
அத்தியாயம் 3
மழை வருவதற்கான அடையாளமாக இடி சத்தம் காதைப் பிளக்க, மின்னல் வெளிச்சம் கண்களை கூசச் செய்ய, காற்றும் தன் பங்கிற்கு வீச, ஆளவமற்ற சாலையில், இயற்கையின் லீலைகளில் மனம் ஒட்டாதவளாக தனித்து நடந்து வந்தாள் யாழ்மொழி.
அவள் உதடுகளில் சிரிப்பு இருக்கிறதுதான். ஆனால், அது முன்னதைப் போன்ற கவர்ச்சி சிரிப்பு இல்லை.
காலையில் கூட தங்கையிடம் தான் ஜெயிக்கப் போவதாக மார்தட்டினாளே, இப்போது அதை எண்ணிப் பார்த்ததால் உண்டான விரக்தி சிரிப்பு அது!
‘அழகான முகமும், எடுப்பான உடலும் தவிர என்ன இருக்கு உன்கிட்ட? இத்தனை பெரிய ஆஃபர் அவ்ளோ சீக்கிரம் கிடைச்சுடுமா? அப்படி கிடைக்குதுன்னா, அது உன் அதிர்ஷ்டம். கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்காம, முட்டாள்தனமா பேசிட்டு இருக்க யாழ்.’ – இவை யாழ்மொழியின் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன.
இவற்றை உதிர்த்தது அவள் நண்பன் என்று நம்பிய நயவஞ்சகன் என்பதை இப்போதுதானே தெரிந்து கொண்டாள்.
இதோ மீண்டும் ஒரு விரக்தி சிரிப்பு!
‘அது சரி, அழகைத் தவிர என்கிட்ட என்ன இருக்கு? மொழியும் இதைத்தான என்கிட்ட காலைல சொன்னா!’ என்று எண்ணியபடியே நடக்க, அவள் மனநிலைக்கேற்ப, மழையும் பெய்யத் துவங்கியது.
சாதாரண மழையாக அல்லாமல் துவக்கத்திலேயே அதன் தீவிரத்தைக் காட்டியது. இதுவும் விதியின் கணக்கோ!
யாழ்மொழி தன் சிந்தை மறந்து நடந்து கொண்டிருக்க, எதிரில் விளக்குகளை ஒளிரவிட்டபடி வேகமாக வந்து கொண்டிருந்தது அந்த மகிழுந்து.
ஆள் இல்லாத சாலை என்பதால் வேகமாக வந்து கொண்டிருந்த மகிழுந்தின் முன் எதிர்பாராத விதமாக யாழ்மொழி வந்திருக்க, ஓட்டுநருக்கு சிந்திக்கும் அவகாசம் கூட இருக்கவில்லை.
விளைவு, மகிழுந்தின் முன்பக்கம் பலமாக மோதியதால் தூக்கி எரியப்பட்டாள் யாழ்மொழி. அவள் உடலிலிருந்து வழிந்த செந்நிறக் குருதி மழை நீருடன் கலந்து ஆறாக ஓடியது.
அவள் உதடுகளில் அப்போதும் சிரிப்பு. அவளின் இறுதி சிரிப்பாக இருக்குமோ?
*****
அதே சமயம் மற்றொரு சாலையில், மென்மொழியும் சுடரொளியும் நடக்கவிருந்த விபத்தின் வீரியத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை.
‘எப்படி அந்த வாகனத்தை நகர்த்தினோம்? எப்படி அந்தச் சரக்குந்து மோதாமல் தப்பித்தோம்?’ என்பதே அவர்களின் மூளையில் ஓடிக் கொண்டிருக்க, அவர்களிடமிருந்த அந்த கற்கள் நொடிக்கு குறைவாக மின்னியதை அவர்கள் பார்க்கவில்லை!
சிறிது நேரத்தில் லேசாகத் துவங்கிய தூறல், அவர்களை சுயத்தை அடையச் செய்ய, கீழே கிடந்த வாகனத்தை உயிர்ப்பித்து அங்கிருந்து கிளம்பினர். செல்லும் வழியிலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
பெரிதாகப் பெய்யத் துவங்கிய மழை ஒரு காரணம் என்றால், நடக்கவிருந்த விபரீதமும், அதிலிருந்து தப்பித்த தாக்கமுமே முக்கிய காரணமாக இருந்தன.
ஒருவழியாக மென்மொழியின் வீட்டை அடைந்தவர்கள் உள்ளே கூட நுழையவில்லை, அதற்குள் அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப் போடப்போகும் நிகழ்வுகளிற்கு சாட்சியாக வந்திருந்தது அந்த அழைப்பு!
மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பு, இருக்கும் குழப்பங்களை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு மென்மொழியையும் சுடரொளியையும் ஓடிடோடி வர வைத்திருந்தது.
அங்கோ இருவரைக் காட்டிலும் அதிக குழப்பத்துடன் பணியாளர்கள் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்க, நிறுத்தி நிதானமாகக் கண்டு கொள்ள நேரமில்லாமல், அவசரமாக வரவேற்பிற்குச் சென்றவர்கள், “யாழ்மொழின்னு யாராவது அட்மிட் ஆகியிருக்காங்களா?” என்று விசாரித்தனர்.
அங்கிருந்த பணியாளரோ, “யாழ்மொழியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு, சற்றுத் தள்ளி சிறு குழுவாகக் குழுமியிருந்தவர்களிடம் அழைத்துச் சென்று, அவர்களிடம் ஏதோ கூறினார்.
அங்கிருந்த மருத்துவர் ஒருவர், “யாழ்மொழிக்கு நீங்க என்ன வேணும்?” என்று கேட்க, “அவ என்னோட ட்வின் சிஸ்டர் டாக்டர்.” என்ற மென்மொழியோ, “அவ இப்போ எப்படி இருக்கா?” என்று பயத்துடன் வினவினாள்.
“அவங்களுக்குப் பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல. வெளிக்காயங்களுக்கு டிரசிங் பண்ணியாச்சு. பிளட் ஏறிட்டு இருக்கு.” என்று மருத்துவர் கூற, சிறிது ஆசுவாசமானாள் மென்மொழி.
அதை நீடிக்க விடாதவராக, “ஆனா, அவங்க கூட வந்தவருக்கு தான் ஹெவி இஞ்சுரி. நிறைய பிளட் லாஸ் வேற.” என்று ஒருவித பதற்றத்துடன் கூற, “கூட வந்தவரா? யாரு அது?” என்று கேட்டாள் மென்மொழி.
அந்த மருத்துவரோ இருவரையும் அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றவாறு, “அவரைத்தான் நாங்க தேடிட்டு இருக்கோம்.” என்று கூற, மென்மொழியும் சுடரொளியும் அந்த மருத்துவர் சுட்டிக்காட்டிய வெற்று கட்டிலையும், அதிலிருந்த வெண்ணிற விரிப்பை அலங்கரித்திருந்த செந்நிறக் குருதியையும் குழப்பத்துடன் பார்த்தனர்.
“தேடிட்டு இருக்கீங்களா? நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல டாக்டர்.” என்று சுடரொளி அந்த கட்டிலைப் பார்த்தபடி வினவ, அந்த மருத்துவரோ ஒரு பெருமூச்சுடன், “ஹெல்பர் அவரை இங்க படுக்க வச்சுட்டு, ட்யூட்டி டாக்டர் கிட்ட ரிப்போர்ட் பண்ணி கூட்டிட்டு வரதுக்குள்ள, அவரைக் காணோம். எங்க போனாருன்னு தெரியல. இன்ஃபேக்ட், அவரைத் தேடிதான் எல்லாரும் பரபரப்பா சுத்திட்டு இருக்காங்க.” என்றார்.
அதைக் கேட்டதும் சுடரொளியோ, “என்ன டாக்டர் இது, இவ்ளோ இர்ரெஸ்பான்சிபிளா பதில் சொல்றீங்க? அடிப்பட்டிருக்க பேஷண்ட்டை தனியா விட்டுட்டு யாராவது போவாங்களா? நிறைய பிளட் லாஸ்னு வேற சொல்றீங்க.” என்று கோபத்தில் பொங்க, “மிஸ், கொஞ்சம் பொறுமையா பேசுங்க. ஆக்சுவலி, இது ஆக்சிடெண்ட் கேஸ். போலீஸ் இல்லாம, ட்ரீட்மெண்ட்டே பண்ணியிருக்க கூடாது. ஆனா, பேஷண்ட் கண்டிஷனை கன்சிடர் பண்ணித்தான் நாங்க ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கோம். ஆனா, நீங்க என்னடான்னா, எங்களை பிளேம் பண்ணிட்டு இருக்கீங்க.” என்று அந்த மருத்துவரும் கூறினார்.
