Loading

காட்சிப்பிழை 23

வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் அதே உயரத்தில், பல அடுக்குகளில் உயர்ந்து இருந்தன மேம்பாலங்கள். மக்கள் நடமாட்டத்தினால் கீழே போக்குவரத்து நெரிசல் ஏற்பட, இப்போது அதிவிரைவு ரயில்களை வானில் செலுத்தி வருகிறது அரசாங்கம்.

அந்த மேம்பாலங்களில் சென்று கொண்டிருக்கும் ரயில்களை, தான் அமர்ந்திருந்த ‘கேஃபே டே’யியுள்ள பெரிய கண்ணாடி ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் நவி.

இப்போதெல்லாம் இவைப் போன்ற கண்டுபிடிப்புகளைக் காணும் போது, அவற்றால் மக்களுக்கு ஏதேனும் தீங்கு விளையுமா என்பதே அவளின் எண்ணமாக இருந்தது.

அவள் அந்த ஆராய்ச்சி கூடத்திலிருந்து வந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தாலும், இன்னும் அவளால் அங்கு நிகழ்ந்த சம்பவங்களின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.

அவற்றை நினைக்கக் கூடாது என்று நூறாவது முறையாக மனதிற்கு கட்டளையிட்டுவிட்டு, தான் வாங்கிய பொருட்கள் அடங்கிய பைகளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, அந்த இடத்திலிருந்து வெளிவந்தாள் நவி.

தன் இருப்பிடத்திற்கு செல்வதற்கான பேருந்திற்காக, எப்போதும் காத்திருக்கும் இடத்திற்கு வர, அந்த இடத்தில் முன் போல கூட்டமில்லாமல், சில நபர்களே நின்றிருந்தனர். உபயம், தற்சமயம் தலைநகரில் மட்டும் ஆரம்பித்திருந்த வான்வழி பேருந்து சேவை.

ஒரு பெருமூச்சுடன் அங்கு காத்திருப்பவர்களில் ஒருத்தியாக நின்று கொண்டாள்.

காத்திருப்பின் போது, நவியின் மனம் பழைய நினைவுகளை மீட்கத் துவங்க, அதைக் கட்டுப்படுத்திவிட்டு சுற்றிலும் நடந்து செல்பவர்களைக் காணத் துவங்கினாள். அப்போது யாரோ அவளைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

இது புதிதல்ல, கடந்த ஒரு மாதமாகவே இப்படிபட்ட உணர்வுகள் அவளுக்குள் எழத்தான் செய்தன. ஆனால், அவள் எவ்வளவு தேடியும், யார் தன்னை கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

இன்றும் தன் பார்வையை நாலாபக்கமும் சுழற்ற, அவளின் கண்களுக்கு யாரும் தென்படாததால் ஒருவித சலிப்புடன் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அதே சமயம், அவளிற்கான பேருந்து வர, அதில் ஏறி, தன்னிடமிருந்த அணுகல் அட்டையை பயன்படுத்தி தன் வருகையை பதிவு செய்துவிட்டு, காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அப்போது அவளின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தவளின் இதழ்கள் விரிந்தன. அதை உயிர்ப்பித்ததும் சரமாரியாக கேள்விகள் வந்த வண்ணம் இருக்க, நவியோ அனைத்திற்கும் புன்னகையுடன் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

எல்லா கேள்விகளும் முடிந்த பின்னர், அவளை பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அலைபேசியை அணைத்த பின்னரும், நவியின் புன்னகை மறையவில்லை. அதற்கு காரணமானவர்களை நினைக்க, மனது மீண்டும் பின்னோக்கிச் செல்ல, இம்முறை நவிக்கு வேலை வைக்காமல், அந்த பேருந்தே நவியின் மனதை கட்டுப்படுத்தியது.

நவி இறங்க வேண்டிய இடம் வந்திருக்க, அவசரமாக தன் பைகளை சுமந்து கொண்டு, அதிலிருந்து இறங்கினாள். பேருந்து நிறுத்தத்திலிருந்து சில தொலைவு நடக்க வேண்டும் என்பதால், மெதுவாக தன் இருப்பிடம் நோக்கி நடை போட்டாள்.

நவி இப்போது தங்கியிருப்பது மிஸ்டர் அண்ட் மிசஸ் கௌதம் வீட்டில் தான். இருவருமே அறுபது வயதைக் கடந்திருந்தனர். அவர்களின் மகன் படிப்பை முடித்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல, முதலில் அதை பெருமையாக நினைத்தவர்களுக்கு தனிமையை பரிசாக தந்து, தன் வெளிநாட்டு காதல் மனைவியுடன் அவன் அங்கேயே செட்டிலாகி விட்டான்.

முதலில் கோபத்தில் இருந்தவர்களுக்கு, தனிமையே சிறந்த ஆசானாக மாற, இருவரும் அந்த தனிமையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான துணைக்காக ஏங்கினர்.

அப்படி அவர்கள் கண்டெடுத்தது தான் நவி. மருத்துவமனையிலிருந்து எங்கு செல்வது என்று தவித்தவளிற்கு ஆதரவாக இருந்தவர்கள் தான் கௌதம் மற்றும் அவரின் மனைவி உஷா.

ஒரு விபத்தின் காரணமாக தன் சொந்தங்களை இழந்து தனியாக நிற்பதாக மட்டுமே கூறிய நவியை நம்பி, வேறெதுவும் வினவாமல் அவளைத் தங்களுடனேயே அழைத்து வந்திருந்தனர்.

என்ன தான் காசு கொட்டிக் கிடந்தாலும், அன்பை எதிர்பார்த்து வாழும் பலரில் இருவராக அவர்களை நேரில் கண்டதும், நவியும் தன் பழைய நினைவுகளை தூக்கியெறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க முயன்றாள். என்ன தான், மறக்க நினைத்தாலும், சில நினைவுகள் அவளிற்கு போக்கு காட்டி அவளின் மனவலிகளை கீறிக் கொண்டிருப்பது உண்மையே…

இவற்றை எல்லாம் நினைத்தபடியே அந்த வீட்டிற்கு வந்தாள். இந்த ஆறு மாத காலமாக அவள் நுழைந்ததும் கேட்கும், “உனக்கு போன் போட்டுட்டே இருந்தேன், அதை எடுக்காம என்ன செஞ்ச?” என்ற சிறு கண்டிப்புடன் கூடிய குரலும், அந்த குரலை ஒத்த பார்வையும் கிடைக்காமலிருக்க, அதை பெரிதும் எதிர்பார்த்தாள் அவள்.

கௌதமும் உஷாவும் தங்கள் மகனைக் காண ஜெர்மனி சென்றுள்ளனர்.

“இத்தனை வருஷமாச்சு இப்போ தான் முதல் முறையா அங்க கூப்பிட்டுருக்கான் மா.” என்று உஷா அலுத்துக் கொள்ள, “இப்போயாவது கூப்பிட்டானேன்னு சந்தோஷப்பட்டுக்கோ!” என்று சிறிது எட்டிப்பார்த்த கோபத்துடன் கூறினார் கௌதம்.

என்ன தான் கோபம் இருந்தாலும், பிறந்ததிலிருந்தே பார்க்காத பேரனை பார்க்கப்போகும் ஆர்வத்தில் கிளம்பியிருந்தனர் தம்பதியர்.

அவற்றை நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளிற்கு ஏதோ அசாதாரணமாக இருந்தது வீட்டினுள் நிலவிய அமைதி. யாரோ வீட்டிற்குள் இருந்து அவளைக் கண்காணிப்பது போல இருக்க, மெதுவாக வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.

ஏதோ தவறாக இருக்க, அந்த நொடியே அவளின் அட்ரீனலின் சுரந்து அவளை அந்த இடத்திலிருந்து வெளியே செல்லுமாறு சொல்லியது.

