Loading

அத்தியாயம் – 30

இறுதி அத்தியாயம் 

சென்னை மாநகரம் மீண்டும் குளிரின் போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தது. கடந்த நான்கு மாதங்கள், ஆரவ் மற்றும் அமுதினியின் வாழ்வில் ஒரு வசந்த காலமாகவே கழிந்தது. பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு, அவர்கள் தங்கள் காதலை இந்த உலகத்திற்கு அறிவித்தார்கள். இனி ரகசியப் பார்வைகள் இல்லை, திருட்டுத்தனமான சந்திப்புகள் இல்லை, பயமும் பதற்றமும் இல்லை. தூய்மையான, நேர்மையான, எல்லையில்லாத காதல் மட்டுமே இருந்தது.

ஆரவின் மனநல ஆலோசனை அமர்வுகள் முழுமையாக முடிந்திருந்தன. 

டாக்டர் ரங்கநாதன் தன் இருக்கையில் திருப்தியாகச் சாய்ந்தபடி, “ஆரவ், மனசார சொல்றேன்… நீ இப்போ நூறு சதவீதம் குணமாகிட்ட… கடந்த காலத்தின் காயங்கள் வெறும் தழும்புகளா மாறிடுச்சு… அந்தத் தழும்புகளை ஏத்துக்கிற பக்குவமும் உன் மனசுக்கு வந்திடுச்சு… உன் உண்மையான மருந்து, உன் உண்மையான மருத்துவர் எல்லாமே அமுதினி தான்… அந்த தேவதையை உன் ஆயுசுக்கும் பத்திரமா பார்த்துக்க… அது போதும் ஆரவ்…” என்று கூறி, ஒரு தகப்பனின் வாஞ்சையுடன் அவனுக்கு விடைகொடுத்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரவ் குற்ற உணர்ச்சியின்றி உறங்கினான். ரியாவின் நினைவுகள் உண்டாக்கிய கெட்ட கனவுகள் இனி இரவுகளைப் பயமுறுத்தவில்லை. பதிலாக, அமுதினியின் காதல் நிறைந்த கனவுகள் மட்டுமே அவன் உறக்கத்தை ஆக்கிரமித்தன. பயமின்றி நேசித்தான், முழுமையாக வாழ்ந்தான். ரியா என்ற காயம், இப்போது வலி தராத ஒரு வடுவாக மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அமுதினி, அவனது ரத்தமும் சதையுமான அழகான நிகழ்காலம்; அவனது ஒளிமயமான எதிர்காலம்.

அமுதினியும் தன் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராக இருந்தாள். வளாகத் தேர்விலேயே, சென்னையின் புகழ்பெற்ற மனநல ஆலோசனை மையத்தில் ஆலோசகராகப் பணிபுரியும் வாய்ப்பு அவளைத் தேடி வந்தது. ஆனால், அவள் அந்த வாய்ப்பை இப்போதைக்கு நிறுத்தி வைத்திருந்தாள். தன் வாழ்வின் மிக முக்கியமான ஒரு முடிவுக்காக, ஒரு பெரிய கொண்டாட்டத்திற்காகக் காத்திருந்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை, அமுதினியும் சுருதியும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தார்கள். சுருதி, தன் காபியை உறிஞ்சியபடியே, ஒரு துப்பறியும் நிபுணரைப் போலக் கண்களைச் சுருக்கிக் கேட்டாள், 

“அமுது, விஷயத்துக்கு வா… உங்க ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம்?”

அமுதினி சிரித்தபடி, “எனக்கே தெரியாதுடி. நாங்க இன்னும் அதைப் பத்தி சீரியஸா பேசிக்கவே இல்லை.” 

“என்னது?” சுருதி தன் காபிக் கோப்பையை ‘டங்’ என்று மேசையில் வைத்தாள். அவள் முகத்தில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. 

“விளையாடுறியா? போன வருஷம் இதே நேரத்துல அவர் உன்னைப் பார்க்காம பைத்தியம் பிடிச்சு அலைஞ்சார். நீ அவரைப் பார்க்காம செத்து செத்து பொழைச்ச. ஒரு வழியா காலேஜ் முழுக்க உங்க காதல் காவியம் பரவி, இப்போ நாலு மாசமா ஊர் சுத்தாத இடமில்லை. ஆனா, கல்யாணத்தைப் பத்திப் பேசலையா? இது என்ன புது ரகமான புரட்சியா இருக்கு?”

அமுதினி தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தாள். 

“இல்லை சுருதி, அவர் ஏதோ பிளான் பண்ற மாதிரி தெரியுது… அவர் பார்வை, பேச்சு எல்லாம் வித்தியாசமா இருக்கு… ஆனா, என்னன்னு என்கிட்ட சொல்ல மாட்டேங்குறார்…”

“ஓஹோ! உன் ஆளு ஒரு மிஸ்டரி மேனா இருக்காரே! இரு, நான் என் டிடெக்டிவ் மூளையை யூஸ் பண்றேன்…” அவள் கண்களை மூடி, ஒரு நிமிடம் தியானம் செய்வது போலப் பாவனை செய்தாள்.

“தியரி நம்பர் ஒன்…” என்று அவள் கைவிரலை நீட்டினாள். 

“அவர் உனக்குத் தெரியாம, ஒரு பெரிய சர்ப்ரைஸ் ப்ரோபோசல் பிளான் பண்றாரோ? ஒருவேளை, பாரீஸ்ல இருக்கிற ஈபிள் டவர் மேல நின்னு ப்ரோபோஸ் பண்ணப் போறாரோ?”

