
அத்தியாயம் 18
உதயகீதன் வீட்டிற்குள் நுழையும் போதே கேசவமூர்த்தியும் சுதாகரும் விழித்திருந்தனர்.
கூடத்தில் அமர்ந்து ஏதோ பேசியபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்த கேசவமூர்த்தி உதயகீதனை கண்டதும், “உதய், இந்த நேரத்துல எங்க வெளிய போயிட்டு வர? நைட் லேட்டா வந்ததுல ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பன்னுல நினைச்சேன்? நந்து எங்க?” என்று வினவ, முதல் கேள்வியை கவனமாக தவிர்த்தவன், “ஜீவி ரூம்ல இருக்காப்பா. நான் போய் அவளை பார்க்குறேன்.” என்று அவசரமாக அறைக்கு சென்று விட்டான்.
மனிதருக்கு, அவன் மனைவியை அழைத்த விதமே நிம்மதியாகவும் மனநிறைவாகவும் இருக்க, அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
அறைக்குள் நுழைந்தவன், அங்கு ஜீவநந்தினி முட்டிக்காலில் முகத்தை புதைத்து தலை குனிந்து அமர்ந்திருப்பதை கண்டு வேகமாக அவளிடம் சென்றவன், “ஜீவி என்னம்மா? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க?” என்று பதற்றமாக வினவினான்.
அவன் குரல் கேட்டதும், “தயா…” என்று நிமர்ந்தவளின் முகம் கலங்கியிருந்தது. எப்போதும் ஒளிரும் கண்களில் ஜீவனில்லாமல் சிவந்திருந்தன. ஏற்கனவே அவள் அழுதிருப்பதை சிவந்த நாசி எடுத்துரைத்தது.
எப்போதும் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் வளைய வருபவளை அந்த நிலைமையில் காண முடியவில்லை உதயகீதனால்.
நின்ற வாக்கிலேயே அவளை வயிற்றோடு அணைத்துக் கொண்டவன், “எதுக்கு அழுகுற ஜீவி? சொன்னா தான தெரியும்? ஏற்கனவே, காய்ச்சல் இருக்கு உனக்கு.” என்று அக்கறையாக கேட்க, அவனை மேலும் இறுக்கி அணைத்தாளே தவிர எதுவும் பேசவில்லை.
அவள் ஆரம்ப கட்ட அதிர்ச்சியில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனும் சில நிமிடங்களுக்கு எதுவும் பேசவில்லை.
“ஜீவி, எவ்ளோ நேரம் இப்படியே இருக்க?” என்று அவன் வினவ, “எவ்ளோ நேரம் நான் மயக்கத்துல இருந்தேன்?” என்று விசும்பிக் கொண்டே அவள் கேட்டாள்.
“ரிலாக்ஸ் ஜீவிம்மா… உனக்கு எதுவும் ஆகல. நான் இருக்குறப்போ உனக்கு என்ன ஆகிடும்?” என்று நடந்ததை கூறாமல் தவிர்த்தான். ஏற்கனவே வேதனையில் இருப்பவளிடம் உண்மையை சொல்லி இன்னும் வேதனைப்படுத்துவானேன் என்று தான் கூறவில்லை.
“எதுக்கு மறைக்குறீங்க தயா? அவன்… அவன் என்னை தனியா தூக்கிட்டு போய்… என்மேல… ப்ச், ஒருமாதிரி அருவருப்பா இருக்கு தயா.” என்று கூறியவள், அவனை தள்ளிவிட்டு குளியலறை நோக்கி ஓட, அவனும் என்னவோ என்று அவளை வேகமாக பின்தொடர்ந்தான்.
நேராக சென்றவள் தூவாலைக்குழாய்க்கு (ஷவர்) அடியில் நின்று கொண்டாள். அவள் கண்களிலிருந்து வழியும் கண்ணீர், நீருடன் கலந்து வெளியேறியது.
அவளின் செயல்களை எல்லாம் வருத்தத்துடன் பார்த்த உதயகீதன், “ஜீவி, உனக்கு காய்ச்சல் இருக்குமா. இந்த நேரத்துல இப்படி ஷவருக்கு கீழ நிக்கலாமா?” என்று மெதுவாக பேசியபடி அவளை அங்கிருந்து அழைத்து வர முயன்றான்.
