அத்தியாயம் – 3
ஆரவ் கிருஷ்ணா அவளை நேருக்கு நேராகப் பார்த்ததில் அமுதினி உறைந்துபோனாள்.
அவனது கண்களில் இருந்த அந்த வலி, ஒரு நொடியில் மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக, அதில் நிரம்பிருந்தது அப்பட்டமான கோபம். கடுமையான, எரிமலை போன்ற கோபம்.
அவன் வேகமாக எழுந்து, அந்தப் புகைப்படத்தை தன் சட்டைப் பாக்கெட்டில் திணிக்க, முகமோ கல்லாக மாறியிருந்தது.
“நீ இங்க என்ன பண்ற?”
அவன் குரலில் நெருப்பை விட அதீத உஷ்ணமிருந்தது. அதில் கோபம் மட்டுமல்ல, எரிச்சலும் கலந்திருந்தது.
“சார்… நான்… சாரி, நான் வேணும்னே இல்ல… நான் லைப்ரரிக்குப் போய்ட்டு இருந்தேன்…” என்று அமுதினி பேச தயங்கினாள்.
“நான் உன்ன கேள்வி கேட்டேன்? இங்க என்ன பண்ற?” அவன் குரலில் இருந்த கடுமை, அவளை நடுங்க வைத்தது.
“சார், நான் ஜஸ்ட் —”
“ஸ்பையிங்?” என்று அவன் குறுக்கிட, குரலோ கத்தியை விட கூர்மையாக இருந்தது.
“சார்… இல்…”
“யாரையாவது தனியா இருக்கும்போது ஒட்டுக் கேக்கிறது தான் உங்களுக்கு ஹாபியா?”
அதை கேட்ட அமுதினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இல்ல சார்! நான் உங்களை… சார் அப்படி எல்லாம் பண்ணல!”
“தென்?” அவன் ஒரு அடி முன்னால் நெருங்கினான். அவனது முகத்தில் எந்த மென்மையும் இல்லை.
“நீ இங்க வந்து, என்னை பார்த்துட்டு, ஒளிஞ்சி நின்னுட்டிருக்க… அதுக்கு என்ன அர்த்தம்..?”
“சார், நான் வேணும்னே வரல… நான் போயிட்டு இருந்தேன், எனக்கு தெரியாம…” என்ற அமுதினியின் கண்களில் கண்ணீர் வந்தது.
“தெரியாம?” அவர் நையாண்டியாகச் சிரித்தான். அது ஒரு சிரிப்பே இல்லை கேலி மட்டுமே நிறைந்திருந்தது.
“இங்க வந்து, என்னை பார்த்து, நின்னுட்டு… தெரியாம ன்னு சொல்றியா? என்ன நீ என்னைப் பத்தி தெரிஞ்சிக்க ட்ரை பண்றியா?”
“இல்ல சார்!”
“அப்போ என்ன?” அவன் குரல் இன்னும் கடுமையானது.
மேலும், “லிசன், அமுதினி. என் பர்சனல் லைஃப் உனக்கு தேவையில்ல… என் கிளாஸ்க்கு வா, படி, அத்தோட போய்டு… அவ்ளோதான்… என்னைப் பத்தி யோசிக்கிறதுக்கு, ஆராய்ச்சி பண்றதுக்கு நேரம் வேஸ்ட் பண்ணாத…”
அமுதினி நடுங்கி போயிருக்க அவனது வார்த்தைகள் அவளை கத்தியால் வெட்டுவது போல இருந்தது.
“ப்ளீஸ் சார், நான் —”
“போ,” ஆரவ் அதட்டி,
“இப்போ கிளம்பு. நான் உன்னை மறுபடியும் என் பர்சனல் ஸ்பேஸ்ல பார்த்தா, நீ நிறைய கான்சிக்வென்ஸ் ஃபேஸ் பண்ண வேண்டிய நிலைமை வந்துரும்…”
அமுதினியின் கால்கள் நடுங்கின. அவளால் நம்ப முடியவில்லை. சில நிமிடங்களுக்கு முன், இவர் ஒரு உடைந்த மனிதராக, கண்ணீரோடு இருந்தார் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்.
