Loading

அத்தியாயம் 2

 

அத்வைத் மறைப்புரம் வந்து ஒரு வாரமாகப் போகிறது. ஆனால், இங்கு நடக்கும் அமானுஷ்யங்களைப் பற்றி எவ்வித தகவல்களையும் அவனால் சேகரிக்க முடியவில்லை.

 

முதலில், அப்படி ஏதாவது அமானுஷ்யங்கள் நடந்ததா என்பதைக் கூட அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

 

அவ்வூர் மக்கள், அவன் இது சம்பந்தமாக கேள்விகள் கேட்டால் மட்டும், வினோத ஜந்துவைப் பார்ப்பது போல கடந்து விடுகின்றனர்.

 

மற்றபடி, உபசரிப்பில் எல்லாம் குறையே இல்லை.

 

ஊருக்கு வந்த முதல் நாளே, புகைப்படக் கருவியுடன் சுற்ற ஆரம்பித்தவன்தான், இப்போது வரை சுற்றிக் கொண்டு மட்டுமே இருக்கிறான்.

 

அப்படி, முதல் நாளே ஒன்றும் கிடைக்காத எரிச்சலில் சுற்றியவனின் பார்வையில் பட்டவள்தான் இரா.

 

வழக்கம்போல, அவளின் பணியிடத்திற்கு செல்ல வேகவேகமாக நடந்து கொண்டிருந்தாள் அவள்.

 

எதிரிலிருக்கும் யாரையும் கண்டு கொள்ளாத நடை அவளது. 

 

அதுவே அவளின் மீது சுவாரசியத்தை உண்டாக்க, சற்றும் யோசிக்காமல் அவளின் பின்னே சென்றான் அத்வைத்.

 

அவள் ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ஸிற்குள் நுழைய, அது அவன் தங்கியிருந்த விடுதியுடன் கூடிய உணவகத்திற்கு எதிராக அமைந்திருந்தது, அவனுக்கு வசதியாகப் போயிற்று.

 

அந்த உணவகத்திற்குள் நுழைந்தவன், அவளைக் காண்பதற்கு ஏதுவாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டான். 

 

இன்று வரை, அவ்விடம் அவனுக்குரியதாக மாறிப் போனது!

 

அவனின் வினோத செயல்களை ஒரு ஜோடி விழிகள் கண்டு கொண்டிருப்பதை எல்லாம் அறியாதவன், அவளிடத்தில் மூழ்கிப் போனான்.

 

புகைப்படக் கருவி மூலம், அவளை நோக்கியவனின் விழிகள் அவளை அங்குலம் அங்குலமாக உள்வாங்க ஆரம்பித்தன.

 

எதற்கும் அடங்காத சுருள் முடிக்கற்றைகள் அவளின் தோளைத் தழுவியிருந்தன. காற்றிற்கு அலைபாயும் முன்னுச்சி முடிகளோ, அவளின் நெற்றியை முத்தமிட்டு விலகி விளையாடிக் கொண்டிருந்தன. சில நேரங்களில், கரத்தால் முடியை விலக்குபவள், பல நேரங்களில் அவற்றின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறாள் என்பது முதற்கொண்டு நோட்டமிட்டான் அத்வைத்.

 

அடுத்து, மின்னலுடன் போட்டிப் போடும் பார்வையைக் கொண்ட அவளின் இளநீலநிறக் கண்கள்!

 

‘அவளின் இரு விழிகளில்தான் எத்தனை தீட்சண்யம்?’ என்று வியந்துதான் போனான் அவன்.

 

அது மட்டுமா? யாரையும், ‘எட்டி நில்’ என்று பார்வையாலேயே எச்சரித்துவிடும் வல்லமை கொண்டவையாக அல்லவா இருந்தன அவளின் கண்கள்.

 

அந்த விழிகளில் எச்சரிக்கையைத் தாண்டி, மற்ற உணர்வுகளையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஆணின் இதயம் முதல் முறையாக அவளுக்காக, அவனுக்கேத் தெரியாமல்  துடித்தடங்கியது.

