
அத்தியாயம் 25
மென்மொழியின் நினைவுகளை மீட்டெடுத்த யுகேந்திரன், அவற்றை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டான்.
அதைக் கேட்ட யாழ்மொழி, “அப்போ அகரனோட இந்த மாற்றத்திற்குக் காரணம் அந்தக் கருப்புக் கல் தானா?” என்று வினவ, “ஹ்ம்ம், எனக்குத் தெரிஞ்சு, அந்தக் கல் உங்க அண்ணனோட அடைய முடியாத ஆசைகளை தூண்டியிருக்கும். பதிலுக்கு உங்க அண்ணனை வச்சு அது நினைக்கிற காரியத்தைச் சாதிக்க பார்க்குது. மியூச்சுவல் பெனிஃபிட் மாதிரி!” என்றான் யுகேந்திரன்.
“ம்ம்ம், ஆனா அதை எப்படி தடுக்குறதுன்னு தாத்தா சொல்லலையே.” என்ற சுடரொளி, மென்மொழியிடம், “அதுக்குள்ள உன்னை யாருடி தூங்கச் சொன்னது?” என்று சண்டைக்குச் சென்றாள்.
இருவருக்குள்ளும் வாய் போர் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் ஆண்கள் மூவரும் அடுத்து என்ன என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
“மும்பைல இருக்க அந்த சீக்ரெட் பிளேஸ்ல ஏதாவது தகவல் கிடைக்கலாமே.” என்று மதுசூதனன் கூற, “ எனக்கும் அதுதான் தோணுது. நேத்து அகரன் அந்த இடத்துல இருந்து வெளிய வந்தப்போ, ஏதோ ஒண்ணைத் தெரிஞ்சுகிட்ட பாவனை அவன் முகத்துல தெரிஞ்சுது.” என்று யுகேந்திரன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனிற்கு செல்வாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“சார், நேத்து நீங்க சொன்ன இடம், நைட்டோட நைட்டா தீயில மொத்தமா கருகிடுச்சுன்னு நியூஸ் வந்துச்சு. உங்களுக்கு தேவைப்படுமோன்னு இந்த விஷயத்தைச் சொல்லத்தான் கால் பண்ணேன் சார்.” என்று மறுமுனையில் பேசிய செல்வா கூற, அவனிற்கு நன்றியைத் தெரிவிக்கும் வேளையில், “சார், ஏசிபி உங்க கிட்ட பேசணும்னு சொன்னாரு. உங்களை நேர்ல வந்து பார்க்கச் சொன்னாரு சார்.” என்றும் செல்வா கூற, யோசனையுடனே அழைப்பைத் துண்டித்தான் யுகேந்திரன்.
மற்ற இருவருக்கும் விஷயத்தை அவன் பகிர, “நேத்து அகரன் இருந்த இடம் இன்னைக்கு அழிஞ்சுருக்குன்னா…” என்று இன்பசேகரன் பாதியில் நிறுத்த, “அவனுக்குத் தேவையானது அங்க இல்ல. ஆனா, நமக்குத் தேவையானது அங்க இருந்துருக்கு.” என்றான் யுகேந்திரன்.
“எதுக்கும் அங்க போய் செக் பண்ணுவோமா?” என்று மதுசூதனன் வினவ, “எனக்கு ஒரு வேலை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சுடரைக் கூட்டிட்டு அங்க போயிட்டு வாங்க. ஆனா, கேர்ஃபுல்லா இருங்க. அகரன் அங்க நமக்காகக் காத்திருக்கலாம். அகரன் அங்க இருந்தா, அவனை எதிர்க்க நினைக்காதீங்க. உடனே, அங்க இருந்து கிளம்பிடுங்க.” என்று எச்சரித்து விட்டே அவனது உயரதிகாரியைப் பார்க்கச் சென்றான்.
*****
உதவி காவல் ஆணையரின் அறை…
உயரதிகாரிக்கு சல்யூட் வைத்து விறைப்பாக நின்றான் யுகேந்திரன்.
அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறே, “ஆக்சிடெண்ட்னு சொன்னீங்களே யுகேந்திரன்… இப்போ எப்படி இருக்கு?” என்று வினவினார் அவர்.