ஏனென்றால், இப்போது அவர் ஒரு கல் சிலை போல, உணர்ச்சியற்று, கொடூரமாக மாறி போயிருந்தார்.
அமுதினியோ அங்கிருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால், அவள் ஆரவ்வை திரும்பிப் பார்க்கவில்லை. அவளால் முடியவில்லை.
பின்னால், ஆரவ் நின்றிருந்தார். அவரது முகம் இன்னும் கடினமாக இருந்தது. அவரது கை முஷ்டி இறுகி இருந்தன. அவர் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டவில்லை. அவர் பார்த்தது அமுதினி விலகிச் செல்வதை மட்டுமே.
****
மறுநாள் காலை.
அமுதினி வகுப்பறைக்கு வந்தாள். அவளது கண்கள் இன்னமுமே சிவந்திருந்தன. நேற்றிரவு அவளால் தூங்க முடியவில்லை. ஆரவின் வார்த்தைகள் அவளை வேட்டையாடின. அவரது கோபம், அவரது கொடூரமான தொனி… எல்லாமே அவளது மென்மையான மனதை உடைத்திருந்தது.
சுருதி அவளைப் பார்த்ததும் அதிர்ந்து, “அமுது! என்னாச்சு? நீ அழுதியா?” என்று கேட்க,
“இல்ல… தூக்கம் சரியா வரல,” அமுதினி பொய் சொன்னாள்.
“ஏதோ மறைக்கிற மாதிரி தெரியுது… என்னாச்சுன்னு சொல்லு…”
அமுதினி தலையசைத்தாள். “ஒண்ணும் இல்ல சுருதி. நான் ஓகே தான்…”
சுருதி நம்பவில்லை. ஆனால், அவள் மேலும் எதை பற்றியும் கேட்கவில்லை.
வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியது. மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
ஏனென்றால், ஆரவ் கிருஷ்ணாவின் வகுப்பு என்றால், அது ஒரு பரீட்சை போன்றது. அதனால் யாரும் தவறு செய்ய விரும்பவில்லை.
சரியாக ஒன்பது மணிக்கு, வகுப்பறையின் கதவு திறக்கப்பட்டது.
ஆரவ் உள்ளே நுழைந்தான். இன்றைக்கு அவன் கருப்பு நிற ஷர்ட் அணிந்திருந்தான். அவனது முகம் வழக்கம்போல் வெளிப்பாடற்றே காணப்பட்டது.
அவனுடைய பார்வை ஒருமுறை வகுப்பறையை ஸ்கேன் செய்தது. அமுதினியின் மீது அவனது பார்வை பதிந்தது ஒரு நொடி. ஆனால், அவன் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. அவனோ, அவளை ஒரு அந்நியன் போல் பார்த்து வைத்தான்.
அதில் அமுதினிக்கு மீண்டும் மனம் வேதனையானது.
ஆரவ் தன் மேஜையின் மீது புத்தகங்களை வைத்து திரும்பி மாணவர்களைப் பார்த்தான். அவனது முகத்தில் ஒரு விசித்திரமான சீற்றம் இருந்தது.
“குட் மார்னிங்,” என்று ஆரவ் சொன்னாலும், அவனது குரலில் எவ்வித அரவணைப்பும் இல்லை.
“குட் மார்னிங் சார்,” என்று மாணவர்கள் மெதுவாக பதிலளித்தனர்.
“இன்னைக்கு நாம டிப்ரஷன் மற்றும் ஆங்ஸைட்டி டிசார்டர்ஸ் பத்திப் பார்க்க போறோம்… நீங்க எல்லாரும் என்னோட லாஸ்ட் கிளாஸ்ல சொன்ன அசைன்மென்ட் பண்ணீங்களா?”
அதற்கு மாணவர்களும் ஆமென்று தலையசைத்தனர்.
“கெட் இட் அவுட்,” அவனும் கட்டளையிட்டான்.
