
அத்தியாயம் 22
இப்படியே இரண்டு நாள் கழிய, இவர்களின் காதல், எப்பொழுதும் போல கேலியும் கிண்டலுமாகச் சென்றது.
அன்று திங்கள் கிழமை, பரிதி இத்தனை நாள் கழித்து மீண்டும் தனது அலுவகத்திற்கு செல்ல புத்தம் புது உணர்வுடன் தயாராகிக் கொண்டிருந்தான்.
மூவரும் எப்பொழுதும் போல கிளம்பி வர, அதைப் பார்த்த மங்களத்திற்கு இன்று தான் மனதினில் இருந்த குறை மட்டுப்பட்ட உணர்வு.
அகத்தின் அழகு முகத்தில் தோன்றும் என்று சொல்லுவார்கள். அது போல அவரது அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாய் தெரிய, அதை கண்ட பரிதியின் முகத்திலும் புன்னகையே.
“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ம்மா..” என்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, விநாயகமும் மல்லிகாவும் அங்கு வந்தனர்.
“பரிதி.. இன்னைக்கு திரும்பவும் பழையபடி நீ கிளம்பிட்ட.. ஆல் தி பெஸ்ட்..” என்று விநாயகம் வாழ்த்துக்கள் சொல்ல,
“தேங்க்ஸ் மாமா..” என்றவன், பூஜை அறைக்குச் சென்று அங்கு வேண்டிக் கொண்டு, பின் அனைவரும் சேர்ந்தே காலை உணவு உண்டனர்.
விநாயகம் வெளியில் கிளம்பி விட, பரிதி இனியன் மற்றும் வைஷு மூவரும் அலுவலகம் கிளம்பினர்.
அலுவலகிற்கு வந்ததும் அங்கு இருந்த ஊழியர்கள் அனைவரும் அவனுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்று, அவனை நலம் விசாரித்தனர்.
“உங்க அன்புக்கு ரொம்ப நன்றி அண்ட் இப்போ நான் ரொம்ப நல்லா இருக்கேன். தேங்க்யூ கைஸ்..” என்றவன் அவர்களிடம் விடை பெற்று தனது அறைக்குள் நுழைந்தான்.
அவன் பின்னாலேயே வைஷு செல்ல, இனியனோ அவனது அறைக்குள் நுழையும் முன்பு வைஷுவின் பின் பக்கத்தில் மெல்லமாக ஒரு அடி அடிக்க, அவளோ பின்னால் திரும்பி “கொல்லப்போறேன் பாரு..” என்று மெல்ல வாய் அசைத்து சொல்லிவிட்டுச் செல்ல, அவனோ மென் புன்னகையை அவளை பார்த்து வீசி விட்டு அவன் அறைக்குள் நுழைந்தான்.
பரிதி, மேனேஜரை அழைத்து இத்தனை நாள் தான் பார்க்காத கோப்புகளை எல்லாம் எடுத்து வரும் படி சொல்லி, அதனைப் பார்த்து கொண்டிருந்தான்.
அதனை இனியன் மற்றும் வைஷு பார்த்து இருந்தாலும், தானும் ஒரு முறை பார்ப்பது நல்லது என்று அதனை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருக்க, நடு நடுவே எழும் சந்தேகத்தை வைஷுவிடம் கேட்டு தெளிவு படுத்தியும் கொண்டான்.
அங்கு வேலைகளை முடித்தவன், வைஷுவிடமும் இனியனிடமும் கூறி விட்டு, தொழிற்சாலைக்குச் சென்றான்.
அதே சமயம் விக்ரமை கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு, இன்றிலிருந்து நிரஞ்சனாவும் அலுவலகம் கிளம்பினாள்.
அங்கு சென்று தனது வேலைக்கான உத்தரவு கடிதத்தை காண்பித்து, வேலையில் சேர, புதிதாக சேர்ந்த மூன்று பேரையும், அங்கு ஏற்கனவே பணி புரியும் நபரின் கீழ் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு வேலைகளை கற்றுத் தரும் படி பணிக்கப்பட்டது.
அதன் படி காயத்ரியின் கீழ் நிரஞ்சனா அமர்த்தப்பட்டாள் . காயத்ரியே கேட்டு, நிரஞ்சனாவை தனக்கு கீழ் அமர்த்தும் படி ஏற்கனவே சொல்லி வைத்து இருந்ததால் அவர்களும் அவ்வாறே செய்தனர்.
