Loading

பிறை -21

 

முழுதாக எட்டு மணி நேரத்திற்கு பின் கண் விழித்திருந்தாள் பிறைநிலா. அனைவரையும் அதிர செய்து விட்டு, மெதுவாக தனது மெல்லிய இமைகளை பிரிக்க … கண்கள் கூசியது.

 

மீண்டும் மீண்டும் கண்களை சிமிட்டிக் கொண்டு ,அவள் விழிகளை பிரித்து பார்த்தவளுக்கு, தன்னை சுற்றி நிறைய உருவங்கள் தென்பட்டது.

 

இத்தனை ஆட்களை அங்கு எதிர்பார்க்காமல் யோசனையில் விழிகளை நன்றாக பிரிக்க.. அழுது கொண்டிருந்த அவளது தாய் தந்தையும்.. அவர்களது அருகில் மீனாட்சி, திவாகரும், அவர்களுக்கு அடுத்து பார்கவி, சுஷ்மிதா, அவளது மாமா, மற்றும் ரஞ்சனி என அனைவருமே அங்கு கூடி இருந்தனர்.

 

ஆதி ஒரு வேலையாக வெளியே சென்றிருக்க.. அவளது அறையில் மொத்த கூட்டமும் கூடி விட்டது.

 

மெதுவாக காய்ந்து போன தனது ஆதாரங்களை பிரித்து, ” மா…. ” என மெதுவாக முனங்க… ஓடி வந்து அவளது கையை பிடித்துக் கொண்டார் சிவகாமி.

 

” என்ன கண்ணு.. அம்மா உன் கூட தான் இருக்கேன்.. நீ எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நான் பார்த்துக்கிறேன்.. நம்ம வீட்டுக்கே போயிடலாம்.. இந்த ஊரே வேண்டாம் மா ” என மகளின் தலையை வருடிக் கொடுத்து அழுக..

 

” பிள்ளை முன்னாடி அழுக வேணாம் சிவகாமி.. உனக்கு என்ன மா.. அப்பா உன்னை சீக்கிரம் கூட்டிட்டு போயிடுறேன்.. நீ பயப்படாம நிம்மதியா இரு ” என்றவர்.. ” சிவகாமி.. பாப்பாக்கு ஏதாவது சாப்பாடு கொண்டு வந்து கொடு.. உதடெல்லாம் காஞ்சு போய் இருக்கு பாரு ” என்றதும்.. அவரும் அதை உணர்த்து மகளுக்கு சாப்பாட்டை எடுத்து வருவதற்கு ஓட.. அவரது பின்னே அவருக்கு உதவி செய்ய மீனாட்சி சென்றார்.

 

திவாகர் அவள் அருகில் வந்தவர்.. ” பிறை.. பீ ஸ்ட்ராங் மா.. நீ இப்போ நல்லா இருக்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா போதும்.. ஓகே வா ” என்றதும் அவரை பார்த்து மெதுவா தலை அசைத்தாள் .

 

” மன்னிச்சிடு மா.. உன்ன பார்த்துகிறேன்னு சொல்லிட்டு.. இந்த நிலைமையில உன்ன கொண்டு வந்துட்டேன். உங்க அப்பாக்கு தான் என்னால பதில் சொல்ல முடியல ” என சுஷ்மிதாவின் மாமா அவளிடம் மன்னிப்பை கேட்க.. அவரது கையை பிடித்து தடுத்தவள்.. ” விடுங்க அங்கிள்.. உங்க மேல எந்த தப்பும் இல்ல ” என்றவள்.. சுஷ்மிதாவை அணைத்துக் கொண்டாள்.

 

பார்கவி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள். அவளுக்கு பிறையிடம் பேசவே அத்தனை தயக்கமாக இருந்தது.

 

” எல்லாரும் பேசி முடிச்சாச்சுனா வெளிய போறீங்களா ” கணீரென்று கேட்ட குரலில்.. அனைவரும் திடுக்கிட்டு திரும்ப.. வாயிலில் காக்கி உடையுடன் நின்று கொண்டிருந்தான் ஆதிதேவ்.

