காட்சிப்பிழை 22
நோலன் நவியிடம் பேசப் போவதை அறிந்ததும், அவர்கள் பேசுவதை மறைகாணியின் வழியே தன்னறையில் இருந்த கணினியில் கண்ட ரிஷப் நவியின் சமாளிப்பில் சற்று நிம்மதியடைந்தான்.
மேலும், ரியானும் ரிஷபும் அவர்களின் திட்டத்தைப் பற்றி மீண்டும் ஆலோசித்து அதன் சாதக பாதகங்களை விவாதித்தனர்.
மண்ணுக்கடியில் இருக்கும் விலைமதிக்க முடியாத இயற்கை வளங்களைக் கைப்பற்ற மிகுந்த ஆர்வமுடையவர்கள் மனிதர்கள். அவர்களின் ஆர்வத்தையே தங்களின் முதலீட்டாக மாற்றும் பல நிறுவனங்களுள், இவர்களினதும் ஒன்று.
பூமிக்குள் புதைந்து இருக்கும் வளங்களை ஆராய்வதற்காக, இந்நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதுவரை பூமியைத் தோண்டிய ஆழத்தைக் காட்டிலும் உள்ளே தோண்ட ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் சில அடிகளைக் கடந்திருக்கும்போது, உள்ளிருந்து வெளியான மர்ம வாயுவினை சுவாசித்ததால், சிலர் அங்கேயே மயக்கமடைய, பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்த செய்தி வெளியே கசிந்தால், இந்த ஆராய்ச்சிக்கே பங்கம் ஏற்படும் என்பதால், இதை வெளியுலகிலிருந்து மறைக்க முயன்றனர் நிறுவனத்தினர். ஆனால், எப்படியோ இந்த செய்தி ஊடகத்தினருக்கு தெரிந்துவிட, கிடைத்ததை விடாமல் ஊடக்கத்தினரும் அதை பெரிதுபடுத்த, இந்நிகழ்வு அனைவரும் பேசும்பொருளாக மாறியது. இதில் ரியானிற்கு மறைமுக தொடர்பு இருப்பது மேலிடத்திற்கு தெரியவில்லை என்றாலும், உள்ளிருந்து ஒருவரின் உதவியால் தான் இந்த செய்தி வெளியே கசிந்தது என்பதை உணர்ந்திருந்தனர்.
அது யாரென்று ஆராய்வதற்கு முன்னர் இந்த செய்தியால் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று எண்ணிய மேலிடம், மனிதர்களுக்கு அந்த மர்ம வாயுவினால் ஏற்படும் ஆபத்துக்களை ஆராய்வதற்கு தான் அவர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்டனர்.
அதன்பின்பும் பலர் அதை எதிர்த்து கேள்வியெழுப்பினாலும், தங்களுக்கு ஆதரவாக செயல்படும் சிலரின் உதவியால், இதை விட பரபரப்பான செய்தியை மக்களின் முன் கொண்டு வந்து, இதை மறக்கடித்தனர்.
ஆயினும், மர்ம வாயு ஆராய்ச்சி என்று பதியப்பட்டதால், அதற்காக வேண்டி அந்த வாயுவை, தோண்டப்பட்ட இடத்திலிருந்து இந்த ஆராய்ச்சி கூடம் வரை பாதுகாப்பான குழாய்களின் மூலம் கொண்டு வரச் செய்து, அதை சில இளநிலை விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையில், இதையே அவர்களின் திட்டத்தின் மையப்புள்ளியாக மாற்றினர் ரிஷபின் குழுவினர். மர்ம வாயுவைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இளநிலை விஞ்ஞானிகள், ரிஷபிடம் தங்களின் சந்தேகங்களை வினவ, அதன் மூலம் அந்த மர்ம வாயுவின் வேதியியல் மாற்றங்களையும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் நன்கறிருந்திருந்தான் ரிஷப்.
அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தவனிற்கு, இந்த நிறுவனத்தை அழிப்பதற்கான ஆரம்பப்புள்ளியாக தெரிந்தது அந்த மர்ம வாயு தான். இதை அவன் தேர்ந்தெடுத்தற்கான காரணங்கள் இரண்டு…
முதலில், இந்த ஆராய்ச்சியில் ரிஷபோ அவனைச் சார்ந்தவர்களோ நேரடியாக சம்பந்தப்படவில்லை. மேலும், இதைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு மாதமாகியிருந்தது. அதனால், ரிஷபை சந்தேகப்படுபவர்கள் அத்தனை விரைவில் இந்த ஆராய்ச்சியைக் கொண்டு தான் அவர்களின் திட்டமாக உருவாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்று யோசித்திருந்தான் ரிஷப்.
தான் யோசித்த திட்டத்தினை ரியான் மற்றும் ஜாஷாவிடம் பகிர்ந்தும் கொண்டான். இந்த திட்டத்தினை செயல்படுத்தும் காலத்தை தான் மூவருமே எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அப்போது தான் நவியுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அவளையும் அவளின் அடையாளத்தையும் காக்க வேண்டி ஒருபுறம் போராடினாலும், மறுபுறம் தங்களின் திட்டத்திற்கான வெற்றிப்பாதையை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
அவர்கள் காத்திருந்த காலமும் கனிய, அந்த நிறுவனத்தின் உரிமையாளரை சந்திக்கும் அதே நாளில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினர்.
அதற்கான முதல் படியாக, மர்ம வாயுவிற்காக பூமிக்குள் குழி தோண்டப்பட்ட இடத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் சில இரசாயணங்களை கலந்து, நச்சு வாயுவாக அதை மாற்றி குழாய்களில் கொண்டு வர திட்டமிட்டு, அதை செயல்படுத்தவும் ரிஷபின் மாணவனான இளநிலை விஞ்ஞானிகளில் ஒருவனை நியமித்திருந்தனர்.
மேலும், நவியும் ரிஷபும் அந்த அறையில் இருக்க வேண்டிய காரணத்தினால், ஜாஷா மற்றும் ரியானிற்கு அந்த இடத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றுமாறு பணித்தான் ரிஷப்.
