
அத்தியாயம் 27
லட்சு பேயறைந்தது போல் நிற்க. “ஏய்” என சப்புனு அறைந்தே அவளை நினைவுக்கு கொண்டு வந்தாள் ஆறு.
சுலீரென்ற அடியால் வலித்த தோள் பட்டையை தேய்த்து கொண்டு “என்னடி பாத்ரூம் போயிட்டு வர்றேன்ற மாதிரி சாதாரணமா சொல்ற, உன்ன கொன்றுவேன் பாத்துக்க. வந்த இடத்துல ஏதாவது ஏழரை இழுத்துவிட்டு போயிடாத. போனோமா, பாத்தமா, ஒரு ஹாய் சொன்னம்மான்னு வந்துரு சொல்லிட்டேன்”.
“அடியேய் உனக்கு விளக்கம் கொடுக்க எனக்கு நேரமில்ல. ப்ரெசிடெண்ட்டே இப்ப தான் ஒரு விஷயத்த தானா செய்ய முன் வந்துருக்காங்க, இத நா கெடுத்துக்க விரும்பல. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் டி, என் செல்லம்ல எப்டியாது சமாளிடி என் தங்கம்ல” என கட்டி பிடித்து முத்தமிட்டு, அவள் பேசியதெல்லாம் காதில் வாங்காமல், ஸ்லீப்பரை மாட்டிக் கொண்டு கதவை திறக்க,
“ஏய் உங்க அம்மா கேட்டா என்னடி சொல்லுறது?” என்றாள் இறுதியில் ஆற்றாமையாக.
“பக்கத்துல இருக்கவங்கள சமாளிக்க தெரிஞ்ச உனக்கு தூரத்துல இருக்கவங்கள சமாளிக்கிறதா கஷ்டம். உன்னால முடியும் லட்சு”, என பறக்கும் முத்தத்தோடு கதவை அடைக்க.
“அட ஆண்டவா நா உனக்கு என்ன பாவம் பண்ணுனேன், இப்டி ஒருத்தியோட என் வாழ்க்கை மொத்தத்தையும் டிராவல் பண்ண வெச்சு இருக்கீங்க. இன்னைக்கு பொழுத நா எப்டி சமாளிப்பேன்” என மேலே பார்த்து புலம்பிக் கொண்டிருந்தாள் லட்சு.
குனிந்து காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, துள்ளிக்குதித்து ஓடி வருபவளைக் கண்டு விக்கித்து நின்றான் ப்ரகலத்தன். ஃபிரீ ஹேரில் தனக்காகவே மெனக்கெட்டு இருந்த அலங்காரத்தில் தேவதையாக தான் இருந்தாள். அவள் அருகில் வரவும் மூன்று விரல் காட்டி, கண்சிமிட்டி, விசில் அடிக்க ஆறெழிலுக்கே வெட்கம் வந்து விட்டிருந்தது. அதை மறைக்க, “எங்கே போறோம்?” என்றாள்.
“அப்டியே போறப்ப பிளான் பண்ணிக்கலாம்” என இருவரும் வெளிவந்தனர்.
வேறு யாரும் ௭ழுந்திருந்திருக்கவில்லை அதனால் ௭ந்த தடையுமின்றி வெளியேறினர். ரிசப்ஷனில் இருந்த பையன் அவளை குறுகுறுவென பார்க்க ப்ரகலத்தன் கையை எட்டி பிடித்துக்கொண்டாள்.
“என்னம்மா?” என்றான் திடீரென அவள் நெருங்கவும்,
“ஒன்னும் இல்ல” என்பதாய் கண் சிமிட்டி தலையசைக்க, சிரித்துக் கொண்டே தானும் அவள் கையை பற்றிக்கொண்டான். ரோட்டை கடந்து சற்று தொலைவில் இருந்த பஸ் ஸ்டாப்பிற்கு வந்தனர்.
“டீ ஏதும் குடிக்கிறியா? பசிக்கும்ல..”.
“இல்ல வேணாம், கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்று விட.
நேராக சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு கிளம்பிச் சென்றனர். இருவர் பெயருக்கும் அர்ச்சனை கொடுத்துவிட்டு, “இதே மாதிரி தம்பதி சகிதமாய் வர ஆசீர்வதிங்க ப்ளீஸ்” என வேண்டிக்கொண்டு வெளிவந்தனர்.
