வரேனே.”

“ஏன்? நான் இதுல புக் பண்ணறதுல என்ன ப்ராப்ளம்? மனதில் உறுத்தல் ஆரம்பித்தது.

“நீங்க  புக் பண்ணா  என்ன காசு வருமோ அத  அப்படியே எங்கிட்ட குடுத்தீங்கன்னா நல்லா  இருக்கும்.”

“ஏன் ?” என்பது அவளின் பார்வை கேட்டது.

” தங்கச்சி கல்யாணத்துக்கு கடன் வாங்கி இருக்கேன். அது தினமும் காசு கட்டணும் . நீங்க கைல காச குடுத்தா கொஞ்சம் உதவியா இருக்கும் அதான்..

 தயங்கி தயங்கித் தான் சொன்னான்.

அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் பொய் சொல்வது  போல தோன்றவில்லை.

“சரி! ஈவினிங் மூணு மணிக்கு வர முடியுமா? நான் வீட்டுக்கு போகணும்.”

“கண்டிப்பா வரேன் மேடம்” உற்சாகமாய் பதில் வந்தது.

அவன் தனி கைப் பேசி எண்ணைக் குறித்துக் கொண்டாள் .காலையிலும் மாலையிலும் அவன் வண்டியிலேயே வர ஆரம்பித்தாள். முன்பெல்லாம் முகம் பார்க்காமலே அவன் வண்டியில் பிரயாணம் செய்திருந்தவள் இப்போது கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பித்தாள். அன்னையும்  மகளும் சேர்ந்து கோவிலுக்கு செல்லும்போதும், வேறு எங்காவது வெளியில் செல்லும்போதும் கூட இவன் வண்டியை பயன்படுத்திக் கொண்டார்கள். காயத்ரிக்கு இப்போதெல்லாம் வண்டி ஓட்ட முடிவதில்லை. இடுப்பு எலும்பு தேய ஆரம்பித்திருந்தது. எல் டிஸ்கில் புது பிரச்சனை. சிறிது தூரம் வண்டி ஓட்டினால் கூட கை  மரத்து  போக ஆரம்பித்துவிடும். நேரம் ஆக ஆக அந்த வலி பரவி முதுகை பதம் பார்த்து விடும். வீட்டில் இரண்டு கார்கள் இருந்ததுதான். நம்பிக்கையான ஓட்டுனர்தான் இல்லை. ஏற்கனவே சிலரை வேலைக்கு வைத்து அவஸ்தை பட்டது தான் மிச்சம். நேரத்திற்கு வர மாட்டார்கள் , பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தை கையாடல் செய்து விட்டு வேலைக்கு வர மாட்டார்கள் இப்படி வேறு வேறு காரணங்கள். விஜயன் பல நேரங்களில் ஊருக்கு சென்று விடுவார். அப்போதெல்லாம் டிரைவருடன் இரு பெண்கள் தனியாக செல்வது  தேவை இல்லாதது. அதனாலேயே இவர்கள் வெளியில் இருந்து வண்டி புக் செய்து கொள்வார்கள். அதிலும் ஆட்டோ தான் . அது தான் ஓரளவு பாதுகாப்பு என்று காயத்ரி நினைத்தாள் .

இப்போதெல்லாம் வித்யா வெற்றியின் வண்டியிலேயே பயணிக்க ஆரம்பித்திருந்தாள். எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு நாள் மட்டும் இவனுக்கு வர முடியாமல் போனது. அதற்கு பதிலாக வேறு ஒரு வண்டியில் வந்து கொண்டிருந்தாள். அவனோ மெயின் ரோட்டில் வராமல்  ஏதேதோ சந்துகளில் வரவும் இவளுக்கு பயம் வந்தது. நினைத்தபடியே யாரும் இல்லாத இடத்திற்கு வந்தவன், அவளிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். அப்போது எதேச்சையாக அந்த பக்கத்தில் நண்பனுடன் வந்து கொண்டிருந்த வெற்றி  இவளை காப்பாற்றி விட்டான். நண்பனோ அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு சென்றான். இவளின் சுடிதார் டாப்ஸ் சில இடங்களில் கிழிந்திருக்கவும் தன்னுடைய சட்டையை கொடுத்தான்.