அவரின் சந்தேகப் பார்வையை கண்டு கொண்ட யுகேந்திரனோ பதற்றமே இல்லாமல், “இப்போ ஓகேதான் சார்.” என்றதோடு முடித்துக் கொண்டான்.
“ஹ்ம்ம், நேத்து நீங்க அந்த ஆர்க்கைவ்ஸுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம், அந்த இடத்தோட நிலைமை இது.” என்று மடிக்கணினியில் ஒரு புகைப்படத்தைக் காட்டியவர், “இதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று வினவினார்.
யுகேந்திரனோ சற்றும் சளைக்காமல், அந்தப் புகைப்படத்தை ஒரு முழு நிமிடம் பார்வையிட்ட பின், “நோ ஐடியா சார்.” என்றான்.
“ஓஹ், இதை மறைக்கச் சொல்லி மேலிடத்துல இருந்து பயங்கர பிரஷர். அதான் உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்கக் கூப்பிட்டேன்.” என்று அவனைக் கூர்ப்பார்வை பார்த்துக் கொண்டே அவர் கூற, “ஏதாவது தகவல் தெரிஞ்சா உங்களுக்கு சொல்றேன் சார்.” என்றான் அவன்.
“ஹுஹும்… அப்புறம் நேத்து நீங்க எங்க இருந்தீங்க?” என்று மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டே அவர் வினவ, அவரின் மனதைப் படித்து விஷயத்தை முன்னரே அறிந்து கொண்ட யுகேந்திரனோ, “ஃபிரெண்டு வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன் சார்.” என்றான்.
“ஓஹோ, நான் கூட நீங்க மும்பைல இருந்தீங்களோன்னு நினைச்சுட்டேன்.” என்று மும்பையில் இருந்த அந்த ரகசிய இடத்தில், யுகேந்திரன், மென்மொழி, இன்பசேகரன் மற்றும் அகரன் நின்றிருந்த காட்சி புகைப்படமாக இருந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான புகைப்படம் என்பது அதைக் காணும்போதே தெரிந்தது. சற்றுத் தொலைவிலிருந்து எடுத்திருந்ததால், யாரின் முகமும் தெளிவாகத் தெரியவில்லை.
அதைக் கண்ட யுகேந்திரன் கேள்வியாக அவரை நோக்க, “இது இன்னைக்கு மார்னிங் என்னோட பெர்சனல் மெயிலுக்கு வந்த ஃபோட்டோ. ஏதோ ஸ்பேம்னு நினைச்சு விட்டுட்டேன். ஆனா பாருங்க, இந்த இடத்துல நேத்து நைட்டு தீ விபத்து நடந்துருக்கு. அதுவும், இந்த ஃபோட்டோல இருக்க டைமுலயிருந்து அரை மணி நேரம் கழிச்சு நடந்துருக்கு. சம்திங் ஃபிஷி!” என்றார் அவர் யுகேந்திரனைப் பார்த்துக் கொண்டே.
“சார், இந்த சிசிடிவியை செக் பண்ணா, அது ஆக்சிடெண்ட்டா இல்ல பிளான்ட்டான்னு தெரியுமே.” என்று அவரின் சந்தேகப் பார்வையைக் கண்டு கொள்ளாமல் அவன் கூற, “இந்த சிசிடிவி மட்டுமில்ல, இதைச் சுத்தி இருக்க எல்லா சிசிடிவியோட வீடியோஸும் டெலிட் பண்ணப் பட்டிருக்கு. யாரோ நல்லா பிளான் பண்ணி செஞ்ச மாதிரிதான் இருக்கு.” என்றார் அவர்.
“மேபி சார்… ஆனா, இது மும்பை போலீஸ்தான விசாரிக்கணும்…” என்று அவன் இழுக்க, “ஹ்ம்ம், எனக்குக் கிடைச்ச இந்த ஃபோட்டோவை மும்பை போலீஸுக்கு அனுப்பலாம்னு நினைக்கிறேன்.” என்று அவர் அவனை ஆழம் பார்க்க, “ஸ்யூர் சார். இதுல என்னோட ஹெல்ப் ஏதாவது தேவைப்படுதா?” என்று பவ்யமாக வினவினான்.
“இப்போதைக்கு இல்ல. தேவைன்னா கூப்பிடுறேன்.” என்றவருக்கு மீண்டும் ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியேறினான் யுகேந்திரன்.
