30 – காற்றிலாடும் காதல்கள்
“ஏன் சாயா இவர்கள் இப்படி அடித்துக்கொண்டால் எப்படி பிறவி முடித்து நம்முலகம் வந்து சேருவார்கள்? இன்னும் எத்தனை பிறவிகள் இப்படியே செல்லும்?“ என மாயா எனும் அருவம் கேட்டது.
“அது தாயின் குகை திறந்த பின் தான் தெரியும் மாயா. ஆனாலும் இவர்கள் விதி ஒன்றிணைந்தே ஆகவேண்டும் என்றிருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். வா நாம் அன்னையின் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம். இன்றிலிருந்து தயார் செய்தால் தான் பௌர்ணமியன்று வாசனை ஊரையே சுற்றும். பலரின் கற்ப நிலைகள் நிறைய வேண்டியதுள்ளது. காதலாலும், சிசுவாலும்.”
“ஹாஹாஹா மனிதரின் கற்ப நிலையம் என்பது ஒன்று தானே சாயா?”
“உடலில் ஒன்று மனதில் ஒன்று. இது இரண்டும் கலந்தால் ஆத்மாவின் கற்ப நிலையமும் நிறையும் மாயா. கலியுகமானது ஆத்மாக்களின் அத்தனை ஆசைகளும் நிறைவேறும் காலம். இதில் ஆத்மாக்கள் நல்லவைகளை ஆசைப்பட்டால் நல்லவை பெருகும். தகாத தீய ஆசைகளை கொண்டால் பல இன்னல்களும், பாவங்களும் தான் பெருகும். மனதை ஒருநிலைப்படுத்தி, மனதாலும், உடலாலும் நேசிப்பவருக்கு உண்மையாக இருந்து இணைய நல்லாசை கொண்ட ஆத்மாக்கள் வாசம் செய்யும் கரு உருவாகும். இது அடுத்த யுகத்திற்கான அஸ்திவாரமாகும் மாயா. இதில் பல அற்புத கோவில்களும், காடும், கடலும் உருவாகும். அழிவின் ஆரம்பத்திலேயே அடுத்த ஆரம்பத்திற்கான முதற்கட்டங்களும் தொடங்கிவிடும். அதில் அழிவின் ஆரம்பமும் தொடங்கியிருக்கும். அழிவும் ஆரம்பமும் ஒன்றுடன் ஒன்று பின்னிய செயல்கள். வா நாம் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்கலாம்.” என இரு அருவங்களும் அங்கிருந்துச் சென்றது.
“சரி வா வேலைய பாக்கலாம். நமக்கு நேரமில்ல. அவன் வந்துட்டு இருப்பான்.” என மிருணாளினி அழைத்ததும் கீதன் அவளருகே அமர்ந்து அவள் கூறிய விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு ஒரு சந்தேகம் கேட்டான்.
“இப்ப நீ சொல்ற மாதிரி இது மூணு பீஸ் அஹ் இருக்குன்னா, நம்மகிட்ட ஒண்ணு தான் இருக்கு. மீதி ரெண்டு எங்கன்னு எப்டி கண்டுபிடிக்கறது?”
“இது ரெண்டு ஸ்டெப் பிராசஸ் கீதன். நமக்கு அமாவாசைல முதல் தாழ் எங்க இருக்குன்னு தெரிஞ்சா தான் அடுத்து என்னனு தெரியும். அவங்க வந்ததும் நம்ம குகைக்கு ஒரு தடவை போயிட்டு வந்துடலாம். இந்நேரம் விஜயராகவன் வந்துட்டு இருப்பான். அதிகபட்சம் ராத்திரி வரை தான் நமக்கு நேரம். அதுக்குள்ள நம்மலாள தெரிஞ்சிக்க முடியற வரை தகவல் சேத்திக்கணும். எனக்கு எப்டி இதுல விஜயராகவன தோக்கடிக்க போறோம்ன்னுதான் தெரியல. கிருபாவும் காலைல இருந்து வரல. அவகிட ஏதாவது கேட்டு தெரிஞ்சிக்கலாம்ன்னு பாக்கறேன். ஆனா இப்பவரை யாருமே கண்ணுக்கு தெரியல.”
