
அத்தியாயம் 21
அலுவலக அறையில் கண்மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் மௌனிகா. அன்றைய தினத்தின் காலையில் சந்துரு அவளிடம் நடந்து கொண்ட விதம், மனதை வெகுவாய் தாக்கி இருந்தது.
சட்டென்று கரத்தைப் பற்றுவான் என எதிர்பார்க்க வில்லை. வெளி இடங்களில் பயணத்தின் போது வேண்டுமென்றே மேலே உரசிச் செல்லும் பலரை அவள் கடந்து வந்திருக்கிறாள்.
அந்நிகழ்வுகளில் ஒன்று கூட பாவையின் சிந்தையை இத்தனை தூரம் ஆழமாய் பாதித்தது இல்லை. அவை யாவும் சில நொடி அசௌகர்யங்கள். அதனை தந்தவர்களின் முகம்கூட தெரியாது. அதனால் எளிதில் கடந்து செல்ல முடிந்தது.
ஆனால் சந்துரு? நன்கு பரிட்சயமானவன், தனிப்பட்ட முறையில் இல்லாது போனாலும், ஒரே குடியிருப்பில் குடியிருப்பவர்கள் என்ற வரையில் அறிமுகம் ஆனவன்.
பாவைக்கு அவன்மீது எவ்வித எண்ணமும் இல்லை என்றாலும், ‘ஆடவன் தன்மீது விருப்பம் கொண்டுள்ளான்’ என்று அறிந்து, அந்த பிடித்தத்திற்கு இயன்ற அளவு மதிப்பு அளிக்க முயன்றாள்.
ஆனால் அந்த பிடித்தமே அவனது சிந்தையை நொடியில் பிறழச் செய்து, இருவரது உணர்வுகளையுமே சோதனை செய்து பார்த்துவிட்டது.
‘இது இப்படியே தொடர்வது சரியல்ல! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!’ என்ற உறுதியோடு ஒரு பெருமூச்சை வெளியிட்டு, பணியில் கவனத்தை திருப்பினாள் மௌனிகா.
தூக்கம் கலைந்து தனது அறையில் இருந்து வெளியே வந்த விமல், அன்னையும் சிற்றன்னையும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தபடி, மாடிப்படிகளில் இறங்கி வந்தான்.
“அக்காவும் தங்கச்சியும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்றவாறே ஒரு கொட்டாவியை வெளிவிட்டு, அவர்களின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“டேய்.. அழுக்கு மூட்டை! வாயைக் கூட கொப்பளிக்காம அப்படியே வந்து உட்கார்ந்து இருக்க? போய் முதல்ல மூஞ்சியைக் கழுவு. விடுற மூச்சே குப்புனு நாத்தம் அடிக்கிது!” என வசந்தி தமக்கை மகனைத் துரத்த, “சித்தி!” என்று முறைத்தான் அவன்.
“இப்படி முறைச்சா, உன்னை விட்டுடுவோமா? எழுந்திரி முதல்ல!” என அவனின் உடையைப் பற்றி இழுத்து எழ வைக்க, “காலையிலயே என்ன பஞ்சாயத்து?” என்று வினவியபடியே வந்தான் சரண்.
“பஞ்சாயத்து எல்லாம் ஒன்னும் இல்ல. உன் சித்தியும் சின்னவனும் பேசிக்கிட்டு இருக்காங்க!” என பாகீரதி உரைக்க, புன்னகைத்தபடி கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“ரோகி எங்கம்மா?”
“மில்லுக்குப் போயிருக்கா.”
“அவ மட்டுமா?”
அன்னையானவர் புன்னகைக்க, “எதுக்கும்மா தனியா அனுப்புனீங்க?”
“நான் பார்த்துக்கிறேன்னு சொன்னா, அதான் அனுப்பி விட்டேன்.”
“இன்னைக்கு என்ன திடீர்னு மில்லுக்கு?”
“எட்டு மணி வரைக்கும் நீ எழுந்திரிச்சு வரல. அங்க ஆள் இல்லேனா எப்படி?”
“நான்தான் காரணமா?” என அவன் சிரித்திட, “இப்ப என்ன, அவ போயிட்டு வரட்டும். வெளி இடத்துக்கு அனுப்புறதுனா தான் யோசிக்கணும். நம்ம மில்லு தான?” என்றார் வசந்தி.
