
அத்தியாயம் 27
அன்று இரவு அப்படியே கழிய, மறுநாள் நிரஞ்சனா வேலைக்கு செல்வதற்குத் தயாராகி வந்தாள்.
மங்களம், “எங்கம்மா இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்ட.??” என்றிட,
“வேலைக்கு அத்தை..” என்றாள்.
“அப்டியா.. எங்க நீ வேலை பாக்குற??” என்று கேட்டதற்கு,
“மஹாலிங்கம் காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்..” என்றாள்.
அப்பொழுது சரியாக பரிதியும் இனியனும் கீழ் இறங்கி வர, அவள் சொன்னது அவர்கள் காதில் நன்றாகவே விழுந்தது.
“என்ன.. அங்கயா..” என்று பரிதி கேட்கும் முன் மங்களமே கேட்டார்.
“ஆமா.. ஏன் என்ன?? ” என்று அவள் கேட்க,
“அது எல்லாம் ஒன்னும் இல்லை. சும்மாதான் கேக்குறாங்க..” என்று அவளிடம் சொல்லி விட்டு, தாயைப் பார்த்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று தலையை ஆட்டிச் சொல்ல,
அவரும் அமைதியாகிக் கொண்டார்.
ஆனால் விநாயகம் சும்மா இராமல், “அது எப்படி நம்ம வீட்டுப் பொண்ணை அங்க அனுப்ப முடியும்..” என்று சொல்ல,
அவரை புரியாமல் பார்த்தாள் நிரஞ்சனா.
“என்ன சித்தப்பா சொல்றீங்க. எதுனாலும் எனக்குத் தெளிவா சொல்லுங்க. ” என்று அவள் குழப்பத்தில் கூற,
“அந்த சஞ்சய் இருக்கானே.. அவனுக்கும் நமக்கும் ஆகாது. ரொம்ப வருஷமா அவங்க நமக்குதொழில் முறை எதிரி.. நம்மள எப்போ எப்படி சாய்க்கலாம்னு தான் இருப்பாங்க..” என்று கூற,
“இப்போ நான் என்ன பண்றது..” என்ன செய்வது என்று தெரியாமல் அவள் கேட்டிட,
பரிதியோ,” எனக்கு வேண்டாம்னு தான் தோணுது. ஒரு வேளை நீ நம்ம வீட்டுப் பொண்ணுனு தெரிஞ்சா, அவனை நம்ம வேவு பாக்க அனுப்பி இருக்கோம்னு தான் அவன் நெனப்பான். அது மேலும் பிரச்சனை தான்.” என்று கூற,
மற்றவர்களுக்கும் பரிதி சொல்வது சரியாகப் பட்டது.
அவள் அப்படியே அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்து விட, அவள் அருகில் அமர்ந்த மங்களம், “என்ன மா.. வருத்தமா..” என்று வினவிட,
“கொஞ்சம் வருத்தம் இருக்கு தான். ஆனால் அங்க இருந்து எப்படி ரிலீவ் ஆகுறது..” என்றவளுக்கு,
“அதை காயத்ரி கிட்ட சொல்லிக்கலாம். அவ பார்த்துப்பா..” என்று இனியன் கூற,
“நான் சேந்து ஒரு பத்து நாள் தான் ஆகும். அதுக்குள்ள எப்படி. என்ன ரீசன்னு சொல்றது..” என்று புலம்பிட,
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம். பேசாம விட்டுரு. கொஞ்ச நாள் பார்த்துட்டு அவனே வேற ஆள எடுத்துக்கிருவான்.” என்று பரிதி கூற,
“ம்ம்ம். ” என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்.
ஒரே வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் எப்படி இருக்க முடியும்.
சின்ன சின்ன வார்த்தைகள் ஆவது பேசித்தானே ஆக வேண்டும். அது தான் நடந்தது இப்பொழுது.
