Loading

அத்தியாயம் 26

இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, வெளியே சத்தம் கேட்டதும் தான், அந்த சத்தத்தில் இருவரும் தன்னிலை அடைந்து விலகி நின்றனர்.

இருவருக்கும் என்ன பேசுவது.. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருக்க, ஒரு பெருமூச்சுடன் பரிதியே தொடர்ந்தான்.

“ஹாய்.. நிரஞ்சனா.. நான் பரிதி.. இளம்பரிதி..” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள,

“ஹலோ சார்..” என்றாள் சற்று தடுமாற்றதுடன்.

“என்னை நியாபகம் இருக்கானு தெரியல.. என் முகமும் உங்களுக்கு முழுசா நினைவில் இருக்க வாய்ப்பும் குறைவு தான்..” என்றவன், “அன்னைக்கு ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்டீங்களே.. அது நான் தான்.. ” என்று கூற,

“தெ.. தெரியும் சார். எப்படி இருக்கீங்க இப்போ..??” என்றாள்..

“ரொம்ப நல்லா இருக்கேன்மா உங்க தயவால..” என்றதற்கு,

“என்ன சார்.. இப்படி எல்லாம் சொல்றீங்க.. அன்னைக்கு பார்த்துட்டு அப்படியே விட்டுட்டு போக முடியல. ஒரு மனிதாபிமானம் தான் சார்..” என்றாள்.

“அன்னைக்கு நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி.. யாரா இருந்தாலும் கொஞ்சம் யோசிப்பாங்க. நீங்க அப்படி எதுவும் இல்லாம உடனே எல்லாமே பண்ணீங்களே.. அதுக்கு ஒரு மனசு வரணும். அந்த மனசுக்கு தான் நான் நன்றி சொல்றேன். அப்புறம் ஏன் ஒரு மாதிரி பயந்துட்டு பேசுறீங்க.. என்ன பார்த்தா என்ன பயமாவா இருக்கு..” என்று வீட்டைச் சுற்றிப் பார்த்தவன், அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“குடிக்க எதுவும் குடுக்க மாட்டிங்களா..” என்று அவனே கேட்க,

அவளுக்கு கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை. அவன் கேட்ட பிறகு தான் நியாபகம் வர, “இதோ வரேன் சார்..” என்றவள் சமையல் அறைக்குச் சென்றாள்.

மீண்டும் ஒரு முறை வீட்டை கண்களால் அலசியவன், சுவற்றில் மாட்டப் பட்டிருந்த அவளது தாய் மற்றும் தந்தையின் புகைப்படத்திற்கு மாலை போட்டு இருந்தது.

அதே புகைப்படம் தான் செயின் டாலரில் இருப்பது.

அதன் அருகே சென்று புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்க, நிரஞ்சனாவோ அவனுக்கு அருந்துவதற்கு தேநீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவன் புகைப்படத்தைப் பார்ப்பதை பார்த்த நிரஞ்சனா, “அது என்னோட அம்மா அப்பா சார். ” என்றாள்.

“ம்ம்ம்ம். ” என்று மட்டும் கூறியவன், அவள் கொடுத்த தேநீரை பருக,

“நைஸ்..” என்றான்.

அவளிடம் அதற்கு சிறு புன்னகை மட்டுமே.

தேநீர் பருகும் போது, அவளைப் பார்த்துக் கொண்டே பருக, அவளோ கையை பிசைந்து கொண்டு இருந்தாள்.

அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்தவனின் முகத்தில் புன்னகையே பிறந்தது.

காபி கப்பை அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன், “ஓகே.. நிரஞ்சனா.. ஒன்ஸ் அகைன் தேங்க்யூ சோ மச்.  உங்களுக்கு எதுனாலும் என்னை காண்டாக்ட் பண்ணுங்க.. சரி நான் கிளம்புறேன்..” என்றவன் கிளம்பப் போக,

“சார்.. சார்.. ஒரு நிமிஷம்..” என்று சென்றவனை நிறுத்திட,

அவனோ ஒன்றும் அறியாதவன் போல, “சொல்லுங்க நிரஞ்சனா..” என்றான்.

“அது.. அது.. அன்னைக்கு உங்கள ஹாஸ்பிடல்ல சேர்க்கும் போது, என் செயின் மிஸ் ஆகிருச்சு. அது உங்ககிட்ட இருக்கா சார்..” என்று தயங்கி தயங்கிக் கேட்டாள்.