 

அவனை பார்த்த மாத்திரத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி சென்றிருக்க.. கதவை மூடி தாழ் போட்டவனை மிரண்டு பார்த்தவள்.. அவன் திரும்பியதும் சட்டென தலையை குனிந்து கொண்டாள்.

 

பூட்ஸ் அதிர அவள் பக்கம் நெருங்கியவன்.. ” இன்வெஸ்டிகேஷன் இருக்கு.. நீ மென்டல்லி அதுக்கு பிரிப்பேற்றா இருக்கனும்.. ” என்றவனுக்கு பதில் அளிக்க முடியாமல் அதே நிலையில் இருக்க..

 

” கீழே என்ன தெரியுது இடியட்.. ” என அவன் போட்ட சத்தத்தில்.. பதறிக் கொண்டு அவனை பார்த்தவள்.. அவனது விழி வீச்சை பொறுக்க முடியாமல், இம்முறை குனிந்து கொள்ளாமல், இமைகளை மட்டும் தாழ்த்தி கொள்ள..

 

” இன்னும் கொஞ்ச நேரத்துல நிறைய ஆபீசர் வருவாங்க. உன்ன கேள்வி கேட்பாங்க.. உண்மையை மட்டும் தான் சொல்லுற ” அவனது குரலில் மிரட்டல் இருந்ததோ என தோன்றியது.

 

” உன்ன கடத்திட்டு போனவன் பேர் என்ன ” முதல் கேள்வியை அவனே ஆரம்பித்து வைத்தான்.

 

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. காய்ந்த உதடுகளை மெல்லப் பிரித்து ” ஆதி… ” என கூறி வைக்க.. இம்முறை அவனது விழிகள் பகிரங்கமாக விரிந்தது.

 

” அவனை பார்த்தியா ”

 

” ஆம் ” என தலை அசைத்தாள்.

 

” அவன் போட்டோ காட்டுனா உன்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியுமா.. ” என்றவன்.. எதையோ யோசித்து.. ” அவன் எப்படி இருப்பான்னு சொல்லு நான் வரைய சொல்லுறேன் ” என்றதும்.. அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

 

” என்னாச்சு.. ” என்றான் எரிச்சலாக..

 

” கண்ணை மட்டும் தான் பார்த்தேன்.. அதுக்கு அப்பறம் கவர் பண்ணி இருந்தான் ” என்றதும்.. ஆதிக்கு மனம் திக்கென்று இருந்தது.

 

” ஓகே ரெஸ்ட் எடு ” என அறையில் இருந்து வெளியேறி விட.. அப்போது தான் அவளுக்கு மூச்சு வந்தது.

 

அதன் பின் சிவகாமி அவளுக்கு உணவை ஊட்டி விட்டு வர.. அப்படியே உறங்கியும் போனாள்.

 

அறைக்குள் வந்த சிவகாமி, கேள்வியாக தனது கணவரை பார்த்தார்.

 

” சொல்லுறேன்.. ஊர்ல பெரிய பிரச்சினை ஆகிடுச்சாம்.. எல்லாரும் நம்ம பொண்ணை பத்தி தான் பேசுறாங்களாம்.. அம்மா மயில் வீட்டுக்கு போயிட்டாங்க போல.. மயில் நம்ம பாப்பாவை நினைச்சு அழுகுது. ஆனால்.. என் மருமகளை ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் நம்ப மாட்டேன்னு சொல்லிடுச்சு.. ” என்றதும் சிவகாமி முகத்தை சுருக்கி.. ” என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லுங்க ” என்றார்.

 

மயில் பேசியதை அப்டியே மனைவியிடம் கூற ஆரம்பித்தார் சிவானந்தம்.

