Loading

அத்தியாயம் 19

 

கீதாஞ்சலியை அப்படி பார்த்த உதயகீதனின் முகம் வேதனையில் சுருங்க தான் செய்தது. அன்னையாகிற்றே!

 

அதை உணர்ந்த ஜீவநந்தினி, அவன் கரத்தை அழுந்த பற்றி, அவள் இருப்பதாக உணர்த்தினாள்.

 

அதில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அந்த சமயம் தான் கீதாஞ்சலி ராகவர்ஷினியை அடித்திருந்தார்.

 

அவரிடமிருந்து அவள் பெறும் இரண்டாவது அடி!

 

அனைவரும் பதற, பதற வேண்டியவளோ கல்லென சமைந்து நின்றாள்.

 

“உன்கிட்ட என்ன சொல்லி இங்க இருக்க சம்மதிச்சோம்? நீ என்ன பண்ணிருக்க? ச்சீ, நீயெல்லாம் பொண்ணா? அதுவும், என் வயித்துல பொறந்து… எல்லாம் எங்க தப்பு… உன்னை பத்தி தெரிஞ்சும், கையோட கூட்டிட்டு போகாம, நீ தெளிஞ்சுட்டன்னு உன்னை இங்க விட்டுட்டு போனோம் பார்த்தியா, எங்க தப்பு தான்!” என்று தலையிலேயே அடித்துக் கொண்டார் கீதாஞ்சலி.

 

உடனே அவரருகே வந்து தடுத்த கிரிதரனோ, “கீதா, என்னம்மா இது?” என்றவர், உதயகீதன் மற்றும் ஜீவநந்தினியிடம் திரும்பி, “எங்களால உங்களுக்கு ரொம்ப கஷ்டமும் மனவருத்தமும் உண்டாகி இருக்கு. அதுக்கு மன்னிப்பு கேட்குறதை தவிர வேற என்ன செய்ய முடியும்னு எங்களுக்கு தெரியல. எங்க பொண்ணை சரியா வளர்க்காம, இப்போ எல்லாரு முன்னாடியும் தலை குனிஞ்சு நிக்குறோம்.” என்று ஓய்ந்து போய் சொன்னார் அவர்.

 

உதயகீதனோ அவர் கூறியதற்கு எவ்வித மறுமொழியும் சொல்லாமல், “உங்க பொண்ணு மேல நாங்க எந்த கம்ப்லைண்ட்டும் கொடுக்காததுக்கு காரணம், திரும்ப அவளை எங்க லைஃப்ல பார்க்க கூட விரும்பல. நீங்க உங்க பொண்ணை ஜெர்மனி கூட்டிட்டு போங்கன்னு சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்ல. ஆனா, கூட்டிட்டு போனா பெட்டர். நான் சொன்ன விதம் உங்களுக்கு ஹார்ஷா தெரியலாம். ஆனா, நாங்க எந்தளவுக்கு காயப்பட்டுருக்கோம் இருக்கோம்னு நீங்களும் புரிஞ்சுக்கணும்ல.” என்றான்.

 

எதிரே நின்றவர்களின் மௌனம், அவர்களின் சம்மதத்தை தெரிவிக்க, “நான் உங்க பொண்ணு கூட பேசணும். உங்க முன்னாடி தான். பேசலாமா?” என்று உதயகீதன் கேட்க, அவன் கேட்டு மறுக்கும் இடத்தில் இப்போது அவர்கள் இல்லை என்பதால், அதற்கும் சம்மதித்தனர்.

 

இவை அனைத்தும் சசிதரனின் இல்லத்திலுள்ள தோட்டத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உதயகீதனுக்கு வீட்டிற்குள் நுழைய கூட விருப்பம் இல்லை.

 

தலை குனிந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ராகவர்ஷினியின் முன்பு சென்று நின்ற உதயகீதன், “நீ செய்ய நினைச்ச காரியத்துனால என்ன சாதிக்க நினைச்ச? எங்களை பழிவாங்க பிளான் பண்ணியா? இப்போ பழி வாங்கிட்டியா? அப்படியே பழி வாங்கணும்னு நினைச்சா, ‘உன் அம்மா’வை தான நீ பழிவாங்கி இருக்கணும்? ஏன்னா, நீ ஆசைப்பட்ட கல்யாணம் நடக்காம போனதுக்கு அவங்க தான காரணம்?” என்று ஒவ்வொன்றையும் அழுத்தி கேட்டான்.

