Loading

அத்தியாயம் 24

யுகேந்திரனிடம் பேசிக் கொண்டிருந்த மென்மொழியை அழைத்துக் கொண்டு சுடரொளி சென்றது கூடத்தில் கோபத்துடன் காத்திருந்த அவளின் அன்னையிடமே!

 

அவரின் வருகை மென்மொழிக்கும் அதிர்ச்சியைத் தர, தோழியைக் கண்டாள்.

 

சுடரொளியோ, ‘எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தியா?’ என்ற ரீதியில் மென்மொழியைப் பாவமாக பார்த்தாள்.

 

சூழலை சமாளிக்க வேண்டி, “வாங்க ஆண்ட்டி.” என்று அழைத்தாள் மென்மொழி.

 

ஆனால், சுடரொளியின் அன்னைக்கோ அவளின் வரவேற்பெல்லாம் தேவையில்லை போலும்!

 

பேசுவது மென்மொழியிடம் என்பதால், கோபத்தைக் கட்டிப்படுத்திக் கொண்டு, “இங்க என்ன நடக்குது மொழி? ரெண்டு நாளா வீட்டுக்கு வரலையே இங்க வந்து பார்த்தா…” என்றவரின் பார்வை அங்குப் புதிதாக இருந்த மதுசூதனனிடம் பதிந்து மீண்டும் சுடரொளியை நோக்கியது.

 

அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அங்கிருப்பவர்கள் விழிக்க, அப்போது அங்கு வந்த யுகேந்திரனோ நொடிக்குள் அங்கு நிலவும் சூழலைக் கண்டு கொண்டு, சமாளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

 

சுடரொளியின் அன்னையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட யுகேந்திரன், “ஆண்ட்டி, நாங்க இங்க ஒண்ணா கூடியிருக்குறது, மென்மொழி அண்ட் சுடரொளியோட புது பிராஜெக்ட்டுக்காகத்தான்.” என்று கூற, சுடரொளியோ ‘அப்படியா’ என்னும் விதத்தில் அவனைப் பார்த்து வைத்தாள்.

 

யுகேந்திரன் மென்மொழிக்கு விழிகளைக் காட்ட, புரிந்து கொண்டவளாக, “ஆமா ஆண்ட்டி, எங்க புது பிராஜெக்ட்டுக்கு க்ரைம் ரிலேட்டட் கண்டெண்ட் வேணும்னு எங்க ஹெட் சொல்லிட்டாரு. அதுக்குத்தான் இவங்க ஹெல்ப்பை கேட்டோம். அவங்களும் சிரமம் பார்க்காம, எங்களுக்காக ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க.” என்று கூறினாள்.

 

அதில், முழுவதுமாக சமாதானமாகவில்லை என்றாலும், ஓரளவு நம்பிய சுடரொளியின் அன்னை, “போலீஸ் எல்லாம் எப்படி உங்களுக்குப் பழக்கம்?” என்று அவரின் விசாரணையைத் தொடர்ந்தார்.

 

இம்முறை இன்பசேகரன் உதவிக்கு வந்தான்.

 

“இவங்க ரெண்டு பேரும் என்னோட  மெக்கானிக் கடையிலதான் அவங்களோட வண்டியை சர்வீஸுக்கு விடுவாங்க ஆண்ட்டி.” என்று அவன் கூற, “ஓஹ்… இதை ஏன் என்கிட்ட சொல்லல நீ?” என்று  சுடரொளியை நோக்கி அவர் வினவ, “இது டாப் சீக்ரெட் பிராஜெக்ட்னு எங்க ஹெட் சொல்லியிருக்காரு. உன்கிட்ட சொன்னா, இந்நேரம் அது எங்கேயோ பரவி அவரு காதுக்கே போயிருக்கும்.” என்று கோபத்துடன் சொல்வதைப் போல கூறினாள் சுடரொளி.

 

அது அவரின் சுபாவம் என்பதால் அதற்கு மேல் அதை நோண்டவில்லை அவர்.