“ஒன்னும் சொல்லலையே சித்தி, நானு.?”
“அவளைப் பத்தி விசாரிச்சியே?”
“எங்கனு தான கேட்டேன்?”
“சரி சரி..” என அவர் உரைக்க, “கிளம்பி வெளிய போனவளைப் பத்தி ஆளாளுக்குப் பேசுறீங்க? இங்க முன்னாடி ஒருத்தன் இருக்கேனே யாராவது கண்டுக்கிறீங்களா?” என்றான் விமல்.
“உன்னை மூஞ்சியைக் கழுவ சொன்னேனே? போகலயா நீ?” என வசந்தி அதட்ட, “எனக்கு இன்னும் காஃபி வரல.”
“வாயைக் கழுவாம காஃபியா?”
“நியாயமா, நான் எழுந்திரிக்கிறதுக்கு முன்னாடி என்னோட ரூமுக்கே பெட் காஃபியைக் கொண்டு வந்து கொடுத்து இருக்கணும். அதைச் செய்யாம கதை பேசிட்டு இருக்கீங்க சித்தி?”
மூத்தவன், ‘வீட்டில் இப்படியா நடக்கிறது?’ என்பது போல் அன்னையைப் பார்க்க, “இந்த கும்பகர்ணன் அடிச்சு மிதிச்சாலும் எட்டு மணிக்கு முன்னாடி எழுந்திரிக்க மாட்டான். காஃபி வாடைக்கு மட்டும் தூக்கத்துல இருந்தாலும் மோர்ந்து பார்த்துக்கிட்டே முழிச்சிடுவான்.
அதுனால ரோகி அப்படித்தான் தினமும் எழுப்புவா. இன்னைக்கு மில்லுக்குப் போயிட்டதால, அதைச் செய்ய ஆள் இல்ல. அதான் எழுந்திரிச்சு வந்து பல்லி கத்துற மாதிரி கத்திக்கிட்டுக் கிடக்கான்!” என தினசரி நிகழ்வாய் வீட்டில் நடப்பதை உரைத்தார் பாகீரதி.
“இதெல்லாம் என்கிட்ட யாரும் சொல்லல? பெட் காஃபியா வேணும்.?” என்று அவன் இளவலை நோக்க, “அச்சோ! நான் அப்படி எல்லாம் எதுவும் கேட்கல அண்ணா.” என சட்டென்று பின் வாங்கிக் கொண்டான் விமல்.
“அடப்பாவி நிமிசத்துல இப்படி பேச்சை மாத்திட்ட?” என வசந்தி வியப்புடன் வினவ, “ஈஈஈ..” என்று அனைத்துப் பற்களையும் காட்டி சிரித்தான்.
“ச்சீசீ.. வாயை மூடு.” என அவர் முகம் சுளிக்க, “இருங்க, உங்களை வந்து பேசிக்கிறேன் சித்தி!” என்று கூடத்தில் இருந்த பொது ஓய்வறையை நோக்கிச் சென்றான்.
அவனது செயலில் சகோதரிகள் இருவரும் சிரிக்க, “சரிம்மா, அப்ப நான் மில்லுக்கு கிளம்புறேன்!” என விடைபெற்றான் சரண்.
“இரு.. என்ன அவசரம்? அதான் ரோகி போய் இருக்கா இல்ல?” என்று மகனை நிதானப்படுத்தினார் பாகீரதி.
“வீட்டுல இருந்து, நான் என்னம்மா செய்யப் போறேன்?”
“உன்னை யாரு வீட்டுல இருக்க சொன்னா? வெளிய வேலை இருக்கு.”
அவன் கேள்வியாய் பார்க்க, “மௌனியோட வீடு வரைக்கும் போயிட்டு வரலாம்.”
“அங்க எதுக்கு? அவதான் சென்னைக்கு போயிட்டாளே?”
“ஏன் சரண், அந்த பிள்ள இருந்தா மட்டும் தான் வீட்டுக்கு போகணுமா?” என வசந்தி வினவ, “அப்படி இல்ல சித்தி. அங்க போனா, அவளோட சித்தப்பா குடும்பத்தைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும். ஒரே வீட்டுல இருக்கும் போது அவாய்ட் பண்ண முடியாது. ஏதாவது பேச்சு வந்துச்சுனா, வீணான பிரச்சனை.”