இருவரும் வேலை நேரத்தில் வேலையை பற்றி கலந்து ஆலோசிக்கவும், நிரஞ்சனாவுக்கு கற்றுக்கொடுக்கவும், மற்ற நேரத்தில் பழைய கதைகளை பேசி சிரிக்கவும் என அவர்களின் நேரம் கழிந்தது.
தொழிற்சாலைக்கு, வெகுநாள் கழித்து வந்த முதலாலியைக் கண்டதும் நலம் விசாரிப்புகள் எல்லாம் முடிந்ததும், அங்கு இருந்த மேனேஜரை தனது அறைக்கு வரும் படி அவன் முன்னே சென்றான்.
“சொல்லுங்க சார்..” என்று அவர் பணிவுடன் நிற்க,
“இப்போ நம்ம கம்பெனில என்ன என்ன ப்ரோடக்ட் மேனுஃபேக்சரிங் ஆகிட்டு இருக்கு..” என்று கேட்க,
“சார்.. எப்பவும் போல லெதர் ப்ரோடக்ட்ஸ் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாம போய்ட்டு இருக்கு சார். ஃபாரின் ஆர்டர் நமக்கு கேன்சல் ஆனப் பிறகு இனியம் சார் காஸ்மெடிக்ஸ் ப்ரோடக்ட்ஸ் எதுவும் இப்போதைக்கு மேனுஃபேக்சர் பண்ண வேண்டாம்னு சொல்லி இருந்தனால, அதை ஸ்டாப் பண்ணி வச்சி இருக்கோம் சார் ” என்றார் அவர்.
“ம்ம்.” என்ற பரிதி, ” நம்ம மேனுஃபேக்சர் பண்ண காஸ்மெடிக்ஸ் தயாரிப்புகளை லேப்ல கொடுத்து செக் பண்ணப்போ, அதுல அதிகமா சல்பைட் கலந்து இருக்கு. அதுனால தான் அவங்க அதை யூஸ் பண்ண முடியாம போய் அகைன் எல்லாமே ரிட்டன் பண்ணிட்டாங்க. அதுனால பெரிய அளவுல நமக்கு நஷ்டம் தான். பட் அது எல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன். இப்போ எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும். எப்படி எப்பவும் இல்லாம இந்த தடவை மட்டும் இப்படி ஆச்சு.. ” என்று முதலாளியாய் சந்தேகத்துடன் அதிகாரத் தொணியில் கேட்க,
அவரோ சற்று திக்கு முக்காடி தான் போனார்.
“அது.. அது.. எனக்கு தெரியல சார்..இது எப்படி நடந்ததுன்னு.. நீங்க சொல்லி தான் எனக்கே இப்போ தெரியுது..” என்று அவர் பதட்டமாகக் கூறினார்.
“நம்ம இங்க ஆட்கள் வேணும்னு புதுசா ரெகுயர்மென்ட் பண்ணோம் தானே.. ” என்று பரிதி கேட்டிட,
“ஆமா சார்..” என்றார் மேனேஜர்.
“அப்போ அவங்க இங்க வந்ததுல இருந்து இப்போ வரைக்கும் உள்ள CCTV ஃபுட்டேஜ் எனக்கு எல்லாம் வேணும். ரெடி பண்ணுங்க..” என்று அவருக்கு கட்டளை இட்டு அனுப்ப, அவரு அடுத்த அறை மணி நேரத்தில் மூன்று மாத ஃபுட்டேஜ் காபியுடன் வந்து நின்றார்.
“ம்ம்ம். பிளே பண்ணுங்க..” என்க,
அவரும் பரிதியின் ஆணையை அப்படியே ஏற்றார்.
மூன்று மாதத்திற்கு முன் ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தார்.
சிறிது நேரம் கழித்து, “நான் பார்த்துகிறேன். நீங்க போங்க..” என்று அவரை அனுப்பி வைத்தான்.
வரிசையாக ஒவ்வொரு நாளாக எல்லாம் பார்க்க, எதுவும் சந்தேகப் படும்படி சிக்கவில்லை.
இதில் யாரை என்று சந்தேகப் பட்டு பார்ப்பது என்று குழம்பித் தவித்தான்.