அப்போது அவளிற்கும் கதவிற்கும் இடையே இருந்த இடைவெளியை மறைத்தவாறு, அவரின் வழக்கமான கோணல் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார் ஹேமந்த். இந்த ஆறு மாதத்தில் சற்றே வயது கூடித் தெரிந்தார். அதைத் தவிர அவரின் உடல்நிலையிலோ மனநிலையிலோ எவ்வித மாற்றமும் இல்லை!

“என்ன பாப்பா, இப்போ தான வந்த, அதுக்குள்ள எங்க போற?” என்று ஹேமந்த் வினவ, நவியின் மனமோ ஹேமந்த் எப்படி தப்பித்திருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.

அவளின் யோசனையை சரியாக கண்டுகொண்ட ஹேமந்த், “எனக்கு சொந்தமான பில்டிங்ல, என்னை ஒரு ரூமுக்குள்ள அடைச்சு வச்சு, அதை வெடிக்க செஞ்சா நான் இறந்துடுவேனா? உன்கூட சுத்துவானே அந்த சயின்டிஸ்ட் ஈஸ்வர் பிளான் போடுறதுல ரொம்ப வீக் போல. இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசிச்சிருக்கலாம்! என்ன, என்கூட இருந்த மத்தவங்க தான் அங்கேயே இறந்துட்டாங்க. ஆனா, என்னை மாதிரி சிலரை காப்பாத்தணும்னா, சில உயிர் தியாகங்கள் அவசியம் தான!” என்று உதட்டைப் பிதுக்கியபடி கூற, இத்தனை நேரம் கட்டுக்குள் வைத்திருந்த நினைவுகள் அனைத்தும், ரிஷபின் பெயரைக் கேட்டதும் கட்டுக்கடங்காமல் மேலெழுந்தன.

அவன் தனக்கு துணையாக தன்னுடன் இருப்பான் என்று எண்ணியிருக்கையில் அவளைத் தனியே விட்டுச்சென்றதை எப்படி மறக்க முடியும்!

“என்ன மா, உன் லவர் நினைப்பா? அவன் தான் உன்னை விட்டுட்டு போயிட்டானாமே? ச்சு, இங்க உன்னை விட்டுட்டு போனதுக்கு அந்த ரிசர்ச் லேப்லயே விட்டுட்டு போயிருந்தானா, எனக்கும் இவ்ளோ கஷ்டம் இல்ல, உனக்கும் இவ்ளோ கஷ்டம் இல்ல.” என்று ஹேமந்த் பேச பேச நவிக்கு எரிச்சல் கூடியது என்னவோ உண்மை தான்.

அவளின் கோபத்தினை முகபாவனையிலிருந்தே படித்தவர், “கவலைப்படாத இந்த முறை உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டுட மாட்டேன். போலாமா நம்ம ஒர்க் பிளேசுக்கு?” என்றவர், வெளியிலிருந்து தன் ஆட்களை கூப்பிட, அவரின் குரலுக்கு மறுமொழியே இல்லை.

முதலில் சாதாரணமாக இருந்தவர், இரண்டாம் அழைப்பிற்கும் எந்த பதிலும் வராததால் சுதாரித்தார். என்ன நடக்கிறது என்று நவிக்கு புரியாமல் இருந்தாலும், ஹேமந்திற்கு புரிய, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, இப்போதும் நவியை பகடையாக்கும் முயற்சியாக அவளைத் தன் கைக்குள் கொண்டுவர எத்தனித்தார்.

அப்போது நவிக்கு பின்னிலிருந்து வந்த துப்பாக்கி தோட்டா அவரின் கைகளை பதம் பார்த்தது.

அதில் திடுக்கிட்டு திரும்பிய நவி கண்டது, மாடிப்படி வளைவில் ஒரு காலை தூக்கி படிகளில் வைத்து, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி நின்றிருந்த ரிஷபேஷ்வரனை தான்.

அவனை அங்கு எதிர்பாராமல் கண்ட இருவருமே இருவேறு விதத்தில் அதிர்ந்திருந்தனர்.

அந்த அதிர்ச்சியிலிருந்து முதலில் வெளிவந்த ஹேமந்த், “நீ எப்படி இங்க? இங்கயிருந்து நீ போயிட்டன்னு சொன்னதும் தான நான் வந்தேன்.” என்று பயத்தில் அவரின் திட்டங்களை எல்லாம் சொல்ல, அதில் சிரித்தவன், “நான் பிளான் போடுறதுல வீக் இல்லன்னு இப்போ புரியுதா? உங்களை வெளிய கூட்டிட்டு வரணும்னு தான், இங்கயிருந்து நான் போற மாதிரி பிளான் போட்டதே!” என்றான் ரிஷப்.

அதைக் கேட்டு ஹேமந்த் திகைத்தபோதே ரிஷப் மேலும் பேச ஆரம்பித்தான்.

“அப்பறம் என்ன சொன்னீங்க? அந்த ரூமுக்குள்ள அடைச்சு வச்சு உங்களை கொல்றதா? அது என் பிளானே இல்லையே. அந்த பில்டிங்கையும் அதுல இருந்த ஆராய்ச்சிகளையும் அழிக்கிறது தான் என்னோட பிளான். எனக்கு தெரியும், நீங்க எப்படியும் அங்கயிருந்து தப்பிச்சுடுவீங்கன்னு. ஆனா, அங்க இருந்த எந்த ஆராய்ச்சி குறிப்புகளையும் எடுத்திருக்க முடிஞ்சுருக்காதே!” என்று நக்கலாக வினவினான் ரிஷப்.

அவனின் திட்டங்களை முழுமையாக அறிந்ததும் பல்லைக் கடித்த ஹேமந்த், “ஈஸ்வர், என்னைப் பகைச்சுக்கிட்டா உனக்கு தான் கேடு.” என்று மிரட்ட, “இந்த மிரட்டல் எல்லாம், நான் திட்டத்தை சொல்றதுக்கு முன்னாடி மிரட்டியிருக்கணும். இப்போ டூ லேட்! அண்ட் இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு. அதைக் கேட்காம, தேவையில்லாம பேசி உங்க ‘மிரட்டல்’களை வீணாக்கிடாதீங்க.” என்றான்.

“ஈஸ்வர், எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு. இப்போ நீ தான் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.” என்று ஹேமந்த் எரிச்சலாக கூற, “ஹ்ம்ம், மாட்டப் போறதுக்கு அவ்ளோ ஆசையா. சரி கேட்டுக்கோங்க. உங்களை அப்படியே விட நான் என்ன லூசா? அதான் இந்த ஆறு மாசமா உங்களுக்கான ஸ்கெட்ச் போட்டேன். அதுல முதல் படி, நியூட்ரல்ஸோட நட்பை சம்பாதிச்சது.” என்று ரிஷப் கூற, ‘நியூட்ரல்ஸ்’ என்ற பெயரைக் கேட்டதும் ஹேமந்த்திடம் அத்தனை நேரமிருந்த அலட்சிய பாவம் நீங்கி ஒருவித பயம் குடிகொண்டது.

“நியூட்ரல்ஸ்!” என்று அவர் அதிர்ச்சியுடன் வினவ, ரிஷபோ, “ஆமா, இத்தனை நாளா யாரு கிட்டயிருந்து தப்பிச்சு வாழ்றீங்களோ, அதே நியூட்ரல்ஸ் தான்.” என்று அறை வாசலைப் பார்க்க, அங்கு கருப்பு நிற சீருடையுடன் கைகளில் துப்பாக்கியை ஏந்திய சிலர் உள்ளே வந்தனர்.

