
அத்தியாயம் 18
உறவினர்களைக் குடும்பத்தார் கவனிக்க, மௌனியை உணவு உண்ண அழைத்து வந்திருந்தான் சரண். மறுபக்கம் சேகரின் குடும்பத்தார் அமர்ந்து இருந்தனர்.
“அண்ணி தான் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. நீங்க வரலேனா, அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுறது? அதுனால ஆச்சி, சமத்துப் பிள்ளையா என்கூட வருவீங்களாம்!” என ரெங்கநாயகியின் கைப்பற்றி அழைத்து வந்தாள் ரோகிணி.
“என்ன பாப்பா?” என்று அருகே செல்ல, “தேங்க்ஸ் ரோகி!” என நன்றி மொழிந்தாள் வருங்கால நாத்தனாரிடம்.
“இதுல, என்ன அண்ணி இருக்கு? நீங்க சாப்பிடுங்க. நான் போயி அம்மாக்கு ஹெல்ப் பண்ணுறேன்!” என்றுவிட்டு அவள் செல்ல, “எதுக்குப் பாப்பா, என்னைக் கூட்டிட்டு வர சொன்ன?” என வினவினார் மூத்தவர்.
“சாப்பிட வேணாமா ஆச்சி?”
“விசேஷத்துக்கு வந்தவங்க எல்லாம் இருக்கும் போது, அவங்களை விட்டுட்டு வந்து நாம எப்படிப் பாப்பா சாப்பிடுறது?”
“மாத்திரை போடணும், மறந்துட்டீங்களா? நான் சென்னைக்கு வேற கிளம்புறேன். அதுவரைக்கும் என்கூட இருங்களேன் ஆச்சி?”
பெயர்த்தியைப் பாவமாய்ப் பார்த்தவர், “ஏன் இத்தனை சீக்கிரத்துல கிளம்புற. இன்னைக்குத்தான நிச்சயம் ஆகி இருக்கு. ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம்ல?”
“கம்பெனியை என்ன உங்க மகனா நடத்துறாரு? இஷ்டத்துக்கு லீவ் போட?”
“என்பிள்ள உயிரோட இருந்திருந்தா, நீ வேலை பார்க்கிற மாதிரி நாலு கம்பெனி நடத்துற அளவுக்குப் பெரிய ஆளா வந்திருப்பான்.”
“ஆமா.. ஆமா..” என அவள் சிரிக்க, “பேச்சை மாத்தாத பாப்பா. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு.”
“என்ன பதில்?”
“லீவ் போடலாம்ல?”
“நினைச்ச நேரம் எல்லாம் அப்படி போட முடியாது ஆச்சி. அப்புறம் நமக்குத் தேவையான டைம்ல லீவ் கிடைக்கிறது கஷ்டப் ஆகிடும். இனி, கல்யாணம் வேற இருக்கு இல்ல?”
“அடடா, ஆமா இல்ல?” என அவர் சிறுபிள்ளை போல் உரைத்திட, சிரித்தாள் அவள்.
சரண், விமலும் பரிமாறினர், குடும்பத்தாருக்கு.
தனது இலையில் உணவை வைத்த ஆடவனை நிமிர்ந்து நோக்கிய மௌனிகா, “நீங்க சாப்பிடலயா?”
“அப்புறம் சாப்டுக்கிறேன்.”
“ஏன், சேர்ந்தே சாப்பிடலாம்ல?”
“உனக்கு டைம் ஆகுது பாரு. நீ முதல்ல சாப்பிடு, உன்னை டிரெயின் ஏத்தி விட்டுட்டு வந்து நான் பார்த்துக்கிறேன்.”
“திஸ் இஸ் நாட் ஃபேர்.” என்றவள், “விமல்.” எனக் குரல் கொடுத்தாள்.
“நான் எல்லாம் உங்களை மாதிரி இல்ல. வந்தவங்களைச் சாப்பிட்டீங்களா இல்லையானு ஒரு வார்த்தைக் கேட்காம, யாருக்கும் தூக்கிக் கொடுக்க மாட்டேன். எந்த ஐயிட்டமும் மிஸ் ஆகிடக் கூடாதுனு உங்களுக்காக எல்லாத்தையும் தனியா எடுத்து வச்சிருந்தேன், தெரியுமா?” என்று லாவண்யாவில் துவங்கி அவளின் பெற்றோர், தங்கை என நால்வருக்கும் இலையில் உணவு வகைகளை அடுக்கி, கடுப்பேற்றிக் கொண்டிருந்தான் அவன்.
மௌனிகாவின் அழைப்பில் கவனம் திரும்பிட, “இதோ வர்றேன் அண்ணி!” என்று அவளின் அருகே சென்று நின்றான்.
