
அத்தியாயம் 18
மென்மொழியிடம் பேசி முடித்து சில நொடிகள் இடைவெளி எடுத்துக் கொண்ட ஆராவமுதன் மீண்டும் பேசத் துவங்கினார்.
“பல ஆயிர வருஷங்களுக்கு முன்னாடி இருந்த குமரிக்கண்டத்துல வாழ்ந்த மக்கள், இப்போ இருக்க நம்மள விட ரொம்பவே அட்வான்ஸ்டா இருந்துருக்காங்க. கப்பல் கட்டுறதுல தொடங்கி, நட்சத்திரங்களைக் கொண்டு வழியைக் கண்டுபிடிக்கிறது வரை அவங்களோட கடல்சார் தொழில்நுட்பம் வளர்ந்திருந்துச்சு. மருத்துவத் துறைலயும், ரசவாதத்துலயும் (ஆல்கெமி) அந்தக் காலத்துல வாழ்ந்த மக்கள்ல சிறந்தவர்களா இருந்தாங்க நம்ம மக்கள். தேரையர்னு ஒரு சித்தர், நியூரோ-சர்ஜரி செய்றதுல திறம் பெற்றவர்னு குறிப்பு இருக்கு. அப்போவே ஒன்பது கிரகம் இருக்குன்னும் மனுஷங்களோட வாழ்க்கைல அதோட தாக்கம் எப்படி இருக்கும்னும் தெரிஞ்சு வச்சுருந்துருக்காங்க. இதுதான் இப்போதைய ஆஸ்ட்ரானமி, ஆஸ்டிராலஜி! அதே மாதிரி, ஆறுகளுக்கு இடையில அணைகளைக் கட்டி, நீர் மேலாண்மையிலயும் வல்லவர்களா இருந்துருக்காங்க.” என்று கண்கள் மின்னக் கூறிக் கொண்டிருந்த ஆராவமுதன், “சாரி, ஏதோ சொல்ல ஆரம்பிச்சு, எதையோ சொல்லிட்டு இருக்கேன். விட்டா, இதைப் பத்தி நாள் முழுக்க பேசிட்டு இருப்பேன்.” என்றார் ஒரு புன்னகையுடன்.
“எப்படி அறிவியல் ரீதியா நம்மள விட பல மடங்கு உயர்ந்திருந்தாங்களோ, அதே மாதிரி அவங்க உடலையும், அதுக்கான பயன்பாட்டை பத்தித் தெரிஞ்சுக்குறதுலயும் ஆர்வமா இருந்துருக்காங்க. இப்போ ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்காங்களே… மனுஷங்க அவங்களோட மூளையை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சா, எக்ஸ்டிரா-சென்சரி பவர்ஸ் கிடைக்கும்னு… அதை அப்போவே கண்டுபிடிச்சு, அதுக்கான வழிமுறைகளைத் தீவிரமா ஆராய்ச்சி செஞ்சுருக்காங்க. பல ஆண்டுகளா அவங்க செஞ்ச ஆராய்ச்சிக்குப் பலனா, அதுக்கான வழியையும் கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த வழிதான் மெடிட்டேஷன்.” என்று ஒரு இடைவெளி விட்டார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிற்கோ விழிகள் வியப்பில் விரிந்தன.
“சித்தர்களோட சக்தி பத்தி எல்லாம் கேள்விப்பட்டுருப்பீங்களே… அணிமா (உருவத்தில் சிறிதாவது), மகிமா (மலையைப் போல பெரிதாவது), இலகிமா (காற்றைப் போல இலகுவாவது), கரிமா (எடையை அதிகரித்துக் கொள்வது), பிராப்தி (எங்கு வேண்டுமானாலும் மறைந்திருந்து தோன்றுவது, எதிர்காலத்தை கணிப்பது), பிரகாமியம் (கூடு விட்டு கூடு பாய்வது), ஈசத்துவம் (பஞ்சப்பூதங்களை கட்டுப்படுத்துவது), வசித்துவம் (அனைத்தையும் வசப்படுத்துவது) – இதைத்தான் அட்டமா சித்திகள்னு சொல்லுவாங்க. இதுக்கும் உங்க கிட்ட இருக்க கற்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு.”