“ஏன் புள்ள நேத்து நம்ம பட்டது பத்தாதா? ஏதோ முனியப்பன் புண்ணியத்துல மறுபடியும் தரை மேல நடக்கறோம். நீ அத கெடுத்துடுவ போலயே? யாரும் கண்ணுக்கு தெரியவும் வேணாம், நம்ம பறக்கவும் வேணாம். இந்தா வந்து ரெண்டு பேரும் சாப்புடுங்க ஆச்சி குடுத்து விட்டாங்க.” இந்திரன் இவ்வாறு கூறவும் இருவரும் அமைதியாக உண்டு எழுந்தனர்.
“இந்து, நாங்க குகை வரைக்கும் போயிட்டு வரோம். அந்த உமேஷ் பயல தோப்புல கட்டிவைங்க. அவன் மயக்கத்துல இருக்கறது நல்லது.” எனக் கூறிக் கிளம்பினான்.
கீதனும், மிருணாளினியும் மெல்ல குகை நோக்கி நடந்தனர். கீதன் அவன் அறிந்தவற்றை எல்லாம் அவளிடம் கூறியபடி வழிகாட்டிக் கொண்டிருந்தான்.
“கீதன் மலைக்கு வடக்கு, தெற்கு ரெண்டு பக்கமும் முனியப்பன் கோவில் இருக்கா?“
“வடக்கு தான் ஜனங்க போயிட்டு வந்துட்டு இருக்காங்க. தெக்கால இருக்கான்னு தெரியல. நான் பாத்தவரை தெற்கு பக்கம் எந்த கோவிலும் இல்ல.” எனக் கூறி படிகளில் ஏறத் தொடங்கினான்.
மிருணாளினி அந்த வாயிலைப் படம் பிடித்துக்கொண்டாள். கண்களில் பட்ட குறிப்புகளை எல்லாம் குறித்துக் கொண்டும் படம் பிடித்துக் கொண்டும் வந்தாள். கீதன் அவள் கேட்டவைகளுக்குத் தெரிந்த விளக்கங்கள் கூறினான்.
அந்த மலை என்பது குன்றின் உயரத்தில் மூன்று மடங்கு இருந்தது. நடுவே பெரிய பாறைகள், அங்கே தான் குகை அமைந்திருந்தது. சுற்றிலும் மரங்கள் வளர்ந்து காடு போல காட்சியளித்தது. சில நூறு அடிகள் பள்ளமும் சுற்றிலும் இருந்தது. ஒரு பக்கம் மட்டுமே ஏறுவது போல பாதை அமைந்திருந்தது. சுற்றிலும் அடர்த்தியான மரங்களின் இடையே சர்பங்களின் வாழ்விடம் அமைந்திருந்ததால் அப்பக்கங்களில் யாரும் செல்வதில்லை.
“அற்புதமான இடம் கீதன். மேல நல்ல காத்து. வெயில் கூட பெருசா தெரியல. இயற்கையால மட்டும் தான் இப்படியான இடத்தை உருவாக்க முடியும். இந்த குகைல எந்த சாமி இருக்குன்னு சொன்னீங்க?”
“அதான் உனக்கு தெரியுமே கற்பகநாச்சியார்..“
“அந்த ஒரு சாமி தான் இருக்கா?”
“ஆமா. அது தான் எல்லா பாட்டுலையும், குறிப்புலையும் இருக்கு. ஆனா நீ சொல்றத பாத்தா அந்த சிலை கூட குடை வரை சிற்பமா இருக்கற வாய்ப்பு தான் அதிகம். இதுக்கா விஜயராகவன் இவ்ளோ ஆர்வம் காட்டறான்? தனி சிலையா இருந்தா தான் அவனால கடத்தமுடியும். குகைய பேத்தா எடுத்துட்டு போவான்?” கீதன் அதிமுக்கியமானச் சந்தேகம் கேட்டான்.
“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு கீதன். ஆனா இது அவனோட வாழ்நாள் லட்சியம்னா நிச்சயம் இங்க பெருசா ஏதாவது இருக்கணும்.” என மிருணாளினியும் அவன் சந்தேகம் சரியென்பது போல கூறினாள்.