புதிதாக வந்த ஆட்களை மட்டும் சோதிப்போம் என்று ஒரு முடிவுக்கு வந்தவன், அவர்களின் செயல்களை மட்டும் கண்காணித்துக் கொண்டு இருந்தான்.
நடுவில் மேனேஜருக்கு அழைத்து, “ஒரு காபி கொண்டு வரச் சொல்லுங்க..” என்று பணிந்து விட்டு வைத்து விட, மேனேஜரும் தேநீரை அவனுக்கு அனுப்பி வைத்தார்.
தேநீரை பருகியவாறே கண்ணை மூடி யோசித்த பரிதியின் மூளையில் கணினியில் பார்த்த ஒரு விஷயம் நினைவில் வந்து போனது.
அதில் ஒருவனின் செய்கைகள் மட்டும் வித்தியாசமாய் இருந்தது.
அவன் அடிக்கடி தனியாக ஒதுக்குப் புறமாய் போய் அலைபேசியில் பேசி விட்டு வருவது நினைவில் வந்து போக, அதனை இப்பொழுது அசால்ட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை பரிதியால்.
மீண்டும் கணினியில் அவனது செய்கைகளை மட்டும் கண்காணிக்க, அவனோ யாருக்கும் தெரியாமல், யாரும் தன்னை பார்க்கின்றனரா என்று பார்த்துப் பார்த்து அவன் அலைபேசியில் பேசிவிட்டு வருவது தெரிந்தது.
“இவன் ஏன் ரகசியமா போய் போய் பேசிட்டு வர்றான். சந்தேகமா இருக்கே..” என்று அப்படியே ஒவ்வொரு நாளாக அவனை மட்டுமே கண்காணித்தான்.
அதில் யாருக்கும் தெரியாமல் அவன் கால் சட்டைப் பையில் இருந்து ஒரு கவரை எடுத்து அதில் இருந்த பவுடரை கொட்டினான்.
அதைப் பார்த்த பரிதிக்கோ, சுள்ளென்ற கோவம்..
கோவத்தை அடக்கிக் கொண்டு மேலும் என்ன என்ன செய்கின்றான் என்று பார்த்துக் கொண்டிருக்க, அவன் அவர்கள் தயாரிக்கும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் அனைத்திலும் அவன் வேறு ஒரு கெமிக்களை கலப்பது துல்லியமாகத் தெரிந்தது.
“டேமிட்..” என்று கோவத்தில் சீறியவன், மேனேஜருக்கு அழைத்து அவரை உள்ளே வரும் படி கோவமாகக் கத்த,
அவரோ பயந்து கொண்டே வந்தார்.
“இதைப் பாருங்க..” என்று கணினியின் திரையில் ஓடியதை காட்ட, அவருக்கும் அதிர்ச்சி தான்.
“யார் இவன்..” என்று பரிதி கேட்டிட,
“சார்.. இவன் பேரு தங்கராஜ்.. இவன் கொஞ்ச நாளுக்கு முன்ன ரிசைன் பண்ணிட்டு போய்ட்டான் சார்..”என்றார்.
“அவனுக்கு தான் வந்த வேலை முடிஞ்சிருச்சே..அதுனால எஸ்கேப் ஆகிட்டான். அவன் அட்ரஸ் போன் நம்பர்.. எல்லாமே இன்னும் கொஞ்ச நேரத்துல என் டேபுலுக்கு வரணும்..” என்று உத்தரவிட,
“இதோ சார்..” என்று வெளியேறி, அடுத்த சில வினாடிகளில் அவனது விவரங்கள் அடங்கிய ப்ரொபைல் பரிதியின் பார்வைக்கு முன்னால் வந்து சேர்ந்தது..
அதை பார்த்தவன், ” ஓகே.. நான் பார்த்துகிறேன் ” என்று அவரிடம், “காஸ்மெடிக்ஸ் ப்ராடக்ட்ஸ் ஐட்டம்ஸ் எவ்ளோ ஸ்டாக் இருக்கு அண்ட் அதை ரெடி பண்றதுக்கான ரா மெட்டிரியல்ஸ் எவ்ளோ இருக்குனு பாருங்க.. பார்த்துட்டு அந்த ரிப்போர்ட் கொண்டு வாங்க..” என்று கூற,
அவரும் அதன் படியே, ஆங்காங்கு இருக்கும் சூப்பர்வைசரிடம் விசாரித்து ரிப்போர்ட் தயார் செய்தார்.