“குமரிக்கண்டத்துல வாழ்ந்த ஆதிசித்தர்களோட உதவியோட, அங்க இருந்த மக்கள்ல சிலர் தங்களோட உடலை முழுமையா பயன்படுத்த முயற்சி செஞ்சுருக்காங்க. தீவிரமான தியானம், உடலை கட்டுக்கோப்பா வச்சுக்குறதுக்கு யோகா, ஆரோக்கியமான உணவு முறைன்னு பல வருஷங்களா மெய் வருத்தி செஞ்சதுக்கு பலனா, அவங்களுக்கு சக்திகள் கிடைக்க ஆரம்பிச்சது.”
“அந்தச் சக்திகள் அவங்களோட நின்னுடக் கூடாதுன்னு வழிவழியா அவங்களோட சந்ததியினரையும் இதுக்குப் பழக்கப்படுத்துனாங்க. முதல் ஜெனரேஷனுக்கு கிடைக்கக் கஷ்டமா இருந்த சக்திகள், அடுத்தடுத்த ஜெனரேஷனுக்கு சில வருட பயிற்சியிலேயே கிடைக்க ஆரம்பிச்சது. மேபி, ஜீன் லெவல்ல டிரான்ஸ்பர்மேஷன் நடந்துருக்கலாம்!”
“இப்படி ஒரு கூட்டம் சக்திகளோட இருந்ததைப் பார்த்த மத்தவங்களுக்கு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் ஏற்பட்டுச்சு. அவங்க இன்செக்யூர்ட்டா ஃபீல் பண்ண ஆரம்பிச்சாங்க. இன்னும் சிலர், அவங்க மேல பொறாமை பட ஆரம்பிச்சாங்க. அவங்க பல நூற்றாண்டுகளா கஷ்டப்பட்டு அடைஞ்ச சக்திகள் நோகாம கிடைக்கணும்னு பேராசையோட திரிஞ்சாங்க. விளைவு, இந்த ரெண்டு குழுவும் ஒருத்தரை ஒருத்தர் மேனிப்புலேட் செஞ்சு, சக்தி உள்ளவங்களை ரகசியமா எதிர்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க சக்திகளை அபகரிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கான விடைதான் இப்போ உங்க கிட்ட இருக்க கற்கள்!” என்று அவர் கூற, அறுவரும் அவர்களிடமிருந்த கற்களைக் கண்டனர்.
அவர்களிற்கு ஆராவமுதன் சொல்ல வருவது ஓரளவு புரிந்தது.
“சக்தி இருக்க சிலரை சூழ்ச்சியால வீழ்த்தி, அவங்க தலைமுறையே கஷ்டப்பட்டு அடைஞ்ச சக்திகளை உறிஞ்சு, சாதாரண கற்கள்ல அதை அடைச்சு, சக்தி இருக்க கற்களா அதை மாத்துனாங்க. இதுக்கு அந்தக் காலத்து ரசவாதம் உதவுச்சு. ஆனா, அது அவங்களுக்கு தேவையான ரிசல்ட்டை தரல. அந்தக் கற்கள்ல இருந்த சக்திகளை அவங்களால உபயோகிக்க முடியல. அப்புறம்தான் கண்டுபிடிச்சாங்க, ஒரிஜினலா சக்தி பெற்றவங்களோட சந்ததியினரால மட்டும்தான் அதை உபயோகிக்க முடியும்னு… இதைத் தெரிஞ்சுகிட்ட சில வருஷங்கள் அமைதியாதான் இருந்தாங்க. ஆனா, அவங்க பதுங்குனது எல்லாம் சரியான தருணம் எதிர்பார்த்து பாயுறதுக்குத்தான் அப்புறமா தெரிஞ்சது.”
