
பிறை -19
கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. வெறி பிடித்தவன் போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான் ஆதி.
அதற்குள் அனைத்து டிவி சேனலிலும் இதுதான் தலைப்பு செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது . அந்த டீ ஷாப் வாசலில் அவனது ஜீப்பின் பேனட்டின் மீது வெறி கொண்டவனாக அமர்ந்திருந்தான்.
எப்படி அவர்கள் தப்பினார்கள் என அவனுக்கே புரியவில்லை. நொடிப் பொழுதில் கண்களில் இருந்து மறைந்தவர்களை எண்ணி ஆத்திரம் கொண்டவன்.. நெற்றிப் பொட்டில் தட்டிக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
அந்த காபி ஷாப்பில் இருந்தவர்கள் அனைவரும் அவனது அதிரடியை பார்த்து ஸ்தம்பித்து போனார்கள்.
சற்று நேரத்திற்கு முன்.. தோட்டா பிறையை நோக்கி வருவதை பார்த்தவன்.. அவளை இழுத்து டேபிள் மீது வைத்து அழுத்தி, நொடியில் குண்டடியில் இருந்து தப்பிக்க செய்தான்.
ஆனால் அடுத்த நொடியே தோட்டாக்கள் வரிசையாக பாய.. அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தான் ஆதி.
அவன் செல்வதை மங்கலான விழிகளுடன் பார்த்தவள், அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.
அதையெல்லாம் பார்க்கும் நிலையில் அவன் இல்லை. பிறை மீது குண்டை வீசியவனை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி கொண்டு ஓடினான் … கையில் சிக்கியவர்களை எல்லாம் அடித்து சிதற விட்டவனை.. அங்கிருந்த மக்கள் அனைவரும் அதிர்ந்து பார்த்தார்கள்.
அங்கிருந்த பாதிக்குக் மேற்பட்டோர் ஓடி விட.. மீதம் இருந்தவர்கள்.. அங்கிருந்த சந்து பொந்துகளில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.
பதினைந்து ஆட்களுக்கு மேல் அங்கு இருந்ததால் முதலில் திணறியவன்.. பின் ஒவ்வொருவரையும் சரமாரியாக அடித்து வீழ்த்தி இருந்தான். வெறி கொண்டு அவன் அடித்த ஒவ்வொரு அடியிலும் சித்தம் கலங்கி போனது அவர்களுக்கு.
இருந்தாலும் விடாது அவர்களும் தாக்குதலை நடத்தியவர்கள்.. ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ஒவ்வொரு ஆளாக கழன்று கொண்டு ஓடிய நிலையில்.. இறுதியாக கையில் சிக்கிய ஆடவனை, அவனது உயிர் போகும் வரையிலும் அடித்து வெளுத்தான்..
அவனது உயிர் போகும் தருவாயில், எதிரில் இருந்த ஆதியை பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்க.. அதில் ஏதோ பொறி தட்டியவனை போல.. அங்கிருந்து வேகமாக எழுந்து காபி ஷாப்பிற்குள் ஓடியவன்.. அவர்கள் இருந்த டேபிளை பார்க்க.. அந்த இடமே காலியாக இருந்தது.
” ஹே இங்க இருந்த பொண்ணு எங்க.. எங்க எங்க … எங்க ” என அங்கிருந்த ஒவ்வொருத்தரிடம் கேட்க.. எவருமே தெரியாது என்ற பதிலை தவிர வேறெதுவும் கூறவில்லை.
சில போலீசார்களை அனுப்பி, சுஷ்மிதா வீட்டில் பிறை இருக்கிறாளா என பார்த்து விட்டு வர சொன்னான். அங்கும் அவள் செல்லவில்லை என்ற தகவலே வந்தது.
அவர்களோடு சுஷ்மிதா மற்றும் ரஞ்சினி இருவரும் பதறிக் கொண்டு வந்திருந்தனர்.
” சார்.. சார்.. உங்களுக்கு பிறையை தெரியும் தானே சார்.. அவளை பார்த்தீங்களா சார்.. இவங்க எல்லாம் எங்க வீட்ல வந்து பிறையை பத்தி கேட்குறாங்க சார்.. ” என சுஷ்மிதா பயத்தில் புலம்பினாள்.