மாணவர்கள் தங்கள் அசைன்மென்ட் தாள்களை வெளியே எடுத்தனர். ஆரவ் வரிசையாக நடந்து, ஒவ்வொரு மாணவரின் தாள்களையும் பார்த்தான். அவன் யாரிடமும் பேசவில்லை, புன்னகைக்கவில்லை வெறும் ஆய்வை மட்டுமே மேற்கொண்டான்.
ஒரு மாணவியின் தாளை எடுத்து பார்த்த பிறகு, அவன் அந்த மாணவியைப் பார்த்தான்.
“இது என்ன?”
அவனது இந்த குரலில் இருந்த அவமதிப்பு அனைவருக்கும் புரிந்தது.
அந்த மாணவி நடுங்கி, “சார், அசைன்மென்ட்…” என்கவும்,
“இது அசைன்மென்ட்டா? இது விக்கிபீடியாவிலிருந்து காப்பி-பேஸ்ட் பண்ணினது… நான் முட்டாளா இருக்கேன்னு நினைக்கிறீங்ளா?”
அந்த மாணவியின் முகம் வெளிறிப் போனது. “சார், நான்—”
“நான் எதையும் கேட்க விரும்பலை. நீங்க இந்த அசைன்மென்ட் மறுபடியும் பண்ணுங்க… அது ஒரிஜினல் வொர்க்கா இருக்கணும்.. இல்லன்னா, நான் இந்த பேப்பரை ஃபெயில் பண்ணுவேன்… கிளியரா?” என்று கடுமையாக சொன்னான்.
“எஸ்… சார்,” அந்த மாணவி அழும் நிலையில் இருந்தாள்.
ஆரவ் எந்த பரிவும் காட்டவில்லை. அவன் தொடர்ந்து மற்ற மாணவர்களின் தாள்களையும் சரிபார்த்தான்.
அமுதினியை நெருங்கியபோது, அவன் எவ்வித மாறுதலுமின்றி நின்று அவளது அசைன்மென்ட் தாள்களை எடுத்தான்.
அவன் அதனை நிறைய நேரம் நிதானமாக படிக்கவும், அமுதினிக்கு இதயம் படபடத்தது.
பிறகு, அவன் அந்த தாளை மேஜையின் மீது வைத்து எந்த கருத்தையும் கூறாமல் அடுத்தவருக்கு நகர்ந்து விட்டான்.
‘அவர் என்ன நினைத்தார்? நல்லதா? கெட்டதா? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை?’ என்று அமுதினி குழம்பினாள்.
ஆரவ் மீண்டும் முன்னால் வந்து, வகுப்பை நேராகப் பார்த்தவன்,
“நான் உங்களுக்கு ஒண்ணு தெளிவா சொல்லிக்கறேன்… நான் இங்க உங்க எல்லாருக்கும் ஃப்ரெண்ட்டும் இல்ல… நான் உங்க மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கரும் இல்ல… நான் ஒரு ப்ரொஃபசர் மட்டும் தான்… என் வேலை உங்களுக்கு வேண்டிய நாலேஜ் கொடுக்கிறது… உங்க ஃபீலிங்ஸ் புரிஞ்சிக்கிறது என் வேலை இல்ல… நீங்க இந்தத் துறையில் பெருசா வர விருப்பமிருக்கா? அப்போ நீங்க உங்க மனசை கச்சிதமா வச்சிக்கணும்… எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வச்சிக்கணும்… உங்களுடைய வீக்னஸ்-க்கு இங்க இடம் இல்ல… புரியும்னு நினைக்கிறேன்…” என்று மேம்போக்காக சொன்னான்.
ஆரவ் கிருஷ்ணாவின் வார்த்தைகள் கனமாக இருந்தன. சில மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அமுதினி அவரையே உற்றுப் பார்த்தாள்.
‘அவர் ஏன் இப்படி நடந்துக்கிறார்? இவர் தான் நேற்று அந்தப் புகைப்படத்தை பார்த்து கண்களில் கண்ணீரோட இருந்தவரா? இப்போ அவரிடம் எந்த மென்மையும் இல்லையே!’
