Loading

அத்தியாயம் 24

நான்கு நாட்கள் கடந்து இருந்தது. நிரஞ்சனாவிடம் இருந்து பரிதிக்கு எந்த வித அழைப்பும் இது வரை வந்த பாடில்லை..

அன்று தங்கராஜை அனுப்பி வைத்து விட்ட பிறகு, இனியன் பரிதியிடம், “அண்ணா.. நீ போன காரியம் என்ன ஆச்சு.. ” நிரஞ்சனாவைப் பற்றிய தகவல் எதுவும் கிடைத்திருக்கக் கூடுமா  என்ற ஆவலில் பரிதியிடம் கேட்க,

புன்னகையுடன் தம்பியைப் பார்த்த பரிதி, “அவளைப் பத்தின எல்லா டீடெயில்ஸ்யும் கெடச்சிருச்சு.. அவ வீடு எங்க இருக்குனு கூட பார்த்துட்டு வந்துட்டேன்..”,என்றான் ஒற்றைக் கண் சிமிட்டி.

“வாரே வா.. சூப்பரு.. சரி பார்த்தியா அவங்கள.. என்ன சொன்னாங்க… உன்ன அவங்களுக்கு நியாபகம் இருக்கா.. அவங்க செயின் பத்தி எதுவும் கேட்டாங்களா..?? ” என்று கேள்வியாய் அடுக்கிட,

“டேய்ய்.. இரு டா.. ஒவ்வொரு கேள்விக்கா.. பதில் சொல்றேன்..” என்றவன்,

“நீ கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொன்னா, மத்த எல்லா கேள்விக்கும் விடை தெரிஞ்சிரும்..” என்று கூறிட,

அது இனியனுக்கு புரியவில்லை.

“நான் அவளை பாக்கவே இல்லை..” என்று பரிதி கூறிட,

“ஏன்?? ” என்றான் புரியாமல்.

“ஏன் னா.. அவ வீட்டுல இல்லை. வேலைக்கு போய் இருக்கலாம்.. அவ தம்பி காலேஜ் போய் இருக்கான் போல..” என்றான் பரிதி.

“இது எப்படி உனக்கு தெரியும்.” என்று தம்பிக்காரன் விடாமல் கேட்டிட,

“ப்ச்.. பக்கத்து வீட்டுல உள்ளவங்க சொன்னாங்க. என் போன் நம்பர் கொடுத்துட்டு வந்து இருக்கேன் கொடுக்கச் சொல்லி. பாப்போம்..” என்று தம்பியிடம் கூறி விட்டு, அங்கிருந்து கிளம்பி வந்தவன் தான். இன்று வரை அடிக்கடி போன் எடுத்து பார்ப்பதும் வைப்பதுமாகவே தான் சென்று கொண்டிருக்கிறது பரிதிக்கு.

“ஏன் என்ன ஆச்சு.. இதுவரைக்கும் கால் பண்ணவே இல்லையே.. ஒரு வேளை அவ நம்மள மறந்துட்டாளா.. தேவை இல்லனு கார்டை தூக்கிப் போட்டுட்டாளா.. இல்லை அந்த அக்கா கொடுக்க மறந்துட்டாங்களா… ஒன்னும் புரியலையே.. ஒரு வேளை அவ வேற யாரையும்..” என்று நினைத்துப் பார்த்தவனுக்கு நெஞ்சினில் மெல்லிய வலி பரவியது என்னவோ உண்மை.

“ச்ச ச்ச.. அப்படி எல்லாம் இருக்காது. இருந்துரவும் கூடாது..” என்று கூறி தன்னை சமாதானப் படுத்தியும் கொண்டான்.

இதற்கு இடையில், தொழிற்சாலையில், தோல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக அனைத்தையும் தயாரிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

இந்த முறை பழைய மற்றும் புதிய ஊழியர்கள் அனைவரையும் மற்றும் அவர்கள் உள்ளே கொண்டு போகும் பொருட்களையும் சோதித்து விட்ட பின்னே உள்ளே அனுப்பினர்.

அதற்காக குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதற்கான காரணத்தையும் பரிதி தொழிலாளர்களிடம் கூறி இருந்ததால் யாரும் அவனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதே நேரத்தில், மீண்டும் ஸ்டீபனுக்கு அழைத்து பேசி இருந்தான் பரிதி.