“ரியான், நான் சொன்னது ஞாபகம் இருக்கா? அந்த கேஸ் லீக்காக ஆரம்பிச்சதும், நாங்க ரெண்டு பேரும் அந்த ரூமை விட்டு வெளிய வந்துடுவோம். அதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே நான் உனக்கு சிக்னல் அனுப்புறேன். அப்போ நீ அந்த ரூமோட கண்ட்ரோலை மேனுவேலா ஓவர் ரைட் பண்ணி, ரெடியா இரு. அடுத்த சிக்னல் வந்ததும் அந்த ரூமோட கதவை லாக் பண்ணிடு. இதன்மூலமா, அந்த ஓனரோட சேர்ந்து மத்தவங்களும் உள்ளேயே இருப்பாங்க.” என்று ரிஷப் கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரியான், “உள்ள இருக்குறவங்க இறந்துடுவாங்களா என்ன?” என்று வினவினான்.
“கண்டிப்பா இறந்துவாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை சுவாசிச்சா மூளைக்கு போற நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். ஆரோக்கியமா இருக்குறவங்க, வயசு குறைவா இருக்குறவங்களுக்கு இதனால அதிகமான பாதிப்புகள் இருக்காது. ஆனா, மத்தவங்களுக்கு பாதிப்புகள் அதிகமா இருக்கும். பிபி, சுகர் இருக்குறவங்க சாகுற நிலைக்கும் போகலாம்.” என்றான் ரிஷப்.
“அப்போ இந்த இடம்?” என்று ரியான் வினவ, “ரூமோட கண்ட்ரோலை ஓவர்ரைட் பண்ணும்போதே, இந்த இடத்தோட மெயின் கன்ட்ரோல்லையும் நீ ஹேக் பண்ணி, செக்யூரிட்டிக்காக இருக்க பாம்மை ஆக்டிவேட் பண்ணிடு.” என்று ரிஷப் கூறினான்.
ரியானோ, “அப்போ நீங்க?” என்று வினவ, “நாங்களும் அதுக்குள்ள வெளிய வந்துடுவோம் ரியான். கண்டிப்பா நவியை காப்பாத்தி ஆகணும். அதுக்காகவே நான் கேர்ஃபுல்லா இருப்பேன். நீயும் ஜாஷாவும் மத்தவங்களை கூட்டிட்டு வெளிய போயிடுங்க.” என்று கூறியவன் ஒரு பெருமூச்சுடன் சிறு இடைவெளி விட்டு, “அந்த கான்ஃபெரன்ஸ் ரூம்ல மேலதிகாரிகளைத் தவிர வேற யாரும் இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்குறேன்.” என்றான்.
இப்படியாக இவர்களின் உரையாடல் முற்றுப்பெற, தங்களின் கடைசிக் கட்ட திட்டத்தினை ஜாஷாவிற்கும் தெரிவித்தனர். இவர்களின் குழுவில், இந்த திட்டம் பற்றி எதுவும் அறியாமல் இருந்தது நவி மட்டும் தான்.
*****
அடுத்த நாள் அந்த இடமே பரபரப்பாக தான் இருந்தது. அன்று காலை தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வரப்போகிறார் என்ற செய்தி பலருக்கு தெரிந்திருந்ததால் உண்டான பதட்டம் அது. டேனியல் உரிமையாளரை வரவேற்க சென்று விட்டார் என்ற தகவலும் கசிய, அனைவரும் மந்திரித்து விட்டது போலவே திரிந்தனர்.
ரிஷப் அப்போதும் நவியிடம் பேச நேரம் பார்க்க, நோலனோ கண்கொத்திப் பாம்பாக ரிஷபையும் நவியையும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
இதில் நவியை நிலை தான் சற்று மோசமாக இருந்தது. முதல் நாள், நோலன் விசாரித்து சென்ற திட்டமும், உரிமையாளர் வரப்போகும் செய்தியும் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தன.
‘என்ன திட்டம்னு எனக்கு சொல்லலையே! அன்னைக்கு ரிஷப் சொல்ல வந்தப்போ, பிரதாப் செக் பண்ண வராருன்னு சிக்னல் கிடைச்சதும் ரூமுக்கு போயிட்டோம். இன்னைக்கு அந்த திட்டத்தை பிளான் பண்ணியிருந்தாங்கன்னா, என்னவா இருக்கும்னு தெரியலையே!’ என்று அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல நவியை காலை உணவிற்கு வேலையாள் அழைத்துச் சென்றதும், இவளும் குழப்பத்துடனே அவரைப் பின்தொடர்ந்தாள்.
அப்போது தான் இருவர் நந்துவை சக்கர நாற்காலியில் அழைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தாள். அவன் விழித்திருந்தாலும், நவியைக் கண்டுகொள்ளவில்லை.
அவன் பின்னே சென்று அவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அந்த இருவரைக் கடந்து நந்துவைப் பார்ப்பது கடினம் என்று எண்ணினாள். அதனால், அவனை அழைத்து செல்லும் பாதையை மட்டும் கவனித்துக் கொண்டவள், சாப்பிடும் அறை நோக்கி நடந்தாள்.
அங்கு, வழக்கமான நிகழ்வுகளைப் போல, அனைவரும் கடமையென சாப்பிட்டுக் கொண்டிருக்க, நவியும் தனக்கான உணவை எடுத்துக் கொண்டு டோவினாவின் முன்னே அமர்ந்தாள்.
ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில், டோவினா நவியையே பார்த்துக் கொண்டிருக்க, நவியும் அவளிடம் பார்வையாலேயே என்னவென்று வினவினாள். அதற்குள் அவர்களின் அருகே வேலையாள் வந்துவிட, டோவினா குனிந்து கொண்டாள்.
இதைக் கவனித்த நவிக்கு, டோவினா இயல்பாகி விட்டாளோ என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், அந்த வேலையாளை பார்த்ததும் அவள் தன்னிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டதை பார்க்கவும், அவர்களுக்கு பயந்து தான் நடிக்கிறாளோ என்றும் யோசித்தாள்.
டோவினா மட்டுமல்ல அங்கிருந்த ஜான், டேவிட் என்று அனைவரின் பார்வையிலும் வித்தியாசம் தெரிந்தது அன்று.
