Loading

காட்சிப்பிழை 21

மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு நவியை அவளின் அறையில் விட்டுவிட்டு அந்த ஏணியிலிருந்து கீழே இறங்கியதும் தான் சிறிது ஆசுவாசப்பட்டான் ரிஷப். ஆனால், அந்த நொடி நேர நிம்மதியைக் கூட அவனிற்கு அளிக்க விரும்பாத வண்ணம் பின்னிலிருந்து கேட்டது ஒரு குரல்

“அவங்க வேணா கண்டுபிடிக்காம இருந்துருக்கலாம் மிஸ்டர். ரிஷபேஸ்வரன், ஆனா என்கிட்ட மாட்டிக்கிட்டீங்களே!” என்ற குரலில் சற்று பதட்டத்துடனே திரும்பினான் ரிஷப்.

அங்கு தன் இரு கைகளையும் கால்சராய் பைக்குள் விட்டபடி, தன் கூர்விழிகளால் ரிஷபை நோக்கியபடி நின்றிருந்தான் நோலன். காழ்ப்புணர்ச்சி பாதி, வஞ்சம் மீதி என்று சரிவிகிதத்தில் கலந்த உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது நோலனின் பார்வை.

அவனின் நக்கலான பார்வையை எல்லாம் கணக்கில் எடுக்காமல், எதையெல்லாம் கண்டுகொண்டானோ என்ற எண்ணமே ரிஷபின் மனதில் பிரதானமாக ஓடிக் கொண்டிருந்தது. அதை எதிராளி சரியாக யூகித்தும் விட்டான்!

“என்ன ரிஷப் அலைஸ் ஈஸ்வர், நீங்க மறைச்சு மறைச்சு செஞ்சதுல எதையெல்லாம் நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு பயமா இருக்கோ?” என்றவன் சிறிது இடைவெளிவிட்டு, “இருக்கணும்ல, எப்போ பார்த்தாலும் நீங்க நினைச்சதே நடந்தா எப்படி பாஸ்?” என்று எள்ளலாக சிரித்துவிட்டு, “இந்த முறை நான் நினைக்குறது தான் நடக்கும். நடத்திக் காட்டுவேன்! இத்தனை வருஷமா என்னை மாதிரி திறமையான சயின்டிஸ்ட்டோட வளர்ச்சியை உங்க சுயலாபத்துக்காக தடுத்தீங்களே, அதுக்கான பழிவாங்கலா இதை நினைச்சுக்கோங்க.” என்றான் நோலன்.

“ப்ச், நோலன் எதையும் புரியாம பேசாத! நாங்க எப்போவும் யாரோட வளர்ச்சியையும் தடுக்க நினைக்கல. நீயா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு எப்படி நாங்க பொறுப்பாகுறது?” என்று சலிப்புடன் கூறினான் ரிஷப்.

அவனின் சலிப்பே, இதை எத்தனையோ முறை நோலனிடம் கூறி புரிய வைக்க முயற்சித்திருந்தாலும் அதை அவன் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை கூறியது.

“ஓஹ், என்னோட வளர்ச்சியை தடுக்கக்கூடாதுன்னா, ஏன் உன்னோட மரியாதைக்குரிய மென்டார்ஸ், நான் அந்த ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்’ ஃபார்முலாவை சரியா கண்டுபிடிச்சுடுவேனோன்னு பயந்து, உன்னை அதுல ஈடுபடுத்துனதும் இல்லாம, நான் கண்டுபிடிச்ச ஃபார்முலாவை ரிஜெக்ட் பண்ணாங்க?” என்று கோபத்துடன் நோலன் வினவ, “இட் இஸ் பேஸ்லெஸ் அக்யூசேஷன் நோலன். உன்னோட ஃபார்முலால அவ்ளோ மிஸ்டேக்ஸ் இருந்துச்சு. அண்ட் டெஸ்டிங் அப்போ நீயும் இருந்த தான, அந்த டெஸ்ட் எப்படி ஃபெயிலியர் ஆச்சுன்னு நீயும் தான பார்த்த! அப்பறம் எப்படி இப்படி ஒரு குற்றச்சாட்டை நீ முன்வைக்குறன்னு எனக்கு புரியல.” என்றான் ரிஷப்.

“உனக்கு எல்லாமே உடனே கிடைச்சுட்டதால அது கிடைக்காம இருக்குறதுக்கு பின்னாடி இருக்க வலி தெரியல ரிஷப். நானே முதல் முறையா ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிச்சு அவங்க பார்வைக்கு கொண்டு வந்தா, அதை ரிவியூ பண்றதுக்கு கூட மனசில்லாம சும்மா டெஸ்டிங் அனுப்பி, அது ஃபெயில் ஆனதும் இது தான் சாக்குன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அது கூட என்னோட மிஸ்டேக்னு நான் விட்டுருப்பேன். ஆனா, அதுக்கப்பறம் அவர் பேசுன வார்த்தைகள் என் மனசுல இன்னும் ஆழமா பதிஞ்சுருக்கு.” என்று கண்களை மூடியவனின் மனக்கண்ணில் வந்து போனது அந்த வாசகங்கள்!

