Loading

பிறை -18

 

அறையில் படுத்த வண்ணம் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி. நினைவெல்லாம் அன்று நடந்த சம்பவத்திற்கு சென்றது.

 

அன்று பன்னிரண்டு மணி வரையில் தூங்கிய சிவகாமி.. அவசரமாக எழுந்து சமைக்க வர.. அங்கு ஏற்கனவே அகிலாண்டம் சமையலில் ஈடுபட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

 

வேகமாக உள்ளே சென்றவர்.. ” ஐயோ அத்தை நீங்க ஏன் இதெல்லாம் பண்ணிட்டு. நான் சமைச்சு கொடுக்க மாட்டேனா ” என அவர் கையில் இருக்கும் கரண்டியை வாங்க முடியன்றவரை, பார்வையாலேயே தள்ளி நிறுத்தியவர்..

 

” நீ சமைப்பியா.. அப்படியா.. எனக்கு தெரியாதே.. அதான் ஒரு மணிக்கு சாப்பிட போற மாமியாருக்கு பன்னிரண்டு மணிக்கு எந்திருச்சு சமைக்க வந்தியோ.. ” அவரது வார்த்தையில் படு நக்கல் தெறித்தது.

 

” ஐயோ நான் சும்மா தான் மேலே போனேன்.. ஆனால் எப்படி தூங்குனேன்னு தெரியல.. நீங்க கொடுங்க நான் ஒரு மணிக்கு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணிடுவேன் ”

 

” இதுக்குதான் கொள்ளை வேலையை நீ பார்த்திருந்தா உனக்கு தூக்கம் வந்திருக்குமா.. அதுக்கு தேவையில்லாம ஆள் போட்டதுனால தானே நீ மாடிக்கு போய் சொகுசா படுத்து எந்திரிச்சு வர..  இப்படி பகல் நேரத்துல பொம்பளைங்க படுத்து எந்திரிச்சசா வீடு விளங்குமா ” என  தலையில் அடித்துக் கொண்டவரை கண்ணீர் மல்க பார்த்தவர்..

 

” தப்பு தான் அத்தை மன்னிச்சிடுங்க.. என்ன வேணும்னு சொல்லுங்க நான் சமைச்சு உங்களுக்கு கொண்டு வந்து தரேன் ”

 

” தேவையில்ல.. நீ போய் தூங்கி எந்திருக்கிற வேலை இருந்தா பாரு.. நான் வீட்டு வேலையை பார்த்துக்கிறேன் ” வெடுக்கென்று பேசி விட்டார் அகிலாண்டம்.

 

திருமணம் ஆன இத்தனை நாட்களில் ஒரு நாளும் இப்படி அவர் உறங்கியது இல்லை. கீழே வேலை இல்லாததால்.. இவரோடு ஒன்றாக அமர்ந்திருந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்று தான் அறைக்கு சென்றார்.

 

ஆனால் எப்படி கண் அசந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை. ஆனால் ஏதோ கொலை குத்தம் செய்தது போல அகிலாண்டம் பேசுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

” இன்னைக்கு ஒரு நாள் தானே இப்படி ஆகிடுச்சு.. அதான் நானே சமைக்கிறேன்னு சொல்லுறேன்ல .. கரண்டியை கொடுங்கத்தை ” என முதல் முதலாக அவரது குரலில் எதிர் குரல் எழுப்பி இருந்தார் சிவகாமி.

 

புதிதாக பதில் பேசிய மருமகளை விழி இடுங்க பார்த்து வைத்தார் அகிலாண்டம்.

 

” என்ன டி புதுசா குரல் எல்லாம் வருது.. வாய் நீண்டு போச்சோ. என் மக வீட்டுக்கு தான் போனேன். ஒரேடியா போகல.. இங்கதான் இருப்பேன். இன்னொரு முறை வாய் நீண்டுச்சு.. ” என விரல் நீட்டியவரை கண்ணீர் பொங்க பார்த்தவர்.. அமைதியாக அடுக்களையில் இருந்து வெளியேறி இருந்தார்.