அவர்கள் தெளிந்து விட்டனர் என்று வெளியில் தெரிந்தால், அவர்களை மீண்டும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி விடுவார்களோ என்று அமைதியாக இருக்கிறார்களோ என்று அவளே யூகித்துக் கொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன், ‘இங்கிருந்து தப்பித்தால் போதும்’ என்று நினைத்து அங்கிருந்து மெல்ல நழுவினாள்.
யாரின் கவனத்தையும் ஈர்க்காதவாறு, சாப்பிடும் அறையை விட்டு வெளியே சென்றவள், மெல்ல நந்துவை அழைத்துச் சென்ற பாதையில் நடந்தாள். அந்த தாழ்வாரத்தில் யாரும் இல்லாதது அவளிற்கு வசதியாக இருந்தது.
அங்கிருந்த ஒவ்வொரு அறையிலும் “நந்து…” என்று மென்குரலில் கூறிக்கொண்டே சென்றாள்.
பாதி தூரம் கடந்து சென்றும் அவனைக் காணாததால், ஒருவித பயத்துடனே நடந்தாள். அப்போது திடிரென்று பின்னிலிருந்து யாரோ அவளின் தோளைத் தொட பதறி போய் பின்னே திரும்பினாள்.
அங்கு ஜாஷா தான் மருத்துவ உபகரணங்களுடன் நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் சிறிது ஆசுவாசமடைந்த நவியைக் கண்ட ஜாஷா சிறிது கோபத்துடன், “இங்க என்ன பண்ற?” என்று வினவ, நவியோ அவளின் கோபத்தின் காரணத்தை யூகித்துக் கொண்டே, “நந்துவைப் பார்க்க வந்தேன்.” என்று கூறினாள்.
“இப்படி தான் எந்த பாதுகாப்பும் இல்லாம வருவியா? இப்போ நான் உன்னை பார்த்த மாதிரி வேற யாரும் பார்த்திருந்தா?” என்று ஜாஷா வினவினாள்.
நவி ஜாஷா கூறுவதை ஒப்புக்கொண்டாலும், நண்பனின் நிலை அறியாமல் அவளால் அறைக்குள் அடைந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
அவள் அமைதியாக நிற்க, அவளையும் அழைத்துக் கொண்டே நந்து இருக்கும் அறைக்குள் சென்றாள் ஜாஷா.
அந்த அறைக்குள் நந்து, பிரக்ஞையின்றி விட்டதைப் பார்த்து கட்டிலில் அமர்ந்திருக்க, அதைக் கண்ட நவிக்கு வருத்தமாக இருந்தது. அவளின் கவலையை உணர்ந்தது போல, ஜாஷா அவளின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்து, “இன்னும் கொஞ்ச நாள் ட்ரீட்மெண்ட் கொடுத்தா, சரியாகிடுவான்.” என்று கூறினாள்.
“அப்போ, ஜான், டேவிட், டோவினா எல்லாரும் சரியாகிட்டாங்க அப்படி தான.” என்று நவி வினவ, ஜாஷா அதை ஆமோதித்தவாறே நந்துவிற்கான சிகிச்சைகளைத் தொடர்ந்தாள்.
நவி எதையோ யோசிப்பதைக் கண்ட ஜாஷா அவளின் கேள்வியை யூகித்து அதற்கான விடையையும் அவளே கூறினாள்.
“அவங்க சரியாகிட்டாங்கன்னு தெரிஞ்சா, அவங்களையும் உன்னோட சேர்த்து இப்போ புதுசா மாற்றிருக்க சிமுலேஷன்ல அனுப்பலாம்னு பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. ரிஷபும் உன்னை தற்காலிகமா காப்பாத்த, முன்னாடி உன்னோட போனவங்க கூட உன்னையும் சிமுலேஷனுக்குள்ள அனுப்புனா, என்ன ஃபால்ட்னு கண்டுபிடிக்கலாம்னு சொல்லியிருக்கான். அதான் உன்னோட சேர்த்து அவங்களையும் காப்பாத்த இப்படி ஒரு பொய்யை மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கோம்.” என்றாள்.
நவி, தான் யூகித்தது சரி தான் என்று நினைத்தவாறே, நந்துவிற்கு ஜாஷா அளிக்கும் சிகிச்சைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென்று ஞாபகம் வந்ததைப் போல, “நீங்க என்னோட அம்மாவோட பிரெண்டாமே?” என்று நவி வினவ, அதைக் கேட்ட நொடி ஜாஷாவின் கரங்களோ சற்று தாமதித்து மீண்டும் செயல்பட துவங்கின.
ஜாஷாவிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை என்றாலும் நவி மேலும் தொடர்ந்தாள்.
“நான் பிறந்தப்போ கூட நீங்க அம்மாவோட இருந்தீங்கன்னு ரிஷப் சொன்னாரு.” என்று நவியின் குரல் ஏக்கத்துடன் ஒலிக்க, அதற்கு மேலும் தன் மௌனத்தை கொடுத்து அவளை வாட்ட விரும்பாதவளாக, “உன்னோட அம்மாக்கும் அப்பாக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் நவி.” என்றாள் ஜாஷா.
இரண்டாம் முறையாக தன் பெற்றோர்களைப் பற்றிய செய்திகள் நவியின் செவியை எட்ட, அதை அவள் மிகுந்த ஆர்வத்துடனே எதிர்கொண்டாள். முதல் முறை போல குழப்ப நிலையில் இல்லாமல், மனம் முழுவதும் மகிழ்வுடனே கேட்க ஆரம்பித்தாள்.
“உன்னை ஏன் ஆசிரமத்துல விட்டாங்கங்கிற விஷயமெல்லாம் ரிஷப் ஏற்கனவே உனக்கு சொல்லியிருப்பான்னு தெரியும். அவனுக்கு தான் அவங்க மேல தனி பாசம். ஆனா, உன்னை அவங்க எப்பவுமே மறந்ததே இல்ல. உன்னோட ஒவ்வொரு பெர்த் டேக்கும் அவங்க ஹாலிடேன்னு சொல்லி வெளிய போயிடுவாங்க. இங்க எல்லாருக்கும் இறந்து போன மகளை நினைச்சு வருத்தம்னு சொல்லிக்கிட்டாலும், எங்க அவங்க உன்னைப் பத்தி பேசுறது இங்க யாருக்காவது தெரிஞ்சுடுமோன்னு நினைச்சு தான், அன்னைக்கு ஒரு நாளாச்சும் உனக்காக ஒதுக்க நினைச்சாங்க.” என்று ஜாஷா கூற, நவிக்கு ஒருபுறம் பெற்றோருடன் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவர்கள் தன் மேல் கொண்ட அன்பினில் மனம் மகிழவே செய்தாள்.