“உன்னோட அண்ணாவுக்கு ஒரு சேரும் இலையும் எடுத்துட்டு வா!”
சின்ன சிரிப்புடன், “ஓகே அண்ணி!” என விமல் தலை அசைத்துச் செல்ல, எதிரே இருந்தவனிற்குக் கண்களால் தன்னருகே இருந்த காலி இடத்தைக் காட்டினாள்.
“எதுக்கு இது? அப்புறம் சாப்பிட்டுக்கிறேனே?”
“உங்களை இப்படியே விட்டுட்டு, நான் மட்டும் என் வேலையைப் பார்த்துட்டுக் கிளம்பவா?”
மெலிதாய்ப் புன்னகைத்த சரண், “டிரெயினுக்கு லேட் ஆகிட்டா என்ன செய்யிவ?”
“நோ, பிராப்ளம். நெக்ஸ்ட் டிரெயினுக்கு ஓப்பன் டிக்கட் எடுத்துப் போயிக்கிறேன். இல்லேனா, கார் எடுத்துக்கலாம்.”
“இந்த மாதிரி ரெண்டு ஆப்ஷன் இருக்கும் போது, எதுக்கு கட் அண்ட் ரைட்டா அப்படிப் பேசுன மதியம்?”
“டிரெயின்ல ஓப்பன் டிக்கெட்ல போறதும், கார்ல தனியா டிராவல் பண்ணுறதும் சேஃபா இருக்கும்னு கியாரண்டி கிடையாது. இதுவே ரிசர்வ் டிக்கெட்னா, பலதடவை அதேமாதிரி வந்து போய் பழக்கம் இருக்கிறதால எனக்கு சேஃப்னு ஒரு ஃபீல். அதான், அப்படிச் சொன்னேன்.”
“இப்ப என்ன, எனக்காக ரிஸ்க் எடுக்கப் போறியா?”
அவள் புன்னகையைப் பதிலாய்த் தர, தமையனிற்கு உணவைப் பரிமாறினான் விமல்.
இவர்களின் எதிரே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த லாவண்யாவிற்கு, ‘இவனுக்குச் சிரிக்கக் கூட வருமா? முன்னாடி எனக்குப் பேசி முடிச்சதுல இருந்து ஒருநாளும் இப்படிப் பேசுனது இல்ல. அவக்கிட்ட மட்டும் இந்தளவுக்குப் பேசிப் பழகுறான்?’ என மேலும் மேலும் எரிச்சல் கூடியது.
உணவைத் தொடர இயலாது அவள் பாதியில் எழுந்து செல்ல, சேகரனும் அர்ச்சனாவும் அது போல் செல்ல இயலாது நாகரீகம் கருதி மகளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையில் மீண்டும் கவனத்தைத் திருப்பினர்.
பிரீத்திக்கு நடப்பவை எதுவும் கருத்தில் பதியவே இல்லை. பதிமூன்று வயது சிறுமிக்கு, விழாவின் உணவு வகைகளும் அதன் ருசியும் பிடித்தமானதாய் இருக்க, உண்பதைத் தலையாய பணியாய் செய்து கொண்டிருந்தாள்.
“விமல் ஆச்சியை வீட்டுல விட்டுட்டு வந்து, ஆளுங்களை வச்சு மண்டபத்தைக் காலி பண்ணீடு. பேமண்டைப் பத்தி நான் வந்து பேசிக்கிறேன். அருண் கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ.” எனப் பொறுப்பினை தம்பி மற்றும் நண்பனிடம் ஒப்படைத்த சரண், மௌனிகாவுடன் முன்னரே கிளம்பி விட்டான்.
அவளை முதலில் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.
முக ஒப்பனையைக் கலைத்து, உடை மாற்றி வந்தவளின் உடைமைகளுக்காக கை நீட்டிட, இருவருக்குமே முதல் சந்திப்பு நினைவு வந்தது.
மூன்று தினங்களிற்கு முன்னர் கோவில் பட்டி இரயில் நிலையத்தில் வந்து இறங்கியவள் முதலில் எதிர்கொண்டது, அன்று அரங்கநாதனாய் பார்வையில் விழுந்த சரணைத்தான்.
ஆனால் இன்று இருவரும் நிச்சயத்த ஜோடிகள்.
காலம் தான் எத்தனை இரகசியங்களைத் தன்னுள் மறைத்து வைத்திருந்து, ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொன்றாய் வெளியிட்டு எதிர்பாராத திருப்பங்களைப் பரிசளிக்கிறது என வியப்பே மேலிட்டது.
அதை இருவருமே உணர்ந்திட, ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
“போலாமா மோனி?” என்றவனின் கரத்தில் தனது பெட்டியைக் கொடுத்தவள் முன் செல்ல, பின் தொடர்ந்தான் ஆடவன்.