“இல்ல தயா, எனக்கு… எனக்கு குளிக்கணும்… அவன்… என்னை தொட்டான்… அது அருவருப்பா இருக்கு தயா.” என்று தாங்கி முடியாமல் கதறியவளை தன்மீது போட்டுக் கொண்டான்.
பெண்ணவள் அழுவதை பொறுக்க முடியாதவன், மீண்டும் அவனை அடித்து வெளுக்கும் ஆத்திரம் உண்டானது. அதே பெண்ணுக்காக, அதை அடக்கியவன், “இப்போ குளிக்கணும்… அதான? சரி குளிக்கலாம். ஆனா, உன்னை தனியா விட்டுட்டு போக முடியாது.” என்றவன், அவளின் கன்னம் பற்றி தன்னை நோக்க செய்து, “நான்… நான் இங்க இருக்குறதுல உனக்கு அப்ஜெக்ஷன் இருக்கா ஜீவி?” என்று வினவினான்.
அவன் என்ன கேட்டான் என்பது அவள் மூளையை சென்றடைந்ததா என்று கூட தெரியவில்லை. அவள் மலங்க மலங்க விழிக்க, ஒரு பெருமூச்சுடன், அவளின் கண்களை பார்த்தபடியே, ஈரமான அவளின் உடைகளை கழற்றினான்.
அவன் பார்வை அவள் விழிகளை விட்டு சிறிதும் அகலவில்லை. அவளும் அப்படியே தான் இருந்தாள்.
இருவரையும் தூவாலைக்குழாயிலிருந்து பொழிந்த நீர் நனைத்தது. அவர்களின் மனதில் சிறிதும் காம உணர்வு இல்லை. ஏன், அப்போது காதல் கூட இல்லை. அன்பும் ஆறுதலும் மட்டுமே அங்கு வியாபித்திருந்தது.
சிறிது நேரம் அப்படியே நிற்க விட்டவன், “ஜீவி போதும் மா. சளி பிடிச்சுக்க போகுது.” என்று கூற, அதற்கு மறுமொழியாக கண்ணசைவை மட்டும் கொடுத்தாள்.
மீண்டும் அவளின் கண்களை மட்டும் பார்த்தபடி அவளுடலை துவாலையால் துடைத்தவன், இலகுவான ஆடையையும் அவனே மாட்டி விட்டான். எதற்கும் அவளிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை. தீவிர சிந்தனையிலேயே இருந்தாள்.
அவளை அவதானித்தபடியே அவனும் ஈர உடைகளை மாற்றியவன், அவளிடம் வந்து, “ஜீவிம்மா, சாப்பிட போலாமா? நேத்தே சரியா சாப்பிட்டுருக்க மாட்ட…” என்று கூறும்போதே, “நேத்து… அவன்… நீங்க அங்க போக வேண்டாம்னு சொன்னீங்க… நான் தான் கேட்கலை. அதுக்கான தண்டனையா தயா? அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? என்னால அதை மறக்க முடியலையே! என்னை அவன் தொடும்போது, எதுவும் செய்ய முடியாம இருந்தது எவ்ளோ கொடுமையா இருந்துச்சு தெரியுமா?” என்று இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பாளோ, அவள் இதழ்களை அவன் இதழ்கள் கொண்டு மூடினான் அவளின் கணவன்.
அதிலும் கூட காமம் இல்லை. மனைவியின் குற்றவுணர்வையும் புலம்பல்களையும் நிறுத்தி நிகழ்காலத்திற்கு அழைத்து வர, வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.
அவன் விலகியதற்கு பிறகும் கூட அதிர்ச்சியில் சிலையாகி விட்டவளின் கன்னத்தை பற்றிக் கொண்டவன், “அதை மறந்து தான் ஆகணும் ஜீவி. நான் தான் இருக்கேன்ல. என் ஜீவி இப்படி கிடையாதே. ஷீ இஸ் பிரேவ். எந்தவொரு சிசுவேஷனையும் ஒரு ஸ்மைலோட கடந்து வருவாளே. ஹ்ம்ம், இந்த விஷயத்தை ஈஸியா கடந்து வர முடியாது, கஷ்டம் தான். ஆனா, அதுக்கு தான், உனக்கு துணையா நான் இருக்கேன். இனி, எப்பவும் இருப்பேன்.” என்றவன் அவளின் தலையை கோதி கொடுத்தான்.