‘ரிசர்ச்ங்கிற பேர்ல் இப்படி தான் அரையும்குறையுமா பண்ணிட்டு இருக்கியா. ஒரு பேசிக் டெஸ்டிங் கூட பண்ணாம இப்படி தான் உன்னோட ஃபார்முலாவை எங்க ரிவியூக்கு கொண்டு வருவியா? இன்னொரு முறை எங்க நேரத்தை இப்படி வேஸ்ட் பண்ணா, நீயெல்லாம் சயின்டிஸ்ட்டாக லாயக்கே இல்லன்னு உன்மேல கம்ப்லைன் பண்ண வேண்டியதிருக்கும். இனிமே உன்னை நம்பி இந்த ப்ராஜெக்ட் கொடுக்க முடியாது. ஈஸ்வர், இதை நீ ஏற்கனவே ஸ்டடி பண்ணியிருக்க தான, யூ கோ அஹெட். நோலனை உனக்கு அசிஸ்ட் பண்ண சொல்லு.’

நோலன் நினைத்ததையே தான் ரிஷபும் நினைத்தான். அதனுடன், கிருஷ்ணாவிடம் தனியாக பேசியதையும் நினைத்துப் பார்த்தான்.

“சார், இன்னைக்கு நீங்க நோலன் கிட்ட கொஞ்சம் ஹார்ஷா பேசுன மாதிரி இருந்துச்சு.”

“எனக்கு வேற வழி தெரியல ஈஸ்வர். அவன் கிட்ட நல்ல பொடென்ஷியல் இருக்கு. ஆனா, கொஞ்சம் அவசரபுத்தியும் இருக்கு. ரிசர்ச்ல, அதுவும் மெடிக்கல் ரிசர்ச்ல பொறுமை ரொம்பவே முக்கியம். ஏன்னா, நம்ம ஹேண்டில் பண்றது மனுஷங்களோட உயிர்! இன்னைக்கு நீயே பார்த்தேல, அவ்ளோ அஜாக்கிரதையா இருக்கான். அதான் கொஞ்சம் ஹார்ஷா பேச வேண்டியாதாகிடுச்சு. இதையே ஒரு ஸ்பார்க்கா எடுத்துக்கிட்டு, இன்னும் கேர்ஃபுல்லா இருப்பான்னு நினைக்குறேன். அண்ட் அந்த ப்ராஜெக்ட் உன்னை எடுத்துக்க சொன்னதும் கூட, அவன் இதை முடிச்சாலும், எப்படியாவது மார்க்கெட்டுக்கு தள்ள தான் நினைப்பானே தவிர, ஹண்ட்ரேட் பெர்சென்ட் பாதுகாப்பானதான்னு பார்க்க மாட்டான். மேலிடத்து மேலயும் எனக்கு இப்போ சந்தேகமா தான் இருக்கு. அதான் அவனை உனக்கு கீழ இந்த ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ண சொன்னேன். இது அவனுக்கும் ஒரு எக்ஸ்பீரியன்சா இருக்கும்.”

இதை நினைத்துப் பார்த்த ரிஷபிற்கு வருத்தமாக இருந்தது. நோலனின் வளர்ச்சிக்காக அப்படி பேசியவரை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருப்பவனை சற்று பரிதாபத்துடனே பார்த்தான் ரிஷப். ஆம், பரிதாபமே! ஆராய்ச்சியில் பல படிகளைக் கடந்திருந்தும் மனித எண்ணங்களைப் புரிந்து கொள்வதில் இன்னும் அவன் கடைநிலை படிகளிலேயே தேங்கி இருப்பதைப் போன்று தெரிந்தது ரிஷபிற்கு.

“நோலன், நான் திரும்பவும் சொல்றேன், கிருஷ்ணா சார் உன்னோட நல்லதுக்காக தான் அப்படி பேசுனாரு. நீயா தப்பா புரிஞ்சுக்கிட்டு ஏதாவது செய்யாத.” என்று எச்சரித்தான் ரிஷப்.

“இல்ல ரிஷப், இப்போ தான் சரியா யோசிக்குறேன். அதுவும், அந்த பொண்ணு நவி, உன்னோட மெண்டார்ஸோட ஒரே பொண்ணாமே. எனக்கெல்லாம் அப்படி இண்ட்ரோ பண்ணலையே ரிஷப்!” என்று மீண்டும் நக்கலாக வினவினான் நோலன்.