 

இப்போது அவனின் பார்வை வட்டமிட்டதோ பெண்ணின் நாசியை. அளவில் சிறிய, கூர்மையான மூக்கு, அவளுக்கு ஏற்படும் கோபத்தை சொல்லாமல் சொல்லியது.

 

அவனின் மனம் மயங்கியதென்னவோ, இடதுபுறத்தில் வீற்றிருந்த சின்னஞ்சிறிய மூக்குத்தியில்தான்.

 

மனதில் போக்கை உணர்ந்தவனோ, இதழில் தோன்றிய புன்னகையுடன், ‘மூக்குக்கு மேல வர கோபத்துக்கு கடிவாளம்தான் இந்த மூக்குத்தி போல!’ என்று குறும்புடன் எண்ணிக் கொண்டான்.

 

அடுத்து, இரு பக்கவாட்டிலும் மினுமினுத்த கன்னங்களுக்கு சென்றது அவனின் பார்வை. 

 

“சோ சாஃப்ட்!” என்று முணுமுணுத்தவனின் கரமோ, தன்னிச்சையாக புகைப்படக் கருவியில் பிரதிபலித்த அவளின் பிம்பத்தின் கன்னத்தை, லேசாக வருடியது.

 

தன் செய்கையை அப்போதுதான் உணர்ந்தவனோ வெட்கத்தில் தத்தளித்தான்.

 

‘ஷ், யூ ஆர் டெம்ப்டிங் மீ, ஸ்டார்லைட்!’ என்று சுகமாகச் சலித்தவனை, ‘அதுக்குள்ள செல்லப்பெயரா?’ என்று கேலி செய்தது அவனின் மனம்.

 

‘எஸ், ஸ்டார்லைட்! இரவுல மினுமினுக்குற நட்சத்திரம்!’ என்று கவிதை படித்தான் அவன்.

 

‘பார்த்து பார்த்து, நீ பார்க்கிறது தெரிஞ்சு, ஹராஸ்ட்மெண்ட்னு கம்ப்ளைன் பண்ணிடப்போறா!’ என்று அவனின் மனம் எச்சரிக்க, ‘அதெல்லாம் நாங்க பார்த்துப்போம், கொஞ்சம் நகரு!’ என்று மனதோடு உரையாடியவன், மீண்டும் அவளை ஆராயும் வேலையை விட்ட இடத்திலிருந்து தொடங்கினான்.

 

இப்போது அவனின் பார்வைக்குப் பட்டன பெண்ணின் இதழ்கள்.

 

விரிய மறந்த இதழ்களாக காட்சியளித்தவைகளைக் கண்டதும்தான், அவளுக்குள் மறைத்து வைத்திருந்த சோகம் அவனின் அகக்கண்ணில் விழுந்தது.

 

‘ஏன் இப்படி இருக்கா? இன்னைக்கு மட்டும்தான் இப்படியா? இல்ல, எப்பவுமே இப்படித்தானா?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டான்.

 

சிரிக்க மறுத்த உதடுகளில் சிரிப்பை வரவழைத்து விடும் ஆர்வத்துடன், அவளைத் தேடிச் சென்றான் அத்வைத்.

 

அந்த பின்காலைப் பொழுதில், ஆளரவமின்றி இருந்த விற்பனையகத்திற்குள் நுழைந்த அத்வைத்தின் கண்களில் அவள் தன்னைக் காணப் போகும் எதிர்பார்ப்பு தாராளமாகவே தென்பட்டது.

 

அவன் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்து விடுபவளா இரா?

 

அவளோ அவனின் வரவைக் கூட உணராமல் கணினியில் ஏதோ செய்து கொண்டிருக்க, அத்வைத்தின் மனமோ அவனைக் கேலி செய்து சிரித்தது.

 

அதனை அடக்கியவன், மனம் தளராமல், அவளை நோக்கிச் சென்றான்.

 

அப்போதும் அவள் நிமிரவில்லை. மாறாக, சுருங்கிய புருவமும், பாதி கடித்த இதழ்களும்தான் அத்வத்தை சிறைப்படுத்தின.

 

சிறிது நேரம் அவனும் தன்னை மறந்த நிலையில் நின்றுவிட, அவனின் மனம்தான், அவன் வந்த வேலையை நினைவுபடுத்தியது.