இவள் தயங்கினாள்.

“துவைச்ச  சட்டை தான்  மேடம். அர்ஜன்டுக்கு வச்சுருந்தது.”

தயங்கினாலும் மறுக்காமல் வாங்கி போட்டுக் கொண்டாள் .

இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை.

“அப்ப மட்டும்  வரல. இப்ப மட்டும் எப்படி வர முடிஞ்சுது?”உரிமையாய் சண்டையிட்டாள் .

“சாரி மேடம்! பிரண்டு கூப்டான்னு சினிமாவுக்கு போய்ட்டேன்.”

“நல்லா  இருந்ததா?” பல்லை கடித்து  கேட்டாள் .

” எது மேடம்?”லேசாக தலையை திருப்பிக் கேட்டான்.

“ம்! படம் நல்லா இருந்துச்சான்னு கேட்டேன்”

“இல்ல மேடம்! உக்காரவே முடியல. அதன் கிளம்பி வந்துட்டோம்.”

“நல்லா  வேணும்” அவள் வாயில் முணுமுணுத்தது இவனுக்கு கேட்டது.

இறக்கி விடும்போது. சாரி சொன்னான்.

“சாரி  பூரின்னு, இந்தா  உன்னோட சட்டை . இவ்ளோ பாப்பிரிக் கண்டிஷனர் போடாத. வாசனை தலையை வலிக்குது.” அவன் சட்டையை கையில் திணித்து விட்டு விறு விறுவென உள்ளே சென்றாள் .

கோபத்தில் முகம்  சிவக்க சென்றவளை  பார்த்ததுமே புரிந்து கொண்டான், அவள் இந்த சவாரிக்கு பணம் கொடுக்கப் போவதில்லை என்று.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றத்தை உருவாக்க போகிறது என்பதை வித்யாவும் அறியவில்லை. வெற்றிக்கும் தெரியவில்லை.

மாற்றங்கள் நல்லதாகவே இருக்கட்டும்.

தந்தையின் சிபாரிசில் போலீசில் ஒப்படைத்தவனை மாமியார் வீட்டில் நல்ல விருந்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

முன்பெல்லாம் வெற்றியின் முகம் பார்த்து பேச  ஆரம்பித்திருந்தவள் இந்த சம்பவத்திற்கு பிறகு  உரிமையாகவே பேச ஆரம்பித்திருந்தாள். ஆட்டோக்காரன், கஸ்டமர் என்பதை தாண்டி இவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகி இருந்தது.

ஒரு விடியலில் அவன் உடன் பிறந்தவளிடமிருந்து அழைப்பு வந்தது.

“வெற்றி” அவன் அக்காவின் குரல் நடுக்கத்துடன் இருந்தது.

“என்னக்கா? இவ்ளோ காலைல கால் பண்ணி இருக்க?”

“டேய்! மாமாவை நேத்துலேர்ந்து காணுண்டா. தெரிஞ்ச இடத்துலல்லாம் தேடி பார்த்துட்டேன் ” குரல் விம்மியது.

“மாமாவோட பிரண்ட்ஸுங்ககிட்ட கேட்டியா ?”

“கேட்டேண்டா! யாரும் எதுவும் தெரியல்லேன்னு சொல்லிட்டாங்கடா”

“அக்கா கவலைப்படாதக்கா குடிச்சுட்டு எங்கையாவது வூல்ந்து(விழுந்து)  கிடக்கும் . அதுவே எழுந்து  வரும்”

“இல்லடா வெற்றி! எனக்கு   ரொம்ப பயமா இருக்குடா. நீ செ(சி)த்த இங்க வாடா”

“சரிக்கா! நீ ஒன்னும் கவலைப்படாத. நான் வரேன்”

“பல் விளக்கி அவசரமாக குளித்து விட்டு வந்தவனை தந்தையின் குரல் தடுத்தது.

“நீ பாட்லும் அந்த கழுதையை பாக்க  போனா பாப்பாவை யாரு ஸ்கூல்ல விடுவா?”