அவனோ பாடத்தை தொடர, “டிப்ரஷன் என்பது ஒரு மன நோய். ஒருத்தர் டிப்ரெஸ்ட்-ஆ இருக்காங்கன்னு, அவங்க வாழ்க்கையை விட்டுடக் கூடாது. அவங்க அதை எதிர்த்து ஃபைட் பண்ணணும்.”
அவன் பேசினார், ஆனால், அவனது சொந்த வார்த்தைகள் அவனுக்கே பொருந்தவில்லை என்பதை அமுதினி உணர்ந்தாள்.
‘நீங்க உங்களுக்காக ஃபைட் பண்றீங்களா சார்? இல்ல, நீங்க உங்களையே முடக்கிட்டீங்களா?’
மேலும் வகுப்பு தொடர்ந்தது. ஆரவ் மிகவும் கடுமையாக, உணர்ச்சியற்று எல்லாவற்றையும் விளக்கினான். அவன் எந்த மாணவரிடமும் மென்மையாக பேசவில்லை. ஒரு ரோபோ போல செயல்பட்டான். தகவலை மாணவர்களுக்கு கடத்தும் இயந்திரம் போலவே நடந்துக்கொண்டான்.
ஒரு மாணவன் கை உயர்த்தி, “சார், டிப்ரஷன்-ல இருக்கிறவங்களுக்கு நாம எப்படி எம்பதி (பச்சாதாபம்,கருணை) காட்டுவது?”
ஆரவ் ஒரு நொடி நிற்க, முகமோ இன்னும் கடினமாக மாறியது.
“எம்பதி காட்டுறதுக்கு முன்னாடி, நீ எம்பதி என்றால் என்ன என்பதை புரிஞ்சிக்கணும். எம்பதி என்பது, யாராவது அழுதா நீயும் அழுறது இல்ல. எம்பதின்னா அவங்களோட பெயினை அக்னாலெட்ஜ் பண்றது, ஆனா அவங்களோட பெயின்ல நீயும் மூழ்காம இருக்கணும்… நீ ஒருத்தரை ஹெல்ப் பண்ண நினைக்கிறியா? அப்போ நீ முதல்ல ஸ்ட்ராங்-ஆ இருக்கணும். இல்லன்னா, ரெண்டு பேரும் சேர்ந்து மூழ்கி போய்டுவீங்க.”
அவன் வார்த்தைகள் சரியானது. ஆனால், அவன் பேசும் தொனி… அதில் எந்த இரக்கமுமில்லை.
வகுப்பு முடியும் நேரமும் வந்தது.
“ஓகே.. அடுத்த வாரம் கிளாஸ்க்கு நீங்க ஒரு கேஸ் ஸ்டடி ரெடி பண்ணி வர்றீங்க. கம்ப்ளக்ஸ் பிடிஎஸ்டி பத்தி. விட்டவுட் ஃபெயில். இல்லன்னா, அட்டென்டன்ஸ் மார்க் பண்ண மாட்டேன்…” என்று விரைப்புடன் கூறினான்.
அவன் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினாலும், கதவருகே நின்று, திரும்பிப் பார்த்தான்.
“ஒன்னு மறக்காதீங்க… சைக்காலஜி படிக்கிறதுன்னா, நீங்க மற்றவங்க மைண்ட்ல என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்கணும். ஆனா, உங்க சொந்த எமோஷன்ஸ்-ல சிக்கிக்காதீங்க. அது உங்களை ரொம்ப பலவீனம் ஆக்கிடும்…” எனச் சொல்லி அங்கிருந்து வெளியேறினான் ஆரவ் கிருஷ்ணா.
மொத்த வகுப்பறையும் அமைதியாக இருந்தது. மாணவர்கள் மெதுவாகத் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு கலைந்தனர்.
சுருதி அமுதினியிடம் வந்தாள். “அம்மாடி… இவர் கோபம் ரொம்ப அதிகமாயிடுச்சு… என்ன இப்படி நடந்துக்கிறாரு? இதுக்கு முன்னாடி இவர் இவ்ளோ ஹார்ஷ்-ஆ இருக்கலையே…”
அமுதினி பதில் சொல்லவில்லை. அவள் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
“அமுது, நீ ஓகேயா?”