 

உடனே, மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டவன், சிறு செருமலுடன், “ஹாய்.” என்று கூறினான்.

 

அதில்தான், இராவின் பார்வை முதல் முறையாக அத்வைத்தின் மீது பட்டது.

 

அவனை வாடிக்கையாளனாக எண்ணியவள், “சொல்லுங்க சார். என்ன வேணும்?” என்று கேட்டாள்.

 

அப்போதும் அவள் சிரிக்கவில்லை. ஒரு அறிமுகப் புன்னகை கூட இல்லை என்பதை குறித்துக்கொண்டான் அத்வைத்.

 

அவனின் அமைதியில் பொறுமை இழந்த இராவோ, “சார், என்ன வேணும்?” என்று இம்முறை சற்று அழுத்திக் கேட்டாள்.

 

“ஓஹ் சாரி…” என்றவன், அவள் அணிந்திருந்த பெயர்க்குறியைப் பார்த்து, “இரா…” என்று முணுமுணுத்தான்.

 

நல்லவேளையாக அதை அவள் கவனிக்கவில்லை!

 

மீண்டும் அவள், “சார்…” என்க, விரிந்த சிரிப்புடன், “மிஸ். இரா… பை தி வே, நைஸ் நேம்!” என்றவனின் மனமோ, அவளின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டது.

 

“என் பெயர் அத்வைத். நான் இந்த ஊருக்குப் புதுசு.” என்று தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ள, அதற்கும் எவ்வித எதிர்வினையும் இல்லை அவளிடம்.

 

ஒரு பெருமூச்சுடன், “உங்க சாக்லேட்ஸ்ல எது பெஸ்ட்? கொஞ்சம் சஜ்ஜஸ்ட் பண்ணுங்களேன்.” என்று பேச்சை மாற்றினான்.

 

வேலையில் மட்டும் கண்ணாக, “சாக்லேட் டிரஃபிள்ஸ் நல்லா இருக்கும்.” என்று இரா கூற, “ஓகே, அப்போ அதையே நான் வாங்கிக்குறேன்.” என்றான் புன்னகையுடன்.

 

அவளும் அவனுக்கான இன்னட்டுகளை பையில் நிரப்பிக் கொடுக்க, அதற்கான தொகையைச் செலுத்தி வாங்கிக் கொண்டவன், “சீ யூ சூன்.” என்று புன்சிரிப்புடன் விடைபெற, சிறு புருவச்சுழிப்பு மட்டுமே அவளிடம்.

 

அவளின் அந்த ஒற்றை புருவச்சுழிப்பை, அன்றைய நாளின் வெற்றியாகக் கருதியவன், மறுநாளே அவனின் வழக்கமான சிரிப்புடன் அவளைக் காண வந்தான், வாடிக்கையாளன் என்ற வேடம் தரித்து!

 

இதுவே வழக்கமாக மாறிவிட, தினமும் அவன் சிரிப்புடனும், அவள் சிரிக்காமலும், அவர்களின் சந்திப்பு இனிப்புடன், இனிப்பாக நடந்து கொண்டிருந்தது.

 

முதல் நாள் இரவே, அவள் பெயருக்கான அர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடித்து விட்டான் அத்வைத்.

 

‘இரா’ என்றால் இருள் அல்லது இரவு என்றிருந்தது.

 

“ப்ச், உனக்கு யாரு இரான்னு பெயர் வச்சா? எனக்கு எப்பவும் நீ ‘ஸ்டார்லைட்’தான். இருட்டுல கூட மினுமினுக்குற நட்சத்திரம்!” என்றான் ரசனையுடன்.

 

*****

 

பழைய நினைவுகளில் சிரிப்புடன் மூழ்கி இருந்த அத்வைத், “ஸ்டார்லைட்” என்ற முணுமுணுப்புடன், அவளிருப்பிடம் நோக்க, அது காலியாக இருந்தது.

 

அந்த உணவகத்தில் வேலை செய்யும் ஒருவன், அத்வைத்தின் மேசையை துடைத்தபடி, “அந்த பொண்ணு, அப்போவே கிளம்பி போயிடுச்சு.” என்று கூறினான். 