 

அதற்கும் அவளிடம் எதிர்வினை இல்லாமல் போக, “நீ ஆசைப்பட்டது நிறைவேறல, அதனால நீ கஷ்டப்பட்ட. ஏன், உனக்கு மட்டும் தான் கஷ்டமா? உன்னால இத்தனை பேரு இப்போ கஷ்டப்பட்டுருக்காங்களே, அதுக்கு என்ன சொல்லப் போற? அவங்களும் அவங்க கஷ்டத்துக்காக, உன்னை பழிவாங்கலாமா? சரி, அவங்களை விடு… என்னை லவ் பண்ண தான? எல்லாம் தெரிஞ்சும், என்னோட வாழனும்னு தான பிடிவாதம் பிடிச்ச? அப்போ என் கஷ்டத்தை, வருத்தத்தை நீ புரிஞ்சுக்கிட்டியா?” என்று சிறு இடைவெளி விட, அவளிடம் பதில் தான் இல்லை.

 

“உனக்கு கல்யாணம் நின்னது மட்டும் தான் வருத்தம். ஆனா, எனக்கு? என் மூணு வயசுல விட்டுட்டு போனவங்க, திரும்ப என் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறாங்க… அதுவும் நான் விரும்புன பொண்ணோட அம்மாவா! எனக்கு எப்படி இருந்துருக்கும்? பொறந்ததுல இருந்து அவங்க கைக்குள்ள வளர்ந்த என்னை, யாரோ ஒருத்தருக்காக ஒரேடியா விட்டுட்டு போனாங்க, அதுவும் நான் கதற கதற… எப்படி இருந்துருக்கும் எனக்கு? அவங்களால நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா? என்னை வேண்டாம்னு சொன்னவங்க, எனக்கும் வேண்டாம்னு, அவங்களை இனி என் வாழ்க்கைல பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணா, விதி என் முன்னால அவங்களை கொண்டு வந்து நிறுத்துச்சு. என் மனநிலை எப்படி இருந்துருக்கும்னு எப்போயாவது யோசிச்சு பார்த்தியா? அப்படி பார்த்துருந்தா, நீ எப்போவோ இங்கயிருந்து போயிருப்ப. ஆனா, உனக்கு எப்பவும் நீதான முக்கியம்! செல்ஃபிஷ்! இவ்ளோ செல்ஃபிஷ்னு தெரிஞ்சுருந்தா, உன் பக்கம் கூட திரும்பியிருக்க மாட்டேன். எல்லாம் விதி!” என்று விரக்தியாக பேசியவன், அவன் ஜீவனை தேடி ஜீவநந்தினியிடம் வந்தான்.

 

அவளும் அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

 

அவன் பேச்சில் ராகவர்ஷினி மட்டுமல்ல கீதாஞ்சலியுமே அழுது கொண்டு தான் இருந்தார்.

 

அவரும் தானே அன்று சுயநலமாக முடிவெடுத்து மகனை விட்டு சென்றார். யாரோ ஏதோ சொல்லி விட்டார் என்பதற்காக பெற்றெடுத்த பிள்ளையை பிரிந்திருக்க கூடாதல்லவா? குறைந்த பட்சம், அவனையும் அவருடன் கூட்டிச் செல்லவாவது போராடியிருந்திருக்க வேண்டுமல்லவா?

 

வந்த வேலை முடிந்தது என்பதால் உதயகீதனும் ஜீவநந்தினியும் அங்கிருந்து கிளம்ப, அத்தனை நேரம் தனக்குள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்த கீதாஞ்சலி, அவர்களை நோக்கி செல்ல முற்பட, அவரை தடுத்த கிரிதரன், “வேண்டாம்மா, அவங்க வாழ்க்கைல நாம இல்லன்னு தெளிவா சொல்லிட்டாங்க. இனிமே, மன்னிப்பு கேட்க கூட அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நாம இன்னைக்கே ஜெர்மனி கிளம்பலாம்.” என்றவர், இறுதி வரியை ராகவர்ஷினியை பார்த்தபடி தான் கூறினார்.