நோலன் கூறியதை அதிர்ச்சியுடனே கேட்டான் ரிஷப். “உனக்கு எப்படி…” என்று ரிஷப் வினவ ஆரம்பிக்கும்போதே, “ஓஹ், கம்மான் ரிஷப், இந்த ‘எப்படி’ ‘ஏன்’னு கொஸ்டின்ஸ் கேட்குறதை விட்டுவிட்டு நெக்ஸ்ட் ஸ்டெப்புக்கு போலாமே.” என்றான் நோலன்.

அவன் பேசியதில் சற்று சுதாரித்த ரிஷப், நோலனிற்கு எதுவரை தெரியும் என்று தெரியாமல், தானாகவே மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்தான்.

முடிவெடுத்த பின்னர் அதை செயல்படுத்துவது போல ஒரு பெருமூச்சுடன், “இப்போ நான் பண்ணனும்னு எதிர்பார்க்குற நோலன்?” என்றான்.

“குட், இப்போ தான் நம்ம வேவ்லெந்த் சிங்க்காகுது. இப்போ நீ என்ன பண்ணனும்னு கேட்டில, ஹ்ம்ம்… என்ன பண்றன்னா, உன்னோட இந்த ப்ராஜெக்ட் மிஸ்டிரியோவை எனக்கு கொடுத்துடு. ஜஸ்ட் அஸ் சிம்பில் அஸ் இட் இஸ்!” என்று அசராமல் அதிர்ச்சியைக் கொடுக்க, ரிஷபிற்கு அவன் என்ன கூறுகிறான் என்பதை புரிந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது.

புரிந்ததும் அவனைப் பார்த்து, “வாட்?” என்றான் திகைப்புடன்.

“உனக்கு என்ன புரிஞ்சதோ அதையே தான் நான் சொன்னேன் ரிஷப். இந்த ப்ராஜெக்ட் மிஸ்டிரியோக்கு கிடைக்க வேண்டிய க்ரெடிட்ஸ் என்னை சேரணும். எப்படி நான் முதல்ல ஆரம்பிச்ச ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்’ உனக்கு கிடைச்சதோ, அதே மாதிரி உன்னோட இந்த ப்ராஜெக்ட் எனக்கு கிடைக்கணும்.” என்று அழுத்தமாக பேசியவன், “தி பெஸ்ட் டிட் ஃபார் டேட்ரைட்?” என்று கண்ணடித்தான்.

நோலனின் செயல்களில் கடுப்பான ரிஷப், “அது எப்படி முடியும் நோலன்? உனக்கு இந்த ப்ராஜெக்ட் பத்தி என்ன தெரியும்? ஆன்ட்டி ஏஜிங் ட்ரக்கும் இதுவும் ஒண்ணா? அண்ட் நீ பண்ண ப்ராஜெக்ட்டை நான் எனக்கு சொந்தமாக்கிக்கல, அதோட க்ரெடிட்ஸ் கூட எனக்கு கிடைக்கல. அப்படி கிடைக்கணும்னு நானும் எதிர்பார்க்கல.” என்றான்.

“ஹ்ம்ம், நீ ஒரு முட்டாள்னு எனக்கே அப்போ தான் தெரியும். தேவையில்லாம பேடன்ட் ரைட்ஸ்ஸை அவங்களுக்கு கொடுத்து, உஃப்… இப்போ அதைப் பத்தி பேச எனக்கு நேரமும் இல்ல, விருப்பமும் இல்ல. என்னோட டீலிங்குக்கு நீ ஒத்துக்குறியா இல்லையான்னு சொன்னா, எனக்கு அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க சரியா இருக்கும்.” என்றான் நோலன்.

“செல்ஃபிஷ்!” என்று ரிஷப் திட்ட, “இந்த உலகத்துல செல்ஃபிஷ்ஷா இல்லாம இருக்குறது தான் தப்பு மிஸ்டர். ரிஷபேஸ்வரன். இதை இப்போவரை நீ புரிஞ்சுக்காதது உன்னோட தப்பு!” என்று உதட்டைப் பிதுக்கியவன், “லுக், ரொம்ப பேசி நேரத்தை வீணாக்காத. ஜஸ்ட் ஸே எஸ் ஆர் நோ.” என்றான் நோலன்.

சிறிது யோசித்த ரிஷபிற்கு, ‘எஸ்’ சொல்வதை விட வேறு வழியில்லை என்று தோன்றியதால், நோலனிடம் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

“குட் டெசிஷன்! அப்பறம் முதல் முறையா நம்ம பாஸ் இங்க வரப்போறாராமே, அவருக்கு கூட இந்த ப்ராஜெக்ட் மிஸ்டிரியோ மேல ரொம்ப ஈடுபாடாம். அண்ட் டேனி அவருக்கு இதை எக்ஸ்பிளேயின் பண்ண உன்னைக் கேட்டதாகவும் தகவல் வந்துச்சே.” என்று நோலன் வினவ, ரிஷப் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றான்.

