Loading

கண்ணாலம் 3

“நீ வேணாம்னு சொல்லிட்டா, என் பொண்ணுக்கு எவனும் கெடைக்க மாட்டானா? அடுத்த முகூர்த்தத்துல உன் முன்னாடியே ஜம்முனு கண்ணாலம் பண்ணி வைப்பேன்டா.”

“அடப்போய்யா… உன் பொண்ணையே வேணாம்னு சொல்லிட்டேன். இனி எவனுக்குக் கட்டி வச்சா எனக்கு என்னா? உன்ன மாதிரி ஒரு குடிகாரன் பொண்ணைக் காதலிச்சதுக்காக வெக்கப்படுறேன்.‌”

“குடிகாரனுக்குப் பொறந்த வேலை வெட்டி இல்லாத பையன் தானடா நீனு. உனக்கெல்லாம் எவனும் பொண்ணு தரமாட்டான். கடைசில என் பொண்ணையும் விட்டுட்டோம்னு தெருத் தெருவாய் திரியப் போற.”

“பைத்தியக்காரனா திரிஞ்சால் கூட இனி உன் பொண்ணு பக்கம் வரமாட்டேன் போய்யா.” என்ற சிங்காரவேலன் முறுக்கிக் கொண்டு திரும்ப, 

“ரோஷமுள்ளவனா இருந்தா என் பொண்ணு பக்கம் வராதடா…” எனச் சேதுராமனும் கிளம்பி விட்டார். 

கணவன் பின்னே ஓடினார் அன்னம். அவரை வழியிலேயே தடுத்து நிறுத்திக் கட்டியவள் என்றும் பார்க்காது அடித்து உதைக்க, தள்ளாடி ஓடி வந்த ரங்கம்மாள் தான் காப்பாற்றினார். எதிர்ப்புறம் வேகமாக நடந்து கொண்டிருந்தவன் பின்னால் ஓடி வந்தார் கோமளம். எவ்வளவு அழைத்தும் நிற்காதவன் ஊரைத் தாண்டிச் சென்று விட்டான். 

அடங்காத கோபத்தோடு வீட்டிற்கு வந்த நீலகண்டன், பெண்களாக முடிவு செய்த திருமணத்தால் தான் தன் மரியாதை போய்விட்டது என்று குதிக்க ஆரம்பித்தார். அவரோடு சேர்ந்து மகன்களும் தங்கள் பங்கிற்குக் குதிக்க, புவனா இருதலைக் கொள்ளி எறும்பாக நின்று கொண்டிருந்தாள். 

திருமணம் முடித்து வர வேண்டிய மருமகளைத் தடுத்து நிறுத்தியவர், ஏற்கெனவே இருக்கும் மருமகளை ஒன்றும் செய்ய முடியாமல் வார்த்தைகளால் குத்தி நோகடிக்க, “உங்களுக்குள்ள நடந்த சண்டைக்கு அவ என்னா பண்ணுவா?” நியாயமாகக் கேட்டார் சீதாலட்சுமி. 

“உன் பேத்திக்குச் சப்போர்ட் பண்ற மாதிரி இருந்தா வெளிய போயிடு. இனி அவன் வீட்டுச் சம்பந்தமா எந்த உறவும் இந்த வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது.”

“அவ இப்ப உன் பிள்ளையோட பொண்டாட்டி!” என்றதும் வாயை மூடிக்கொண்ட நீலகண்டனுக்கு எரிச்சல் மட்டும் அடங்கவில்லை. 

குடித்துவிட்டு வந்த சேதுராமன், தன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கட்டியவளின் அண்ணனைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருந்தார். தானும் சளைத்தவன் இல்லை என்று வீட்டிற்கு வரவைத்துக் குடித்த நீலகண்டன் தரம் கெட்டுப் பேசினார். இருவராலும் அந்த இரு குடும்பமும் நாறிப்போனது. 