 

கீதாஞ்சலியாவது திட்டுவதற்கு ராகவர்ஷினியிடம் பேசினார். கிரிதரன் ஒன்றுமே பேசவில்லை.

 

இப்போது கூட, “அண்ணா, எங்களால உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் தான் சிரமம். எங்களை மன்னிச்சுடுங்க.  நாங்க ஈவினிங் ஃபிளைட்டுக்கு கிளம்பலாம்னு இருக்கோம். அவ வரதுன்னா சொல்ல சொல்லுங்க. இல்ல, இங்கேயே எங்கேயாவது இருந்துக்கட்டும். அவளுக்கான செலவை நாங்க பார்த்துக்குறோம்.” என்று மனதுடைந்து கிரிதரன் கூற, சுமித்ராவுக்கே பாவமாக இருந்தது.

 

இருப்பினும், மகன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதால், பேசாமல் இருந்து விட்டார்.

 

சசிதரன் கூட, “விடு கிரி. இப்படி எல்லாம் நடக்கணும்னு இருந்துருக்கு.” என்றாரே தவிர, ராகவர்ஷினியை பற்றி எதுவும் பேசவில்லை.

 

அதுவே கூறியது, குடும்பத்தினரை அவள் எத்தனை தூரம் காயப்படுத்தி இருக்கிறாள் என்பதை.

 

அதே சிந்தனையுடன் இருந்தவள், இனியும் எதுவும் பேசி காயப்படுத்த வேண்டாம் என்று எண்ணி, அமைதியாகவே பெற்றோருடன் ஜெர்மனி நோக்கி பயணித்தாள், இனி இந்தியா வரவே மாட்டேன் என்ற முடிவுடன்!

 

*****

 

உதயகீதன் மற்றும் ஜீவநந்தினியின் அறை!

 

கால்களை நீட்டி கட்டிலில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்த உதயகீதனை ஒட்டிக் கொண்டு அமர்ந்த ஜீவநந்தினி, “தயா, ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்க தான?” என்று பீடிகையுடன் வினவ, “அப்போ வில்லங்கமா ஏதோ ஒன்னை கேட்கப் போற, அப்படி தான?” என்றான் அவனும் பதிலுக்கு.

 

“ம்ச், கோச்சா கோச்சுக்கோங்க. ஆனா, கேட்கலைன்னா என் மண்டை வெடிச்சுடும்.” என்றவளை சிரிப்புடன் தனக்குள் இழுத்துக் கொண்டவன், “எப்படியும் கேட்கப் போற, அதுக்கெதுக்கு முதல்ல ஒரு டிஸ்க்ளைமர்… அதுவும் தேவையில்லாத ஆணி!” என்றான்.

 

“ப்ச், என்னோட பழகி பழகி நீங்களும் வாயடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இது ரொம்ப தப்பு. ஒரு குடும்பத்துல ஒரே ஒரு வாயாடி தான் இருக்கணும்!” என்று தத்துவம் பேசியவள், தலையில் அடித்துக் கொண்டு, “அடச்சை, பேச வந்ததையே மறந்துடுவேன் போல. நீங்க அவங்களை பார்த்தீங்க தான? ஏதோ உடம்புக்கு முடியல போல. ஏன் எதுவும் கேட்டுக்கல.” என்று வெகு நேரமாக மனதை அரித்த விஷயத்தை தயக்கத்துடன் கேட்டாள்.