 

” இங்க பாருண்ணே ஊருக்குள்ள எல்லாரும் நம்ம பிள்ளையை பத்தி தான் என்னனமோ வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்காங்க.. என் காதுக்கு விழுந்து வரைக்கும் நான் சண்டை போட்டுட்டு வந்துட்டேன். என் மருமகளை பத்தி பேசும் போது எனக்கு கோவம் வராதா சொல்லுங்க. ஏதோ விவரம் புரியாத புள்ள பிரச்சனை ஆகிடுச்சு.. அதுக்காக இப்படியா நாக்கு மேல பல்ல போட்டு பேசுறது. அதான் நல்லா காட்டி விட்டேன்..

 

இதுல எல்லாரும் திரும்ப என் கிட்ட சண்டை போட்டாங்க.. இவ்வளவு வக்காலத்து வாங்குற, உன் அண்ணன் மகளை உன் மகனுக்கு கட்டி கொடுப்பியான்னு கேட்டாளுங்க.. ஏன் நான் கொடுக்க மாட்டேனா.. என் பிள்ளையோட விருப்பத்தை விட என் அண்ணன் மக தான் முக்கியம்னு சொல்லிட்டேன்.. ஊரு ஆயிரம் பேசும்.. எனக்கு சொந்தம் பந்தம் எல்லாம் நீ தானே.. உன்ன விட்டு கொடுக்க முடியுமா.. இல்ல என் மருமகளை தான் விட முடியுமா..

 

அதான் நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்.. நீங்க பிரச்சனையை எல்லாம் முடிச்சுட்டு ஊருக்கு வந்ததும் முதல் முகூர்த்ததுல நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சு.. இந்த ஊர்ல வாய் பேசுன பொட்டாச்சிங்க வாயை எல்லாம் அறுத்து போடனும்னு இருக்கேன்.. சீக்கிரம் பிள்ளையை கூட்டிட்டு ஊர் வந்து சேரு .. நாங்க எல்லாரும் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கோம். தங்கச்சி நான் இருக்கேன்.. மக வாழ்க்கை என்னாகுமோன்னு நினைச்சு கலங்காத .. நான் வைக்கிறேன்” என போனை வைத்திருந்தாள் மயில்.

 

நடந்ததை எல்லாம் மனைவியிடம் ஒன்று விடாமல் கூறியவர்.. மனைவியை பார்க்க, சிவகாமியோ பலத்த யோசனையில் இருந்தார்.

 

” உங்க தங்கச்சி இப்படி இல்லாம பேசுற ஆள் இல்லைங்க.. ”

 

” அவ அப்படி இப்படி இருப்பா தான் சிவகாமி.. அதுக்காக மருமகமேல  பாசம் இல்லாம போயிடுமா என்ன.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில நம்மளை கை விடாம அவளோட மகனுக்கு நம்ம பொண்ணை எடுக்குறேன்னு சொல்லுறது பெரிய விஷயம் இல்லையா ”

 

கணவனை விளங்காத பார்வை பார்த்தவர்.. ” வெளுத்தது எல்லாம் பாலுன்னு நினைக்கக் கூடாதுங்க.. அதுக்கு மேல உங்க இஷ்டம் ” சிவகாமி சென்று விட.. சிவானந்தம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.

 

பாலை சூடாக காய்ச்சு, அதில் நட்ஸ் வகைகளை கலந்து கொண்டு பிறையின் அறைக்குள் நுழைந்தார் மீனாட்சி.

 

காலை உணவு உண்டு இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. அதனால் பாலை கொடுத்து எழுப்பி விடலாம் .. அதுவும் இல்லாமல் உடலுக்கு தெம்பு வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர் பிறையை எழுப்ப.. மெதுவா எழுந்து அமர்ந்தாள்.

 

” நீங்க என்ன மா இங்க ” என்றவள் அப்போது தான் அறையை கவனிக்க.. அதுவும் வித்தியாசமாக இருந்தது.

