
இன்று
தீரேந்திரன் தனது துப்பாக்கியை வைத்து மேல் நோக்கி சுட்டதால் ஏற்பட்ட புகை முட்டத்தில் இருந்து வெளிபட்டவனை பார்த்து பயந்து போனாள் அகரநதி. என்றோ அவனை பார்த்துக் காதல் கொண்ட விழிகள் இன்று பயத்தில் அஞ்சியது.
“என்ன செந்தமிழன் இப்படிப் பண்ணலாமா.?” எனக் கோபமாய் கேட்டான் தீரா
“என்ன தீரேந்திரன் இப்படிச் சொல்றீங்க”
“ஒருவேளை நம்மல காப்பாத்த வந்திருக்கனோ” அவள் ஒருநொடி சிந்திப்பதற்குள் அவள் கன்னத்தில் பளாரென அறை வைத்தான் தீரேந்திரன்.
“என்ன பார்க்கிறநஞ.? சொல்லு அதை எங்க வச்சிருக்க” அவன் அடித்ததில் விழிநீர் விழ அவனை ஏறிட்டு பார்த்தாள் அவனுடைய நதி, அவள் விழியில் தெரிந்த ஏமாற்றத்தை அவனால் உணர முடிந்தது. ஆனால் என்ன செய்வது, அவன் இதைச் செய்தாக வேண்டிய நிலை.
நதியின் மனமோ மௌனமாய் அரேற்றியது, ஒருவரின் அழகை பார்த்துக் காதலில் விழக் கூடாது என்பது உண்மை தான், ஆனால் நீ எனக்கு உதவிய குணத்தைப் பார்த்து தானே காதல் செய்தேன், எனக்கு இப்படியொரு ஏமாற்றம் தந்துவிட்டாயே தீரா.! காக்கியும் காதலும் என்று சேராத ஒன்று தான் போல, நான் உன்னைக் காதலித்தேன், ஆனால் நீ உன் காக்கியை காதலித்துவிட்டாய், நீ காதலித்த காக்கிக்கும் உண்மையாய் இல்லையே பணத்திற்கு விலை போய் விட்டாயோ.? உன் காதல் பணத்தின் மீது தானோ.? அவள் மனதில் ஆயிரம் கேள்விகள், ஆனால் இந்த நொடி அவள் துரிதமாய்ச் செயல்பட்டாக வேண்டும், அவள் மூளை அதிவேகமாய்ச் செயல்படத் துவங்கியது. நேராய் நிமிர்ந்து பார்த்தாள், உணர்ச்சிகள் துடைக்கபட்ட முகத்துடன் சொன்னாள்.
“எனக்கு உண்மையாவே எதுவும் தெரியாது, நீங்களலாம் யாருனே எனக்குத் தெரியலை, எங்க அம்மா அப்பாகிட்ட என்ன விட்டுருங்க ப்ளீஸ்” எனக் கெஞ்சினாள் அகரநதி.
“இப்படி அடிச்சுக் கேட்கணும் செந்தமிழன், செத்துக் கித்துப் போயிட்டனா.? யாருகிட்ட போயி விசயத்தை வாங்குறது” அவன் வார்த்தைக்கு வார்த்தை செந்தமிழன் என்று அழைப்பதே அமைச்சருக்குள் எரிச்சலை மூட்டியது, இருந்தாலும் என்ன தான் செய்ய முடியும், அவன் சொல்வதைக் கேட்குமிடத்தில் அல்லவா அமைச்சர் இருக்கிறார்.
“தீரேந்திரன் அவளைச் சாகடிக்குறது என் நோக்கம் இல்லை, துப்பாக்கியை பார்த்து பயந்து உண்மைய உளறிருவான்னு ஒரு நம்பிக்கை அதான் நெத்தி பொட்டில வச்சேன், கொலை செய்றதுக்குத் துப்பாக்கி தேவைப்படாது இந்தச் செந்தமிழனுக்கு என்னோட வலது கை போதும் அவ உயிர் நாடியை நிறுத்த”
“செந்தமிழன், அவ சொல்றது உண்மை தான், அவளுக்கு எதுவும் தெரியாது டாக்டர் அவளுக்கு மெமரி லாஸ்னு சொல்லிட்டாரு, நீங்க இப்படி அவசரபடுறதால நமக்குச் சாதகமா எதுவும் நடக்கப் போறதில்லை, இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டோம், அவளுக்கு ஞாபகம் திரும்புற வர காத்திருப்பது தான், நமக்கு நல்லது, துப்பாக்கியை வச்சு சுட்டுட்டா, நீங்க தொலைச்சது உங்களுக்குக் கிடைச்சிருமா.?” தீரேந்திரன் எடுத்துச் சொன்னான்.