நடந்து வந்த பாதையில் கண்ணில் பட்டது, பிடித்தவற்றை எல்லாம் வாங்கி நொறுக்கிக் கொண்டே வந்தனர். பெரிதாக அவர்களுக்கு மொழி பிரச்சனை வந்துவிடவில்லை. தேவைக்கு மட்டுமே மற்றவர்களிடம் பேசினர். அவர்களும் இவர்களை கண்டதும் தமிழ் ௭ன புரிய தமிழிலேயே பதிலளித்தனர். டூரிஸ்ட் பிளேஸ் என்பதால் 5 லாங்குவேஜ் சரளமாக பேச வந்தது அங்குள்ளவர்களுக்கு.
“அடுத்து உனக்கு எங்க போணும்னு இருக்கு?” ௭ன்றான் ப்ரகலத்தன்.
“நா அதெல்லாம் பிளான் பண்ணி வரல. பஸ்ட் டைம் பிரண்ட்ஸோட டூர் வந்துருக்கேனா, அதனால ப்ளேஸ் பத்தி யோசிச்சுக்கலையே. உங்களுக்கு என்ன எங்க கூட்டிட்டு போனா நல்லா இருக்கும்னு தோணுதோ, அங்க கூட்டிட்டு போங்க”.
“சரி பிருந்தாவன் கார்டன் போலாமா?”.
“ம்”.
அங்கு அவன் எடுத்து வந்த சின்ன கேமராவில் அவளை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தான். இருவரையும் சேர்த்து எடுத்து தர, அங்கிருப்பவர்களிடமே, அரை மணி நேரத்தில் அங்குள்ள சீனரியுடன் சேத்து எடுத்துத் தரப்படும் ௭ன்பதில், ஒத்துக்கொண்டு போஸ் கொடுத்தனர். அவள் தோளில் கை போட்டு அருகில் இழுத்துக் கொண்டான். பாதி அனைத்தவாறு தான் அந்த போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
பின் அங்கே பக்கத்திலேயே இளைப்பாற போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர, “வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வந்துருக்கணுமோ?” என்றாள்.
“ஏன்டா தண்ணி வேணுமா?” என்றான்.
அவள் பாவமாய் தலையசைக்க, எழுந்தவன் மறுபடியும் அமர்ந்து, “ரெஸ்ட் ரூம் போணுமா?” என்க. விழி விரித்தவள், முன்பைவிட இப்போது வேகமாக தலை அசைக்க.
“சொல்றதுக்கு என்ன எழில். இதெல்லாம் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாது டேஞ்சர்”.
“இங்க எங்க இருக்குமோ. நீங்க தேடி அலைய வேண்டாமேன்னு தான் சொல்லல”.
“அது ஒரு கஷ்டமான விஷயமே கிடையாது, இரு இங்க யார்ட்டயாது கேட்டுப் பாக்குறேன்” என்றவன் பூக்களை பறிக்காமல் பாதுகாக்க அங்கங்கு நிற்பவர்களில் ஒருவரை அணுகி விசாரிக்க, அவர் ஒரு திசையை கைகாட்ட. அவளை அழைத்துச் சென்று அனுப்பியவன், வெளிவருவதற்குள் தண்ணீர் பாட்டிலை வாங்கி விடலாம் என விசாரிக்க, இங்குதான் இங்குதான் என வெளி கேட் வரை வந்திருந்தான்.
சரி வந்தது வந்துட்டோம் என வாங்கி விட்டு திரும்ப, செக்யூரிட்டி உள் விட மறுத்தார். மறுபடியும் நுழைவு சீட்டு பெற்றே உள்ளே செல்ல முடியும் ௭ன்றார்.
‘அதுக்கு வேற க்யூல நிக்க ணுமே. ஐயோ நேரமாகுதே, வெளில வந்துட்டு நம்மள காணும்னு தேடுவாளே’ என பதறியவன்.
“சார் என் பியான்சி உள்ள இருக்காங்க, வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன், அவங்கள மட்டும் கூட்டிட்டு வெளில வந்துருறேன், என்னை காணும்னா பயப்படுவாங்க” என இவன் பொறுமையாக சொல்ல, ௭ன்ன நினைத்தாறோ அந்த செக்யூரிட்டி, கார்ட்லெஸ்ஸில் இன்னொருவரை அழைத்து உடன் சென்று வருமாறு பணித்தார் அந்த வாட்ச்மெனை.
