
அத்தியாயம் 26
அடுத்து வந்த நாட்களில்….
இன்னும் மூன்று நாளில் ஐவி கிளம்ப வேண்டிய நிலையில், அதற்கு தயாராகினர். ஆறு குரூப்பிற்கு இதுவே முதல் ஐ வி. மொத்தம் இரண்டு நாட்கள், மைசூர் கிளம்பினர்.
மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் மற்றும் ஃபைனல் இயர் மாணவர்களுக்கும் மொத்தம் மூன்று நாட்கள். தாங்கள் ஊட்டி போவதாக ப்ரகலத்தன் சொல்லியிருந்தான், இவர்கள் கிளம்பும் முந்தைய நாள் தான் கிளம்ப இருந்தனர்.
2 நாட்களுக்கு தேவையான ட்ராலி, ட்ரஸ், ஸ்னாக்ஸ், ஸ்வெட்டர், ஸ்லிப்பர் என எல்லாம் ப்ளான் செய்து எடுத்து வைத்திருக்க, ஜெயந்தி தானாகவே அவர் செல்லை கொடுத்து, “அப்பா செல் என்ட்ட இருக்கட்டும், நீ இரண்டு நாளுக்கு மட்டும் இத கொண்டு போ” என கொடுத்தார்.
அது அவளுக்கு டபுள் சந்தோஷத்தை கொடுத்தது. முதல் வேலையாக ப்ரகலத்தனிடம் அதை இன்பார்ம் செய்து விட்டாள். கிளம்பியதிலிருந்து அவனுக்கு பஸ் எந்த செக்கெண்ட கிளம்பியது, எந்த சீட்டில் அமர்ந்திருக்கிறாள், பஸ்ஸில் என்ன சாங் ஓடுகிறது, என்ன சாப்பிடுகிறாள், என லைவ் கமெண்ட்ரிக் கொடுத்துக் கொண்டே கிளம்பினாள்.
ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பமாகியது அவர்களது ஐ வி ( I.V, இன்டஸ்ட்ரியல் விசிட்)., பஸ்ஸில் ஓடிய பாட்டிற்கு, வெட்டி வெட்டி இழுப்பதுபோல் ஒரு கூட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்றால், நிற்கக் கூட தெம்பில்லாமல் நிலா, லட்சு, அமலா மூவரும் பஸ் ஆடிய ஆட்டத்திற்கு விழுந்தெழுந்து கொண்டிருந்தனர்.
லட்சு, “ஆறு ௭றும, முன்ன பின்ன மொபைலயே காணாதவ மாதிரி அதயே நோண்டிட்டு கடக்க, ௭ந்துச்சு வாயேன், கம் போட்டாக்குல இடத்த விட்டு அசையாம உக்காந்துட்ருக்க” ௭ன்க.
“உக்காந்துட்டு வர்றதுக்கே போய் இறங்குறதுக்குள்ள எத்தன தட வாமீட் பண்ணுவேனோ?, இதுல நின்னுட்டு வந்து உங்கள மாதிரி வீரசாகசம் வேற தேவையா?” ௭ன்றாள் அப்போதும் செல்லை பார்த்து கொண்டு குனிந்தே.
“வாமிட் வருதா, ஏன் முழுகாம இருக்கியா?” என்றாள் ஆடிக்கொண்டே லட்சு.
நிமிர்ந்து முறைத்தவள் “செத்தடி இன்னைக்கு நீ” என வரிந்து கட்டிக் கொண்டு எழுந்து வந்தாள், அதன் பின் அவளை உட்கார விடாமல் செய்த பலன் முழுவதும் லட்சுவுக்கே.
விடிய விடிய ஆடி கலைத்து, விடியற்காலை 3 மணியளவில் வந்து இறங்கினர், மைசூரில் அவர்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு.
“கால் வலிக்குதுடி” என முனங்கியவாறே ஆறு இறங்க, கெட்ட ஆவியை வெளியேற்றியவாறே பின் இறங்கினாள் லட்சு.
நால்வருக்கு ஒரு அறை என ஒதுக்கப்பட, இவர்கள் நால்வரும் ஒரு அறை கீயை வாங்கிக்கொண்டு நகர.
“காலைல 7 மணிக்கு ரெடியா இருக்கணும்னு சுகந்தி மேடம் சொல்லுதே, எப்டி முடியும்? நடக்கிற காரியமா அது” என அமலா சலிக்க.
