
அத்தியாயம் 21
ஷில்பாவின் வீட்டில் இருந்து புறப்பட்ட இனியனோ வைஷ்ணவியின் நினைவில் ஒரு வித மையலுடனே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
முக்கிய பிரதான சாலையில் செல்லும் போது வாகன போக்குவரத்து சிக்னல் சிவப்பு விளக்கு போடப்பட்டு இருந்ததால், இவன் காரை நிறுத்தி பச்சை விளக்கு விழும் வரை காத்து இருந்தான்.
அந்த நேரத்தில் விசில் அடித்துக் கொண்டே, தலையை கோதிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளிப்புறம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சாலையின் இரு பக்கமும் கடைகள் வரிசையாக இருக்க, அதில் பார்வையை செலுத்தி பார்த்துக் கொண்டிருக்க, அவனது புருவம் ஒருவரைப் பார்த்து யோசனையாக சுருங்கியது.
“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. எங்க..” என்று யோசித்தாவாறு குழம்பிப் போனான்.
அவனது மூளையை போட்டுக் கசக்கி பிழிந்து கொண்டிருந்த வேளையில் அவனுக்கான பச்சை விளக்கு காட்டப் பட, பின்னால் வண்டிகளின் சத்தம் கேட்கவும் அதில் தன்னிலை அடைந்து அவன் வண்டியை முன்னால் நோக்கிக் கிளப்பினான்.
திடீரென்று அவன் மூளையில் விளக்கு எறிய, “ஹே.. இது அந்தப் பொண்ணுல.. ” என்று யோசித்தவன் உடனே வண்டியை பின்னோக்கி திரும்பி வளைத்துச் சென்றான்
அவன் பார்த்த இடத்தில் காரை நிறுத்தி, அவளைத் தேடிப் பார்க்க, அவளோ அந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்து விட்டிருந்தாள்.
“ச்ச.. மிஸ் பண்ணிட்டேன்..” என்று தன்னையே நொந்தபடி காரை மீண்டும் கிளப்பி வீட்டுக்குச் செலுத்தினான்.
வீட்டிற்கு வந்ததும் மங்களம் எதிர்கொள்ள, “என்னடா.. காலையில சாப்பிடாம கொள்ளாம வேகமா கிளம்பிப் போன. எங்க போய் இருந்த அப்படி.?? ” என்று தன் மகனை கடிந்து கொள்ள,
அவனோ, “அம்மா.. முக்கியமான ஒரு வேலைம்மா.. அதான் கிளம்பிட்டேன். இப்போ பசிக்குது. சாப்பாடு எடுத்து வைங்க..” என்றவன் பரிதியைப் பார்க்க போக,
“என்ன டா சாப்பிட எடுத்து வைக்க சொல்லிட்டு மேல போற..” என்று தாய் கேட்டார்.
“இதோ வரேன் ம்மா..” என்றவன் நேராக அண்ணனைப் பார்க்கத் தான் சென்றான்.
அவனைச் சென்று அறையில் பார்க்க, அங்கு அவன் இல்லை.
“எங்க போய்ட்டான். ஆள காணோம்..” என்று தேடியவன், கீழே வந்து தாயிடம், “அம்மா.. அண்ணா எங்க?? ” என்று கேட்டதற்கு,
“அவன் ஜிம் ரூம்ல இருக்கான். அங்க பார்த்தியா இல்லையா..” என்று கேட்டார்.
“ஓஹோ. அங்க பார்க்கல.. சரி சாப்பிட்டு போய் பார்த்துகிறேன்..” என்றவன்,” வைஷு சாப்பிட்டாளா.. ” என்று கேட்டதற்கு,
அவனை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை அளந்தார்.
“என்ன இப்படி பாக்குறீங்க. நான் என்னத்த அப்படி கேட்டுட்டேன் ..” என்றுக் கேட்க,
மங்களமோ, ” நீ இப்படி எல்லாம் கேக்க மாட்டியே.. அதான் பார்த்தேன். ” என்றார் அவர்.