“எனக்கு வீட்டுல இருக்க போர் அடிக்குமே..” என்று அவள் கூற,
“டேய்.. இவளையும் சேர்த்து கூட்டிட்டு போங்க டா உங்க கம்பனிக்கு..” என்றார் மங்களம்.
“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உங்க மருமகக்கிட்ட கேட்டுக்கோங்க..” என்று கூறி விட்டு சாப்பிட சென்று விட்டான்.
“நீ என்னமா சொல்ற..” என்று அவர் கேட்க,
“அது.. வந்து…” என்று இழுத்திட,
“என்ன வந்து போய்னு இழுக்குற.. போறியா இல்லையா. “
“கொஞ்ச நாள் ஆகட்டும். அது வரை நான் உங்ககூட வீட்டுல இருக்கேன்..” என்றாள்.
பரிதியோ மனதில், “நீ இப்படித்தான் சொல்வேன்னு எதிர் பார்த்தேன். லவ் சொன்ன என் முன்னாடி நீ எப்படி நடமாடுவ..” என்று தனக்குள் பேசியவன், சாப்பிட்டு விட்டு கிளம்பப் போக, வைஷு, தான் வரவில்லை என்றும், அக்காவிற்கு வீட்டில் பேச்சு துணையாக இருக்கிறேன் என்றும் கூறி இருந்ததால் இனியனும் பரிதியும் சரி என்றுக் கூறி விட்டு கிளம்பினார்.
நாட்கள் இப்படியே மெது மெதுவாக நகர, பரிதிக்கும் நிரஞ்சனாவுக்கும் இலை மறைக் காயாகவே நகர்ந்தது.
பரிதியும் அதன் பிறகு அவளிடம் எதைப் பற்றியும் கேட்கவில்லை.
ஆனால் மங்களம் சும்மா இருப்பாரா.. திருமண வயதில் இரு பெண்கள் இருக்க, அவர்களுக்கு வரன் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அதை விநாயகத்திடம் கூற, அவரும் “அக்கா.. முதல்ல பசங்க நாலு பேருக்கு போய் ஜாதகம் பார்த்துட்டு வருவோம். அதுக்கு அப்புறம் நம்ம வரன் தேடலாம்.” என்றிட,
இளையவர்கள் தவிர மூத்தூர் மூன்று பேரும் எப்பொழுதும் பார்க்கும் ஜோசியரிடம் சென்றனர்.
ஜோசியரும் ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.
முதலில் பரிதிக்கு பார்த்தவர், “இந்த பையனுக்கு கல்யாண நேரம் கூடி வந்து இருக்கு. பொண்ணு நீங்க தேட வேண்டிய அவசியம் இல்லை. சொந்ததுலேயே பொண்ணு. அமையும்னு கட்டம் சொல்லுது..” என்றார்.
நிரஞ்சனாவிற்குப் பார்த்தவர், ” இந்த பொண்ணுக்கு இப்போ பெரிய கண்டம் இருக்குனு கட்டம் சொல்லுது. இந்த பொண்ணுக்கு உடனே கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. அவளோட புருஷன் தான் அவளுக்கு அந்த கண்டதுல இருந்து காப்பாத்துற காவலனா இருப்பான். ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க.. ” என்று கூற,
மங்களம் “என்ன சாமி இப்படி சொல்றீங்க..” என்று பதறியபடி கேட்டார்.
“உள்ளதை தான் மா நான் சொல்றேன். ஆஞ்சநேயருக்கு விளக்கு போடச் சொல்லுங்க. கடுமையான கண்டதுல இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்..” என்று கூற,அவரும் சரி என்றார்.
“இந்தப் பையனுக்கு பொண்ணு அவன் பக்கத்துலயே தான் சுத்திட்டு இருப்பா. சொல்லப் போனாள் உங்களுக்கு பொண்ணு பாக்குற வேலை இருக்காது. அவனே இந்நேரம் பார்த்து வச்சி இருப்பான்..” என்று இனியனின் ஜாதகத்தைப் பார்த்து சிரித்தபடி கூற,
மல்லிகா, “கல்யாணம் நாங்க பண்ணி வைப்போமா.. இல்லை அவனா போய் பண்ணிக்கிருவானா..” என்று சற்று நக்கலுடன் கேட்க,
விநாயகம், ” நீ வேற ஏண்டி.. சும்மா இரு. ” என்க,
“ம்ம்க்கும்..” என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.