“அவங்க உன்மேல வச்ச பாசத்தை பார்த்த எனக்கே எனக்குன்னு குழந்தை இருந்தா நானும் இப்படி தான் இருந்துருப்பேனோன்னு கூட யோசிச்சுருக்கேன். ஆனா, என்ன பண்றது? நான் செஞ்ச பாவம் எனக்கு அப்பறம் என் சந்ததிகளை சேர வேண்டாம்னு கடவுள் நினைச்சுட்டாரோ என்னவோ!” என்று ஜாஷா விரக்தியுடன் கூற, அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் நவி.
சில நிமிடங்கள் அப்படியே கழிய, அவர்களை நிகழ்வுக்கு அழைத்து வந்தது நந்து கீழே தட்டிவிட்ட பாத்திரம் தான். மேசையின் மீதிருந்த தண்ணீர் குவளையை எடுக்க வேண்டி, அவனின் நடுங்கும் கரத்தால் அதைப் பிடிக்க முயல, அது அவனின் கரத்திற்கு போக்கு காட்டியபடி கீழே விழுந்தது.
அதில் சுயத்தை அடைந்த ஜாஷா கண்ணோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்துவிட்டு, “உன் பிரெண்டை பார்த்தாச்சுன்னா கிளம்பலாம். இங்க ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்.” என்று எச்சரிக்க, நவியும் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்த நந்துவின் கரத்தை அழுத்திவிட்டு வெளியே சென்றாள்.
அவளைப் பின்தொடர்ந்து வந்த ஜாஷா, அறைக்கதவை மூடிவிட்டு, “இன்னைக்கு தான் எங்களோட பிளானை எக்சிகியூட் பண்ண போறோம்.” என்று சொல்லும்போதே, மற்றவர்கள் நடந்து வரும் சத்தம் கேட்க, இதற்கு மேல் பேச முடியாது என்று நினைத்த ஜாஷா, “இங்க பாரு நவி, இனி என்ன நடந்தாலும் ரிஷப் சொல்றதைக் கேட்டு நட.” என்று அவளின் காதுகளில் கூற, ஜாஷா கூறுவது எதற்கு என்று தெரியாவிட்டாலும் தலையை ஆட்டினாள் நவி.
அதற்குள், அங்கு வேலை செய்பவர்கள் வர, அவர்களை நோக்கி, “இது தான் நீங்க வேலை பார்க்குற இலட்சணமா? இந்த பொண்ணு இங்க காரிடர்ல உலவிட்டு இருந்தா. இனி இப்படி கேர்லெசா இருந்தீங்கன்னா மேலிடத்துல கம்ப்லைன் பண்ண வேண்டியதிருக்கும் என்று அவர்களிடம் சத்தம் போட்டவாறே, நவியை அவளின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்து கிளம்பும்போது, “ஆல் தி பெஸ்ட்!” என்று வாயசைத்து செல்ல, நவிக்கு அத்தனை நேரம் இல்லாத பயம் அப்போது தான் உண்டானது.
*****
சில மணி நேரங்கள் கழிந்தன. அந்த இடத்தின் உரிமையாயாளர் அங்கு வந்து விட்டார் என்ற தகவல் கிடைக்க, எப்போதும் இல்லாத வகையில் அன்று சுறுசுறுப்பாக காணப்பட்ட பிரசாத், ரிஷபிடம் நவியை அழைத்து வர பணித்தார்.
“நம்ம பாஸுக்கு அந்த பொண்ணை மீட் பண்றதுல அவ்ளோ ஆர்வம்!” என்று பிரசாத் நோலனிடம் கேலியாக கூறி ரிஷபை நோக்க, அந்த பார்வையை ஏதோ தவறாக நடப்பதற்கான அறிகுறியாக ரிஷபிற்கு தோன்றியது.
“அதுவுமில்லாம அந்த சிமுலேஷன்ல இருந்து வெளிய வந்த செய்தி கிடைச்சதும் தான் பாஸ் உடனே இங்க வரணும்னு சொன்னாராமே.” என்று நோலனும் அவனின் பங்கிற்கு பேச, ரிஷப் உறுதியே செய்து விட்டான், நவியைப் பற்றிய செய்திகளை அறிந்து தான் உரிமையாளர் இங்கு வருகிறார் என்பதை.
நவிக்கு துணையாக தானும் இருப்பதையும் அறிந்து கொண்டார் என்பதை தான் நோலன் இவ்வாறு கூறுகிறான் என்பதும் புரிந்து தான் இருந்தது ரிஷபிற்கு. அப்போதைய அவனின் ஒரே நிம்மதியாக இருந்தது, தங்களின் திட்டம் பற்றி யாரும் அறியாதது தான்.
அதற்கு மேல் அங்கிருந்து நேரத்தை வீணடிக்காமல், நவியை இந்த சூழலுக்கு தயாராக்கலாம் என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்ப, மற்ற இருவரின் பார்வையும் அவனைத் தான் துளைத்தது.
ரிஷப் நவியின் அறைக்குச் செல்ல, அங்கு நவியோ பதட்டதுடன் அந்த அறையின் அகலத்தை அளந்து கொண்டு இருந்தாள்.
ரிஷபைக் கண்டதும் அவள் ஏதோ கேட்க வர, “இப்போ கேள்வி கேட்குறதுக்கு எல்லாம் நேரமில்ல நவி. லுக் இன்னும் கொஞ்ச நேரத்துல பாஸ் வந்துடுவாரு. அண்ட் நீ அந்த சிமுலேஷன்ல இருந்து வெளிய வரதுக்கு நாங்க தான் ஹெல்ப் பண்ணியிருக்கோம்னும் அவருக்கு தெரிஞ்சுருச்சு போல.” என்று ரிஷப் கூற, நவி பதட்டத்தின் உச்சத்தை அடைந்தாள்.