ப்ரகலத்தன் வேகமாக உள்ளே சென்று பார்க்க, பாத்ரூமிற்கு எதிர் திசையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் மர பெஞ்சில் அமர்ந்து பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் வேகமாக ஓடி சென்று கட்டிக்கொண்டான். அவள் கை நடுக்கமே பயந்திருக்கிறாள் என புரிந்து அதை அழுத்தி கொடுத்தவன்.
“வாட்டர் பாட்டில் வாங்க போனேன் எழில், வெளிய வர போக வேண்டியதா போச்சு, திரும்ப உள்ள விடமாட்டேன்ட்டாங்க, எக்ஸ்க்யூஸ் கேட்டு வந்துருக்கேன்”.
“ஒரு நிமிஷம் பயந்துட்டேன், போன் வேற இல்ல. நம்பர் வேற மெமரைசா தெரியாதா, என்ன பண்ணனு ஒன்னுமே புரியல. சரி வேற எங்கேயாவது நா உங்கள தேடி நகர்ந்துட்டா, நீங்க என்ன இங்கதான தேடி வருவீங்க, அதான் வெயிட் பண்ணலாம்னு உக்காந்துட்டேன்”.
“சாரி சாரி ம்மா., சரி சரி, வா போலாம். இனி கவனமா இருந்துக்குறேன்மா, ரிலாக்ஸ்” என தட்டி கொடுத்து, தண்ணியை குடிக்க வைத்து அழைத்துச் சென்றான்.
ஆனால் அவனுக்கு அந்த ஐந்து நிமிடத்தில் உலகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் மொத்தமும் நினைவில் வந்து போன படபடப்பு மட்டும் அடங்க மறுத்தது.
“போட்டோ வாங்கல ப்ரெசிடெண்ட்” என இவள் கை காட்டிய பின்பே அதை வாங்கச் சென்றான். போட்டோ அழகாக இருந்தது.
“இதக் கொண்டு போய் ஜெயந்தி டீச்சர்ட்ட காட்டணும். அவ்வளவு தான் இனி டூர்ன்ற வார்த்தைய என் டிக்ஷனரில இருந்து அழிச்சுருவாங்க” என அவள் பேசிக்கொண்டே வர, சிரித்துக் கொண்டே வந்தான்.
“டைம் 1 ஆகிடுச்சு, சாப்ட்ருவோமா? காலைலயிருந்து சாப்படல” என்றான்.
“ஏன் சாப்பிடல, வறுத்த கடல, மாங்கா, பைன் ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம்” அவள் விரல் விட்டு எண்ண, “நடக்குறோமே எழில், அதனால டைஜஸ்ட் ஆயிருக்கும். இப்ப பசிக்குதா இல்ல இன்னும் கொஞ்சம் டைம் ஆகட்டுமா?”.
“ஹலோ நா தான் சாப்பிட்டுருக்கேன், நீங்க இது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் தான் டேஸ்ட்டுக்கு சாப்பிட்டீங்க, அதனால உங்களுக்கு கண்டிப்பா பசிக்கும், வாங்க சாப்பிட போலாம்”.
“இதுக்கு நா மொத கேட்டப்பையே சரின்னு சொல்லிருக்கலாம்ல” என்றான் அவன்.
“ஏன் ரொம்ப மொக்கப் போடுற மாதிரி இருக்கோ?” என்றாள் நின்று அவனை பார்த்து இடுப்பில் கைவைத்து முறைத்து.
“இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்” அவள் அவன் கையில் ஓங்கி அடிக்க.
“சும்மா சொன்னேன்டி” என தோளில் கை சுற்றி போட்டு பிடித்து கொண்டான்.
“உனக்கு வெஜ் ரொம்ப பிடிக்குமா? நான்வெஜ் ரொம்ப பிடிக்குமா?” என்றான் இருபக்கமும் கடையை பார்த்து கொண்டே நடந்த வழியில்.
“எதுவா இருந்தாலும் டேஸ்ட்டா இருந்தா பிடிக்கும். உங்களுக்கு என்ன பிடிக்கும்?”.