அவன் கொடுத்த நம்பிக்கை சிறிதளவு வேலை செய்ய, “தயா, அவன்…” என்று இழுக்க, அதை புரிந்து கொண்டவனாக, “அவனை போலீஸ் பிடிச்சுட்டாங்க ஜீவி. ஆனா, கம்பலைண்ட் கொடுக்குறது உன் விருப்பம் தான்.” என்று சொல்லி முடிக்கும் முன், “கொடுக்கணும் தயா. நாம இப்போ கொடுக்கலைன்னா, இன்னும் எத்தனை பேரு பாதிக்கப்படுவாங்களோ!” என்றாள் வேகமாக.
அத்தனை நேரமிருந்த தயக்கம், தவிப்பு எல்லாம் இப்போது இல்லை. கணவனின் துணையிருக்க, தன்னை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தியவனை தண்டிக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருந்தாள்.
அவளை ஒரு சிரிப்புடன் பார்த்த உதயகீதன், “எஸ், இது தான் என் ஜீவி. கண்டிப்பா கம்ப்லைண்ட் கொடுப்போம். அவனோட சேர்த்து அதுக்கு பிளான் போட்டு கொடுத்தவளையும் சேர்த்து கம்ப்லைண்ட் கொடுப்போம்.” என்று பல்லைக் கடித்தான்.
அதுவரை அந்த கடத்தல் சாதாரணமாக நடந்தது என்று நினைத்துக் கொண்டிருந்த ஜீவநந்தினி புருவம் சுருக்கி, “பிளானா?” என்று வினவ, நடந்தவற்றை சுருக்கமாக கூறினான் அவன்.
அதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானவளோ, “இப்படியும் இருக்காங்கல? அவங்களும் ஒரு பொண்ணு தான? ப்ச்…” என்றவள், எதையோ யோசித்து, “அவங்க மேல கம்ப்லைண்ட் பண்ண வேண்டாம். அவங்க ஊருக்கு போறதா தான சொன்னாங்க. இனிமே, நம்ம பக்கம் வராத மாதிரி, அவங்களை போக சொல்லுங்க. அதுவே போதும்.” என்று தீர்மானமாக கூறினாள்.
உதயகீதனுக்கும் அதுவே சரியென்று தோன்ற, “ஓகே ஜீவி, இப்போ வரியா சாப்பிட போகலாம். நேத்தே நீ சரியா சாப்பிட்டுருக்க மாட்ட. நான் சுத்தமாவே சாப்பிடல.” என்று உதயகீதன் கூற, அது சற்று வேலை செய்ய, இருவரும் அறையை விட்டு வெளியேற எத்தனித்தனர்.
அப்போது அவனை தடுத்து நிறுத்தியவள், “இது அப்பாக்கும் மாமாக்கும் தெரிய வேண்டாம் தயா. ரொம்ப வருத்தப்படுவாங்க.” என்று கூற, அவனும் அதற்கு சம்மதித்தான்.
வெளியே வந்த மருமகளிடம், “என்ன நந்தும்மா, நேத்து நல்லா என்ஜாய் பண்ணீங்களா?” என்று கேசவமூர்த்தி வினவ, அதைக் கேட்டதும் முதலில் உடலில் நடுக்கம் ஏற்பட்டாலும், அதை உதயகீதனின் துணை கொண்டு மறைத்தவள், முயன்று வரவழைத்த உற்சாக குரலில், “ஆமா மாமா. ஆனா, உங்க மகன் தான் ஒரு காம்ப்ளிமெண்ட் கூட அவரா கொடுக்கல. எல்லாம் நானா கேட்டு வாங்க வேண்டியதா இருந்துச்சு. இப்படி முசுட்டு முசோவாவே அவரை வளர்த்துருக்கீங்களே மாமா.” என்று எப்போதும் போலவே பேச முயன்று, அதில் வெற்றியும் கண்டாள்.
அவள் கூறுவதற்கு மகனின் எதிர்வினையை பார்த்த கேசவமூர்த்திக்கோ, அவன் சிரித்த முகமாக இருப்பது கண்டு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
உதயகீதனோ, “இந்த முசுட்டு முசோவை தான, வேலை பார்க்காம சைட்டடிச்சுட்டு இருந்துருக்க?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற, அவன் இடையில் லேசாக இடித்த ஜீவநந்தினி, “எங்க நின்னு எதை பேசிட்டு இருக்கீங்க? என் இமேஜ் என்னாகுறது?” என்றாள் அவளும்.
