Loading

காதல் -2

 

சிலு சிலுவென்று அடிக்கும் குளிர் காற்றில் தன் சட்டைக்கு மேல் ஒரு சொட்டரை எடுத்து போட்டு கொண்டாள் சாயாலி..

 

“நாளைக்கு நம்ம ஆபிஸ் போய் நம்ம வேலை நேரத்தை மாத்திட்டு வரனும், பாரு மணி எழு ஆச்சு இன்னும் விடிஞ்ச பாடு இல்ல இப்படி இருந்தா எப்படி வெட்டுறது பூச்சி இருந்தா கூட தெரியாது ” என்று பரமு கூற அங்குள்ளவர்களும் அதை அமோதித்தனர்.

 

அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தாலும் அமைதியாக தன் வேலையை செய்து கொண்டிருந்தாள் சாயாலி.. ‘ எப்படியும் மணியை மாற்றினால் காலை ஒன்பது மணியில இருந்து மூணு வரைக்கும் இருக்கும் , அப்போ காலையில ஒரு ஆறு மணிக்கு எழுந்து அந்த நேசம் தொடரை படிச்சு முடிச்சிடனும் ‘ என்று அவள் மனது புத்தகத்தை முழுங்க கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.

 

இடையில் அவள் தாய் கொடுத்து விட்ட காலை உணவையும் உண்டு தன் பசியை போக்கி கொண்டவள்.. மீதம் இருந்த சிறு துளி உணவுகளை எல்லாம் எடுத்து சென்று எறும்பு புற்று அருகில் வைத்து விடுவாள்..

 

உணவு வைப்பது அன்றாடம் நடந்து கொண்டிருக்க.. எறும்புகளும் இரை தேட போகாமல் சாயாலியின் தயவில் புற்றின் வெளியே இருக்கும் உணவுகளை தலை மீது தூக்கி கொண்டு உள்ளே சென்று விடுகின்றது. சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்பையும் தன் பாசத்தால் சோம்பேறியாக மாற்றி வைத்திருந்தாள் சாயாலி..

 

இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மலை மீது இருக்கும் காட்டு அருவி அருகில் இருக்கும் விநாயகருக்கு பூ தொடுத்து அவரை வணங்கி விட்டு வருவது வழக்கம் என்பதால் சாயாலியை எதிர்பார்க்காமல் அனைவரும் அவளிடம் தூரத்தில் இருந்தே கை அசைத்து விட்டு கிளம்பினர்..

 

கூடையில் இருந்த தேயிலைகளை தூக்கி கொண்டு மலை மீது நடந்தாள் சாயாலி.. தேயிலை ஒப்படைத்து விட்டு மீண்டும் மலை ஏறி இறங்குவதற்குள் இருட்டி விடும் என்பதால் செவ்வாய்கிழமை மட்டும் கூடையுடன் மேலே சென்று விநாயகரை வணங்கி விட்டு அதன் பின் பேக்டரிக்கு சென்று இலைகளை கொடுத்து விட்டு செல்வாள்..

 

இதோ கூடையுடன் மேலே உச்சிக்கு ஏறி விட்டாள். உச்சியை அடைந்த சில நேரத்திலேயே சாரல் அவள் மீது வீச தொடங்கியது. மேனி சிலிர்த்து நிமிர்த்து பார்த்தவளின் கண் முன்னே இருந்தது அந்த பேரருவி..