இந்த பொண்ணு ஜாதகத்துல பெருசா எந்தக் குறையும் இல்லை. ஆபத்துல வந்தப்போ கூட அதுல இருந்து தப்பிச்சிட்டா.
இந்தப் பொண்ணுக்கு சொந்தத்துல தான் முடியும். அவங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல இல்வாழ்க்கை அமையும்.” என்று வைஷ்ணவி பற்றிக் கூற,
மூவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.
அங்கு இருந்து விடை பெற்றுகாரில் வரும் போது, “நம்ம வைஷுவுக்கும் பரிதிக்கும் சொந்தத்துல தான் முடியும்னு சொல்லி இருக்காங்க. ஒரு வேளை அவங்க ரெண்டு பேருக்கும் தான் பொருத்தம் இருந்து இருக்குமோ..” என்று மல்லிகா தன் சந்தேகத்தை வைக்க,
மங்களம் அதை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தார்.
ஒரு வேளை இருவருக்கும் தான் கல்யாண யோகம் கூடி வந்து இருக்குமோ என்று.
சரி எதற்கும் வீட்டிற்குச் சென்று பரிதியுடன் ஆலோசித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தார்.
வீட்டிற்கு வர, தோட்டத்தில் வைஷுஷுவும் நிரஞ்சனாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பார்த்து விட்டு, மூவரும் உள்ளே சென்றனர்.
அக்கா தங்கைக்குள் நல்ல பிணைப்பு வந்து இருந்தது.
பேச்சு வாக்கில் வைஷ்ணவி, “என்னை விட மூத்தவ நீ.. எப்படியும் நம்ம வீட்டுல உனக்குத் தான் முதல்ல கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்க..” என்று ஊஞ்சல் ஆடிக் கொண்டே சொல்ல,
“நான் இப்போதானே வந்து இருக்கேன். கொஞ்சநாள் இருந்துட்டு பதறாம பார்த்துக்கலாம் அது எல்லாம்” என்றாள் நிரஞ்சனா.
“அப்படி எல்லாம் விட மாட்டாங்க. ஏற்கனவே பரிதி மாமா க்கு பொண்ணு பார்த்துட்டு தான் இருந்தாங்க. எதுவும் அமையல. மாமாக்கு ஆக்சிடண்ட் ஆனப் பிறகு இப்போ வரைக்கும் யாரும் இதைப் பத்தி பேசல. நீ இருக்கும் போது எப்படி மாமாவுக்கு பண்ணுவாங்க. அதுனால உனக்கு தான் முதல்ல பாப்பாங்க..” என்று கூறிட,
“ஓஹோ..” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
“இன்னைக்கு எங்க போய் இருக்காங்னு தெரியுமா.. ஜாதகம் பாக்கத்தான்.” என்றாள் வைஷு.
“ஓ..” என்றவளுக்கு, இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
வேலை முடித்து பரிதி வந்ததும், அவனிடம் பேச அழைத்தார் மங்களம்.
அவரது அறைக்கு தேடிச் சென்ற பரிதி, “ம்மா.. என்ன விஷயம்.. என்ன பேசணும்..” என்று அவரின் அருகில் அமர்ந்தான்.
“வாப்பா பரிதி.. இன்னைக்கு உங்க நாலு பேருக்கும் ஜாதகம் பாக்க போனோம். அங்க ஜோசியர் சொன்ன விஷயத்தை பத்தி பேசத் தான் கூப்பிட்டேன்..” என்றார்.