 

ஒரு மணி நேரத்தில் அவர் செய்ய வேண்டிய அனைத்தையும் சமைத்து விட்டார் அகிலாண்டம்.

 

சரியாக ஒரு மணிக்கு அவர் உண்டு விட்டு மகனுக்காக காத்திருக்க.. அரை மணி நேரத்தில் சிவானந்தம் வந்து சேர்ந்தார்.

 

மனைவியையும், அன்னையையும் ஒரு பார்வை பார்த்தவர்.. கொள்ளைக்கு சென்று கை கால்கள் அலம்பி விட்டு வர.. அகிலாண்டம் மகனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தார்.

 

எப்போதும் வைக்கும் மனைவி மூலையில் அமர்ந்திருக்க.. அன்னை பரிமாறியதை புருவம் சுருங்க பார்த்தவர், அமைதியாக உணவை அள்ளி வாயில் வைத்தவருக்கு ஏதோ புரிந்தது.

 

” நீங்களா மா சமைச்சீங்க. எத்தனை நாளைக்கு அப்பறம் உங்க கையால சாப்பிடுறேன்.. ” என எப்போதும் உண்பதை விட சற்று கூடுதலாகவே உண்டார் சிவானந்தம்.

 

மகனுக்கு வேண்டிய சோற்றை போட்டு விட்டு.. காலியான பாத்திரங்களை எல்லாம் விலக்க போட்டு விட்டார்.

 

அதில் சந்தேகமாக மனைவியை பார்த்தவர்.. ” சிவகாமி சாப்பிட்டாளா மா ” என அன்னையிடம் கேட்க..

 

” எனக்கென்ன தெரியும்.. நான் யார்டையும் எந்த பேச்சும் வச்சிக்கிறது இல்ல.. உனக்கும் எனக்கும் தான் சோறு பொங்குனேன்.. ” என அடுக்கைக்குள் சென்று விட.. சிவானந்தம் தான் அதிர்ந்து தனது மனைவியை பார்த்தார்.

 

எந்த வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் சிவகாமி.

 

” ஏன் மா அவளும் இந்த வீட்ல தானே இருக்கா.. அவளுக்கு எப்படி சமைக்காம விட்டீங்க ”

 

” இந்த வீட்ல அவ மட்டுமா இருக்கா.. வாசல்ல ரெண்டு நாய் கிடக்கு.. கொள்ளையில மாடு இருக்கு… எல்லாத்துக்கும் நான் சமைக்க முடியுமா..  ”

 

” மா அவ என் பொண்டாட்டி மா ” இம்முறை அழுத்தமாக கேட்டிருந்தார் சிவானந்தம்.

 

” அதுக்கு நான் என்ன டா பண்ண முடியும்.. உன் பொண்டாட்டிக்கு எடுபிடி வேலை பார்க்க சொல்லுறியா என்னைய ”

 

” நான் எப்போ மா அப்படி சொன்னேன். இன்னைக்கு நீங்க சாப்பாடு பண்ணதுனால நான் கேட்டேன் ”

 

” அதான் மகாராணி.. சமைக்க கூட இல்லாம மாடில படுத்து தூங்குறாளே.. பின்ன நான் என்ன பண்ண.. இந்த வயசான காலத்துல சோறு பொங்கி திங்க வேண்டிய நிலைமை ” சலித்துக் கொண்டார்.

 

அவர் கூறிய செய்தியில் மனைவியை திரும்பி பார்க்க.. அப்போதும் எந்த வித எதிர்வினையும் இல்லாமல் அமர்ந்திருந்தார் சிவகாமி.

 

” சிவகாமி ”

 

அதுவரை அமைதியாக இருந்தவர், கணவர் அழைத்ததும் எழுந்து வந்தார்.

 

” என்னங்க ”

 

” அம்மா என்ன சொல்றாங்க..”