“ஒவ்வொரு ரூமா எழுப்பிவிட்டு எல்லாரும் கிளம்பி வாரதுக்குள்ள எப்டியும் 10 மணி ஆகிரும், சோ அதுவர தூங்கிக்க வேண்டியதுதான்” இது ஆறு.
ரூமினுள் நுழைந்தவாறு பேக்கை அக்காடா ௭ன போட்டுவிட்டு மெத்தையில் மல்லாந்துவிட்டவள், “விட்டுட்டுக் கிளம்பி அதுபாட்டுக்கு போயிற போகுதுடி, அப்பப்ப நாந்தான் ரெப்ன்றத மறந்து விடுறேல், மொதல்ல வந்து நம்ம ரூம தான் மிஸ் தட்டும், ௭ன்னைய தான் ௭ல்லா ரூம்லயும் போய் நம்ம பிள்ளைகள ௭ழுப்ப சொல்லுவாங்க, நா ௭ன்ன பண்ணுவேன்னு உங்களுக்கே தெரியும்” என்றாள் லட்சு.
“௭ன்ன பெருசா பண்ணுவ, ௭ங்க உயிர வாங்குவ” நிலா திட்ட.
“சரியான இம்சைடி உன்னோட, உன்ன மொத வருஷம் தானடி நா ரெப்பா இருக்க சொன்னே. இந்த டிபார்ட்மென்ட்குள்ள நுழைஞ்சப்புறமு எதுக்குடி ரெப்புக்கு எந்திச்ச?” ௭ன லட்சு மேல் விழுந்து பொத்தென அடித்தாள் ஆறு.
அவளை கீழே தள்ளி, “அம்மாடி வயிறு……செருப்பு பிஞ்சிரும் நாயே. ஃபேக்கல்டி வந்து கேட்டப்ப எவடி கைய தூக்குனிங்க, அதனால அவர் லாஸ்ட் இயர் இருந்தவங்க ரெப்பா இருங்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு. எல்லாத்துக்கும் காரணம் நீதான்” ௭ன திரும்பி பார்க்க, அடுத்தடுத்து படுத்திருந்த மூன்றும், இவள் இதை நீட்டி முழங்கும் முன் உறங்கி இருந்தது.
அந்நேரம் ஆறு போன் அவள் பேக்கில் இருந்து வைப்ரேட் ஆக, அதை தேடி எடுக்க “ப்ரகலத்தன்” என வர, அட்டன் செய்து வந்து சேர்ந்ததையும், கதவை லாக் பண்ணாமல் மூன்றும் மல்லாந்ததையும் சொல்லிவிட்டு அவன் தங்கி இருக்கும் ஹோட்டலையும் அறிந்துகொண்டு படுக்கச் சென்றாள் லட்சு.
காலை 5:00 மணி ரூம் பெல் சத்தம் காதை கிழித்தும், எங்கோ, யாருக்கோ என உறங்கினர் நால்வரும். போன் வைப்ரேட் ஆகியது, காலிங் பெல் சத்தமே அவர்களை எழுப்ப முடியாத நிலையில், போன் வைப்ரேஷன் எப்டி அவர்களை அசைத்து விட முடியும். பத்து நிமிட போராட்டத்தின் பயனாய் நிலா தான் லேசாக அசைந்து கொடுத்தாள்.
“மேடம் வந்துட்டாங்க, ௭ல்லாரயும் எழுப்ப ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன், எந்திரிங்கடி” என்றாள் பக்கத்தில் இருந்த ஆறுவை அசைத்து.
“வரிசையா எல்லோரும் போய் குளிச்சிட்டு கடைசியா வந்து என்ன எழுப்புங்க, ஓகேவா?” என திரும்பி படுத்தாள் ஆறு.
காலிங் பெல் விடாமல் அடிக்க, “போய்க் கதவைத் திறங்கடி தல வலிக்குது” என லட்சு ஓங்கி ஆறுவை அடிக்க, “ஏன் நீ போய் தொறந்தா என்னவாம்?” என அவள் அடித்த வலியால் வந்த எரிச்சலில் லச்சுவை ஓங்கி எத்தி உருட்டித் தள்ளி விட்டு எழுந்து சென்றாள் ஆறு.