அப்போது அவளை சமாதானப்படுத்தும் அவகாசம் கூட இல்லை என்பதால் ரிஷப் அப்படியே தொடர்ந்தான்.
“நேத்தே உன்கிட்ட எங்களோட பிளான்னை சொல்லணும்னு நினைச்சோம். ஆனா, நோலன் எப்போவுமே நம்மள கண்காணிச்சுட்டு இருந்ததால சொல்ல முடியல.” என்றவன் அங்கிருந்த மறைகாணியைப் பார்த்து, “இப்போவும் சொல்ல முடியாது.” என்று கூறினான்.
நவிக்கு இருந்த பரபரப்பில் ரிஷப் கூறியதை சரியாக புரிந்து கொள்ள இயலாவிடினும், மறைகாணியின் மூலம் அவர்களின் காணொளியைக் கண்டு கொண்டிருந்த நோலனிற்கு புரிந்தது. இப்போதாவது அவர்களின் திட்டத்தை அறிந்து கொள்ளலாம் என்று நினைக்க, அதுவும் முடியாமல் போனதில், வெறுத்து அங்கிருந்து சென்றான் நோலன்.
ரிஷபோ தன் பார்வையை நவியிடம் திருப்ப, அவளின் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டதும், “நீ என்னை நம்புற தான?” என்று வினவினான்.
அவளின் வாழ்வில் என்ன நடக்கிறதென்று தெரியாமல் இருந்தபோதே, சூழ்நிலை யாவும் அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று காட்டியபோதே அவனை நம்பியவள் ஆயிற்றே, இப்போதா நம்பாமல் இருக்கப் போகிறாள்!
அவனின் கேள்விக்கு எதிர்வினையாக அவள் தலையை மட்டும் அசைக்க, வேறு எதுவும் பேசாமல் அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
*****
அவர்கள் அந்த ஆராய்ச்சி அறையை நெருங்கும்போதே, அங்கிருந்து வந்த சலசலப்பில் உரிமையாளர் வந்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்டனர். இவர்கள் உள்ளே நுழையும்போதே, ரியானும் அவன் பின்னே ஜாஷாவும் வெளியே வர, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் அவர்களிடம் கண்ணசைவில் செய்தி சொல்ல அவர்களும் அதே மொழியில் பதிலை சொல்லிவிட்டு சென்றனர்.
உள்ளே சென்ற இருவருக்கும், அங்கு உரிமையாளராக நின்றிருந்தவரைக் கண்டு அத்தனை அதிர்ச்சி. அவரைப் பார்த்ததும் தான் அவர்கள் இந்த இடத்திற்கு வந்ததற்கான காரணம் புரிவதைப் போல இருந்தது.
இருவரும் அறையின் வாயிலில் நிற்பதை முதலில் கண்டவர் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், நவி வளர்ந்த ஆசிரமத்தின் அறங்காவலருமான ஹேமந்த் தான்.
“என்ன ரெண்டு பேரும் ஷாக்காகி நின்னுட்டீங்க? கம் கம் உங்களைத் தான் பார்க்கணும்னு இங்க வந்துருக்கேன்.” என்று ஹேமந்த் அவர்களை வரவேற்க, இருவரும் அப்போது தான் சுயத்தை அடைந்தனர்.
இதே போல பல சூழ்நிலைகளை கடந்திருந்ததால் ரிஷப் அதிலிருந்து மீண்டிருக்க, நவி தன்னையும் மீறி, “நீங்களா?” என்று கேட்டிருந்தாள்.
“ஹா, பரவாலையே ஞாபகம் இருக்கு போலயே. இதுவரைக்கும் இந்த ரிசர்ச் பண்ணவங்க யாருக்கும் இந்த அளவுக்கு நியாபக சக்தி இல்லன்னு கேள்விப்பட்டேனே.” என்று கூறிவிட்டு பிரதாப்பையும் நோலனையும் நோக்கி அர்த்தப் பார்வை வீசினார். அதை ரிஷபும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அடுத்ததாக ரிஷபின் புறம் திரும்பிய ஹேமந்த், “ரிஷப், உங்களைப் பத்தி தான் இந்த ரிசர்ச் ஃபெசிலிட்டில இருக்க எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. மிஸ்டர் அண்ட் மிசஸ் கிருஷ்ணாக்கு அப்பறம் நீங்க தான் இங்க டெடிக்கேட்டடா ஒர்க் பண்றீங்களாமே. இன்ஃபேக்ட் உங்க ஓர்க்கிங் ஸ்டைல் கூட அப்படியே அவங்களை மாதிரியே இருக்கும்னு டேனியல் சொன்னாரு.” என்றவர், நவியை நோக்கியபடியே, “அவங்களை மாதிரியே எமோஷன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்கன்னு இப்போ தான் தெரியுது.” என்று சிரித்துக் கொண்டே கூறியவர், அவனருகே சென்று, “எப்பவும் நான் உனக்கு மேல தான்னு இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியா?” என்று அவனிடம் கைகுலுக்கிவிட்டு அகன்றார்.
ஹேமந்த் சென்ற பின்னரும், அவர் சென்ற திசையையே முறைத்துக் கொண்டு நின்ற ரிஷபைக் கண்ட நவிக்கு ஏதோ சரியில்லாதவாறு தோன்ற, அவனை உலுக்கினாள்.
அதில் அவன் சுயத்தை அடைந்ததும், “என்னாச்சு ரிஷப்?” என்று வினவ, அவனோ ஒரு பெருமூச்சுடன், “எனக்கும் அவருக்கும் சில பழைய கணக்குகள் இருக்கு. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று கூறினான்.
“அப்போ உங்களுக்கும் இவர் தான் ஓனருன்னு இன்னைக்கு தான் தெரியுமா?” என்று நவி வினவ, “ம்ம்ம் நான் இங்க வந்து சேர்ந்த சில வருஷங்கள்லயே, இந்த ஆர்கனைஷேஷன் வேற ஒருத்தருக்கு கை மாறிடுச்சுன்னு சொன்னாங்க. அப்போ இருந்து இவரு இந்த பக்கம் வந்ததே இல்ல. சோ எனக்கு மட்டுமில்ல இங்க இருக்க பலருக்கும் இவரு தான் ஓனர்னு தெரிய வாய்ப்பில்லை.” என்றான் ரிஷப்.