 

அதிர்ந்த அத்வைத்தோ மணியைப் பார்க்க, அது ஆறரை என்று காட்டியது.

 

மறைப்புரத்து மக்கள் அனைவரும் ஏழு மணிக்கெல்லாம் அவரவர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து விடுவார்கள். அவ்வூரின் வினோத பழக்கங்களுள் இதுவும் ஒன்று.

 

அவளைக் காணாததில் சலிப்புடன் அத்வைத் இருக்க, “விடுங்க சார், மண்டே திரும்ப அவங்களைப் பார்ப்பீங்க.” என்றான் மற்றவன்.

 

“எது மண்டேவா? அப்போ நாளைக்கு?” என்று அத்வைத் வேகமாக வினவ, “நாளைக்கு சண்டே, லீவு சார்.” என்றான் அவன் தோளைக் குலுக்கிக் கொண்டு.

 

“ப்ச், ஒருநாள் முழுசா வெயிட் பண்ணனுமா?” என்று பொறுக்க மாட்டாமல் அத்வைத் புலம்ப, பக்கென்று சிரித்து விட்டான் அவன்.

 

“ஹோய், என்ன சிரிப்பு? ஆமா, உன் பெயர் என்ன?” என்று அத்வைத் வினவ, “என் பெயர் வாசு.” என்றவன், “ஒரு வாரமா, இந்த இடமே கதின்னு, நீங்க அந்த பொண்ணைப் பார்க்கிறதை நினைச்சு சிரிச்சேன் சார்.” என்றான்.

 

“ஹ்ம்ம், என்னை நீ பார்த்தது இருக்கட்டும். அது ஏன் எல்லாரும் அவளை ஒரு மார்க்கமா பார்க்கிறாங்க?” என்று தன் சந்தேகத்தை வாசுவிடம் வினவினான் அத்வைத்.

 

இராவை கவனித்தபோது, இதையும் கவனித்திருந்தான்.

 

“எனக்கும் சரியா தெரியல சார். நானும் இந்த ஊருக்குப் புதுசுதான். நான் வந்ததுலயிருந்தே, இப்படித்தான், எல்லாரும் அந்தப் பொண்ணை ஒரு மாதிரி பார்ப்பாங்க. அந்தப் பொண்ணோ எதையும் கண்டுக்காம, அது பாட்டுக்கு வேலையை செஞ்சுட்டுப் போயிடும்.” என்றான் வாசு.

 

“ஹ்ம்ம், சரி நான் வெளிய போயிட்டு வரேன்.” என்று அத்வைத் கிளம்ப, அவனைத் தடுத்த வாசுவோ, “சார், இந்த நேரத்துலயா? மணி ஏழாகப் போகுதே.” என்றான்.

 

“கொஞ்சமாச்சும் வேலையைப் பார்க்கணுமே.” என்று வாசுவின் தோளில் தட்டியபடி கூறிய அத்வைத், “இதையும் உனக்கு வேலை குடுத்தவர் கிட்ட சொல்லிடு, சரியா?” என்றவாறு வாசுவின் ஆச்சரியத்தைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டான்.

 

*****

 

பணியிடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு நடந்தே சென்றாள் இரா.

 

செல்லும் வழியில் எதிரில் தென்பட்ட சிலர், அவளைப் பற்றி தங்களுக்குள் கிசுகிசுக்க, அவற்றை எல்லாம் கண்டும் காணாததும் போல சென்றவள், நின்றது, பெரிய காம்பவுண்ட் சுவருக்குப் பின்னே பெரிதும் சிறிதுமாகக் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு முன்பாகத்தான்.

 

ஒருகணம் நிதானித்தவன், ஒரு பெருமூச்சுடன் கதவைத் திறக்க, பழைய காலக் கதவு என்பதை நிரூபிக்கும் விதமாக ‘கிரீச்’ என்ற சத்தத்துடன், அவளுக்கு வழிவிட்டுத் திறந்தது.