நின்றுப் போன பிள்ளையின் திருமணத்தை எண்ணிச் சுவரில் சாய்ந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தார் அன்னம். பேத்தியின் வாழ்வுக்காகப் புலம்பிக் கொண்டிருந்தார் ரங்கம்மாள். கோவிலை விட்டுக் கிளம்பிய மகன் இன்னும் வீடு வராததால் தவித்துப் போனார் கோமளம். பேரன் பேத்தியைத் திருமணக் கோலத்தில் பார்க்க ஆசை கொண்ட சீதாலட்சுமி ஒடிந்து அமர்ந்தார். மற்ற அனைவரும் நடந்த சம்பவத்திலிருந்து வெளிவராமல் நின்றிருந்தார்கள். 

ஊரைத் தாண்டிச் சென்றவனின் கோபம் இன்னும் குறையாமல் இருக்கிறது. தன் சட்டையை மடக்கிப் பிடித்துத் தரக்குறைவாகப் பேசிய மாமன் முகமே மனக்கண்ணில் வந்துகொண்டு இருக்கிறது. அவர் மீதுள்ள கோபத்தில் காதலியை மறந்தான். சரவணன் தம்பியை அழைத்தான். 

வீட்டிற்கு வரும்படி கூற, “எனக்கு இருக்கற கோவத்துக்குப் பக்கத்து வீட்டுக்காரன் தலையை வெட்டி வீசிடுவேன். கோபம் தணிஞ்சு நானா வர வரைக்கும் விட்டுடுங்க.” என வைத்து விட்டான். 

ஆண்களைச் சுற்றி மட்டுமே இதுவரை அனைத்துச் சம்பவமும் நடந்து கொண்டிருந்தது. தனி ஒருத்தியாக விட்டுச் சென்றவளைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. கோவில் வாசலில் அனாதையாக நின்று கொண்டிருந்தாள் பூங்கொடி. தன்னைப் பெற்றவனும், தன்னோடு சேர்ந்து வாழ வந்தவனும், எந்தத் தவறும் செய்யாதவளை உதறிவிட்டுச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிதும் தன் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உதறித் தள்ளிய அந்த இருவரையும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

நியாயமாக உட்கார்ந்து ஒப்பாரி வைக்க வேண்டிய அவள் கண்ணில் இருந்து சிறு துளி நீர் வரவில்லை. வலியைத் தாண்டிய கோபம் அவளுக்கு. அவர்களுக்குள் உண்டான பகைக்குத் தன்னை இரையாக்கி விட்ட விரக்தியில் இருக்கிறாள். தோழிகள் வந்து அழைத்தும் நகராதவள் ஒரு முடிவெடுத்து ஊருக்கு நடுவில் நின்றாள். 

***

“எங்கடா இருக்க?”

“போன் பண்ணாதீங்கன்னு சொன்னேன்ல.”

“அடேய்! நடக்கற கலவரம் புரியாமல் கத்தாத. பஞ்சாயத்தைக் கூட்டி இருக்காங்க.”

“யாரு?”

“பூங்கொடி!” என்றதும்தான் அவள் எண்ணமே உதயமானது சிங்காரவேலனுக்கு. 

கைப்பேசியைத் துண்டித்த கையோடு ஒரே ஓட்டமாக ஓடினான் ஊருக்கு. அவன் ஊருக்கு மத்தியில் வந்து நிற்பதற்கு முன், இரு குடும்பத்தார்களும் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவன் நடையை நிறுத்தினாள் பூங்கொடி. ரௌத்திரம் பொங்க நின்றிருந்தவள், அவன் வரவை அறிந்து பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தாள். 

“பூங்கொடி உங்க ரெண்டு வீட்டு மேலயும் புகார் குடுத்திருக்கு.” என்றதில் சிங்காரவேலன் புருவம் சுருங்கியது. 

கொடுத்த புகாரைச் சுருக்கமாகக் கூறி, அந்த இரு வீட்டையும் அதிரவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். அதைவிட, அதிகத் திகைப்பில் நின்றிருந்தான் வேலன். அந்நொடி தான் செய்த மாபெரும் தவறு உள்ளத்தைச் சுட்டது. அவளைச் சிறிதும் எண்ணாது செய்த செயலை எண்ணி வெட்கித் தலை குனிந்தான். சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்த பஞ்சாயத்துத் தலைவர் பூங்கொடியைப் பேசச் சொன்னார். 