அவனின் அமைதியைக் கண்டு கேலியாக உதட்டை வளைத்தவன், “இப்போ நம்ம டீலிங் படி, ப்ராஜெக்ட் மிஸ்டிரியோ எனக்கு சொந்தம். சோ இனிமே அதைப் பத்தி எக்ஸ்பிளேயின் பண்றதெல்லாம் என்னோட வேலை தான?” என்றான்.

‘ப்ச், இருக்க பிரச்சனையில இவன் வேற!’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, நோலனைப் பார்த்தான் ரிஷப்.

“என்ன ரிஷப் எதுவும் பேசாம இருக்க? ஆமா தான? நான் தான எக்ஸ்பிளேயின் பண்ணனும். உனக்கு எந்த கஷ்டமும் இல்லாம, நானே இதைப் பத்தி டேனி கிட்ட சொல்லிடுறேன்.” என்று வஞ்சகமாக சிரித்தான் நோலன்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “நவி பத்தின உண்மை வெளிய தெரியக்கூடாது!” என்று எச்சரித்தான் ரிஷப்.

“பார்றா! நான் கூட உனக்கு ரொம்ப பிடிச்ச மெண்டாரோட பொண்ணுங்கிறதால தான் அவளைக் காப்பாத்த துடிக்கிறியோன்னு நினைச்சேன். ஆனா, உன் கண்ணுல தெரியுற தவிப்பைப் பார்க்கும்போது, அந்த ஜென்சி சொன்னது சரிதான் போல.” என்று நோலன் கூற, “ஜென்சியா! என்ன சொன்னா?” என்று விசாரித்தான் ரிஷப்.

சிறிது நேரத்திற்கு முன்னிருந்தே ஜென்சியின் பெயரை அடிக்கடி கேள்வியுற்றதால், அடுத்து என்ன என்று சிறிது பதட்டம் ஏற்படத்தான் செய்தது ரிஷபிற்கு.

“ஹான், நீ நவியைப் பார்க்கும்போது உன் கண்ணுல ஒரு ஸ்பார்க் தெரியுதாமே! இங்க வேற எந்த பொண்ணையும் நீ அப்படி பார்த்ததே இல்லயாமே! ஃபர்ஸ்ட் அதைக் கேட்டதும், ஏதோ கேர்ளி ஃபீலிங்ஸ்னு சும்மா விட்டுட்டேன். ஆனா, இப்போ தான தெரியுது அது உண்மைனு. அப்பறம் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன், உங்க சீக்ரெட்டை கண்டுபிடிக்க உதவுனது கூட ஜென்சி தான். அவ தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்து ஃபாலோ பண்ண ஆரம்பிச்சா. அவளைப் பார்த்து நானும் ஃபாலோ பண்ணேன். என்ன, உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்ததையே பெரிய விஷயமா நினைச்சு பிரதாப் கிட்ட சொல்ல ஓடிட்டா போல. ஆனா, எனக்கு அந்த டாப் ஃப்ளோர் அக்சஸ் இருந்ததால உங்க ரகசியத்தை கண்டுபிடிக்க முடிஞ்சுது. ஐ மஸ்ட் ஸே தேங்க்ஸ் டூ ஹர்.” என்றான்.

அவன் கதை கூறுவதில் எரிச்சலான ரிஷப், “நீ எப்படியோ நினைச்சுக்கோ. அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல. நவியோட சீக்ரெட் கடைசி வரைக்கும் சீக்ரெட்டா இருக்கணும்.” என்று கூற, நோலனோ உதட்டோர சிரிப்புடன், “டோன்ட் ஒர்ரி ரிஷப்! இறுதி வரைக்கும் சீக்ரெட்டா இருக்கும்.” என்று கூறிவிட்டு ரிஷபைக் கடந்து சென்றான்.

நோலன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு அவன் சிரிப்பு ஏதோ வில்லங்கத்தை நிகழ்த்தப் போகிறான் என்று கட்டியம் கூற, அது எந்த வில்லங்கமாக இருக்கும் என்று கிரகிக்க முயன்றான்.

அப்போது அங்கு வந்த ரியான், “என்னாச்சு ப்ரோ? நோலன் கூட பேசிட்டு இருந்தீங்க.” என்று வினவினான்.