“ஏன் அவ அப்பன்காரன் இல்ல?”

“அவரெல்லாம் போக மாட்டாரு. பொறுப்பை நாம ஏத்துக்கிட்டு திடீர்னு வந்து அவரை போக சொன்னா ?

“ம்! ஒங்க ஆச மகளை போக சொல்லுங்க. இல்ல நீங்க போங்க.”

“என்னடா வாய் நீளுது? அப்டியே நாலு போட்டேன்னா, நாக்கை மடித்து எகிறிக் கொண்டு வந்தார் மகனிடம்

“இங்க பாருங்க ஏற்கனவே உங்க  மேல கொலைவெறில இருக்கேன். எங்கிட்ட வாய  கொடுக்காதீங்க.”

அங்கே இங்கே என்று இருந்த காசை எல்லாம் தேடி துழாவி அள்ளி  போட்டுக் கொண்டான்.

தந்தையின் பேச்சை கவனிக்கவில்லை. தங்கையின் பேச்சை காதில் வாங்கவே இல்லை. மடமடவென்று வெளியேறினான். மனம் பதைத்தது . அக்காவின் வீட்டில் இது இயல்பாக நடப்பது தான். மாமா குடித்து விட்டு அங்கே இங்கே என்று எங்காவது வி(வீ)ழ்ந்து கிடப்பதும் தெரிந்தவர்கள் தூக்கி வந்து வீட்டில் போடுவதும் அல்லது அக்காவே தூக்க முடியாமல் தூக்கி  வீட்டிற்கு அழைத்து வருவதும் அவள் வாழ்வின் பெரிய போராட்டமாக மாறி இருந்தது. இந்த லட்சணத்தில் வயிற்றில் புழு பூச்சி கூட இல்லை என்ற கொடுமை வேறு .

தந்தைக்காக பயந்து பயந்து இத்தகைய துன்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அந்த பெண்.

அவள் மலர். அழகான மலர். கொடி மலர். தந்தையின்  ஆணவத்தால், குடிகார கணவனின் கொடுமையினாலும் பிய்த்து எறியப்பட்ட கொடி மலர்.

கொடியின் வாழ்வில் எப்போது பூ மலரும்? அதற்கு சூரியன் வர வேண்டுமே. காத்திருப்போம்.

இப்போதைக்கு  முதலில் அவள் கணவனை கண்டுபிடிக்க வேண்டும்.

வாருங்கள் நாமும் செல்லலாம்.

இதோ, வெற்றி வேகமாக அவள் வீடு வந்து சேர்ந்தான். மலர் அழுதுக் கொண்டே பாத்திரம் தேய்த்து கொண்டிருந்தாள்.

” வீட்டுக்கு வர்ற  புருசனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கி  போடணும். ராத்திரியானா சந்தோசமா இருக்கணும். அப்பத்தானே  அவனுக்கு வீட்டு நினைப்பு இருக்கும். எந்நேரமும் அழுது வடிஞ்சுகுனு நின்னா? அவன் இப்படித்தான் வேற எங்க சொகம் கிடைக்குமான்னு தேடி அலைவான்.

மலரின் மாமியார்  பேசிய பேச்சு இவனுக்கு  ஆத்திரம் மூட்டியது . முகத்தில் வெளிப்படுத்தினாலும் வாய் திறக்கவில்லை. திறக்க முடியாது. அத்தனையும் அக்காவை பதம் பார்த்து விடும். கை முஷ்டியை இருக்க மூடி பல்லை கடித்து கோபத்தை அடக்கினான்.

“அக்கா! என்னக்கா?”

“தெரியல வெற்றி. எங்க போனாருன்னே தெரிலடா. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.”

“அக்கா மாமாக்கு வெளில போகிற  பழக்கம் இருக்கா ?”

கேட்பதற்கே வாய் கூசியது. உடன் பிறந்தவளிடம் கேட்க கூடாத கேள்வி, கேட்டான்.

கீழ் உதட்டை கடித்து “ஆமாம்” என்று தலை ஆட்டினாள்.

கழுத்தை அண்ணாந்து முன் தலையை கோதி கோபத்தை கட்டு படுத்த முயன்றான்.