 

“சரி சரி, நீங்க உங்க வேலையைப் பாருங்க.” என்று அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த சிரிப்பை வெளியிட்டவர், சுடரொளியை மட்டும் தனியே அழைத்துச் சென்று அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், “எம்மா, நான் என்ன சின்ன பிள்ளையா? இப்படி தனியா கூட்டிட்டு வந்து கிளாஸ் எடுத்துட்டு இருக்க? அவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்று சிணுங்க, “என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்ல. என் பிள்ளையோட பாதுகாப்பு எனக்கு முக்கியம். திரும்பவும் சொல்றேன்… ஜாக்கிரதையா இரு. மொழியையும் யாழையும் பார்த்துக்கோ. பாவம் அந்தப் பொண்ணுங்க, குடும்பத்தை விட்டுட்டு இங்க இருக்குதுங்க.” என்று பேசிக் கொண்டே இருந்தவரை வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சுடரொளி.

 

அப்போதும் செல்லாமல், “சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? நீ வேற பசி பொறுக்க மாட்டியே!” என்று அவர் கேட்டு வைக்க, ‘ஹையோ, இந்த அம்மாக்கு என்னை டேமேஜ் பண்ணலன்னா நாளே முடியாது போல!’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்ட சுடரொளி, “அம்மா தயவு செஞ்சு போயிரு. இல்லன்னா, அந்த சொட்டை மேல இருக்க கடுப்பை மொத்தமா உன்கிட்ட இறக்கிடுவேன்.” என்று மிரட்டியே அனுப்பி வைத்தாள்.

 

மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தவளோ யுகேந்திரனையும் மதுசூதனனையும் பார்த்து சமாளிப்பு புன்னகையை வீசியபடி, “நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க.” என்றாள்.

 

அவர்கள் இருவருமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

“ஆமா, புது பிராஜெக்ட்… க்ரைம்னு வேற பொய்யை அள்ளி வீசியிருக்கீங்க. அப்புறம் எப்படி அவங்களை சமாளிக்கப் போறீங்க?” என்று அங்கு நடந்தவற்றை சுவாரசியமாகப் பார்த்த யாழ்மொழி வினவ, “என் அம்மாக்கு நேத்து நடந்ததே இன்னைக்கு மறந்து போயிடும். இதெல்லாம் கண்டிப்பா ஞாபகம் இருக்காது.” என்று சாவதானமாகக் கூறியபடி அமர்ந்தாள் சுடரொளி.

 

அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக, “இன்பா, நீ உன் கடைக்குப் போகவே இல்லையே…” என்று யாழ்மொழி வினவ, “அவன் என்ன நம்மள மாதிரி மாசச் சம்பளக்காரனா? அந்தக் கடையோட ஓனரே அவன்தான?” என்று பெருமூச்சுடன் கூறினாள் சுடரொளி.

 

அதில் பொறாமை எல்லாம் இல்லை… நண்பனின் வளர்ச்சி கண்ட மகிழ்வே பிரதானமாக இருந்தது.

 

அத்துடன், மெக்கானிக் வேலையை இழிவாகக் கண்ட யாழ்மொழிக்கும் குட்டு வைத்திருந்தாள் சுடரொளி.

 

“பார்த்து பார்த்து, உன் பெருமூச்சுல என் குட்டிக் கடைக்கு எதுவும் ஆகிடப் போகுது!” என்று கேலியாகக் கூறினான் இன்பசேகரன்.

 

அதற்குச் சுடரொளி ஏதோ கூற, இப்படி ஒருபுறம் விளையாட்டாகச் செல்ல, மென்மொழியோ அவளின் வரைப்பட்டிகையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

எதேச்சையாக, அவளைக் கண்ட சுடரொளியோ, “உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா மொழி? இங்க எவ்ளோ ரணகளமா போயிட்டு இருக்கு, உனக்கு இப்போ உன்னோட வெப்டூன்தான் முக்கியமா?” என்றாள்.

 

“அதில்லடி…” என்று மென்மொழி ஏதோ கூற வர, அவளைத் தடுத்த சுடரொளியோ, “நீ வரைஞ்சு போடுற அந்தக் கதையை படிச்சு ‘சூப்பர்’னு சொல்ற அந்த சீரியல் கில்லர்தான் உனக்கு முக்கியமா?” என்று கேட்க, மற்றவர்கள் “சீரியல் கில்லரா?” என்று திகைக்க, யுகேந்திரனோ, “அவன் சீரியல் கில்லராதான் இருக்கணும்னு என்ன அவசியம்?” என்று வினவினான்.