அதுவரை அமைதியாக இருந்தவன்.. ” பிறை மிஸ்ஸிங்.. நீங்க வீட்டுக்கு போங்க.. நான் உன் பிரெண்ட்டோட வரேன் ” என ஜீப்பில் இருந்து இறங்கியவன்… ஜீப்பில் கமிஷனர் ஆபீஸ் நோக்கி சென்றிருந்தான்.
மேலிடத்தில் இருந்து அவனுக்கு போன் மேல் போன் வந்து கொண்டிருந்தது. யாருக்கு என்ன பதில் கூறுவது என ஒன்றும் புரியவில்லை.
அவனது சிந்தனை முழுவதிலும் பிறையே ஆக்ரமித்து இருந்தாள். எப்படி அவளை தூக்கி இருப்பார்கள், இப்போது அவள் எங்கிருப்பாள் என பல விதமான சித்தனையில் இருந்தவனை கலைத்தது ஒருவரது குரல்.
” சார்.. உங்களை பார்க்க ஒரு பெரியவர் வந்திருக்காரு ”
” உள்ள வர சொல்லுங்க ”
” வணக்கம் சார் ”
” என்ன விஷயம்..”
” காபி ஷாப்ல ஒரு பொண்ணை தேடிட்டு இருந்தீங்க இல்லையா சார்..”
” எஸ்… அவளை பத்தி ஏதாவது தெரியுமா ” கதிரையில் இருந்து எழுந்து விட்டான் ஆதி.
” ஆமா சார்.. நான் ஒரு வீடியோ எடுத்திருக்கேன்.. ” என போனை எடுத்து அவனது கையில் கொடுக்க..
அதில் மயங்கி கிடந்த பிறையை ஒருவன் தூக்கிக் கொண்டு சென்றான்.. அவனது முகத்தை பார்த்தவனுக்கு தலைக்கு ஏறியது.
” விடமாட்டேன் டா உன்ன ” என கத்தியவன்.. ” நீங்க எப்படி இந்த வீடியோவை எடுத்தீங்க.. ”
” நான் பாத்ரூம் போயிருந்தேன் சார்.. வந்து பார்க்கும் போது தான் இது நடந்துட்டு இருந்துச்சு.. அதான் வெளிய வராமலே அங்க நடந்ததை எல்லாம் வீடியோ எடுத்தேன் ”
” ரொம்ப நல்ல விஷயம்.. இந்த விஷயம் வெளிய தெரிய வேணாம் ”
” அதுனால தான் சார் நான் அங்க உங்களை பார்த்து கொடுக்கல.. இங்க வந்து கொடுக்கிறேன்.. வெளிய தெரிஞ்சா என் குடும்பத்துக்கு ஆபத்து வந்துடும் சார்.. ”
” அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கவலைப் படாதீங்க.. ” என அவரிடம் அந்த வீடியோவை வாங்கிக் கொண்டவன்.. அவரை வழி அனுப்பி வைக்க.. நன்றியோடு அங்கிருந்து கிளம்பி இருந்தவரை.. கமிஷனர் அலுவலகம் வாசலிலேயே அதி வேகமாக வந்த கார் ஒன்று அடித்து தூக்கி இருந்தது.
தூக்கி அடித்ததில் பறந்து சென்று, கரண்டு கம்பத்தில் மோதியவர், உடல் கருகி அங்கேயே உயிரிழந்தார்.
அனைத்தும் அடுத்தடுத்து நடந்ததில் ஆதிக்கு தலையே வெடித்தது. அந்த பெரியவரை கலங்கிய கண்களோடு பார்த்தவன்.. வேகமாக ஸ்டேஷன் உள்ளே சென்று அவரது உடலை தகனம் செய்யக் கூறி.. அவரது உறவினர்களுக்கு சொல்லி அனுப்ப கூறினான்.
கனத்த மனதுடன் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. பெரியவருக்கே இந்த நிலை என்றால்.. பிறைக்கு ?