இருக்கும் சூழ்நிலையில் இந்தச் சண்டை அவசியமா என்று எண்ணிய மென்மொழி சுடரொளியை கண்ணசைவில் அடக்கியவாறு, “யாரு அவருன்னு ஏதாவது தகவல் இருக்கா?” என்று வினவ, “அவரை நாங்க செக் பண்றதுக்கு முன்னாடியே காணாம போயிட்டாரு. இதுல, எங்கத் தப்பும் இருக்கு. ஆனா, இது அதைப் பத்தி பேசுறதுக்கான நேரமில்ல. ஹாஸ்பிடல் சுத்தி தேட சொல்லியிருக்கோம். அவரை எப்படியும் கண்டுபிடிச்சுடலாம்.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “என்ன பிரச்சனை?” என்றவாறு வந்தான் அவன்.
நெடுநெடுவென உயரம், உயரத்திற்கேற்ற உடல்வாகு, அலையலையான கேசம், மாநிறம், எதையும் ஆராய்ச்சியுடன் பார்க்கும் விழிகள், கூர்மூக்கு, அளவான உதடு, நேர்த்தியான தாடி என்று அந்தச் சூழலிலும் அவனை அளவெடுத்தன மென்மொழியின் விழிகள், தன்னிச்சையாக!
“ஹலோ சார், நீங்க எங்க இங்க?” என்று அவனின் அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்த கையைப் பார்த்தவாறே கேட்டார் மருத்துவர்.
“அது ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.” என்றவன், “இங்க என்ன பிரச்சனை?” என்று மீண்டும் கேட்க, மருத்துவரோ நடந்ததைச் சுருக்கமாக விளக்கினார்.
அத்தனை நேரமும், ‘யார் இவன்? இவனுக்கு எதுக்கு இத்தனை விளக்கம் தராரு இந்த டாக்டர்?’ என்ற யோசனையே மென்மொழிக்கு.
அதையும் சரியாக படித்தவனாக, “ஐ’ம் யுகேந்திரன். இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்.” என்று மென்மொழியிடம் கூறிவிட்டு, மீண்டும் மருத்துவரிடம் திரும்பி, “சிசிடிவி செக் பண்ணீங்களா?” என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.
மென்மொழிக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து செய்த கலவையாக இருந்தது அந்த நிமிடம்.
‘இப்போ எதுக்கு திடீர்னு நம்மகிட்ட இண்ட்ரோ குடுத்தான்? ஒருவேளை, என்னை அறியாம, சத்தமா கேட்டுட்டேனோ?’ என்று எண்ணியபடி நின்றாள் மென்மொழி.
அந்த நிமிடம், இருக்கும் கவலைகளை எல்லாம் மறந்துதான் போனாள் அவள்.
“இருந்த டென்ஷன்ல அதை மறந்துட்டேன். இதோ, இப்போ போய் செக் பண்றேன்.” என்று மருத்துவர் கூற, ஏதோ யோசித்தவனாக, “நானும் வரேன்.” என்றான் யுகேந்திரன்.
“நீங்களா? உங்களுக்கு வேலை…” என்றபடி மருத்துவர் இழுக்க, “நோ பிராப்ளம்.” என்றபடி அவன் முன்னே நடக்க, வேறு வழியின்றி மருத்துவரும் அவனைப் பின்தொடர்ந்தார்.
அப்போதும் மென்மொழி அவளின் திகைப்பிலிருந்து வெளிவராமல் இருக்க, சுடரொளிதான் அவளின் தோளில் தட்டி அவளை நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.
“மொழி, உனக்கு என்னாச்சுடி? அப்போ இருந்து கூப்பிடுறேன், சிலை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று சுடரொளி வினவ, “அது… ஒன்னுமில்ல சுடர்.” என்று திக்கினாள் மென்மொழி.
சற்று முன்னர் ஏற்பட்ட நிகழ்வுகளாலும், குழப்பத்தினாலும் உண்டான தடுமாற்றம் என்று எண்ணிய சுடரொளியும் அதை விட்டுவிட்டு, “யாழைப் பார்க்கணும்ல.” என்று மென்மொழிக்கு நினைவுபடுத்த, அப்போதுதான் அந்த எண்ணமே தோன்றியது அவளிற்கு.
அதற்காகத் தன்னையே திட்டிக் கொண்டவள், முன்னே சென்று கொண்டிருந்த மருத்துவரிடம் விரைந்து, “டாக்டர், நாங்க யாழ்மொழியைப் பார்க்கலாமா?” என்று வினவ, “பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க.” என்று அவரும் அனுமதி கொடுத்தார்.
அப்போதும் அவளின் கண்கள், அவள் அனுமதியின்றி அருகிலிருந்தவனைப் பார்க்க முயல, அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாலும், அவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டதைக் கட்டுப்படுத்த சில நிமிடங்களானது மென்மொழிக்கு.
அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் அதே நிலையே!
ஏனென்று தெரியாமல், அவளையே சுற்றி வரும் விழிகளைக் கட்டுப்படுத்தப் படாதபாடு பட்டான் அந்தக் காவலன்!
இல்லையென்றால், எப்போதும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன், இப்போது வேலை இருந்தும், அதை விடுத்து, அவளுக்காக இதில் ஈடுப்பட்டிருக்க மாட்டான்.
அவன் சிந்தனை செல்லும் பாதையை அறிந்து சிறிது திடுக்கிட்டவனாக, அவளுக்காகவா?’ என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள, அதற்குப் பதில் வரும் முன், மருத்துவர் அவனிடம் காட்டிய காணொளி அவன் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.
*****
கட்டிலில் தோய்ந்து படுத்திருந்த உருவத்தை பார்த்தபடி அருகே சென்ற தோழிகள் இருவரும், “யாரு இது?” என்று வினவியபிடி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதே சமயம், அங்கிருந்த செவிலியோ, “நீங்கதான் யாழ்மொழி அட்டண்டரா? இந்த மெடிஸின் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க.” என்று மருந்துச் சீட்டை நீட்டினார்.
வேறு அறைக்கு வந்து விட்டோமோ என்று எண்ணிய இருவருக்கும் குழப்பம் அதிகரிக்க, “சிஸ்டர், யாழ்மொழி எங்க?” என்று கேட்டாள் சுடரொளி.
அதற்கு அவரோ இருவரையும் ஒரு மார்க்கமாகப் பார்த்து, “என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா? சீக்கிரம் மருந்தை வாங்கிட்டு வாங்க.” என்று திட்ட, “ஹலோ, நாங்க என்ன காமெடி பண்ணோம்? இவங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது. எங்க யாழ்மொழி எங்க?” என்று எகிறினாள் சுடரொளி.
அவளின் கோபத்தைக் கண்ட செவிலியும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, “என்னங்க சொல்றீங்க? இவங்கதான் யாழ்மொழி. அப்படித்தான் இவங்களை அட்மிட் பண்ணவரு சொன்னாரு.” என்று கூறினார்.
“அட்மிட் பண்ணவரா? அவரைத்தான் காணோமா? யாரு அவரு? என்னதான் நடக்குது இங்க?” என்று சத்தமாக யோசித்த மென்மொழிக்குத் தலை சுற்றியது.
செவிலியோ இருவரையும் குழப்பத்துடன் பார்த்தபடி வெளியேற, அறைக்குள் இருப்பது மூச்சு முட்டுவதை போலிருக்க மென்மொழியை அழைத்துக் கொண்டு சுடரொளி வெளியே வந்தாள்.
“சுடர், என்னதான் நடக்குது? யாழ் எங்க?” என்று பதற்றமும் பயமும் கலந்த குரலில் மென்மொழி வினவ, “நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு மொழி.” என்ற சுடரொளி, “நான் வேணும்னா அப்பா கிட்ட சொல்லவா?” என்று வினவினாள்.
அவளிற்கும் இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல், அதற்கு எப்படி தீர்வு காண்பது?
அதில் ஓரளவிற்குத் தெளிவான மென்மொழியும், “இல்ல சுடர், முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுப்போம். யாழ் எங்க? யாழ்னு சொல்லி ஏன் வேற யாரையோ அட்மிட் பண்ணியிருக்காங்க? இதுக்கெல்லாம் பதில் தெரியணும்னா அந்தக் காணாம போனவரை முதல்ல கண்டுபிடிக்கணும். அதுக்குள்ள அவசரப்பட்டு அங்கிளுக்கு சொல்லி அவங்களையும் டென்ஷன் படுத்த வேண்டாம்.” என்று கூறினாள்.
“மொழி, முதல்ல யாழுக்கு கால் பண்ணிப் பாரு.” என்று சுடரொளி கூற, “அட ஆமா, அவளுக்கு அடிபட்டுருக்குன்னு கால் வந்ததும், அவளுக்குக் கால் பண்ணனும்னு கூட யோசனை வரல.” என்றபடி யாழ்மொழிக்கு அழைப்பு விடுக்க, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருவரும் அந்த மருத்துவமனையின் பின்பக்க வாயிலை அடைந்திருந்தனர். மழை வலுவாகப் பெய்து கொண்டிருக்க, சற்றுத் தொலைவில், யாரோ ஒருவர் கீழே விழுந்திருப்பதைக் கண்டாள் மென்மொழி.
“சுடர், அங்கப் பாரு. யாரோ கீழ விழுந்துட்டாங்க. மழை வேற பெய்யுது.” என்றவாறு, அந்த நபரை நோக்கி மென்மொழி ஓட, “மொழி, மெதுவா போ.” என்று கத்தியபடி சுடரொளியும் அவளைப் பின்தொடர்ந்தாள்.