 

அத்தனை  உயரத்தில் இருந்து அழகாய் கொட்டி தீர்க்க அதனது கொள்ளை அழகை காண்க இரு கண்கள் போதாது எனலாம். கூடையை ஓரமாக இறக்கி வைத்தவள்.. அருவிக்கு இடையில் ஓரமாக ஓடும் தண்ணீரில் காலை நனைத்து விட்டு அந்த காட்டிற்குள் சென்று பூக்களை பறித்து வந்து அழகாக தொடுத்து அந்த விநாயகருக்கு சூட்டி மகிழ்ந்தாள். ‘ எனக்கு எவ்வளவு கஷ்டத்தை வேணாலும் குடு நான் தாங்கிக்கிறேன், ஆனால் என் அம்மாவை நல்ல படியா வாழ விடு , இன்னைக்கு ஒரு புது புத்தகம் கொண்டு வந்திருக்கேன் ஒரு மணி நேரத்துல படிச்சு முடிச்சிடுவேன் ‘ என்று மனதிற்குள்ளேயே தன் வேண்டுதலை கூறி விட்டு அமைதியாக அமர்ந்து அவள் கூடையில் இருந்த ஒரு சிறு நாவலை எடுத்து படிக்க தொடங்கினாள்.

 

அனைவரும் அவள் விநாயகரை விரும்பி வணங்க தான் மேலே போகிறாள் என்று நினைத்திருக்க , மேலே இவழுக்கென்று ஒரு கூட்டமே இருப்பது அவர்களுக்கு தெரியாமல் போனது..

 

சரியாக அவள் புத்தகம் படிக்க ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பிறகு கீச்ச் கீச்ச் என்ற சத்தத்துடன் அவள் அருகில் ஓடி வந்தது ஒரு கூட்டம்.. அவர்களை பார்க்கவும் புத்தகத்தை மூடி வைத்தவள் அவர்களுக்காக கொண்டு வந்த பழங்களை எல்லாம் அவள் முன் வரிசையாக வைக்க ஆளுக்கு ஒன்றாக எடுத்து கொண்டு உண்ண ஆரம்பித்தது.

 

அத்தனையும் அணில் கூட்டம்.. அவர்களுக்கு செய்வாய் கிழமை தெரியுமோ இல்லை இவள் வருவது தெரியுமோ என்பதெல்லாம் தெரியாது ஆனால் சரியாக சாயாலி வரும்போது  அவர்களும் வந்து விடுவார்கள். அவர்கள் ஒரு பக்கம் பழத்தை உண்ண, அவர்களுடன் அமர்ந்து தேனு கொடுத்த உணவை எடுத்து அவர்களை பார்த்து கொண்டே உண்ண தொடங்கினாள்.

 

அப்படி அவர்களுடன் சேர்ந்து உண்ணும் போது அத்தனை மகிழ்ச்சி .. மனம் நிரம்பி விடும், காட்டில் கிடைக்காத பழங்களா ஆனால் சாயாலி கொண்டு வந்து கொடுக்கும் பழத்திற்காக அவர்களுக்கும் காத்து கிடப்பார்கள் ஏனோ அவர்களுக்கும் அவளிடம் அமர்ந்து சாப்பிடுவதில் இஷ்டம் போல…

 

தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பதை போல் அவள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நேரம் ஆவதை உணர்ந்து கூடையை எடுத்து கொண்டு கிளம்ப அவள் மீது ஏறி விளையாடி அவளை வழி அனுப்பி வைத்தது அணில் கூட்டம்.

 

கூடையை தூக்கி கொண்டு ஒரு இரண்டு நிமிடம் நடந்து இருப்பாள், காட்டு பாதையில் சல சலவென சத்தம் கேட்க ஏதோ மிருகம் தான் தன்னை பின் தொடர்கிறதோ என்று அஞ்சி ஒரு மரத்தின் பின் ஒழிந்து கொண்டு கண்களால் காட்டை அளக்க … அப்போது ஒரு ஆடவன் வேகமாக கைகளில் ஒரு பெட்டியுடன் அருவி உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

 

‘யாரிவன் கையில் பெட்டியுடன் மேலே எங்கே செல்கிறான் ‘ என்று மனதில் நினைத்தாலும் அவளுக்கு எதற்கு என்று நடையை கட்டியவள் பின் என்ன நினைத்தாளோ அந்த ஆடவனுக்கு தெரியாமல் அவனை பின் தொடர ஆரம்பித்தாள்.

