Loading

காதல் -3

 

மலைகளின் அரசியான உதகமண்டலம் (ஊட்டி) .. சில்லென்ற காற்று மேனியை சிலிர்க்க வைக்க இதோ அடுத்த நாளும் அதே புத்தகத்தை நாடி இருந்தாள் சாயாலி .. மாதத்திற்கு ஒரு முறை மன ஆறுதலுக்காக எடுக்கும் புத்தகம் இப்போது வாரத்தில் மூன்று முறையேனும் எடுத்து விடுகிறாள்..

 

அந்த அளவிற்கு அவன் மனம் ரணமாக்க படுகிறது.. நேற்று குளியலறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து மகள் தன் முகத்தை கூட பார்க்கவில்லை என்ற ஏக்கத்தில் அவளையே சுற்றி கொண்டு வந்தார் தேனு..

 

டீ போட்டு தரவா, ரவைக்கி இடியாப்பம் போட்டு தரவா, சொட்டர் போட்டு படி குளிரும், என்று என்னவெல்லாமோ சொல்லி பார்க்க அவளோ அனைத்திற்கும் தாய் முகத்தை பாராமல் வேண்டாம் என்று மறுத்து கொண்டிருந்தாள்.

 

“தமிழ் காதலன்” பெயரை ஒரு முறை தன் தளிர் கரங்களால் வருடி பார்க்க, மனதினுள் ஒரு இனிய மாற்றம்.. கண்களை மூடி எப்போதும் போல் ஒரு பக்கத்தை திறந்தாள்..

 

சரியாக 196 வது பக்கம்.. அதில் இருந்த வாசகத்தை அவள் உதடுகள் உமையாக உச்சரித்தது..

 

யார் ஊனம்

 

குரல் வளை இருந்தும்

மென்சொற்கள் பேசாதவரா?

 

இல்லை ஓசையின்றியும் அன்பு பாயும் உதடுகளை கொண்டவரா?

 

உதடுகள் வீணையின் தந்தி கம்பிகள் அவை பாடும் மௌன ராகம்  புரியாதோர் அல்லவா ஊனம்..!

 

நீ அல்லாள் நன்மொழியே..

 

 

ஏனோ அந்த வாக்கியத்தை படித்தவுடன் அவள் இதழ்கள் தானாக மலர்ந்தது.. தேனும் தன் மகளின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்த்து மனம் பாரம் குறைந்து தலையணையை எடுத்து போட்டு படுத்து விட்டார்.

 

இரவு 10 மணி இன்னும் தூங்காமல் அந்த புத்தகத்தை தான் கையில் வைத்து கொண்டு புரட்டி கொண்டிருந்தாள். அப்போது தான் இன்று அருவியில் புத்தகத்தை தூக்கி  எறிந்தவன் நினைவிற்கு வர, முகத்தை சுருக்கி அவனிடம் இருந்து எடுத்து வந்த புத்தகத்தை எல்லாம் தேடி எடுத்து அவள் முன் கடை பரப்பினாள்.

 

அனைத்து அட்டை பக்கத்திலும் வெவ்வேறு படமும் அதில் அந்த புத்தகத்தின் பெயர்களும் கீழே அந்த பெயரும் இருந்தது ” தமிழ் காதலன்”

 

மனம் இதத்தை தரும் அந்த பெயருக்கு சொந்தக்காரனை ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்து இருக்கிறாள். அவன் பிம்பம் அப்படியே நெஞ்சிற்குள் பதிந்து போனது..

 

ஆம் “தமிழ் காதலன்” என்ற பெயரில் கதை எழுதுவது ஒரு ஆடவன். ‘ இவ்வளவு அழகான புத்தகத்தை எல்லாம் தூக்கி போட எப்படி மனசு வந்துச்சு, சரியான முரடன் , பார்க்க பணக்கரான் மாதிரி இருந்தான் அதான் இந்த தாளுக்கு உரிய மதிப்பு அவனுக்கு தெரியலை ‘ என்று தன் மன குமுறல்களை எல்லாம் கொட்டி கொண்டிருந்தாள் சாயாலி..

 

‘நாளையில் இருந்து காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு சென்றால் போதும்.. அதனால் இரவு கதை படிக்கும் நேரத்தை நீடித்து கொள்ளலாம் ‘ என நினைத்து இன்று காலை மலை உச்சிசியில் படித்து பாதியில் விட்ட அந்த குறுநாவலை எடுத்து படிக்க தொடங்கினாள்..