ரியானிற்கு நடந்ததை ரிஷப் கூற, “ப்ரோ இப்போ என்ன பண்றது? அந்த நோலனை நம்ப முடியாது. அவன் நவி விஷயத்தை வெளிய சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? இதுக்காக மிஸ்டிரியோவை அவனுக்கு தாரை வார்த்து கொடுக்குறது எனக்கு சரின்னு தோணல.” என்றான் ரியான்.

“எனக்கு தெரியும் ரியான். ஆனா, இப்போ நான் முடியாதுன்னு சொன்னா, உடனே அந்த விஷயத்தை லீக் பண்ணிடுவான். நமக்கு ரியாக்ட் பண்றதுக்கு கூட நேரம் இருக்காது. இஃப் ஐ’ம் நாட் ராங், அந்த ஓனர் வரப்போ அவன்கிட்ட தான் இந்த சீக்ரெட்டை ஓப்பன் பண்ணுவான். நம்ம பிளான் சரியா நடந்தா, அதைப் பத்தி நம்ம பயப்பட வேண்டிய அவசியம் இல்ல.” என்றான் ரிஷப்.

ரியானும் அவனின் கூற்றை ஆமோதித்தவன், “ப்ரோ அந்த ஓனர் நாளைக்கு மறுநாள் வரராம். இப்போ தான் இன்ஃபோ வந்துச்சு.” என்று கூற, “ஹ்ம்ம் வரட்டும், இதுக்காக தான இத்தனை வருஷம் காத்திட்டு இருந்தோம்!” என்றான் ரிஷப்.

*****

அடுத்த நாள்… மற்றொரு குழுவினரை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அந்த குழுவில் இருந்தவர்கள், இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போலவே நடந்து கொள்ள, அவர்களை கண்காணிக்கும் பொறுப்பை தனக்கு கீழுள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு, நவியைக் காண்பதற்கு செல்ல ஆயத்தமானான் ரிஷப்.

மறுநாள் அவர்கள் செயல்படுத்தப் போகும் திட்டத்தைக் குறித்து நவியிடம் பேசி, அவளை அதற்கு தயார் செய்ய வேண்டி நவியை சந்திக்க திட்டமிட்டான். அவளை ஆராய வேண்டும் என்ற காரணத்தை சொல்லிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, அப்போது உள்ளே நுழைந்த பிரதாப் ரிஷபை தடுத்து நிறுத்தினார்.

“இவ்ளோ வேகமா எங்க கிளம்பிட்டீங்க, ஈஸ்வர்?” என்று பிரதாப் வினவ, ரிஷபோ சரியான நேரத்தில் இடையில் வந்த பிரதாப்பை மனதிற்குள் திட்டிக் கொண்டு, “இங்க எல்லாம் சரியா போயிட்டு இருக்கு. சோ அந்த பொண்ணோட மனநிலையை இன்னும் ஸ்டடி பண்ணா, அதுக்கு ஏத்த மாதிரி சிமுலேஷன் ரெடி பண்ணலாம். அதுக்கு தான் போயிட்டு இருக்கேன்.” என்று விளக்கம் அளித்தான்.

“அதெல்லாம் சரி தான். ஆனா, நேத்து தான் நோலன் என்கிட்ட, ப்ராஜெக்ட் மிஸ்டிரியோவை அவருக்கு மாத்தி விடப்போறதா சொன்னாரே. அப்போ இதெல்லாம் அவர் செய்ய வேண்டிய வேலைகள் தான. நீ ஏன் தேவையில்லாம எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யணும்? டேக் சம் ரெஸ்ட் ஈஸ்வர்.” என்று வேண்டுமென்றே நக்கலில் தோய்ந்த குரலில் கூறினார் பிரதாப்.

அதைக் கேட்டதும் ரிஷப் சற்று திகைத்து தான் போனான்.

‘நவிக்கு நோலன் பத்தி தெரியாதே! இவன் ஏதோ கேட்க போய் அவ ஏதாவது சொல்லிட்டான்னா?’ என்று ரிஷப் யோசித்துக் கொண்டிருக்க, பிரதாப் நோலனை அழைத்து, “நோலன், இனி அந்த பொண்ணை ஆராய்வது உங்களோட வேலை. பாவம் ஈஸ்வரும் எவ்ளோ தான் உழைப்பாரு, சோ யூ டேக் கேர்!” என்று நோலனிடம் வஞ்சக சிரிப்பை பகிர்ந்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, ரிஷபோ நோலனைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

“நீ முறைக்குறது பார்த்தா ரொம்ப பயமா இருக்கே.” என்று ரிஷபை கேலி செய்த நோலன், “அந்த பிரதாப்புக்கு, இது நான் உன்னை எதிர்க்குற செயல்ங்கிறதை தாண்டி எதுவும் தெரியாது. சோ நீ உளரிடாத, நான் இப்போ போய் உன் ஆளை ஸ்டடி பண்ணிட்டு வரேன்.” என்று கண்ணடித்து அங்கிருந்து நகர, ரிஷபோ எதுவும் செய்ய முடியாமல் தன் கைகளை மடக்கி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.