“எப்பவும் ஒரே போலவா இருப்பாங்க.. சரி அவ இருக்களா இல்லை ஆபீஸ் கிளம்பிப் போய் இருக்காளா..” என்று மீண்டும் ஒரு வினாவை வைத்தான்.
“அவ போகல.. இங்க தான் இருக்கா..” என்றார்.
“சரி..” என்றதோடு முடித்துக் கொண்டவன், சாப்பிட்டு முடித்து விட்டு, ஜிம் அறையில் இருக்கும் தனது அண்ணனை பார்க்கச் சென்றான்.
வெகுநாள் கழித்து பரிதி இன்று ஜிம் அறைக்கு வந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், கால்களை மிகவும் வருத்தாமல் செய்யக் கூடிய பயிற்சிகளை மட்டுமே செய்து கொண்டிருந்தான்.
“அண்ணா. ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்க.. எப்படி இருக்கு..” என்று விசாரிக்க,
“ம்ம். ஓகே தான். இனி கொஞ்சம் உடம்பை பார்த்துக்கணும். இத்தனை நாள் கால் வலியால எதுவும் செய்யாம இருந்துட்டேன். இப்போ தான் சரி ஆகிருச்சே. இனி கொஞ்சம் கொஞ்சமா பழைய படிக்கு உடம்ப கொண்டு வரணும்..” என்று தம்பியிடம் பேசிக் கொண்டே அந்த பக்கம் பயிற்சியை செய்து கொண்டிருந்தான்.
“ம்ம்ம். சரி தான்..” என்றவன், “அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லத் தான் இங்க வந்தேன்..” என்று தன் அண்ணனிடம் ஒரு புதிரைப் போட,
“என்ன விஷயம்..” என்று கேட்டான் சாதாரணமாக.
“இன்னைக்கு உன் ஆள பார்த்தேன்..” என்று சொன்னது தான் தாமதம். அவ்வளவு தான்.. அங்கிருந்து வந்து இனியனின் அருகில் அமர்ந்து, “என்ன சொல்ற.. அவளைப் பார்த்தியா.. எங்க பார்த்த.. உன்ன அவ பார்த்தாளா..” என்று ஆர்வமுடன் கேட்டான் பரிதி.
“ம்ம். நான் தான் பார்த்தேன். அவங்க என்னைப் பார்க்கல.. பட் நான் பார்த்தது சிக்னல வெயிட் பண்ணும் போது. சோ மிஸ் பண்ணிட்டேன்..” என்றான் கையில் கிடைத்தும் தவற விட்டதை எண்ணி வருத்தமாக.
“ஓ..” என்றான் சுரத்தே இல்லாமல்.
“எப்படியும் கண்டு பிடிச்சிரலாம். கவலைப் படாத. ” என்று சொன்னவனுக்கு இன்னொன்றும் நியாபகம் வந்தது.
“அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, அவங்க தான் எனக்கு கால் பண்ணாங்க. ஒரு வேளை அந்த நம்பருக்கு கால் பண்ணி பார்த்தா தெரியும்ல..” என்று இனியன் கேட்டிட,
“இத்தனை நாள் இந்த விஷயம் ஏன் தோணமா போயிருச்சு எனக்கு.. ஏன் டா.. எனக்கு தான் தோணல. உனக்குமா தோணல.. உடனே நம்பர் செக் பண்ணு..” என்று பரிதி கூற,
“கரெக்ட்டா எந்த மாசம் அண்ட் தேதி.” என்று தம்பிக்காரன் கேட்டிட,
“இப்போ அக்டோபர். ஐ திங்க் ஜூலை ஃபர்ஸ்ட் வீக் னு நினைக்கிறேன்..” என்று பரிதி கூறிட,
“ஒரு நிமிஷம்.” என்றவன் தனது அலைபேசியில் தேடிப் பார்க்க, அது என்னமோ ஆகஸ்ட் வரைக்கும் தான் காட்டியது.