“இவகிட்ட நானே விசயத்தை வாங்கிடலாம்ன்னு பார்த்தேன், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் அதுவரைக்கும் என்னால மூச்சு கூட விட முடியாது” என வருந்திய படி செந்தமிழன் பேசிக்கொண்டிருக்க,
“மூச்சு விட முடியலைனா சாவுடா பரதேசி” மனதில் நினைத்தாள் நதி, அது தீராவுன் செவிகளில் கேட்டது போல் பட்டெனத் திரும்பி பார்த்தான் தீரேந்திரன், அவன் பார்ப்பதை பார்த்தவுடன் வேறு திசையில் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அகரநதி.
“நான் பார்த்துக்குறேன் செந்தமிழன், உண்மை உங்க காதுக்குத் தான் முதல்ல வரும் இந்த விசயத்துல என்னை நம்பலாம்” என அவன் சொல்ல, கணத்த மனதுடன் அந்த அறையை விட்டு வெளியே சென்றார் செந்தமிழன்.
“நதி, வலிக்குதா..?”
‘இல்லை இனிக்குது, அடிக்குறதும் அடிச்சிட்டு கேள்வியைப் பாரு’ வாய் திறவாமால் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தாள் நதி.
“நான் அப்பா,அம்மாகிட்ட போகணும்” அவனைப் பார்த்து சொன்னாள்.
“கூட்டிட்டு போகலைனா என்ன பண்ணுவ.?” அவளைச் சீண்டினான் அவன்,
“உங்களுக்கென்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா.? கைய கட்டி போட்டு அடிச்சா வீரனாகிருவீங்களா.?” கோபமாய்ச் சாடினாள் அவள்.
“இப்போ என்ன இந்தச் சங்கிலிய அவிழ்த்து விடணும் அவ்வளவு தானே.?” என்றவன் மென்மையிலும் மென்மையாய் அவள் கை கால்களில் கட்டபட்டிருந்த சங்கிலியை அவிழ்த்து விட, உடையைச் சரி செய்து அவன் முகத்தை நேராய் பார்த்து சிரித்தவள் பளாரென அவன் கன்னத்தில் அடித்த மறுநொடியே அவனின் இறுக்கமான அணைப்பில் சிக்கி தவித்தாள் பேதை பெண்ணவள்.
“நதி, உனக்கு நினைவு வந்திருச்சுன்னு எனக்குத் தெரியும், என்கிட்ட நீ நடிக்காதே, அன்னைக்கி என்ன நடந்திச்சுன்னு என்கிட்ட மட்டும் சொல்லு, நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறதுக்காகத் தான் கேட்குறேன் நதி” என அவன் கேட்க, அவன் அணைப்பிலிருந்து அவள் விலக முயற்சி செய்துக்கொண்டிருந்தாள். அவனை உடனே உதறி தள்ளினாள்.
“நீ யாரு முதல்ல.? நீ போலீஸ்தானே.? ஒருத்தன் ஒரு பொண்ண கடத்திட்டு வந்து துப்பாக்கியை வச்சி மிரட்டுறான் அவனைப் பிடிச்சு விசாரிக்காமல் என்னை விசாரிச்சிகிட்டு இருக்க.? உனக்கு நேர்மைனா என்னனே தெரியாதா.?”
“நதி சொன்னா புரிஞ்சுக்கோ.?”
“என்ன புரிஞ்சுக்கணும்.? செந்தமிழன் இருக்கும் போது ஒரு மாதிரி பேசுற, என்கிட்ட ஒரு மாதிரி பேசுற, ட்ராமா பண்ணுறியா.? இப்போ என்ன உனக்கு வேணும், நான் பொய் சொல்றேனா.? உண்மை சொல்றேனான்னு தெரியணும் அவ்வளவு தானே, ஆமா எனக்கு நினைவு வந்திருச்சு ஆனா அந்த உண்மையை உன்கிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் எனக்கில்லை, அந்த மினிஸ்டருக்கு தானே கூஜா தூக்குற, நீயெல்லாம் போலீஸ்ன்னு வெளிய சொல்லிக்காதே” என ஆத்திரம் பொங்க பேசினாள் அகரநதி.