*****

முதல் நாள் தனக்கு தெரிந்த புது விஷயங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்கள், தொடர் யோசனைகள் என்று பலவும் நவியை மிகவும் சோர்வடைய செய்திருக்க, அன்றைய தூக்கம் அவளிற்கு மிகவும் தேவையானதாக இருந்தது.

அவள் தூங்கி விழித்தும் கூட முதல் நாள் சம்பவங்களின் பாதிப்புகள் இப்போதும் அவளின் முகத்தில் வலியாக பிரதிபலித்தன. இறுதியில் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயமும் அதன்பிறகான பிரத்தாப்பின் வரவும் இப்போதும் அவளை நடுங்கச் செய்வது உண்மை தான்.

மேலும், இப்படியே பழையவற்றை நினைத்து வருந்தக்கூடாது என்ற நினைவும் அவளிற்கு தோன்ற, சட்டென்று தன் நினைவலைகளை நிறுத்தியவள், அடுத்து என்ன என்பதை யோசிக்க ஆரம்பித்தாள்.

அப்போது அவளின் அறையை யாரோ வெளியிலிருந்து திறக்கும் கேட்டது. நவியும் வருவது ரிஷப் தான் என்று எதிர்பார்க்க, வந்தவனைப் பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

அங்கு, தன் வழக்கமான நக்கல் சிரிப்புடன் கதவில் சாய்ந்து நின்றிருந்தான் நோலன். அவனைக் கண்டதும் திகைப்பில், “நோலன்..” என்று கூற, அவனோ அவளின் திகைப்பை பொருட்படுத்தாமல், “எஸ் நோலனே தான்…” என்றான்.

அப்போது தான் தங்கள் குழுவினரில் நோலனை மட்டும் இங்கு முதலிலிருந்தே காணவில்லை என்பதை உணர்ந்த நவி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆனால், அவன் கையிலிருந்த பையும் அவனின் தோற்றமும் வேறு கதை கூற, அவனை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

“நோலன், நீங்க இங்க?” என்று இழுத்தவளைப் பார்த்து சிரித்தவன், “நீ நினைக்குறது சரி தான் நவி. நான் இங்கே தான் வேலை பார்க்குறேன், மிஸ்டர். ரிஷபேஸ்வரன் கூட. இன்ஃபேக்ட் இந்த ப்ராஜெக்ட் மிஸ்டிரியோ கூட நேத்து நைட்லயிருந்து என் கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு.” என்றான் நோலன்.

ஏற்கனவே அவனின் பார்வையிலும் செயல்களிலும் குழம்பியவள், அவன் மிஸ்டிரியோவைப் பற்றி பேசும்போது அவனை ஓரளவிற்கு கணித்து விட்டாள்.

“இது… இது ரிஷபுக்கு தெரியுமா?” என்று சந்தேகத்துடன் கேள்வி கேட்டவளைப் பார்த்து மீண்டும் சிரித்தவன், “அவனே தான் ப்ராஜெக்ட் மிஸ்டிரியோவை எனக்கு கொடுத்தான். அண்ட் அதுக்கு காரணம் யாரு தெரியுமா?” என்று அவள் யூகிப்பதற்கான நேரத்தை வழங்கியவன், அவள் கண்டுகொண்டால் என்பதை அறிந்த நொடியில், “நீயே தான்!” என்று கூறினான்.

“வாட் நானா?” என்று அதிர்ச்சியுடன் நவி வினவ, “அஃப் கோர்ஸ் நீயே தான். உன் பிறப்பின் ரகசியத்தை வச்சு தான் ரிஷபை கார்னர் பண்ணேன்.” என்று அதை பெருமையாக கூறினான் நோலன்.

தன் அன்னை-தந்தையைப் பகடையாக வைத்து ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்’ வெளியிட்ட கதையைக் கூறும்போதே ரிஷபின் சோகத்தை கண்டுகொண்டவளிற்கு, இப்போது தன்னையும் பகடையாக்கி அவனிடமிருந்த பொறுப்பை கைப்பற்றியது வருத்தமாக இருந்தது. ரிஷபின் மனநிலையைப் பற்றித் தான் அவளின் சிந்தனை முழுவதும் இருந்தது.