 

” அவங்க சொல்லுறது உண்மை தாங்க.. தப்பு என் மேல தான்..” என பொறுமையாக அவர் செய்ததை விளக்கினார்.

 

” அதான் அவ வந்து சமைக்கிறேன்னு சொல்லிருக்காளே மா.. அப்பறம் எதுக்கு நீங்க சமைச்சீங்க ”

 

” அதுசரி பொண்டாட்டி தாசா.. மக வீட்டுக்கு போயிட்டு வரதுக்குள்ள அப்படியே மொத்தமா மாறிட்ட போல..”

 

” மா அவ பண்ணது தப்பு தான்.. இல்லைன்னு சொல்லல.. அவளுக்கு தூக்கம் வந்திருக்கும் தூங்கிருக்கா.. ஆனால் நீங்க அவளுக்கு சமைக்காம இருந்தது தப்பில்லையா மா ”

 

” கண்ட சிரிக்கிக்கு நான் ஏன் சமைக்கனும்.. ஒரு வேளை பட்டினி கிடந்தா ஒன்னும் கெட்டுப் போவாது ” சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு அறைக்கு சென்றிருந்தார் அகிலாண்டம்.

 

அமைதியாக மனைவியை ஒரு பார்வை பார்த்தவர்.. வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

 

அதன் பின் இருவரிடமும் அவர் பேசவில்லை. இரவில் இருந்து சிவகாமியே சமைக்க தொடங்கினார்.

 

இரு நாட்களாக கணவன் தன்னிடம் பேசாமல் இருப்பதை நினைத்து மறுகிப் போனவர் இதையெல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார்… இன்று எப்படியாவது அவரிடம் பேசி விட வேண்டும் என வேலைகளை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மாடிக்கு விரைந்தார் சிவகாமி.

 

” என்னங்க ”  சிவகாமி அழைத்தற்கு ஒரு பார்வையை பதிலாக கொடுத்தார் சிவானந்தம்.

 

” அது என் மேல என்ன கோபமா ”

 

” ஏன் ”

 

” இல்ல நான் சமைக்கல தானே.. அதான் அத்தைக்கு கோபம்.. உங்க அம்மாக்கு சமைக்கலைன்னா உங்களுக்கும் கோபம் இருக்கும்ல ”

 

” நான் சொன்னேனா ”

 

” அப்பறம் ஏன் பேசாம இருந்தீங்க ”

 

தனது மனைவியை விடாது பார்த்தவர்.. ” ஒரு முடிவு எடுக்கனும் சிவகாமி ” என உறங்கச் சென்று விட.. அவரது பதிலில் இவருக்கு தான் உறக்கம் பறிபோனது.

 

இந்த அகிலாண்டத்தையும் ஆட்டி படைக்க ஒருவன் வரப்போவதை யாரும் அறியவில்லை.

 

****

 

” ஏண்டி இப்படி தூங்கி விழுகுற.. ” கீதா மெல்ல கேட்க..

 

அதில் தன்னிலை அடைந்தவள்.. ” நைட்டெல்லாம் நான் தூங்கவே இல்ல டி.. ”

 

” ஏன் அப்படி என்ன பண்ணீங்க மேடம் ”

” அதை விடு டி, கவனி ” என அனைவரும் செமினார் எடுப்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.

 

சென்னையில் இருந்து கிளம்புவதற்கு இன்னும் நான்கு நாட்களே ஆன நிலையில்.. அவர்களது பிரசன்டேஷன் குறித்து அங்கு கூறப்பட்டு கொண்டிருந்தது.

 

மாலை ஆகி விட.. அவளுக்கு தான் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது.