“எழிலுக்கு என்ன பிடிக்குமோ அதான் எனக்கும் பிடிக்கும்” அவனை மேலும் கீழும் பார்த்தாள்,
“இன்னைக்கு கொஞ்சம் அப்நார்மலா நடந்துக்குறீங்களே ஏன்?”. அவன் முறைக்க, “நீங்களே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க ப்ரெசிடெண்ட் புரியும்”.
“இப்டினா அப்டின்னு சொல்லு, அப்டினா இப்டின்னு சொல்லு. சாப்ட்டு முடிக்குற வர நீ பேசவே கூடாது, இது என் ஆர்டர்”, அவன் பூனைக் கண்ணை உருட்ட, “சரிங்க ப்ரெசிடெண்ட்” என அவன் கண்ணைப் பார்த்து நக்கலாக சிரித்து தலையாட்ட, ‘இவ ரியாக்சனே சரி இல்லையே’ என நினைத்து முன்னே சென்றவளை பின்தொடர்ந்து ஒரு கடையினுள் நுழைந்தான்.
வெய்ட்டர் வந்து “மெனு ப்ளீஸ்” என்க. அவன் அவள் முகத்தைப் பார்க்க, அவள் அவன் கண்ணை பார்த்து அமர்ந்துவிட்டிருந்தாள்.
“சொல்லு என்ன வேணும்”, அசையவே இல்லை. வெயிட்டரும் அவளை வித்தியாசமாக பார்க்க, “விளையாடாம சொல்லு எழில்”, நான்கு முறைக்கு மேல் கேட்டு அவனுக்கு பொறுமை போய் விட, அவர்கள் இருவருக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்ய. அதன்பின்னும் வெயிட் செய்த நிமிடங்களில் அவள் பேசவே இல்லை.
அவனுக்கு அதில் கோபம் வர, அதன் பிறகு பேசாமலே அமர்ந்து கொண்டான். ஆனால் அவள் அவன்மீது இருந்த பார்வையை திருப்பினாள் இல்லை. பின் சாப்பாடு வர, அமைதியாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
“இனி பேசலாமா?” என்றாள் வெளியே வந்த நொடி.
“பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா பண்ணுவ? அந்த வெய்ட்டர் நம்மள என்ன நினைச்சுருப்பான். சில நேரம் இரிடேட் பண்ணிடுற” என அவன் டென்ஷனாக.
“நீங்க சொன்ன பேச்ச அப்டியே கேட்ருக்கேன். நீங்க தான் பேச வேணான்னு சொன்னீங்க”.
“சொன்னதெல்லா அப்டியே கேட்டுற ஆளு தான் நீ”.
இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப் வர, “அவளே பேசட்டும்” என அவனும், “அவங்க தான ஸ்டார்ட் பண்ணாங்க, இரிடேட் வேற சொல்லுறாங்க. அவங்களே பேசட்டும்” என அவளும் அமைதியாகவே நின்றனர்.
அடுத்து எங்கே போறது என்ற சிந்தனைக்கு வர திரும்பி அவளை பார்த்தான், அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நிற்பதை பார்க்க, சிறு குழந்தையாகத்தான் தெரிந்தாள். கோபம் வந்த பாதை தெரியாமல் சென்று விட, மெதுவாக சிரித்துக் கொண்டான்.
அவள் கன்னம் பிடித்து கிள்ளி, “படுத்தாம இருந்தா நா ஏன் திட்டப் போறேன். சரி, நெக்ஸ்ட் எங்க போலாம்”.
“எங்கேயும் போ வேணா, என்ன கொண்டுப்போய் ரூம்ல விடுங்க”.
“பார்றா, நியாயப்படி நா தான் கோவப் படணும், உன் கோவமே தப்பு. இதுல அத மெயின்டைன் வேற பண்ற” ௭ன்றான். அவள் முறைக்க.
“சமாதானம், சமாதானம், சமாதானம், போதுமா” அவன் குனிந்து குனிந்து எழ, “திட்டிட்டு திட்டிட்டு நல்ல சமாதானம் தான். நெக்ஸ்ட் பர்சேஸ் பண்ற மாறி ஏதாவது பிளேஸ் போலாம்” என்க.
