காட்சிப்பிழை 18
ரிஷபின் விளக்கத்தைக் கேட்ட நவிக்கு, தன்னை மட்டும் ஏன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழ, தன் சந்தேகத்தை ரிஷபிடம் கேட்கவும் செய்தாள். அப்போது, அவர்கள் இருந்த அறையை நோக்கி யாரோ வருகிறார்கள் என்பதை விளக்குகள் அணைந்து எரியும் சமிக்ஞையின் மூலம் அறிந்த ரிஷப், நவியை அதற்காக மயக்கத்தில் இருப்பதை போல படுக்கச் சொல்லியவன், சில பல எச்சரிக்கைகளையும் கூறினான்.
சில நொடிகளிலேயே அந்த அறைக் கதவு தட்டப்பட்டது. நவி, ரிஷப் கூறியது போல படுத்துக்கொள்ள, ரிஷப் கதவைத் திறந்தான்.
வெளியே டேனியலும் பிரசாத்தும் நின்றிருந்தனர். அவர்கள் இருவரின் முகபாவங்களையும் உடல்மொழிகளையும் வைத்தே பிரசாத் தான் டேனியலை அழைத்து வந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக புரிந்தது ரிஷபிற்கு.
எனினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஹே டேனி, எனி ப்ராப்ளம்?” என்று சாதாரணமாகவே கேட்டான்.
“ஒன்னுமில்ல ஈஸ்வர், ஜஸ்ட் நார்மல் விசிட் தான்.” என்று பிரசாத்தை ஒருமாதிரி பார்த்தவாறே கூறினார் டேனியல்.
“ஓஹ் வாங்க டேனி, இவ்ளோ நேரம் அவங்களை மயக்க நிலைக்கு கொண்டு போய் ஸ்டடி பண்ணிட்டு இருந்தேன்.” என்றான் ரிஷப்.
“ஓஹ், ஓகே ஈஸ்வர். ஆனா, ஏன் இப்படி திடீர்னு நம்ம சிமுலேஷன் மால்ஃபங்ஷன் ஆச்சு? இதுக்கு முன்னாடி ஏழு குரூப்பை டெஸ்ட் பண்ணீங்களே. அப்போ இப்படி நடக்கலையே, எனிதிங் ஸ்பெசிஃபிக்?” என்று டேனியல் ஆராயும் பார்வையுடன் ரிஷபிடம் வினவினார்.
ஒரு அவசர பார்வை பரிமாற்றத்தை பிரசாத்திடம் நிகழ்த்தியவன், “டேனி, இது மூளை சம்பந்தப்பட்டது. அண்ட் உங்களுக்கே தெரியும் மனித உடம்புல ரொம்ப காம்ப்லெக்ஸ் மூளை தான். அதைக் கட்டுப்படுத்துறது சாதாரணம் இல்ல. ஒவ்வொருத்தரோட மூளையும் சின்ன சின்ன வேறுபாடுகளோட இருக்கும். அதை எல்லாத்தையும் அனலைஸ் பண்ணணும்னா ரொம்பவே தாமதமாகும். அதான், வெவ்வேறு நாடுகள்ல இருக்குறவங்க, வெவ்வேறு சீதோஷ்ண நிலையில இருக்குறவங்க, வெவ்வேறு பழக்கவழக்கங்களை கொண்டவங்கன்னு இதுவரை நம்ம சேம்ப்பில்ஸ் சேகரிச்சு அவங்க மேல டெஸ்ட் பண்றோம். ஏழு தடவை டெஸ்ட் பண்ணாலும், இப்போ கிடைச்ச சேம்ப்பில் மத்தவங்களை விட வித்தியாசமானது. அவங்களுக்குள்ள இருக்க எதோவொரு எமோஷன், நம்மளோட நானோ ரோபோட்ஸ் அனுப்புற சமிக்ஞைகளை தடுக்குது. அதுக்கு காரணம், அவங்க வளர்ந்த சூழலா கூட இருக்கலாம். இதைக் கண்டுபிடிச்சா தான், அதுக்கேத்த மாதிரி நம்ம சிமுலேஷனை மாத்த முடியும் டேனி. இது ஜஸ்ட் இப்போவே முடியுற ப்ராஜெக்ட் இல்ல.” என்று விளக்கினான்.