“அப்போ நீ என்கிட்ட உண்மைய சொல்லமாட்ட”
“சொல்லமாட்டேன் என்ன பண்ணுவ.?”
“என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுவேன் நதி”
“உன்னால ஒன்னும் பண்ண முடியாது தீரா, நீ சுயமா எதுவும் செய்யலை, உன் பின்னாடி பெரிய கூட்டமே இருக்கு உன்னால தனியா டெசிசஷன் எடுக்க முடியாது, என்னால தனியா என்னோட சுயபுத்தியோட டெசிசன் எடுக்க முடியும் தீரா, இந்தக் கேஸ் விசயமா மறுபடியும் என்கிட்ட எதாவது பேசின நான் சோசியல் மீடியால ஒரு வீடியோ போட்ட போதும் உங்க டிபார்ட்மென்ட்டே ஆடிரும்” எனச் சொல்லி அந்த அறையை விட்டு வெளியே நடந்தவளின் கைப்பற்றித் தன்னிடம் இழுக்க, அவனுடன் ஒட்டி நின்ற பெண்ணவளோ அவனின் அணைப்பில் இருந்து விடுபட நினைத்தவள், அவனைத் தள்ள முயன்ற போது, மேலும் இறுக பற்றினான் தீரா. அவனுடைய காதலை அவனால் அப்படித் தான் வெளிபடுத்த முடிந்தது,
“காதலால் எல்லாத்தையும் மாற்ற முடியும் நதி, உன்னோட காதல் என்னை மாத்திச்சு,என்னோட காதல் உனக்காகக் காத்திருக்கும் நதி, உனக்காக மட்டும்” சொல்லி அவளை மெல்ல விடுவித்தான் தீரேந்திரன்.
அவனின் கடைக்கண் பார்வைக்காகவே அவள் ஏங்கி தவித்த நாட்களில் இருந்த இனிமை அவனின் அணைப்பில் காதலும் கசந்து போனது, பார்க்க கூடாத ஜந்துவை பார்ப்பது போல் அவனை ஏறிட்டவள்,
“உங்களுக்கெல்லாம் இது மட்டும் தான தெரியும், ஒரு பொண்ண மனதளவில் நெருங்க யாருமே முயற்சிக்க மாட்டீங்க, உங்களோட தேவையெல்லாம் உடல் சார்ந்தது மட்டும் தானே இருக்கும், உன்னைக் காதலிச்சதுக்கு இந்த நிமிசம் வெட்கபடுறேன், உன்னைத் தேடி தேடி காதலித்த போது இருந்த ஈர்ப்பும் காதலும் இப்போ துளி அளவு கூட என்கிட்ட இல்லை, உன்னோட வேசம் களைச்சிருச்சு தீரா, நீ இப்போ செஞ்சதுக்கு வருத்தபடுவ, காத்திருக்கும் காதல் என்றுமே அத்துமீறாது, என்னோட காதலை போல்” எனச் சொன்னவள் அந்த அறையிலிருந்து விறுவிறுவென நடந்தாள். அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வாள் கொண்டு வெட்டியதைப் போல் உணர்ந்தான் தீரேந்திரன்.
குற்றம் செய்த குற்றவாளியை போல் அவளைப் பின்தொடர்ந்து நடக்கலானன் தீரேந்திரன், அவளிடம் எப்படிச் சொல்வது அவளுக்காகத் தான் அத்துணைக் காரியங்களையும் இழுத்துப் போட்டுச் செய்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது, அவளை அன்பால் சரிகட்ட முடியாது, அவள் என்னைத் தவறாக நினைக்கிறாள் அப்படியே இருக்கட்டும், அன்போ அதிகாரமோ, அவளின் பாதுகாப்புக்காக அவளிடம் அதிகாரமாகத் தான் நடந்தாக வேண்டும் என்று முடிவெடுத்தவன். அவளுடன் சேர்ந்து நடந்தபடி சொன்னான்.
“நதி, நான் கெட்டவன் தான், இப்போ அதுக்கு என்னன்ற, உன்னோட கார்த்தி, உன்னோட குடும்பம் உனக்கு உயிரோட வேணும்னா நான் சொல்றதை நீ செஞ்சு தான் ஆகணும்”
“நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நான் ஒன்னும் உன் அடிமை இல்லை, உன்னால ஆனதைப் பார்த்துக்கோ” திமிராகவே பதில் சொன்னாள் நதி.