“சக்தி இருந்தவங்களோட அடுத்த ஜெனரேஷனை அவங்க பிறந்தப்பவே கடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களைத் தங்களோட வாரிசுகளா வளர்த்து ஆளாக்கி, அவங்க முன்னோர்களோட உயிரைப் பறிச்சு உறிஞ்சி எடுத்த சக்திகளை, அவங்களை வச்சே உபயோகிக்க ஆரம்பிச்சாங்க. அதுவும், சக்தி பெற்ற குழுவுக்கு எதிராவே! இதை எதிர்பார்க்காத சக்தி பெற்ற குழுவும் எதிர்த்து சண்டை போட்டாங்க. அதுதான் அங்க நடந்த முதல் போர். எந்தப் பக்கத்துக்கும் சாதகமா முடியாத இந்த முதல் போர், முதல் கடல் கோளால முடிவுக்கு வந்துச்சு. மனுஷனோட பேராசைக்கு இயற்கையோட முதல் எச்சரிக்கை அது!”
“அதுக்கப்புறம் சக்தி பெற்ற மக்கள் அமைதியை தேர்ந்தெடுத்து குமரிக்கண்டத்தோட வடக்குப் பக்கமா போய் வாழ ஆரம்பிச்சாங்க. ஆனா, அவங்க மேல வன்மத்தோட சுத்தின இன்னொரு குழு, அவங்களை வஞ்சம் தீர்க்க சரியான சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தாங்க. என்னதான் இவங்க கிட்டயும் கற்கள் மூலமா சக்திகள் கிடைச்ச பலர் இருந்தாலும், ஒரிஜினலா சக்திகளை பெற்றவங்களுக்கு முன்னாடி, இவங்களோட சக்தி தாக்கு பிடிக்கல. அதுக்கான தீர்வை கண்டுபிடிக்கிற முயற்சிலையும் இருந்தாங்க.”
“ஒரே கல்லுல ரெண்டு மூணு சக்திகளை அடைச்சு, அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாங்க. அது மட்டுமில்லாம, சக்திகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரிக்கவும் அவங்களுக்குப் பயிற்சியும் குடுத்தாங்க. அதுக்கான பலனும் இருந்துச்சு.”
“அடுத்தப் போர், முதல் போரை விட கொடூரமா இருந்துச்சு. கொத்து கொத்தா மக்கள் இறந்து போக ஆரம்பிச்சாங்க. பலர், குமரிக்கண்டத்தை விட்டே வெளியேறுனாங்க. ஒரு கட்டத்துல, கெட்டவங்க ஜெயிக்க, நல்லவங்க தொடர் தோல்வியைத் தழுவினாங்க. அது மட்டுமில்ல, அந்தப் பேராசை பிடிச்சவங்க, குமரிக்கண்டத்தோட நிறுத்தாம, அதைத் தாண்டியும் அவங்களோட ஆதிக்கத்தைச் செலுத்த நினைச்சாங்க. இது வளர்ந்துட்டு போனா, உலகமே இந்தக் கொடூரர்களோட கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடும்னு பயந்த மக்கள் சிலர் ஒண்ணு கூடி அதுக்கானத் தீர்வை கண்டுபிடிச்சாங்க. அந்தத் தீர்வுதான் ரெண்டாவது கடல் கோள்!”
