2 – காற்றிலாடும் காதல்கள்
“வணக்கங்க ஐயா… பெரியம்மா நகை எல்லாம் கொண்டு வர சொன்னாங்க.. இன்னிக்கி கொண்டு போகட்டுங்களா?” எதிரே வந்த நகை ஆசாரி விஸ்வநாதனிடம் கேட்டார்.
“இன்னிக்கி பாடமை ஆசாரி… மறந்துட்டியலோ? நாலாம் நாலு கொண்டு வாங்க.. இன்னிக்கி நெறைய புது வகையா வந்திருக்காமே.. அது எல்லாம் போட்டோ புஸ்தகமா கொண்டு வாங்க.. புள்ளைக்கு புடிச்சது சொன்னா செஞ்சிருவோம்.. வரட்டா..” எனக் கூறியபடிக் கிளம்பிவிட்டார்.
“சரிங்கய்யா…“ எனக்கூறி ஆசாரி ஒதுங்கி வழிவிட்டு நின்றார்.
விஸ்வநாதன் தனது மாந்தோப்பு இருக்கும் இடத்திற்கு செல்லும் வழியில் மலைக்கோவில் செல்லும் தனது பேரனைக் கண்டார். அவனின் செயல்கள் எல்லாம் சிறிது நாட்களாக அவருக்குப் பெரும் கவலையைக் கொடுத்து வந்தன.
அவனைப் பற்றி மனைவியிடம் பேசும் போதெல்லாம் அவர் கணவருக்கு சமாதானம் கூறி ஆசுவாசம் மட்டுமே செய்தார், மகளிடம் கூறினால் அவளோ, “அவன் என்ன பண்றான்னு அவனுக்கு தெரியும் ப்பா.. தேவை இல்லாம நீங்க கவலைபடாதீங்க..“ எனக் கூறிச் சென்றுவிடுவார்.
அப்படி அவன் எதைத் தான் தேடித் திரிகிறான் என்று இதுவரையிலும் அவருக்குத் தெரியவில்லை. புரியவும் இல்லை. இதுவரை இந்த ஊர்காரர்கள் தொடாத ஒரு விஷயத்தை அவன் தொடுகிறானோ என்ற ஐயம் அவரின் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.
மலைக்கோவில் வாசலிலிருந்து அவனோடு இருவர் வந்து இணைந்துக் கொண்டனர். அவர்களைப் பார்த்தபடித் தனதுத் தோப்பிற்கு விரைந்தார் விஸ்வநாதன்.
“என்ன கீதன் வெளிய போக முடிஞ்சதா?” என அவனது நண்பன் அவினாஷ் கேட்டான்.
“முடியலன்னு தானே நம்மள இங்க வரச்சொல்லிருக்கான். வா மேல போய் பேசிக்கலாம்..“ என அன்வர் கூறவும், மூவருமாக படிகளில் ஏறினர்.
அந்த மலைக்கோவில் ஊரின் மத்தியில் அமைந்திருந்தது. அங்கிருந்து பார்த்தால் மொத்த ஊரின் வனப்பும், பாதையும் தெளிவாக யார் யார் எங்கெங்கிருந்து வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியும்.
ஊரின் மத்தியில் இருக்கும் இந்த இடத்தில் முன்பொரு காலத்தில் குகை கோவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமாராக 130 வருடங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஒரு அசம்பாவிதம் காரணமாக அந்த குகை வாசல் மூடிக்கொண்டதாம்.
ஆனால் அங்கே ஏதோ புதையல் இருப்பதாக சிலர் வதந்திப் பரப்ப, ஆங்கிலேய அரசாங்கம் அங்கே ஆராய்ச்சி நடத்த முனைந்து தோற்றுப் போன கதைகளும் உண்டு.
இந்தியா சுதந்திரமடைந்த பின்பு, மீண்டும் சில வருடங்கள் கழித்து முயன்றனர். அப்போது சுவடிகள் படிக்கத் தெரிந்த சிலரின் உதவியோடு அங்கிருக்கும் இயந்திரநுட்பமறிந்து அதைத் திறக்க முனையும் வேளையில் தான் மாலா வடிவேலனைத் திருமணம் செய்திருந்தார்.