 

பெரிய வீட்டில் கேட்ட சத்தங்களைக் கண்டு கொள்ளாமல், அவளின் இருப்பிடமான சிறிய வீட்டிற்குள் நுழைந்தவள், யாரின் வருகையையோ எதிர்பார்த்தபடியே, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டாள்.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில், சூடாக ஆவிபறக்க இருந்த பதார்த்தங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தாள், இராவின் இளைய சகோதரி அவனி.

 

“அக்கா… இரா அக்கா… டின்னர் ரெடி!” என்ற அழைப்புடன் வந்த சின்னவளை நோக்கி, அன்றைய நாளின் முதல் சிரிப்பை உதிர்த்தாள் இரா.

 

சமீப காலமாக, இராவின் சிரிப்பைக் காணும் பாக்கியம் அவனிக்கு மட்டும்தான் கிடைத்து வருகிறது என்று கூறினால் சரியாக இருக்கும்.

 

“தேங்க்ஸ் அவனி.” என்று இரா கூற, “தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம். என் கேள்விக்குப் பதில்தான் வேணும்.” என்று அவனி முகத்தைத் திருப்பிக் கொள்ள, சிரிப்புடன் அவளின் நாடியைப் பிடித்து தன்னைப் பார்க்க வைத்த இராவோ, “என்னாச்சு என்னோட ஸ்வீட் சிஸ்டருக்கு?” என்று பாசமாக வினவினாள்.

 

“நீங்க ஏன் இங்க வந்து இருக்கீங்க? அதுவும் தனியா? அந்த வீட்டுல இருக்கலாமே… நான், நீங்க, அப்பா, அம்மா எல்லாரும்…” என்று கண்களில் கனவுகள் மின்னக் கூறிய சின்னவளிடமிருந்து விரக்தி சிரிப்பை மறைத்த இராவோ, “அது… எனக்கு தனியா இருக்கணும்னு தோணுச்சு அவனி, அதான்.” என்று எப்போதும் போல சமாளிக்க முயன்றாள்.

 

“இதைத்தான் நாலு வருஷமா சொல்றீங்க? நீங்க சொல்றதை நம்ப நான் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்ல.” என்று அவனி சிலிர்த்துக் கொண்டு கூற, “அடடா, என் தங்கச்சி பெரிய பொண்ணா அப்போ?” என்று சிரிப்புடன் வினவினாள் இரா.

 

“ம்ச், பேச்சை மாத்தாதீங்க.” என்று அவனி சடைத்துக்கொள்ள, ஒரு பெருமூச்சுடன், “இதுக்கான பதில், நீ காலேஜ் முடிச்சதும் சொல்றேன்.” என்றாள்.

 

“ப்ச், எல்லாரும் இதையே சொல்றீங்க! நான் காலேஜ் முடிச்சதும் இருக்கு…” என்ற அவனியை சமாதானப்படுத்தும் விதமாக, அவளின் கரத்தில் ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ என்று அச்சடிக்கப்பட்ட பையை வைத்தாள் இரா.

 

“ஹை, சாக்லேட் டிரஃபிள்ஸ்!” என்று ஆர்ப்பரித்த இளையவளோ, “அக்கா, இதைத்தான் எனக்கு ஃபர்ஸ்ட் வாங்கிக் குடுத்தீங்க, ஞாபகம் இருக்கா? அப்போயிருந்தே இதுதான் என்னோட ஃபேவரைட்!” என்று அவனி கூற, சட்டென்று இராவிற்கு அவனின் நினைவு சாரலாக மனதிற்குள் வீச, திகைத்துதான் போனாள்.

 

இரா ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கிப் போக, அந்த நேரத்தில் அவனி வெளியேறியது எல்லாம் அவளின் நினைவிலேயே இல்லை. அவள் கொண்டு வந்த உணவும் அனாதையாக மேசையில் இருக்க, இரா தன் நினைவுகளுடன் மல்லுகட்டியபடி படுக்கையில் சரிந்தாள்.

 

அவளின் இந்த நிலைக்குக் காரணமானவனோ, யாருமற்ற இரவின் இருளில், குளிருடன் போட்டிப் போட்டுக் கொண்டு, புகைப்படக் கருவியுடன் உலவிக் கொண்டிருந்தான்.