“அதுக்கு யோசிச்சா எப்படி? நாம எதுவும் பேசாம இருந்துக்க வேண்டியது தான். கல்யாண தேதி குறிக்கிறதுக்காகத்தான் இப்ப போகணும்னு சொல்லுறேன். ரெங்கநாயகி அம்மாக்கிட்டப் பேசி, அப்படியே மௌனியோட ஜாதகத்தை வாங்கிட்டு வருவோம்.”
புரியாது பார்த்தவன், “எதுக்குமா ஜாதகம்?”
“பொருத்தம் பார்க்க வேண்டாமா? அதைப் பார்த்தா தான, உங்க ரெண்டு பேரோட ராசி நட்சத்திரத்துக்கு தகுந்த மாதிரி தேதியை குறிக்க முடியும்?”
“ஜாதகம் பொருந்தலனு சொல்லிட்டா, என்னம்மா செய்யிவீங்க?”
பாகீரதியும் வசந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “நடந்த நிச்சயத்தை வேணாம்னு சொல்லிடுவீங்களா?”
“ச்ச்.. என்ன பேச்சு பேசுற?” என்று வசந்தி கண்டித்து அவனது முதுகில் வலிக்காத படி அடிக்க, “அப்ப சொல்லுங்க, பொருத்தம் இல்லேனா என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”
“ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கேட்டு செஞ்சிட்டு, அப்படியே தேதியை குறைக்க வேண்டியது தான். அதுக்காக எல்லாம், நடந்த நிச்சயத்தை மாத்த முடியுமா?!” என பாகீரதி உரைக்க, “அம்மா ஜாதகத்தைப் பார்த்து ஜோசியர் சொல்லுற பொருத்தத்தைக் காட்டிலும், எனக்கும் மோனிக்கும் மனசு நல்லாவே பொருந்தி போயிருக்கு. அதை விட, இதுதான் முக்கியம்.
அதுனால பொருத்தம் பார்க்கிறேன்ற பேர்ல, மனக்கஷ்டத்தை காசு கொடுத்து வாங்கிட்டு வராதீங்க! எங்க ராசிக்கு தகுந்த மாதிரி எல்லாம், நீங்க கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேண்டாம். நல்ல முகூர்த்த நாளா மட்டும் பாருங்க. அதுக்குத் தகுந்தபடி, நாங்க எங்க வாழ்க்கையை வாழ்ந்துக்குறோம்!”
“சரண்.?” என மனமின்றி அவர் மகனை நோக்கிட, “நானா தான் மோனிக்கிட்ட மேரேஜைப் பத்திப் பேசுனேன். இப்ப ஜாதகம் பொருத்தம்னு சொல்லி, அவளோட உணர்வைக் காயப்படுத்த விரும்பல அம்மா.”
“ஆனா..”
“ஒரு ஆனாவும் இல்ல. நேரா ஜோசியரைப் போய் பார்த்து தேதியை குறிச்சிட்டு, அதுக்கு அப்புறமா நாம போயி ரெங்கநாயகி ஆச்சிக்கிட்ட கல்யாண ஏற்பாடைப் பத்தி பேசலாம்!” என்று அன்னையிடம் உரைத்தவன், அச்சொல்லை அப்படியே செயல் படுத்தினான்.
ஜோசியர் நான்கைந்து தேதிகளைக் குறித்துத் தந்தார். அனைவரை விடவும் மூத்தவரான ஆச்சியிடம் ‘எந்த தேதியை உறுதி செய்வது என ஒரு வார்த்தைக் கேட்டுக் கொள்ளலாம்.’ என்று சேகரனின் இல்லத்திற்குச் சென்றனர்.
கூடத்தில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்தக் கொண்டிருந்த லாவண்யா இவர்களைக் கண்டதும் சட்டென்று எழுந்து சென்றுவிட, மகளின் அந்த நடவடிக்கையை பார்த்தபடியே வந்தார் அர்ச்சனா.