சென்ற முறை இருவருக்கும் இடையே உறவு உறுதி செய்யப்படாமல் இருந்ததால், தனது நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றான் சரண். தற்போது அவள்தான் வருங்கால துணைவி என்று ஊர் மற்றும் உறவுகளின் முன்பு அறிவிப்பு செய்துவிட்டதால், மண்டபத்தில் இருந்து கிளம்பும் பொழுதே இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தனர்.
இருபக்கமாய் கால்களை போட்டு அமர்ந்தவளிடம், “பிடிச்சுக்கோ மோனி.” என்றிட அவனது தோளில் கை வைத்தாள்.
“ஓகேவா?”
“ஓகே சரண், போகலாம்!” என உரைக்க, அடுத்த நாற்பது நிமிடங்களில் இரயில் நிலையத்தை வந்து அடைந்தனர்.
தொடர் வண்டி வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது.
கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி இருந்தவளைக் கவனித்த சரண், “என்ன கரெக்ட் டைமுக்குக் கூட்டிட்டு வந்துட்டேனா?”
அவன்புறம் திரும்பியவள் புன்னகைத்துத் தலை அசைக்க, “அடுத்து, எப்ப ஊருக்கு?”
“இப்ப தான இங்க இருந்து கிளம்புறேன், அதுக்குள்ள என்ன?”
“மேரேஜைப் பத்தி டிஸ்கஸ் பண்ணணும் இல்ல?”
“அதான் ஆன்ட்டி, ஆச்சி எல்லாம் இருக்காங்களே?”
“அப்ப நீ?*
“எனக்கு இதைப்பத்தி எல்லாம் எதுவும் தெரியாது சரண். பெரியவங்கக்கிட்டப் பேசி நீங்களே அரேஞ்ச் பண்ணுங்க. டேட்டை மட்டும் சொல்லுங்க, நான் வந்துடுறேன்.”
“ஹேய்.. நீதான் கல்யாணப் பொண்ணு. ஏதோ கெஸ்ட் மாதிரி பேசுற?”
மெலிதாய்ச் சிரித்தவள், “அதை எல்லாம் பார்த்துக்க தான் நீங்க இருக்கீங்களே?”
“அவ்வளவு நம்பிக்கையா என்மேல?”
“ஆச்சியோட கணிப்பு தப்பாப் போக வாய்ப்பு இல்ல. அப்புறம், இன்னைக்குத்தான் நான் எங்கேஜ்மெண்ட் அரேஞ்ச்மெண்ட்ஸை நேர்ல பார்த்தேனே?”
“ம்ம்.. நல்லா சமாளிக்கிற?”
“சரண், ஐ மீன் இட்.”
அவன் புன்னகைக்க, “எவ்வளவு செலவாச்சு?”
புரியாது பார்த்தவன், “ஏன் கேட்கிற?”
“எல்லாத்தையும் உங்களை செய்ய விட்டுட்டு, நான் சும்மா வேடிக்கைப் பார்க்கிறது சரியில்ல.”
“அதுக்கு?”
“லைஃப் பார்ட்னர்னா, எல்லாத்தையுமே ஷேர் பண்ணிக்கணும் தான? என்னோட மேரேஜை, என்னாலயே நடத்திக்க முடியும். சோ..?”
“நான் சொல்ல மாட்டேன்!”
அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், “கையை நீட்டுங்க.”
“ஏன்?”
“நீட்டுங்க சொல்லுறேன்!” என்றவள் ஆடவனின் கரத்தைப் பற்றி முன்னும் பின்னுமாய் திருப்பி விரலை ஆராய்ந்தார்.
“ரிங், ஃபோர் கிராம்ஸ் இருக்குமா?”
“மோனி!” என சரண் கண்டிக்கும் விதமாய் உரைத்திட, தனது கையை அவனது முகத்திற்கு நேராய் தூக்கிக் காட்டினாள்.
“எனக்கானதை நீங்க வாங்கித் தரும் போது, உங்களுக்கானதை நான் செய்யிறது தான் சரி. ஆனா, டைம் இல்லாததால அதுக்கான சான்ஸ் கிடைக்கல. ஜீபே பண்ணி விடுறேன். பணத்தை வச்சுக்கோங்க. நெக்ஸ்ட் டைம், நாம சேர்ந்து போயி பர்ச்சேஸ் பண்ணலாம்!”
“எல்லாத்துக்கும் இப்படிக் கணக்குப் பார்க்கணுமா?”
“என்னோட பேரண்ட்ஸ் இருந்தா செஞ்சிருப்பாங்க தான? இப்படி விட மாட்டாங்க இல்லையா? அவங்க கூடதான் இல்லையே தவிர, என்னை இயலாமையில விட்டுட்டுப் போகல!”