“ஹ்ம்ம், இவரோட ஆசிரமத்துல தான் நானும் நந்துவும் தங்கியிருந்தோம். இவருக்கிட்ட வேலை கேட்டது தான் எனக்கு கடைசியா ஞாபகம் இருக்கு.” என்று நவி கூற, “எனக்கு இங்க வேலை கிடைச்சதுல கூட இவரோட பங்கு இருக்கும்னு இப்போ தோணுது.” என்றான் ரிஷப்.
அப்போது தான் நவிக்கு ரிஷப் கூறிய பழைய கணக்கு நினைவிற்கு வர, அதைப் பற்றி அவனிடம் விசாரித்தாள்.
“அது நான் காலேஜ் படிச்சப்போ ஒரு சின்ன பிரச்சனை. நான் படிச்ச காலேஜ்ல இவரும் ஒரு பார்ட்னர். அப்போ அந்த பிரச்சனைல இவருக்கு எதிரா நான் நின்னதால, எனக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது. அப்போ ஆரம்பிச்ச பிரச்சனை காலேஜ் முடியுற வரைக்கும் கூட கன்டின்யூ ஆச்சு.” என்று ரிஷப் விளக்க, அப்போது தான் அந்த அறையில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்ததை அறிந்தனர்.
அதில் ரிஷப் சுதாரிக்க, அவனின் சுதாரிப்பிற்காகவே அவகாசம் கொடுத்தது போல, “அப்பறம் ரிஷப், என்னோட ஆர்கனைஷேஷன்ல, எனக்கே தெரியாம சில விஷயங்கள் நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்.” என்று ஹேமந்த் விசாரணையை ஆரம்பிக்க, ரிஷபோ, “அப்படியா சார், உங்களுக்கே இப்போ தான் தெரியுங்கிறப்போ எனக்கு எப்படி தெரியும் சார்? யாரு அப்படி சொன்னாங்களோ அவங்கிட்டயே விசாரிங்களேன்.” என்று முகத்தில் எவ்வித பாவனையையும் காட்டவில்லை என்றாலும், குரலில் எக்கச்சக்கமாக நக்கலை தேக்கி வைத்தே கூறினான்.
அதில் கோபம் கொண்ட ஹேமந்த், “ஓகே வெளிப்படையாவே சொல்றேன். நீங்களும் உங்க குரூப்பும் சேர்ந்து இதோ இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. அதனால தான் இந்த பொண்ணு சிமுலேஷன்ல எந்தவித பாதிப்பும் இல்லாம வெளிய வந்தா.” என்று கூற, நவிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ரிஷபிற்கு நவியின் அளவிற்கு அதிர்ச்சி இல்லை. இதை எப்படி சமாளிக்க என்றே அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“இதுக்கு உங்ககிட்ட ப்ரூஃப் இருக்கா? நாங்க எதுக்கு தேவையில்லாம இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணனும்? சிமுலேஷன் வீக்கா இருக்கு, அதை அப்டேட் பண்ண நாள் வேணும்னு கேட்டதுக்கு எங்களையே அக்யூஸ் பண்ணுவீங்களா?” என்று ரிஷப் சற்று கோபமாகவே பேசினான்.
சூழ்நிலை தீவிரம் அடைந்தால் தான், அந்த இடத்திலிருந்து தப்பிக்க வழி கிடைக்கும் என்பதே ரிஷபின் இத்தகைய செயலுக்கான காரணம்.
“என்ன ப்ரூஃப்பா? உங்க பிளான்னிங்குக்கு ப்ரூஃப்பா இருந்த சிசிடிவி ஃபூட்டேஜஸை தான் நீங்க டெலிட் பண்ணிட்டீங்களே.” என்று பிரதாப் கூற, “அதுக்கு யாரு ரெஸ்பான்சிபிலோ அவங்களை கேளுங்க. எதுக்கு என்கிட்ட இப்படி விசாரிச்சுட்டு இருக்கீங்க?” என்று அப்போதும் அலட்சியமாகவே பதில் கூறினான் ரிஷப்.
எப்போதும் இல்லாத வகையில் இருந்த அவனின் எதிர்வினையைக் கண்டு நவி மற்றும் நோலன் குழப்பமாக பார்க்க, மற்ற இருவருக்கும் அவனின் மாறுபட்ட நடவடிக்கை தெரியவில்லை போலும்.
“ப்ச், உன் வாயில இருந்து உண்மையை வரவைக்கலாம்னு நினைச்சா, கடைசி வரைக்கும் இப்படியே மழுப்பிட்டே தான் இருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும். நேரடியாவே கேட்குறேன், மிஸ்டர் அண்ட் மிசஸ் கிருஷ்ணாவோட பொண்ணு தான் இந்த கிருஷ்ணவின்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சும் ஏன் எங்ககிட்ட சொல்லல?” என்றார் ஹேமந்த்.
அத்தனை நேரமிருந்த இலகு பாவம் மறைய ஒருவித இறுக்கத்துடன் நோலனை முறைத்தான் ரிஷப்.
அவனோ உதட்டோரம் வளைந்த புன்னகையுடன், “இறுதி வரை சொல்ல மாட்டேன்னு சொன்னேன் தான். ஆனா, யாரோட இறுதின்னு சொல்லலையே!” என்று கோணல் சிரிப்புடன் கூறினான் நோலன்.
அப்போதும், “மிஸ்டர் அண்ட் மிசஸ் கிருஷ்ணாவோட பொண்ணா இருந்தா உங்ககிட்ட சொல்லணும்னு எந்த ரூல்சஸும் போட்ட மாதிரி தெரியலையே. அந்த ரிசர்ச்சுக்கு தேவையான எல்லா டிடெயில்ஸும் நான் என்னோட சீனியருக்கு கொடுத்துட்டேன். இதுல என் தப்பு என்ன இருக்கு?” என்றான் ரிஷப்.