அமுதினி சிரித்து, “அவ்வளோ சீன்லாம் இருக்காதுடி…”

“சரி, தியரி நம்பர் டூ… அவர் ஒருவேளை உனக்காக ஒரு கவிதைத் தொகுப்பு எழுதிக்கிட்டு இருக்காரோ? ‘அமுதினியே என் அமுதே’ அப்படின்னு தலைப்பு வச்சு?”

“கவிதையா? அவர் முகத்துக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையே.”

“ஓகே, ஃபைனல் தியரி… இதுதான் நிச்சயமா இருக்கும்… அவர் உன்னை எங்கேயாவது கடத்திட்டுப் போய், ஆள் இல்லாத தீவுல கல்யாணம் பண்ணிக்கப் போறார்… அதான் யாருக்கும் தெரியாம ரகசியமா ஏற்பாடு பண்றார்…”

சுருதியின் கற்பனையைக் கேட்டு அமுதினி வயிறு வலிக்கச் சிரித்தாள். 

“போதும் நிறுத்துடி உன் தியரியை… எதுவா இருந்தாலும், அவர் சொல்லட்டும்னு நான் காத்திருக்கேன்… அந்த சஸ்பென்ஸை என்ஜாய் பண்றதும் ஒரு சுகம்தானே…”

“சரி சரி, உன் சாரோட சஸ்பென்ஸை நீ என்ஜாய் பண்ணு… ஆனா, கல்யாணத்துக்கு எனக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவை எடுத்துத் தரணும்… டீல்?” என்று சுருதி கண்ணடித்தாள்.

********

அதே நேரத்தில், தன் அறையில், ஆரவ் யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். 

“ஆமாம் மேடம், நான் சொன்ன ஏற்பாடுகள் எல்லாம் சரியா இருக்கா? அந்த நாள், எனக்கு ரொம்ப முக்கியமான நாள்… ஒரு சின்னத் தவறு கூட நடக்கக் கூடாது… நன்றி… நான் சீக்கிரமே நேரில் வந்து பார்க்கிறேன்…” என்று யாரிடமோ அவன் அலைபேசியை வைத்தான். 

அவன் இதயத்தில் ஒரே நேரத்தில் பல உணர்ச்சிகள். உற்சாகம், பதற்றம், எல்லாவற்றிற்கும் மேலாக, அமுதினி மீதான கரைபுரண்டோடும் காதல்.

*******

ஆரவ் அமுதினியை ஒரு அழகான இரவு உணவிற்கு அழைத்திருந்தான். 

நகரத்தின் மொத்த அழகையும், அதன் வண்ண வண்ண விளக்குகளையும் கொண்ட, ஒரு மொட்டை மாடி உணவகம். 

மெல்லிய வயலின் இசையும், மெழுகுவர்த்திகளின் பொன்னிற ஒளியும், வானத்து நட்சத்திரங்களின் மினுமினுப்பும் அந்த இடத்தை ஒரு கனவுலகம் போல மாற்றியிருந்தது.

அமுதினி, ஒரு மெரூன் நிற உடையில், மெல்லிய ஆபரணங்களுடன், அலை அலையான கூந்தலுடன் அவள் நடந்து வந்தபோது, ஆரவுக்கு ஒரு கணம் மூச்சே நின்று போனது.

எத்தனை முறை அவளைப் பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் அவள் அவனைப் புதிதாகப் பிறக்க வைத்தாள்.

அவனும் ஒரு வெள்ளை நிறச் சட்டையில், கருப்பு பேண்ட்டில் மிக நேர்த்தியாக இருந்தான். மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில், நட்சத்திரங்களுக்குக் கீழே, அந்த இடம் ஒரு காதல் சொர்க்கம் போல இருந்தது.

“ஹாய்…” அவள் அழகில் தன்னையே மறந்து அவன் சொன்னான்.

அவள் வெட்கத்தில் இதழ் விரித்து, “ஹாய்… சார்…”

அவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில் அமர்ந்தார்கள். உணவு ஆர்டர் செய்த பிறகு, அமுதினி அவன் கையைப் பற்றிக் கொண்டாள். 

“சார், நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்…”

“ம்ம்… சொல்லு அமுதினி.” அவன் குரல் அத்தனை மென்மையாக இருந்தது.

“இல்லை, அதுதான் பிரச்சனை…”

“என்ன பிரச்சனை அமுதினி…” அவன் புருவங்கள் உயர்ந்தன.

“இன்னும் நான் உங்களை ‘சார்’னு கூப்பிடுறது எனக்கே ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு… நாம இப்போ… நம்ம ரிலேஷன்ஷிப் அடுத்த கட்டத்துக்குப் போயிடுச்சு… உங்களை எப்படி கூப்பிடறதுன்னே எனக்குத் தெரியல…” அவள் முகம் பாவமாக மாறியது.

ஆரவ் குறும்புத்தனமாகச் சிரித்தான். அவன் கண்களில் மின்னல் வெட்டியது.

“ஆமா ஆமா… இது ஒரு இன்டர்நேஷனல் பிரச்சனையாச்சே! சரி, ‘அமுதினி’னு கூப்பிட்டா, ரொம்ப ஃபார்மலா, நியூஸ் ரீடர் மாதிரி இருக்கு. ‘சார்’னு நீ கூப்பிடுறது, எனக்கும் இப்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. நாளைக்கு நமக்குக் கல்யாணம் ஆகி, குழந்தைங்க பொறந்தா கூட, ‘சார், பால் டப்பா எங்க?’னு தான் கேட்பியா? இல்ல, குழந்தைங்க கிட்ட, ‘போய் சார் கிட்ட ஹோம்வொர்க் கேளுங்க’னு சொல்வியா? எனக்கே கேட்க காமெடியா இருக்கு.”