 

அதில் இன்னும் அரை மணி நேரக்கதை மீதம் இருந்ததால் புத்தகத்தை திறந்து சரியாக இருபது நிமிடத்தில் முடித்து விட்டாள்.. மணியை பார்க்க இரவு பதினொரு மணியை கடந்து இருந்தது.. புத்தகங்களை எல்லாம் மூடி வைத்தவள் அமைதியாக தன் அன்னையின் அருகே ஒரு பாயை விரித்து அதன் மேல் குட்டி மெத்தையை போட்டு சொட்டார் அணிந்து படுத்து கொண்டாள்…

 

படுத்தவுடன் தூக்கம் வருவது அத்தனை எளிதாக ஒருவருக்கு எட்டி விடாது, ஆனால் அந்த வரத்தை வாங்கி இருந்தாள் சாயாலி..

 

“சாயா எந்திரி டி வேலைக்கு நேரம் ஆச்சு இவ்வளவு நேரம் நீ தூங்க மாட்டியே” என்று தேனுவின் சத்தத்தில் மெதுவாக இமைகளை பிரித்தாள்.. உடல் சற்றும் சூடு கண்டது போல் இருக்க, மெதுவாக எழுந்து குளித்து கிளம்பி சிவப்பு வண்ண பூ போட்ட பாவாடையும் , மேலே கருப்பு வண்ண சட்டையும் அணிந்திருந்தாள்..

 

வீட்டில் பூத்த பூக்களில் ஒரு ரோஜாவை பறித்து தலையில் வைத்து கொண்டு புத்தகத்தை எல்லாம் அதன் இடத்தில் அடுக்கி வைத்தவள் கூடையை எடுத்து கொண்டு தேனு கொடுத்த சாப்பாட்டை வாங்கி கூடையில் வைத்தவள் அமைதியாக வேலைக்கு கிளம்பினாள்.

 

” ஆத்தா சாயு இன்னைக்கு தோட்டத்துக்கு போறதுக்கு முன்னாடி பேக்டரிக்கு போயிட்டு போவோம் த்தா”

 

“ஏன் ” என்ற பார்வையை தாங்கி அவர்களை பார்க்க..

 

” தெரியலை அங்க நம்மளை வர சொல்லி இருக்காங்க , போய் ஒரு எட்டு தலையை காட்டிட்டி போவோம் ” என்று சாயாலியையும் இழுத்து கொண்டு அவர்கள் அனைவரும் பேக்டரி நோக்கி சென்று விட்டனர்.

 

பேக்டரி முன்பு கூட்டமாக இருந்தது. எல்லாம் அங்கு பணிபுரிபவர்கள் தான் நின்று கதை பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரீத்தி ” சார் இன்னும் ரெண்டு நிமிசத்துல வந்திடுவாரு, எல்லாரும் அமைதியா இங்க உட்காருங்க ” என்று இடத்தை காட்ட , கூட்டம் மொத்தமும் அங்கே சென்று அமர்ந்தது.

 

வெள்ளை நிற சட்டை அணிந்து அதற்கு மேல் கருப்பு வண்ண சுவட்டர் அணிந்து அலை அலையாய் படர்ந்திருந்த கேசத்தை தன் விரல்களால் வருடிய வண்ணம் , மிடுக்காக அந்த இடத்திற்கு வர அத்தனை நேரம் இருந்த சலசலப்பு சட்டென்று அடங்கியது..

 

பேச்சு சத்தம் கேட்காமல் போனதில் என்னவென்று தன் எதிரே பார்த்தவள் அதிர்ந்து போனாள் .. ‘ இவனா….’ என்று மனம்  அதிர்ந்தாலும் அவனை பார்க்கும் போது கோபம் வேறு வந்தது..

 

‘ இப்ப என்ன பார்த்தா வேலையை விட்டு தூக்கிடுவானோ ‘ என்று உள் மனம் பதற தன்னை மறைத்து கொண்டு சற்று குனிந்து அமர்ந்து கொண்டாள் சாயாலி.

 

அவளுக்கு இருக்கும் ஒரே கவலை, இப்போது இருக்கும் இந்த ஒரு வேலையும் கைவிட்டு போனால் தன் அன்னையை எப்படி காப்பாற்றுவது என்று தான் … இல்லையென்றால் எவன் வந்தாலும் ஒரு கை பார்த்து விடும் ரகம்.. வாயை திறந்து பேசாவிட்டாலும் தன் ஓர விழி பார்வையாலேயே எதிரில் உள்ளவர்களை இரண்டடி தள்ளி நிறுத்தி வைக்கும் வகை இவள்.