 

அவனைத் தோழிகள் இருவர் மட்டுமல்ல, மற்றவர்களும் குழப்பத்துடன் பார்க்க, “க்கும், ஏன் போலீஸ்காரன் எல்லாம் வெப்டூன்னைப் பத்தித் தெரிஞ்சு வச்சுக்கக் கூடாதா என்ன?” என்று கேட்டு வைத்தான் யுகேந்திரன்.

 

“போலீஸ்கார், அந்த ‘ப்ளூ ஏஞ்சல்’ நீங்கதானா?” என்று சுடரொளி ஆச்சரியத்துடன் கேட்க, “அந்த அக்கவுண்ட் என் தங்கச்சியோடது. அவதான் அதிகமா வெப்டூன்னை படிப்பா. அப்பப்போ என்கிட்ட பேசும்போது அதைப் பத்தியும் சொல்லுவா.” என்றான் அவன்.

 

மென்மொழி அவனை ஒரு மார்க்கமாகப் பார்க்க, சுடரொளியோ அவளின் சந்தேகத்தை நேரடியாகக் கேட்டு விட்டாள்.

 

“போலீஸ்கார், உங்களுக்கு மொழியை ஏற்கனவே தெரியுமா?” என்று சுடரொளி வினவ, “தெரிஞ்சுருக்கலாம்!” என்றவன் மின்னல் வேக சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

 

அவனின் சிரிப்பைக் கண்டு கொண்ட மென்மொழிக்குத்தான் உள்ளுக்குள் குறுகுறுத்தது.

 

சில நொடிகளிற்குப் பின்னரே நிகழ்விற்கு வந்த மென்மொழி, மீண்டும் வரைப்பட்டிகையைக் கண்டாள். இம்முறை சுடரொளியும் அவளுடன் சேர்ந்து அதைப் பார்க்க, அங்கு அவர்கள் எதிர்பாராத தகவல் ஒன்று கிட்டியது.

 

“மொழி, இந்தக் கதை… இதுல வர கருப்புக் கல்லு…” என்று சுடரொளி கத்த, அனைவரின் கவனமும் அவர்களில் பதிந்தது.

 

மற்றவர்களிற்கு விஷயத்தைத் தெரிவித்த சுடரொளி, “மொழி, இது உன்னோட ஐடியாவா? எப்படி இதை யோசிச்ச? எங்கயாவது இதைப் பத்தி படிச்சுருப்பியோ?” என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினாள்.

 

“எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கனவு வந்துச்சு. அதுலயிருந்து இன்ஸ்பயராகித்தான் இதை வரைஞ்சேன்.” என்று அந்தக் கருப்பு கல்லின் கதையாக அவள் வரைந்தவற்றைப் பார்த்தபடி கூறினாள் மென்மொழி.

 

“கனவா?” என்று வினவிய மதுசூதனன், “மேபி, இதைப் பத்தி உங்க தாத்தா உங்க கிட்ட சொல்லியிருக்கலாம் மொழி. அதுதான் உங்களுக்குக் கனவா வந்துருக்கும்.” என்று கூற, அந்தக் கோணத்தில் யோசித்துப் பார்த்த மென்மொழியோ, “அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்லையே!” என்றாள்.

 

“நமக்கு ஞாபகம் இல்லாத விஷயங்கள் நம்மளோட சப்-கான்ஷியஸ் மெமரில ஸ்டோராகி இருக்கலாம். அதுவே காலப்போக்குல நமக்குக் கனவுகளா வர வாய்ப்பிருக்குன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.” என்றான் மதுசூதனன்.

 

“தாத்தா ஏற்கனவே இந்தக் கருப்புக் கல்லைப் பத்திச் சொல்லியிருந்தாருன்னா, அந்தக் கல்லோட சக்தியை எப்படி எதிர்க்கணும்னும் சொல்லியிருக்கலாம்ல?” என்று வினவினாள் யாழ்மொழி.