அவன் வேண்டுமென்றே ‘கல்யாணம்’ ‘குழந்தை’ என்ற வார்த்தையை அழுத்த, அமுதினியின் முகம் தக்காளிப் பழமாகச் சிவந்தது.

“ஓ! நீங்க… நீங்க கல்யாணத்தைப் பத்திப் பேசுறீங்களா?” அவள் முகம் வெட்கத்தில் செந்தாமரை போலச் சிவந்தது.

“ஆமா… நான் அதைப் பத்திதான் பேசிட்டு இருக்கேன்… ஆனா, அதுக்கு முன்னாடி, இந்த பேர் பிரச்சனையை முடிப்போம். நான் உன்னை என்ன கூப்பிடட்டும்?”

“ம்ம்… உங்களுக்குப் பிடிச்ச மாதிரி கூப்பிடுங்க…” அவள் பார்வை தரையைப் பார்த்தது.

ஆரவ் அவள் கண்களை உற்றுப் பார்த்து, தீவிரமாக யோசிப்பது போலப் பாவனை செய்தான்.

“அம்மு… இல்ல, அது ரொம்ப காமன். சரி… ‘என் செல்லக்குட்டி’… ச்சே, ரொம்ப சினிமாத்தனமா இருக்கு. ம்ம்… ‘என் பொண்டாட்டி’… அதுக்கு இன்னும் டைம் இருக்கு. சரி… ‘அம்முமா’ன்னு கூப்பிடவா?”

அந்த வார்த்தை… அது அவள் காதுகளில் தேனினும் இனிய சங்கீதமாகப் பாய்ந்தது. அவள் கன்னங்கள் இன்னும் சிவந்தன. இதயத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒருசேரப் பறந்தன. அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள், அவள் கண்களில் அத்தனை காதல்!

“அது… அது ரொம்ப அழகா இருக்கு.”

“அப்போ அது ஃபிக்ஸ். நீ என் அம்முமா. அப்போ நான்?”

“நான் என்னனு கூப்பிட? நீங்க என் ப்ரொஃபசரா இருந்தீங்க…”

“ஒருகாலத்துல இருந்தேன்… இப்ப இல்ல… இப்போ, நான் உன் காதலன். கூடிய சீக்கிரம் உன் கணவன் ஆகப் போறவன்… என்னை வேற ஏதாவது பேர் சொல்லி கூப்பிடு,” அவன் கண்கள் குறும்புத்தனமாகச் சிரித்து, அவளை வம்புக்கு இழுத்தன.

கொஞ்ச நேரம் தீவிரமாகச் சிந்தித்தவள், சட்டென்று, “ஆருமா…” என்று சொல்லிவிட்டு, 

வெட்கத்தில் சிரித்தபடி, “நீங்க என் ஆருமா… இது ஓகேவா…” என்று பூனைக்குட்டி போல சிணுங்கினாள்.

“ம்ம்ம்…” என்றான் மந்தகாச புன்னகையுடன்!

ஆரவ் அவள் கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். அவன் முகம் திடீரென்று தீவிரமானது. 

“அம்முமா, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நீ என் வாழ்க்கையைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்… என் கடந்த காலத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் நீ பார்த்திருக்க… ரியா, என் மன அழுத்தம்… என் காயங்களை மட்டும்தான் நீ அறிஞ்சிருக்க… ஆனா, அந்தக் காயங்களோட வேர் எங்க இருக்குன்னு நீ தெரிஞ்சுக்கணும்… நாளைக்குத் தயாராக இரு… என் வாழ்க்கையின் மிக முக்கியமான இடத்திற்கு உன்னை அழைச்சிட்டுப் போகப் போறேன்…”

அவன் குரலில் இருந்த மர்மம், அமுதினியைக் குழப்பியது. ஒருவேளை, அவன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவன் பெற்றோரிடம் தன்னை அறிமுகம் செய்து வைக்கப் போகிறானோ என்று அவள் மனதிற்குள் ஒரு சந்தோஷமான கற்பனை ஓடியது.

“கண்டிப்பா வர்றேன் ஆருமா. நீங்க எங்க கூப்பிட்டாலும், நான் வருவேன்…” என்று சிரித்த முகத்துடன் அவள் சொன்னபோது, அவள் மனமெங்கும் உற்சாகம் நிரம்பியிருந்தது.

*******

அடுத்த நாள் காலை, ஆரவ் அவளை அழைத்துச் செல்ல வந்தான். அவன் முகத்தில் ஒருவித அமைதியும், அதே சமயம் ஒரு பதற்றமும் தெரிந்தது.

“ஆருமா, நாம எங்கே போறோம்? ஏதாவது க்ளு கொடுங்களேன்,” என்று அவள் காரில் ஏறியதும் கேட்டாள்.

“நீயே பார்ப்ப அம்மு… அது என் வாழ்க்கையின் ஆரம்பம்… என் அஸ்திவாரம்…” என்று புதிராகச் சொல்லி அமைதியாகி விட்டான்.

அவர்களின் கார், சென்னையின் புறநகர்ப் பகுதியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பயணித்து, ஒரு பெரிய வளாகத்தின் முன் நின்றது. 

அதன் நுழைவாயிலில், “சேவா சதன் – குழந்தைகள் இல்லம்” என்ற பெயர் பலகை பெரிதாக இருந்தது.

அமுதினி ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் கண்கள் அவனை கேள்வியாகப் பார்த்தன. 

“ஆருமா, இது…”

“இதுதான் நான் வளர்ந்த இடம் அம்முமா. என் வீடு. என் குழந்தைப்பருவம், என் டீனேஜ் எல்லாமே இங்க தான் போச்சு…” அவன் குரலில் இருந்த உணர்ச்சிகளின் கலவையை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அது ஒரு அழகான, அமைதி தவழும் வளாகம். பெரிய விளையாட்டு மைதானம், சுத்தமான தங்கும் விடுதிகள், படிக்கும் அறைகள்… எங்கும் குழந்தைகளின் மழலைச் சிரிப்புச் சத்தம் எதிரொலித்தது.

அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அது ஒரு அழகான, அமைதி தவழும் வளாகம். பெரிய விளையாட்டு மைதானம், சுத்தமான தங்கும் விடுதிகள், மரத்தடியில் படிக்கும் அறைகள்… எங்கும் குழந்தைகளின் மழலைச் சிரிப்புச் சத்தம் எதிரொலித்தது.

“ஆரவ்! வந்துட்டியாப்பா!” என்று அவர் ஆரவை ஒரு தாய்க்குரிய பாசத்துடன் அணைத்துக்கொண்டார். அந்த அணைப்பில் அத்தனை அன்பு இருந்தது.

“கமலா அம்மா…” என்று ஆரவ், ஒரு சிறு குழந்தையைப் போல அவர் காலில் விழுந்து வணங்கினான். அவன் கண்களில் நீர் திரண்டிருந்தது.

அவன் எழுந்து, பெருமையுடன் அமுதினியை அறிமுகப்படுத்தினான். 

“அம்மா, இவங்கதான் அமுதினி. நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேனே… என் வருங்கால மனைவி…” என்றான், அவன் முகம் அத்தனை பிரகாசமாக இருந்தது.

கமலா அம்மா, அமுதினியை வாஞ்சையுடன் உச்சி முதல் பாதம் வரை பார்த்தார். 

“வாம்மா… ஆரவ் உன்னைப் பத்தி சொல்லாத நாளே இல்லை. என் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.”

அடுத்த சில மணி நேரம், ஆரவ் அமுதினிக்கு அந்த இல்லத்தைச் சுற்றிக் காட்டினான். அவன் உறங்கிய சிறிய படுக்கை, படித்த அறை, நண்பர்களுடன் சண்டையிட்டு விளையாடிய மைதானம்… அவன் கை காட்டிய ஒவ்வொரு இடத்திலும், அவன் குழந்தைப்பருவத்தின் வண்ணமயமான, சில சமயம் வலி நிறைந்த நினைவுகள் சிதறிக் கிடந்தன.

“நான் ரெண்டு வயசுல இருந்து பதினெட்டு வயசு வரைக்கும் இங்கதான் வளர்ந்தேன் அம்முமா…” என்றவன் குரல் உடைய, தன்னை சமாளித்துக் கொண்டு, 

“என் அப்பா அம்மா யாருன்னு எனக்குத் தெரியாது… ஒரு ஆஸ்பத்திரி வாசல்ல, ஒரு துணியில சுத்தி என்னைப் போட்டுட்டுப் போயிட்டாங்களாம்… போலீஸ்தான் என்னைக் கண்டுபிடிச்சு, இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க… கமலா அம்மாவும், இங்க இருக்கிற சிஸ்டர்ஸும்தான் என்னை வளர்த்தாங்க…”

அமுதினிக்குக் கண்கள் கலங்கின. அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல், அவன் கைகளை ஆறுதலாகவும், இன்னும் இறுக்கமாகவும் பற்றிக்கொண்டாள்.

“எனக்குன்னு யாருமே இல்லை அம்முமா… சொந்தம், பந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை… சின்ன வயசுல, ஸ்கூல் படிக்கும்போது மத்த பிள்ளைகளுக்கு அவங்க அப்பா அம்மா வந்து பார்த்துட்டுப் போறப்போ, எனக்கு ரொம்பத் தனிமையா இருக்கும்… ஆனா, கமலா அம்மா என்னை அவங்க சொந்தப் பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாங்க… விருப்பம் போல படிக்க வச்சாங்க… நான் இன்னைக்கு ஒரு பேராசிரியரா நிக்கிறேன்னா, அதுக்கு அவங்கதான் காரணம்…”

அப்போது கமலா அம்மா அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

“ஆரவ் எங்களுக்கெல்லாம் பெருமையை தேடித் தந்திருக்கான்… அவனுக்கு ரொம்ப புத்திசாலி… சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் பிடிவாதக்காரன்… ஆனா, ரொம்ப நல்ல மனசு… அவன் படிச்சு பெரிய ஆளானதும், இந்த இல்லத்தை ஒரு நாளும் மறக்கல… இங்க இருக்கிற ஒவ்வொரு பிள்ளையோட படிப்புச் செலவுலயும் அவனோட பங்கு இருக்கு…”

அமுதினிக்கு ஆரவின் மீதிருந்த காதல், இப்போது பல மடங்கு உயர்ந்து, மரியாதையாகவும், பிரமிப்பாகவும் மாறியது. அவனது போராட்டங்கள், அவனது தனிமை, அவனது நம்பமுடியாத மீள்ச்சி… அனைத்தும் அவளை ஆழமாகத் தொட்டன.

அவர்கள் மதிய உணவை, அந்தக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.

“ஆரவ் அண்ணா! ஆரவ் அண்ணா!” என்று குழந்தைகள் அவனை மொய்த்துக்கொண்டன. அவன் அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து, ஒருவனுக்கு ஊட்டிவிட்டு, ஒருத்தியின் தலையைக் கோதி, சிரித்துப் பேசி, விளையாடினான். 

அவன் முகம் அத்தனை மகிழ்ச்சியாக, அத்தனை நிறைவாக இருந்தது. அந்த முகத்தை அமுதினி இதற்கு முன் பார்த்ததே இல்லை.

மதிய உணவிற்குப் பிறகு, கமலா அம்மா அவர்களைத் தன் அறைக்கு அழைத்தார். 