“இனி எனக்கும், இந்த ரெண்டு குடும்பத்துக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை. ஒருவேளை நான் செத்துட்டால் கூட…” என்றதும், “லாலா!” எனச் சிங்காரவேலன் நெருங்க, திரும்பி ஒரே ஒரு பார்வை பார்த்தாள். அதில் அவன் கால்கள் நடையை நிறுத்திவிட்டது. 

“அப்பா, அம்மானு சொல்லிக்கிட்டு இவங்களும், தாய்மாமன், தாய் மாமன் மவன்னு சொல்லிக்கிட்டு இவங்களும், எந்தச் சடங்கும் செய்யக்கூடாது. இவங்களுக்கும், எனக்குமான உறவை அறுத்து விட்டுடுங்க.” 

குடிபோதையில் நின்றிருந்த சேதுராமனுக்கு முழுதும் தெளிந்தது. மகளிடம் பேசத் துணிவில்லாது, தோற்றுப்போன தந்தையாக நின்றார். அன்னம், எவ்வளவு கதறியும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. கோமளம், மருமகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கத் தங்கை மகளின் செயலில் அதிர்ந்து போனார் நீலகண்டன். 

சுற்றி நடக்கும் எதையும் கருத்தில் கொள்ளாது சிலையாக நின்றிருந்தவன் இதயம் நொருங்கியது. பலமான இரும்புக் கம்பியைச் சுட்டு, நடு நெஞ்சுக்குள் சொருகியது போல் துடித்துப் போனான். உணர்வுகளும், அவள் மீது கொண்ட காதலும் காறித் துப்பியது. ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாதவனாக அவள் முன்பு நின்றான். 

குடும்பம் என்னும் கூட்டைக் கலைக்க விரும்பாத பஞ்சாயத்துத் தலைவர் அவர் பங்கிற்கு எடுத்துக் கூறிவிட்டார். முடிவை மறுபரிசீலனை செய்யக்கூட கால அவகாசம் எடுத்துக் கொள்ளக் கூறினார். எதற்கும் செவி மடுக்காதவள், 

“நீங்களா எனக்கு இதைச் செஞ்சா நான் உயிரோட இருப்பேன். இல்லனா, என் சாவுக்கு நீங்களும் காரணம்னு எழுதி வச்சிட்டுச் செத்துருவேன்.” ஒரே போடாக அவர் தலையிலும் கல்லைப் போட்டாள்.

வேறு வழி இல்லாததால், ஊருக்கு மத்தியில் பூங்கொடியை நிற்க வைத்துக் கையில் தண்ணீரையும் புல்லையும் கொடுத்தார். தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் சிங்காரவேலனை, உரித்து விழித்துப் பார்த்தவள் சொம்பில் இருந்த தண்ணீரை நிலத்தில் ஊற்றிப் புல்லை வெட்டி உறவை முறித்தாள். அவன் வேண்டாம் என்றபோது கூட அதன் வலியை உணரவில்லை. தன் முன்னால் மனம் உருகிக் காதலித்தவள், தன்னை வேண்டாம் என்றதில் மனம் உடைந்து விட்டான். 

உடைந்த அவன் உள்ளத்தின் வலியை, விழிகளில் பார்த்து மனம் மகிழ்ந்தவள் எங்குச் செல்வது என்று தெரியாமல் அனாதையாக நின்றாள். பெற்ற மகளை எண்ணி அன்னம் தலையில் அடித்துக் கொள்ள, குடும்பத்தை நிலைகுலையச் செய்த ஆண்களைத் திட்டித் தீர்த்தார் கோமளம். 

“இப்ப நீ எங்கம்மா இருப்ப…” என்ற பஞ்சாயத்துத் தலைவரின் கேள்விக்குப் பதில் இல்லை அவளிடம். கண் கலங்கத் தலை குனிந்து நின்ற அத்தை மகளைக் காண முடியவில்லை அவனால். 

மெல்ல நெருங்கி நின்று, “லாலா…” என்றவனைப் புழுவாகப் பார்த்தவள் நகர்ந்திட, அவள் கைப்பிடித்து பாட்டி ரங்கம்மாள் இழுத்துச் சென்றார். 