அவன் கூறுவதை ஆமோதித்த டேனியலும், “ஓகே ஈஸ்வர், நீங்க கன்டின்யூ பண்ணுங்க.” என்றவர் பிரசாத்தை கூட்டிக் கொண்டு வெளியே சென்றார்.
“பிரசாத், ஈஸ்வரை கார்னர் பண்ணனும்னு சும்மா சும்மா இதுமாதிரி கம்பளைன் பண்ணி, என் நேரத்தை வீணாக்காதீங்க!” என்று டேனியல் கூறுவதும், அதற்கு பிரசாத் ஏதோ காரணம் சொல்வதும் ரிஷபிற்கு மட்டுமல்ல நவிக்கும் கேட்டது.
ஒரு பெருமூச்சுடன் மறைகாணியின் கண்காணிப்பு வட்டத்திற்குள் வராதவாறு, நவி படுத்திருந்த கட்டிலருகே இருந்த மேசையின் புறம் திரும்பிக் கொண்டவன், “நவி, நான் சொன்னது ஞாபகம் இருக்குல. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் மயக்கத்துல இருந்து முழிக்குற மாதிரி எழுந்திரு. நான் இப்போ கிளம்புறேன். நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு நானோ இல்ல ஜாஷாவோ சொல்றோம். அதுவரைக்கும் நமக்குள்ள பேசுனதை யாருக்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” என்று கூறியவன், அவனின் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
கட்டிலில் படுத்திருந்த நவியோ, நடந்த நிகழ்வுகளையும், ரிஷப் கூறியவைகளையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தவளிற்கு, ‘தன்னைக் காப்பாற்றவே’ என்று ரிஷப் மற்றும் ஜாஷா கூறியது எவ்வளவு சரியென்பது புரிந்தது. அவளின் நினைவுகள் இறுதி கட்டத்திற்கு நெருங்க, ரியான் மற்றும் ரிஷப் அந்த ஏணியிலிருந்து கீழே விழும் காட்சி, இப்போதும் நவிக்கு பதட்டத்தை கொடுத்தது.
அதே பதட்டத்துடன் எழுந்தவள், ஒரு பெருமூச்சுடன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, அருகிலிருந்த தண்ணீரைப் பருகினாள்.
என்னதான் விளையாட்டாக இருந்தாலும், அவள் பார்த்தபோது அது விளையாட்டு என்று தெரியாதே. இன்னும் கூட தன்னைப் பார்த்து லேசான சிரிப்புடன் ‘ஆல் தி பெஸ்ட்’ கூறியபடி ரிஷப் விழும் காட்சியில் அவளின் இதயத்துடிப்பு எகிறியது.
‘இவ்ளோ ரிஸ்க் எடுத்து என்னைக் காப்பாத்தணும்னு என்ன அவசியம்?’ என்பதே இப்போது அவளின் முழுமுதற் குழப்பமாக இருந்தது.
‘அடுத்த முறை ரிஷபை பார்க்கும்போது கேட்டுடனும். இல்லனா தலையே வெடிச்சுடும் போல!’ என்று நினைத்தபடி மீண்டும் அந்த கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவள் எதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறாளோ, அதை தெரிந்து கொள்ளும்போது இதே ஆர்வத்துடன் இருப்பாளா என்பது சந்தேகமே!
*****
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை, யாரோ உலுக்க, மிகவும் சிரமப்பட்டே கண்களைத் திறக்க முயற்சித்தாள். கண்கள் திறக்கும்போது அவளின் செவிகளும் உயிர்பெற்றதோ, “நவி நவி…” என்று ரிஷபின் குரல் அவளின் செவி வழியே மூளையை அடைந்து அவளின் விழிகளை உடனே திறக்க கட்டளையிட்டது.