“ஆரவ், அமுதினி, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்…” என்று அவர் தயங்க,

அமுதினி அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, “என்னென்ன சொல்லுங்கம்மா… நானும் உங்க பொண்ணு தானே…” என்றாள் உரிமையுடன்.

“ஆரவுக்கு ஒரு குடும்பம் இல்லைன்னு நீ நினைக்கலாம்… ஆனா, இங்க இருக்கிற ஒவ்வொரு பிள்ளையும், ஒவ்வொரு ஊழியரும் அவனோட குடும்பம்தான்… இப்போ, நீ ஆரவை கல்யாணம் பண்ணிக்கப் போற… நான் ரொம்ப சந்தோஷப்படறேன். நான் அவனை என் சொந்த மகனா நினைக்கிறேன்… அதனால, அவன் கல்யாணத்துல, ஒரு அம்மாவா இருந்து, நான் எல்லாத்தையும் முன்னாடி நின்னு நடத்தணும்னு ஆசைப்படுறேன்… நீ தனியா இல்லைப்பா. நீ எங்க எல்லோரோட பிள்ளை…” என்று அமுதினியிடம் தொடங்கி ஆரவிடம் வந்து கண்கலங்கி நின்றார்.

அதுவரை தன்னை இறுக்கமாக வைத்திருந்த ஆரவ், பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் அணை உடைக்க, ஒரு குழந்தையைப் போலக் குலுங்கிக் குலுங்கி அழுதான். அவன் கமலா அம்மாவின் மடியில் சாய்ந்து, அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 

“அம்மா… நீங்கதான் எனக்கு எல்லாமே. நீங்க இல்லாம நான் இல்லை…”

அமுதினி அந்தப் பாசப் போராட்டத்தைப் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவளுக்கு இப்போது புரிந்தது. ஆரவுக்கு ஒரு மிகப்பெரிய, அன்பு நிறைந்த குடும்பம் இருக்கிறது.

கமலா அம்மா, அமுதினியையும் சேர்த்து அணைத்துக்கொண்டார். “அமுதினிம்மா, நீயும் இனிமே எங்க வீட்டுப் பொண்ணுதான்… என் பிள்ளையை நல்லா பார்த்துக்கம்மா… அவன் நிறைய கஷ்டப்பட்டுட்டான்… உன்னால இனி அவனுக்கு சந்தோஷம் மட்டும்தான் கிடைக்கணும்…”

“நான் அவரை என் உயிரா பார்த்துப்பேன்மா…” என்று அமுதினி கண்ணீருடன் சத்தியம் செய்தாள்.

பின்னர், இருவருமாக அவர்களிடமிருந்து விடைபெற்று காரில் ஏறினர்.

போகும் வழியில், அமுதினி ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி, ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக வந்தாள். அவள் முகம் உம்மென்று இருந்தது. ஆரவுக்கு உள்ளுக்குள் லேசான பயம் தொற்றிக்கொண்டது.

“அமுதினி… என்னாச்சு? ஏன் டல்லா இருக்க? நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தது உனக்குப் பிடிக்கலையா?” அவன் குரலில் பதற்றம் தெரிந்தது.

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“அம்முமா… ப்ளீஸ், ஏதாவது பேசு. நான் உன்கிட்ட இதை முன்னாடியே சொல்லியிருக்கணும். ஸாரி.”

கார் ஒரு சிக்னலில் நின்றபோது, அவள் சட்டென்று அவன் பக்கம் திரும்பி, அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தாள்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?” அவள் குரல் கடுமையாக ஒலித்தது.

“அ…அம்முமா… என்னாச்சு?”

“இவ்வளவு பெரிய விஷயத்தை… இவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை என்கிட்ட இருந்து ஏன் மறைச்சீங்க? நீங்க ஒரு அனாதை இல்லை ஆருமா… நீங்க ஆயிரம் உறவுகளுக்குச் சொந்தக்காரர்… உங்களைப் பெத்தவங்க என்ன பாவம் பண்ணாங்களோ, அதான் உங்க கூட இருக்கும் பாக்கியம், அவங்களுக்கு கிடைக்கல… 

ஆனா, உங்களை வளர்த்தவங்க தெய்வம்… இவ்வளவு பெரிய உண்மையை என்கிட்ட சொல்லாம, ‘எனக்கு யாரும் இல்லை’னு சீன் போட்டுட்டு இருந்தீங்களா? உங்களை என்ன பண்னா தகும்?” அவள் கோபமாகப் பேசுவது போல நடித்தாலும், அவள் கண்களில் வழிந்த கண்ணீர், அவள் இதயத்தில் இருந்த பெருமையையும் காதலையும் காட்டிக் கொடுத்தது.

ஆரவ் ஒரு கணம் திகைத்து, பின் அவள் நடிப்பைப் புரிந்துகொண்டு மெலிதாக புன்னகைத்தான்.

“சத்தியமா என்னை ரொம்ப பயமுறுத்திட்டியே அம்முமா!”

“பின்ன… என் புருஷனோட கடந்த காலத்தை முழுசா தெரிஞ்சுக்கிற உரிமை எனக்கு இல்லையா? நீங்க முன்னாடியே சொல்லலை ன்னு கொஞ்சம் கோபம் இருந்தது உண்மைதான் ஆருமா…” என்றவள் அவன் தோளில் செல்லமாகச் சாய்ந்துகொண்டாள்.

அந்த நொடியில், அவர்களின் பந்தம் முன்பை விட ஆயிரம் மடங்கு வலுப்பெற்றது.

********

நாட்கள் அழகாய் இறக்கை கட்டிப் பறந்தன.