அவள் சொன்ன அடுத்த வசனத்தில் அவன் கோபம் கட்டுபடுத்த முடியாமல் போனது.

“அங்கையும் போய் தேடிட்டு வந்துட்டேன்.”

அந்நேரம் மாமாவோ அல்லது இப்படிப்பட்ட இடத்தில் அக்காவை  திருமணம் செய்து வைத்த தந்தையோ இருந்திருந்தால் நிச்சயம் அரிவாளால் வெட்டி இருந்திருப்பான். நிமிடத்தில் கண்கள் சிவந்தது.

அந்நேரம் அவன் போன் அடித்தது. வித்யாதான்.

“வெற்றி! நீங்க சொன்னவரு  வந்துட்டாரு. பைசா அவருகிட்டையே கொடுத்துடவா ? ஈவினிங் யாரு வருவா?”

 அவளின் தேன்  குரல் அவன் கோபத்தை குறைத்தது . அவளின் போன் கால் மட்டும் வரவில்லை என்றால் கத்தி கொண்டே இருக்கும் அக்கா மாமியாரின் குரல் வளையை  திருகி போட்டிருப்பான்.

“நீங்க அவருகிட்டையே பைசா கொடுத்துடுங்க. ஈவ்னிங் நீங்க எனக்கு ஒரு கால் பண்ணுங்க. சொல்லறேன்.”

வெற்றி எப்போதுமே வித்யாவிடம் இப்படி விட்டேத்தியாக பேசியதில்லை. அவளுக்கு ஏதோ சரியில்லை என்றுப் புரிந்தது.

“வெற்றி! ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம். நான் அப்புறம் பேசறனே.”

போனை நிறுத்தியவன் மலரிடம்,

“போலீசுக்கு சொல்லலாமா?”

“டேய்! அத்தை  மாமா என்ன சொல்லுவாங்களோ? எனக்கு பயமா இருக்குடா.”

“அக்கா ப்ளீஸ் கா! “

“சரிடா! போகலாம்.”

“இப்டியேவா வருவ?” குனிந்து உடையை பார்த்தாள் . வெளியில் வந்தவளை பார்த்தான். அழுக்கு நைட்டிக்கு பதில் வெளுத்து போய் இருந்த சுடிதாரில் வந்திருந்தாள் . ஆட்டோவில் ஏறியதும் பறந்த தலையை கையால் ஒதுக்கி கொண்டையிட்டுக் கொண்டாள் . போகும் வழியெல்லாம் கணவன் எங்காவது இருக்கிறானா என்று தேடிக் கொண்டே போனாள் . கண்ணீர் கண்ணை மறைத்தது. ஷாலில் துடைத்துக் கொண்டே வழி  எங்கும் தேடினாள் .

 வெற்றியும் மெதுவாகவே வண்டியை ஒட்டிக் கொண்டு வலப்புறமும் இடப்புறமும் தேடினான். அவர்களுக்கு தெரிந்தவரை சுற்றி திருந்தித் தேடி விட்டார்கள்.  வெற்றியின் தோழர்களும் தெரிந்தவரை தேடிவிட்டார்கள். வேறு வழி இல்லாமல் தான் இப்போது காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் பரபரப்புக்கு எந்த குறைவும் இல்லை.

 சென்று விஷயத்தை சொன்னார்கள்.  அவன் வழக்கமாக செல்லும் இடம், வீட்டில் ஏதாவது தகறாரா ? அவனின் குணாதிசயம் , கள்ள தொடர்பு உண்டா? ஏதேதோ கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு மலர் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த காவல் நிலையத்திற்கு எஸ் பீ  வந்தார். அவரை பார்த்தாலே கால்கள் தானாக எழுந்து நிற்கும். ஆறடி இல்லை. அதற்கு சற்றே சற்று குறைவு. தீர்க்கமான கண்கள். முறுக்கேறி இருந்த உடம்பு.

யார் இந்த காவல் அதிகாரி ? ஹீரோவா இருக்குமோ!
தெரிந்து கொள்ளலாம்..

அடுத்த பகுதிக்கு காத்திருங்கள்……

 காதல் வரும் ..

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்