“ரிஷப்…” என்று லேசான முனகலுடன் நவி எழ, அவனோ அவள் நிதானமடைவதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் பேச ஆரம்பித்தான்.
“நவி, உன்னை மறுபடியும் அந்த சிமுலேஷன்குள்ள அனுப்ப பிளான் பண்ணியிருக்காங்க. அண்ட் இந்த முறை உன்கூட நாங்க யாரும் வரப்போறது இல்ல. அந்த பிரசாத்துக்கு எங்க மேல சந்தேகம் வந்துடுச்சுன்னு நினைக்குறேன். அதனால, இந்த முறை அவனோட ஆளுங்களை உன்கூட அனுப்பி வைக்கப்போறாங்க.” என்று கடகடவென்று ஒப்பிக்கும் குரலில் கூற, நவிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை.
அதன்பின்னர், அவன் கூறியதை ‘ஸ்லோ மோஷனில்’ நினைத்துப் பார்த்ததும் தான், நடக்கவிருக்கும் சம்பவங்கள் அவள் கண்முன் தோன்றி மறைந்தன.
“வாட்? இப்போ என்ன பண்றது ரிஷப்?” என்று பயத்துடன் நவி வினவ, “நவி, இப்போ நமக்கு இருக்க சேலஞ் என்னன்னா, உன்னை அந்த சிமுலேஷனுக்குள்ள அனுப்புறதுக்கு முன்னாடி, உன்னோட மூளையில அந்த இடத்தைப் பத்தி பதிவாகியிருக்க எல்லாத்தையும் ட்ரக்ஸ் மூலமா தற்காலிகமா மறக்கவச்சுடுவாங்க. அந்த நினைவுகள் இல்லன்னா, உனக்கு திரும்பி வரது ரொம்ப கஷ்டமா இருக்கும்.” என்றான் ரிஷப்.
அவன் கூறியதைக் கேட்ட நவிக்கு, லிண்டா கூறிய ‘தற்காலிக நியாபக மறதிக்கான ட்ரக்ஸ்’ தான் நினைவிற்கு வந்தது.
நவியின் சிந்தனையை கணித்த ரிஷப், “நீ நினைக்குற அதே ட்ரக் தான் நவி.” என்றவள் அவளின் கையில் ஒரு மாத்திரையைக் கொடுத்து, “இந்தா நவி இது அதுக்கான மாற்று மருந்து. இதை போட்டுகிட்டா மறந்தது நினைவுக்கு வந்துடும்… ஆனா, இதை போடத்தான் மறக்கக்கூடாது.” என்றான்.
அவன் கூறியதைக் கேட்டவளிற்கு இப்போதே படபடப்பாக தான் இருந்தது. திரும்பவும் அதே இடத்திற்கு செல்வது ஒருபுறம், இவர்களின் உதவியில்லாமல் வெளியே வர முயற்சிக்க வேண்டும் என்பது மறுபுறம் என்று அனைத்து பக்கங்களிலிருந்தும் தன்னை அழுத்துவது போல இருக்க, அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவளின் நிலையைக் கண்டவன் தன்னையே கடிந்து கொண்டு, “ரிலாக்ஸ் நவி! நம்ம பிளான் படியே எல்லாம் நடக்கும்னு நம்புவோம். ஏதாவது சொதப்புச்சுனாலும், சிமுலேஷனோட மெயின் பவரை கட் பண்ணி, அதுலயிருந்து உன்னை வெளிய கொண்டு வர மாதிரி பண்ணிடலாம். சோ நீ கவலைப்படாத.” என்றான் ரிஷப்.
“அப்படின்னா முதல்லயே அந்த பவரை கட் பண்ண முடியாதா?” என்று நவி இன்னும் பயத்துடனே வினவ, “அப்படி செஞ்சா, இன்னும் நம்ம மேல சந்தேகம் அதிகமாகும்.” என்று தயக்கத்துடன் கூறினான் ரிஷப்.