அவன் மனதிலோ, ‘இது நிச்சயம் அகரனின் வேலைதான்!’ என்ற எண்ணம் உறுதி பெற்றது.
*****
யுகேந்திரன் சொன்னதைப் போல, மதுசூதனன், இன்பசேகரன் மற்றும் சுடரொளி ஆகிய மூவரும் மும்பையிலுள்ள அந்த ரகசிய இடத்திற்கு வந்திருந்தனர்.
முன்தினம் ஆளரவமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த இடம், இப்போது காவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் நிறைந்திருந்தது.
தொலைவிலிருந்து அதைக் கண்ட மூவரும் சுடரொளியின் சக்தியின் மூலம், யாரின் பார்வைக்கும் தென்படாமல் மறைந்தபடி, அந்த இடத்திற்குள் நுழைந்தனர்.
“ரெண்டு பேரும் என்னைக் கெட்டியா பிடிச்சுக்கோங்க. எதையாவது தேடப் போறேன், தனியா போறேன்னு அதிகப்பிரசங்கித்தனமா எதுவும் செஞ்சு, என்னை மாட்டி விட்டுடாதீங்க!” என்று அவர்களைக் கடத்துச் செல்லும் காவலர்களைப் பயப்பார்வை பார்த்தபடி கூறினாள் சுடரொளி.
காலையிலிருந்து அவ்விடத்தை ஆய்வு செய்த காவலர்கள் சிறிது இடைவேளை எடுத்திருக்க, அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர் மூவர் குழு!
எரிந்து போன பல பொருட்களால் அந்த இடமே நிரம்பி இருந்தது. எங்குப் பார்த்தாலும் கருநிற சாம்பல் துகள்களே காட்சியளித்தன.
“இப்போ எல்லாம், கருப்புக் கலர்ல எதைப் பார்த்தாலும் அவர்ஷனா இருக்கு. சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு இங்கயிருந்து கிளம்புவோம் வாங்க.” என்று அவசரப்படுத்தினாள் சுடரொளி.
“பொறுமையா இரு சுடர். நமக்கு தேவையானது இங்க இருக்கலாம்.” என்று இன்பசேகரன் கூற, “எது… இந்த எரிஞ்சுப் போன சாம்பல் குவியலுக்குள்ளயா?” என்று வாதம் செய்தாள் சுடரொளி.
“கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்திட்டு இங்க வாங்க.” என்று அழைத்த மதுசூதனன், அந்த குவியல்களிற்கு மத்தியில் பாதி எரிந்த நிலையில் இருந்த சில காகிதங்களைக் காட்டினான்.
அதைக் கையில் எடுத்த சுடரொளி, அந்தப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்து, “இது ஏதோ சயின்ஸ் சம்பந்தப்பட்டது. ஸ்கூல்ல படிச்ச பிரிஸம் பிராஜெக்ட் எல்லாம் இருக்கு… இது எப்படி இங்க வந்துச்சு?” என்று கேட்க, அதற்கு அவர்கள் மறுமொழி கூறுவதற்குள், அந்த அறையின் வாயிலில் யாரோ கத்தும் சத்தம் கேட்க, அந்த மூவரின் கவனமும் அங்கு சென்றது.
அங்கு ஒரு இளம் காவலன் எதையோ கண்டு பயந்து கத்தி மயங்கி விழுந்து விட்டதைப் பார்த்த சுடரொளியோ, ‘இது என்ன ரியாக்ஷன்?’ என்றபடி மற்ற இருவரையும் பார்க்க, அவர்களோ தலையிலடித்துக் கொண்டனர்.
“நீ மறைஞ்சு இருக்கியே… உன் கையில இருக்க டாக்குமெண்ட்டை யாரு மறைப்பா? அவனுக்கு டாக்குமெண்ட் மட்டும் கண்ணுக்குத் தெரிஞ்சு, அதைப் பார்த்த பயத்துல மயங்கிட்டான் போல.” என்றான் இன்பசேகரன்.