ஒரு வருடம் முன்பு, இதே கிறிஸ்துமஸ் ஈவ் இரவில், ஆரவ் அமுதினிக்கு அந்த முடிவிலி டாலர் பதித்த சங்கிலியைப் பரிசளித்து, தன் காதலை மறைமுகமாகச் சொன்னான். இன்று, மீண்டும் அதே நாள். ஆனால் இன்று மிக மிகச் சிறப்பானது.

கல்லூரி கிறிஸ்துமஸ் பார்ட்டி முடிந்ததும், இரவு 9 மணிக்கு, ஆரவ் அமுதினியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். அலைகள் மென்மையாகத் தழுவிச் செல்லும் அந்த இடம், மனதிற்கு நிம்மதியை தந்தது.

பட்டமளிப்பு விழா மாலையில் அவர்கள் அமர்ந்த அதே இடத்தில், ஆரவ் நின்றான்.

“அம்மு,” என்றவன் குரல் உணர்ச்சிப்பெருக்கில் நடுங்க.

அவன் அவள் முன் மெதுவாக மண்டியிட்டான். தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய, மென்மையான வெல்வெட் பெட்டியை எடுத்தான்.

அமுதினியின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது. அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

ஆரவ் அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே, ஒரு ஒற்றை வைரக்கல் பதித்த மோதிரம், வானத்து நட்சத்திரம் போல மின்னியது.

“அம்மு,” என்று கண்ணீருடன் ஆரம்பித்தான். 

“கடந்த இரண்டு வருஷங்கள், என் வாழ்க்கையோட அர்த்தத்தையே மாத்திடுச்சு… நான் ஒரு இருட்டுக்குள்ள வாழ்ந்துட்டு இருந்தேன்… என் கடந்த காலம் என்னை ஒரு பேய் மாதிரி துரத்திட்டு இருந்தது… என் இருட்டை நீ வெளிச்சமா மாத்தின… என் வலியை நீ காதலா மாத்தின… என் தனிமையை நீ துணையா மாத்தின… என் வாழ்க்கை முழுக்க, நான் ஒரு அனாதைன்னுதான் உணர்ந்தேன்… எனக்குக் குடும்பம் இல்லை, சொந்தம் இல்லை, வீடு இல்லைன்னு நான் தினம் தினம் வருத்தப்பட்டிருக்கேன்…

ஆனா, நீ வந்த பிறகுதான் எனக்குப் புரிஞ்சது, நான் தனியா இல்லைன்னு… என் குடும்பம், என் வீடு, என் உலகம், என் சொந்தம், பந்தம், என் எல்லாமே நீதான் அம்முமா… என்னை உன் கணவனா ஏத்துப்பியா? இந்த அனாதைக்கு ஒரு குடும்பத்தைக் கொடுப்பியா? என் வாழ்க்கையோட நிரந்தர வெளிச்சமா நீ இருப்பியா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீயா அமுதினி?” அவன் கேட்டு முடித்தபோது, அவன் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.

அமுதினியால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவள் ஆனந்தக் கண்ணீர் மட்டுமே அவளது பதிலாக வழிந்தது. 

அவள் சட்டென்று அவன் முன் மண்டியிட்டு, அவன் முகத்தைத் தன் மெல்லிய கைகளில் ஏந்தி, அவன் கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தாள்.

“ஆருமா, நீங்க தனியா இல்லை… நீங்க இனிமேல் எப்பவுமே தனியா இருக்க மாட்டீங்க… நான் உங்களுக்காக எப்பவும் இருப்பேன்… எஸ்… எஸ்… எஸ்… ஐ வில் மேரி யூ ஆருமா… நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்…‌நான் உங்க குடும்பம், உங்க வீடு, உங்க உலகம், உங்க எல்லாமே நானா மட்டுமே இருக்க ஆசைப்படறேன்…” என்று அழுகையும் மகிழ்ச்சியுமாக சொன்னாள் அமுதினி.

அவள் சம்மதத்தைக் கேட்டதும், ஆரவ் அந்த மோதிரத்தை அவள் மெல்லிய விரலில் அணிவித்தான். அது அவளுக்காகவே செய்யப்பட்டது போல, கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. 

அவன் எழுந்து, அவளையும் தூக்கி நிறுத்தி, இந்த உலகமே அறியாத ஒரு இறுக்கமான அணைப்பில் அவளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டான்.

“நம்ம கல்யாணம் எப்போ ஆருமா?” அவள் அவன் மார்பில் புதைந்தபடி கேட்டாள்.

“சீக்கிரம் அம்முமா… நம்ம கல்யாணம்… ஆடம்பரமான மண்டபத்துல இல்லை… சேவாசதன்ல, என் அம்மா முன்னாடி… என் தம்பி தங்கச்சிங்க முன்னாடி நடக்கணும்… அதுதான் என் ஒரே ஆசை…” என்று ஆரவ் சொல்ல,

“அதுதான் என் ஆசையும் ஆருமா…” அவன் காதலில் முற்றிலும் கரைந்துப் போய் சொன்னாள் அமுதினி.

*********

அடுத்த சில வாரங்கள், திருமண ஏற்பாடுகளில் மின்னல் வேகத்தில் பறந்தன. சுருதி, ஒரு அக்கறையுள்ள தோழியாக, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.

ஒரு நாள், அவள் ஆரவிடம் ஏதோ பேசும்போது, “ஆரவ் சார்…” என்று அழைக்க,

ஆரவ் அவளைத் தடுத்து, “சுருதி, ப்ளீஸ்… இனி என்னை சார்னு கூப்பிடாதே.ஹ. நீ அம்முமாவோட உயிர்த் தோழி… அப்போ எனக்கும் நீ தங்கை மாதிரிதான்… இனி என்னை அண்ணன்னு கூப்பிடு…”

சுருதிக்கு ஒரு கணம் ஆச்சரியத்தில் வார்த்தைகள் வரவில்லை. அவள் கண்கள் கலங்கின. 