“ஓஹோ.. அப்டியா.. உங்க செயின் எப்படி இருக்கும்..” என்று அவன் எதுவுமே அறியாதவன் போலக் கேட்க,

“சார்.. அது செயின் மாடல் எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனா அதுல ஹார்ட் ஷேப் டாலர் இருக்கும். ” என்றாள் ஆர்வமுடன்.

“ஓஹோ.. இதுவானு பாருங்க..” என்று தன் கழுத்தில் அணிந்து இருந்த அவளது செயினை காட்ட, அவளும் அதைப் பார்த்து விட்டு,

“ஆமா சார்.. இது தான்.. இதே தான்..” என்றாள் தன் செயின் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்.

“ஆனா.. நீங்க ஏன் இதை போட்டு இருக்கீங்க..” என்றாள் குழப்பதுடன்.

“தொலஞ்சி போய்டக் கூடாதுனு தான் கூடவே வச்சிக்கிட்டேன்..” என்றான் இரு பொருள் பட..

“என்ன..  என்ன சொல்ல
றீங்க.. எனக்குப் புரியல..” என்றவளை,

கண்களை மூடி தன்னை சமன் படுத்திக் கொண்டு, அவளை ஆழ்ந்து பார்த்தவன், “உன் நினைவாத் தான் நான் என் கழுத்துல போட்டு இருக்கேன்..” என்றதும், அவள் கனவு தான் நினைவுக்கு வந்தது.

“ச… சார்.. நீங்க என் சொல்ல வரீங்க..” என்றாள் திக்கித் திணறி..

“இன்னுமா உனக்கு புரியல..” அவன் அவளைப் பார்த்து கேட்க,

அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று இருந்தாள்.

பின், தான் கொண்டு வந்த பூச்செண்டை எடுத்து, அவள் அருகினில் வந்து நின்றவன், இப்பொழுது அவளிடம் அதனை நீட்டி, அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து,

“எப்போ எனக்காக அழுது என் உயிரை காப்பாத்துனியோ, அப்போ இருந்து நீ இங்க தான் இருக்க..” என்று தன் இதயத்தைச் சுட்டிக் காட்டியவன், “அப்போ இருந்து உன்ன தான் நெனச்சிட்டு இருக்கேன். உன்ன பார்த்து உங்கிட்ட என் காதலை சொல்லணும்னு தான் இத்தனை நாள் காத்துகிட்டு இருந்தேன்.. உன் பேரு கூட எனக்கு இப்போதான் தெரியும். ஆனால் உன் முகம் அழுத்தமா ஆழமா என் நினைவுலயும் நெஞ்சுலயும் பதிஞ்சிருச்சு.. எனக்கு நீ வேணும் நிரஞ்சனா.. என் வாழ்க்கை முழுக்க நீ வேணும். நீ காப்பாத்துன உயிர். இப்போ உன் காதலுக்காக கை ஏந்தி நிக்குது. என்னை ஏத்துப்பியா நிரஞ்சனா..” என்று உணர்ச்சிப் பெருக்குடன் தன் காதலை அவளிடம் கூற,

அவளோ தர்ம சங்கடமாய் உணர்ந்தாள்.

அவள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்த பரிதிக்கோ, மெல்ல மெல்ல இதயத்தில் மெல்லிய வலி ஒன்று ஊடுருவிக் கொண்டு இருந்தது.

“ஏன் எதுவும் சொல்ல மாட்டேன்ற.. நான் உன்ன நல்லா பார்த்துப்பேன் நிரஞ்சனா.. உன்ன எதுக்காகவும் நான் கலங்க விட மாட்டேன். இது உங்க அப்பா அம்மா மேல சத்தியம். ” என்று கூற,

“சார்.. இது எல்லாம் சரி வராது. உங்க நிலைமை வேற.. எங்க நிலைமை வேற.. உங்க அந்தஸ்துக்கு நாங்க எல்லாம் பக்கத்துல கூட நிக்க முடியாது. இதோ இந்த சின்ன வீடு தான் எங்க அப்பா எங்களுக்காக சேர்த்து வச்ச சொத்து.. உங்க பேரு தெரியும். நீங்க ஒரு கம்பெனிக்கு ஓனர்னு தெரியும். வேற எதுவும் உங்கள பத்தி எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்க சொன்ன உடனே எப்படி நான் ஏத்துக்க முடியும். என்னோட நிலைமையையும் நீங்க கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. ” என்று மனதில் பட்டத்தை அவள் பேசி முடித்து விட,

பரிதிக்கு தான் அவளை நாம் கட்டாயப்படுத்துகிறோமோ என்று தோன்றியது.