“என்னை எங்க கூட்டிட்டுப் போற பாட்டி?”

“எல்லாத்தையும் வெட்டி விட்டுட்டு எங்க போகப் போற?”

“நான் எங்கயோ போறேன், விடு!”

“நீ அந்த ரெண்டு குடும்பத்து உறவைத்தான் வெட்டி விட்டிருக்க, என்னை இல்ல. அவனுங்களை மாதிரி உன்னை நட்டாத்துல விட்டுட்டுப் போக என்னால முடியாது.”

“நீ என்னா சொன்னாலும், நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்.”

“இனி நானும் அந்த வீட்டுக்கு உன்னைக் கூட்டிட்டுப் போக மாட்டேன்.”

“பாட்டி!” 

“என் வீட்டுக்கு வாடி. என் புருஷன் எனக்குன்னு எழுதி வச்ச வீடு இன்னும் அப்புடியே தான் இருக்கு. என் பேத்தி வாழ்க்கையைக் கெடுத்த அந்த ரெண்டு குடும்பம் எனக்கும் வேணாம். நல்லதோ கெட்டதோ, அது உன் கூடவே இருக்கட்டும்.” 

சேதுராமன், அன்னம் திருமணம் நடப்பதற்கு முன் வரை இந்த வீட்டில் தான் வசித்தார்கள். திருமணம் செய்த கையோடு அன்னத்திற்குச் சொந்தமான இடத்தைக் கொடுத்து வீட்டையும் கட்டிக் கொடுத்தார் நீலகண்டன். ரங்கம்மாளும், அவர் கணவரும் மட்டுமே இந்த வீட்டில் வசித்தார்கள். கணவர் இறந்தபின், மகனோடு சென்றுவிட்டார் இவ்வீட்டை அனாதையாக விட்டு. கடைசியாக அதுதான் கரம் கொடுத்திருக்கிறது பூங்கொடிக்கு. 

வீட்டிற்கு வந்ததும் அமர்ந்தவள் தான்… அதன் பின் எழவே இல்லை! எழ முடியாதபடி செய்து விட்டான் சிங்காரவேலன். ரங்கம்மாள் பாட்டிக்குப் பேத்தியைப் பார்க்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி வீட்டிற்கு அழைத்து வந்தவர் தேற்றுவதற்கு வழி தெரியாமல் ஓரமாக அமர்ந்து விட்டார். மகளைத் தேடி வந்தார் அன்னம். அவரோடு சேர்ந்து கோமளமும், அவரின் மருமகள்களும் வந்திருந்தனர். 

“யாரும் வராதீங்க.”

“நாங்க என்னாடி பண்ணோம்?”

“நடந்ததைப் பத்திப் பேச வேணாம். அந்த ரெண்டு குடும்பத்துச் சம்பந்தமா யாரைப் பார்க்கவும் விருப்பம் இல்ல, அவ்ளோதான். என் மனசைப் போட்டு நோகடிக்காம கிளம்பிடுங்க.”

“வீட்டுக்கு வா, பூங்கொடி…”

“எந்த வீட்டுக்கு வரச் சொல்ற? பெத்தபுள்ள வாழ்க்கையக் கெடுத்த உன் புருஷன் வீட்டுக்கா? போய்ச் சொல்லு. குடி அவரை மட்டும் இல்ல, அவருக்குப் பொண்ணாய் பொறந்த என் வாழ்க்கையையும் மொத்தமாகக் கெடுத்துடிச்சுன்னு.”

“நடந்தது நடந்து போச்சு பூங்கொடி. அவங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணி அடுத்த நல்ல முகூர்த்தத்துல கண்ணாலத்தை முடிச்சிடலாம். கொஞ்சம் எங்களுக்காகப் பொறுத்துக்க…”

“என்னாது கண்ணாலமா? இனி அது என் வாழ்க்கையில இல்லை! அதுவும் உங்க மவன் கூட இல்லவே இல்ல. இதைப் பத்தி யாரும் பேசக் கூடாதுன்னு தான் உங்களையும் சேர்த்து வெட்டி விட்டேன். எந்த உரிமையில என்கிட்ட வந்து பேசுறீங்க. இப்புடித்தான் வந்து பேசுவீங்கன்னா, நான் இங்கயும் இருக்க மாட்டேன்.”