தங்களுடைய தயாரிப்புகளின் தரம் குறைந்ததற்கான காரணத்தைக் கூறி, அந்த தயாரிப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டதாகவும், வேண்டும் என்றால் தாங்கள் வந்து மீண்டும் தயாரிப்புகளை சோதித்துக் கொள்ளும் படியும் கூறி இருந்ததால், ஸ்டீபன் சற்று யோசிக்கத் தொடங்கி இருந்தான்.

தன்னால் வர முடியாது என்றும், அதற்கு பதில் தனது நண்பன் இப்பொழுது அருகில் பெங்களூருவில் இருப்பதால் அவனை உங்கள் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறி இருந்தான் ஸ்டீபன்.

அதன் படி, ஸ்டீபனின் வேண்டுகோலுக்கு இணங்க, அவரது நண்பன் பரிதியை காண வந்தார்.

அவரது கண் பார்வையிலேயே தற்பொழுது தயாரிக்கப் படும் பொருட்களில் இருந்து சிறிதளவு எடுத்து, அதை சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அறிக்கை அனுப்பி வைக்கப் பட்டது.

அந்த அறிக்கையைப் பார்த்த ஸ்டீபனின் நண்பனுக்கு திருப்தி ஏற்பட்டு, அதை புகைப்படம் எடுத்து புலனம் வாயிலாக ஸ்டீபனுக்கு அனுப்பினான்.

ஸ்டீபனும் அந்த அறிக்கையை பார்த்து விட்டு, அவனும் ரத்து செய்த ஒப்பந்தத்தை மீண்டும் போட்டுக் கொள்வதாகவும், இப்பொழுது தோல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களையும்  ஒப்பந்ததில் சேர்த்து உள்ளதாகவும் கூற, பரிதிக்கும் இனியனுக்கும் மிக்க மகிழ்ச்சி.

“ஓ..  திஸ் இஸ் வெரி ஹாப்பி நியூஸ் ஃபார் அஸ். தேங்க் யூ சோ மச் ஸ்டீபன்.. நான் சொன்னதை நம்பி மறுபடியும் எங்க கூட அக்ரீமெண்ட் போட்டதுக்கு நன்றி ஸ்டீபன். நமக்குள்ள எப்பவும் ஒரு ஃப்ரண்ட்லி அக்ரீமெண்ட் வச்சிப்போம்..” என்று பரிதி கூறிட,

ஸ்டீபனும், ” உங்க ப்ரோடக்ட் பத்தி தெரிஞ்சி தான் உங்க கூட அக்ரீமெண்ட் போட்டேன். பட் சில எதிரிகளால் நான் கேன்சல் பண்ற போல ஆகிருச்சு. இப்போதான் பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணி மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துடீங்களே.. வெல் டன் பரிதி..” என்று ஸ்டீபன் அவனது வீழ்ச்சியில் இருந்து மீண்டும் மனம் தளராமல் அடுத்த கட்ட செயல்களை நோக்கி முன்னேறிய பரிதியை பாராட்டினான்.

இனியன் கூட கேட்டான். “எப்படி ண்ணா.. நம்மகிட்ட கேன்சல் பண்ண பிறகு மறுபடியும் அவங்க கிட்ட கேட்டு பார்த்த..” என்று.

“விட்ட இடத்துல இருந்து தான் மறுபடியும் திரும்ப ஆரம்பிக்கணும். அவங்க அக்ரீமெண்ட் போடப் போய் தான் நமக்கு மிகப்பெரிய லாஸ். அதை ஈடு செய்ய, திரும்பவும் அவங்க கூட போட்டால் தான் நம்ம நஷ்டத்தில் இருந்து கூடிய சீக்கிரம் வெளிய வர முடியும்.

அது போக, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்னு சொல்லுவாங்களே. நம்மளே எதிர்பாராம நடந்து விஷயம் லெதர் ப்ரோடக்ட்ஸ். இப்போ அதுவும் சேர்த்து அக்ரீமெண்ட்ல ஜாயிண்ட் ஆகி இருக்கு. நம்ம ஸ்டீபன் கிட்ட மட்டும் அனுப்பப் போறது இல்லை. அவன் மூலமா நமக்கு இனிமே நிறைய ஆர்டர் கிடைக்கும்.. அதுக்குத்தான் திரும்பவும் அவனைப் பிடிச்சேன்..” என்று தன் கால் சட்டை இரு பக்க பாக்கெட்டிலும் கையை விட்டவாரு அனைத்தையும் தெளிவு படுத்தி சொன்னான் இனியனிடம்.