“ரிஷப், எங்களை கோபப்படுத்தாம, உன்னோட பிளான் எல்லாம் சொல்லிட்டேனா நீ இந்த உலகத்தோட ஏதோவொரு மூலையில வாழவாவது செய்யலாம். இல்லன்னா உன்னோட மெண்டார்ஸ் மாதிரி நீயும் தற்கொலை செய்ய வேண்டியதாயிருக்கும்.” என்று பிரதாப் கூற, அவர் கூற்றிலிருந்த ‘தற்கொலை’ ரிஷபை யோசிக்க வைத்தது.
“ஆமா ரிஷப், நீ என்ன நினைச்சுட்டு இருக்க, அவங்க உனக்காக இறந்தங்கன்னா? அவங்களால அதை சமாளிக்க முடியாதுன்னா நினைச்சுட்டு இருக்க?” என்று நக்கலாக பேசுவது இப்போது ஹேமந்தின் முறையானது.
அவரின் குரலிலிருந்தே ஏதோ பெரிய விஷயம் வெளிவரப்போகிறது என்பதை அறிந்த ரிஷப் அமைதியாக ஹேமந்தை கவனிக்க, அவரோ கேலிச் சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“உன்னோட மெண்டார்ஸோட பொண்ணு உயிரோட இருக்குறது எங்களுக்கு முன்னாடியே தெரியும். அதே சமயம் உங்க மெண்டார்ஸ் எங்களுக்கு ஒத்துழைக்காம, எங்களுக்கு எதிரான ஆதாரங்களையும் தகவல்களையும் வெளிய கசியவிடுறதைக் கேள்விப்பட்டோம். சோ எப்பவும் போல, அவங்க பொண்ணை வச்சு கார்னர் பண்ண நினைச்சோம். ஆனா, இந்த முறை ப்ராஜெக்ட் செய்யுறதுக்கு இல்ல, அவங்க தற்கொலை பண்ணிக்கிறதுக்கு.” என்று நிறுத்த, இம்முறை ரிஷபே கலங்கி நின்றான் என்றால் நவியின் நிலையை வார்த்தகளால் சொல்லவும் வேண்டுமோ!
கூடுதலாக அங்கிருந்த நோலனும் அதிர்ந்து தான் போனான். அவனிற்கும் இந்த செய்தி புதிது தான் போலும்!
இருவரின் மனதவிப்பை அறியாதவாறு, அவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிய கதையைத் தொடர்ந்தார் ஹேமந்த்.
“அவங்க பொண்ணு இருக்குறப்போ, இனி அவங்க எதுக்கு? ஆனா, எனக்கு தெரியாததெல்லாம், அவங்க பொண்ணு என் ஆசிரமத்துலயே வளர்ந்தது தான்.” என்று நிறுத்தி நவியைக் காண, அவளோ அவரைப் பார்ப்பதற்கே பிடிக்காமல் திரும்பிக் கொண்டாள்.
“சோ ரிஷப், இப்போ முடிவு பண்ணலாமா, உன் பிளான்னை எங்ககிட்ட சொல்றியா இல்லையான்னு?” என்று ஹேமந்த் வினவினார். கேள்வி ரிஷபிடம் இருந்தாலும் பார்வை முழுக்க நவியிடம் தான்.
ரிஷப் சிறிது யோசனைக்குப் பின், அவர்களுக்கு பின்னிருந்த பெரிய கணினியை நோக்கி கையை நீட்டி, “நீங்க இங்க தான் வருவீங்கன்னு தெரியும். அதான் அந்த ஹை ஸ்பீட் கம்ப்யூட்டர்ல ரியானை சில மாடிஃபிகேஷன்ஸ் பண்ண சொல்லி இந்த ரூமையே வெடிக்க வைக்க பிளான் பண்ணேன்.” என்று கூற, அங்கிருந்த மூவரும் அந்த கணினியை நோக்கி விரைந்தனர்.
“இம்பாசிபில்!” என்று புலம்பிக் கொண்டே பிரதாப் அந்த கணினியில் புதிதாக ஏதாவது நிறுவப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, மற்ற இருவரும் அதையே பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் நோலனிற்கு ஏதோ தவறாக தோன்ற, “இந்த ரூம் பிளாஸ்ட்டானா, எங்க கூட நீங்க ரெண்டு பேரும் தான இறந்துடுவீங்க.” என்றவாறே திரும்ப, அங்கு ரிஷப் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான்.
“கேள்வி சரி தான், ஆனா இதை முன்னாடியே கேட்டுருக்கணுமே!” என்ற ரிஷப் அந்த துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்ட, “”எங்களை சுட்டுடுவியா?” என்று ஹேமந்த் அலட்சியமாக வினவினார்.
அதற்கு ஹேமந்தைப் பார்த்து சிரித்த ரிஷப், “நான் எதுக்கு உங்களை சுடனும்?” என்றவன் கணப்பொழுதில் அந்த அறையின் உள்ளே ஊடுருவிச் செல்லும் மர்ம வாயு குழாயை சுட, மற்ற மூவரும் அதிர்ந்து தான் போயினர்.
“உங்க ஆர்கனைஷேஷனோட ஆராய்ச்சிக்கு நீங்களே டெஸ்ட் ரேட்டா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டீங்கள! இவ்ளோ நாள் மத்தவங்களுக்கு பண்ணதை நீங்க அனுபவிங்க.” என்ற ரிஷப், இத்தனை நேரமும் தன் நினைவிலேயே மூழ்கியிருந்த நவியை இழுத்துக் கொண்டு, அப்போது திறந்த அந்த அறையின் கதவு வழியே வெளியே செல்ல, அவன் சென்றதும் சட்டென்று மூடிக் கொண்டது அந்த கதவு.
மூவரும் அந்த கண்ணாடி கதவின் மறுபுறம் அதைத் திறக்க முயற்சிக்க, ரிஷப் சில நொடிகளுக்கு முன்னே நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான்..
நவியை அவர்கள் இலக்காக்கிய அந்த நொடியே, ரிஷப் தன் காலசராய் பைக்குள் இருந்த அவன் கரம் கொண்டு, அவனிடமிருந்த இயந்திரத்தின் விசையை அழுத்தி சமிக்ஞையை ரியானிற்கு அனுப்பிவிட, அவனும் உடனே தன் வேலையை ஆரம்பித்திருந்தான்.