அவளின் சிந்தனையைக் கண்ட நோலன், அவளிற்கு ரிஷபின் திட்டத்தைப் பற்றி எதுவும் தெரியுமா என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

ஆம், ரிஷபின் திட்டம் பற்றி வினவத் தான் அவன் நவியை இப்போது சந்திக்க வந்ததற்கான காரணம். ஏனெனில், இந்த ஆராய்ச்சி ரிஷபின் வாழ்வில் எத்தனை முக்கியம் என்பது அதே துறையில் இருக்கும் நோலனிற்கு நன்கு தெரியும். அப்படி ஒரு ஆராய்ச்சியை தனக்கு உடனே விட்டுக்கொடுப்பான் என்று நோலன் எதிர்பார்க்கவே இல்லை.

அவனை மிரட்டியாவது காரியம் சாதிக்க வேண்டும் என்று தான் நவியின் ரகசியத்தைப் பற்றிய பேச்சை கையில் எடுத்தான். ஆனால், அவன் மிரட்டுவதற்கு முன்பே, தன் முடிவிற்கு அவன் உடன்பட்டது இன்னமும் நோலனிற்கு உறுத்தலாகவே இருந்தது.

அது தான், இதற்கு பின்னர் ஏதாவது திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் நோலனின் மனதில் விதைத்தது. ரிஷபிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் ஜாஷா மற்றும் ரியான். அவர்களிடமிருந்து இதைப் பற்றி சிறு துணுக்கைக் கூட தெரிந்து கொள்ள முடியாது என்பதை நோலன் நன்கறிவான். அதனாலேயே, நவியை அவன் தேர்ந்தெடுத்தான்.

நோலன் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் நவியும் நோலனைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தாள். முதன்முதலில் ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்’ பற்றி பேசியதும், அதற்கெதிரான குற்றச்சாட்டை வைத்ததும் நோலன் தான். முதலில் மக்களின் நலன் மீதிருந்த அக்கறை என்று எண்ணியவளிற்கு, இப்போது தான் அது அவனின் மனத்தாங்கலாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டானது.

“அப்போ உனக்கும் ரிஷபுக்கும்…” என்று கேட்க வந்தவள் பாதியில் நிறுத்த, “ஏன் பாதியில நிறுத்திட்ட, அப்போ மட்டுமில்ல இப்போ கூட எனக்கும் ரிஷபுக்கும் ஆகாது தான்!” என்றவன், அவன் ஆராய்ச்சி கதைகளை கூற ஆரம்பித்தான்.

அவன் பேசுவதிலிருந்தே, இதுவரை தன் தாய் தந்தை மீதும் ரிஷப் மீதும் எத்தகைய பழி உணர்ச்சியில் இருந்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், அவளின் தந்தை அவனின் ஆராய்ச்சியை நிராகரித்ததிற்கான காரணமும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னாலேயே புரிந்து கொள்ள முடிந்ததை பல பட்டங்கள் பெற்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்பட மட்டுமே முடிந்தது நவியால்.

தன் கதையைக் கூறி முடித்தவன், “இப்போ புரியுதா, நான் ஏன் உன்னை வச்சு ரிஷபை கார்னர் பண்றேன்னு? ஒரே கல்லுல ரெண்டு மாங்காங்கிற மாதிரி என்னை வளரவிடாம செஞ்சவங்களுக்கு ஒரே நேரத்துல தண்டனை கொடுக்க பிளான் போட்டேன். உன்னோட அப்பா – அம்மாவுக்கு என் கையால ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். ஆனா, அது தான் முடியாம போச்சு. இப்போ எங்கிருந்தோ புதுசா அவங்க பொண்ணுன்னு நீ முளைச்சுருக்க. சோ, இது எனக்கு கிடைச்ச ஆப்பர்ச்சுனிட்டியா யூஸ் பண்ணிக்கிட்டேன். இது மட்டும் இல்லன்னா, உன் மேல எனக்கு எந்த பெர்சனல் வெஞ்சன்ஸும் இல்ல நவி!” என்று சாதாரணமாக உரைத்தான் நோலன்.

அவனின் இந்த பேச்சைக் கேட்ட நவிக்கு, இவனுள் இப்படி ஒரு கொடூர குணமா என்று தான் தோன்றியது.

“ப்ச், வந்த வேலையை விட்டுட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் பாரு. உனக்காக ரிஷப் எனக்கு அவனோட ஆராய்ச்சியையே விட்டுக்கொடுத்த மாதிரி, இப்போ நீ அவனுக்காக ஒண்ணு செய்யப்போற.” என்றான் கோணல் சிரிப்புடன்.

நவியோ மனதிற்குள், ‘என்ன கேட்கப் போறான்?’ என்று சற்று பதட்டமடைந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், புருவம் சுருக்கி நோலனைப் பார்க்க, அவன் பேச்சை தொடர்ந்தான்.