“வாவ்.. அண்ணா. செம பிளான். உங்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கணும்..” என்று இனியன் கூறிட,

“பின்ன.. இது எல்லாம் நீ கண்டிப்பா கத்துக்க தான் வேணும். அதுனால தான் உன்ன என்கூடவே வச்சிட்டு சுத்துறேன்..” என்றான்.

அதே சமயத்தில் நிரஞ்சனா, காயத்ரியிடம் இருந்து வேலைகளை நன்றாகவே கற்றுக் கொண்டு, அவளுக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்தாள்.

சஞ்சய் கொடுக்கும் வேலைகளை தனியாக செய்து கொடுக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.

அவள் பாட்டிற்கு வீடு வேலை, காயத்ரி உடன் அரட்டை எனப் பொழுது நகர்ந்தது.

ஆனால் பரிதி, நிரஞ்சனாவின் வீட்டிற்கு வந்து தனது பெயர் மற்றும் அலைபேசி எண்ணை பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கொடுத்து விட்டுப் போக, அவரோ அன்று மாலையே அவசர வேலையாக வெளியூர் பயணம் சென்று விட்டார்.

ஆனால் இது தெரியாத பரிதி அவளின் அழைப்புக்காக காத்து இருந்தான்.

அன்று ஒரு நாள், வேலை நேரம் முடிந்து, மதிய உணவு வேளையின் போது, நிரஞ்சனாவும் காயத்ரியும் பேசிக் கொண்டே சாப்பிடுக் கொண்டு இருந்தனர்.

“காயத்ரி.. நான் உங்கிட்ட ஒன்னு கேப்பேன். நீ தப்பா நினைக்கக் கூடாது எதுவும்..” என்று ஆரம்பிக்கும் போதே புதிர் போட்டாள்.

“என்ன டி.. கேக்குறதுக்கு முன்னாடியே நினைக்காதனு சொல்ற.. சரி என்னனு கேளு முதல்ல. அதுக்கு அப்புறம் அது தப்பா சரியானு நினைக்கலாம்..” என்றிட,

“அது.. நம்ம MD சார் இருக்காருல.. அவருக்கு கொஞ்ச நாள் முன்ன ஆக்சிடண்ட் எதுவும். ஆச்சா..” என்று காயத்ரியைப் பார்த்து ஒரு வித தயக்கத்துடனே கேட்டாள்.

காயத்ரியும் நன்றாக யோசித்து, “நானும் ரொம்ப நாளா இங்க தான் இருக்கேன். அப்படி ஒன்னும் அவருக்கு விபத்து எதுவும் நடக்கலையே. ” என்றாள்.

“நிஜமா தான் சொல்றியா..” என்று மீண்டும் உறுதி படுத்திக் கொள்ள நிரஞ்சனா கேட்க,

“ஏய் .. நிஜமாதான் டி.. அவருக்கு எதுவும் நடக்கல. அவங்க அப்பாக்கும் எதுவும் இல்லை..” என்றாள் தீர்க்கமாக.

“ஓஹோ.. சரி டி..” என்று கூறியவளின் முகம் சற்று வாடியதைக் கண்ட அவளது தோழியோ,

“அதுக்கு ஏன் டி நீ சோகமாகற… நடக்கலான சந்தோசம் தானே. நீ என்னடானா வருத்தப்படுற. என்ன டி விஷயம். முழுசா சொல்லு..” இவள் எதற்காக இப்படி கேட்டாள் என்று தெரிந்து கொள்ள காயத்ரி கேட்டிட,

“அது வந்து..” என்று ஆரம்பித்து, மூன்று மாதம் முன் பரிதிக்கு நடந்த விபத்து பற்றியும், அவள் அவனை மருத்துவனையில் சேர்த்ததுப் பற்றியும், அங்கேயே தனது அம்மா அப்பாவின் நினைவாக வைத்து இருந்த செயின் அவரிடமே விட்டு வந்தது என அனைத்தைக்கும் ஒன்று விடாமல் கூறினாள்.