“ம்ம்…”
“நீ என்னவோ மறைக்கிற… சொல்லு என்னாச்சுன்னு?”
அமுதினி ஆழம சுவாசித்து, “சுருதி… ஆரவ் சார் ஏதோ பெரிய வலியில் இருக்காரு… ஆனா, அவர் அதை யாருக்கும் காட்ட விருப்பமில்லை. அவர் எல்லாரையும் தள்ளி வைக்க பார்க்கிறாரு!”
“அது அவர் பிராப்ளம் அமுது… அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? அதெல்லாம் நமக்கு அவுட் ஆஃப் சிலபஸ்… புரியுதா?”
“எனக்கு புரியுது சுருதி… ஆனா, அவர் மேல ஒரு வித்தியாசமான ஃபீலிங் வருது… அவர் நம்மள எல்லாரையும் கொடூரமா இரக்கமே இல்லாம நடத்துறாரு… ஆனா, அதுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்குன்னு தோணுது…”
சுருதி தோழியே கவலையாக பார்த்து, “அமுது, மறுபடியும் சொல்றேன் கேர்ஃபுல்… அவர் உன் மேல கோபமா இருக்குற மாதிரி தெரிஞ்சுது இன்னைக்கு… உன்னை மட்டும் அவர் தனியா அவாய்ட் பண்ணின மாதிரி இருந்துச்சு…”
அமுதினி தலையசைத்தாள். அதுதான் உண்மை. ஆரவ் அவளை நேற்று கோபமாக அனுப்பினார். இன்று அவர் அவளை பார்க்கவே இல்லை.
‘நான் என்ன தவறு செய்தேன்? நான் அவரது வலியைப் பார்த்தது தவறா? அவருக்கு யாரும் தன்னை புரிஞ்சிக்க வேண்டாம்னு நினைப்பா?’
அமுதினி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளால் ஆரவ் கிருஷ்ணாவை பற்றி மறக்க முடியவில்லை. அவரது கடுமையான வார்த்தைகள் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்தின. ஆனால், அதே சமயம், அவரது கண்களில் நேற்று இருந்த வலி… அது அவளை விட்டு விலகிடவில்லை.
‘அவர் என்ன மறைக்கிறார்? அவர் எதற்காக இப்படி எல்லாரையும் வெறுக்கிறார்? அவர் யாரிடமும் கிளோஸாக இல்லாததற்கு என்ன காரணம்?’
அன்று மதியம், அமுதினி கேன்டீனில் தனியாக உட்கார்ந்திருந்தாள்.
சுருதி மட்டும் வகுப்புக்குப் போயிருக்க, அமுதினி தன் காபியை மெதுவாக குடித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று, அவள் காதில் ஒரு உரையாடல் விழுந்தது. பக்கத்து டேபிளில் இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ஆரவ் சார் எப்பவுமே இப்படிதான் டா… எனக்கு இரண்டு வருஷமா தெரியும்… அவர் யாரோடயும் பேச மாட்டார்… எப்பவும் தனிமை தான்… டிபார்ட்மென்ட் பங்ஷன் வந்தாலும் எதுக்கும் வர மாட்டார்… ஃபெஸ்டிவல் டைமில் கூட அவர் சிரிச்சதே நான் பார்க்கல…”
“ஆனா, அவர் ரொம்ப பிரில்லியண்ட்… அவரோட ரிசர்ச் பேப்பர்ஸ் எல்லாம் இன்டர்நேஷனல் ஜர்னல்ஸ்ல கூட வந்திருக்கு.”
“அது சரிதான்… ஆனா, அவர் ஒரு சேடிஸ்ட் மாதிரி… யாராவது தப்பு பண்ணா, அவங்களை டெஸ்ட்ராய் பண்ணுவார்… ஒருத்தன் அவரோட கிளாஸ்ல மொபைல் யூஸ் பண்ணினான்… அவர் அவனை கிளாஸுக்கு வெளியில நிக்க வெச்சி ஆப்சென்ட் போட்டார்… அவ்வளவு கொடூரம் அந்த மனுஷன்…”
“ஏதோ அவருக்கு கஷ்டமான பாஸ்ட் இருக்குன்னு சொல்றாங்க. ஆனா யாருக்கும் தெரியாது என்னன்னு!”