 

கண்களில் உள்ள கூலர்சை கழற்றிய வண்ணம் அவர்கள் முன் வந்து நின்றான் தமிழ் மறவன். ” பாக்க நல்லா ராஜா கணக்கா இருக்காரு ” என்று பக்கத்தில் இருக்கும் பெண்கள் பேசி கொள்ள, சாயாலியின் கண்கள் ஒரு முறை ‘அப்படியா!’ என்பதை போல அவனை தீண்டி சென்றது..

 

தன் முன் அமர்ந்திருக்கும் கூட்டத்தை எல்லாம் கூர்மையாக பார்த்து கொண்டே வந்தவன் , பிரீத்தியை கண் காட்ட ” நம்ம கம்பெனி எம் டி கிருஷ்ணா மூர்த்தி சாரோட மகன் மிஸ்டர் தமிழ் மறவன் சார் தான் இனிமே இந்த கம்பெனியை எடுத்து நடத்த போறாங்க, இனிமே வேலை எல்லாம் சரியா நடக்கனும், காலை 9 மணிக்கு எல்லாரும் தோட்டத்துல இருக்கனும் அதே போல மூணு மணிக்கு வேலை முடிஞ்சதும் நாலு மணிக்குள்ள  இலை எல்லாம் இங்க வந்து சேர்ந்துடனும்.. இப்போ சார் இங்க வர சொன்னதுக்கு காரணம் புதுசா ஒரு ஸ்கீம் கொண்டு வந்திருக்காரு”  என்று பிரீத்தி நிறுத்த அவர்களுக்குள் சலசலப்பு உண்டானது..

 

” அப்பா இல்லாத பிள்ளைங்களுக்கு படிப்பு உதவி திட்டம், அதுக்கு அப்பறம் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு திட்டமும்  கொடுத்து இருக்காங்க” என்று கூற அனைவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை..

 

“இப்போ அவங்க மட்டும் இங்க இருங்க, மத்த எல்லாரும் வேலைக்கு கிளம்புங்க , அதுக்கு முன்னாடி இங்க இருக்குறவங்க எல்லாம் இந்த நோட்ல கையெழுத்து போட்டு போங்க” என்று அழைக்க… ஒவ்வொருத்தராக கையெழுத்து போட்டு விட்டு நடையை கட்டினர்.

 

அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. மிச்சம் இருக்கும் எழு ஆட்களில் சாயாலியும் ஒருவள்.

 

“சார் மிச்சம் இருக்குற எழு பேர் இவங்க தான் ” என்று பிரீத்தி கூறவும் அவர்களையே உற்று நோக்க கடைசியாக நின்று கொண்டிருந்தாள் சாயாலி..

 

தமிழ் மறவன் அவளையே வெறித்துப் பார்க்க அவளது பார்வையோ அவனை தவிர மற்ற அனைத்தையும் பார்த்தது.

 

” திமிரு , அடக்கி காட்டுறேன்” என்று மனதிற்குள் நினைத்தவன் , அவனது அறைக்குள் சென்று விட்டான்..

 

“நீங்க எழு பேரு ஒவ்வொருத்தரா போய் சாரை மீட் பண்ணுங்க, உங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொடுப்பாரு ” என்று பிரீத்தி நகர்ந்து விட.. எழு பேரும் அவனது அறைக்கு வெளியே காத்திருக்க ஒவ்வொருத்தராக அழைத்து அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் கேட்டு செய்து கொடுத்தான். இறுதியாக சாயாலியின் முறை ‘ இந்த முரடனிடம் சென்று இந்த உதவியை வாங்க வேண்டுமா ‘ என்று நினைத்தாலும் அவளது ஏழ்மையான வாழ்க்கைக்கு கண்டிப்பாக உதவும் என்ற எண்ணத்தில் தன் பல்லை கடித்து கொண்டு உள்ளே சென்றாள்..

 

உள்ளே அவன் முன் இருக்கும் பெயர் பலகையில் அவன் பெயர் பொறிக்கபட்டிருந்தது . K. தமிழ் மறவன் மேனேஜிங் டேரெக்டர்  என்று இருக்க அதை பார்த்து மனதிற்குள் அவன் பெயரை பதித்து கொண்டாள்.

 

‘பெயருல கூட தமிழ் இருக்கு, ஆனால் தமிழ் புத்தகத்தை தூக்கி வீசுவான் ‘ என்று மனதிற்கு நினைத்ததை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள்.