நினைத்து பார்க்கவே நெஞ்சம் எல்லாம் நடுங்கியது. ஆனால் மனதில் ஏதோ ஒரு இடத்தில் தைரியம் இருந்தது. ஏதோ ஒரு இடத்தில் இவன் தேவை.. அதற்காக கூட பிறையை தூக்கி இருக்கலாம் என்பது அவனது எண்ணம்.
அதற்குள் ரஞ்சனியின் கணவன் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். அவனது அனுமதியோடு உள்ளே வந்தவர்.. ” சார் … அந்த பிறை பொண்ணு ”
” இன்னும் கண்டு பிடிக்கலை..”
” நான் தான் சார் சொன்னேன்.. ஊருக்கு போறேன்னு சொன்ன பிள்ளையை அவங்க அப்பா கிட்ட பேசி நான் தான் இருக்க சொன்னேன்.. இப்போ அந்த பொண்ணோட அப்பா வந்து கேட்டா நான் என்ன சார் சொல்லுவேன்.. ஐயோ.. எனக்கு ஒன்னும் புரியல சார். அந்த பொண்ணு கிராமம் சார்.. அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியல .. ” என்றவரை கண் இமைக்காது பார்த்தவன்..
” விஷயத்தை சொல்லாம அவங்க அப்பா அம்மாவை சென்னை வர சொல்லுங்க.. உங்க வீட்ல சேப்பா வைங்க.. நான் காவலுக்கு உங்க வீட்ல ஆள் போடுறேன். வந்ததும் நானே அவங்க கிட்ட பேசுறேன் ”
” எதுக்கு சார் பிறையை கடத்தனும்.. அந்த பொண்ணு ரொம்ப அப்பாவி சார்..”
” எனக்கு மட்டும் எப்படி தெரியும்.. கொஞ்சம் வெளிய போங்க.. நான் ஆக்ஷன் எடுத்துக்கிறேன் ” அவனது கர்ஜனையாக குரலில் வெளியேறி இருந்தார் சுஷ்மிதாவின் மாமா.
அவன் கூறியதை போலவே ஊருக்கு போன் செய்து பிறையின் பெற்றோர்களை வரச் செய்தார். எதற்கு என கேட்டதற்கு.. பிறைக்கு உடல்நலம் சரியில்லை என கூறி வரக் கூறியிருந்தார்.
என்ன செய்வது என தெரியாமல் அந்த வீடியோவை ஓடவிட்டு கொண்டே இருந்தான் ஆதி. அவனுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் அது ஒன்று தான்.
அதற்குள் மீடியாவில் பல விதமாக அந்த செய்தியை திரித்து கூறி இருந்தனர்.
” காபி ஷாப்பில் கமிஷனருடன் காதல்.. காதலில் பின்னனி என்ன? ”
” கமிஷனருக்கு வைத்த குறியில் சிக்கிய அப்பாவி பெண் ”
” காதலியை தொலைத்த ஆத்திரத்தில் கயவர்களை புரட்டி எடுத்த கமிஷனர் ”
” சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை காதல் ”
” துப்பாக்கி சூடும்.. சூடான காதலும்..”
இப்படி பல வகையான வதந்திகளை கிளப்பி இருந்தனர்.
நியூஸ் பார்த்த திவாகர் அதிர்ந்து தனது மனைவியிடம் காட்டியவர்.. உடனே தனது மகனுக்கு அழைத்தார்.
” சொல்லுங்க பா ”
அவனது அமைதியான பேச்சில் மகனின் மனநிலையை புரிந்தவர்.. ” அந்த பொண்ணை சீக்கிரம் கண்டு பிடிச்சு அவங்க அப்பா அம்மா கையில சேர்த்திடு ஆதி.. அந்த பொண்ணுக்கு எதுவும் ஆக விட்டுடாத.. நீயும் ஜாக்கிரதை ” அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதை போல போனை வைத்திருந்தார் திவாகர்.