அதனைக் கேட்ட, காயத்ரி, ” ஆத்தாடி.. இதுக்கு பின்ன இவ்ளோ விஷயம் இருக்கா.. அப்போ நீ கேட்டது அந்த செயின்காக தானா.. ” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“ஆமா..” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள் நிரஞ்சனா.

“ஆனால் இவரா இருக்குமோனு நீ எதை வச்சி கேட்ட.. உனக்கு முகமும் சரியா அடையாளம் தெரியல. பேரும் தெரியல.. அப்படி இருக்குறப்போ.. நம்ம MD யா இருக்குமோனு உனக்கு எப்படி தோணிச்சு.. எதுவும் ஹின்ட் கெடச்சதா..” என்று தன் பெரிய சந்தேகத்தை அவளிடம் தெளிவு படுத்திக் கொள்ள கேட்க,

“இல்லை டி.. அன்னைக்கு அடிபட்டவரோட பர்ஸ்ல, ஒரு கம்பெனி கார்டு வச்சி இருந்தாங்க. அதோட நேம் எனக்கு மறந்து போச்சு. ஆனால் காஸ்மெடிக்ஸ்னு இருந்துச்சு. அதை வச்சி தான் இவரா இருக்குமோனு நெனச்சேன். மத்தபடி வேற எதுவும் இல்லை..” என்று கூறி முடிக்க,

காயத்ரியின் மூளையில் மின்னல் வெட்ட, ” ஹே இரு இரு.. என்ன சொன்ன.. காஸ்மெடிக்ஸ் கம்பெனியா.?? ” என்று கேட்டாள்.

“ஆமா. அது மட்டும் தான் நியாபகம் இருக்கு. ” என்றாள் நிரஞ்சனா.

“சரி அவங்க ரிலேஷன் யாரு வந்தாங்க?  நீ அங்க இருந்து கிளம்பும் போது..” என்று மறுபடியும் தெளிவு படுத்திக் கொள்ள கேட்க,

“யங் ஏஜ்ல ஒருத்தரும் அப்புறம் ஒரு வயசானவரும் வந்தாங்க. அந்த யங் ஏஜ் பெர்சன் , அடிப் பட்டு இருக்கிறது என்னோட அண்ணனுக்கு தான்னு சொன்னாரு. அவரு பேரு தெரியாது எனக்கு..” என்று சொல்லி முடித்திட, காயத்ரிக்கு தெரிந்த்து விட்டது.

அவள் பரிதி மற்றும் இனியனைத் தான் குறிப்பிடுகிறாள் என்று.

“ஹே..நிரு.. பரிதி அண்ணா உயிரை காப்பாத்துனது நீதானா.. ரொம்ப தேங்க்ஸ்டி.. நீ மட்டும் அன்னைக்கு இல்லனா அவரு இப்போ உயிரோட இருந்து இருக்க வாய்ப்பு இல்லை.. ” என்று லேசாக கண்கள் கலங்கியவாரு கூற,

அவளுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

“என்ன டி சொல்ற..” என்று இன்னும் புரியாமல் கேட்டிட,

“நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவரோட பேரு இளம்பரிதி.. அவரு தம்பி இனியன்.  என் ஃப்ரண்ட்  அவன். அவங்க கம்பெனி பேரு இளா லெதர் அண்ட் காஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிட்.. ” என்று புன்னகையுடன் கூற,

அவளுக்கோ அதிர்ச்சி. அவனைப் பற்றி அத்தனை விவரங்களையும் கூறுகிறாளே என்று.

அதுவும் தான் காப்பாற்றியவர் ஒரு கம்பெனியை நடத்தும் முதலாளியா..

அவளால் சட்டென்று அதில் இருந்து வெளிவர முடியவில்லை.

இங்கே இவள் யோசித்துக் கொண்டிருக்க, காயத்ரி தன் அலைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

தேடியது கிடைத்ததும், “நிரு.. இங்க பாரு.” என்று அலைபேசியை காட்டிட,
அதில் பரிதி மற்றும் இனியனுடன் காயத்ரி எடுத்துக் கொண்ட புகைப்படம்.