“என்ன டா.. ஆகஸ்ட் வரைக்கும் தான் வருது.. அதுக்கு முன்ன வரல..” என்று பரிதி கேட்டிட,
“அச்சச்சோ.. சாரி ண்ணா.. என் போன்ல மூணு மாசம் வரைக்கும் தான் கான்டாக்ட் லிஸ்ட் காட்டும். அதுக்கு மேல காட்டது..” என்று பாவமாய் வைத்துக்கொண்டு சொல்ல,
தம்பிக்காரனை முறைத்துப் பார்த்த பரிதி, “ஒழுங்கா ஓடிரு.. நீயே ஆசை காட்டி மோசம் பண்ணி விடுற.. போடா டேய்..” என்று திட்டி, அங்கிருந்து அனுப்பியவனை “ஒரு நிமிஷம் நில்லு..” என்று பரிதி அழைக்க,
“சொல்லு ண்ணா..”என்றான்.
“அவ பேரு எதுவும் சொன்னாளா??” என்று கேட்டான் தம்பியிடம்.
“அய்யயோ.. செத்தேன் நான்..” என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்க,
“என்ன டா.. சொன்னாளா இல்லையா..?? ” என்று சற்று அதட்டியபடி கேட்க,
“அது.. அது.. சொன்னாங்க.. ஆனா..” என்று தம்பிகாரன் இழுக்க,
“என்ன டா.. ஆனா..” என்று முறைத்துப் பார்த்தான் அண்ணன்.
“அது.. எனக்கு மறந்து போச்சு.. என்றான் தலையை சொறிந்தவாரு..” சொல்லி முடிக்கவும், பரிதி கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்து அவன் மேல் தூக்கி எறிவதற்குள் வெளியில் ஓடி வந்து விட்டான் இனியன்.
“ஆத்தாடி.. செம கோவத்துல இருக்கான் போலவே.. எப்படியாவது நம்ம யோசிச்சு சொல்லுறனும்..” என்று அங்கிருந்து சென்றான்.
இனியன் வெளியில் சென்றதும், அவன் கழுத்தில் அணிந்து இருந்த அவள் சங்கிலியை பற்றிக் கொண்டவன், “உன்ன எப்படி கண்டு பிடிக்கப் போறேன்னு தெரியல.. எங்கேயோ இருந்துட்டு கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிட்டு இருக்க. சீக்கிரம் என்கிட்ட வந்து சேந்துரு..” என்று அவளிடம் மானசீகமாக பேசிக் கொண்டான்.
ஜிம் அறையில் இருந்து வெளியில் வந்த இனியனோ, வைஷுவின் அறைக் கதவை தட்ட, அவளோ அப்பொழுது தான் குளித்து விட்டு வந்து இருப்பாள் போலும்.
“இந்த நேரத்துல யாரு. ஒரு வேளை அம்மாவா இருக்குமோ..” என்று நினைத்தவள்,
“ஒரு நிமிஷம் ம்மா..” என்று வெளியில் இனியன் இருப்பது தெரியாமல் தாய் என்று நினைத்துக்கொண்டு கூறியவள், அவசரமாக ஏதோ இரவில் அணியும் ஆடை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.
இனியன் மீண்டும் கதவைத் தட்ட, “வரேன் ம்மா.” என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்தாள்.
இனியனோ, கதவை திறந்ததும், பெண்ணவளைக் கண்டு விழி விரித்து நின்றான்.
அவளது அங்கங்கள் லேசான ஆடையின் ஊடு, தெளிவாகத் தெரிய அவன் தான் திக்கு முக்காடிப் போனான்.
அவளோ அவனைக் கண்டதும், “அய்யயோ.. இவனா..” என்று நினைத்தவள், அவசரமாக அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, அருகில் இருந்த ஒரு துண்டை எடுத்து மேலே போட்டுக் கொண்டாள்.
கண்ணை மூடித் திறந்து நிதானத்திற்கு வந்த ஆணவன், “உங்கிட்ட பேசணும்..” என்று கூற,
“எ.. என்கிட்டயா.. என்கிட்ட என்ன பேசணும்..” என்று திக்கி திணறிக் கேட்க,
“அதுவா..” என்று இழுத்தவன், அறையின் உள்ளே வந்து கதவை சாற்றி தாழ்ப்பாள் போட,
அவளோ சத்தம் கேட்டு திரும்பி நின்று அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“ஹே.. ஏன் கதவை மூடுற..” என்று பதட்டமாகக் கேட்க,
அவனோ அவளின் அருகில் மெல்ல நெருங்கி வந்தான்.
“இனியா.. என்ன பண்ணப் போற.. எதுக்கு இப்போ கதவைச் சாத்துன..” என்று பயத்துடனும் பதட்டத்துடனும் கேட்க,
“நீதான.. பாதியை அவகிட்ட கேட்க சொன்ன..?? ” என்றிட,
“ஆ.. ஆமா..” என்றாள்.
“அதான்.. கேட்டுட்டு உன்னப் பார்க்க வந்து இருக்கேன்..” என்றான்.
“அப்படியா.. அவ என்ன சொன்னா..” என்றால் பின்னோக்கி நகர்ந்தபடி..
“நீ சொன்னதைத் தான் சொன்னா..” என்றான் அவளை நெருங்கி நின்றபடி.
இனி பின்னால் நகருவதற்கு இடம் இல்லாமல் சுவற்றில் மோதி நிற்க, அவனும் அவளை நூல் அளவு இடைவெளியில் நெருங்கி நின்றான்.
அவள் பயத்தில் விடும் மூச்சுக் காற்று அவன் மேல் மோதிட, அவனுக்கோ உஷ்ணப் பெருமூச்சு.
அவளுக்கு பக்கவாட்டில் இரு கைகளையும் சுவற்றில் வைத்தபடி, அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், “என்னை எனக்கு அவ்ளோ பிடிக்குமாடி..” என்று கேட்டான்.
அவளிடம் மௌனம்.
“வைஷு.. இங்க பாரு டி..” என்றிட,
அவளோ இப்பொழுது அவனது கண்களைப் பார்த்தாள்.
அவளின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தவன், “என்னை உனக்கு பிடிக்குமான்னு கேட்டேன்..” என்றான்.
அவளும் ஆமாம் என்று தலை அசைத்தாள்.
“எப்போ இருந்து இப்படி..” என்று அவன் அவளின் மனதைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்க,
அவளும், “சின்ன வயசுல இருந்து பிடிக்கும். ஒரு கட்டத்துல அது உன் மேல காதலா மாறிடுச்சு. ஆனால் நீ எப்பவும் என்கூட சண்டை போடுறனால உங்கிட்ட சொல்ல பயம். நீ எதுவும் கஷ்டப் படுற போல சொல்லிட்டா என்னால தாங்க முடியாது. அதான் இது நாள் வரைக்கும் என் மனசுல உள்ளதை நான் வெளிக் காட்டல..” என்றாள் லேசாக கலங்கிய கண்களுடன்.
அவள் நெற்றியின் மீது நெற்றி முட்டி, “எனக்குமே இத்தனை நாள் என் மனசுல நீ இருக்குறது தெரியாமல் தான்டி இருந்தேன். அன்னைக்கு உன்ன அப்படி பார்த்ததும் என்னையே அறியாமல் என் மனசுல, உன் மேல இருக்குற காதல் வெளி வந்தது.” என்றவன், அவளின் பிறை நெற்றியில் ஆழ்ந்து முத்தம் இட, அவளது கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வெளியேறியது.
“வைஷு…” என்று அழைத்திட, “ம்ம்ம்..” என்றாள்.
“லவ் யூ டி…” என்றான்..
அவளும் கலங்கிய கண்களுடன், அவனின் மார்பினில் தஞ்சம் புக, அவனும் அவளை வாகாக அணைத்துக் கொண்டான்.
நித்தமும் வருவாள்..