“என்னாத்துக்கு என் பேத்தியத் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க? உங்க புருஷங்களை ஆரம்பத்துல இருந்து அடக்கி வச்சிருந்தா, என் பேத்திக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா? அவங்க ரெண்டு பேத்தையும் விட உன் மவன் மேல தான் ஆத்திரம் எனக்கு. என்னமோ, இவ இல்லன்னா வாழ்க்கையே இல்லைன்னு சுத்திகிட்டுத் திரிஞ்ச பையன்… இவளைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிக்காம, வேணாம்னு சொல்லிட்டுப் போய்கிட்டே இருக்கான். நல்லவேளையா, இப்பவே அவன் குணம் என்னான்னு தெரிஞ்சிருச்சு. இல்லனா, உங்க ரெண்டு பேத்த மாதிரி தான் இவளும் வாழ்க்கை முழுக்கக் கஷ்டப்பட்டு இருப்பா.” 

“ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ அன்பு வச்சிருக்காங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஏதோ புத்தி கெட்டத்தனமா அப்பன் மேல கைய வச்சதும் அப்படி நடந்துகிட்டான். இவ இல்லாம சத்தியமா அவன் இருக்க மாட்டான். அது இவளுக்கும் தெரியும்.” எனக் கோமளம் பேசிக் கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்தான் சிங்காரவேலன். 

அவனைப் பார்த்ததும் தான் தாமதம், அறைக்குள் ஓட முயன்றாள். அதற்குள் அவளை நெருங்கிக் கைப்பிடித்தவன், “சாரி லாலா… ஏன் இப்புடிப் பண்ணேன், என்னா ஏதுன்னு ஒன்னும் புரியல. இது முழுக்க முழுக்க என்னோட தப்பு தான். உன்னப் பத்தி யோசிக்காம அப்புடி விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. நான் பண்ணதெல்லாம் தப்பு தான்டி! இப்புடி என் மூஞ்சக் கூடப் பார்க்க மாட்டேன்னு நீ போறத ஏத்துக்க முடியல. உறவை வெட்டி விடுறன்னு சொன்ன அந்த நிமிஷமே நான் உடைஞ்சிட்டேன்.

தயவு செஞ்சு இந்த ஒரே ஒரு தடவை மட்டும் மன்னிச்சிரு. இனி யாருக்காகவும் எந்த மாதிரிச் சூழ்நிலை வந்தாலும், உன்னை விட்டுக் குடுக்க மாட்டேன். எனக்காக வீட்டுக்கு வாடி…” என்ற எதையும் சிங்காரத்தின் காதலி காதில் வாங்கவில்லை. 

அவன் கையில் இருக்கும் தன் கையை உருவிக் கொள்வதில் மட்டுமே குறியாக இருந்தாள். அத்தை மகளின் பாரா முகத்தைக் கண்டு மனம் நொந்து போனவன், “வேணும்னா சொல்லு, உனக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்துடுறேன். எனக்கு நீ மட்டும் போதும்டி!” என்றதும் வெடுக்கென்று கையை உருவிக் கொண்டாள். 

சிரித்த முகமும், அமைதியான பேச்சும் மட்டுமே பூங்கொடியின் தோற்றம். அதை உடைத்தவன், மாறி நிற்கும் தன்னவளின் தோற்றத்தை ஏற்க இயலாது தோற்றுப் போய் நிற்க, “நான் மட்டும் போதுமா? அதுக்கான அர்த்தம் என்னான்னு தெரியுமா? உன்கிட்டப் பேச மட்டும் இல்ல, மூஞ்சியப் பார்க்கக் கூடப் பிடிக்கல. ஜென்மத்துக்கும் என் பக்கம் வராத…” என்றதற்குப் பின் அடக்கி வைத்த கண்ணீர் வெடித்தது. 