“இப்போ உன்னோட கார்த்திக் சென்ட்ரல் ஜெயில்ல இருக்கான், அவனைத் தான் நான் பார்க்க போறேன், நீ அவனை பார்க்கணும்னா என்னோட உதவி இல்லாமல் பார்க்க முடியாது”
“எனக்கு உன் உதவி ஒன்னும் தேவையில்லை, நானே நேரடியா போய்ப் பார்த்துப்பேன்” அதிகாரமாய்ப் பதில் சொன்னாள் நதி.
“நீ போய்க் கேட்டவுடனே உள்ள அனுப்பி உன்னை மீட் பண்ண வச்சிருவாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா.?அவனைப் பார்க்க ஸ்பெஷல் பர்மிஷன்ல தான் போக முடியும், எல்லாமே மினிஸ்டர் செந்தமிழனோட கட்டுபாட்டுல தான் இருக்கு” அவளுக்கு இணையான திமிருடன் சொன்னான் தீரேந்திரன்.
“எனக்குக் கார்த்தியை பார்க்கணும், அதுக்கு நான் என்ன பண்ணணும்.?”
“ என்னை உருகி உருகி காதலிச்ச நதி வேணும்”
“வாட்.?”
“என்ன வாட்.? எனக்கு எல்லாமே தெரியும் நதி” என்றான் அவன்.
“போலீஸ் மாதிரி பேசுங்க, ரவுடி மாதிரில பேசுறீங்க” அவனைச் சுட்டெரிப்பதை போல் பார்த்தாள் நதி.
“அப்போ உன் மனசில நான் இல்லை அப்படி தானே நதி?”
“ஆமாம் இல்லை”
“அப்போ வேற விழியில்லை,நீ கார்த்தியை பார்க்க முடியாது” அவளுக்கு கார்த்தியை பார்த்தாக வேண்டும்.
“வேற வழியில்லையா?” மிரட்சியாய் அவனைப் பார்த்தாள்.
“என்ன கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்னு சொல்லு, நான் கார்த்தியை பார்க்க கூட்டிட்டு போறேன், இது நான் எடுத்த முடிவில்லை. நம்ம வீட்டில பெரியவங்க எடுத்த முடிவு. சோ உன்னோட டெசிசஷன் உன்னோட கையில” என விசமமாய்ப் புன்னகைத்த தீராவை பார்த்து திகைத்து நின்றாள் அகரநதி.
காதலுடன் மோதலும் இலவசமாய் இணைந்து கொள்ளக் கள்ளி இவள் இதயத்தைக் கொள்ளைக் கொள்வானா காக்கி சட்டைக் காவலன்.? தொடரும் மர்மத்தை உடைத்தெறிவனோ வீரமாய்த் தீரா.? அவனின் காதல் உண்மையென்று அறிவளோ காதல் கள்ளி.? தீராநதியாகும் தருணத்தைத் தகர்த்தெறிவாளா தீராவின் நதி.?
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இன்னைக்கு அத்தியாயம் சூப்பர் … ரெண்டு பேரும் ரொமான்டிக் கா காதல் பண்ணுவாங்கன்னு பார்த்தா … மிரட்டி சண்டை போட்டு காதல் பண்றாங்க …
காக்கி மீது அவள் கொண்ட காதலும் பொய்யானது, காக்கிச்சட்டை மீது அவன் கொண்ட மரியாதையும் பொய்யானது, அவன் பணத்திற்கு விலை போய்விட்டவன் என்று தவறாக எண்ணி கொண்டாள் அகர்.
அவளிடம் அன்பாய் மொழிந்தால் இனி வேலைக்கு ஆகாது என்று அறிந்து அவளது பாதுகாப்பிற்காக அவளை அதிகாரத்தில் பணிய வைக்க முனைந்துவிட்டான் தீரா.
அப்பா, அம்மாவின் உயிர் மற்றும் கார்த்தியுடனான சந்திப்பு ஆகியவற்றிற்காக தீராவுடனான திருமணத்திற்கு நிர்பந்திக்கப்படுகிறாள்.
மிக விறுவிறுப்பாக செல்கின்றது.