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் உங்களுக்காக கேக்குறேன். சரி என்ன சொன்னாங்க??” என்று கேட்க,
“உனக்கும் வைஷுவுக்கும் சொந்ததுக்குள்ள தான் கல்யாணம் முடியும்னு சொன்னாங்க. அப்புறம் அந்த இனியன் பையனுக்கு பொண்ணு அவனே இந்நேரம் பார்த்து வச்சி இருப்பானாம். அவன் பக்கத்துல தான் பொண்ணு இருக்காம். ஒருவேளை கூட வேலை பாக்குற பொண்ணை எதுவும் காதலிக்கிறனானு தெரியல. என்னனு பாரு பரிதி..” என்று சலிப்புடன் கூறினார்.
அவனோ சிரித்துக்கொண்டே, “சரியாதான் சொல்லி இருக்காங்க.. ” என்றான்.
“அப்படியா.. அப்போ உனக்கு பொண்ணு யாருனு தெரியுமா..” என்று அவர் ஆர்வமுடன் கேட்க,
“ம்ம்ம். நல்லா தெரியும். உங்களுக்கும் தெரிஞ்ச பொண்ணு தான்..” என்றான்.
“அப்படியா.. யாருப்பா அது. எனக்கு தெரிஞ்ச பொண்ணு..” மங்களம் கேட்க,
“எல்லாம் நம்ம வைஷு தான்..” என்றான் புன்னகைத்தவாறே..
“என்னது..நம்ம வைஷுவா அது..”
“ஆமா..அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க..” என்றான்
“அது சரி. நான் அவங்கள யோசிக்கவே இல்லையே. நான் சொந்தம்னு சொன்னதும் உங்க ரெண்டு பேரையும் தான் யோசுச்சேனே தவிர அவங்கள பத்தி யோசிக்கல. இதுவும் நல்லதா போச்சு..” என்றார் புன்னகையுடன்.
“சரி அப்புறம் என்ன அவங்களுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுங்க..” என்றான் பரிதி.
“என்ன டா பேசுற.. அவங்களுக்கு முன்னாடி நீ இருக்க.. நிரஞ்சனா இருக்கா.. உங்க ரெண்டு பேருக்கும் முடிச்சிட்டு அதுக்கு அப்புறம் அவங்களுக்கு பண்ணிக்கலாம்..” என்று கூற,
“எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. அதுக்கு மேல என்னை கட்டாயப்படுத்தாதீங்க..” இன்று சொல்லிவிட்டு எழும் முன்,
“டேய்.. இரு டா.. இன்னும் பேசி முடிக்கல. அதுக்குள்ள எங்க போற?” மங்களம் கூற,
“இன்னும் என்ன.. சொல்லுங்க..” என்று சற்று கோவமுடன் தான் கேட்டான்.
“நிரஞ்சனாக்கு பார்த்தப்போ, அவளுக்கு ஒரு பெரிய கண்டம் இருக்குனு சொன்னாரு. அவளுக்கு கல்யாணம் பண்றது மூலமா, அவ புருஷன் தான் அவளுக்கு. பாதுகாப்பா இருப்பான்னு சொன்னாரு டா. முதல்ல அவளுக்கு கல்யாண ஏற்பாட்டைப் பாக்க சொன்னாங்க.” என்று கூற,
அவனோ யோசிக்க ஆரம்பித்தான்.
“உனக்கு சொந்தத்துல தான் அமையும்னு சொன்னாரேப்பா ஜோசியர். ஒரு வேளை, நம்ம நிரஞ்சனாவா இருக்குமோ..” என்று தன் மனதில் உள்ளதை அவர் கூற,
“அம்மா.. நீங்களா அவசரப் பட்டு எதுவும் முடிவு எடுக்காத்தீங்க. நீங்க நிரஞ்சனா கிட்ட பேசுங்க. அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிகிட்டு அதுக்கு அப்புறம் முடிவு எடுங்க..” என்று கூறி விட்டுச் சென்று விட்டான்.
மங்களம் செல்கின்ற பரிதியின் முதுகையே வெறித்துப் பார்த்தார்.
நித்தமும் வருவாள்..