 

அவனை பின் தொடர்ந்து போவதற்குள் மனம் எக்கு தப்பாக அடித்து கொண்டது ‘ ஒரு வேளை இப்படி இருக்குமோ , இதுவாக இருக்குமோ ‘ என்று சிந்தித்து கொண்டே இருவருமே உச்சியை அடைந்தனர்.

 

உச்சியில் ஒரு கல் மீது அந்த பெட்டியை வைத்தவன் , அதை திறந்து அதில் உள்ள புத்தகத்தை எல்லாம் எடுத்து கீழே வைத்தான் .

 

அவ்வளவு தான் சாயாலியின் கண்கள் பளிச்சென்று மின்னியது… புத்தகங்களை பார்த்தவுடன் ‘ இவனும் தன்னை போல் புத்தகம் கொண்டு வந்து மலை உச்சியில் படிப்பானோ ‘ என்ற எண்ணம் வர அடுத்த நொடி அவளது என்னத்தை சாம்பலாக்கி இருந்தான் அவன், தமிழ் மறவன்.

 

கைகளில் எடுத்த புத்தகங்களை எல்லாம் மேலே உச்சியில் நின்று அருவியில் தூக்கி போட, இதை சற்றும் எதிர்பார்க்காத சாயாலி அதிர்ந்து போனாள்..

 

இதற்கு மேல் இந்த முரண்பட்ட கருத்துக்களை எல்லாம் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை, அதில் இருக்கும் ஒவ்வொரு கருத்தும் போலியானவை என்று ஆணித்தரமாக  நம்பினான் தமிழ் மறவன். ஏனோ அந்த எழுத்தாளரின் புத்தகத்தை வெறுத்து தூக்கி எறிந்து கொண்டிருந்தான்.

 

இதற்குமேல் புத்தகங்களை தண்ணீருக்கு தாரை வார்ப்பதை அவளால் பார்த்து கொண்டு நிற்க முடியவில்லை .. அவன் அடுத்த புத்தகத்தை தூக்கி எறிவதற்கு முன்னே அவன் கரங்களை அழுத்தமாக பிடித்திருந்தாள் சாயாலி.

 

இத்தனை உயரத்தில் வந்து தன்னை யார் தடுக்கிறது என்று தமிழ் மறவன் பின்னால் திரும்பி பார்க்க , சாயாலி அவனை வெட்டு பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.

 

அவன் கைகளில் வைத்திருந்த புத்தகங்களை வாங்கி கொண்டவள், அவனை முறைத்து விட்டு அந்த பெட்டியில் உள்ள புத்தகங்களை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

அனைத்து புத்தகங்களும் அவளுக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகம் . ஒவ்வொரு புத்தகத்திலும் அந்த எழுத்தாளர் பெயர் பளிச்சென்று இருந்தது “தமிழ் காதலன்” . எப்பேர்பட்ட புத்தகத்தை எல்லாம் அவன் தூக்கி எறிகிறான் , நினைக்கும் போதே மனம் வலித்தது.

 

இந்த அரக்கனிடம் இருந்து எப்படியும் இந்த புத்தகத்தை எல்லாம் காப்பாற்றி விட வேண்டும் என்று துடித்தவள்  வேகமாக புத்தகத்தை எல்லாம் அள்ளி அவள் கூடையில் போட்டு கொண்டவள் , அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவள் அங்கிருந்து கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

இங்கோ எதிரில் நின்றவன் தனலென கொதித்து கொண்டிருந்தான் .. ” எவ்வளவு திமிர் இருந்தால் இந்த புத்தகத்தை எல்லாம் எடுத்து கொண்டு சென்றிருப்பாள், விரல் நீட்டி எச்சரிக்கை செய்கிறாள்” என்று நினைக்கும் போதே அவளை கொல்லும் வெறி வந்தது…

 

அவன் நிதானம் அடைத்து அவளை காட்டு பாதையில் தேட  அதற்குள் மாயமாகி இருந்தாள் சாயாலி..