அருகே சென்ற போதுதான் அந்த நபரின் உடலிலிருந்து குருதிப் பெருகி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு, “சுடர், சீக்கிரம் ஹெல்புக்கு யாரையாவது கூட்டிட்டு வா. அவருக்கு நிறைய பிளஸ் லாஸாகி இருக்கு.” என்று பின்னே வந்தவளிடம் கூறிய மென்மொழி, தரையை நோக்கி இருந்த அந்த நபரின் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
மருத்துவமனையின் பின்புறம் என்பதால், அங்கிருந்த ஒற்றை விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத அந்த நபரின் முகம், மின்னல் வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிய, “அச்சோ இன்பா.” என்று திகைப்பில் கத்தினாள் மென்மொழி.
அதற்குள், சுடரொளி செவிலியுடன் அங்கு வர, “இவருதான் யாழ்மொழியை அட்மிட் பண்ணவரு. அவங்களை அட்மிட் பண்ணதும், அப்படியே மயங்கிட்டாரு. அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணலாம்னு பார்த்தா, அதுக்குள்ள ஆளைக் காணோம். இப்போ இங்க இருக்காரு.” என்று பதற்றத்துடன் கூறியபடி, அங்கிருந்த மற்ற பணியாளர்களை அழைத்து வர வேண்டி உள்ளே ஓட, மென்மொழியோ என்ன நடக்கிறது என்பது புரியாமல், அதிர்ச்சியுடன் இன்பசேகரனை தொட்டாள்.
அதற்குள், சிலர் ஓடி வந்து கீழே கிடந்த இன்பசேகரனை தூக்கிக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்றனர்.
அதே சமயம், சிசிடிவி காட்சிகளை பார்த்து, பின்புறம் வந்திருந்தனர் யுகேந்திரனும் அந்த மருத்துவரும்.
மருத்துவர் இன்பசேகரனிற்குச் சிகிச்சை அளிக்க சென்றுவிட, தோழிகள் இருவரையும் பார்த்தபடி அவர்களிற்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் யுகேந்திரேன்.
அவனிற்கும் யோசிக்க வேண்டி இருந்தது.
அத்தனை நேரம் ஆளரவமின்றி இருந்த இடத்தில் திடீரென்று எப்படி இன்பசேகரன் தோன்றினான் என்ற கேள்வி அவனது மூளையை குடைந்து கொண்டிருந்தது.
அதே சமயம், தலையில் கைவைத்து குனிந்திருந்த மென்மொழியோ, சட்டென்று நிமிர்ந்து, “சுடர், நமக்கு நடந்த ஆக்சிடெண்ட், யாழுக்கு நடந்த ஆக்சிடெண்ட், இன்பாக்கு நடந்த – இதெல்லாம் ஏதோ கனெக்ஷன் மாதிரி தெரியல?” என்று வினவ, “மொழி, நான் ஏற்கனவே குழப்பத்தோட இருக்கேன். நீ வேற புதுசு புதுசா சொல்லி பயமுறுத்தாத. முதல்ல, யாழ் எங்கன்னு கண்டுபிடிப்போம். அதுக்கு இன்பாதான் பதில் சொல்லணும். ஆமா, இன்பா ஏன் வேற யாரையோ யாழ்னு அட்மிட் பண்ணனும்? எனக்கு என்னமோ, இந்த ஹாஸ்பிடல் மேலதான் டவுட்டா இருக்கு.” என்றாள்.
அத்தனை நேரம் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த யுகேந்திரனின் மூளை யாழ்மொழி விஷயத்தை அலசினாலும், அவனின் விழிகள், மென்மொழியின் கால்சராய் பையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த வெளிச்சத்தையும் நோட்டமிட்டன.
அப்போது அவசர சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர் குழப்பத்துடனும் அதிர்ச்சியுடனும் வெளியே வர, அவரிடம் விரைந்த மென்மொழி, “என்னாச்சு டாக்டர்? இன்பா ஓகேதான?” என்று பதற்றத்துடன் வினவினாள்.
அவரோ பிரம்மையில் இருந்ததை போல, “ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். அதுதான் எப்படின்னு தெரியல.” என்றபடி சென்று விட்டார்.
அவரையே குழப்பத்துடன் பார்த்த மென்மொழி, அறைக்குள் நுழைய, அங்கு சற்று முன்னர் காணப்பட்ட காயங்கள் எதுவுமின்றி சாதாரணமாக உறங்குவதைப் போல படுத்திருந்தான் இன்பசேகரன்.
தொடரும்…