மலரை நீட்டிய கரத்தை மடக்கியவன், “ஐ அம் சாரி.. என் காதலை வெளிப்படுத்தனும்னு நெனச்சேன் தவிர, உன் மனசுல என்ன இருக்குனு நான் யோசிக்கல.. இப்போ நான் சொன்னதுக்கு கூட என் மேல ஏதோ ஒரு பிடித்தம் இருக்கறதை உன் கண்கள் மூலமா நான் உணர்ந்தனால தான் சொன்னேன். என் கணிப்பு தவறாப் போயிருச்சு..” என்று ஒரு விரக்திப் புன்னகையுடன் கூற,

அவளுக்கு எப்படி அவளது மனதில் அவன் மேல் உள்ள விருப்பத்தை சொல்வதென்று தெரியவில்லை.

நேரடியாக பார்க்காமல், கனவிலேயே அவனை ரசித்தவள் அல்லவா.

இப்பொழுது அவன் நிஜத்தில் நேரடியாக தன் காதலை கூறும் போது, அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை.

அவளுடைய எண்ணத்தில், ஒருவேளை அவருடைய காதலை தான் ஏற்றுக் கொண்டால், வசதி வாய்ப்பை பார்த்து ஏற்றுக் கொண்டதாக பேச்சு வந்து விட்டால் அவளுடைய காதலுக்கு என்ன அங்கு மரியாதை..

அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அவள் அமைதியாக இருக்கின்றாள்.

அவளுடைய அமைதியைப் பார்த்த பரிதி, “இது தான் உன் முடிவா..” என்றுக் கேட்க,

ஆமாம் என்று தலை அசைத்தாள்.

“நான் ஒன்னு மட்டும் கேக்குறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லுவியா.?? ” என்றிட,

அவளும் என்ன என்பது போல பார்த்தாள்.

“நீ யாரையும் விரும்புறியா… ” என்று அவன் கேட்டதும், அவள் கலங்கி இருந்த விழிளை மூட, பரிதியே வந்து நின்று அவளது எண்ணத்தை ஆக்கிரமித்தான்.

கண்களை மூடியவாரே, ஆமாம் என்று தலை அசைக்க,

அதைப் பார்த்த பரிதிக்கு இதயத்தில் சுள்ளென்ற வலி.

இருந்தும் அவளிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல், “உங்க மனசுல வேற ஒருத்தர் இருக்கும் போது நான் கேட்டது தப்பு. ஐ அம் ரியல்லி சாரி.” என்றவன், “உங்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று கூறிட,

அவளோ புருவத்தை சுருக்கி யோசனையாகப் பார்த்தாள்.

“அதை நான் சொன்னா நல்லா இருக்காது. எங்க அம்மா வருவாங்க. அவங்க சொல்லுவாங்க.” என்று கூறவும், அவரது தாயை வைத்து என்ன பேசப் போகிறார் என்று தான் குழம்பிப் போனாள்.

பரிதி உடனே இனியனுக்கு அழைத்து வரும்படி கூற, அவனோ “எப்படியும் நீ வரச் சொல்லி போன் பண்ணுவேன்னு தெரியும். அதான் நாங்க ஆல்ரெடி கிளம்பிட்டோம். இன்னும் 10m ல வந்துருவோம்..” என்றான்.

“ம்ம்ம்.” என்று கூறிய பரிதி, “வந்துட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க..” என்று அவளிடம் கூறிவிட்டு, வெளியே தனது காரின் அருகில் சென்று நின்று கொண்டான்.

இவளுக்கோ, அவனை காயப் படுத்துக்கிறோமோ என்று தான் தோன்றியது.

அவன் வரும் போது முகத்தில் இருந்த மலர்ச்சி, இப்பொழுது சுத்தமாய் துடைத்து எடுக்கப்பட்டது போல இருந்தது.

அவள் என்னவென்று சொல்லுவாள். இத்தனை நாள் கனவில் உன்னுடன் வாழ்ந்தேன் என்றா கூறுவாள்.

அப்படி கூறினால் அவரின் எதிர்வினை எப்படி இருக்கும்.