 

என்ன சாயு இன்னைக்கு  இவ்வளவு பொழுது போனதுக்கு அப்பறம் வந்து இலையை தர, சரி கொண்டு வந்து கொட்டு என்று கணக்கர் கூற அவள் இலைகளை எல்லாம் கொடுத்து விட்டாள்.

 

“இங்க பாரு மா கணக்கு எல்லாம் கை மாறி போச்சு , இப்போ வேலை 3 மணிக்கு முடிஞ்சா நாலு மணிக்குள்ள இலை எல்லாம் வந்து சேரனும் புது சட்டம், அதுனால இலையை கொடுத்துட்டு உச்சிக்கு போத்தா ” என்று பெரியவர் கூற “சரி” என்று தலை அசைத்து விட்டு அமைதியாக வீட்டை நோக்கி நடையை கட்டினாள் சாயாலி..

 

இங்கோ தன் அறைக்கு வந்தவன் வெறி வந்தவன் போல் அலைந்து கொண்டிருந்தான். ” எவ்வளவு திமிரு என்னையவே கை நீட்டி எச்சரிக்க செய்யுறா , உடனே இந்த ஊர்ல தேட சொல்லனும், கூடை வேற வச்சிருந்தா அப்போ தேயிலை தோட்டத்துல வேலை பார்க்குறவளா ” என்று சரியாக அறிந்து கொண்டவன் மேலும் கொதித்து போனான்.

 

இதை எப்படி அறிந்து கொள்வது என்பது திட்டமிட்டவன் தன் பிஏவை அழைத்து செய்ய சொல்ல பிரீத்தியும் தலையை ஆட்டி விட்டு அதை செயல் படுத்த தொடங்கினாள்.

 

கால தாமதமாக வீட்டிற்கு வந்த சாயாலியை திட்டி தீர்த்து விட்டார் தேனு.. ” ஏன் டி இம்புட்டு நேரம் பொம்பள பிள்ளையை வெளியே அனுப்பி விட்டு வைத்துல நெருப்பை கட்டிகிட்டு அலையனுமா நானு, போனோமா வந்தோமான்னு இல்லாம உச்சிக்கு எதுக்கு டி போயிட்டு வர கீழ உள்ள பிள்ளையாரை கும்பிட்டா ஆகாதா டி” என்று கத்தி கொண்டிருக்க அதை எல்லாம் ஒரு பக்கம் காதில் வாங்கினாலும் மறுபக்கம் கூடையில் அவள் கொண்டு வந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து விரலால் தழுவி அசையை தீர்த்து கொண்டிருந்தாள்.

 

புத்தகத்தை பார்த்தவர் இன்னும் கொதித்து போக ” இதெல்லாம் எங்க இருந்து டி வாங்கிட்டு வர , இத்தனை புத்தகம் வாங்கிட்டு வந்துருக்க அப்போ நம்ம சாப்பாட்டுக்கு என்ன செய்யுறது ” என்று தேனு கத்த அவள் அமைதியாக அந்த புத்தகத்தை எல்லாம் அவளது ரேக்கில் அடுக்க தொடங்கினாள்.

 

“உனக்கு வாய் பேச முடியாதது ரொம்ப வசதியா போச்சு, எதுக்குமே பதில் சொல்லாம திமிரா இருக்க ” என்று தேனு வாயை விட.. சட்டென்று  நிமிர்ந்து  வலி நிறைந்த பார்வையுடன் தன் அன்னையை பார்த்தாள், அடுத்த நொடி குளியலறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள் சாயாலி.

 

“ஐயோ அவசரப்பட்டு வாரத்தையை விட்டேனே ” என தேனு தன் மகளை எண்ணி கலங்கி போனார்.

 

சனா💖

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்