அமுதினி அவர்களது உரையாடலை கவனமாகக் கேட்டாள்.
‘எல்லோருக்கும் அவர் ஒரு கொடூரமான, உணர்ச்சியற்ற மனிதராகத் தெரிகிறார்… ஆனால், நான் பார்த்தேனே.. அவர் அழும் கண்களை… அவருக்குள் இருக்கும் வலியை… நான் பார்த்து இருக்கனே…’ என்று மனம் கூவிக் கொண்டிருந்தது.
அன்று மாலை, அமுதினி லைப்ரரியில் இருந்தாள். அவள் PTSD பத்தி ஆய்வு செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது. ‘ஆரவ் சாருக்கு ஏதோ அதிர்ச்சி இருக்கிறது. அதனால்தான் அவர் இப்படி நடந்துக்கிறார்.’
அவள் பல புத்தகங்களைப் படித்தாள். Trauma response, emotional shutdown, defensive mechanisms… (அதிர்ச்சி பதில், உணர்ச்சிவசப்படுதல், தற்காப்பு வழிமுறைகள்) எல்லாமே ஆரவின் நடத்தையை விளக்கியது.
‘அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, எல்லாரையும் தள்ளி வைக்கிறார். அவர் மீண்டும் காயப்பட விரும்பவில்லை. அதனால் யாரையும் நெருங்க விடுவதில்லை.’
அமுதினியின் மனதில் ஒரு தீர்மானம் பிறந்தது. ‘நான் அவரை புரிந்துகொள்ள வேண்டும்… அவர் என்னை எவ்வளவு தள்ளி வைத்தாலும் பரவாயில்ல, நான் கண்டுபிடிக்காம விடமாட்டேன்… ஏன்னா, அவருக்குள் இருக்கும் அந்த வலியை… யாராவது அக்னாலெட்ஜ் பண்ணனும்… ‘நீங்கள் தனியில்லை.’ – யாராவது அவருக்கு சொல்லி புரிய வைக்கணும்..”
அன்று இரவு, அமுதினி தன் டைரியில் எழுதினாள்.
“ஆரவ் சார் ஒரு புதிர். கொடூரமான வார்த்தைகள், அனல் பார்வைகள், உணர்ச்சியற்ற தொனி… இப்படி பலது இருந்தாலும், அவருக்குள் ஏதோவொன்று உடைந்திருக்கிறது… அதை அவர் யாருக்கும் தெரிய விடாமல், தனியாக தன் வலியை சுமக்கிறார்… நான் அவரை புரிந்துகொள்ள விரும்புகிறேன்… ஆனால் எப்படி? அதுக்கு அவர் என்னை நெருங்கவே விடமாட்டார் போலவே?”
அமுதினி புத்தகத்தை மூடினாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவள் மனதில், ஆரவின் முகம் மட்டுமே நிழலாடியது.
அதே நேரத்தில், ஆரவ் கிருஷ்ணாவும் தனது அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக, அதே வலியில் மூழ்கியிருப்பான் என்று அவளுக்கு தெரியாது.
அவனது கைகளில் அதே பழைய புகைப்படம். அவன் வலியை யாருக்கும் தெரிய விடாமல், அமைதியாக, தன் இருளில் தொலைந்து கொண்டிருந்தான்.
மறுநாள் காலை, அவன் மீண்டும் அதே கல்லாக மாறுவான். அதே கொடூரமான பேராசிரியராத இருப்பான். ஏனென்றால், அதுதான் அவனுடைய பாதுகாப்பு கவசம், அதுதான் அவனை எப்பொழுதும் காப்பாற்றுவது.
ஆனால் அமுதினி… அவள் அந்த கவசத்தை உடைக்க முயல்வாளா? அல்லது அவளும் மற்றவர்களைப் போல விலகிவிடுவாளா?
*******
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
5
+1
+1