 

“வாய்ப்பிருக்கு…” என்ற இன்பசேகரன், “மொழியோட சப்-கான்ஷியஸ் மெமரில இருக்குறதை நாம எப்படி தெரிஞ்சுக்குறது? அவளாலேயே அதை ஞாபகப்படுத்த முடியலன்னு சொல்றாளே!” என்று வினவ, “என்னால அதை அக்சஸ் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.” என்றான் யுகேந்திரன்.

 

“உங்களுக்கு அந்தப் பவரும் இருக்கா?” என்று யாழ்மொழி ஆச்சரியத்துடன் வினவ, “தெரியல… மைண்ட் சம்பந்தப்பட்டதால இருக்கும்னு நினைக்கிறேன். சோதிச்சுப் பார்ப்போம்.” என்றான் யுகேந்திரன்.

 

அதன்படி, மென்மொழியும் யுகேந்திரனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

 

அப்போது மென்மொழியின் அருகே வந்த சுடரொளியோ, “அது எப்படிடி, உங்களுக்கு மட்டும் இப்படி பப்லிக்கா ரொமான்ஸ் பண்ண சிசுவேஷன் அமையுது?” என்று கிசுகிசுக்க, “வாயை மூடுடி…” என்று கண்டித்து அனுப்பி வைத்தாள் மென்மொழி.

 

அவர்களின் உரையாடல் அங்கிருப்பவர்களிற்கும் கேட்கத்தான் செய்தது. ஒரு நமுட்டுச் சிரிப்புடன் அதைக் கடந்திருந்தனர் அனைவரும்.

 

“மொழி, நான் உன்னோட மெமரிஸை அக்சஸ் பண்றப்போ, உனக்கு ஏதாவது டிஸ்கம்ஃபர்ட் இருந்தா சொல்லு.” என்றபடி அவளின் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடினான் யுகேந்திரன்.

 

மென்மொழியும் கண்களை மூட, அவள் மனதிற்குள் பல நினைவுகள் காட்சிகளாக விரிவதை அவளால் பார்க்க முடிந்தது. யுகேந்திரனாலும்தான்!

 

பல காட்சிகள் வேகமாக முன்னோக்கிச் செல்ல, அவற்றுள் ஒன்றாக, மென்மொழி சிறு பிள்ளையாக இருந்தபோது கற்கள் அடங்கிய பெட்டியைத் திறக்கும் காட்சியும் இருந்தது.

 

“மொழி, அந்தப் பெட்டியை நீ திறக்குற நினைவை மட்டும் ஃபோகஸ் பண்ணு.” என்று யுகேந்திரன் கூற, இப்போது அந்தக் காட்சி மட்டும் அவளின் மனதிற்குள் ஓடியது.

 

அதில், குட்டி மென்மொழி பெட்டியை அசாதாரணமாகத் திறந்ததைக் கண்ட ஆராவமுதன் அதிர்ச்சியுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தார்.

 

குட்டி மென்மொழியோ, அப்பெட்டிக்குள் இருந்த வண்ண வண்ண கற்களைக் கண்களில் மின்னும் ஆர்வத்துடன் கண்டு கொண்டிருந்தாள்.

 

இரண்டு நொடிகளிற்குப் பின்பே சுயநினைவை அடைந்த ஆராவமுதன், “மொழி, இதை எதுக்கு எடுத்த?” என்று கோபத்துடன் கேட்டபடி, அதை வேகமாக பறித்துக் கொள்ள, தாத்தாவின் கண்டிப்பை எதிர்பார்க்காதவளாக உதட்டைப் பிதுக்கினாள் மென்மொழி.

 

பெட்டியைப் பாதுகாப்பான இடத்தில் வைத்தப் பிறகே பேத்தியின் முகத்திலிருந்த வாட்டத்தைக் கண்டார் ஆராவமுதன்.

 

சிறு பெண்ணிடம் கோபத்தைக் காட்டியதை எண்ணித் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டே பேத்தியை சமாதானம் செய்ய முயன்றார் அவர்.

 

“மொழிம்மா, இங்க தாத்தாவோட பல வருஷ உழைப்பு இருக்குடா. எதாவது தொலைஞ்சுட்டா, மொத்தமா வீணாகிடும்தான?” என்று ஆராவமுதன் பொறுமையாகக் கேட்க, தலையை மேலும் கீழும் ஆட்டிய குட்டி மென்மொழி, “அப்போ நான் இதெல்லாம் பார்க்கக் கூடாதா தாத்தா?” என்று வினவினாள்.