கூகுளில் தேடிப் பார்க்க, 2-3 எக்ஸிபிஷன் பிளேசஸ் காட்ட, அதில் ஒன்றை செலக்ட் செய்து, அதற்கு செல்லும் பஸ்ஸில் ஏறினர். அங்கு சென்று முதலில் ப்ரகலத்தனுக்கு ஒரு டி-சர்ட் எடுத்தாள். மறுக்காமல் வாங்கிக் கொண்டான். பின் அவள் அம்மாக்கும், அவன் அம்மாக்கும் சாரி ஒரே போல் எடுக்க, “எங்க அம்மாக்கு இப்ப வேணாம். கண்டிப்பா கட்டிக்க மாட்டாங்க, நீ அங்க வந்தப்புறம் எடுத்துக் கொடு” என சொல்ல.
“அவுங்க திட்டுறாங்கன்றதுக்காக அப்டியே விட்ற முடியாது. நா குடுக்குறத குடுப்பேன். கட்டுறதும் கட்டாததும் அவங்க இஷ்டம்”.
“ஐஸ் வைக்குறன்னு நினைப்பாங்கடா இப்ப வேணா பின்ன பாத்துக்லாம்”.
“கிட்டத்தட்ட இது ஐஸ் வைக்குற மாறி தானே. அவங்களுக்கு என்மேல இருக்க கோவம் குறைஞ்சா தான நா அவங்கள நெருங்க முடியும்” சொல்லி கண்ணடிக்க. “அடிப்பாவி” என வாயில் கை வைத்தான் அவன்.
“அப்ப எனக்கு எதுக்கு எடுத்த?”.
“அப்படியாது நீங்க லவ் சொல்லிட மாட்டிங்களானு தான்” என அவள் போக்கில் மாமனாருக்கு செலக்ட் செய்து கொண்டே சொல்ல.
அவளையேப் பார்த்தவன், திரும்பி அந்த சேல்ஸ் மேனிடம், “ட்ரயல் ரூம் எங்க இருக்கு?” என்க.
“௭க்ஸிபிஷனுக்காக டெம்ப்ரவரியா போட்டது தான் சார். நேராப் போய் லெப்ட்ல இருக்கு” என்றார் அவர்.
இரண்டு டீ-சர்ட்டை அங்கு கிடந்ததில் எடுத்துக் கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு செல்ல, “அதுவே நல்லாருக்குன்னு சொல்லிட்டு, இப்ப எதுக்கு கூட ரெண்டு ட்ரெயில் பார்க்க போறீங்க?”.
“எல்லாம் டவுட் கிளியர் பண்ண தான்”. ட்ரயல் ரூம் நெருங்கவும், அவள் ஸ்லோவாக, அவளையும் தள்ளிக்கொண்டு நுழைய.
“ஹே ப்ரசிடெண்ட், நா எதுக்கு உள்ள” ௭ன அலற.
“கத்தாம வா எழில்” என அவன் அவளை உள்ளே இழுத்து கதவடைக்க, இவளுக்கு படபடப்பு அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.
“பயமா இருக்கா?” என்றான் டீ-சர்ட்டை ஹாங்கரில் மாட்டிக்கொண்டு கண்ணாடியில் அவளைப் பார்த்தவாறு.
“இல்லையே எதுக்கு பயப்படணும்? நீங்க மாத்திட்டு காட்டலாமே, வெளியிலயே நா நிப்பேன்”.
“ஏன்..,உள்ள நின்னா என்ன?”.
“உங்களுக்கு அன்கம்பர்டபுலா இருக்கும்ல”.
“அப்ப உனக்கு அதெல்லாம் இல்ல???” என அவன் போட்டிருந்த ஷர்ட்டை கழட்ட போக, வேகமாக திரும்பி நின்று கொண்டாள்.
“ஓ! நேர பாக்கமாட்ட, கண்ணாடில மட்டும் பாப்பியா?” என்றான், பின் நிமிர்ந்தவள், கண்ணாடி முன் நிற்பதை கண்டு தலையிலடித்துக் கொண்டு, மெதுவாக திரும்பி, “நா வெளியில நிக்கட்டுமா?” என்றாள்.