வடிவேலன் மிகச்சிறந்த தமிழ் பேராசிரியர் மட்டுமல்ல, சுவடிகளைப் படிக்கும் திறனும் கொண்டவர். அவரின் உதவி அப்போது அந்தக் குகைத் திறப்பிற்குத் தேவைப்படுவதறிந்த மாலா, தன் தந்தை மற்றும் கணவனோடு அங்கே வந்தார்.
“வணக்கம் அதிகாரி ஐயா… இவரு என் மாப்பிள்ளை. இவருக்கு பழைய தமிழ் நல்லா தெரியும்ங்க. குகைத்திறக்க உதவியா இருப்பாரு.” என விஸ்வநாதன் தான் அதிகாரிகளோடு அந்த மொட்டைப் பாறையாக நிற்கும் மலைக்கு அனுப்பினார்.
மாலா சிரிப்புடன் கணவனைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தார். வடிவேலனும் கண்ணடித்து மனைவிக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுப் படியேறினார்.
அதன்பின் 6 வருடங்களாக அந்தக் குகையைத் திறக்கும் முயற்சியில் அவர் அந்தக் குழுவோடுப் பயணித்து, சுற்றிப் பல அறிய இடங்களைக் கண்டறிந்துக் கூறினார்.
ஆனால் இந்தக் குகையை மட்டும் திறக்க முடியவில்லை. அந்த தொழில்நுட்பம் மட்டும் யாருக்கும் புரியவில்லை. வடிவேலனுக்கு அந்த விஷயத்தில் மிகவும் மனவுளைச்சல் ஏற்பட்டது.
“ஏன் என்னால அந்த குறிப்ப புரிஞ்சிக்க முடியல மாலா? நான் எங்க எத தவறவிடறேன்?” மது அருந்தியபடிக் கேட்டார்.
“காலைலையே இந்த பழக்கமா? ஏங்க இப்படி பண்றீங்க? அந்த குகை இப்ப தொறக்கலன்னா இன்னும் அதுக்கான நேரம் வரலன்னு அர்த்தம். சும்மா அதையே நெனைச்சி குடிச்சி உடம்ப கெடுத்துக்காதீங்க.”
“அதெப்படி நான் எல்லாம் படிச்சி முயற்சி செஞ்சி பாத்தும் அது தொறக்காம போகும்? என் திறமைக்கு இது சவாலா இருக்கு மாலா. என்னால இத ஏத்துக்கவே முடியல.. மறுபடியும் 2 நாள் கழிச்சி போய் முயற்சி பண்ண போறேன். நீ ஊருக்கு போக தேவையானத எல்லாம் எடுத்து வை.“ என அவளையனுப்பிவிட்டு, அந்தச் சுவடிமாதிரியை கையில் எடுத்தார்.
“வரும் நித்ய பௌர்ணமி தினத்தில், நள்ளிரவு சந்திரன் முழு வீரியத்தில் சுற்றும் வேளையில், .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. …. இசைமீட்ட குகையின் முக்கிய தாழ் திறக்கும்..” என இன்னும் சில வரிகளை அவர் சுவடியில் இருந்து எடுத்தெழுதியிருந்தார்.
அந்த ஊரில் தான் அமாவாசை மற்றும் பௌர்ணமியில் யாரும் இரவில் வெளிவருவதில்லையே.. அந்தக் காரணத்தைக் கூறி அதிகாரிகளையும் சில முறை மறுத்தனர்.
அதையும் மீறி அரசாங்கக் கட்டளை என்றுக் கூறி இரண்டு முறை அவர்களும் முயற்சித்தனர். ஆனால் சரியாக 9 மணிக்கு அனைவரும் உறங்கி பகல் வெயில் ஏறிய பின்பு தான் எழுந்தனர். அவர்களின் நோக்கமானது இருமுறையும் நிறைவேறாமல் போய்விட, அதற்கு பின் அரசாங்கமும் அந்த முயற்சியைக் கைவிட்டது.