சுகந்தி மேடத்தை எதிர்பார்த்து கதவை திறக்க, நின்றிருந்தது ப்ரகலத்தன், “குட் மார்னிங் மேடம்” என சொல்ல வந்தவள், குட்டில் ட்ராப் ஆகி விழியை பெரிதாக்கி “ப்ரசிடெண்ட்” என வாயை பிளந்தவள். கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, “நிஜம்தான், நீங்க எப்டி இங்க?”.
கலைந்த தலையுடன், விடிய விடிய தூங்காததினால் வீங்கிய முகத்துடன், குழந்தையாய் கண்ணை உருட்டுபவளின் பாவனையில் அவளை அள்ளி கொள்ளும் ஆசை வர, அதை தனக்குள்ளேயே அடக்கி அவள் செய்வதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவன், “உன்ன எழுப்புறது இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, இந்த பிளானயே ட்ராப் பண்ணிருப்பேன், முடிவ மாத்திட்ருப்பேன், இங்க வந்துருக்கவும் மாட்டேன்” என்றான்.
“3 மணிக்குதான் வந்து படுத்தோம் தெரியுமா?”.
“ஊர் சுத்ததான வந்த, தூங்கவா வந்த?”.
“சரிதான், ஊட்டி தான உங்களுக்கு ஐ. வி ஊட்டியிலருந்து என்ன பாக்கவா வந்தீங்க?” அவள் ஆர்வமாக கேக்க.
“இது ஓவர் இமாஜினேஷனால இருக்கு. பக்கத்து ஹோட்டல்ல இருந்து தான்மா வந்துருக்கேன்”.
“அப்போ ஊட்டி?” என்றாள் குழப்பமாக.
“ஊட்டி வைரம் கிளாஸ் தான் போறாங்க. நாங்க மைசூர் தான் பிளான் பண்ணோம்”.
“அப்போ எனக்காக தானே பக்கத்து ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிங்க”.
“அது ஆக்சிடென்ட்டா நடந்த இன்சிடென்ட்”.
“லையர்” என அவள் முனங்க.
“பல்பு பிரகாசமா தான் எரியுது, போ சீக்கிரம் ரெடியாகு. இவங்க எல்லாம் கிளம்பும் முன்ன நாம கிளம்பணும்”.
“நாம தனியாவா?” அவன் தலையை அசைக்க.
“ஓமை காட்! ஓமை காட்! ரூல்ஸ் பிரேக் பண்ணாத ப்ரெசிடெண்ட் ரூல்ஸ் பிரேக் பண்ணப் போறாறா? என் மாமியார், உங்க மாமியார்ட்டெல்லாம் பெர்மிஷன் வாங்கியாச்சா?” என்றாள் ஓவர் குஷியில்.
“கத்தி எல்லாரயும் எழுப்பிடாத எழில். லட்சுட்ட மேனேஜ் பண்ண சொல்லிட்டு கிளம்பி வா, ஈவினிங் ரிட்டன் ஆயிடலாம்”.
“அப்போ சுகந்தி மேடம்……” என இழுத்தாள்.
“பார்றா ஆறெழிலுக்கு பயமா இருக்கா?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“கிடைச்ச சான்ஸை விடுறதாயில்ல. லட்சு சமாளிப்பா எதையும்” என்றாள், உள்ளே அந்த ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தைரியத்தில்.
உள்ளே செல்ல திரும்பியவள், நின்று “பின்ன என்ன கலர் டிரஸ் போடட்டும்” ௭ன்க, அவன் முறைக்க, “ஓ! சாரி, நா எந்த கலர் எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்கு தெரியாதுல்ல. நீங்க ஒயிட் சர்ட் போட்டுருக்கீங்க, என்கிட்டயும் ஒரு ஒயிட் டாப் இருக்கு அதை போட்டுட்டு வரட்டா?” என்க.
“படுத்தாம கெளம்பி வாமா ப்ளீஸ், என்ன டென்சன் ஆக்காத, எல்லோரும் எந்திச்சுட்டா என்னால உன்ன கூட்டிட்டு போக முடியாது”.
“சரி சரி 10 மினிட்ஸ் ஓடி வந்திடுறேன்” என உள்ளே ஓடினாள்.
லைட்டை போட்டு வேகமாய் பெட்டியை இழுத்து, அந்த ஒயிட் சுடியோடு குளிக்கத் தேவையான பொருள்கள் சகிதம் பாத்ரூமை நோக்கி ஓடினாள். ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் போட்டு குளித்து முடித்து வந்து மேக்கப் செய்து திரும்ப, இவள் தள்ளியதில் கீழே விழுந்த லட்சு பொஷிசன் மாறாமல் அப்படியேதான் உறங்கிக்கொண்டிருந்தாள்.