“நான்… நான் உங்களை அண்ணன்னு கூப்பிடலாமா?”

“ப்ளீஸ். நான் அதை ரொம்ப விரும்புறேன்.”

சுருதி மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள். 

“சரி அண்ணா… நீங்க அமுதுவை ரொம்ப சந்தோஷமா வச்சிருக்கீங்க… தேங்க்யூ சோ மச்…” சுருதி சொல்ல,

“நான் அவளை சந்தோஷமா வச்சிக்கல சுருதி… அவதான் என்னை ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக்குறா… அமுதினி, என் வாழ்க்கையின் பொக்கிஷம் சுருதி…” என்றான் ஆரவ்.

அவர்களின் இந்த உரையாடலை, தூரத்தில் இருந்து பார்த்த அமுதினியின் இதயம் பூரிப்பில் நிறைந்தது. அவள் வாழ்வில் மிக முக்கியமான இரண்டு நபர்கள், இப்போது அண்ணன்-தங்கையாக மாறியிருந்தார்கள்.

*********

சேவா சதன் இல்லமே, ஒரு திருமண மண்டபம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. எளிமையான, ஆனால் அழகான அலங்காரங்கள். விருந்தினர்கள் குறைவுதான். 

சுருதி, டாக்டர் சரண்யா, டாக்டர் ரங்கநாதன், மற்றும் சில நண்பர்கள், பேராசிரியர்கள். மிக முக்கியமாக, அந்த இல்லத்தின் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு ஊழியரும் அந்தத் திருமணத்தின் முக்கிய விருந்தினர்கள்.

அமுதினி, சிகப்பு நிற காஞ்சிவரம் பட்டுப் புடவையில், மிதமான ஒப்பனையுடன் மணமகளாக ஜொலித்தாள். ஆரவ், பட்டு வேட்டி சட்டையில், ராஜகுமாரனைப் போல இருந்தான்.

கமலா அம்மா, அமுதினிக்கு அம்மாவாக இருந்து, தாரை வார்த்துக் கொடுத்தார். அந்தத் தருணம், அங்கு இருந்த அனைவரின் இதயங்களையும் நெகிழச் செய்தது.

ஆரவ் அமுதினியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும்போது, அவர்களது கண்கள் ஒற்றை ஒன்று சந்தித்துக்கொண்டன. அந்த ஒரு நொடியில், அவர்கள் ஆயிரம் வார்த்தைகளை மனதால் பேசிக்கொண்டார்கள்.

சடங்குகள் முடிந்தன. அவர்கள் அதிகாரப்பூர்வமாகக் கணவன்-மனைவி ஆனார்கள். குழந்தைகள் பூக்களைத் தூவி, ஆரவாரத்துடன் அவர்களை வாழ்த்தினார்கள்.

“எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா, ஒருத்தருக்கொருத்தர் துணையா, அன்பா இருக்கணும்…” என்று கமலா அம்மா இருவரையும் மனதார ஆசீர்வதித்தார்.

மதியம், அனைவருக்கும் பிரம்மாண்டமான, சுவையான விருந்து. ஆரவும் அமுதினியும் குழந்தைகளுடன் தரையில் பாய் விரித்து அமர்ந்து சாப்பிட்டார்கள். அது ஒரு திருமணம் மட்டுமல்ல; அது இரண்டு காயம்பட்ட இதயங்கள் இணைந்து உருவான ஒரு திருவிழா, ஒரு புதிய, அழகான குடும்பம் உருவான கொண்டாட்டம்.

**********

அன்று இரவு, ஆரவின் அப்பார்ட்மெண்டில்… இனி அது ‘அவர்களது’ அழகிய இல்லம்!

பால்கனியில், குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி, வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி அமுதினி நின்றிருக்க, திடீரென்று, ஆரவ் அவளைப் பின்னாலிருந்து மென்மையாக அணைத்துக்கொண்டான். அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட்டது.

“அம்முமா…” அவன் குரல் அவள் காதருகே கிசுகிசுத்தது.

“ம்ம்… ஆருமா…”

“இன்னைக்கு நம்ம கல்யாணம் எவ்வளவு அழகா நடந்துச்சு. நான் கனவுல கூட இப்படி நினைச்சுப் பார்க்கல.”

“ஆமா ஆருமா… இதுதான் நான் கனவு கண்ட கல்யாணம்… ஆடம்பரம் இல்லாத, அன்பு மட்டுமே நிறைந்த கல்யாணம்.”

“நீ என்னை ஏத்துக்கிட்டதுக்கு, என் கடந்த காலத்தை முழுசா புரிஞ்சுக்கிட்டதுக்கு, நான் உனக்கு எப்பவும் கடமைப்பட்டிருப்பேன் அம்முமா.”

“நீ என்னை ஏத்துக்கிட்டதுக்கு, என் கடந்த காலத்தை முழுசா புரிஞ்சுக்கிட்டதுக்கு, நான் உனக்கு எப்பவும் கடமைப்பட்டிருப்பேன் அம்முமா.”

அவள் அவன் பக்கம் திரும்பி, அவன் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டாள். 

“ஆருமா, உங்க கடந்த காலம்தான் உங்களை இவ்வளவு ஒரு நல்ல மனுஷனா மாத்தியிருக்கு… உங்க காயங்கள் தான், மத்தவங்க காயத்தை ஆத்துற சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கு… நான் உங்களை உங்க காயங்களோட, உங்க தழும்புகளோட முழுமையா காதலிக்கிறேன்…”

ஆரவ் அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான். அவன் கண்கள் காதலில் ததும்பி வழிந்தன. 