ஆனால் வடிவேலனால் இந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளமுடியவில்லை. பலச் சுவடிகளைத் தேடிப்படித்து விடுபட்ட விஷயங்களைச் சேகரித்தார். அந்த அதிகாரிகளைக் கண்டு விவரத்தைக் கூறவும் செய்தார். ஆனால் அவர்களோ, “இங்க பாருங்க வடிவேலன்.. அந்த ஊருல நமக்கு புரியாத பல மர்மம் இருக்கு. ஏற்கனவே அங்க போய் எங்க ஆளுங்க 3 பேரு உயிர் போயிருச்சி. இதுக்கு மேலயும் அந்த மலைக்கோவிலப்பத்தி நாங்க ஆராய்ச்சி பண்றதா இல்ல. நீங்களும் விட்டுருங்க. அடுத்த இடத்துக்கு நாம போகணும். தேதி முடிவானதும் உங்களுக்கு தகவல் சொல்றேன். வந்துருங்க.” என அந்த குழுவின் தலைவர் கூறியனுப்பிவிட்டார்.
வடிவேலன் மனதில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. அந்தக் குகைக்குள் சென்றுப் பார்த்தே ஆகவேண்டுமென்ற ஆவல் மட்டும் அடங்கவே இல்லை.
அதற்குபின்தான் அந்தக் கோர சம்பவம் மாலாவின் கண்முன்னால் நடந்தது. அவரும் தன் காதல் கணவனை இழந்தார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு யாரும் அந்த மலைக்கோவிலுக்கு ஆராய்ச்சி என்று செல்வதும் இல்லை, ஊர்க்காரர்கள் அனுமதிப்பதும் இல்லை.
“என்ன விஸ்வநாதன்.. முகம் வாட்டமா இருக்கே.. என்ன சேதி?”மாந்தோப்பில் அவருக்காகக் காத்திருந்த வெள்ளைச்சாமிக் கேட்டார்.
“என் பேரன் போக்கு தான் பிடிபடல வெள்ளச்சாமி. அவனும் அவங்கப்பன் மாதிரியே வந்துருவானோன்னு பயமா இருக்கு. எடுத்த காரியத்த சாதிக்க அவளோ பிடிவாதம் பிடிக்கறான். மாலாவும் அவனை கண்டுக்கறது இல்ல. அந்த மலைக்கோவிலுக்கு அவன் போறப்ப எல்லாம் எனக்கு தான் மனசு திடுக்குனு ஆகுது.“ மனதில் உள்ளதை நண்பனிடம் பகிர்ந்துக்கொண்டார்.
“நம்ம அப்துல் பேரனும் தானே அப்படி இருக்கான். அப்துல்லும் சொல்லி வருத்தப்பட்டான்.“
“இளரத்தம் பயப்படாது வெள்ளச்சாமி. நமக்கு தான் பயமா இருக்கு. என் வம்சத்துக்கு அவன் ஒருத்தன் தான் வாரிசா இருக்கான். அப்துல்கிட்ட பேசி அன்வர தெச திருப்பிட்டா மத்த பசங்களும் வேற வேலைய பாக்க போயிருவாங்க. சாயங்காலமா நான் உன் வீட்டுக்கு வரேன். அங்க பேசிக்கலாம்.“ என மனதில் எடுத்த ஒரு முடிவோடுக் கூறினார்.
“என் பேத்தி ஊர்ல இருந்து வர்றா. அவள ரயில்நிலையத்துல இருந்து கூட்டி வரணும் விஸ்வநாதா“
“கீதனோட இந்திரனையும் அனுப்பி கூட்டி வர சொல்லிடுவோம். நீ வெயில்ல அலைய வேணாம்.” எனக் கூறிவிட்டு அன்றைய தோப்பு நிலவரம் மற்றும் அறுவடைக்கான நாள், நேரம் முடிவு செய்து அங்கிருந்துப் புறப்பட்டார்.