“அடக் கிரகமே” என தலையிலடித்து கொண்டவள், “லட்சு எந்திரிடி, மணி ஆறு ஆச்சு எந்திரி லட்சு” என அடித்து அடித்து ஒரு வழியாக ௭ழுப்ப, அவள் எழுந்து இவளை கண்டு விட்டு, “ஹே ஆறு சினிமால காட்டுவாங்களே ஒயிட் டிரஸ் போட்டா ஏஜ்ஜல்ஸ், நம்ம சந்தோஷ் சுப்பிரமணியம் சுஹாசினி கூட சொல்வாளே அப்டி இருக்க. ஆமா நடுராத்திரில எங்க கிளம்பிட்ட?” என்றாள்.
“நாம ஐ வி வந்தது ஞாபகம் இருக்கா? 7 மணிக்கு மேம் கெளம்பிருக்க சொன்னாங்கள்ள?” ௭ன்க.
“ஆமால்ல..” ௭ன அலுப்பை வெளியேற்றியவள், படக்கென சுதாரித்து சந்தேகமாக, “ஆனா நீ இவ்வளவு நல்லவ இல்லையே?” என முழுதாக தூக்கம் தெளிந்து எழுந்து கேட்க.
“நா சொல்றத கவனமா கேளு. நம்ம ப்ரசிடெண்ட் இல்ல, அவங்க மைசூர் தான் வந்துருக்காங்க”.
“அதான் தெரியுமே….” லட்சு அசால்ட்டாக சொல்ல.
“என்னது தெரியுமா?”.
“ஆமா உனக்கு தான் தெரியாது, மத்த எங்க எல்லாருக்கும் தெரியும். ஏதோ சர்ப்ரைஸா இருக்கட்டும் சொல்லாதன்னு சொன்னாங்க, அதான் சொல்லல. ஆமா நா எப்ப கீழே போய் படுத்தேன். உருண்டு விழுந்துட்டேனா?” ௭ன்றாள் யோசனையாய்.
“பின்ன நானா உன்ன எத்தி தள்ளுனே?. இப்ப அதுவா முக்கியம். ஏன்டி அவுங்க வந்தத மொதயே என்ட்ட சொல்லல. அவங்க சொன்னா அத அப்டியே கேட்டுட்டு. சொல்ல மாட்டியோ?” என நறுக் நறுக்கென ரெண்டு கொட்டு கொட்ட, அவள் போன் வைப்ரேட் ஆகியது.
தலையை தடவிக்கொண்டே, “அத டோன்ல வச்சாதான் என்ன? எதுக்கு வைப்ரேஷன்ல போட்டு வச்சுருக்க”.
“அத சொன்னா உனக்கு புரியாது” என்றவள் போனை அட்டெண்ட் செய்து,
“கிளம்பிட்டேன் ப்ரசிடெண்ட், லட்சுட்ட சொல்லிட்டுருக்கேன், வந்துடுறேன்”.
“ஓ! ப்ரசிடெண்ட். அவங்கள பாக்க போறியா? அதுக்கு தான் இவ்வளவு மேக்கப்பா? ஆனாலும் ஒரு பத்து நிமிஷத்து சந்திப்புக்காகனாலும் குளிச்சிட்டு மேக்கப் போட்ட ஒன் நேர்மையா நா பாராட்டுறேன்டி” என்றாள் அலுப்போடு.
“உன் மூஞ்சி கொஞ்ச நேரம் வாய மூடுறியா ப்ளிஸ். இந்தா இந்த போன நீயே வச்சுக்க, நானும் ப்ரெசிடெண்ட்டும் தனியா மைசூர சுத்தி பாக்க போறோம். இண்டஸ்ட்ரில மட்டும் ப்ரசண்ட் போட்டுக்க, மத்த இடத்துல சமாளிச்சுக்க. நீ பெரிய ஆளு சமாளிப்ப, இருந்தாலும் சொல்றேன். எதுனாலும் ப்ரெசிடெண்ட் செல்லுக்கு கால் பண்ணு, பை” என பட படவென
ஆறு கூறி திரும்ப போக.
அவள் பேசுவது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேந்த பேந்த முழித்தாள் லட்சு.