அவன் கூற்றிலிருந்தே, அவன் கூறிய ‘பவர் கட்’ வழி, தன்னை சமாதானப்படுத்துவதற்கு தான் என்பதை உணர்ந்து கொண்ட நவி, ஒரு பெருமூச்சுடன், “ஓகே ரிஷப், நான் ரெடி தான்.” என்றாள்.
அவளின் கைகளை மெல்ல பற்றி விடுத்தவன், “எல்லாம் நல்லபடியா நடக்கும் நவி. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கயிருந்து உன்னை கூட்டிட்டு வருவாங்க. அந்த மாத்திரையை மட்டும் மறந்துடாத.” என்று கூறிவிட்டு வெளியே செல்ல முயன்றான் ரிஷப்.
சட்டென்று நவிக்கு அவளின் சந்தேகம் மனதில் தோன்ற, ரிஷபின் கைகளைப் பிடித்து அவனை செல்ல விடாமல் தடுத்தவள், “என்னை மட்டும் எதுக்கு காப்பாத்த நினைச்சீங்க ரிஷப்?” என்றாள்.
அவள் இப்போதே கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை தான். ஆனால், சூழ்நிலையின் கணம், அவளின் மனநிலையிலும் பிரதிபலிக்க இதைக் கேட்டுவிட்டாள்.
கேள்வியைக் கேட்ட பின்பு தான், ‘அச்சோ, இப்போ இந்த கேள்வி அவசியமா?’ என்று மனதிற்குள் நினைத்தாள்.
ரிஷபும், ‘இப்போ எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்லியிருக்கேன். திரும்ப இதையே கேக்குறா?’ என்று நினைத்துக் கொண்டே தான் திரும்பினான்.
ஆனால், அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்த பயமும், குழப்பமும் அவளிடம் கோபமாக பேச அனுமதிக்கவில்லை.
ஒரு பெருமூச்சுடன் தன் கையைப் பிடித்திருந்த அவளின் கரத்தை பிடித்துக் கொண்டவன், “ஏன்னா, நீ எனக்கு அவ்ளோ முக்கியம்! இப்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும்.” என்றவன் அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் சென்றுவிட்டான்.
அவனின், ‘நீ எனக்கு அவ்ளோ முக்கியம்’ என்ற வாசகமே அவளின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
*****
அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் நவியின் அறைக் கதவு திறக்கப்பட, இப்போது நுழைந்ததோ ஜாஷா மற்றும் சிலர். ஜாஷாவைத் தவிர மற்றவர்கள் கைகளில் துப்பாக்கியை ஏந்தியிருந்தனர்.
நவியோ அவர்களை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். முன்னர், இந்த துப்பாக்கிகளை பார்த்து பயந்திருப்பாளோ என்னவோ, இப்போது அதைப் பார்க்கும்போது, தினந்தோறும் உபயோகிக்கும் பொருள் போல தான் தெரிந்தது.
ஜாஷா நவியின் அருகே வந்தவள், கண்ணசைவிலேயே அவளை எழ சொல்ல, அவளும் கடனே என்று எழுந்து நின்றாள். அவள் எழுந்ததும், அவளை பரிசோதிக்க ஆரம்பித்தாள் ஜாஷா.
அப்போது நவியின் கால்சராய் பையில் ரிஷப் கொடுத்த மாத்திரை இருப்பதை உணர்ந்து கொண்டாள் ஜாஷா. ஜாஷா நவியைக் காண, அவளோ எந்தவித வேறுபாடும் இல்லாமல் நின்றிருந்தாள்.
ஜாஷாவும் தன் பார்வையை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து, “ஆல் க்ளியர்.” என்றாள்.
இத்தனை நேரம் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், மனதிற்குள் பயந்து கொண்டு தான் இருந்தாள் நவி.
அதன்பின்னர், நவியை சுற்றி எல்லா திசைகளிலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் செல்ல, நவியும் அவர்களுடன் மெல்ல நடந்தாள். செல்லும் வழியெல்லாம், ‘மாத்திரையை மறந்துடக்கூடாது!’ என்று ஜெபம் போல மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே தான் சென்றாள்.