எவ்வளவு நேரம் தான் அந்த மனமும் பாரத்தைத் தாங்கும். அழுத்தம் தாங்காது உடைந்தது கண்ணீர். அத்தை மகளைத் தாவியணைக்க முடியாது பரிதவித்துப் போனவன் விழிகளில் வலி தாண்டவம் ஆடியது. கண்ணீர் தானாகச் சுரந்தது. மீண்டும் கை பிடிக்க எண்ணியவன் எண்ணத்தை நிறைவேற்ற விடாமல் விலகி நின்றவள், 

“எத்தனையோ முறை, நான் காதலிக்கிறேன்னு சொன்னதால தான என்னை விரும்புறன்னு கேட்டு இருக்கேன். அப்போல்லாம் அதுக்குப் பதில் சொல்லாம நழுவி இருக்க… அதுக்குப் பின்னாடி இப்புடியான காரணம் இருக்கும்னு எதிர்பார்க்கல.” என்ற பூங்கொடியின் முகம் அழுகையில் சிவந்தது. 

“என்னாடி சொல்ற?”

“நடிக்காத… போனாப் போகுதுன்னு வேற வழி இல்லாம கண்ணாலம் பண்ண நெனச்சிருக்க. அதனால தான் ஒரு சாக்கு கெடைச்சதும் விட்டு ஓடிட்ட.”

“பைத்தியக்காரி மாதிரிப் பேசாத. இதெல்லாம் யாருடி உனக்குச் சொல்லித் தர்றது? போனாப் போகுதுன்னு நான் எதுக்குக் கண்ணாலம் பண்ணனும்? என்னை விட்டா வேற பையனே கெடைக்காதா உனக்கு?”

“ஹான்! காலைலயே சொன்னியே, உன் பொண்ண விட்டா வேற பொண்ணே கெடைக்காதான்னு, அந்த மாதிரியா?”

“நான் என்னா சொல்றேன், நீ என்னா புரிஞ்சிக்கிற… போனாப் போகுதுன்னு கண்ணாலம் பண்ற அளவுக்கு நீ யாரோ இல்ல லாலா. எனக்கும் உன்னைப் புடிக்கும். சொல்லப்போனா, நீ விரும்புறன்னு சொல்றதுக்கு முன்னாடி இருந்தே உன்னைப் புடிக்கும்.”

“ஐயோ சாமி, போதும்! தயவு செஞ்சு ஆள விடு. இதுக்கு மேலயும் பேசத் தெம்பு இல்ல. எல்லாரும் இப்புடியே நின்னுட்டு இருந்தீங்க, என்னா பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” 

“கொஞ்சம் நான் சொல்றதக் கேளு”

“நீ யாரு? நீ சொல்றத நான் எதுக்குக் கேட்கணும்?”

“ரொம்பக் கோவமா இருக்க லாலா. இப்ப எது பேசுனாலும் தப்பாத்தான் தெரியும். இதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம், கொஞ்சம் அமைதியா இரு.”

“இப்ப இங்க இருந்து நீ போறியா இல்லையா?”

அவன் நகராமல் சமாதானம் செய்வதில் மட்டும் கவனத்தைச் செலுத்த, ஆத்திரம் அதிகரித்தது பூங்கொடிக்கு. அவன் மீதுள்ள கோபத்தை அடக்க முடியாது அங்கிருந்த பொருளைத் தூக்கி அடித்துக் கத்த ஆரம்பித்தாள். அதுவரை அமைதியாக இருந்த ரங்கம்மாள், 

“என் பேத்திய வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் உனக்கு இங்க என்னாடா வேலை? போய் உங்கப்பன் யாரைக் கை காட்டுறானோ, அந்தப் பொண்ணுக்குத் தாலி கட்டு. என் பேத்தி உன்னால பட்டதெல்லாம் போதும். அவளுக்கு எப்புடி வாழ்க்கை அமைச்சுத் தரணும்னு எனக்குத் தெரியும். நீயும், உன் வீட்டு ஆளுங்களும் கெளம்புங்க.” என அவன் முதுகில் கை வைத்துத் தள்ளினார். 

பேச வந்த மகனின் கைப்பிடித்தார் கோமளம். கண்ணால் சைகை செய்வது புரிந்தும், காதலியை விட்டுச் செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. பொக்கிஷமான பொருளைத் தொலைத்த வேதனை அவன் முகத்தில். அதைக் கண்டு அவன் மீதுள்ள கோபத்தை மறந்தவர் ஆதரவாக அணைத்து அழைத்துச் செல்ல, மனம் நோக அமர்ந்திருந்தார் அன்னம்.