அவளின் வளைந்து கொடுக்காத தன்மையும் சுயகௌரவமும் ஆடவனை வெகுவாய் ஈர்க்க, “ஓகே.. உன் இஷ்டம். இப்ப இருந்து எல்லாத்தையுமே ஷேர் பண்ணிக்கலாம்.”
“தட்ஸ் குட்!” என அவள் புன்னகைக்க, பாவையின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.
“என்ன?”
“ஏன், எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு. கையைப் பிடிக்க அனுமதி உண்டு தான? இல்ல கிடையாதா?”
சின்னதாய்ச் சிரித்து, “உண்டு உண்டு..” எனும் பொழுதே, அவள் செல்ல வேண்டிய இரயில் நடைமேடையில் வந்து நின்றது.
இருக்கை எண்ணை சரிபார்த்து மௌனி சென்று அமர, உடைமைகளைக் கொண்டு வந்து தந்தான் ஆடவன்.
“தேங்க்ஸ்..” எனப் புன்னகைத்தவளைக் கண்டு மனம் கனிய, “பார்த்து, கவனம். சென்னைக்குப் போனதும் கால் பண்ணு.”
“ம்ம்..” என்றவளிற்கு முதன்முதலாய் கண்கள் கசிந்தது. அதை ஆடவன் அறிந்து விடாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.
கோவில்பட்டியில் இருந்து அவள் கிளம்பும் பொழுது, ஒருவர் உடன் வந்து இப்படி வழி அனுப்புவது இதுவே முதல்முறை.
மௌனி வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்லும் தருணங்களில் எல்லாம், “நான் வந்து உன்னை இரயில் ஏத்தி விடுறேன் பாப்பா!” என ரெங்கநாயகி உரைக்கத்தான் செய்வார்.
பாவை தான், வயதானவரை அலைய வைக்க விருப்பம் இல்லாது உறுதியாய் மறுத்து விடுவாள்.
இரயிலில் உடன் பயணிப்பவர்களையும் அவர்களை வழிறனுப்ப வரும் உறவுகளையும் காணும் தருணங்களிலீ, அந்த விருப்பமும் ஏக்கமும் அவளுள்ளும் இருக்கத்தான் செய்யும்.
எனினும், அதுபோல் செய்வதற்குத்தான் உரிமையுடன் உறவு என்று சொல்லிக் கொள்ள எவரும் இல்லையே?
‘இல்லாததை எதிர்பார்ப்பது மதியீனம்!’ என அந்த எண்ணத்தை அப்படியே தனது மனதில் இருந்து அழித்து விட்டிருந்தாள் மௌனி.
ஆனால் அதையே இன்று சரண் செய்திடும் பொழுது, என்னவென்று சொல்ல இயலாத லேசான வலியும், ஒருவித மகிழ்ச்சியும் அவளுள் பரவியது.
பாவையின் நொடிப் பொழுது முக மாற்றத்தை ஆடவனின் சிந்தை சட்டென்று கவனித்து விட.. இரயில் பெட்டியின் சுற்றிலும் ஆட்கள் இருக்கும் நிலையில் வெளிப்படையாய் கேட்க இயலாது, “
எதுவும் வேணுமா மோனி?” என்றான்.
அவள் மறுத்துத் தலை அசைக்க, இரயில் கிளம்புவதற்காக அறிவிப்பு ஒலி கேட்டது.
வேறே வழியின்றி, பார்வையால் விடைபெற்று கீழே இறங்கினான் ஆடவன்.
அவள் அமர்ந்திருந்த இருக்கையின் ஜன்னல் பகுதிக்கு அருகே வந்தவன், “ஓகே தான நீ?”
மெலிதாய் புன்னகைத்தவள், “ஓகே தான்.”
“
டயர்டா இருக்கா?”
“அதெல்லாம்
இல்ல.” என்றிட, இரயில் கிளம்ப தயாரானது.
“
பார்த்துப் போ, என்ன?”
“ம்ம்..”
அவன்
கை அசைக்க, “சரண்.” என்றாள் பாவை.
“என்ன?”
“உங்க ஃபோட்டோ வேணும்.”
“செண்ட் பண்ணி விடுறேன்.”
“இல்ல, இப்ப வேணும்!” என உரைத்தவள், தனது கைப்பேசியை எடுத்து அவனின் நிழல் உருவைப் பதிவு செய்து கொண்டாள்.
“மோனி..” என்றவனின் குரல் தேய, நகர்ந்து சென்ற தொடர்வண்டியில் இருந்து ஆடவனை நோக்கிப் புன்னகையுடன் கை அசைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