மகனோடு சேர்த்து வைத்து பேசும் பெண் பிறை தான் என அவர்களுக்கு தெரியவில்லை. மீடியாவில் அந்த பெண்ணின் முகத்தை காட்டவில்லை. அவர்கள் செய்த ஒரே நல்ல விஷயம் அது தான்.
” சிட்டிக்கு நடுவுல அதுவும் நீங்க அங்க இருக்கும் போதே ஷூட்டிங் நடந்திருக்கு.. இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க மிஸ்டர் ஆதி.. மேல கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல.. அந்த பொண்ணு உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா.. ” மேலதிகாரி கேட்டதற்கு மௌனமே பதிலாக தர..
” சரி எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு… சீக்கிரமே அந்த பொண்ணை காப்பாத்துங்க … உங்களுக்கு தேவையான உதவியை எப்பவும் போல நான் செய்யுறேன் ”
” தாங்க் யூ சார் ” போனை அணைத்திருந்தான் ஆதிதேவ்.
கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவனின் கண்ணுக்குள் வந்து விழுந்தாள் பிறை. சற்று முன்பு வாயெல்லாம் ஐஸ்கிரீம் படர்ந்து .. அதை அழகாக சுவைக்க ஆரம்பித்தவளை.. சற்றும் ரசிக்க தவறவில்லை அவன்.
எத்தனை அழகாக தன்னோடு அமர்ந்து உண்டு கொண்டிருக்தவளை ஒரு நிமிடத்தில் கொலை செய்ய பார்த்தவர்களை எரித்து விடும் எண்ணம் வந்தது.
இதில் இறுதியாக அடித்தவன், மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க.. அதே நேரம் அவன் இறந்து விட்டான் என்ற தகவலும் வந்து சேர்ந்தது.
கைக்கு கிடைத்த ஒருவனும் இறந்து விட.. எங்கே இருந்து இதை ஆரம்பிப்பது என புரியாமல் இருந்தவனுக்கு மண்டையில் அடித்ததை போல ஒரு காட்சி வந்து போனது.
வேகமாக அந்த வீடியோவை எடுத்து பார்வையிட்டான்… அதில் பிறையை தூக்கி சென்றவன் தமிழன் அல்ல என்பது அவனது முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது. எந்த மாநிலமாக இருக்கும் என வீடியோவை கூர்ந்து கவனித்தவனுக்கு பதிலாக பிறையை தூக்கி சென்ற கருப்பு நிற தார் காரில் நம்பரை பார்க்க.. அது மகாராஷ்டிரா மாநிலம் என்பது தெரிய வந்தது.
அந்த காரை ஸ்கிரீன் ஷாட் செய்து… டோல் கேட்டுகலை எல்லாம் அலர்ட் செய்தவன்.. அவனது புகைப்படத்தை ரயில்வே ஸ்டேஷன்.. மற்றும் ஏர்போர்ட்.. பஸ்டான்ட் போன்ற இடங்களுக்கு அனுப்பி, தீவிரமாக தேடச் சொன்னான்.
மனம் அத்தனை பாரமாக இருந்தது. இதை விட பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் தூசி தட்டுவதை போல தட்டியவனுக்கு.. இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாக விட முடியவில்லை.
எத்தனை எத்தனை விஷயங்களை பார்த்து கமிஷனர் பதவியை அடைந்திருப்பான். ஆனால் இந்த விஷயத்தில் அவனால் யோசிக்க கூட முடியவில்லை, அதற்கு ஒரே காரணம் பிறையை தவிர்த்து வேறு என்னவாக இருக்கும்.
ஒவ்வொரு நொடி நேரத்திலும்.. அவனது இதயம் தாறு மாறாக துடிப்பதை அவன் மட்டுமே அறிவான்.
மகாராஷ்டிரா மாநிலம் என்றதும் அவனது சிந்தைக்கு வந்தது எல்லாம் அந்த மாநகரம் மும்பை தான்.
தமிழ்நாட்டை விட்டு வெளியேற விடக்கூடாது என்ற முடிவில் அவன் தீவிரமாக இருக்க.. அதை விட அவளை மும்பை கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் அவன் தீவிரமாக இருந்தான்.
யாரவன் ?
சனா💖