அதே நேரம் விஜயராகவன் விண்ணூர்காரப்பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். அவனது முதுகில் இருந்தத் தீப்புண் அவனைக் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தது. நொடிக்கு நொடி காயத்தின் எரிச்சலும், சூடும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
“ஆதர்ஷ் ஐஸ் பேக் எடுத்து வை. என்னால இந்த சூட தாங்கவே முடியல.” என அவன் கத்தும் சத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
“பாஸ், நம்ம ஹாஸ்பிடல் போலாம். இப்படி இருந்தா எப்படி?” அவன் படும் அவஸ்த்தைப் புரிந்துக் கூறினான்.
“எந்த டாக்டரும் எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. இது அந்த ஊர்ல ஆன காயம். அங்க தான் போகணும். நேரா மலைக்கு போயிடு.” எனக் கட்டளையிட்டு விட்டுப் போதைப்பொருளின் உதவியை நாடிச்சென்றான்.
புத்தியை மழுங்கடிக்கும் எந்தப் போதைப் பொருளும் அவனது வலியைக் குறைக்கவில்லை, மாறாக அவனது உடல் அவஸ்தைகள் தான் அதிகமானது.
அதில் ராகவன் கட்டிலில் இருந்து குதித்து கீழே விழும் போது ஆதர்ஷ் அவனைத் தாங்கிப் பிடித்தான். அவனது மேல்சட்டைப்பையில் இருந்த கிருபா மிருணாவின் தொப்புள்கொடி இருந்த டாலர் ராகவன் உடலில் விழுந்தது. அப்படி அது பட்டதும் அவன் எரிச்சல் சற்று மட்டுப்பட்டது. அதை உணர்ந்த விஜயராகவன் அதை வாங்கி அணிந்துக் கொண்டதும் அவனுக்கு சூடும், வலியும் சற்றுக் குறைவதுப் போல தோன்றியது.
“இது அந்த மிருணா செயின் தானே?” மெல்லக் கேட்டான்.
“ஆமா பாஸ்.”
“சரி நானே வச்சிருக்கேன். இத என் முதுகுல வச்சிட்டு நீ போ. சீக்கிரம் அந்த மலைக்கு போகணும்.” எனக் கூறிவிட்டு கவிழ்ந்துப் படுத்தான்.
அந்த டாலரின் உள்ளே இருந்த தொப்புள்கொடி அவனது காயத்தில் ஏதோ மாயம் செய்தது. அதில் ராகவன் தன்னை மறந்து உறங்கினான்.
அன்று மாலை ராமசாமி கூறியது போல ஊர் பொதுக்கூட்டம் கூடியது.
“எல்லாரும் வந்துட்டாங்களாயா? யாராவது வரலன்னா ஆள அனுப்பி கூட்டிவாங்க.” எனக் கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.
“அந்த புது பயலுகள எல்லாம் இழுத்து வாங்கடா. விஸ்வநாதன் ஐயா குடும்பம் வந்துரிச்சா? வெள்ளைச்சாமி பேத்தியவும் வரச்சொல்லுங்க. அந்த புள்ள வந்ததுல இருந்துதான் இப்படி நடக்குது.” மற்றொருவர் கூறினார்.
“எலேய்! வாய மூடு. முன்னங்காலுக்கும் பொடதிக்கும் முடிச்சு போடாத.” என மற்றவர் அதட்டினார்.
“அந்த புள்ள இருக்க வீட்டச் சுத்திதான் அத்தன வெளியூறு பயலுவலும் சுத்தினாங்க. அதானே சொன்னேன்.”
“அவனுங்கள எல்லாம் ஊருக்கு வெளிய கட்டிவைக்க அனுப்பியாச்சாம். அமைதியா இருப்போய்.”
“அமைதியா இருங்க. அப்துல் ஐயா வராரு. இதோ விஸ்வநாதன் ஐயா குடும்பமும் வருது.” என இன்னொருவர் கூற அனைவரும் அமைதியாகினர்.