 

அவள் உள்ளே வந்ததில் இருந்து அவளது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உண்ணிப்பாக கவனித்து வந்தவன் , “எஸ் வாங்க மிஸ் சாயாலி ரைட் ” என்று கேட்டவனது கைகளில் அவளது பெயர் அடங்கிய அவளது விவரங்கள் இருக்க .. பெரும் மூச்சு விட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“அப்பா இல்லை, சோ உங்களுக்கு என்ன செய்யனும் .. ” என்று கேள்வியை கேட்டவன், ” அப்பா இல்லேனா கூட அவ்வளவு தைரியம் யாருன்னு தெரியாத ஆம்பளையை விரல் நீட்டி மிரட்டிற அளவுக்கு திமிரு ” என்று அவன் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி கூற… சாயாலி அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

 

‘ அப்பா இல்லையென்றால் ஒரு பெண்பிள்ளை யாரையும் எதிர்த்து நிற்க கூடாதா ‘ என்று மனம் வெம்பியது.

 

” அன்னைக்கு காட்டுல இருந்து தப்பிச்சு இருக்கலாம், ஆனால் இப்போ உனக்கு என் முன்னாடி தான் நிற்க வேண்டிய சூழ்நிலை ” என்று அவன் நக்கலாக கேட்க  ஏனோ அவனை பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது.

 

‘ முடிஞ்சா வேலையை விட்டு தூக்குவானா?? , பரவாயில்லை மானத்தை விட்டுட்டு இங்க வேலை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, வேலையை விட்டு தூக்கிட்டா நடையை கட்டிடு சாயாலி ‘ என்று தனகுள்ளேயே பேசி கொள்ள ..

 

அவள் அமைதியா இருப்பதை பார்த்து அவனுக்கு மேலும் சினம் ஏறியது.. ” அன்னைக்கு எதுக்காக என் கிட்ட இருந்த புத்தகத்தை வாங்கிட்டு போன, என்ன தைரியம் இருந்தா விரல் நீட்டி மிரட்டுவ ?” என்று அவன் அதட்டல் குரலில் கேட்க..

 

அவன் குரலில் சற்றே நடுங்கினாலும் தன்னை சமன் படுத்தி கொண்டு அவனை நேர் பார்வை பார்த்தாள். ‘ நீ செய்த தப்பிற்கு உன்னை எச்சரித்தேன் ‘ என்ற ரீதியில் அவள் பார்க்க…

 

‘ உனக்கெல்லாம் பதில் கூற வேண்டுமா ‘ என்ற திமிரில் அவள் பார்க்கிறாள் என்ற ரீதியில் அவன் நினைத்து கொண்டான்.

 

” வாயை திறந்து பதில் சொல்லு இடியட் ” என்று கத்த , அதற்கும் அவள் பதில் பேசாமல் அமைதியாக நிற்க வந்த கோபத்திற்கு அவளை நெருங்கி அவள் தாடையை அழுத்தமாக பற்றியவன் ” கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்ட, அவ்வளோ திமிரு உனக்கு, உன் திமிரை அடக்கி காட்டுறேன் டி ” என்று இன்னும் அவள் தாடையை இறுக்க , அப்போது கதவை தட்டி கொண்டு உள்ளே வந்த பிரீத்தி, தமிழ் சாயாலியின் தடையை பற்றி இருப்பதை பார்த்து அதிர்ந்து, “சார் என்ன பண்ணறீங்க” என்று அதிர்ந்து கேட்க..

 

அவள் குரலில் சாயாலியின் தாடையை விட்டவன் “ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை ரூம்” என்றவனது கர்ஜனையில் அடுத்த நொடி பிரீத்தி வெளியேறி இருந்தாள்.

 

அவன் பிடித்த இடம் வலி எடுக்க கண்கள் கலங்கி போனது சாயாலிக்கு. அவளது விவரம் அடங்கிய பேப்பரை எடுத்து அவள் முகத்தில் எறிந்தவன் ” அவுட்….” என்று கத்த , தன் முகத்தில் பட்டு கீழே விழுந்த பேப்பரை கூட எடுக்காது அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் சாயாலி..

 

“தமிழ் கோபத்தை குறை டா முன்ன இருந்த தமிழ் மாதிரி இல்ல, என்கிட்ட சிரிச்சு என்னயவே சுத்தி வர தமிழ் நீ இல்ல, ரொம்ப மாறிட்ட டா சீக்கிரம் அதை விட்டு வெளியே வா ” என்று அவன் தந்தை மூர்த்தியின் குரல் அவன் தலைக்குள் ஓட.. டேபிளில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து தாறு மாறாக உடைத்தவன் காரை எடுத்து கொண்டு புயல் வேகத்தில் கிளம்பி விட்டான்.

 

சனா💖

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்