“வாங்க.. நீங்களா? அதான் என்னோட பொண்ணு முகத்தைத் திருப்பிட்டுப் போறாளா?” என எள்ளல் தொனியில் வரவேற்க, “அடிக்கடி இப்படித் திருப்ப வேணாம்னு சொல்லி வைங்க. ஓரேயடியா கழுத்துத் திரும்பிக்க போகுது. அப்புறம் கழுத்துத் திரும்புன பொண்ணைக் கட்டிக்க, மாப்பிள்ளை எவனும் வரமாட்டான்!” என்று பதில் தந்தான் சரண்.
அவர் மறுமொழி எதுவும் சொல்ல இயலாது சுருங்கிய முகத்துடன் வேறுபுறம் நோக்க, “ரெங்கநாயகி அம்மா?” என கேள்வியாய் நிறுத்தினார் பாகீரதி.
“அவங்களை எதுக்குக் கேட்குறீங்க?”
“என்ன, ஏது, எதுக்குனு காரணம் சொல்லணுமா உங்கக்கிட்ட?” என்று ஆடவன் நேரடியாய் வினா எழுப்ப, “நீங்க வந்திருக்கிறது என்னோட வீட்டுக்கு. அப்ப என்கிட்ட விபரம் சொல்லனும் தான?”
“ஆச்சியைப் பார்த்துப் பேசணும்.”
“ரூமுக்குள்ள தான் படுத்திருகாங்க. போங்க. ஆமா உங்களுக்கு, காஃபி டீ எதுவும்.?’
“இல்ல வேணாம். நீங்க யூஸ் பண்ணுற காஃபி டீயோட ப்ராண்ட், எங்க உடம்புக்கு ஒத்துக்காது!” என்றுவிட்டு, அன்னையை அழைத்துச் சென்றான்.
அரவம் உணர்ந்து வாயிலின் பக்கம் திரும்பி பார்த்தார் ரெங்கநாயகி. பாகீரதியுடன் உள்ளே நுழைந்தான் அவன்.
“வாம்மா.. வாப்பா..” என வரவேற்று, அறையில் இருந்த நாற்காலி ஒன்றைக் கைக்காட்டினார்.
அன்னையை அதில் அமர வைத்த சரண், “இது எல்லாம் ஜோசியர் குறிச்சுத் தந்த டேட் ஆச்சி. நீங்க ஒரு தடவைப் பார்த்துட்டுச் சொல்லுங்க!” என்று தனது சட்டை பையில் இருந்து, மடித்து வைக்கப்பட்ட காகிதம் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.
அதனை வாங்கி பிரித்து மோலோட்டமாய் ஒரு பார்வைப் பார்த்தவர், “எந்தத் தேதியா இருந்தா என்ன? புது துணி உடுத்தி வந்து, விசேஷத்தை கண் நிறைஞ்சு பார்த்துட்டு, பிள்ளைக மேல அட்சதைப் போட்டு வாழ்த்திட்டு வரப்போறேன். என்னைக் காட்டிலும், நேரடியா பாப்பாகிட்ட இதை பத்தி பேசுறது தான் சரியா இருக்கும்!” என்றிட, அன்னையும் மகனும் தலை அசைத்து புன்னகைத்தனர்.
“அப்புறம், என் பேத்தியோட. கல்யாணத்துக்குனு நான் கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கேன்..” என அவர் படுக்கைக்கு அடியில் இருந்து பை ஒன்றை வெளியே எடுத்து பாகீரதியின் முன்பு நீட்டிட, அவரோ மகனை நோக்கினார்.
“என்ன ஆச்சு?” என்று இருவரிடமும் சேர்த்து பொதுவாய் கேட்க, “இதை நீங்க மோனிக்கிட்ட தான் ஆச்சி கொடுக்கணும். என்கிட்ட ஏன் தர்றீங்க?” என வினவினான் சரண்.
“கல்யாண ஏற்பாடைக் கவனிக்கிறது நீதான?”
மெலிதாய்ப் புன்னகைத்து, “மோனி வரவும், இதைப் பத்திப் பேசிக்கலாம் ஆச்சி. அதுவரைக்கும் உங்கக்கிட்டயே இருக்கட்டும்!” என்று உரைத்தவன், விழா சம்பந்தமான ஆலோசனைகளை மூத்தவரிடம் பேசிக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