 

” என் வீட்ல தான் மா இருக்க.. இந்தா பாலை முதல்ல குடி.. அப்போதான் பேசுறதுக்காவது தெம்பு இருக்கும் ” என்றதும் மறுப்பு கூறாமல் வாங்கி குடித்தாள். அவளது உடம்பும் அதற்கு ஏங்கியது போல.. வாங்கியதும் ஒரே நிமிடத்தில் அனைத்தையும் குடித்து விட்டாள்.

 

” பசியா பிறை.. சொல்லியிருந்தா ஏதாவது செஞ்சு கொண்டு வந்திருப்பேன்ல ”

 

” அதெல்லாம் இல்ல மா.. “என்றவளுக்கு உடல் வலி சற்று அதிகமாக தான் இருந்தது.

 

” இந்த மாதிரி நேரத்துல தான் நீ தைரியமா இருக்கனும்.. மனச தளர விடக் கூடாது. உங்க அம்மாக்கும் அப்பாக்கும் நீ ஒரே பொண்ணு.. உனக்காக தான் அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுனால இனிமே நீ எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் அவங்களை மனசுல வச்சுட்டு பண்ணு மா.. அவங்களை தவிக்க விட்டுடாத ” என மறைமுகமாக கூறி இருந்தார் மீனாட்சி.

 

” ம்ம் ” என தலையை ஆட்டினாள்.

 

” என் மகனோட வந்த நியூஸ் பத்தியெல்லாம் நீ கவலைப்படாத.. அதெல்லாம் அவன் பார்த்துப்பான்.. ”

 

” ம்ம் ”

 

” உனக்கு மதியம் என்ன பிடிக்கும்னு சொல்லு அதையே செய்யுறேன் ”

 

” ஐயோ உங்களுக்கு ஏன் சிரமம்.. எதுனாலும் நான் சாப்பிடுவேன் ”

 

” அதெப்படி.. உடம்பு ரொம்ப வீக்கா தெரியுற.. நாட்டுக்கோழி சூப்பு வச்சு தரவா.. வாய்க்கு இதமா இருக்கும் ” என்றதும்..

 

” ம்ம் ” என தலையை ஆட்ட..

 

” எல்லாத்துக்கும் ம்ம் தானா ” என்றதற்கு சிரிப்பையே பதிலாக கொடுத்தாள் பிறை.

 

” எனக்கு இன்னொரு ஆசை வேற புதுசா வந்துருக்கு.. அதுக்கும் நீ இந்த மாதிரி ம்ம் சொன்னா ரொம்ப நல்லா இருக்கும் ” என்றதும்.. அவரது பேச்சில் கவரப்பட்டவள்..

 

” நீங்க என்ன சொன்னாலும் நான் சரின்னு தான் சொல்லுவேன்.. சொல்லுங்க மா ” மீனாட்சியை பற்றி தெரியாமல் வார்த்தையை விட்டாள் பிறை.

 

” உனக்கு ஏன் வேற பையனை பார்த்து, அவன் உன்ன நம்பி வாழ்க்கை கொடுக்கனும்.. அதுக்கு பேசாம நீ என் பையனையே கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி.. நமக்குள்ள எல்லாம் சரி வரும்.. எப்படி என் ஐடியா ” என மீனாட்சி கேட்டதும்.. விழிகள் இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு அவரை பார்த்து வைத்தாள் பிறை.

 

” என்னமோ போ எனக்கே இந்த யோசனை இப்போதான் வந்திருக்க.. நான் போய் உன் மாமனார் கிட்ட சொல்லுறேன்.. ” என பால் டம்ளரை எடுத்து கொண்டு வெளியேறிய மீனாட்சியை அதிர்ந்து பார்த்தவள்..

 

” மாமனாரா… இது மட்டும் அந்த கமிஷனருக்கு தெரிஞ்சது அம்புட்டு தான்.. ” என பயத்தில் நடுங்கி இருந்தாள் பிறைநிலா.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்