தன்னை பார்த்தது கூட அல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி கனவில் என்னைக் காண முடியும். வேறு ஒருவனை நினைத்து விட்டு, நான் கூறியதும், நீ என் கனவில் தினம் தினம் வந்தாய் என்றால் எப்படி நம்புவார்கள்..

சந்தேகத்துடன் ஒரு பார்வை பார்த்து விட்டால், அதை தாங்க முடியுமா..

கதவின் ஓரத்தில் நின்று இருந்தவள் கண்ணீருடன் அவனையேப் பார்த்து இருக்க, அவனோ காரின் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

அவனது வலியை கண்ணீரின் மூலமாவது கரைக்கலாம் என்று எண்ணி தனியாக சென்று உள்ளே அமர்ந்து கொண்டான்.

ஆனால் பெண்ணவள் தான், “என்னை மன்னிச்சிருங்க இளா.. என் மனசுல நீங்க இருக்கீங்க அப்டின்றதை எனக்கு எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியல.. நான் சொன்னா நீங்க நம்புவீங்களா.. மாட்டிங்களோ அதுவும் எனக்கும் தெரியல.” என்றாள் கண்ணீரை சுமந்து கொண்டு.

சிறிது நேரத்தில், இன்னொரு கார் அவளது வீட்டின் வாசலில் நிற்க, பரிதி அவன் காரில் இருந்து வெளியே வந்து அவர்களைப் பார்த்து கை அசைக்க, மற்றவர்களும் அவனது அருகில் வந்தனர்.

கண்ணீரை துடைத்துக் கொண்ட நிரஞ்சனா, வந்தவர்களில் இரு ஆண்களை மட்டும் தெரிந்து இருந்தது.

அன்று மருத்துவமனையில் சந்தித்தது.

உடன் வருபவர்கள் தான் யார் என்று தெரியவில்லை.

பரிதி அனைவரும் அழைத்து வர, அவளுக்குத் தான் ஏன் எதற்கு என்று புரியவில்லை.

இருந்தாலும் வீடு தேடி வந்தவர்களை வாவென்று அழைப்பது தானே மரபு.

“உள்ள வாங்க..” என்று அழைக்க, அவர்களும் உள்ளே சென்றனர்.

மங்களத்தின் கண்ணில் முதலில் பட்டது, அவருடைய தமயனின் புகைப்படம் தான்.

நிரஞ்சனா புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “எப்படி இருக்க ம்மா.. அப்படியே உங்க அப்பா போலவே இருக்க..” என்று கூற,

அவளும், “நான் நல்லா இருக்கேன்ம்மா. ” என்றாள்.

“அம்மா வா. அத்தை னு சொல்லு..” என்று கூறிட,

அவளோ பரிதியைத் தான் பார்த்தாள்.

அவனோ அமைதியாக நின்று இருந்தானே தவிர எதுவும் பேசவில்லை.

மீண்டும் மங்களத்தைப் பார்த்த நிரஞ்சனா,”நீங்க என்ன சொல்றீங்க.. எனக்குப் புரியல..” என்றாள்.

“என்ன டா பரிதி.. நீ எதுவும் சொல்லலையா. ” என்று மங்களம் பரிதியைப் பார்த்து கேட்க,

அவனோ இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான்.

அண்ணனின் செயல்கள் இனியனுக்கு புதிதாக இருந்தது.

அவன் ஆசைப்பட்ட பெண். அருகில் இருந்தும் அவனது முகம் சோகத்தை அப்பி இருந்ததில், ஏதோ சரி இல்லை என்று மட்டும் அவனுக்கு தோன்றியது. பிறகு அண்ணனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

இங்கே மங்களம், ” உன் அப்பா பேரு குரு மூர்த்தி தானே.. ” என்று கூறிட,

இவர்களுக்கு எப்படி தன் அப்பாவின் பெயர் தெரியும் என்று மேலும் குழம்பி தான் போனாள்.

“குரு மூர்த்தி என் சொந்த தம்பி. இது விநாயகம், உன் அப்பாவோட தம்பி.  ” என்று நிறுத்தி நிதானமாகக் கூறிட,

அவளுக்கு என்றோ ஒரு நாள் தன் தந்தையிடம் விளையாட்டாக கேட்டது நினைவில் வந்து போனது.

“அப்பா… எனக்கு தம்பி இருக்கான் ல.
அது போல உங்களுக்கு யாரும் இல்லையா..” என்று சிறுமியாக இருக்கும் போது கேட்டாள்.