“முதல் கடல் கோள் இயற்கையா நடந்தது. குமரிக்கண்டத்தோட சில பகுதிகள் மட்டும் அழிஞ்சுப் போனது. ஆனா, ரெண்டாவது கடல் கோள், மனுஷங்களால மனுஷங்களுக்கு எதிரா உருவாக்கப்பட்டது. பெரும்பாலான குமரிக்கண்டத்தை மொத்தமா கடலுக்குள்ள மூழ்கச் செஞ்சது. இந்தக் கடல் கோளுக்குக் காரணம் ஒருத்தர் இல்ல. பஞ்சப்பூதங்களையும் அடக்கத் தெரிஞ்ச சிலரோட கூட்டு முயற்சி… அன்னைக்கு இந்த உலகத்தைப் பாதுக்காக்க பலர் அவங்க உயிரைத் தெரிஞ்சே தியாகம் செஞ்சாங்க.” என்று தொடர்ந்து பேசிய ஆராவமுதன் நிறுத்தினார்.
அவர் கூறியவற்றை எல்லாம் கேட்டவர்களிற்கு எவ்விதம் எதிர்வினையாற்ற வேண்டும் என்றே தெரியவில்லை. அவர் உதிர்த்த ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு விதமாக அவர்களைப் பாதிக்க, அந்த இடமே உணர்வுக்குவியலாகி இருந்தது.
ஒரு பெருமூச்சுடன், “அன்னைக்கு உருவான சூழல், இப்பவும் உருவாகி இருக்கு. எங்களுக்குக் கிடைச்ச முதல் செட் கற்களை ஆராய்ச்சிக்குன்னு வாங்கிட்டு போனவங்க, அதை வச்சு செஞ்ச ஆராய்ச்சியால, அதுக்குள்ள இருக்க சக்திகளைப் பத்தி தெரிஞ்சுகிட்டாங்க. அதைப் பயன்படுத்தவும் முயற்சி செஞ்சாங்க. முதல் முறை தோல்வில முடிஞ்சது. காரணம், அவங்க தேர்ந்தெடுத்த நபர்கள், ஒரிஜினலா சக்தி பெற்ற மக்களோட சந்ததியினர் இல்ல. ஆனா, அடுத்த முயற்சில, தெரிஞ்சோ தெரியாமலயோ, அவங்க தேர்ந்தெடுத்த சிலர் சக்தி பெற்ற மக்களோட வாரிசுகளா இருந்தாங்க. அதனால, அவங்களால அந்தக் கற்கள்ல இருந்த சக்தியை உபயோகிக்க முடிஞ்சது. பேசிக்காதான் யூஸ் பண்ண முடிஞ்சது. அதை என்ஹான்ஸ் பண்றதுக்கான வழியைத் தேடித்தான் எங்க டீம்ல இருந்தவங்களை டார்கெட் பண்ணி கொல்ல ஆரம்பிச்சாங்க.”
“அவங்களோட நோக்கம் கற்களை பிளாக் மார்க்கெட்ல வித்து லாபம் பார்க்குறதுதான். அதைத் தெரிஞ்சுகிட்ட பல நாட்டுல இருந்தும், கற்களுக்காக பேரம் பேசுனாங்க. ஆனா, அவங்க கிட்ட இருந்த டிராபேக் என்னன்னா, கற்கள் தனிச்சு இயங்க முடியாது. அதுக்கான சொந்தக்காரரை அதுவே தீர்மானிக்கும். இன்னொன்னு, அப்படியே கற்கள் அதோட சொந்தகாரரைத் தேர்ந்தெடுத்தாலும், அதோட முழு சக்தியை யாராலயும் வெளிய கொண்டு வர முடியல. இதுக்காகப் பல வருஷமா ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்கு. யாருக்குத் தெரியும், இதை நீங்க பார்த்துட்டு இருக்குற நேரத்துல அந்த ஆராய்ச்சி வெற்றியடைஞ்சுருக்கலாம்!”
“இதை எல்லாம் தெரிஞ்சுகிட்ட எனக்கு ரொம்ப குற்றவுணர்வா இருந்துச்சு. கடலுக்குள்ள போன ரகசியம் என்னால திரும்ப வெளிய வந்துடுச்சோன்னு ஒவ்வொரு நாளும் நிம்மதியிழந்து தவிச்சேன்.” என்று கூறியவரின் முகம் இருளடைந்து காணப்பட்டது.