அவர்கள் நவியை அழைத்துச் சென்றது, நவி மயக்கத்திலிருந்து. எழுந்த அதே ஆராய்ச்சி அறை தான். அங்கு ரிஷப், ரியான், பிரசாத், ஜென்சி மற்றும் சிலர் இருந்தனர்.
உள்ளே நுழைந்ததும் நவியின் கண்கள் தேடியதென்னவோ ரிஷபைத் தான். அவன் முகத்திலிருந்த நிர்மலமான பாவனையைக் கண்டு சுதாரித்தவள், கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.
அதன்பின்னர், நவியை அங்கிருந்த மேசையில் படுக்கச் செய்தவர்கள், சில இயந்திரங்களை அவளின் உடலில் இணைத்தனர். முதல் முறை இவற்றை செய்த நினைவுகள் இல்லை என்பதால், இப்போது நவிக்கு கைகள் வெளிப்படையாகவே நடுங்கின.
அவளருகே ஊசியுடன் வந்த ஜாஷா, அவளின் கைகளை வேறு எவருக்கும் தெரியாத வண்ணம் அழுத்தி சமாதானப்படுத்தியவள், அந்த ஊசியை அவளின் கைகளில் செலுத்தினாள்.
நவிக்கு அது என்ன ஊசி என்று நன்றாகவே தெரிந்து. மீண்டும் மனதிற்குள், ‘மாத்திரையை மறக்கக்கூடாது’ என்று நினைத்தபடியே மயங்கிப் போனாள்.
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும், முகத்தில் எவ்வித பாவனைகளையும் காட்டிவிடாதவாறு பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ஆராய்ச்சியாளன். இதுவரை பல ஆராய்ச்சிகளை செய்திருந்தாலும், இது போன்ற பதட்டத்தை அவன் உணர்ந்ததே இல்லை.
நவியைப் போல இன்னும் சிலருக்கும் ஊசிகள் போடப்பட்டு தயாராக வைத்திருந்தனர். அடுத்தபடியாக, அவர்களின் கண்களின் வழியே மூளைக்குள் செல்லுமாறு, இவர்கள் கண்டுபிடித்த ‘நானோ ரோபோட்’களை செலுத்தினர்.
சில நொடிகளுக்குப் பின்னர், “ஸ்டார்ட் பண்ணலாமே.” என்று பிரசாத் கூற, ரிஷப் அந்த இயந்திரத்தை இயக்கினான். அதிலிருந்து சென்ற சமிக்ஞைகள் அங்கு மயங்கிக் கிடந்தவர்களின் மூளைக்குள் சென்றிருந்த ‘நானோ ரோபோட்’களை உயிர்ப்பிக்க, அனைவரும் அந்த ‘மாய’ இடத்தில் இருப்பதைப் போல உணர்ந்தனர்.
*****
அதே இடம்! அதே மெத்தை! அதிலிருந்து மெல்ல எழுந்தாள் நவி. முன்னில்லாத அளவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது. மனதும் படபடவென்று அடித்துக் கொண்டது. அது மனதிற்கும் மூளைக்கும் இடையேயான சண்டையோ.
ஏதேதோ சத்தங்கள் கலவையாக ஒலிக்க, அவள் அதிலிருந்து வெளிவர மிகவும் சிரமப்பட்டாள்.
பெரிய திரையில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரசாத், “என்னாச்சு அந்த பொண்ணுக்கு?” என்று வினவ, “மாறி மாறி ட்ரக்ஸ் கொடுத்துருக்கோம். அதான் மயக்கமா இருக்கும். ஹ்ம்ம், கொஞ்ச நாள் கழிச்சு பண்ணலாம்னு சொன்னா கேக்கணும்.” என்று சத்தமாகவே கூறினான் ரிஷப்.
“ரிஷப், என்ன நினைச்சுட்டு இப்படி பேசுறீங்க? ஒரு சீஃப்கிட்ட பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?” என்று கத்த ஆரம்பித்து விட்டார் பிரசாத்.