“ஏன் இல்லை. எனக்கு ஒரு அக்கா.. ஒரு தம்பி இருக்கானே..” என்றார் அவளது தந்தை.

“அப்போ ஏன் அவங்க இங்க வர்றது இல்லை..” என்று தன் சிறு பிள்ளைத் தனமான சந்தேகத்தைக் கேட்க,

“அவங்க எல்லாம் ஊருல இருக்காங்க. அதான் வரல..” என்று சொல்லி சமாளித்து இருந்தார்.

இப்பொழுது நியாபகம் வர, “அப்போ நீங்க.. எங்க அப்பா கூட பிறந்த அக்காவா..” என்றாள் வார்த்தைகளைக் கோர்த்து.

ஆமாம் என்று புன்னகையுடன் கூறினார்.

அவளது கண்களில் இப்பொழுது மகிழ்ச்சியில் கண்ணீர் வழிந்திட, “ஏன் மா அழகுற.. அதான் நாங்க எல்லாம் இருக்கோமோ.. உனக்கு சொந்த பந்தம்னு இத்தனை பேரு இருக்கோம்.. நாங்க இனி பார்த்துப்போம் உன்னை. ஆமா உன் தம்பி எங்க.. ” என்று விக்ரமை பற்றிக் கேட்க,

“அவன் காலேஜ் போய் இருக்கான்..” என்றாள்.

“சரிம்மா.. அவன் வரட்டும். நம்ம எல்லாம் இனி ஒன்னா இருப்போம். இங்க நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு போயிரலாம்..” என்று மங்களம் அழைக்க,

அவளோ, “இல்லை அத்தை.. இவ்ளோ நாள் இங்க இருந்துட்டு, அங்க எப்படி..” என்று சங்கடத்துடன் கேட்டாள்.

“ஏன் மா.. அதுக்கு என்ன..” என்க,

“இந்த வீடு அப்பாவோட உழைப்பு.. இதை விட்டுட்டு எனக்கு அங்க வந்து தங்குறதுல எனக்கு அந்த அளவுக்கு உடன்பாடு இல்ல..” என்றாள்.

“அட என்ன ம்மா.. குரு தான் எங்க கூட இல்லாம போய்ட்டான். அவன் பசங்கள நாங்க அப்படியே விட்டுற முடியுமா.. இனிமேல் ஆச்சும் எங்க கூட வந்து தாங்குங்க மா..” என்று விநாயகம் கூறிட,

அவள் எதுவும் அதற்கு பதில் பேசவில்லை.

வைஷ்ணவியோ, ” அக்கா.. வாக்கா..தனியா இங்க இருக்கிறதுக்கு எங்க கூட வந்து இருக்கலாம்ல. இப்போ எதுக்கு இவ்ளோ தயங்குறீங்க நீங்க.. ” என்று வைஷு கேட்க,

பரிதிக்கும் தெரியும். நிரஞ்சனாவுக்கும் தெரியும். அவளின் தயக்கம் எதற்காக என்று..

“அப்படி இல்லை.. இருந்தாலும்..” என்று இழுத்திட,

“நீ வா த்தா நம்ம வீட்டுக்கு. கடைசி காலத்துல என் தம்பி பிள்ளைங்களோட இருந்துக்கிறேனே..” என்று கெஞ்சுவது போலக் கேட்க, அவளுக்கு மேலும் மேலும் மறுத்து அவர்களை கஷ்டப் படுத்த விரும்பாமல், “சரி.. வரேன்..” என்றாள்.

பரிதியோ ஒரு ஆச்சர்யப் பார்வை தான். அதுக்கு மேல் அவன் எதுவும் தலையிடவில்லை.

பிறகென்ன, அங்கேயே மதிய உணவை முடித்து விட்டு, மாலை போல விக்ரம் வந்ததும் அவனிடம் விஷயத்தைக் கூற, அவனுக்கோ ஒரே குஷி தான்.

நடுவில் வேலை இருக்கிறதென்று பரிதியும் இனியனும் கிளம்பி விட்டார்கள்.

மாலையில் புறப்படும் போது வந்து அழைத்துச் செல்வதாக கூறி இருந்தான் பரிதி.

அது போலவே மாலையில் அவன் வந்திட, நிரஞ்சனாவும் விக்ரமும் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

நிரஞ்சனாவோ புடவை உடுத்தி இருந்தாள்.