“2004ல தமிழ்நாட்டை புரட்டிப் போட்ட சுனாமி, எனக்கு ஒரு சின்ன நம்பிக்கையை குடுத்துச்சு. தெய்வாதீனமா, அப்போ நான் பூம்புகார் மரைன் மியூசியம் போயிருந்தேன். அங்கதான் ரெண்டாவது செட் கற்கள் இருந்த பெட்டி எனக்கு கிடைச்சது. அதுவும் நான் விரக்தியில முன்னாடி தூக்கிப் போட்ட பெட்டியும் சேர்ந்து கிடைச்சது. நான் செஞ்சதை சரி செய்ய இயற்கை எனக்குக் குடுத்த வாய்ப்பா இதை எடுத்துகிட்டேன். உடைக்கவே முடியாத நவபாஷாணத்தாலான அந்த வெறும் பெட்டியை மட்டும் மியூசியத்துக்கு குடுத்துட்டு, இன்னொரு பெட்டியை நான் எடுத்துட்டு வந்துட்டேன். யாராலயும் திறக்க முடியாத அந்தப் பெட்டியைத்தான் மொழி திறந்தா. அந்தக் கற்களை நானும் முதல் முறையா பார்த்தேன். ரெட், ஆரஞ்சு, எல்லோ, க்ரீன், ப்ளூ, இண்டிக்கோ, பிளாக் – இந்த ஏழு கற்கள் அதுக்குள்ள இருந்துச்சு. திரும்ப என்னோட ஆராய்ச்சியை ரகசியமா தொடங்குனேன். அதை செஞ்சுட்டும் இருக்கேன். இந்த வீடியோ ரெக்கார்ட் பண்றப்போ, இந்தக் கற்களைப் பத்தி சில தகவல்களைதான் என்னால சேகரிக்க முடிஞ்சது. சிலது இன்னும் ரகசியமாகவே இருக்கு. நான் தொடர்ந்து அதை ஆராய்ச்சி செஞ்சுட்டே இருக்கேன்.”
“அப்படி நான் கண்டுபிடிச்சதுல முக்கியமானது, அந்தக் கற்கள்ல இருந்து உங்களுக்குக் கிடைக்கிற சக்தி, உங்க தன்மையை பொறுத்தது. அதே மாதிரி, நீங்க அந்தக் கற்களைத் தேர்ந்தெடுக்கல. அந்தக் கற்கள்தான் உங்களைத் தேர்ந்தெடுத்துருக்கு.” என்றவர்,
“எனக்குத் தெரிஞ்ச தகவல்களை நான் சொல்லிட்டேன். இனி, இந்தக் கற்களைப் பயன்படுத்தி நீங்க என்ன செய்யப் போறீங்கங்கிறது உங்க கையில இருக்கு. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்… எத்தனை பெரிய சக்திசாலியா இருந்தாலும் சரி, பேராசை எப்பவும் அழிவைத்தான் தரும்… இந்தக் கற்களை நீங்க காப்பாத்துங்க, அதுவும் உங்களைப் பாதுகாக்கும். நடக்கப் போற சண்டைல உங்களுக்கு வெற்றி கிடைக்க நான் கடவுளை வேண்டிக்குறேன்.” என்று ஆராவமுதன் கூறுவதுடன் அந்தக் காணொளி முடிந்தது.
பல ஆயிர வருடங்களிற்கு முன்னிருந்த மறைக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்களால், சட்டென்று அதிலிருந்து வெளிவர முடியவில்லை. அவற்றைக் கையாளவும் முடியவில்லை.
எனினும், அவர்களின் மனநிலையோ புதிதாக முளைத்த சில கேள்விகளால் குழப்பத்துடனே இருந்தது.
குழப்பத்திற்குத் தீர்வு கிடைப்பது எப்போது?
தொடரும்…