அவள் மீண்டும் பழைய ஜீவியாக வாயடிப்பதை கண்டதும் தான் உதயகீதனுக்கு நிம்மதியானது.
அவர்களின் ரகசிய விளையாட்டுகளை மற்ற இருவரும் ரசித்தாலும், பெண்ணின் தந்தையாக சுதாகர், “நந்தும்மா, என்ன இது?” என்று அதட்ட ஆரம்பிக்க, “விடுங்க மாமா”, “டேய் சும்மா இருடா.” என்று மற்ற இருவரும் போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்ற வந்தனர்.
*****
ராகவர்ஷினியின் பெரியப்பா இல்லத்தில்…
காயத்திற்கான சிகிச்சை முடிந்த பின்னர் ரஞ்சித்தையும் ராகவர்ஷினியையும் காவல் நிலையத்திற்கு வர சொல்லியிருந்தனர் காவலர்கள்.
அதை அறிந்த ராகவர்ஷினியின் பெரியம்மா சுமித்ரா, “நீ கெடுறது மட்டுமில்லாம, என் பிள்ளையையும் சேர்த்து கெடுக்குறியா? இதுக்கு தான் ஜெர்மனில இருந்து வந்தியா? இப்போ என் பையன் ஜெயிலுக்கு போனா… ஹையோ!” என்று புலம்பினார்.
எப்போதும் அவளுக்கு துணை நிற்கும் பெரியப்பா சசிதரன் கூட, இப்போது அமைதியாக அவளை குற்றம் சுமத்தும் பார்வையுடன் நின்றிருந்தார்.
“இதுக்கு தான், அவளை ரொம்ப தாங்காதீங்கன்னு சொன்னேன், கேட்டீங்களா? தம்பி பொண்ணு தம்பி பொண்ணுன்னு சொல்லி சொல்லி, இப்போ நான் பத்து வருஷமா தவமிருந்து பெத்த மகனை ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்போறா! இப்போ சந்தோஷமா?” என்று புலம்பிய சுமித்ராவை சசிதரன் தான் சமாதானப்படுத்தினார்.
ராகவர்ஷினியோ குனிந்த தலை நிமிராமல் தான் அமர்ந்திருந்தாள். அவள் மனதில் இருந்தது பயமும் குற்றவுணர்வும் மட்டுமே.
தகவல் அறிந்த கிரிதரன் – கீதாஞ்சலி ஜோடியினர் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ராகவர்ஷினி எத்தனை முறை அழைத்தும் பதிலளித்திருக்கவில்லை. அதுவே, அவள் பயத்திற்கான காரணம்!
செயலை மட்டும் தான் திட்டமிட்டிருந்தாளே தவிர, அதற்கான விளைவை அவள் சிந்திக்காமல் விட்டதே, அவளின் இந்த நிலைக்கான காரணம்!
*****
காலை உணவிற்கு பின்னர், உதயகீதனும் ஜீவநந்தினியும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
உதயகீதனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்த பிரகாஷ், ஜீவநந்தினியிடம், “இப்போ ஓகேவாமா?” என்று விசாரிக்க, “ஆமா சார். உங்க ஹெல்புக்கு தேங்க்ஸ்.” என்றாள் அவள்.
“அதை உன் ஹஸ்பண்டுக்கு தான் சொல்லணும்மா. உன்னை காணாம ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்கல. பறந்து பறந்துல உன்னை கண்டுபிடிச்சான்.” என்று விளையாட்டாக சொன்ன பிரகாஷ், “ஆனா, நீ கிடைக்குற வரை அவன் தவிச்ச தவிப்பு, இதுவரை நான் பார்த்தது இல்ல. இதோ, இப்போ தான் சார் நார்மல் மோடுக்கு ரிட்டர்னாகி இருக்காரு.” என்று தன்னை முறைத்துக் கொண்டு நின்ற உதயகீதனை பார்த்து பிரகாஷ் கூற, அத்தனை நேரம் அவளவனை காதலாக பார்த்துக் கொண்டிருந்த ஜீவநந்தினி பக்கென்று சிரித்து விட்டாள்.