“வணக்கம் ராமசாமி. தாமதம் ஆகிடிச்சா?” எனக் கேட்டபடி அப்துல் அருகே அமர்ந்தார்.
“இல்லைங்கய்யா.. சரியான நேரம் தான். எல்லாரும் இப்பதான் வந்துட்டு இருக்காங்க. பேரன் கடைல வியாபாரம் ஜோரா நடக்குதுன்னு கேள்விபட்டேன். ரொம்ப சந்தோஷம்.” என ராமசாமி மகிழ்வைத் தெரிவித்தார்.
“ஆமா. எல்லாம் நம்ம ஊரு சாமியோட அருள். அல்லாவோட கருணை தான். நம்ம வீட்டு கல்யாண வேலை எந்த அளவுல இருக்கு?”
“அது சிறப்பா உங்க எல்லாரோட ஆசீர்வாதத்துல நடந்துட்டு இருக்கு. உங்க பேரன் கல்யாணம் நீங்க முன்ன நின்னு நடத்திதரணும்.”
“நிச்சயமா… என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம். இதவிட வேறென்ன வேல இந்த கெழவனுக்கு?“ எனச் சந்தோஷமாகப் பேசியபடியிருக்க மற்றவர்களும் வந்துச் சேர்ந்தனர்.
“வெள்ளைச்சாமி ஐயா இன்னும் வரலியா?”
“வந்துட்டு இருக்காரு.“ என இன்னொருவர் கூறிய சில நிமிடங்களில் மிருணாளினி, மாலா மற்றும் கீதன் என அனைவரும் அங்கே வந்துச் சேர்ந்தனர்.
“எல்லாருக்கும் வணக்கம். இப்ப இந்த கூட்டம் எதுக்குன்னு எல்லாருக்கும் தெரியும் தானே? நம்ம ஊரு கோவில் சுவரு திடீர்ன்னு உள்பக்கமா திரும்பியிருக்கு.” என ராமசாமி பேச ஆரம்பித்தார்.
“ஆமாங்க ஐயா. அதுல ஏதோ பாட்டு இருக்குன்னு சொன்னாங்க. என்ன அது? இத பாக்க மறுபடியும் ஆராய்ச்சி பண்றவங்கள கூப்பிடணுமா?” கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
“அந்த பாட்டு நம்ம குகை திறப்பு சம்பந்தமானதுன்னு சொல்றாங்களே நிஜமா?” என ஆளுக்கு ஒரு கேள்வி எனக் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
“இவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”இந்திரன் கீதனிடம் கேட்டான்.
“உண்மைய தான்…”
“டேய் விளையாடறியா?” இந்திரன் அதிர்ந்துக் கேட்டான்.
“இல்ல நிஜமா தான் சொல்றேன். நம்ம மலைக்கு மேல போனாலும் கீழ கோவில காவகாக்க ஆளுங்க வேணும். தவிர நம்ம எல்லாம் எப்ப பாரு குகைவாசல்ல இருந்தது பாத்திருக்காங்க. உண்மைய சொல்லிட்டா நல்லது தான்.“
“வாசல்ல கெடந்தது நீ தான்டா. ஒருத்தனும் சொல்பேச்சு கேக்காதீங்க. இவனுங்க வேற என்னென்ன கேட்டு என்ன இம்சைய கூட்டுவானுங்களோ தெரியல.” என இந்திரன் புலம்பினான்.
“எல்லாரும் செத்தநேரம் அமைதியா இருங்கப்பா. அம்மாடி வெள்ளைச்சாமி பேத்தியம்மா. இங்குட்டு வா. அதுல என்ன எழுதியிருந்ததுன்னு தெளிவா சொல்லு.” என அப்துல் தாத்தா கேட்டார்.
“முனியப்பனுக்கு திருவிழா எடுக்கணும் தாத்தா. வடக்கு முனியப்பனுக்கு மட்டும் தான் பூசை நடக்குது. தெற்குல இன்னொரு முனியப்பன் இருக்காரு அவருக்கு பூசை நடக்கணும். அப்டி நடக்கலன்னா மறுபடியும் இந்த ஊர்ல பல உயிர்பலி நடக்கும்.” என மிருணாளினி கூறியதும் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.