ரிஷபைக் கண்டதும் மகிழ்ச்சி, ஏமாற்றம், வலி, கோபம் போன்ற உணர்வுகள் மாறி மாறி எழ, அதிலிருந்து மீள்வதற்கே சிறிது நேரம் பிடித்தது நவிக்கு. தன்னுணர்வுகளில் இருந்து வெளிவந்ததும் அவள் கேட்ட வார்த்தை ‘நியூட்ரல்ஸ்’ என்பது தான். அது என்ன என்று யோசிப்பதற்குள்ளேயே வீட்டினுள் நுழைந்திருந்தனர் அந்த துப்பாக்கி ஏந்தியவர்கள்.

அவர்களைக் கண்டதும் பயம் இல்லை என்றாலும், சற்று நிம்மதியாக சென்று கொண்டிருப்பதாக நினைத்த அவளின் வாழ்வில் மீண்டும் ஒரு யுத்தத்தை பார்க்கப் போகிறாளோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது ஹேமந்த், “வேண்டாம் ஈஸ்வர். என்னை ஒன்னும் பண்ணிடாத.” என்று முதல் முறையாக கெஞ்சிக் கொண்டிருக்கும்போது, “இதெல்லாம் மத்த உயிர்களை மதிக்காம கொல்றப்போ யோசிச்சுருக்கணும். உங்க உயிர் உங்களுக்கு எப்படி முக்கியமோ, அதே மாதிரி தான் அவங்கவங்க உயிரும் அவங்கவங்களுக்கு முக்கியம். அண்ட் இப்போ நான் தரப்போறது கிருஷ்ணா சார், மித்ராம்மாவை கொலை செஞ்சதுக்கான தண்டனை தான். மத்ததை அவங்க பார்த்துப்பாங்க.” என்று கூறியவாறே, தன்னிடம் இருந்த மருந்தை ஊசியின் மூலம் ஹேமந்த்திற்கு செலுத்தினான்.

“உங்க ஆராய்ச்சியை ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை ஏமாத்தி அவங்க மேல டெஸ்ட் பண்ணீங்கள, இப்போ நானும் ஒரு மருந்து கண்டுபிடிச்சுருக்கேன். இது ஒரு ஸ்லோ பாய்சன். இதைப் போட்டதும் உடம்புல இருக்க ஒவ்வொரு பாகமும் மெதுமெதுவா செயலிழந்து போகும். இத்தனை நாள் எல்லாரையும் உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுருந்தீங்கள, இப்போ நீங்களே மத்தவங்க கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கணும். உங்களுக்கு சாவை இப்பவே கொடுத்துட்டா, அது உங்களை மாதிரி கணக்கே இல்லாம தப்புகளை செஞ்சவங்களுக்கு வரமாகிடும். சோ, இனி ஒவ்வொரு நாளும் சாவோட கண்ணாமூச்சி விளையாடிட்டு இருங்க.” என்று ரிஷப் கூற, ஹேமந்த் மறுத்து பேசுவதற்குள் அவரைத் துப்பாக்கி முனையில் கொண்டு சென்றனர் அவர்கள்.

*****

அடுத்து ரிஷபின் பார்வை சென்ற இடம் நவியிடத்தில் தான். அவள் ஹேமந்த்தை கூட்டிக்கொண்டு செல்வதையே கண்களில் குரோதத்துடன் காண, அவளை சுயத்திற்கு அழைத்து வருவதற்காக செறுமினான் ரிஷப்.

அவனைக் கண்டதும் அவன் மீதிருந்த கோபமே பிரதானமாக தெரிய, அங்கிருந்து நகர்ந்து செல்ல எத்தனித்தாள் நவி.

அவளின் கோபத்தை எதிர்பார்த்து வந்திருந்தவனோ, “நவி, நாம இங்கிருந்து சீக்கிரம் கிளம்பணும்.” என்றான்.

அவளோ அவனை முறைத்துவிட்டு, அங்கிருந்து நகர முற்பட, அவளைத் தடுத்தவன், “நீ, அதாவது தி ஃபேமஸ் சயின்டிஸ்ட்ஸ் மிஸ்டர் அண்ட் மிசஸ் கிருஷ்ணாவோட பொண்ணு, உயிரோட இருக்குறது பலருக்கு தெரிஞ்சுருச்சு. சோ உன்னோட பாதுகாப்பு மட்டுமில்ல உன்னோட பேரண்ட்ஸோட பல அரிய கண்டுபிடிப்புகள் கெட்டவங்க கைக்கு கிடைக்கக் கூடாதுன்னு நீ நினைச்சா, இப்போ என்னோட வந்து தான் ஆகணும்.” என்று பிசிரற்ற குரலில் கூறினான் ரிஷப்.

அவள் வரமாட்டாள் என்று தெரிந்தே இதை தயார்படுத்தி வைத்தானோ!

ரிஷப் கூறியதைக் கேட்டு வாய் திறந்து எதுவும் கூறாவிட்டாலும், தன் பார்வையை கூர்மையாக்கி அவனைக் காண, அதையே அவளின் கேள்வியாக எடுத்துக் கொண்டு அதற்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.

“உங்க அப்பா அம்மாவோட பல கண்டுபிடிப்புகள் இன்னும் உலகத்தோட பார்வைக்கு வரல. அதுக்கு காரணம், அந்த கண்டுபிடிப்புகள் எல்லாம், நாச வேலைக்கும் பயன்படுத்தலாம். எங்க அதை தெரிஞ்சவங்க தப்பா பயன்படுத்திடுவாங்களோன்னு பயந்தவங்க, அதை சில இடங்கள்ல மறைச்சு வச்சுருக்காங்க… இதையும் மோப்பம் பிடிச்ச சில மேல்தட்டு செல்வந்தர்கள், அதை அடைய நினைக்க, அவங்க எண்ணங்களுக்கு முட்டுக்கட்டையா இருந்தது அந்த இடத்துக்கான லாக்கிங் சிஸ்டம். உங்க அப்பா அம்மாவோட டி.என்.ஏவை ரெஃபரன்ஸா வச்சு அதை டிசைன் பண்ணியிருக்காங்க. சோ, உங்க குடும்பத்துல இருக்கவங்களால தான் அந்த லாக்கை ஓபன் பண்ண முடியும். உங்க சொந்தக்காரங்க எல்லாரையுமே உங்க அப்பா அம்மாவை கார்னர் பண்றேன்னு ஏற்கனவே கொன்னுட்டாங்க. அப்பறம் உங்க அப்பா அம்மா இறந்தது கூட ஃபயர் ஆக்சிடெண்ட். அங்க அவங்க சாம்பல் தான் கிடைச்சது. அதையும் மத்தவங்க கைக்கு கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சதால, அவங்க இறந்ததுக்கு அப்பறம் அந்த சாம்பலை கரைச்சுட சொல்லி ஜாஷா கிட்ட சொல்லியிருக்காங்க.” என்று நிறுத்தினான் ரிஷப்.

எத்தனை முறை கேட்டாலும், தன் தாய் தந்தையின் இறப்பு செய்தி முதல் முறை கேட்பது போலவே வலித்தது நவிக்கு. அந்த வலியிலிருந்து வெளிவரவே சிறிது நேரத்தைக் கொடுத்தான் ரிஷப்.

“இந்த காரணங்களால, அந்த கண்டுபிடிப்புகளை வெளிய கொண்டுவர பணி தேங்குச்சு. உங்க சொந்தக்காரங்களை தேடுற வேலையை முடுக்கிவிட்டாங்க. ஆனா, இதுவரைக்கும் அவங்களால ஒருத்தரையும் கண்டுபிடிக்க முடியல. ரியான், அவங்களை டேட்டாபேஸ்லயிருந்து மறைக்கிற வேலையை சரியாவே பார்த்திருக்கான். ஆனா, இப்போ நீ உயிரோட இருக்குறது அவங்களுக்கு தெரிஞ்சுருச்சு. உன்னை எப்பயோ தேட ஆரம்பிச்சுட்டாங்க. இவ்ளோ நாள் உன்னை இங்க விட்டு வச்சது, ஹேமந்த் வெளிய வரணும்னு தான். ஆனா, இனிமே உன்னை இங்க விட்டு வைக்குறது அவ்ளோ சேஃப் இல்ல.” என்றவன், நவியின் கண்களைப் பார்த்து, “எனக்காக இல்ல, உனக்காக! உன்னோட பேரண்ட்ஸுக்காக நீ என்னோட வந்து தான் ஆகணும்.” என்றான்.