இதற்கே இரவு ஏழு மணியைத் தாண்டி கடந்து விட்டது.
இனியன் அழைத்துக் கேட்டதற்கு, “இங்க தான் டா இருக்கேன். நான் வரேன்.. ” என்று கூறி விட்டான்.
மேனேஜரிடம் ரிப்போர்ட் வாங்கிப் பார்த்த பரிதி, “ஓகே.. இந்த பழைய ப்ரோடக்ட்ஸ் ஸ்டாக் எல்லாம் மார்க்கெட்டிங் பண்ணிருங்க. ஆனால் அவன் வந்த பிறகு எந்த ரா மெட்டிரியல்ஸ்ல எதுல எதுல சேர்த்து இருக்கானு தெரியால. அவன் வந்த பிறகு மேனுஃபேக்சர் பண்ண, பண்ண போற எல்லா ப்ரோடக்ஸையும் டிஸ்கார்டு பண்ணிருங்க..” என்றான்.
“சார்.. ஆனா இதுனால நமக்கு ரொம்ப நஷ்டம் வருமே சார்..” என்றார் மேனேஜர்.
“ம்ம்ம். பணம் போனால் திரும்ப நம்ம சம்பாதிச்சிக்கலாம். ஆனால் நம்ம கம்பெனி பேரு போனால் அதை திரும்ப சம்பாதிக்க முடியாது. நான் பெஸ்ட்டை தான் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இதுல எதுல கலந்து இருக்கு. கலந்து இல்லனு தெரியாம என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. அப்படி நான் ரிஸ்க் எடுத்து பண்ணால், பின் விளைவுகள் நமக்கு தான் அதிகம். ” என்று அவரிடம் வீட்டுக்கு செல்லும்படி கூறி விட்டு, தானும் வீட்டிற்கு கிளம்பி வந்தான்.
எட்டு மணியை கடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
வந்தவன் தாயை காணச் செல்ல, அவரோ உறக்கத்திற்குச் சென்று இருந்தார்.
ஒரு பெரு மூச்சுடன் தனது அறைக்குச் சென்று உடல் களைப்பு தீர குளித்து விட்டு, பால்கனி பக்கம் சென்று, அங்கு தெரியும் முழு நிலவை பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நிலவின் முகத்தில் அவனவளின் முகம் வந்து போக, ஒரு மென் புன்னகையுடன் கீழ் இறங்கிச் செல்ல அங்கு அவனுக்காக இனியன் காத்துக் கொண்டு இருந்தான்.
“அண்ணா.. வா சாப்பிடலாம்..” என்று இருவருமாக சேர்ந்து உண்டு கொண்டிருக்க, “மத்தவங்க சாப்பிட்டாச்சா..” என்று பரிதி கேட்டான்.
“சாப்டுட்டாங்க. நான், நீ வந்த பிறகு சாப்பிடுக்கலாம்னு இருந்துட்டேன்..” என்றான்.
“ம்ம்..” என்ற பரிதி அமைதியாக உணவருந்திக் கொண்டிருக்க,
“அண்ணா.. என்ன ஆச்சி..” என்று கேட்டான் இனியன்.
“சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்..” என்றான் அண்ணன்.
இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு, ஷோபாவில் வந்து அமர, பரிதியே ஆரம்பித்தான்.
“பேக்டரி சிசிடிவி செக் பண்ணதுல ஆள் யாருனு கண்டு பிடிச்சாச்சு. ஆனால் அவன் இப்போ அங்க வேலை பாக்கல. அவன் அட்ரஸ் கெடச்சி இருக்கு. அதை வச்சி அவனை கண்டு பிடிக்கணும்..” என்றான்.
“நெக்ஸ்ட் என்ன பண்ணப் போற..” என்று தம்பிக்காரன் கேட்டிட,
“இந்த அட்ரஸ்ல போய் நீ செக் பண்ணு..” என்று கூறிட, “அப்போ நீ..” என்று திரும்பி கேட்டான் இனியன்.
“என் ஆள தேடிப் போறேன்..” என்று ஒற்றைக் கண் அடித்து கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.
நித்தமும் வருவாள்.