அதோடு, “நீங்க முசுடுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு பாருங்களேன்.” என்று அவனிடம் வேறு மெல்லிய குரலில் கூறி கேலியில் இறங்கினாள்.
மனதோரம் அத்தனை நேரமாக அவன் ஏங்கிய கேலிப்பேச்சை ரசித்தாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “எல்லாமே கணக்கெடுத்துட்டு இருக்கேன். மொத்தமா டேலி பண்ணிடுறேன்.” என்றான் அவனும் ரகசியமாக.
“க்கும், இந்த வியாபார காந்தத்தை கட்டிட்டு நான் படுற பாடு இருக்கே!” என்று அவளும் மெல்லிய குரலில் முனக, “ரெண்டு பேரும் இப்படியே ஹஸ்கி வாய்ஸ்ல பேசிட்டு இருக்க போறீங்கன்னா, நான் வேற வேலை பார்ப்பேன்.” என்று பிரகாஷ் தான் நிகழ்விற்கு அழைத்து வந்தான்.
அதில் இருவரும் அத்தனை நேரமிருந்த விளையாட்டு பேச்சை கைவிட்டனர்.
பிரகாஷே ஜீவநந்தினியிடம், “அவன் மேல கம்ப்லைண்ட் கொடுக்க போறியா?” என்று வினவ, “ஆமா சார்.” என்றவளிடம் அதற்கான செயல்முறைகளை விளக்கிக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
அப்போது சசிதரன், ரஞ்சித் மற்றும் ராகவர்ஷினி அந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்தனர்.
உதயகீதன் ரஞ்சித்தையும் ராகவர்ஷினியையும் முறைக்க, ஜீவநந்தினியோ வெற்றுப் பார்வை பார்த்திருந்தாள்.
அவள் முறைத்திருந்தாலோ இல்லை திட்டியிருந்தாலோ கூட ராகவர்ஷினிக்கு பெரிதாக இருந்திருக்காது போலும். ஆனால், ஜீவநந்தினியின் அமைதி அவளை நிலைகுலைய செய்தது.
சசிதரன் தான் ஜீவநந்தினியிடம் வந்து, “சாரிமா. உனக்கு நடந்ததுக்கு சாரின்னு ஒத்தை வார்த்தை சொல்லி தப்பிக்க முடியாது தான். இருந்தாலும், மகனை பெத்த அப்பாவாகிட்டேனே! இதுவரை, அவனை சரியா வளர்த்துருக்கேன்னு இறுமாப்பா இருந்த எனக்கு, தலைல அடிச்சு உண்மையை சொல்ற மாதிரி பண்ணிட்டான் என் மகன். ஆனா, கடத்துறது மட்டும் தான் அவனோட திட்டமா இருந்துருக்கும்மா. அதுக்கு மேல போறதுக்கு அவனுக்கு தைரியம் இருக்காது. அது கூட, சகவாச தோஷத்துல வந்தது.” என்று கூறினார்.
இறுதி வரியை, அவர் யாரை மனதில் வைத்து சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.
“இப்போ என்ன சார், உங்க மகன் மேல கம்ப்லைண்ட் கொடுக்கக் கூடாதா?” என்று ஜீவநந்தினி அமைதியாக வினவ, “அதை சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்லமா. ஆனா, அவன் செஞ்ச தப்பை அவன் உணர்ந்துட்டான். அவன் வாங்குன அடியே அதுக்கு சாட்சி.” என்று நியாயமாகவே அவர் பேசினார்.
ஆனால், அவரின் பேச்சில் அவர் மகன் மட்டுமே இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கும் அவர் ராகவர்ஷினியின் பெயரை உச்சரிக்கவில்லை.
அதை அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். எப்போதும் அவளை தூக்கி வைத்து கொஞ்சும் பெரியப்பாவின் பாசத்தையும், அவளின் அவசரப்புத்தியாலும் சுயநலத்தாலும் இழந்து விட்டாள் என்பது புரிந்தே இருந்தது.
ஜீவநந்தினி கணவனை பார்க்க, அவன் இருபக்கமும் தலையசைத்து அவளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, “தயா, அவங்க தான் சொல்றாங்கல, தண்டனை தப்பை உணர்றதுக்கு தான்.” என்று ஏதேதோ கூறி சமாளித்தவள், பிரகாஷிடம், “சார், அவன் மேல மட்டும் தான், நான் கம்ப்லைண்ட் கொடுக்கப் போறேன்.” என்று அதை செய்து விட்டு வெளியே வந்தாள் அவள் கணவனுடன்.