இல்லம் வந்தவர் வீட்டில் யாரும் இல்லாததுக் கண்டு வேலையாளை அழைத்தார்.
“ஐயா.. பெரியம்மாவும், மாலாம்மாவும் கடைத்தெரு வரைக்கும் போயிருக்காங்க. பாப்பா நம்ம தலைவர் ஐயா சொன்ன கோவிலுக்கு இந்திரனோட போயிருக்காங்க.“
“இன்னிக்கி தான் பாடமை ஆச்சே இன்னிக்கி ஏன் போகணும்? இந்த கெழவிக்கு வயசாகுதே தவிர புத்தி வேலை செய்யறது இல்ல.” என முனகியபடித் தன்னறைக்குச் சென்றார்.
சாப்பிட்டு கண்ணயர்ந்தவர் மாலை 4 மணியளவில் வெள்ளைச்சாமி இல்லம் செல்லத் தயாராகினார்.
“அதுக்குள்ள வெளிய கெளம்பிட்டீங்க? சாப்பிட்டியலா இல்லயா?”எனக் கேட்டபடி விசாலாட்சி உள்ளே வந்தார்.
“தலவாழை இலை போட்டு நீ தானே பொங்கிப்போட்ட… இன்னிக்கி என்ன நாளுன்னு எல்லாம் பாக்க மாட்டியா? கடகன்னின்னு சொன்னா உடனே கிளம்பிடு. நல்ல நாள் பாத்து போகணும் வாங்கணும்ன்னு தோணாதா?“
“எல்லாம் பாத்து தான் போனேன். மதியம் வரைக்கும் இன்னிக்கி பௌர்ணமி தான். அதான் போய் புள்ளைக்கு எடுத்த கல்யாண சேலைய கோவில்ல வச்சி கும்பிட்டு எடுத்துட்டு வரோம். வேற ஒண்ணும் வாங்கல. உம்ம பேத்தி எது கேட்டாலும் வேணாங்கறா அத கேளும் மொத” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
கயல்விழி முகம் வாட்டத்தோடுக் காணப்பட்டது. மாலாவின் முகத்தில் எதுவும் காணமுடியாது. நண்பன் வீட்டிற்குச் சென்று வந்தபின் பேத்தியிடம் பேசிக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டுச் சென்றார்.
“டேய் இந்திரா… கீதன கூட்டிட்டு வெள்ளசாமி வீட்டுக்கு வா. ரயில் நிலையம் வரைக்கும் போகணும். கார் எடுத்துட்டு வாங்க.”எனக் கூறிவிட்டு முன்னே நடந்தார்.
மலைக்கோவிலில் நண்பர்களிடம் பேசிவிட்டு அப்போது தான் கீதனும் வீட்டிற்கு வந்தான். இடையில் தாய் கூறியது போல அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று உடனிருந்து அவர்களைக் கோவிலில் இறக்கிவிட்டு விட்டு மீண்டும் நண்பர்களைக் கண்டுப்பேசிவிட்டு வருகிறான்.
“கீதா… பெரியய்யா ரயில் நிலையம் போகணும்ன்னு சொல்லி கார் எடுத்துட்டு வெள்ளசாமி தாத்தா வீட்டுக்கு வரசொன்னாருடா… வா போவோம்.“
“டேய் எடுபட்டப்பயலே… அவன சோறு திங்கவுடுடா.. வா ராசா.. போய் கைகால் அளம்பிட்டு வா.. சாப்பிட்டு போவியாம்..” என விசாலாட்சி கீதனை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.
“நானா அவன திங்கவேணாம்ன்னு சொன்னேன்? அவன் இந்நேரம் வரைக்கும் திங்காம எங்க போனான்? இதெல்லாம் கேக்கமாட்டாங்களே?“ எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு கார் எடுத்து வந்துத் தயாராக நின்றிருந்தான்.