“அம்முமா, என் காயங்கள் எல்லாம் ஆறிடுச்சு… உன் அன்பால, உன் காதலால, உன் இருப்பால… நீ என் தேவதை அமுதினி…”

“நானும் தான் ஆருமா… என் தனிமை, என் வலி எல்லாமே உங்களால ஆறிடுச்சு… நீங்க என் குடும்பம், என் வீடு, என் எல்லாமே… நீங்க இல்லன்னா நான் செ….” என்று சொல்லி முடிக்கும் முன், அவளது இதழ்களில் அவன் தன் காதலை மென்மையாகப் பரிசளித்தான்.

கணவன்-மனைவியாக அவர்களது முதல் முத்தத்தில், ஒரு தித்திப்பான, முடிவில்லாத வாழ்க்கையைத் தொடங்கினர்.

*********

ஆறு மாதங்களுக்குப் பிறகு…

அமுதினி, பேராசிரியர் சரண்யாவின் வழிகாட்டுதலில் தன் முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்கி, அங்கேயே உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினாள்.

ஆரவும் அமுதினியும், கல்லூரியில் சக பேராசிரியர்களாகவும், வீட்டில் அன்பான, குறும்புக்காரத் தம்பதியராகவும், ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். 

வார இறுதிகளில், அவர்கள் தவறாமல் சேவா சதன் சென்று, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டார்கள். அவர்கள் இப்போது அந்த இல்லத்தின் செல்ல ‘அண்ணாவும் அக்காவும்’ ஆக இருந்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, அமுதினி சமையலறையில் எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்தபோது, ஆரவ் திருடனைப் போலப் பதுங்கி வந்து, அவளைப் பின்னாலிருந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“குட் மார்னிங் மிஸஸ். ஆரவ் கிருஷ்ணா.” என்று குறும்புடன் அவள் காதில் சொன்னான்.

“குட் மார்னிங் மிஸ்டர். அமுதினி…” என்று அவள் சிரித்தபடி திரும்பினாள்.

“காலையிலேயே… உங்களுக்குப் பிடிச்ச பலாக்காய் பிரியாணி செஞ்சு இருக்கேங்க…”

“காலையிலயே பிரியாணியா? ஆனா, நீ எனக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கிற அம்முமா,” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான்.

அவன் தலைமுடியைக் கோதியபடி, “ஆமாம்… நான் என் புருஷனுக்கு செல்லம் கொடுக்காம, வேற யாருக்குக் கொடுப்பேன்?” என்றாள் அமுதினி.

காலை உணவிற்குப் பிறகு, அவர்கள் சோஃபாவில் அமர்ந்து, ஒருவரையொருவர் அணைத்தபடி, சூடான காபியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அம்முமா, நான் என் வாழ்க்கையில இவ்வளவு சந்தோஷமா, இவ்வளவு முழுமையா, இவ்வளவு பாதுகாப்பா உணர்ந்ததே இல்லை. எல்லாம் உன்னால தான் அமுதினி…”

“நானும்தான் ஆருமா. நீங்க எனக்கு ஒரு புது வாழ்க்கையை, ஒரு புது அடையாளத்தைக் கொடுத்திருக்கீங்க…” என்று சொல்லி அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் அமுதினி.

தன்னவளை அணைத்து, அவளிடம் சில்மிஷங்களை தொடங்கி, மனைவியை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான் ஆரவ் கிருஷ்ணா!

அவனது சீண்டலில் நாணம் கொண்டு, கணவனின் நெஞ்சிலேயே தஞ்சம் புகுந்துக் கொண்டாள் அமுதினி!

*******

அவர்களது காதல், நாளுக்கு நாள் வளர்ந்தது. காயங்கள் கட்டாயம் ஆறும்… ஆம், அவர்களது காயங்கள் முழுமையாக ஆறிவிட்டன. அமுதினியின் அன்பால் ஆரவும், ஆரவின் காதலால் அமுதினியும் முழுமையாகக் குணமடைந்திருந்தார்கள். 

அவர்களது காதல் கதை, ஒரு அழகான முடிவை எட்டவில்லை; அது ஒரு முடிவில்லாத, அழகான, காதல் நிறைந்த பயணத்தைத் தொடங்கியிருந்தது.

அவர்களது காதல் கதை பல உடைந்த உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு!

மனதின் காயங்கள் நிச்சயம் குணமாகும், வலிகள் ஒருநாள் மறையும், அன்பு எல்லாவற்றையும் சரி செய்யும்! 

நம்பிக்கை வையுங்கள்! பொறுமையாக இருங்கள்! 

உங்களுக்கான ‘ஆரமுது’வும் ஒருநாள் நிச்சயம் வருவார்கள்!

“அன்பு என்பது காயங்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த மருந்து! பொறுமை என்பது அந்த மருந்து வேலை செய்ய நாம் அனுமதிக்கும் நேரம்! நம்பிக்கை என்பது நாம் மீண்டும் ஒருநாள் முழுமையாக இருக்க முடியும் என்ற அசைக்க முடியாத எண்ணம்!”

காயங்கள் ஆரட்டும் ஆரமுதே..! 

ஆரட்டு – வஸ்து (அ) மருந்து 

ஆரவ் மற்றும் அமுதினியின் காதல் எனும் மருந்தால் அவர்களின் காயம் முற்றிலும் மறைந்து, அமுதம் போன்ற இனிய வாழ்க்கையை பரிசளித்து இருக்கிறது! அவர்களுக்குள் அன்பு மலர்ந்திருக்கிறது!

ஆரவும் அமுதினியும் என்றென்றும் ஒன்றாக, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

***முற்றும்***

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்