நவிக்கு தன்னைச் சுற்றிப் பின்னப்படும் வலைகள் பற்றி புரிந்து தான் இருந்தது. ஆனாலும் அவளின் மனதில் எழும் ஏமாற்ற உணர்வை தடுக்க முடியவில்லை.

ரிஷப், தனக்காக மட்டும் தன்னை அழைக்கவில்லை என்பதால் உண்டான ஏமாற்றமோ!

ஒருவித மந்த நிலையிலேயே கிளம்பினாள் நவி. தன் பெற்றோருக்காக என்று தன் மனதை ஏமாற்றிக் கொண்டு.

அவளிற்கு மிகவும் தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள சொன்னவன், தன் வாகனத்தை அந்த வீட்டின் முன் நிறுத்தினான். நவி, தன் பொருட்களை எடுத்து வரவும், ரிஷப் தன் ஆட்களிடம் பேசிவிட்டு வாகனத்தைக் கிளப்பவும் சரியாக இருந்தது. அந்த ஆட்களை நவி சில சமயங்கள், அவள் செல்லும் வழியில் கண்டிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவி ஏறியதும், மின்னலென கிளம்பியது அந்த வாகனம். சில தொலைவு செல்லவும் தான், நவிக்கு கௌதம் மற்றும் உஷாவின் நினைவு வந்தது. அவர்களிடம் சொல்லாமல் வந்ததைப் பற்றி ரிஷபிடம் சொல்ல, அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “அவங்களுக்கு இந்த பிளான் ஏற்கனவே தெரியும்.” என்றான்.

அதில் திகைத்த நவி, “அப்போ அவங்களும் உங்களோட ஆளுங்க தானா?” என்று சிறு கோபத்துடன் வினவ, “உங்க அப்பா அம்மாவுக்காக உயிரையும் தர நினைக்கிறவங்கள்ல அவங்களும் அடக்கம்.” என்றான் ரிஷப்.

ஒரு பெருமூச்சுடன், “இன்னும் எனக்கு தெரியாம என்னென்ன நடந்துருக்குன்னு சொல்லிடுங்க பிளீஸ். ஒவ்வொன்னா தெரிஞ்சு ஏமாறுறதை விட மொத்தமா தெரிஞ்சு ஏமாந்துக்குறேன்.” என்று குரலில் வலியுடன் நவி கூற, அவளின் நிலையை எண்ணி ரிஷபிற்கும் வருத்தமாக தான் இருந்தது.

“எனக்கு உன் சிசுவேஷன் புரியுது நவி. ஆனா, அப்போ உன்கிட்ட சொல்றதுக்கு என்கிட்ட நேரம் இல்ல. நம்மால அவ்ளோ பெரிய ஆர்கனைஷேஷனை எதிர்க்க முடியாது நவி. அதுக்கு நமக்கு உதவி தேவை. அதுக்காக அலைஞ்சுகிட்டு இருந்த நேரம் அது. ஒருவேளை உன்கிட்ட இதையெல்லாம் சொல்லியிருந்தா, நீயும் என்னோட வரேன்னு சொல்லியிருப்ப. அது நடக்கக் கூடாதுன்னு நினைச்சு தான் உனக்கு சொல்லல.” என்று அத்தனை நேரம் சாலையைப் பார்த்தபடியே பேசியவன், அவள் புறம் திரும்பி, “பிகாஸ் நீ எனக்கு ரொம்ப இம்ப்பார்ட்டன்ட் நவி. புரிஞ்சுக்கோ!” என்றான்.

அவன் பேசியதற்கு எதிர்பேச்சு பேச வேண்டும் என்று எண்ணியிருந்தவளை மொத்தமாக தன்னிலை மறக்கச்செய்தது அவனின் அந்த பார்வை. அதிலிருந்து வெளிவந்தவளை மீண்டும் தனக்குள் இழுத்துக் கொண்டது அவனின் பேச்சு. அவன் பார்வையிலிருந்தது என்னவென்று அவள் சிந்திக்க, அதற்குரியவனோ நொடியினில் தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

நவியின் சிந்தனையிலேயே அந்த மகிழுந்து பயணம் முடிவுக்கு வந்தது. அவளின் யோசனையைக் கலைத்த ரிஷப் அவளை இறங்கச் சொல்ல, அப்போது தான் அவர்கள் வந்திருக்கும் இடத்தைப் பார்த்தாள் அவள்.

அவர்களுக்காக தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. நவிக்கு அப்போது தான் எங்கு செல்கிறார்கள் என்பதை பற்றிய நினைவே வந்தது. அவள் அதை ரிஷபிடம் வினவ எத்தனிக்க, அவளின் முயற்சியை புரிந்து கொண்ட ரிஷப், “ஃபர்ஸ்ட் ஃப்லைட்ல ஏறிட்டு அப்பறம் பேசுவோம் நவி.” என்றவன், அவன் கூறியதைப் போலவே அவளை உள்ளே அமர வைத்துவிட்டு, விமானியிடம் உரையாடிவிட்டு வந்தான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர்களின் விமானம் பறக்க ஆரம்பித்திருந்தது. நவிக்கு இது (சுயநினைவுடன்) இரண்டாவது விமான அனுபவம். அவளின் மனம் முதல் பறக்கும் அனுபவத்தை நினைத்துப் பார்த்தது.

*****

அன்று… அவளின் பெற்றோர் அறையிலிருந்த அதிவேக விமானத்தில் இருவரும் கிளம்ப, மற்றவர்களைப் பற்றிய எண்ணம் நவியைக் குழப்பியது. ஆயினும், அவர்களுக்கு ரிஷப் ஏதேனும் திட்டம் வகுத்திருப்பான் என்று நம்பினாள் நவி.

இருவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் மற்றவர்களைப் பற்றி வினவ, அதற்கு ரிஷப் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால், அடுத்த நொடியே அந்த கட்டிடம் அவளின் கண்முன்னே வெடித்துச் சிதறியது அவளை திகைப்பில் ஆழ்த்தியது.

வெடித்த கட்டிடத்தை விட்டு விலகி பறந்தாலும், அவளின் கண்கள் அதிலேயே நிலை குத்தி நின்றன. அவள் கதறி அழவில்லை, கோபமாக திட்டவில்லை, அவ்வளவு ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மௌனத்தை ஆயுதமாக்கியவள், அதை தன் மீதே பிரயோகித்தாள்.

முதலில் அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற முனைப்புடன், தன் வருத்தத்தையும் கோபத்தையும் அடக்கிக் கொண்டு வழியின் மேல் விழி வைத்திருந்தவன், அப்போது தான் நவியின் ஆழ்ந்த மௌனத்தை உணர்ந்தான்.

ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று கணித்து திரும்பியவனின் கண்களுக்கு புலப்பட்டது என்னவோ, கண்ணீருடன் ஏமாற்றத்தையும் வழியவிட்டுக் கொண்டிருந்த கண்கள் மெல்ல சொருகி அவள் சாயும் காட்சி தான்.

வாழ்நாளில், சில காட்சிகள் ஒருவரை எப்போதும் பயமுறுத்திக் கொண்டே இருக்குமாம். அவற்றுள் இது மிக முக்கியமான காட்சியாகிப் போனது ரிஷபிற்கு.

அவளைக் கைகளில் ஏந்தியவன், “போதும் நவி நீ கஷ்டப்பட்டது. இனிமேலாவது உன் வாழ்க்கைல எந்தவித கஷ்டமும் இருக்கக்கூடாது.” என்று சொன்னவனிற்கு தெரியவில்லை, அவளின் அடுத்த கஷ்டமாக மாறப்போவது தான் என்று!