 

அதற்கு அவரோ அந்தப் பெட்டியைப் பார்த்தபடி, “காலம் என்ன செய்ய காத்திருக்குன்னு யாருக்கும் தெரியாது மொழி. ஒருவேளை, இதுக்கு உன் மூலமா முற்றுப்புள்ளி வைக்கணும்னு காலம் நினைச்சா, நீ கண்டிப்பா இதைப் பார்க்கலாம், பார்ப்ப…” என்றார்.

 

அவர் பேசியது எதுவும் புரியாமல் விழித்த மென்மொழி, அடுத்தக் கேள்விக்குத் தாவி விட்டாள்.

 

“தாத்தா, அந்தப் பாக்ஸுக்குள்ள கலர் கலரா இருந்துச்சே அது என்ன?” என்று ஆர்வத்துடன் அவள் வினவ, “அதைப் பத்திச் சொன்னா, இப்போ உனக்குப் புரியாது மொழிம்மா.” என்றார் ஆராவமுதன்.

 

கதை கேட்கும் ஆர்வத்தில், “தாத்தா பிளீஸ் சொல்லுங்க… சொல்லுங்க…” என்று குட்டி மென்மொழி கேட்க, ஒரு பெருமூச்சுடன் அந்தக் கற்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

 

ஆனால், குட்டி மென்மொழிக்கோ அது தூங்கும் நேரம் என்பதால், ஆராவமுதன் கதை சொல்ல ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.

 

ஆராவமுதனோ பிடித்ததைப் பகிரும் மகிழ்வில் பேத்தியின் தூக்கத்தைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து மறைந்து போன வரலாற்றை, எதுவும் புரியாத அந்தச் சிறு பெண்ணிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

 

என்னதான் மென்மொழி உறங்கினாலும், தாத்தா கூறிய கதைகள் எல்லாம் அவளின் மூளையில் பதிந்து கொண்டே இருந்தன.

 

அதனால்தான், மீட்டெடுக்க முடியாத அந்நினைவுகள் கனவுகளாக அவளுள் வலம் வந்து கொண்டிருந்தனவோ!

 

மென்மொழியின் மூளையில் சேமித்து வைத்து நினைவுகளும் முழுமை பெறாமல், உடைந்த துண்டுகளை ஒட்டி வைத்ததைப் போலவே இருந்தன

 

“… மொத்தம் ஏழு கலர் கல்லு மொழிம்மா. ரெயின்போல இருக்குமே அந்த ஏழு கலர்தான்! ஆனா, வயலட் கலர் கல்லு மட்டும் ஏற்கனவே அழிஞ்டுச்சு. சோ, ஆறு கலர்தான் இப்போ இருக்கு…”

 

“எல்லோ, ஆரஞ்சு, இண்டிகோ, கிரீன்…”

 

“… ரெட் கலர் கல்லை எனக்குத் தெரிஞ்சவர் கிட்ட குடுத்துருக்கேன். ப்ளூ…”

 

“… பிளாக் கலர் கல்லு ரொம்ப ஆபத்தானது. அது மத்தவங்களோட ஆழ்மன ஆசைகளைத் தூண்டி, அதுக்குத் தேவையானதைச் செய்ய வைக்கும். அதுக்குத் தேவை அழிவு! அதை மட்டும் நாம ரொம்ப பத்திரமா பாதுகாக்கணும். இப்படி ஒரு கல்லு இருக்குன்னு உன்னையும், என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது…”

 

“அட மொழிம்மா, தூங்கிட்டியா? இதுக்குத்தான் என்னை அனத்தி கதையைக் கேட்டியா?” என்று ஆராவமுதன் செல்லமாக சலித்துக் கொள்வதுடன் அந்த நினைவு முடிந்திருந்தது.

 

நினைவுகளின் பிடியிலிருந்து வெளிந்த மென்மொழியும் யுகேந்திரனும் அவர்கள் தெரிந்து கொண்டவற்றை மற்றவர்களிடம் கூற, அனைவரின் மனதிலும் அடுத்து என்ன என்ற கேள்வியே வியாபித்திருந்தது.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்