 

அவனோ ஒரு பெருமூச்சுடன், “கேட்கணும்னு தான் நினைச்சேன் ஜீவி. ஆனா, ஒருவேளை கேட்டு, அது என்னை பாதிச்சு… ப்ச், எப்படி சொல்ல… அது காரணமா நான் அவங்களை ஏத்துக்கிட்டா… அப்பா… அவரு எப்படி ஃபீல் பண்ணுவாருன்னு தெரியல ஜீவி. இத்தனை வருஷமா எனக்காகவே வாழ்ந்தவரு அவரு. ‘என்னடா இவன் அம்மாவை பார்த்ததும் மாறிட்டானே’ன்னு எல்லாம் நினைக்க மாட்டாரு தான். ஆனா, அவருக்கு ஒரு செகண்ட் அந்த தாட் வந்தாலும், என்னால என்னையவே மன்னிக்க முடியாது. அவங்களுக்கு அங்க ஒரு குடும்பம் இருக்கு. ஆனா, அப்பாக்கு நான் மட்டும் தான இருக்கேன்.” என்றவன் கண்கள் கலங்க, அதைக் கண்ட அவனின் கண்ணாட்டியின் மனமும் கலங்கித் தான் போனது, அவனின் தந்தை பாசத்தில்!

 

சூழலை இலகுவாக்க வேண்டி, “அப்போ நான் யாராம்? உங்களுக்கு அப்பான்னா, எனக்கு மாமாவாக்கும்!” என்று சிலுப்பிக் கொண்டவளை சமாதானப்படுத்தவே அன்றைய பொழுது முடிந்து போனது உதயகீதனுக்கு.

 

*****

 

மறுநாள், சுதாகரின் மாதாந்திர மருத்துவ பரிசோதனையை முன்னிட்டு தாமதமாக அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஜீவநந்தினி.

 

அவளுக்காகவே காத்திருந்ததை போல அவளிடம் வந்த அலுவலக தோழி ரேகா, “நந்து, நம்ம சாருக்கு புது செக்ரட்டரி அப்பாயின்ட் பண்ணிட்டாங்க. உனக்கு தெரியுமா?” என்று வினவ, ‘எனக்கு சொல்லாம எப்படி?’ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தாலும், “அது யாரு எனக்கு புது சக்காளத்தி?” என்று விளையாட்டாகவே கேட்டாள்.

 

உதயகீதனை பற்றியும் ஜீவநந்தினியை பற்றியும் அந்த தோழிக்கு நன்கு தெரிந்ததால், வேறு எதுவும் நினைக்காமல், “சக்காளத்தி இல்ல, சக்காளத்தன்!” என்று கூற, “இது அதை விட மோசமாச்சே!” என்று அங்கலாய்த்தபடி உதயகீதனின் அறைக்குள் அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

 

உதயகீதனின் தீவிர முகபாவனையும், அங்கிருந்த புதியவனையும் பார்த்தவள், ‘முசோவா இருக்காரு. சொல்லலாமா, இல்ல அப்படியே ஓடிடுவோமா?’என்ற யோசனையில் இருந்தவளை கலைத்தது உதயகீதனின் செறுமல் சத்தம்.

 

புது பி.ஏ அங்கில்லாததை கவனித்தவள், “எனக்கு… அதாவது எக்சிஸ்டிங் பி.ஏக்கு சொல்லாம, புது பி.ஏவை எப்படி அப்பாயின்ட் பண்ணுவீங்க சார்?” என்று தைரியத்துடன் கேட்க, அவளை சுவாரஸ்யமாக பார்த்தவன், “உங்க கிட்ட, அதாவது டெம்ப்ரவரி பி.ஏ கிட்ட கண்டிப்பா சொல்லணும்னு ஏதாவது அவசியம் இருக்கா?” என்றான்.

 

“இல்ல தான்… இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருந்தா…” என்று அவள் இழுக்க, சிரிப்பை இதழ்களுக்குள் மறைத்து, கன்னத்தில் கைவைத்து, “சொல்லியிருந்தா?” என்று அவளைப் போலவே கேட்டான் அவன்.

 

அவன் தன்னை கேலி செய்கிறான் என்பதை உணர்ந்தவளோ, “ஹ்ம்ம் சொல்லியிருந்தா நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ணியிருப்பேன்.” என்றவள் உதட்டை சுழித்து விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

 

அவளுக்கு அடுத்த அதிர்ச்சியாக, மாலையில் வீட்டிற்கு சென்ற போது அவளின் தந்தை எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.