இங்கு இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க, மிஸ்டிரியோவில் நவிக்கு இப்போது அந்த குரல் மட்டும் ஒலித்தது.
‘மாத்திரையை மறக்கக்கூடாது!’ என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவளின் கரமோ தன்னிச்சையாக தன் காலசராய் பைக்குள் நுழைந்து, அங்கிருந்த மாத்திரையை உணர்ந்தது.
ஓர விழிகளில், நவியின் விழிமொழியைப் படித்தவன், பிரசாத்திடம் திரும்பி வார்த்தைப்போரிட ஆரம்பித்தான். அவன் இதை ஆரம்பித்ததே, நவி மாத்திரை உண்பதை யாரும் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தானே.
அதன்படியே அனைவரின் கவனமும் இவர்களின் சண்டையில் இருக்க, தனக்காக ஒருவன் வீண்சண்டையில் ஈடுபடுவதை அறியாதவளாக நவி அந்த மாத்திரையை உட்கொண்டாள்.
மாத்திரை உண்டபின் மீண்டும் மயக்கம் வர, அதே கட்டிலில் தொய்ந்து விழுந்தாள். அதைக் கண்ட பின்னரே, ரிஷபின் பதட்டம் சற்று தணிந்தது.
அதற்குள் பிரசாத்தின் சத்தம் கேட்டு அங்கு வந்த டேனியல், “பிரசாத், ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க? அமைதியா இருப்பீங்கன்னா இங்க இருங்க. இல்லனா இவங்களையாவது பீஸ்ஃபுல்லா வேலை செய்ய விடுங்க.” என்று சத்தமிட, பிரசாத் ரிஷபை முறைத்துக் கொண்டே அமைதியானார்.
மீண்டும் பெரிய திரையில் பார்வையை பதித்தவர்களுக்கு, நவி மயங்கியிருந்த காட்சியே தெரிந்தது.
“என்ன இந்த பொண்ணு மயங்கிட்டா?” என்று வாயைவிட்ட பிரசாத், எங்கு மீண்டும் ரிஷப் பேசி, திட்டிவிட்டு சென்ற டேனியல் திரும்பவும் வந்துவிடுவாரோ என்று அமைதியாகி விட்டார்.
சில நிமிடங்கள் கழித்தும் அவள் எழாததால், ஜாஷா தான் மற்றவர்களை கவனிக்கலாம் என்று கூறினாள். அதன்படி, அவளின் திரையை சிறிதுபடுத்தி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தனர்.
ஆனால், அக்குழுவிலிருந்த மூவர் மட்டும், நவியின் திரையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் யாரும் கவனித்துவிடக் கூடாதல்லவா.
சிறிது நேரத்திலேயே நவி மயக்கத்திலிருந்து விழித்து விட்டாள். கண்களை சுருக்கி பார்த்தவளிற்கு எங்கிருக்கிறாள் என்பது புரிந்து விட்டது. பழைய நினைவுகளும் வந்துவிட்டன.
மெல்ல எழுந்தவள், தன் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, புதிதாக அங்கு வந்திருப்பதைப் போலவும், முன்னர் நடந்து கொண்டதைப் போலவே அனைத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பது போலவும் நடித்தாள்.
இங்கு திரையில் அவளின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தவனிற்கு மெல்லிய சிரிப்பு தோன்ற, அதை இதழ்கடையிலேயே புதைத்துக் கொண்டான்.
அடுத்த சில மணி நேரங்கள், மற்றவர்களுக்கு எப்படி கழிந்ததோ, நவிக்கு மிகவும் பதட்டம் நிறைந்ததாகவே கழிந்தது.
தனக்கு ஞாபகம் இருக்கிறது என்று காட்டிக் கொள்ளவும் கூடாது. அதே சமயம், அங்கிருந்த ஆபத்துக்களை கடந்தும் செல்ல வேண்டும். இதை மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தாதவாறு செய்து முடிப்பது மிகவும் சிரமமே. ஆயினும் அதை அழகாக கையாண்டாள் நவி.