 

*****

 

கால் போனப் பாதையில் நடமாடிக் கொண்டிருந்த அத்வைத்தின் முதுகில் ஏதோ குத்த, என்னவென்று திரும்பிப் பார்த்தான்.

 

அங்கு ஒரு செடியின் கிளைதான் அவனது முதுகை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது.

 

“ஹ்ம்ம், இந்த ஊர்ல மரம், செடி, கொடி கூட மர்மமாதான் இருக்கு.” என்றபடி அதையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு முன்னேறினான்.

 

அதுவும், குளிர்ப்பிரேதசத்தின் இரவு வேளை என்பதால், மூடுபனியின் உபயத்தில் அமானுஷ்ய அனுபவத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது அவனுக்கு.

 

அமானுஷ்யம் ஒன்றும் அவனுக்கு புதிதில்லை. இதுவரை சில மர்ம இடங்களுக்கு நேரில் சென்று தகவல் சேகரித்தவன் என்பதால் தைரியத்துடனும், ஆர்வத்துடனும் அந்தப் பயணத்தைத் தொடர்ந்தான்.

 

வீடுகள் இருந்த தெருக்களைக் கடந்தவன், மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்திருந்தான்.

 

அங்கிருந்த மரங்கள் எல்லாம் சீராக இல்லாததாலும், பெரிதாக இருந்ததாலும், உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை அத்வைத்தால்.

 

போதாதற்கு, அங்கு இருளின் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருந்ததால், அதற்கு மேல் அங்கு எதையும் கண்டு கொள்ள முடியாது என்பது புரிய, மறுநாள் காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்ப எத்தனித்தான் அத்வைத்.

 

அப்போது அடர்ந்த மரங்களுக்கு இடையே ஏதோ சத்தம் கேட்பது போலிருந்தது அத்வைத்திற்கு.

 

சட்டென்று திரும்பியவன் காதுகளைக் கூர்மையாக்கி, தான் கேட்டதை உறுதிப்படுத்த முயன்றான்.

 

ஆனால், அவன் திரும்பிய மறுநொடி, அந்த இடம் முன்போலவே அமானுஷ்ய அமைதியில் திளைத்திருந்தது.

 

இப்போது, உள்ளே சென்று பார்ப்பதா, இல்லை முதலில் முடிவெடுத்தது போல மறுநாள் வந்து பார்ப்பதா என்ற குழப்பத்தில் அத்வைத் தயங்கி நின்றதெல்லாம் ஒருநொடிதான்.

 

மறுநொடியே, அலைபேசியிலிருந்த டார்ச்சை உயிர்ப்பித்தவன், ஓங்கியுயர்ந்த மரங்களுக்கு இடையே லேசான வெளிச்சத்தை இறைத்தபடி நடக்கத் தொடங்கினான்.

 

அவனின் காலடிச் சத்தத்திற்கு ஈடாக மற்றொரு சத்தமும் கேட்டது. ஆனால், அது அத்வைத்தை விட்டு தூரம் செல்வது போலிருந்தது.

 

‘இந்த நேரத்துல, இங்க யாரு என்ன செய்றாங்க?’ என்று மனதில் உதித்த கேள்வியுடன் முன்னேறியவன், பரந்து விரிந்த சமவெளிக்கு வந்தான்.

 

இருட்டின் காரணமாக, அது எத்தனை பெரிய இடம் என்றெல்லாம் அவனுக்கு சரியாகத் தெரியவில்லை.

 

அத்வைத்தின் கவனமும் அவன் கேட்ட காலடிச் சத்தத்திற்கு சொந்தக்காரனை நோக்கித்தான் இருந்தது.

 

ஒரு திசையைக் குத்துமதிப்பாக தேர்ந்தெடுத்தவன், அவ்வழியில்தான் அந்த காலடிச் சத்தத்திற்குரிய நபர் பயணித்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் முன்னே ஒரு அடி எடுத்து வைக்கவும், யாரோ அவன் தோளைப் பின்னிருந்து தொடவும் சரியாக இருந்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment