அத்தியாயம் 21
சூனியனுடன், அவன் மந்திரங்களும் மறைந்து போக, அத்தனை நேரம் சத்தத்தை மட்டும் வைத்து, என்ன நடக்கிறது என்ற பதைப்பதைப்புடன் நின்ற ஐங்கரனுக்கும் ரூபிணிக்கும் தூரத்தில் மகள் அமர்ந்திருப்பது தெரிந்தது.
“இரா…” என்று அழைத்தபடி ஓடியவர்களுக்கு, அருகே சென்ற போதுதான் அத்வைத் நிலத்தில் வீற்றிருப்பது தெரிந்தது.
அவனைச் சுற்றி ஆறாக பெருகியிருந்த செந்நிறக்குருதி நடந்ததைக் கூற, அதை நம்ப முடியாமல் திகைத்து நின்று விட்டனர் இராவை பெற்றவர்கள்.
முதற்கட்ட அதிர்ச்சிலிருந்து வெளிவந்தவர்கள், இராவை அழைக்க, உயிர்ப்பின்றி அவர்களை நோக்கினாள் மகள்.
தன் கரத்திலிருந்த தன்னவனின் குருதியை கண்டு அவளின் ஒற்றைக் கண்ணில் கண்ணீர் வழிய, “என் கனவு பலிச்சுடுச்சு. நான்தான் அதை தப்பா புரிஞ்சுகிட்டேன் போல!” என்று விரக்தியுடன் கூறினாள்.
“இராம்மா… என்னாச்சு?” என்று ஐங்கரன் வினவ, “எனக்குப் பதிலா அவன் உயிரைக் குடுத்து, என்னை நடைப்பிணமாக்கிட்டு போயிட்டான்.” என்றாள் இரா நிர்மலமான குரலில்.
ரூபிணி மகளின் அருகே அமர்ந்து ஆறுதலாக அவளின் தோளைத் தொட, “அம்மா, எனக்கு அவன் வேணும்.” என்று கதறியபடி அன்னையை நாடினாள் இரா.
நான்கு வருடங்கள் கழித்து, ‘அம்மா’ என்று அழைத்து மகள் கேட்பதை செய்ய முடியாத தாயாக தவித்தபடி ரூபிணி ஐங்கரனை நோக்க, அவர் ஏதோ முடிவெடுத்தவராக, “இரா, உனக்கு அவன் உயிரோட வந்தா போதுமா?” என்று வினவினார்.
அதைக் கேட்டவள் திகைத்து தந்தையைக் காண, அவரோ ‘பதில் சொல்லு’ என்பது போல பார்த்தார் மகளை.
‘ஆம்’ என்று தலையசைத்தவளோ, பின்பு நிதர்சனம் புரிய, “அது எப்படி முடியும்? அவன் ஏற்கனவே இறந்துட்டான்.” என்றாள்.
“இன்னும் நமக்கு நேரம் இருக்கு இரா. அவனை உயிர்ப்பிக்க பிளட் மேஜிக் செய்யப் போறோம்.” என்ற ஐங்கரனை அதிர்ச்சியுடன் பார்த்த இரா, “அது தடை செய்யப்பட்டதாச்சே. அதை செஞ்சா, செஞ்சவங்களுக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கே.” என்று தயக்கத்துடன் கூறினாள் இரா.
“என்னை நம்பு இரா. அப்படியே ஆபத்து ஏற்பட்டாலும், எங்க பொண்ணுக்கு நாங்க செஞ்ச பாவத்துக்கு தண்டனையா அதை ஏத்துக்கிறோம்.” என்ற ஐங்கரன் ரூபிணிக்கு கண்ணை காட்டிவிட்டு கோவிலை நோக்கி நடந்தார்.
இரா அப்போதும் தளம்பலான மனநிலையில்தான் இருந்தாள்.
‘இது சரியா?’ என்ற கேள்விக்கு, ‘இது எதுலயும் சம்பந்தமே இல்லாத ஒரு நல்லவனோட உயிர் எதுக்கு போகணும்? அவனுக்கு திரும்ப உயிர் குடுக்குறது சரிதான்.’ என்றது அவளின் மனம்.
‘ஆனா, அதுக்கான விலை…’ என்று அவள் யோசிக்கும் வேளையில், “ரொம்ப யோசிக்காத இரா. இந்த மந்திரங்களும் வழிவழியா நமக்கு சொல்லப்பட்டதுதான். தடை செய்யப்பட்ட மந்திரங்களை எதுக்கு சொல்லிக் குடுக்கணும்னு நானும் பல முறை யோசிச்சுருக்கேன். இதுதான் அதுக்கான காரணம் போல! எங்ககிட்ட சக்திகள் இல்லன்னாலும், அந்த மந்திர உச்சாடனம் எங்களுக்கு தெரியும். அந்த மந்திரத்துக்கு உன் சக்திகளை துணையா கொண்டு, அந்த தம்பியை உயிர்ப்பிச்சுடலாம். நீ கவலைப்படாத!” என்று ஆறுதலாகப் பேசினார் ரூபிணி.
“ஆனா, உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா…” என்று கலங்கியபடி இரா கேட்க, “உன் அப்பா சொன்னதுதான் இராம்மா… அப்படி ஏதாவது ஆனா கூட, எங்களுக்கான தண்டனையா ஏத்துக்குறோம். உன்னை விரும்புனதுக்காக உயிரை குடுத்தவனைக் காப்பாத்த எங்க உயிரை குடுக்க மாட்டோமா?” என்றவர், “ஆனா, அந்தளவுக்கு எல்லாம் போகாதுன்னு நம்புவோம். நாம கும்பிடுற அம்மன் நம்மை கைவிட மாட்டாங்க.” என்றார்.
இரா கண்களை மூடி, “நாங்க செய்யுறது சரியான்னு தெரியல. நீதான் வழி காட்டணும்னு.” என்று வேண்ட, அதற்குப் பதிலாக கோவில் மணி சத்தம் கேட்டது.
அதே சமயம், பழைய கிழிந்த புத்தகத்துடன் அங்கு வந்து சேர்ந்தார் ஐங்கரன்.
மந்திர உச்சாடனத்திற்காக மூவரும் அத்வைத்தின் இறந்த உடலை சுற்றி அமர்ந்தனர்.
“இராம்மா, திரும்ப கேட்குறேன். உனக்கு அந்த தம்பி உயிரோட வந்தா போதும்ல?” என்று வினவ, புருவச் சுருக்கத்துடன் தலையசைத்தவள், அதற்கான காரணத்தை வினவினாள்.
“இந்த பிளட் மேஜிக் மூலமா நாம பெறப் போறதுக்கு ஈடான ஒண்ணை நாம குடுக்கணும். இங்க அத்வைத்தோட உயிருக்கு ஈடா, அவனோட நினைவுகளை தரப் போறோம். எல்லா நினைவுகளையும் இல்ல, உன்னைப் பத்தின, உங்க காதலைப் பத்தின நினைவுகளை தரப் போறோம்.” என்று ஐங்கரன் கூறியதைக் கேட்டு உள்ளுக்குள் துடித்தாள் இரா.
‘நம்ம காதல், அது குடுத்த அழகான தருணங்கள் போதும், நான் என் வாழ்க்கையை வாழ!’ என்று அவன் கூறியது நினைவுக்கு வர, ‘நீங்க என்னைக் காப்பாத்த காதலை ஆயுதமா பயன்படுத்தின மாதிரி, நானும் உங்களைக் காப்பாத்த நம்ம காதலை பயன்படுத்தப் போறேன் அத்து!’ என்று மறுகினாள்.
“ம்ம்ம், எனக்கு என் அத்து உயிரோட வந்தா போதும்பா.” என்று அழுகையை அடக்கிக் கொண்டு சொன்ன மகளை ஆதுரமாகக் கண்ட ஐங்கரன் மந்திர உச்சரிப்பை ஆரம்பித்தார்.
சிறு யாகம் அங்கு வளர்க்கப்பட, அதில் அத்வைத்தின் குருதியுடன், ஐங்கரன் மற்றும் ரூபிணியின் குருதியும் விடப்பட்டது.
இரத்தம் கொடுக்க வந்த இராவைத் தடுத்த அவளின் பெற்றோர், “நீ உன் சக்தியை மட்டும் குடு.” என்று சொல்லி விட்டனர்.
அந்த நடுஇரவில், காட்டிற்கு மத்தியில், கோவில் வாசலில், தடை செய்யப்பட்ட மந்திரத்தின் மூலம், நல்லவன் ஒருவனின் உயிர் மீட்கப்பட்டது.
அத்வைத் ஒரு பெருமூச்சுடன் விழித்தவன், இராவைக் கண்டபடி மீண்டும் மயங்கிப் போக, பதறிய இராவோ, “அத்து என்னாச்சு?” என்று அவனை சோதித்தாள்.
“சாதாரண மயக்கம்தான் இராம்மா. நாம ஹாஸ்பிட்டல்ல சேர்த்து, அவங்க வீட்டுல தகவல் சொல்லிடலாம்.” என்றார் ஐங்கரன்.
அதற்கு மௌன தலையசைப்பை மட்டும் கொடுத்த இரா, தன்னவனை இறுதி முறையாக கண்களில் நிரப்பிவிட்டு, கடமை முடிந்ததென்று அங்கிருந்து கிளம்பினாள்.
*****
மருத்துவமனையில் கண்விழித்த அத்வைத் முதலில் கண்டது அவனின் தந்தை ஆதிகேசவனையே.
“அப்பா…” என்று முனகலுடன் அவன் எழ முயற்சிக்க, “கொஞ்ச நேரம் சும்மா இருக்கியாடா அதி. ஆனானப்பட்ட எனக்கே பயம் காட்டிடேல!” என்றபடி அருகே வந்து மகனைத் தாங்கிக் கொண்டார் ஆதிகேசவன்.
“இல்லன்னா மட்டும் நீ பயப்படவே மாட்ட பாரு.” என்றார் அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த சாரதி.
“அங்கிள்… நீங்க இங்க? எனக்கு என்னாச்சு? எங்க இருக்கோம்?” என்று வலியில் புருவம் சுருக்கி வினவினான் அத்வைத்.
“ஸ்ட்ரெயின் பண்ணிக்காத அதி. உனக்கு தலைல அடிபட்டதால அம்னீஷியாவா இருக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க. இது, நீ வேலை செய்ய வந்த ஊரு. உனக்கு எதுவும் ஞாபகம் இல்லையா?” என்று சாரதி வினவ, “இல்ல, மைண்ட் பிளாங்க்கா இருக்கு.”என்றான் அவன் யோசனையுடன்.
“நீயும் ஆரம்பிச்சுட்டியா? கொஞ்ச நாளைக்கு அவனை எதைப் பத்தியும் யோசிக்காம இருக்க விடு.” என்று நண்பனை ஆதிகேசவன் கடிந்து கொள்ள, அதற்கு மேல் அங்கிருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் இரா.
சம்பவம் நடந்து இரு நாள்கள் கடந்திருந்தன.
அத்வைத்தை மருத்துவமனையில் சேர்த்த போது வந்தது, அதன்பிறகு இரா மருத்துவமனை பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
இன்று, ரக்ஷனைப் பார்க்க வேண்டி வந்திருந்தவளை, அத்வைத் விழித்து விட்டான் என்ற செய்தி, அவனின் அறை நோக்கி இழுத்து வந்திருந்தது.
ஆனால், அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என்பதை அவனே கூறிய பின்னர், அவனை சந்திப்பது சரியாக இருக்காது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ரக்ஷன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தாள்.
ரக்ஷனின் கால் முழுவதும் கட்டு போடப்பட்டிருக்க, அதை வருத்தமாக பார்த்தபடி, “இப்போ எப்படி இருக்கு?” என்று விசாரித்தாள்.
“இப்போ பரவால.” என்றவன், “நீ எப்படி இருக்க?” என்று பதிலுக்கு வினவினான்.
அவனுக்கு அனைத்தும் சொல்லப்பட்டிருந்தது.
இராவின் வாழ்க்கை அத்வைத்தால் மாறிவிடும் என்று எண்ணி மகிழ்ந்தவனுக்கு, இந்த செய்தி தலையில் இடியாகி இறங்கியது.
உடனே இராவை அழைத்திருந்தவன், “அவருக்கு ஞாபகம் இல்லன்னா என்ன? நம்ம ஞாபகப்படுத்தலாம்.” என்று கூறியிருக்க, “அது அவருக்கும் வலி, எனக்கும் வலி! ஹுஹும், சரியா வராது. எல்லாம் விதிப்படி நடக்கட்டும்.” என்றிருந்தாள் இரா.
அதன்பிறகு இப்போதுதான் நேரில் சந்திப்பதால், அவளின் நலன் குறித்து விசாரித்தான் ரக்ஷன்.
“மேனேஜ் பண்ணிட்டு இருக்கேன்.” என்று போலியாக சிரித்தாள் இரா.
அதுவே கூறியது அவளின் வலியை.
அவளின் வலியை அதிகரிக்காத வண்ணம் பொதுவாகவே பேசினான் ரக்ஷன்.
“வேலைக்கு டைம்மாச்சு. நான் கிளம்புறேன் ரக்ஷா. உடம்பை பார்த்துக்கோ.” என்று இரா விடைபெற, “நீயும் மனசை பார்த்துக்கோ இரா.” என்று விடை கொடுத்தான் ரக்ஷன்.
காதுகளில் செவிப்பொறியை சொருகியவள், பாடல்களை ஒலிக்க விட்டாள். அவன் விட்டுச்சென்ற பழக்கங்களுள் ஒன்று!
No one can rewrite the stars
How can you say you’ll be mine?
Everything keeps us apart
And I’m not the one you were meant to find
It’s not up to you, it’s not up to me
When everyone tells us what we can be
And how can we rewrite the stars?
Say that the world can be ours.
*****
வேறு எந்த பெரிய மாற்றங்களும் இல்லாமல், ஒரு மாதம் கடந்திருந்தது…
தாரணியை நோக்கிய விநாயகத்தின் மாற்றத்தைத் தவிர!
இரா மீண்டும் அவளின் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசிக்க ஆரம்பித்ததையும் தவிர!
நால்வரும் ஒன்றாக அமர்ந்து காலையுணவை உண்டு கொண்டிருக்க, “எனக்கு இன்னும் புரியல, நீங்க ஏன் அத்வைத் மாமாவை பிரேக்கப் பண்ணீங்க?” என்று தினம்தோறும் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டாள் அவனி.
அவளுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது!
அத்வைத்தின் பெயரைக் கேட்டதும், இராவின் முகத்திலிருந்த போலிப் புன்னகையும் தொலைந்து போக, “உனக்கு என்ன பிரச்சனை இப்போ? அவளை நிம்மதியா சாப்பிட விட மாட்டியா?” என்று ரூபிணி சின்ன மகளை வசைபாடினார்.
“க்கும், உடனே வந்துடுவீங்களே! ஃபர்ஸ்ட் எனக்கு அக்கா… அப்புறம்தான் உங்களுக்கு பொண்ணு! ஞாபகம் இருக்கட்டும்.” என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு சென்ற தங்கையை சரிகட்டி, பணிக்கு வர சற்று தாமதமாகி விட்டது இராவிற்கு.
‘கொக்கோ விஸ்பர்ஸ்’ஸிற்குள் நுழைந்த இராவை நோக்கி புன்னகைத்தாள் வானதி.
பதிலுக்கு சிரிப்பை தந்த இரா, அந்த ஒரு மாத வழக்கமாக, பாடலை ஒலிக்க விட்டுவிட்டு அவளின் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
பழைய இன்னட்டுகளை நீக்கி, புதியவைகளை அடுக்கியவள், பில் கவுண்டருக்கு வந்தாள்.
All I want is to fly with you
All I want is to fall with you
So just give me all of you
It feels impossible
It’s not possible
Is it impossible?
Say that it’s possible
‘ப்ச், இது வேற… காலைலேயே இந்த பாட்டைக் கேட்டா, நாள் நல்லபடியா ஓடுன மாதிரிதான்!’ என்று மனதிற்குள் சலித்தபடி அதை அணைத்தவளை தடுத்தது, அந்தக் குரல்!
“ஹாய்…” என்ற குரலில் சகலமும் மறந்தவளாக அவள் ஸ்தம்பித்து அவனைப் பார்க்க, தனக்கான பதில் வரவில்லை என்பதால் மீண்டும், “ஹாய்…” என்றவன், அவளின் பெயர்க்குறியைப் பார்த்து, “இரா…” என்றான்.
அப்போதும் பதில் சொல்லவில்லை அவள்.
“உங்களுக்கு இரான்னு யாரு பெயர் வச்சது? அதுக்கு மீனிங்… இருட்டுதான?” என்றவனுக்குமே ஆச்சரியம்தான், எப்படி அதற்கான அர்த்தம் தெரிந்தது என்று!
அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாமல், “இவ்ளோ ப்ரைட்டா இருக்க உங்களுக்கு அந்தப் பெயர் சுத்தமா செட்டாகல. நல்லா ப்ரைட்டா ஏதாவது பெயர் வைக்கலாம். லைட்… ஹ்ம்ம், ஸ்டார்லைட்!” என்றான் அவன் விழிகளை விரித்து.
அதில் அவளின் புருவம் ஆச்சரியத்தில் சுருங்கி விரிய, “ஓஹ் சாரிங்க. திடீர்னு என் மைண்ட்ல ஏதோ ஸ்பார்க்கானதால, பெயர் வச்சுட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. பை தி வே, என்னோட பெயர் அத்வைத்.” என்று கரத்தை நீட்ட, தன்னிச்சையாக அவளும் கரத்தை நீட்டினாள்.
“உங்க சாக்லேட்ஸ்ல எது பெஸ்ட்? கொஞ்சம் சஜ்ஜஸ்ட் பண்ணுங்களேன்.” என்று அவன் கேட்க, அவளோ பதில் எதுவும் பேசாமல், சாக்லேட் டிரஃபிள்ஸ்ஸை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
“நீங்க பேச மாட்டீங்களா? என்னால எல்லாம் பேசாம இருக்கவே முடியாது.” என்று அவன் கூற, உதட்டோரம் சிரிப்பை தேக்கி வைத்தாள் இரா.
“உங்க ஸ்மைல் அழகா இருக்குங்க. நல்லாதான் சிரிக்கலாமே.” என்று அவன் கூற, பையை அவனிடம் நீட்டியபடி முறைத்தாள் இரா.
“நான் ஏதோ ஃபிளர்ட் பண்றேன்னு தப்பா எல்லாம் நினைக்காதீங்க. நான் ரொம்ப நல்லவன். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. அதான் இப்படி பேசுறேன்.” என்றவன் ஒரு பெருமூச்சுடன், “உங்ககிட்ட சொல்றதுக்கு என்னங்க? ஒரு மாசத்துக்கு முன்னாடி, இதே ஊருக்கு வந்த என்னை எந்த மோகினி பிசாசு அடிச்சுச்சோ, இந்த ஊர்ல இருந்த ஞாபகம் எதுவும் இல்லாம போயிடுச்சு. திரும்ப அந்த ஞாபகங்கள் வேணும்னுதான் இந்த ஊருக்கு வந்ததே. இந்த முறை எந்த பிசாசும் அடிக்காம கவனமா இருக்கணும்.” என்று அவன் கூற, அவன் திரும்ப திரும்ப ‘பிசாசு’ என்றதில் அவனை முறைத்தாள் பாவை.
“போதுங்க இவ்ளோ இன்டென்சிட்டி ஆகாதுங்க.” என்று போலியாக பயந்தவன், அங்கிருந்த பூஜாடியை காட்டி, “இதுல பூ இருந்துச்சா என்ன? நான் அப்போ பார்த்தப்போ இல்லையே! ஹ்ம்ம், இந்த ஊரே மர்மமாதான் இருக்கு.” என்றான்.
அவனின் பேச்சை உள்ளுக்குள் ரசித்தவளோ, வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள், பழைய இராவாக!
“ஓகே ஸ்டார்லைட், நாளைக்கு வரேன்.” என்று அவன் விடைபெற, மனதெங்கும் பூத்த பரவசத்துடன் திரும்பி நின்று கொண்டாள் இரா.
அவளின் மனமோ, ‘திரும்ப அவன் வாழ்க்கைக்குள்ள போறது சரியா?’ என்று வினவ, அவள் கரம் பட்டு ஒலிப்பான் மீண்டும் இசைக்க ஆரம்பித்தது.
And how do we rewrite the stars?
Say you were made to be mine
And nothing could keep us apart
Cause you are the one I was meant to find
It’s up to you and it’s up to me
No one could say what we get to be
And why don’t we rewrite the stars?
Changing the world to be ours!
அதைக் கேட்டவள் ஒரு சிரிப்புடன் திரும்பிப் பார்க்க, அதற்காகவே காத்திருந்தவன் போல, அவளை நோக்கி கண்சிமிட்டி விட்டு சென்றான், ஸ்டார்லைட்டின் அத்து!
முற்றும்?!
அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். அத்வைத் இரா பார்த்தவுடன் காதலிக்க அவளையும் காதலின் உணர்வுகளை கொண்டு வருவது அவளை சுற்றிய மர்மங்களையும் ஊரின் மர்மங்களையும் கண்டறிந்து துணையாக இருந்து ஜெயிப்பது அருமை. நிறைய சஸ்பென்ஸ் கொஞ்சம் துரோகம் பாசம் நிறைய என்று கலந்து சூப்பர் போகுது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சிஸ் ❤️ கதை உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 😍 ஒவ்வொரு எபியும் வாசிச்சு உங்க கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் 😊