சில மணி நேரங்களிலேயே, அவர்களின் பயணம் முடிவிற்கு வர, கௌதமின் துணை கொண்டு, மயக்கத்திலிருந்த நவியை அவர்களுக்கு தெரிந்த மருத்துவமனையிலேயே சேர்த்தான்.

நவியின் உடல்நிலை சீராகும் வரை அந்த மருத்துவமனையிலேயே இருந்தவன், அதன்பின்னர் தான் ஹேமந்த்தை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும் என்று எண்ணி அதற்கான வேலைளில் ஈடுபட ஆரம்பித்தான். நவியிடம் கூறியது போல, அவளை இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று நினைத்தே, கௌதமிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவன் மட்டும் அலைந்தான்.

ஆனால், கண்விழித்த நவி முதலில் தேடியதென்னவோ ரிஷபைத் தான். ஏற்கனவே, அவள் வாழ்க்கையில் பல சோதனைகளையும், ஏமாற்றங்களையும் சமீபத்தில் சந்தித்தவளிற்கு மேலும் ஒரு ஏமாற்றமாகிப் போனது ரிஷபின் தலைமறைவு.

அதிலிருந்து வெளிவர பெரிதும் தவித்தாள் நவி. கௌதம் உஷா தம்பதியருடன் பெற்றோரின் மறைவு செய்தி தான் அவள் இப்படி இருக்கக் காரணம் என்று எண்ணிக் கொண்டனர். அதை உணர வேண்டியவனும், உதவிக்காக அலைந்து கொண்டிருக்க, அவளின் உணர்வுகளை புரிந்து கொள்பவர் யாரும் இல்லாமல் போனது அவளின் துரதிர்ஷடமோ!

*****

விமானம் தரையிறங்கப் போவதை விமானி தெரிவிக்க, அப்போது தான் இருவரும் தங்களின் சிந்தனையிலிருந்து வெளிவந்தனர். அதுவரையில், எங்கு வந்திருக்கிறார்கள் என்பது நவிக்கு தெரியாமலிருக்க, அதை ரிஷபிடம் வினவினாள்.

“அந்த ஹேமந்த் மட்டுமில்ல, அவரைப் போல இருக்க மத்த குற்றவாளிகளையும் பிடிச்சு அவங்க செயல்களை தடுக்க நமக்கு உதவி செய்றதா ஒத்துகிட்டாங்க ‘நியூட்ரல்ஸ்’. இப்போ நாம அந்த நியூட்ரல்ஸோட இடத்துக்கு தான் வந்துருக்கோம்.“ என்றான் ரிஷப்.

‘நியூட்ரல்ஸ்’ – இந்த பெயரை ரிஷப் – ஹேமந்த் உரையாடலின் போதே கேட்டிருந்தாள் நவி. அதற்கு முன்னரும் சில செய்திகளில் இதைக் கேள்வியுற்றதாக ஞாபகம். ஆனால், ‘யார் அவர்கள்? அவர்களின் குறிக்கோள் என்ன?’ என்பதைப் பற்றியெல்லாம் அவளிற்கு எதுவும் தெரியாது.

அதை ரிஷபிடம் வினவ, “இப்போ விளக்கமா சொல்ல நேரமில்ல நவி. சோ சுருக்கமா சொல்றேன்.” என்றவன் ‘நியூட்ரல்ஸ்’க்கான விளக்கத்தைக் கூற ஆரம்பித்தான்.

“நம்ம உலகத்தை ஈஸ்ட் அண்ட் வெஸ்ட் ப்ராவின்ஸா பிரிக்கும்போது, சில தேச தலைவர்களுக்கு இந்த செட்டப் பிடிக்கல. ஏதாவது ஒரு ப்ராவின்ஸ் இன்னொரு ப்ராவின்ஸை டாமினேட் பண்ணா என்ன பண்றதுங்கிற மாதிரி நிறைய டிஸ்கஷன்ஸ் போயிட்டு இருந்த சமயம், அவங்களோட வழிகாட்டுதலின்படி உருவானது தான் இந்த ‘நியூட்ரல்ஸ்’ குழு. இது மத்த ரெண்டு ப்ராவின்ஸ் கூட சேராது, தனித்து இயங்கக்கூடிய குழு. இவங்களுக்கு மத்த ரெண்டு ப்ராவின்ஸ்ல நடக்குற சட்டவிரோத செயல்களை கண்டிக்கிறது மட்டுமில்லாம, தக்க தண்டனைகளை வழங்கக்கூடிய அதிகாரமும் இருக்கு. இவங்க தான் இப்போ நமக்கு உதவி செய்யப்போறாங்க. இது மாதிரி ஆராய்ச்சியாளர்களை வற்புறுத்தி பல நாசங்களை விளைவிக்கக்கூடிய ஆராய்ச்சிகளை செய்ய தூண்டுறது நம்ம ப்ராவின்ஸ்ல மட்டுமில்ல, அடுத்த ப்ராவின்ஸ்லயும் நடந்துட்டு தான் இருக்கு. அதை நாம தடுக்கணும்னா இவங்க உதவி நமக்கு நிச்சயம் தேவை.” என்று சொல்லி முடித்தான்.

அவற்றை எல்லாம் சிறு திகைப்புடனே கேட்டுக் கொண்டாள் நவி. இவர்கள் பேசிக் கொண்டே அந்த விமானத்திலிருந்து இறங்கி, சோதனையிடும் இடத்திற்கு வந்தனர். அங்கு தீவிர சோதனைக்குப் பின்னர் அந்த கட்டிடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவள் கண்ட காட்சியில், தன் கண்களையே சந்தேகப்பட்டு தன்னைத் தானே கிள்ளிக் கொண்டாள் நவி.

அவர்களை வரவேற்கும் விதமாக அங்கு நின்று கொண்டிருந்தனர் நந்து, ரியான், ஜாஷா, டோவினா, ஜான் மற்றும் டேவிட்.

அவர்களைக் கண்டதும் உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியுடனும், மீண்டும் ஒரு ஏமாற்றமாக இருந்துவிடக் கூடாதே என்ற தவிப்புடனும் ரிஷபைக் காண, அவனோ ஒற்றைத் தலையசைப்பில், அவளின் ஏமாற்றத்தைப் போக்கியிருந்தான்.

அவனின் செய்கையைக் கண்டதும், வேகமாக அவர்களை நெருங்கியவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவளின் பார்வையை மறைக்க, நொடி நேர பார்வை மறைவைக் கூட தாங்க முடியாதவளாக, வேகமாக கண்ணீரைத் துடைத்தாள்.

அவளின் செயலிலேயே, அவர்களை எவ்வளவு தூரம் தேடியிருக்கிறாள் என்பதும், அவள் மறைத்து வைத்திருந்த அவளின் குற்றவுணர்வும் புலப்பட, அங்கிருந்தவர்களுக்கு அவளின் நிலை கண்டு வருத்தமாகத் தான் இருந்தது. அவர்களின் நிலையை அவளுக்கு முன்பே தெரியப்படுத்தியிருக்க வேண்டுமோ என்ற கேள்வி இப்போது அனைவரினுள்ளும் எழுந்தது.

கடந்து சென்றதை நினைத்து வருத்தப்படாமல், இனி அவளை ஒருபோதும் வேதனைப்படுத்தக் கூடாது என்று எண்ணினர்.

முதலில் அவளிடம் வந்தது நந்து தான். அவனைத் தலை முதல் கால் வரை பார்வையாலேயே ஆராய்ந்தவள், ‘உனக்கு ஒன்னுமில்லையே!’ என்பதைப் போல தலையசைக்க, நந்துவும் அதனைப் புரிந்து கொண்டு, “நவி, இங்க பாரு. ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்!” என்றான்.