அதை நினைத்தவாறே உள்ளிருந்தவர்களைப் பார்க்க, ஹேமந்த் அப்போதும் அவனிடமிருந்த கட்டுப்படுத்தியை எடுத்து ஏதோ கூறினார். அவர் கூறுவது கேட்காவிட்டாலும், அவரின் செய்கையே, அதைக் கொண்டு அந்த கதவைத் திறக்க முயற்சிக்கிறார் என்று ரிஷபிற்கு புரிந்தது.
ஆனால், அவர் எவ்வளவு முயற்சித்தும் அந்த கதவைத் திறக்க முடியவில்லை. ரியானின் செயலை மனதிற்குள் பாராட்டிக் கொண்டே, ஹேமந்த்தை கேலியாக நோக்கினான்.
அப்போது மீண்டும் அந்த கட்டுப்படுத்தியைக் காட்டி அவர் கோபமாக ஏதோ சொல்ல, அதை என்னவென்று அவரின் வாயசைவிலிருந்தது கிரகிக்க முயன்றான் ரிஷப்.
அவன் கிரகித்த விஷயம் பதட்டத்தை தர, அவன் என்ன செய்வது என்று யோசிக்கும்போதே யாரோ அவனையும் நவியையும் தள்ளியிருக்க, அவர்களின் முன்னே இரும்புக் கதவு, அவர்களுக்கும் அந்த ஆராய்ச்சி அறைக்கு அடுத்து இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையே முளைத்தது.
அத்தனை நேரமிருந்த வருத்தம், குழப்பம் ஆகியவற்றிலிருந்து அப்போது தான் விடுபட்ட நவி, தங்களை தள்ளியது யாரென்று பார்க்க, அங்கு கையில் டேப்பும் காதில் செவிபேசியுடனும் நின்றிருந்தான் ரியான்.
அவனின் தோற்றமே, ஹேமந்த் கூறியதைக் கேட்டிருக்கிறான் என்பதைக் கூறியது. அது தெரியாத நவி ‘ஏன்’ என்று கேள்வியாக ரியானை நோக்க, ரிஷபும் அதே கேள்வியுடன் தான் நோக்கினான்.
இருவரையும் பார்த்து வெற்று சிரிப்புடன், “சீக்கிரம் மேல இருக்க கிருஷ்ணா சார் ரூமுக்கு போங்க. அங்க இருக்க சீக்ரெட் ரூமுக்குள்ள, ஆட்டோமேட்டட் ஜெட் இருக்கு. நீங்க போறதுக்கான லொகேஷனை நான் ஏற்கானவே ஃபீட் பண்ணிட்டேன்.” என்றவன், ரிஷபிடம், “நவியை எப்படியாவது காப்பாத்தணும்.” என்று முன்னர் அவன் கூறியதை அவனிடமே கூறினான்.
நவிக்கு தான் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. ‘நாங்க மட்டும் ஏன் போகணும்? இவங்க எல்லாரும் எப்போ வருவாங்க?’ என்று சிந்தித்தவாறே அந்த இரும்புக் கதவருகே செல்ல, கதவிற்கு அந்த பக்கமிருந்து ரியானும், இந்த பக்கமிருந்து ரிஷபும், “நோ, அந்த கதவை தொடாத. அதுல கரண்ட் பாசாகுது.” என்று அவளை எச்சரித்தனர்.
நவிக்கு ஏதோ புரிவது போலிருக்க, அவள் பதிலுக்காக ரிஷபைக் காண, அவனோ அவளின் பார்வையைத் தவிர்த்து ரியானைப் பார்த்தான்.
“ரொம்ப குறைவான நேரம் தான் இருக்கு. சீக்கிரம் போங்க ப்ரோ.” என்று ரியான் கூற, அவனை கவலையுடன் பார்த்த ரிஷப், “சாரி ரியான்!” என்றான்.
‘கண்டிப்பா ஏதோ தப்பா நடக்கப் போகுது!’ என்று நவியின் மனம் எச்சரிக்க, அவள் சுதாரிக்க நேரம் கொடுக்காமல், அவளை இழுத்துக் கொண்டு மாடி நோக்கி ஓடினான் ரிஷப்.
“ரிஷப், இப்போ நம்ம எங்க போறோம்?”
“ஏன் அவங்க யாரும் வரல?”
“அந்த மூணு பேருக்கும் என்ன ஆகும்?”
“இங்க என்ன தான் நடக்குது?”
இப்படி கேட்ட நவியின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தவனை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள் நவி. தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் தாக்கத்தாலும், அவை ஏற்படுத்திய விளைவுகளிலிருந்து அத்தனை எளிதில் வெளிவர முடியாததாலும், அவளால் அப்போதைக்கு கேள்வி மட்டுமே கேட்க முடிந்தது.
ரியான் கூறியதைப் போல, நவியின் பெற்றோர் அறைக்குள் இருந்த ரகசிய அறையை அடைந்து, அங்கிருந்த அதிவேக விமானத்தையும் கண்டு கொண்டனர்.
நேரத்தை சிறிதும் வீணாக்காமல், அவளை அதில் ஏறச் சொல்லிய ரிஷப், தானும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அதை இயக்கினான். ரிஷப் அவனின் கைரேகை கொண்டு அதை உயிர்ப்பித்தான்.
அவன் செய்வதை நவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் தோன்றிய பதட்டம் இன்னும் குறைந்த பாடில்லை.
அவன் அந்த விமானத்தை உயிர்ப்பித்ததும், தன்னியக்க ஓட்டி (ஆட்டோ பைலட்) முறையில் அதுவே அவர்களை அந்த கட்டிடத்திற்கு வெளியே அழைத்துச் சென்றது.
சிறிது தூரம் சென்றதும், “இப்போயாச்சும் சொல்லுங்க, ஏன் நம்ம மட்டும் இதுல போறோம்? அவங்க எல்லாரும் எப்போ வருவாங்க?” என்று வினவினாள் நவி.
அவனோ அவளைப் பார்க்காமல், “நம்ம மட்டும் தான் போறோம்!” என்று கூறினான்.
நவியோ எச்சிலை விழுங்கியவாறு, “அப்படின்னா?” என்று வினவ, அவள் கேள்விக்கான பதிலாக பெரிய சத்தத்துடன் வெடித்தது அந்த கட்டிடம்.
தொடரும்…