குனிந்து மெதுவாக அவளை நெருங்கியவன், அவள் முகத்தை நிமிர்த்த, இறுக்க கண்மூடி கொண்டாள். பால் முகத்தை ரசித்தான். அங்கங்கு துளிர்த்திருந்த வேர்வை கூட அவள் முகத்திற்கு அழகைத் தந்தது. அவள் ஹார்ட் பீட் அவனுக்கு கேக்குமளவிற்கு அதிவேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.
முகத்தை நெருங்கி, அவள் நெற்றியில் முத்தினான், கண் திறக்கவில்லை. மெதுவாக, மூடியிருந்த இமையில் வலிக்காமல் முத்த பட்டென திறந்து அவனைக் கண்டாள். அவன் பார்வையில் தெரிந்தது, இதற்குமுன் காணக் கிடைக்காதது, இப்பொழுது கிடைத்தது, ‘இதை உணர்த்தத்தான் இவ்வளவு நெருங்கினானோ?’ என நினைத்துக் கொண்டாள்.
அந்தக் கண்ணிலிருந்து அவளால் மீளவே முடியாமல் போனது. யார்கனவே அவளை உள்ளே சுருட்டி கொள்ளும் அவன் பார்வை, இப்போது அவளை ஒரு பரவச நிலைக்கே கொண்டு சென்றிருந்தது.
அவன் பார்வையை கண்டவள், இவன் முகம் மிக நெருங்குவதை உணர, “என்ன?” என இவள் பார்க்க, அவன் உதட்டை நோக்கி வருவது கண்டு படபடப்பு அதிகரிக்க, லேசாக உரசும்போது குனிந்து அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். அவளது இதயத் துடிப்பை துள்ளியமாக உணர்ந்தான் அவன்.
“எழில்” மென்மையாக காதோரத்தில் அழைத்தான்.
“ம்”.
“என்னாச்சு?”.
“பயமா இருக்கு” பலமாக சிரித்தான்.
அவன் கையில் கிள்ளினாள், “வலிக்குதுடி” என்றவன் அவளை இறுக்கிக் கொண்டு, “நா உன்னத் தவிர வேற யார்கிட்டயும் இவ்வளவு நெருக்கமா போவேன்னு தோணுதா எழில்?” என்றான் அதே நிலையில்.
வேகமாக அவனை விலக்கித் தள்ளியவள், “கொன்றுவேன் அப்படிலாம் நெனச்சாக் கூட”.
“நீ சொல்லு, நா செய்வேனா?”.
“இல்ல இல்ல, நீங்க அவ்ளோ வொர்த் இல்ல. இதுக்கே பாவ மன்னிப்பு கேட்டு சர்ச்சுக்கு போனாலும் போவீங்க”.
“போடி என் ஒர்த் என்னன்னு உனக்கு ஒரு நாள் புரியும், அப்ப பேசிக்கிறேன், இனி இங்க நிக்க வேணாம் வா போலாம்”.
இருவரும் வெளியில் வந்து மற்ற நண்பர்கள் எட்டு பேருக்கும் சில பல பிடித்த பொருட்களை வாங்கிக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்பினர்.
“லட்சு எப்டி சமாளிச்சுருப்பா? ஒரு போன் பண்ணிக் கேட்டிருக்கலாம்”.
“அடங்கப்பா திரும்ப ஹோட்டலுக்கு வரவும் தான் உனக்கு அந்த ஞாபகமே வருதோ?”.
“அப்படி இல்ல, இடையில கேட்டாலும் இருக்க கடுப்புக்கு கடிச்சு விட்டுருவா. நீங்களும் ரெப் தான, நீங்களாம் எப்டி ப்ரீயா இருக்கீங்க”.
“நா ப்ராஜெக்ட் விஷயமா ஒரு திங் பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருக்கு, இங்க ஒருத்தர்ட்ட டீடைல்ஸ் கலெக்ட் பண்ணனும்னு சொல்லி பர்மிஷன் வாங்கி, உன் கூட சுத்திட்டு வந்துருக்கேன்” ௭ன அவன் சொல்லி கொண்டிருக்க.
“வந்துட்டீங்களா? ஐ வி வந்த இடத்துல கூட உங்களுக்குத்தான் தூது போக வேண்டியிருக்கு. இந்தாம்மா உங்க ரூம் கீ, லட்சு குடுத்துற சொன்னா” என வந்து நீட்டினான் மூர்த்தி.


Thoorigai Premium Membership