அவளை அப்படிப் பார்த்து சந்தோசப் படக் கூடிய நிலையில் அவன் இல்லையே.

ஒரு விரக்தியுடன் அனைவரைம்யும் அழைத்துச் சென்றான்.

காரில் செல்லும் போது பரிதி அமைதியாகவே இருக்க, அந்த மௌனம் ஏனோ அவளை வாட்டி வதைத்தது.

விக்ரமும் வைஷுவும் நன்றாக இணைந்து கொண்டார்கள்.

இருவரும் சேர்ந்து பின் சீட்டில் அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள்.

நிரஞ்சனாவுக்கு அப்பொழுது தான் ஒரு கேள்வி உதயமாக அதை அருகில் இருந்த மங்களத்திடம் கேட்டாள்.

“நான் தான் உங்க தம்பிப் பொண்ணுனு எப்படி கண்டு பிடிச்சீங்க..” என்று கேட்க,

அவரோ சிரிப்புடன், ” பரிதி போட்டு இருக்கானே செயின் அதை நான் இன்னைக்கு தான் பார்த்தேன். பார்த்ததும் கண்டு பிடிச்சிட்டேன்.” என்று கூற,

அவளோ, ” எப்படி.. ” என்க,

“எப்படி னா, அந்தச் செயின் அவனுக்கு நான் போட்டு விட்டது. அவன் பிறந்தநாள் பரிசா ஒரு தடவை அவன் போட்டோவை மட்டும் வச்சிக் கொடுத்தேன். கல்யாணம் ஆன பிறகு உங்க அம்மா போட்டோவையும் சேர்த்து வச்சிக்கிட்டான் போல..” என்று சிரிப்புடன் கூறினார்.

“ஓஹோ..” என்று மட்டும் முடித்துக் கொண்டாள்.

வீட்டிற்குச் சென்றதும், மல்லிகா உள்ளே சென்று ஆரத்தி எடுத்து வர,  அவளை வெளியே நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரம் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பேச்சுவாக்கில் இன்று பரிதிக்கு பிறந்தநாள் என்பதும் தெரிய வந்தது நிரஞ்சனாவுக்கு.

இப்பொழுது மேலும் அதிக குற்ற உணர்ச்சியாக உணர்ந்தாள் அவள்.

இவர்களின் சம்பாசனையை மேலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர கலந்துகொள்ளவில்லை அவன்.

நிரஞ்சனாவுக்கு அவள் அறையை காண்பிக்க, அதுவோ பரிதியின் பக்கத்து அறை.

விக்ரம் கீழே தங்கிக் கொண்டான்.

இரவு உணவு எடுத்துக் கொண்ட பின் அவர் அவர் அறைக்குச் செல்ல, இனியனோ நேரம் தாமதமாகத் தான் வந்து சேர்ந்தான்.

பரிதி தூங்காமல் தோட்டத்து பக்கம் இருக்க, அவனோ அண்ணனை கண்டு விட்டு, அவனது அருகில் வந்து, “என்ன ண்ணா.. ரொம்ப நேரம் ஆச்சு.. இன்னும் இங்கேயே இருக்க.. ” என்று கேட்டிட,

“சும்மாதான். தூக்கம் வரல..” என்றான்.

“நானும் உன்ன காலையில இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். நீ நிரஞ்சனா கிட்ட பேசப் போனியே என்ன ஆச்சு..” என்று கேட்டிட,

அவனிடம் வெற்றுப் புன்னகை மட்டுமே.

“என்ன சிரிக்கிற..” என்று தம்பிக்காரன் கேட்டிட,

“அவ மனசுல வேற ஒருத்தரை நெனச்சிட்டு இருக்கா.. அது தெரியாம நான் போய்.. ச்ச..” என்று தன்னையே நொந்து கொண்டான்.

“என்ன சொல்ற..” என்று அவன் கேட்க,

“ஆமா.. அவளே சொன்னா..” என்றான்.

“அண்ணா.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இதுல அவங்கள பக்கத்துலயே வச்சிக்கிட்டு..ப்ச்.. மனசை விட்டுறாத.. விடு பார்த்துக்கலாம்..” என்று கூறி விட்டு அவன் உள்ளே சென்று விட்டான்.

அவன் இப்படி இருக்க, அவளோ அவளது அறையின் பால்கனியில் நின்று வெளியே இருக்கும் இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நித்தமும் வருவாள்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்