அடுத்து தன் பார்வையை திருப்பியவளிற்கு காட்சி தந்தது ஜாஷா. எதுவும் பேசாமல் அவரை அணைத்துக் கொண்டவளை ஜாஷாவும் ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

“உங்களையும் மிஸ் பண்ணிட்டேனோன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்.” என்று நவி கூற, அந்த ஒற்றை வாக்கியம், பிள்ளையற்ற தாயாகிய ஜாஷாவை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் உருக்கியது என்னவோ உண்மை தான்.

“உன்னை விட்டு அவ்ளோ சீக்கிரம் போயிட மாட்டேன் நவி.” என்று மேலும் அணைப்பை இறுக்கினாள் ஜாஷா.

அடுத்து நின்ற ரியானைக் கண்டவள், “அன்னைக்கு நீங்க சொன்னதை நான் சரியா உள்வாங்கல ரியான். இல்லன்னா அன்னைக்கே உங்களையெல்லாம் தனியா விட்டுட்டு போயிருக்க மாட்டேன்.” என்று குற்றவுணர்வு மிகுந்து நவி கூற, “ரிலாக்ஸ் நவி, அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன். எங்களை விட நீங்க முக்கியம். ஐ திங்க், இதுக்கான மீனிங்கை ரிஷப் ப்ரோ உங்களுக்கு விளக்கியிருப்பாரு. அண்ட் நான் அவ்ளோ உறுதியா உங்களைப் போகச் சொன்னதுக்கு காரணம், அந்த பங்கர் பத்தின ஞாபகம் எனக்கு வந்ததால தான். அப்பறம் ரிஷப் ப்ரோ உங்க கூட வந்ததுக்கு காரணம் கூட அவருக்கும் அது பத்தி தெரிஞ்சதால தான். நீங்க என்ன நினைச்சீங்க, அவரு எங்களை அந்த ஆபத்துல அப்படியே விட்டுட்டு உங்க கூட வந்துருப்பாருன்னா.” என்று ரிஷபைப் பற்றி பெருமையாக கூற, நவியோ ரிஷபைக் கண்டாள்.

அவனோ ரியான் கூறியவற்றிற்கு எந்தவித எதிர்வினையும் புரியாமல் சாதாரணமாகவே நின்றிருந்தான். அந்த நொடி, தானும் அவனை நம்பியிருக்க வேண்டுமோ என்று நினைத்தாள் நவி.

ஆயினும், தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள, “என்ன பங்கர்?” என்று ரியானிடம் வினவினாள் நவி.

“அந்த பில்டிங் இருக்குற இடத்துல பல வருஷங்களுக்கு முன்னாடி ஆக்டிவ்வா இருந்து இப்போ டார்மன்ட்டா இருக்க வால்கனோ இருக்கு. அது ஒருவேளை ஆக்டிவ்வாகிடுச்சுன்னா, அதுலயிருந்து பாதுகாக்க, அந்த இடத்துக்கு கீழ சேஃப்டி பங்கர் ஒண்ணு இருக்கு. எனக்கு அந்த சூழ்நிலையில சட்டுன்னு அந்த பங்கர் நினைவுக்கு வந்துச்சு. ஏற்கனவே அங்க இருக்குறவங்களை எல்லாம் கூட்டிட்டு வெளிய வர பிளான்ல தான் இருந்தோம். சோ, நான் ஜாஷாக்கு, அந்த பங்கருக்குள்ள போக இன்ஃபர்மேஷன் கொடுக்க, அவங்களும் எல்லாரையும் கூட்டிட்டு அங்க போயிட்டாங்க… அப்பறம் என்ன அந்த பாம் பிளாஸ்ட்ல யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படல. ஆனா, அந்த பங்கருக்குள்ள இருந்த எங்களை மீட்கத் தான் ரெண்டு நாளாகிடுச்சு. அதுல அலைஞ்சதும் ரிஷப் ப்ரோ தான். எப்படியோ யாருயாருக்கிட்டயோ பேசி எங்களை காப்பாத்திட்டாரு.” என்று மீண்டும் ரிஷபின் பெருமையையே பாட, “போதும் ரியான்!” என்று ரிஷபே அலுத்துக் கொள்ளும் நிலையானது.

சிறிது நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு, உள்ளே சென்றனர். அந்த இடம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தது. அதைக் காணும்போதே, மேலிடத்தில் இருப்பவர்களின் இடம் என்று தெரிந்தது. மேலும், ரிஷப் கூறிய ‘நியூட்ரல்ஸ்’ நினைவும் எழ, அவர்களின் இடம் என்று யூகித்தாள் நவி.

அவளின் யூகம் சரியென்பதை உறுதிபடுத்துவது போல, அடுத்த அரை மணி நேரம் அங்கு பல பெரிய தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ந்தது. நவிக்கு இவையனைத்தும் புதுமையான அனுபவமாக இருந்தது. நவிக்கு மட்டும் தான் அப்படி இருந்தது போலும். மற்றவர்கள் சாதாரணமாகத் தான் அமர்ந்திருந்தனர்.

சிலரின் பார்வை நவியை ஆராய்வது போல தோன்றி அவளை சிறிது பயம்கொள்ள செய்ய, அப்போதெல்லாம் அவள் அருகிலிருந்த ரிஷபின் கரம் அவளின் கரத்தை ஆதரவாக பற்றிக்கொண்டது.

அந்த கலந்துரையாடல் முடிய, அனைவரும் ரிஷபிடம் கைகுலுக்கி விட்டுச்செல்ல, நவிக்கு அதைப் பார்த்து பெருமையாக இருந்தது.

ரிஷப் அவர்களுடன் தனியாக பேசிக் கொண்டிருக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்த நவியின் அருகே வந்த நந்து, “க்கும்…” என்று செறுமி அவளின் கவனத்தை தன் புறம் திருப்பியவன், “என்ன மேடம் இப்போயாவது ஒத்துக்குறீங்களா?” என்று கேலியாக கேட்டான்.

மற்றவர்களைக் கண்டதும் பழைய நவி சற்று திரும்பியிருக்க, “நான் எப்போ ஒத்துக்க மாட்டேன்னு சொன்னேன். அப்போ சொல்றது சரியா இருக்குமான்னு யோசிக்க தான செஞ்சேன்.” என்று கூறி கண்ணடிக்க, நந்து மனதிற்குள் தன் தோழி இயல்பாகி விட்டாள் என்று நினைத்து மகிழ்ந்தவன், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவளை கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

நந்து மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே நவியின் மகிழ்ச்சியான பேச்சைக் கண்டு நிம்மதியடைந்தனர்.

நேரம் இவ்வாறு கழிய, ரிஷப் நவிக்கு அந்த இடத்தை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான்.

அந்த இடத்திற்கு பின்னால், பெரிய அரங்கம் இருக்க, அதனுள்ளே பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவை அனைத்தையும் அவளுக்கு விளக்கிக் கொண்டே நடந்தான் ரிஷப்.

அவற்றைக் கடந்து சென்றதும், விளக்குவதற்கு எதுவும் இல்லாததால் சிறிது நேரம் மௌனத்தில் இருந்தனர். ரிஷப் தான் பேச ஆரம்பித்தான்.

“நவி, உன் வாழ்க்கைல இப்போ என்னென்னவோ நடந்துடுச்சு. அதுக்கு ஒரு வகையில நானும் காரணம்னு எனக்கு தெரியும்.” என்று கூறிவிட்டு சிறிது நேரம் மௌனம் காத்தவன் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தொடர்ந்தான்.