“உங்க குரூப் ஏதோ திட்டம் போட்டுருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுவுமில்லாம, நாளைக்கு இந்த ஆர்கனைஷேஷனோட ஓனர் முதல்முறையா இங்க வரப்போறாருங்கிற நியூஸ் வேற கிடைச்சுருக்கு. சோ, என்ன பிளான் போட்டுருக்கீங்கன்னு என்கிட்ட சொல்லிட்டா ரிஷப் சேஃப்பா இருப்பான். இல்லன்னா, உனக்கே தெரியும் இங்க அவனுக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்களோட சேர்ந்து அவனைப் போட்டுத்தள்ளுறது அவ்ளோ கஷ்டமா இருக்காதுன்னு நினைக்குறேன்.” என்று மிரட்டல் தொனியில் கூறினான் நோலன்.

‘திட்டமா? என்ன பிளான்னு எனக்கே தெரியாதே!’ என்று மனதிற்குள் நினைத்தவள் அதையே சிறிது மாற்றி, “திட்டமா! என்ன திட்டம்? இதுவரைக்கும் எனக்கு எதுவும் சொல்லலையே.” என்று நவி கூற, “ஹே, இப்படி பாவமா லுக் விட்டுட்டு சொன்னா, நம்பிடுவேனா? எதுவும் மறைக்காம சொன்னேனா நீயும் சேஃப்பா இருக்கலாம். உன் குரூப்பும் சேஃப்பா இருக்கலாம்.” என்று எச்சரித்தான் நோலன்.

“ஹலோ, எனக்கு தெரிஞ்சதைத் தான் சொல்ல முடியும். இன்ஃபேக்ட் உங்க ஓனர் வராருங்கிற விஷயமே நீ சொல்லித் தான் எனக்கு தெரியும்! அண்ட் நான் இங்க உனக்கு கோ-ஒர்க்கர் இல்ல. உங்களால கடத்தப்பட்டிருக்க விக்டிம்! யாராவது விக்டிம் கிட்ட பிளான் சொல்லுவாங்களா?” என்று சற்று தைரியமாகவே பேசினாள் நவி.

நவி கூறுவதை முழுமையாக நம்ப முடியாவிட்டாலும், சற்று நேரத்திற்கு முன்னர் அவன் கண்ட மறைகாணி பதிவுகள் (ரியானிடமிருந்து கைப்பற்றியவை) நவிக்கு அந்த திட்டம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதை கூறியிருந்ததால், அதற்கு மேலும் அவளைக் கேள்விகளால் துளைக்காமல், அவன் கொண்டு வந்த மயக்க மருந்தை செலுத்திவிட்டு வெளியேறினான்.

“ச்சே, எல்லாம் இந்த ஜென்சியால வந்தது. அவ மட்டும் அந்த நேரத்துக்கு பிரதாப் கிட்ட கம்பலைன் பண்ணியிருக்கலைன்னா, அப்போவே அவனோட பிளான் பத்தி ரிஷப் நவிக்கிட்ட பேசியிருப்பான், இப்போ அதை நவிக்கிட்ட இருந்து ஈஸியா கறந்துருக்கலாம்.” என்று எரிச்சலாக முணுமுணுத்துவிட்டு சென்றான் நோலன்.

இங்கு நடந்ததை தன் அறையிலிருந்த கணினி மூலம் கண்ட ரிஷப், நவியின் சமாளிப்பில் சற்று நிம்மதியடைந்தான். அருகிலிருந்த ரியானும், “உஃப், நேத்து அந்த ஜென்சி பண்ண வேலை, இன்னைக்கு நமக்கு தான் நல்லதா அமைஞ்சுருக்கு.” என்று கூற அதை ஆமோதித்தான் ரிஷப்.

“ப்ரோ, அப்போ நவிக்கிட்ட நம்ம பிளான் எப்போ சொல்றது?” என்று ரியான் வினவ, “இனிமே நமக்கு சொல்ல டைம் இருக்காது ரியான். ஏன்னா, இப்போ வரைக்கும் நாம பிளான் சொல்லலைன்னு நோலனுக்கு தெரிஞ்சிடுச்சு. சோ, இனிமே நாம நவிக்கிட்ட பேசுற எல்லாமே அவன் கவனிக்க ஆரம்பிச்சுடுவான். அதனால, நம்ம பிளான்னை டைரெட்டா எக்சிக்யூட் பண்ணிட வேண்டியது தான்.” என்றான் ரிஷப்.

மேலும், தங்களின் திட்டத்தைப் பற்றி மீண்டும் ஒருமுறை ஆலோசித்தவர்கள், அடுத்த நாளின் முக்கியத்துவம் உணர்ந்து அதற்காக தயாராகினர். நவியும் நோலனின் மயக்க மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

மறுநாள், இவர்களுக்கான அதிர்ச்சியுடனே புலர்ந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளராக வந்தவரைக் கண்ட ரிஷப் மட்டுமல்ல நவியும் கூட திகைத்து தான் போனாள்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்