 

‘ சும்மா தான் சொல்லியிருப்பாரு அதை நம்பிட்டு போய் நம்ம நிக்க கூடாது.. இல்ல இல்ல அவர் மிரட்டினாரு.. அதுனால கண்டிப்பா அங்க இருப்பாரு. நான் போகலைனா வீட்டுக்கே வந்து தூக்குவேன்னு சொன்னாரே.. கண்டிப்பா செய்வாரோ.. போய் பார்த்துட்டே வந்துடலாம்.. அதான் ஊருக்கு போக போறோம். அதுவும் இல்லாம டீ ஷாப் பப்ளிக் பிளேஸ்.. அங்க வச்சு எதுவும் அந்த மாதிரி பண்ண மாட்டாரு.. அந்த மாதிரின்னா? மனம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை.. இல்ல இல்ல போய் பார்த்து பேசிட்டு பிரச்சனையை இதோட முடிச்சுட்டு வந்துடலாம் ‘ என ஒரு மனதோடு முடிவெடுத்து கிளம்பி சென்றாள் பிறை.

 

கீதா அவள் அண்ணனுடன் கிளம்பி இருக்க.. சுஷ்மிதா பிறையோடு கிளம்ப ஆரம்பிக்க.. ” நீ முன்னாடி போ சுஷ்மி.. நான் கொஞ்சம் பிரசென்டெஷன் ஒர்க் முடிச்சுட்டு வரேன் ”

 

” நைட்டு எல்லாம் அதான் பண்ணுற.. அப்படி என்ன தான் டி இருக்கு அதுல.. ”

” எனக்கு இருக்கு.. நீ போய் வீட்ல இரு.. இன்னும் நாலு நாள்ல ஊருக்கு கிளம்பனும்.. அதுக்குள்ள எல்லாம் முடிக்கனு இல்லையா ”

 

” சரி சீக்கிரம் வா.. இல்லைனா மாமா என்னைய சத்தம் போடுவாங்க.. ”

 

” வந்துருவியா இல்ல நான் வெயிட் பண்ணவா ” மீண்டும் போக மனமில்லாமல் கேட்டு வைத்தாள் சுஷ்மிதா.

 

” நான் என்ன சின்ன பிள்ளையா போ டி ” என அவளுக்கு தைரியம் கொடுத்தவளுக்கு தான் சுத்தமாக தைரியம் இல்லாது போனது.

 

சுஷ்மிதா கிளம்பி இருக்க.. அங்கேயே இருந்து பிரசன்டேஷன் ஓர்க்கை முடித்து விட்டு.. அவன் சொன்ன ஆறு மணியை போல அந்த டீ ஷாப்பின் வாசலில் வந்து நின்றாள் பிறை.

 

‘ வேண்டாம் பிறை கிளம்பிடு.. எதுக்கு தேவையில்லாம ‘ மனதில் தோன்றிய எண்ணத்தில் வேர்த்து போனவள்.. பயத்தில் கிளம்பும் நோக்கத்தில் ஒரு அடி எடுத்து வைக்க..

 

” உள்ள போகலாமா ” பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் பிறை.

 

சாட்சாத் அவனே தான்.. இன்று காக்கி உடையில் அத்தனை லட்சணமாக இருந்தான். ” என்ன ” என்பதை போல புருவம் உயர்த்தி அவன் கேட்டதில்.. அதுவரை அவனை ரசித்த விழிகள்.. சட்டென விழிகளை தாழ்த்திக் கொண்டது.

 

அவன் பின்னே உள்ளே சென்று எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். வந்ததில் இருந்து தரையை குத்தகைக்கு எடுத்ததை போல அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிறை.

 

” என்ன சாப்பிடுற ”

 

மெதுவாக விழி உயர்த்தி.. ” இல்ல…எதுவும்.. வேணாம் ” தயங்கினாள்.

 

” ஆனால் எனக்கு எல்லாம் வேணுமே ” என்றதும் பட்டென நிமிர்ந்து பார்த்தவளை தொடர்ந்து.. ” எனக்கு டீ வேணும்னு சொன்னேன் ” சாதாரணமாக தான் கூறினான்.

 

அவளுக்கு தான் ஏதோ போல் தோன்றியது. ” எதுக்கு வர சொன்னீங்க ” ஒரு வழியாக வந்த வேலையை கேட்டு விட்டாள்.