“என்னாது, கையில இருக்க டாக்குமெண்ட் மறையலையா? ஏன்? எதுக்கு? எப்படி? முன்னாடி எல்லாம் இப்படி இல்லையே!” என்று சுடரொளி குழப்பம் பாதி சந்தேகம் மீதியென்று வினவ, “அதை வீட்டுக்குப் போய் மெல்ல ஆராய்ச்சி பண்ணு. இப்போ வேற யாரும் வந்து பார்த்து பயந்து, ‘இது கோஸ்ட் பிளேஸ்’னு முத்திரை குத்துறதுக்குள்ள இங்க இருந்து கிளம்புவோம்.” என்றான் மதுசூதனன்.
அதன்படி, அவர்களிற்குக் கிடைத்த அந்தப் பாதி எரிந்த காகிதக் கற்றைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர் மூவரும்.
*****
வெகு நேரம் ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியைத் தயக்கத்துடன் பார்த்தபடி இருந்தவன், ஒருவழியாக அழைப்பை ஏற்று, “பாஸ்…” என்று கூற, “இடியட், காலை எடுக்க இவ்ளோ நேரமா?” என்று திட்ட ஆரம்பித்து விட்டான் மறுமுனையில் இருந்தவன்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நீடித்த அந்த திட்டு வாங்கும் படலத்தை முடித்து வைத்தவன், “அங்க என்னதான் நடக்குது? அந்த அகரன் மும்பைல இருக்க நம்ம இடத்தை அழிச்சுருக்கான். என்னதான் நினைச்சுட்டு இருக்கான் அவன்?” என்றவன் பல கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அகரனைத் திட்டி கோபத்தைச் சிறிது தணிக்க முயன்றான்.
தனிந்ததா என்பதற்கான விடை என்னவோ கேள்விக்குறியே!
“பாஸ், இன்னொரு விஷயம்… மும்பைலயிருந்து வந்தவன் நேரடியா பெரிய பாஸைப் பார்க்கத்தான் போயிருக்கான். இன்னும் ரெண்டு பேரும் பிரிஸம் டவர்ஸ் பேஸ்மெண்ட்டை விட்டு வெளிய வரலன்னு தகவல் வந்துருக்கு.” என்று தயங்கியபடியே கூறினான் மற்றவன்.
“என்ன? தாத்தாவைப் பார்க்கப் போயிருக்கானா? அவரு எப்படி இருக்காரு? யூ இடியட்… இதை முன்னாடியே என்கிட்ட சொல்ல வேண்டியதுதான?” என்று மீண்டும் அவன் திட்ட ஆரம்பிக்க, “பாஸ் பாஸ்… பெரிய பாஸ் நல்லாதான் இருக்காரு. அவரேதான் கூட இருக்க செக்யூரிட்டிஸை வெளிய போகச் சொல்லிட்டு அகரன் கூட பேச்சுவார்த்தைல இருக்காராம். வாய்ஸ் கேட்கலைன்னாலும், உள்ள இருக்க சிசிடிவி வீடியோவை செக் பண்ணிட்டுதான் இருக்கோம்.” என்று சமாதானம் கூறியவனின் முகம் கண்முன் தெரிந்த சிசிடிவி காட்சியைக் கண்டு வெளிறியது.
ஏனெனில், அங்கு ஓடிக் கொண்டிருந்தது, அகரன் பிரேம் ரத்தோரின் கழுத்தைப் பற்றி இறுக்கும் பழைய காட்சி.
அதைத் கண்டவனோ, ‘ஹையையோ, இந்த மடப்பயலுங்க சொன்னதை நம்பி பெரிய பாஸுக்கு எதுவும் இல்லன்னு வேற இவருக்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இது தெரிஞ்சா, அந்த அகரனுக்கு முன்னாடி என்னைப் பலி குடுத்துடுவாங்க போலயே!’ என்று மனதிற்குள் பதறியவன், அவனின் முதலாளியை ஓரளவு சமாளித்து விட்டு, அடுத்த வேலையாக ‘பிரிஸம் டவர்ஸ்’ஸில் இருக்கும் காவலர்களிற்கு அழைத்தான்.
அழைப்பை ஏற்றவுடன் விசாரிப்பில் இறங்கியவர்களிடம், “மூர்க்கோன், பஹலே ஜாக்கர் படே பாஸ் சே பூச்சதாச் கர் லோ.” (முட்டாப்பயலுங்களா, முதல்ல போய் பெரிய பாஸைப் பாருங்க) என்று கத்தினான்.
தொடரும்…


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S