அவளிடம் வந்த சசிதரன், “தேங்க்ஸ்மா.” என்று கண்களில் கண்ணீர் தழும்ப கூற, “சார், நீங்க பேசுனதை நம்பி தான் கம்ப்லைண்ட் கொடுக்கல. இன்னொரு முறை, இதே மாதிரி அவன் நடந்தா…” என்று அவள் முடிப்பதற்குள், “சத்தியமா இன்னொரு முறை அந்த தப்பை செய்ய மாட்டான்மா.” என்றவர், அருகில் தலை குனிந்து நின்றிருந்த ரஞ்சித்தை அடித்து, “வாயை திறந்து சொல்லேன்டா.” என்றார்.
அவர் அந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார் மகனின் தவறான செயலால்!
“சாரி… மே… மேம், இனிமே அப்படி செய்ய மாட்டேன்.” என்று அழுதபடி கூறினான் ரஞ்சித். பதின் வயதின் முடிவில் இருந்தவனுக்கு, அந்த சூழ்நிலை பயத்தையே தந்தது.
ஜீவநந்தினிக்கும் அவனின் பயம் புரிந்தே இருந்தது. தவறான பழக்கமும், தவறான வழிகாட்டலும் தானே, அவன் தவறிப் போனதுக்கு காரணம்.
அவளின் கோபமெல்லாம் ராகவர்ஷினியின் மீது திரும்பியது. தம்பியிடம் செய்ய சொல்லும் காரியமா இது? அவளின் சுயநலத்திற்காக, தம்பியின் எதிர்காலத்தை அல்லவா பணயமாக்கி இருக்கிறாள்? புரிந்து செய்தாளா, இல்லை புரியாமல் செய்தாளா என்று கோபத்தில் இருந்த ஜீவநந்தினிக்கு அவளைக் காணக் கூட பிடிக்கவில்லை.
உதயகீதனின் கரம் பற்றி, “நாம போகலாமா தயா?” என்று ஜீவநந்தினி வினவ, “இதை மொத்தமா முடிச்சுட்டு நாம வீட்டுக்கு போகலாம் ஜீவி.” என்றவனோ, சசிதரனிடம் திரும்பி, “உங்க தம்பியும் அவங்க ஒய்ஃப்பும் வந்தாங்கன்னா, இந்த விஷயத்தை பேசி முடிச்சுடலாம்.” என்றான் தீவிரமான குரலில்.
அவன் எதைப் பற்றி பேச அழைக்கிறான் என்பது புரிந்ததால், “அவங்க ஏர்-போர்ட்ல லேண்டாகிட்டாங்க.” என்று சசிதரன் இறுகிய குரலில் கூறிய சசிதரன், “வீட்டுல வச்சே பேசி முடிக்கலாமே.” என்றார்.
அவருக்கு குடும்ப விஷயத்தை வெளியிடத்தில் பேசுவது பிடிக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால், அவர் குடும்பத்திற்கு தானே அவமானம்!
சில மறுப்புகளுக்கு பின்னர், ஜீவநந்தினியின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் ஒப்புக்கொண்டான் உதயகீதன்.
அனைவரும் சசிதரனின் இல்லத்திற்கு வந்தடைந்தனர். சரியாக அதே சமயம், கிரிதரன் கீதாஞ்சலியை அணைத்தபடி வாகனத்திலிருந்து இறங்கினார்.
கீதாஞ்சலியின் தோற்றத்தை பார்த்த அனைவருமே கலங்கி தான் போயிருந்தனர். ஒரு வாரத்திலேயே உடல் பெருமளவு மெலிந்திருந்தது. உறங்காத விழிகள், சோர்ந்த முகம் என்று களைப்புடன் கணவரின் கைகளுக்குள் இருந்தவருக்கு, மகளை பார்த்ததும் எங்கிருந்து அந்த சக்தி வந்தது என்று தெரியவில்லை!
கிரிதரனிடமிருந்து விலகி ராகவர்ஷினியின் பக்கம் வந்தவர், சப்பென்று அவளை அறைந்திருந்தார்.
தொடரும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஜீவி உதய் 😍😍
Super 😍😍😍😍