இனியனை அடையாளம் தெரிந்தது. அன்று மருத்துவமனையில் பேசிய நபர் என்று.

அருகில் இருந்த பரிதியைப் பார்த்ததும், அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அதிர்ச்சியில் இரு விழிகளும் அகல விரிந்தன.

“இ.. இது… யாரு..” என்று பரிதியை சுட்டிக் காட்டிக் கேட்க,

“இவரு தான் இளம்பரிதி.. நீ காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்டியே.. இவரைத்தான்..” என்றாள் புன்னகையுடன்.

ஆனால் இவளுக்கு தான் இன்னமும் அதிர்ச்சி விலகாமல் இருந்தது.

பின்னே தினம் தினம் கனவில் வந்து அவளுக்கு இதழ் முத்தம் கொடுக்கும் அவனை நேரில் கண்டால் அதிர்ச்சி வரத் தானே செய்யும்.

தான் பார்க்காத நபர்.. கனவில் மட்டுமே வரும் கற்பனை நாயகனின் செயல்கள் முதலில் அவளுக்கு குழப்பத்தைக் கொடுத்தாலும், பின் அவளும் கனவில் அவனுக்கு நாயகியாக அல்லவா இருந்தாள்.

போகப் போக அவளே அந்த கனவினை ரசிக்கத் தொடங்கி அவனையும் ரசிக்கத் தொடங்கி விட்டாள் அல்லவா.

இப்பொழுது கனவில் கண்டவனை நேரில் கண்டால் , கனவில் செய்த செயல்கள் தானே அவனை நேரில் பார்க்கும் போது அவளின் கண் முன் வந்து போகும்.

அதை நினைத்துத் தான் அவளின் இதயம் எகுறிக் குதித்துக் கொண்டிருந்தது.

அந்த பதட்டத்தால் வேலையை அவளால் சரி வர தொடர முடியவில்லை.

காயத்ரி ஏன் என்று கேட்டதற்கு, “தலை வலி டி.. அதான்..” என்று கூறி முடித்துக் கொண்டாள்.

அப்படியே அங்கு நேரத்தை தள்ளி விட்டு, வீட்டுக்கு வந்து சேர, அவளுக்காகவே காத்திருந்தது போல் பக்கத்து வீட்டு பெண்மணி வந்தார்.

“நிரஞ்சனா.. வந்துட்டியா மா  வேலைக்கு போய்ட்டு..” என்று எப்பொழுதும் போல சாதாரணமாக பேச்சைத் தொடங்க,

“ஆமா க்கா.. ஊருக்கு போய்ட்டு நீங்க எப்போ வந்தீங்க..” என்றாள்.

“நான் இன்னைக்கு மத்தியானம் தான் வந்தேன். உங்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் மா வந்தேன். நான் ஊருக்கு போய்ட்டனால சொல்ல முடியல..” என்று ஆரம்பிக்க,

“என்ன க்கா என்ன விஷயம்..” என்று யோசனையுடன் கேட்க,

“ஒரு அஞ்சாரு நாளைக்கு முன்ன, உன்ன தேடிட்டு ஒருத்தர் வந்தாங்க. நல்லா ஆளு பெரிய இடத்து புள்ள போல இருந்துச்சு.. அப்புறம் நீ இல்லனு சொன்னதும், உங்கிட்ட இந்த கார்டு கொடுக்க சொல்லிட்டு போனாங்க மா..”என்று அவளிடம் கொடுத்து விட்டுச் செல்ல,

அதை வாங்கிப் பார்த்ததும் அதிர்ச்சியும் பதட்டமும் ஒருங்கே சேர்ந்து கொண்டது.

வாசல் வரை சென்ற அந்தப் பெண்மணி, மீண்டும் அவளைப் பார்த்து, “ஹான்.. அந்த பையன் பேரு இளம்பரிதி னு சொன்னான். உன் கைல இருக்குற கார்டுல டிக் பண்ணி இருக்குற நம்பர் அவனோடது தானாம். உங்கிட்ட சொல்ல சொல்லிட்டு போனான் மா..” என்று அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டு அவர் சென்று விட,
பாவம் இவளுக்கு தான் அந்த அதிர்ச்சியில் மயக்கமே வந்து விட்டது.

நித்தமும் வருவாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்