“என்னாத்துக்குடி இங்க ஒக்காந்து கெடக்க? அவ எடுத்த முடிவு சரிதான். பொம்பளைங்க நெலைமைய யோசிக்காம ஆட்டம் ஆடுற ஆம்பளைங்களுக்கு இதுதான் சரியான தண்டனை! எவன் திருந்தி வந்து அவ மனசை மாத்துறானோ, அவன் உறவு போதும் இவளுக்கு. கண்டதை நெனைச்சிக் கவலைப்படாம தெம்பா இரு. நீ பெத்த புள்ள உன்னை விட்டு எங்கயும் போயிடாது.” 

ஓயாமல் குறை சொல்லித் தன்னை அரவை மிஷின் போல் அரைத்துக் கொண்டிருக்கும் மாமியாரை மட்டும்தான் இதுவரை பார்த்திருக்கிறாள். அதற்குப் பின்னான தன் மீதான பாசத்தை, இத்தனை வருட மருமகள் வாழ்விற்குப் பிறகு பார்க்கிறார். வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவருக்கு வழியாக வந்தவர் பேச்சைக் கேட்டு பெருமூச்சோடு கிளம்பினார். 

அனைவரும் சென்ற பின் மீண்டும் அமைதி அவளிடம். தனிமை மட்டுமே இப்போது பேத்திக்குத் தேவை என்றுணர்ந்து தொந்தரவு செய்யவில்லை ரங்கம்மாள் பாட்டி. அழகாக விடிந்த விடியல் அலங்கோலமாக முடிந்தது. காலையிலிருந்து குதித்துக் கொண்டிருந்த வீட்டின் ஆண்கள், அடங்கி ஒடுங்கி அமர்ந்திருக்கிறார்கள். அதிலும் சேதுராமனின் நிலையோ கவலைக்கிடம். 

தங்கை மகள் மீது உயிரையே வைத்திருக்கும் மகனைப் பற்றித் தெரிந்தும், இப்படி ஒரு காரியத்தைச் செய்ததை எண்ணித் தாமதமாக வருந்திக் கொண்டிருக்கிறார் நீலகண்டன். எத்தனையோ முறை குடித்துவிட்டு இருவருக்கும் பிரச்சினை நடந்திருக்கிறது. அவையெல்லாம், விடிந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டால் முடிந்துவிடும். அப்படியான தங்களுக்குள் இப்படி ஒரு போர் எப்படி வந்தது என்று தெரியாமல் இருவரும் உடைந்து அமர்ந்திருக்கிறார்கள். 

காலையில் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் சேர்த்து, வீட்டுத் தலைவிகள் வட்டியும் முதலுமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தைக்காக அவசரப்பட்டதை எண்ணிச் சரவணனும், கண்ணனும் வாய்மூடி ஓரமாக அமர்ந்து கொள்ள, அவர்களைக் கேவலமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மனைவிமார்கள். போதாக் குறைக்குச் சீதாலட்சுமியும் வார்த்தையால் வாட்டி வதைத்தார். 

பெரியவர்கள் என்ற ஸ்தானத்தை இழந்ததாக உணர்ந்தவர்கள் தலைகுனிந்து அமர்ந்து விட்டனர். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு, பின் திண்ணையில் அமர்ந்திருந்தவன் பார்வை தன்னவளின் தோட்டப்பக்கம் சென்றது. இந்தத் தோட்டம் தான் இருவருக்குமான காதல் மாளிகை. தனிமையில் இனிமை கண்டிருக்கிறார்கள். இரண்டு நாள்கள் முன்னர் கூட அதே இடத்தில் தான் காதல் சங்கமித்தது.

அப்பொழுது அவள் கேட்ட கேள்வியும், அதற்குத் தான் காதலாக மழுப்பியதையும் எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறான். அப்போதே அவள் மனத்தில் இருக்கும் எண்ணத்தைத் துடைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், தன் காதலே போதும் என்று தவறாக எண்ணியதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் சிங்காரவேலன். 