“நீ ஒரு நார்மல் வாழ்க்கை வாழ நினைச்ச. ஆனா, இடையில சில நிகழ்வுகள் உன்னோட ஆசையை குழி தோண்டி புதைச்சுருச்சு. இப்போ திரும்ப அந்த சான்ஸ் உனக்கு கிடைச்சுருக்கு. உனக்கு பிடிச்ச நார்மல் வாழ்க்கை வாழ உனக்கு ஒரு சான்ஸ். உன்னோட இந்த அடையாளத்தை விட்டுட்டு புதுசா ஒரு வாழ்க்கை வாழலாம். அதுக்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக்குறேன். இப்போ முடிவெடுக்க வேண்டியது நீ தான்.” என்றான் ரிஷப்.

ரிஷப் இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவான் என்று நவி நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை. நடந்த நிகழ்வுகளைப் பற்றி முழுதாக அறிந்திருக்கவில்லை என்றால், அவள் சம்மதித்திருப்பாளோ என்னவோ, இப்போது அதற்கு சம்மதம் சொல்ல நாவெழவில்லை.

அவள் அமைதியாக இருப்பதைக் கண்ட ரிஷபோ அவள் யோசிக்கட்டும் என்று அந்த விஷயத்தைப் பற்றி பேசாமல், “இன்னைக்கு நைட் நான் *****க்கு கிளம்பணும். அங்க இருந்து மத்த இடங்களுக்கும் போய் நமக்கு ஆதரவா இருக்குறவங்களோட உதவியை சேகரிக்கணும்.” என்று கூற, நவி அவன் செல்வதைப் பற்றிக் கூறும்போது அதிலேயே தேங்கி விட்டாள்.

இதைச் சொல்லும்போதாவது ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்திருந்த ரிஷபிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவேளை அவளும் வருகிறேன் என்று கூறுவாள் என்று எதிர்பார்த்தானோ!

“எப்போ போகணும்?” என்று நவி வினவ, “நைட் எட்டு மணிக்கு பிரைவேட் ஃபிலைட்ல கிளம்புறேன்.” என்றான் ரிஷப்.

அதன்பின்னர் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. இருவரும் அந்த கட்டிடத்திற்கு திரும்ப, நவி நந்துவுடன் பேச சென்று விட்டாள். அவளின் அமைதி ரிஷபை உறுத்தியது.

நந்துவின் அருகே அமர்ந்திருந்த டோவினா எதுவும் பேசாமல் நவி மற்றும் நந்து பேசுவதையே பார்த்திருக்க, நவி தான் அவளையும் பேச்சில் இணைத்துக் கொண்டாள்.

என்ன தான் திக்கித் திணறி பேசினாலும், அடிக்கடி நந்துவை பார்த்துக் கொண்டாள். மிஸ்டிரியோவில் கண்ட டோவினாவிற்கும் இப்போதைய டோவினாவிற்குமான வித்தியாசத்தை நவி கணித்துக் கொண்டிருக்க, நந்துவும் அதையே கூறினான்.

“இங்க வந்தப்போ, யாருக்கிட்டயும் பேசாம ஒதுங்கியே இருந்தா. நான் தான் சும்மா இருக்காம, அவக்கூட பேசிட்டே இருப்பேன். எனக்கும் பொழுது போகணும்ல. அப்படி பேசுனப்போ தான், அவளோட பாஸ்ட் லைஃப் பத்தி தெரிஞ்சுது.” என்று நிறுத்தியவன், “அவ ரொம்பவே பாவம் நவி. அவ வளர்ந்த ஆர்ஃபனேஜோட ஓனரே அவளை ஹராஸ் பண்ணியிருக்கான். அதை வெளியே சொல்லவும் முடியாம, ஏத்துகவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா போல. அவளால போல்ட்டா அதை ஹேண்டில் பண்ண முடியலன்னு மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி வச்சுருந்தது தான் ஆல்டர் ஈகோவா மிஸ்டிரியோல வெளிப்பட்டிருக்கு. இவ மட்டுமில்ல ஜான், டேவிட் எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல பாதிக்கப்பட்டவங்க தான். அப்படியா பார்த்து தான் செலக்ட் பண்ணியிருக்காங்க.” என்றான் நந்து.

அதைக் கேட்ட நவிக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால், இருவருமே அவர்களின் வருத்தத்தை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை. அதிலிருந்து மீண்டு வருபவர்களிடம் பரிதாபப்பட்டு மீண்டும் அவர்களை அதில் மூழ்கச் செய்ய வேண்டாம் என்று நினைத்தனர்.

அப்போது அங்கு வந்த டோவினா நந்துவிடம் ஏதோ வினவ, அவனும் அவளிற்கேற்றவாறு பதிலளிக்க, அவர்களைக் கண்ட நவி சிரித்துக் கொண்டாள்.

அவள் தனியே சிரிப்பதைக் கண்ட ரியானும் ஜாஷாவும் அவளருகே வந்தனர். “என்ன நவி, தனியா சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்று ரியான் வினவ, அவளோ கண்களாலேயே நந்து – டோவினா ஜோடியை சுட்டிக் காட்டினாள்.

அவர்களைக் கண்டதும், “அவளைத் திட்டுறேன்னு சொல்லி சொல்லியே இப்படி க்ளோஸ் ஆகிட்டங்களோ!” என்று கேலியில் இறங்கினான் ரியான்.

ஜாஷாவோ, “அப்போ ரெண்டாவது ஜோடி கன்ஃபார்ம்னு சொல்லு.” என்று மகிழ்ச்சியாக கூற, அவளின் கூற்று புரிந்தாலும், எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் நவி.

நவியின் எதிர்வினையற்ற நிலையைக் கண்ட ரியான் மற்றும் ஜாஷா ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அப்பறம் நவி, ரிஷப் ப்ரோ இன்னைக்கு கிளம்புறாங்களே, நீங்க உங்க திங்க்ஸ் பேக் பண்ணலையா?” என்று ரியான் போட்டு வாங்க முயன்றான்.

“நான் எதுக்கு பேக் பண்ணனும் ரியான்? ரிஷப் தான போறாங்க.” என்று சாதாரணமாகக் கூறினாள்.

அதை வைத்தே அவர்களுக்குள் ஏதோ பிணக்கு என்பதை புரிந்து கொண்டனர் மற்ற இருவரும். அதை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்த ரியானும் ஜாஷாவும் அந்த பேச்சை விடுத்து வேறு பேச்சிற்கு தாவினர்.

*****

இரவு நேரம்… ரிஷப் மற்றவர்களிடம் விடைபெற்று கொண்டிருந்த சமயம்… அனைவரிடமும் சொல்லியவன் இறுதியாக நவியிடம் சென்றான்.

இருவருக்கும் இடையில் ஏதோ விடுபட்ட இடங்கள் இருப்பது போன்றதோரு தோற்றம் உண்டானது. அவற்றை நிரப்பும் சொற்கள் இருவரிடத்திலும் இருந்தாலும், அதை யார் முதலில் சொல்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டம் நடக்க, இருவரும் வாய் வார்த்தையாக எதுவும் பேசிக் கொள்ளாமல் கண்களாலேயே விடைபெற்றனர்.

ரிஷபிற்கு, மிஸ்டிரியோவில் டிராகனை எதிர்த்து சண்டை போட செல்லும்போது, தன்னுடன் வருவேன் என்று அடம்பிடித்து வந்த நவியைத் திரும்ப பார்க்க மாட்டோமா என்ற தவிப்பு!

நவிக்கு, முன்னர் தான் அவளை அழைக்கவில்லை. இப்போதாவது தன்னை அவனுடன் வருமாறு அழைக்க மாட்டானா என்ற ஏக்கம்!

இருவரும் மற்றவர்களிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்க்க, தன்வினையை செய்தாலன்றி எதிர்வினையாற்றப்பட மாட்டாது என்பதை அப்போது மறந்து தான் போயினர்.

ரிஷப் அந்த விமானத்தில் ஏறி அமர்ந்து வெளியே பார்க்க, நவியும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் மனதும் படபடவென அடித்துக் கொள்ள, இம்முறையும் அவர்களின் வாய், வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளவில்லை.