ரிஷப் கூட நவியிடமிருந்து இத்தகைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கவே இல்லை! நவி விழித்த சிறிது நேரத்திலேயே, இயந்திரத்தில் ஏதாவது கோளாறு என்று கூறி அதை நிறுத்திவிடுவதற்கான திட்டத்தை எல்லாம் தீட்டிவிட்டிருந்தான் ரிஷப். ஆனால், அதை செயல்படுத்தினால், பிரசாத்தின் சந்தேகப் பார்வையை சந்திக்க நேரிடும்.
அதை எண்ணியே குழம்பித் தவித்தவனின் குழப்பத்தை எல்லாம் நீக்கியவாறே முன்னேறிக் கொண்டிருந்தாள் நவி.
அங்கு நிகழும் நிகழ்வுகளில், நவிக்கு மனம் ஒப்பாத செயல் என்னவென்றால் மற்றவர்களை கொல்வது தான். என்னதான் அதில் அவள் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், அவர்கள் சாகும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது கூட கடினமாக தான் இருந்தது. ஆனால், தன்னை நம்பி வழியனுப்பி வைத்தவனை எண்ணி, பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காத்தாள்.
இதோ இறுதி நிமிடங்களில் இருவர்! நவி மற்றும் வேறொரு இளைஞன். அவனின் மூளையை ஏற்கனவே கட்டுப்படுத்தியதால், அவன் ஆவேசமாக நவியை துரத்தினான்.
அதே ஏணி! அதே படிக்கட்டுகள்! நவி முன்னேற, அவளிற்கு சில படிகள் பிந்தி அவன் வந்து கொண்டிருந்தான்.
முன்னர் இருந்ததைப் போல இரு மனமெல்லாம்.நவிக்கு இல்லை. எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற வெறியிலேயே ஏறிக் கொண்டிருந்தாள்.
அவளின் இதயத்துடிப்பை விட வெளியிலிருந்த மற்ற மூவருக்கும் வேகமாக துடித்தது அவரவர்களின் இதயம்.
இன்னும் ஐந்தாறு படிகளே என்று எண்ணி வேகம் கூட்ட, அவளின் முன்னேற்றத்திற்கு தடையாக அவளின் கால்களை பிடித்துக் கொண்டான் பின்னே வந்தவன். அதில் சில படிகள் கீழே சருக்கவும் செய்தாள்.
மூவர் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் கண்களும் அந்த திரையையே பார்த்துக் கொண்டிருந்தன. படத்தின் பரபரப்பான இறுதிக் காட்சிகளைப் போன்று இருந்தது போலும்!
நவி கால்களை அசைக்க அவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளிற்கு அழுகை வந்தது. இனி தன்னால் முடியாது என்ற முடிவை நோக்கி செல்லும்போது, மனதிலிருந்து அந்த குரல், ‘ஏன்னா, நீ எனக்கு அவ்ளோ முக்கியம்!’ என்று ஒலித்தது.
அந்த வாசகமா, இல்லை வாசகத்தை கூறிய குரலா, ஏதோவொன்று அவள் எடுக்கவிருந்த முடிவை ஒத்திப்போட வைக்க, ஒரு பெருமூச்சுடன் தன்னால் முடிந்த அளவு வேகமாக கால்களை திருப்ப, சோர்வுற்றவளிடமிருந்து அத்தகைய செய்கையை அவன் எதிர்பார்க்கவில்லை போலும்! அதில் அவன் தடுமாற, அதையே தனக்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அவனை உதறித் தள்ளினாள் நவி.
அவன் கீழே விழும் சத்தம் கூட அவளிற்கு கேட்கவில்லை. கேட்க விரும்பவும் இல்லை. அவள் மனம் முழுவதும் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே நிறைந்திருந்தது.
அதுவே அவளின் வேகத்தை அதிகரிக்க, மின்னல் போல அந்த படிகளைக் கடந்து வெளியே வந்தாள் அவள்!
தொடரும்…