மனம் கேட்கவில்லை. உறவை வெட்டி விடுவாள் என்று கனவிலும் எதிர்பார்க்காதவன் கண்கள் குருடானது. எந்த வழியைத் தேர்ந்தெடுத்துத் தன்னவளின் மனத்தை மாற்றிக் கைகோர்த்து நடக்கப் போகிறோம் என்ற பெரும் குழப்பத்தில் இரவைக் கழித்தான். 

அங்கிருந்து அழைத்து வந்ததற்குப் பின் அவன் பக்கமே செல்லவில்லை கோமளம். மகன் நினைத்திருந்தால், அந்தப் பிரச்சினையை உதறித் தள்ளித் திருமணத்தை முடித்திருக்க முடியும் என்ற ஆதங்கம் அவருக்கு. பெண் புத்தி பின் புத்தி என்றால், ஆண் புத்தி அவசரப் புத்தி. அவசரத்தில் வாழ்வை இழந்தவன் அவளையும் இழந்து நிற்கிறான். 

நேற்றிரவு அவளை எண்ணித் தித்தித்த ஞாபகங்கள் சுட்டது. விரக்தியில் அமர்ந்திருந்தவன் மனம் அவளிடம் பேசச் சொல்லி மன்றாடியது. அதன் தொந்தரவு தாங்காது வீட்டை விட்டு வெளியேறியவன் நேராகக் காதலி வீட்டு முன்பு நின்றான். அவள் மனம் போல் கதவும் பூட்டப்பட்டிருந்தது. வெளிச்சம் இருப்பதை வைத்து அவள் விழித்திருப்பதை அறிந்தவன், 

“லாலா…” என்றழைத்தான் தடுமாற்றத்தோடு. 

விழி மூடி முட்டியில் முகம் சாய்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவள் செவியில் இவை விழுந்தது. மூடிய கண்களை இறுக்கமாக மூடி, அவன் நினைவை ஒதுக்கித் தள்ள முயன்ற அவளால் முடியவில்லை. முகம் உயர்த்திக் கதவை நோக்கினாள். 

“மன்னிச்சிடு லாலா. இப்ப யோசிக்கும் போது தான் இது உனக்கு எவ்ளோ பெரிய வலியைக் குடுத்து இருக்கும்னு புரியுது. தப்புப் பண்ணிட்டேன். எத்தனைத் தடவை, நான் ஏதாச்சும் பண்ணிட்டா அப்புடிப் பண்ணாதன்னு அடிச்சிருக்க. இப்பக் கூட அதே போல அடிச்சுக்க… அதுக்குத் தான் வந்து நிற்கிறேன். நாலு அடி அடிச்சிட்டுத் தாலியக் கட்டுடான்னு சொல்றத விட்டுட்டு என்னை வேண்டவே வேணாம்னு சொல்ற… நான் பண்ண அதே தப்பைத் தான இப்ப நீயும் பண்ற… புத்தி கெட்டத்தனமா புரிஞ்சுக்காம பண்ணிட்டேன்.

என் லாலா மன்னிக்கிற வரைக்கும் இங்கதான் இருப்பேன். எனக்குத் தெரியும், நீ என்னை மன்னிச்சிடுவ… கையோட ரெண்டு பேரும் கண்ணாலம் பண்ணிக்கலாம். நமக்குள்ள சண்டை வரக் காரணமான அந்தக் குடும்பம் வேணாம் நமக்கு. எனக்கு நீ போதும், உனக்கு நான் போதும்!” என்றவன் அவள் பதிலுக்காகக் காத்திருந்து தோற்றுப் போனான். 

படுத்துக் கொண்டிருந்த ரங்கம்மாள் பாட்டியின் காதில் இவை அனைத்தும் விழுந்து கொண்டுதான் இருந்தது. பேத்தியைத் திரும்பிப் பார்க்காது அவளுக்கான நேரத்தைக் கொடுத்தார். எவ்வளவு நேரம் கொடுத்தாலும், மனம் மாறாது எனத் தெளிவாகக் காட்டினாள், விடிந்தும் கதவைத் திறக்காமல்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்