 

” ம்ம் பேசலாம்.. என்ன அவசரம்.. ” என்றவன்.. அங்கிருந்தவனிடம் ஒரு டீயும், ஒரு சாக்கோபார் ஐஸ்கிரீம்மையும் ஆர்டர் செய்தான்.

 

நேரம் அமைதியாக கழிய.. அவள் சற்றும் அவனை நிமிர்ந்து பார்க்க துணிவின்றி கீழே குனிந்து அமர்ந்திருக்க.. அவனது பார்வை மொத்தமும் அவள் மீது தான்.. தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அவளை துளைத்து கொண்டிருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.

 

அவன் பார்ப்பது தெரிந்தாலும் அவளால் என்ன செய்தட முடியும்.. எழுந்து சென்று விட முடியுமா.. அந்த அளவிற்கு அவளுக்கு தைரியம் உள்ளதா என்ன ?

 

அவர்கள் ஆர்டர் பண்ண டீயும், ஐஸ்கிரீமும் வந்து விட.. டீயை கையில் எடுத்துக் கொண்டவன்.. ஐஸ்கிரீமை அவள் பக்கம் தள்ளி வைத்தான்.

 

” ம்ம் சாப்பிடு ” என்றதும்.. அவனை தயக்கமாக பார்த்தவள்.. ” இல்ல அது.. எனக்கு வேணாம்..” என கெஞ்சும் குரலில் கேட்டாலும்.. அவன் பார்த்த பார்வையில் தானாக கவரை பிரித்து இருந்தாள் பிறைநிலா.

 

மெல்ல.. அந்த ஐஸ்கிரீமை சுவை பார்த்தவள்.. அதனின் சுவையில் மூழ்கியவளோ.. அதை முழுவதுமாக முடித்து விட்டு தான் நிமிர்ந்து பார்த்தாள்.

 

அப்போது தான் தன் எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்து, மனதிற்குள்ளேயே தன்னை நொந்து கொண்டவள்.. எழுந்து சென்று கைகளை கழுவிக் கொண்டு வர.. அவனும் டீயை முடித்திருந்தான்.

 

” என்ன முடிவு பண்ணிருக்க ” எடுத்ததும் அவன் கேட்டதில்.. திரு திருவென முழித்தவள்..

 

” எதைப் பத்தி ” என புரியாமல் கேட்க..

 

” நேத்து சொன்னேனே.. நம்ம கல்யாணத்தை பத்தி ” சாதாரணமாக கேட்டவளை அதிர்ந்து பார்த்தவள்..

 

” சா…. சார் ” என அதிர்ந்து எழ போக..

 

” சிட்… உன்கிட்ட வார்ன் பண்ண தான் வந்தேன்.. ஒரு முக்கியமான விஷயம்.. ” என ஆதி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே… பிறையை நோக்கி  வேகமாக வந்த துப்பாக்கி குண்டை நொடிப் பொழுதில் கண்டு கொண்டவன்.. சட்டென அவளை இழுத்து டேபிள் மீது அழுத்தி பிடிக்க.. அவளை நோக்கி வந்த தோட்டா அங்கிருந்த கண்ணாடிக் கதவில் பட்டு தெறித்தது.

 

அதில் அங்கிருந்த அனைவரும் அலறிக்கொண்டு ஓட்டம் எடுக்க.. பிறைக்கு மூச்சு விடவே சற்று சிரமமாக இருந்தது. நடந்தவைகள் எல்லாம் வெறும் கனவு தான் என தலையை நிமிர்ந்து பார்த்தவளுக்கு.. அங்கிருந்த அனைவரும் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தாலே உண்மை பொட்டில் அடிக்க.. அதே நேரம் ஆதியும் அங்கிருந்து துப்பாக்கி சூட்டை நடத்தியவனை பிடிக்க ஓட… பேரதிர்ச்சியில் அப்படியே  மயங்கிச் சரிந்தாள்.

 

சனா💗

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்