அந்த விமானம் மேலே பறப்பதற்காக தயாராக, இப்போது அவர்களின் வாயை நம்பிப் பயனில்லை என்று நினைத்ததோ அவர்களின் மனது, இம்முறை கண்களின் மூலம் செய்தியை அனுப்பின. அது மற்றவருக்கும் சரியாக சென்று சேர்ந்தது போலும்!

நவி அவள் பங்கிற்கு அந்த விமானத்தை நோக்கி அடியெடுத்து வைக்க, அவள் வருவதைக் கண்ட ரிஷபும் விமானத்தின் கதவை நோக்கி நடந்தான். அங்கு நடக்கும் நாடகத்தை அனைவரும் கண்டாலும், குறுஞ்சிரிப்புடன் அவர்களைக் கடந்து சென்றனர்.

இவர்களின் விழிமொழி பரிமாற்றத்தை அறியவில்லை என்றாலும், இருவரின் கால்கள் மற்றவரை நோக்கி நடப்பதைக் கண்ட விமானியும் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

இப்படி தங்களை சுற்றி நடப்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ஒருவரையொருவர் பார்த்தபடி நடந்தனர், இதுவரை காதலை பரிமாறிக் கொள்ளாத அந்த காதலர்கள்.

விமானத்தின் கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்த ரிஷப், விமானியிடம் கண்ணைக் காட்ட, அவரோ நமுட்டுச் சிரிப்புடன் விமானத்தை இயக்க ஆரம்பித்தார்.

அப்போது தான் சுயத்திற்கு வந்தான் ரிஷப். தன் செய்கைகளை எண்ணி லேசான வெட்கத்துடன் நவியின் புறம் திரும்ப, அவளோ இன்னமும் நிகழ்விற்கு வரவில்லை.

அதுவரை இருந்த படபடப்பு நீங்கி அதனிடத்தை மகிழ்ச்சி ஆட்கொள்ள, அதே மனநிலையுடன் நவியை தங்களின் இருக்கைக்கு அழைத்துச் சென்றான் ரிஷப்.

ரிஷப் நவியின் தோள் தொட்டு இருக்கையில் அமரச் செய்ய, அவனின் தொடுகை தான் நவியை நிகழ்விற்கு அழைத்து வந்தது.

சற்று முன்னர், ரிஷப் உணர்ந்த அதே இன்ப அவஸ்தையை நவியும் அனுபவித்தாள். அவனைக் காண முடியாமல் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

சில நொடிகள் கழிந்தன. இப்போது ரிஷபிற்கு அவளிடம் பேசியாக வேண்டிய கட்டாயம் உண்டாக, அவளின் கரம்தொட்டு அவளை அழைத்தான். அவன் பேசப்போவதை உணர்ந்த நவி, நிர்மலமான முகத்துடனே திரும்பினாள்.

அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் நவியே பேச ஆரம்பித்தாள். “நீங்க பேசுறதுக்கு முன்னாடி, நீங்க கேட்ட கேள்விகளுக்கு நான் இன்னும் ஆன்சர் பண்ணல. சோ என்னோட ஆன்சரை சொல்லிடவா?” என்று வினவினாள்.

ரிஷபும் பதட்டத்துடனே சம்மதிக்க, “நான் ஒரு நார்மல் லைஃபுக்கு ஆசைப்பட்டது உண்மை தான். அதுக்காக நான் விரும்புறவங்களை விட்டுட்டு புதுசா ஒரு வாழ்க்கை வாழனும்னு நான் ஆசைப்படல.” என்றவள் ஒரு பெருமூச்சுடன், “நீங்க இதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல ரிஷப். ஆனா, இப்போ நான் இதை சொல்லைன்னா, எப்போ எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரியாது. நீங்க சொல்வீங்கள, உங்களுக்கு நான் ரொம்ப முக்கியம்னு, அதே மாதிரி எனக்கும் நீங்க ரொம்ப முக்கியம்னு இந்த கொஞ்ச நாள்ல தெரிஞ்சுக்கிட்டேன். நீங்களும் இதே ஃபீலிங்கை உணர்ந்தீங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா, இதே மாதிரி இனிமே போற எல்லா பயணங்களும் உங்களோட போகணும்னு ஆசைப்படுறேன்.” என்று தன் மனதில் இருந்தவற்றை உரைத்தவள், “என்னோட முடிவு இது தான் ரிஷப். இனி, நீங்க எடுக்கப்போற முடிவு தான் ஃபைனல். நான் சொன்னதுக்காக நீங்க சம்மதிக்கணும்னு எந்த நிர்பந்தமும் இல்ல. உங்களுக்கும் இப்படி தோணுச்சுனா மட்டும் சொல்லுங்க ரிஷப்.” என்றவள், தேர்வில் விடை எழுதி அதற்கான மதிப்பெண்ணிற்காக காத்திருக்கும் மாணவி போன்ற மனநிலையுடன் இருந்தாள்.

ரிஷபின் மனநிலையை விளக்க வார்த்தைகள் போதாது… அத்தகைய மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். தான் சொல்லத்தயங்கியதை தன்னவள் எவ்வித தயக்கமும் இன்றி உரைத்ததை எண்ணி பூரிப்பு ஒருபுறம், தன்னுடனேயே இருக்க வேண்டும் என்ற அவளின் நினைப்பு தந்த கர்வம் மறுபுறம் என்று சந்தோஷத்தில் இருந்தான்.

ஆனாலும், தான் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட வேண்டும் என்றும் நினைத்தான். இதையெல்லாம் அவள் ஒரு பொருட்டாக கூட நினைக்க மாட்டாள் என்று நன்கு தெரிந்தாலும், அதை அவளின் வாய் வழி அறிந்து கொள்ள விரும்பினான் ரிஷப்.

“நவி, என்னோட முடிவை சொல்றதுக்கு முன்னாடி, சில விஷயங்களை சொல்லணும். நாம ரெண்டு பேரும் நார்மல் லைஃப் இப்போதைக்கு வாழ முடியாது. ‘இப்போதைக்கு’ன்னு நான் சொல்றது ‘எப்பவுமே’ன்னு கூட மாறலாம். அண்ட் நம்ம வாழ்க்கையே போராட்டமா தான் இருக்கும். எப்போ எங்க இருப்போம்னு நமக்கே தெரியாத அளவுக்கு பிஸியா இருப்போம். ஸேட்டியுல் போட்டு வாழ்றது நடக்கவே நடக்காது. அஸ் அ ஹோல், ஒரு நார்மல் வாழ்க்கையை நம்மளால வாழ முடியாது.” என்று ரிஷப் கூறிவிட்டு நவியின் பதிலை எதிர்பார்த்திருந்தான்.

நவியோ, “எனக்கு என் அம்மா அப்பா மாதிரி காதலோட வாழனும் ரிஷப். அது நார்மல் வாழ்க்கையா இருக்கணும்னு அவசியம் இல்ல.” என்ற ஒற்றை வாக்கியத்தில் அவனின் ஐயத்தை போக்கியிருக்க, அவளின் பதிலில் முகம் மலர்ந்த ரிஷப், அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு, “ஸ்யூர் நவி!” என்று முத்தமிட, நவியோ தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

இனி இருவரின் பயணமும், ஒரே வழியில் தொடர, அவர்கள் எடுத்திருக்கும் காரியம் யாவிலும் வெற்றிபெற வாழ்த்துவோம்!

இவர்களின் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலத்தில் பலரின் வாழ்வு இவ்வாறு சோதனை களமாகவே இருக்கும். ஆயினும், அதிலிருந்து ‘அன்பு’ என்ற ஆயுதம் கொண்டு மனிதத்தை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையுடன், எதிர்காலத்தை எதிர்பார்போம்!

நன்றி!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்