 

“அப்பா, இந்த நேரத்துல எங்க கிளம்பிட்டீங்க?” என்று ஜீவநந்தினி வினவ, “கிளம்பிட்டேன் இல்லம்மா, கிளம்பிட்டோம்! உதய் தம்பி தான், நம்ம ரெண்டு பேரையும் ஒரு வாரத்துக்கு நம்ம வீட்டுல போய் இருக்க சொன்னாரு.” என்றார் சுதாகர்.

 

அவளோ குழப்பத்துடன், “உங்க ‘தம்பி’ எதுக்கு அப்படி சொன்னாராம்?” என்று ‘தம்பி’யில் அழுத்தம் கொடுத்து அவள் வினவ, “அதெல்லாம் நான் கேட்டுக்கலம்மா. அவர் சொன்னா, அதுல ஏதாவது காரணம் இருக்கும்.” என்றார் சுதாகர்.

 

“பொல்லாத காரணம்.” என்றவள் கேசவமூர்த்தியை பார்க்க, “என்கிட்டயும் எதுவும் சொல்லல நந்தும்மா.” என்று அவரே சரண்டராகி விட்டார்.

 

“ப்ச், நானே காரணம் என்னன்னு கேட்குறேன்.” என்றவளை பேசி பேசியே வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

 

*****

 

அன்றைய இரவு வெகு நாளுக்கு பிறகு அவளின் தோழி அனுஷாவுக்கு அழைத்தாள் ஜீவநந்தினி.

 

“என்னம்மா உன் காத்து இந்த பக்கம் வீசுது? என்னையெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சுருக்க?” என்று அழைப்பை ஏற்றதும் அனுஷா கேலி செய்ய, “நீ வேற ஏன்டி…” என்றவள் நடந்ததை எல்லாம் கூறினாள்.

 

“இவ்ளோ நடந்துருக்கு, என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல?” என்று அனுஷா உரிமையாக கோபித்துக் கொள்ள, “எல்லாமே சட்டுன்னு நடந்து முடிஞ்சுடுச்சு அனு. கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் தான் ஆகுதுன்னு என்னால நம்ப முடியல. அந்தளவுக்கு ஃபாஸ்ட்டா போயிடுச்சு!” என்றாள் ஜீவநந்தினி.

 

“பார்றா, உன் வீட்டுக்காரரோட ஒரு மாசம் கழிச்சது, ஜென்மம் ஜென்மமா வாழ்ந்தது போல இருக்குதா?” என்று அனுஷா கிண்டலில் இறங்க, “அதை ஏன் கேட்குற, இந்த மனுஷன் திடீர்னு புது பி.ஏவை அப்பாயின்ட் பண்ணியிருக்காரு. இன்னைக்கு, அப்பாவையும் என்னையும் அப்பா வீட்டுக்கு போய் இருக்க சொல்லிட்டாரு.” என்று சோர்வுடன் கூறினாள் ஜீவநந்தினி.

 

“ஆஹான்… மேடம் சும்மாவா இருந்தீங்க?” என்று அனுஷா வினவ, “எனக்கு எங்க பேச நேரம் கொடுத்தாரு அப்பா? மாப்பிள்ளை சொன்னா மறுபேச்சு இல்லங்கிற மாதிரில நடந்துக்குறாரு! சில சமயத்துல, இவரு எனக்கு அப்பாவா, இல்ல அவருக்கான்னு டவுட் வருது. எனக்குன்னு சப்போர்டுக்கு இருந்தது மாமா மட்டும் தான். இந்த மேட்டர்ல, அவரும் ஒரு ஹெல்பும் பண்ணல. ஏதோ இருக்கு. ஆனா, என்னன்னு தான் தெரிய மாட்டிங்குது! அது தெரியுறதுக்குள்ள மண்டை வெடிச்சுடும் போல.” என்று புலம்பியவளை அனுஷா தான் சமாதானப்படுத்தினாள்.

 

ஆனால், அவளை அதிகம் காக்க வைக்காமல், மறுநாளே அதற்கான காரணத்தை தெரிவித்து விட்டான் அவளவன். தெரிய வந்தபோது அவள் எதிர்வினை என்னவோ?

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. என்னவா இருக்கும் 🤔 உதய் எதுவும் சர்ப்ரைஸ் பண்ணப் போறானோ 😍😍😍